எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அவனோடு இனி நானா - 29

Lufa Novels

Moderator
அவனோடு இனி நானா!


அத்தியாயம் 29


இரண்டு நாட்கள் முழுதாய் முடிந்துவிட்டது. விஹானுக்கு பிரணவிகா தன்னருகில் இருப்பதே பெரும் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. மேலும் அவள் தான் பாராதபோது தன்னை ரசிப்பதையும், பார்க்கும்போது அதை மறைப்பதையும் கண்டு, இரகசியமாக இரசித்துக் கொண்டிருந்தான்.


பிரணவிகாவோ இத்தனை குழப்பத்திற்கும் தான் மட்டும் தான் காரணம் என்ற எந்த எண்ணமும் இல்லாமல், கல்பனாவை வைத்து விஹானிடம் கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை பெற்று, மகிழ்ச்சியாக விடுமுறையைக் கொண்டாடிக்கொண்டும், விஹானை சைட்டடித்துக் கொண்டும், கல்பனா, நிஹாரிகா கூடச் சேர்ந்து அவ்வீட்டின் புது மருமகள் என்ற பட்டத்தோடும் வளைய வந்தாள். வீட்டில் உள்ள அனைவரும் அவளை ஏற்றுக்கொண்டனர் கவிதாவைத் தவிற. அவரைக் கண்டால் மண்டும் நத்தை ஓட்டுக்குள் ஒளிவது போல ஒளிந்து கொள்வாள்.


அன்று தான் இடைத்தேர்தல் நடைபெறுவதால் காலை ஐந்து மணிக்கெல்லாம் விராஜ்ஜூடன் சேர்ந்து ஷிம்ரித் தவிற வீட்டிலுள்ள ஏனைய ஆண்கள் அனைவரும் அவனுக்கு ஆதரவாக அவனுடனே அந்தத் தொகுதிக்குச் சென்று விட்டனர். ஆட்சியாளராக இருப்பதால் ஷிம்ரித் களத்தில் இறங்காது பின்னிலிருந்து வேலைகளைச் செய்தான்.


ஆளுக்கொரு பகுதியாகப் பிரித்து, ஒவ்வொரு வாக்குச்சாவடியாகச் சென்று, கள நிலவரத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்தனர். விஹானும் கூட அன்று விராஜ்ஜூக்காகத் தான் சென்றிருந்தான். அவன் மட்டுமல்ல அவனது ஊழியர்கள் கூட அன்று ஆளுக்கொரு பொருப்பை ஏற்று செய்து கொண்டிருந்தனர் தங்களது முதலாளிக்காக.


விராஜ்ஜுக்கு தான் மனம் நிலை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. தன்னவள் ஒரு அழைப்பு.. ஒரே ஒரு அழைப்பு எடுத்து அவனுக்குச் சின்ன ஆறுதல் வார்த்தையை அவள் கூறியிருந்தால் மகிழ்ந்திருப்பானோ! ஆனால் அவள் தான் அவனுக்கு அழைப்பெடுக்கவே இல்லை.


இவன் இங்குத் தவிக்க, தவிக்கவிட்டவளோ தன்னவனுக்காகக் கோவிலுக்குச் சென்று, பிராத்தனை செய்துவிட்டு, மருத்துவமனை சென்றிருந்தாள். இவ்விஷயம் அவனுக்குத் தெரிந்திருந்தால் இறக்கை முளைத்துப் பறந்திருப்பான். ஆனால் தெரியாதே அவள் தான் தாய்க்கு செய்த சத்தியத்தை மீற முடியாமல் அவனைத் தவிர்க்கிறாளே!


அலைப்பேசியை பார்ப்பதும், தன் வேலைகளைப் பார்ப்பதுமாக இருந்தான் விராஜ். மக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து அவர்களை வாக்குகளைப் பதிவுசெய்து கொண்டிருந்தனர். எப்படியும் இவனுக்குச் சாதகமாகத்தான் இருக்குமெனக் கருத்துக்கணிப்பு கூறுகிறது.


வாக்குப் பதிவு நடைபெறும் இடத்திற்கு சற்று தொலைவில் தன் கட்சி ஆட்களோடு நின்று பேசிக்கொண்டிருந்தான் விராஜ். அப்போது தான் அந்தப் பக்கமாக வந்த ஒருவன் இவனருகில் வரும்போழுது திடீரென ஒரு கூர்மையான கத்தியை எடுத்து விராஜ் வயிற்றில் குத்திவிட்டு, பிடிக்கும் முன் வேகமாகத் தப்பி ஓடிவிட்டான்.


அங்கிருந்தவர்கள் என்ன நடந்தது எனக் கிரகித்து அவனைத் துரத்தும் முன் இவனுக்கு இரத்தம் குபுகுபுவென வெளியேற, வலியில் வயிற்றை இறுக பற்றியபடி அப்படியே கீழ சரிந்தான். உடனடியாக அவனுடன் இருந்தவர்கள் இவர்களுக்கு சொந்தமான மருத்துவமனையிலேயே அனுமதித்தனர்.


குடும்பத்தினர் அத்தனை பேரும் தகவல் தெரிந்து, மருத்துவமனையில் குவிந்தனர். விராஜ்ஜை மருத்துவமனைக்குக் கொண்டு வந்ததும் அவசர பிரிவில் அனுமதித்தனர் அன்று அங்கு வேலையில் இருந்ததோ சாத்விகா. அவனை அந்த நிலைமையில் கண்டதும் உயிரே போய்விட்டது அவளுக்கு ஆனாலும் தான் மருத்துவராக இருந்து தன்னவனைக் காக்க வேண்டுமென்று மனதை திடப்படுத்திக் கொண்டு அவனுக்கான அவசர சிகிச்சையை ஆரம்பித்தாள்.


மற்றவர்களுக்கு என்றால் தைரியமாகச் சிகிச்சை அளித்திருப்பாள் ஆனால் தன் முன் இரத்த வெள்ளத்தில் படுத்திருப்பதோ தன்னவனல்லவா!


கண்ணீர் கண்ணை மறைக்கக் கண்களைச் சிமிட்டி சரிசெய்தவாறு, கைகள் நடுங்க, வெகுகவனமாக அவனுக்குச் சிகிச்சை செய்தாள். அதற்குள் விஷயமறிந்து மருத்துவமனையில் உள்ள பெரிய மருத்துவர்கள் அனைவரும் கூடிவிட்டனர்.


அனைவரின் கண்பார்வையில் சிகிச்சை நடந்தது. கீறல் சற்று ஆழமாக இறங்கி இருந்தது. அதிக இரத்தபோக்கும் இருந்ததால் இரத்தமும் தேவையாக இருந்தது. அவனுக்கோ அரிதான இரத்தவகை. கண்ணிமைக்கும் நேரத்தில் ஒவ்வொரு இரத்தவங்கிக்கும் அழைப்பு பறந்தது.


பணமிருந்தால் எதுவும் சாத்தியமல்லவா! உடனடியாக இரத்தமும் கிடைத்தது. இதுவே ஒரு பாமர மக்களுக்குத் தேவையாக இருந்தால், இவ்வளவு சீக்கிரம் கிடைத்திருக்குமா? ஆனால் இங்குக் கிடைத்தது. உடனடியாக இரத்தம் ஏற்றி, சின்னதாக அறுவைசிகிச்சை முடிந்து சகல வசதிகளுடைய தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டான்.


அவனைக் கூடவே இருந்து கவனித்தாள் சாத்விகா. அன்றைய வேலை அவளுக்கு மதியம் 2 மணிக்கே முடிந்துவிட்டது. ஆனாலும் இவனுக்காகத் தான் மாலை வரையிலும் கூடவே இருந்தாள். மாலை போல கவினும், கார்த்திகாவும் விராஜ்ஜை பார்க்க மருத்துவமனை வந்தவர்கள் கிளம்பும்போது சாத்விகாவையும் அவர்களோடு அழைத்தனர் வீட்டுக்கு.


விராஜ்ஜூம் கண் விழித்து விட்டதால், இனி ஆபத்து எதுவுமில்லை என்று தெரிந்ததால் மட்டுமே மனமே இல்லாமல் அவர்களோடு கிளம்பினாள். மாலை ஆறுமணிக்கெல்லாம் தேர்தலும் முடிந்துவிட்டது. இவனுக்கு ஏற்பட்ட விபத்து மக்கள் மத்தியில் இவனுக்குச் சாதகமாகப் பரவி, இவனை எதிர்த்துப் போட்டியிட்டவர்களுக்கு பாதமாக முடிந்துவிட்டது.


சாத்விகா கிளம்பிய பிறகு பிரணவிகா தான் அவனுடனே இருந்து கவனித்துக் கொண்டிருந்தாள். ஓரளவுக்கு அவன் உணர்வு வந்து பேச ஆரம்பிக்கவும் ஏனையவர்களை அனுப்பிவிட்டு விஹானும், பிரணவிகாவும் மட்டும் கூடவே இருந்தனர். இங்கே இவ்வளவு விஷயமும் நடக்க, ஒரு வழக்குக்காக டெல்லி சென்றிருந்த கவிதாவுக்கு விஷயம் தெரியவும் இல்லை.. இங்குள்ளவர்கள் யாரும் அவருக்குத் தெரிவிக்கவும் இல்லை.


வீட்டுக்கு வந்த சாத்விகாவுக்கு அவனை அங்கு விட்டுவிட்டு வந்தது பெரும் வேதனையாக இருந்தது. எவ்வளவு முயன்றும் அவளால் வீட்டில் இயல்பாக இருக்க முடியவில்லை. சத்தியமாவது.. சாத்துக்குடியாவது.. அவனை இந்த நிலைமையில் விட்டு விட்டு தன்னால் இருக்க முடியாது என முடிவெடுத்து இரவுப் பணி இருப்பதாக வீட்டில் கூறினாள்.


கார்த்திகா “உனக்கு இப்போ நைட் டூயூட்டியே இல்லயே! அப்புறம் ஏன் கிளம்புற? அதுவும் இப்போ தான் வீட்டுக்கே வந்த ரெஸ்ட் எடுக்காம உடனே எப்படி அடுத்த டியூட்டி போடுவாங்க?”


“அது.. அதும்மா பிரணி லீவ்ல இருக்கால.. அவளுக்குச் சப்ஸ்டிடூட்டா என்னைப் போட்டாங்க” என வாயில் வந்ததை அடித்து விட்டாள்.


“அவளால எல்லாத்துக்கும் கஷ்டம் தான். வீட்டுல உட்கார்ந்து எல்லாரையும் வேலை வாங்கிட்டு, சட்டம் பேசிட்டு, அரட்டை அடிச்சிட்டு ஜாலியா இருப்பா.. இங்கஅவளால நீ கஷ்டப்பட வேண்டியிருக்கு.


என்னைக்கு தான் அவளுக்குப் புத்தி வருமோ! என் வயித்துல வந்து பொறந்துருக்கு பாரு எனக்கு அப்படியே ஆப்போஷிட்டா” எனத் தலையில் அடித்துக் கொண்டு சென்றுவிட, தப்பித்தோம் பிழைத்தோம் என மருத்துவமனைக்கு வந்துவிட்டாள்.


வேக வேகமாக விராஜ் இருந்த அறைக்கு ஓடிவந்தாள். அங்கு வலி நிவாரணியாகவும், உறங்குவதற்காகவும் மருந்து கொடுக்கப்பட்டிருந்ததால் நல்ல உறக்கத்தில் இருந்தான் விராஜ்.


அவனுக்கு அருகில் ஒரு நாற்காலி அமர்ந்து டிரிப்ஸ் ஏறும் கைகளை நீவிவிட்டபடி அமர்ந்திருந்தாள் பிரணவிகா. அவளைப் பார்த்துக்கொண்டே அவளுக்கு எதிரில் உள்ள ஷோபாவில் அமர்ந்திருந்தான் விஹான்.


சாத்விகா “நீ தான் கூட இருக்கியா? நல்லது.. இப்போ எப்படி இருக்கான்?” எனக்கேட்க,


பிரணவிகா “நல்லா இருக்கான். ஆனா நீ எப்படி இந்த நேரம் வந்த? அம்மா எப்படி உன்னை விட்டாங்க?”


“நைட் டியூட்டினு பொய் சொல்லிட்டு வந்தேன்”


“ஓஹ்ஹ்..”


“கேஸ்ஷீட் எங்க?” என சாத்விகா கேட்க, அவளை விசித்திரமாகப் பார்த்தாள் பிரணவிகா.


“ஏன் அது எங்க இருக்கும்னு உனக்குத் தெரியாதா?” எனக் குறுகுறுவெனப் பார்த்தாள்.


“ஏன் சொன்னா உன் கெத்து குறைஞ்சிடுமா என்ன?” என்றபடி கேஸ்ஷீட்டை எடுத்துப் பார்த்தாள்.


“வாமிட் எதுவும் பண்ணினானா?”


“இல்ல”


“இன்னும் எத்தனை பாட்டில் டிரிப்ஸ் இருக்கு?”


“இரண்டு இருக்கு. நைட் முழுக்க ஏறட்டும்”


“ம்ம்” என்றவாறு அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் சாத்விகா.


“நீ பார்த்துக்க போறியா என்ன?” என பிரணவிகா கேட்க, அவளை முறைத்து பார்த்தவளோ,


“அப்புறம் என்ன டேஷ்க்கு வீட்டுல பொய் சொல்லிட்டு வந்தேன் கேர்ள்?”


“ஓ.கே ஓ.கே.. இப்போ நாங்க இங்க இருக்கவா? இல்ல கிளம்பவா?”


“அது உங்க இஷ்டம்.. எந்திரி போய் உன் ஹஸ்பண்ட் கிட்ட உட்காரு” என பிரணவிகாவை அவள் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுப்பிவிட்டாள். அதைப் பார்த்து வந்த நமட்டு சிரிப்பை யாரும் பார்க்கும் முன் அடக்கிக் கொண்டான் விஹான்.


“ரொம்ப பண்ற நீ” எனக் கைக்கால்லை உதறிக்கொண்டு, டக் டக்கெனக் கோபமாக வந்து விஹான் அமர்ந்திருந்த ஷோபாவில் ஒரு ஓரத்தில் அமர, ஷோபாவிலிருந்து எழுந்து விட்டான் விஹான்.


என்ன என்னும் விதமாக பிரணவிகா விஹானைப் பார்க்க, அவனோ சாத்விகாவிடம்,


“அதான் நீ இருக்கியே அப்புறம் நாங்களும் ஏன் இங்கயே இருக்கனும்.. நீயே பார்த்துக்கோ.. நானும், அவளும் இங்க தான் எம்.டி ரூம்ல இருக்கோம். எதுனாலும் கால் பண்ணு உடனே வரோம் சரியா.. கவனமா பார்த்துக்கோ” எனக்கூற,


“ஏன் அத்தான் நீங்களும் கஷ்டப்படுறீங்க? நீங்க வீட்டுக்குக் கிளம்புங்க.. நான் பார்த்துக்கிறேன்”


“வீட்டுக்கு போனா பெரியம்மா ஏன் இவன தனியா விட்டுட்டு வந்தனு கேட்பாங்க.. நீ இருக்கனு சொன்னா அது உனக்கும் சங்கடமா இருக்கும்.. அதான் நாங்க இங்க என் ரூம்ல இருக்கோம்” என்றவன் பிரணவிகாவை பார்க்க,


“நீங்க வேணா உங்க ரூம்க்கு போங்க.. நான் இங்க ஷோபாலயே படுத்துக்கிறேன்..”


“கிளம்புனு சொன்னேன்”


“இல்ல என் பாட்னர்..” என ஆரம்பிக்க, அடுத்து அவள் பேசும் முன்,


“அப்போ நான் யாரு?” எனக் கூர்மையாக வந்தது அவனது வார்த்தைகள்.


“அது பழகிடுச்சு.. அவளால மட்டும் அவன ஹேண்டில் பண்ண முடியாது.. கஷ்டம்.. நானும் கூட இருக்கேன்”


“அதெல்லாம் அவ அவன ஹேண்டில் பண்ணுவா.. நீ கூட இருந்தா தான் அவங்களுக்கு தொல்லை.. என் கூட வா.. நான் உன்னை ஹேண்டில் பண்றேன்” என அவள் கையைப் பிடித்து எழுப்பி இழுத்து செல்ல,


‘அய்யோ இவன என்னால ஹேண்டில் பண்ண முடியாதே!’ என நினைத்துக்கொண்டே அவனுடன் சென்றாள். அவனறைக்கும் வந்துவிட்டனர் இருவரும். அவனறையிலேயே அவன் ஓய்வெடுப்பதற்காகத் தனியாக ஒரு அறை இருந்தது.


“உள் ரூம்ல போய் படு. எனக்கு வேலை இருக்கு” எனக் கணினி முன் போய் அமர்ந்தான்.


“எனக்கு தூக்கம் வரல.. கொஞ்ச நேரம் இங்கயே இருக்கேன்” என அவனறையைப் பார்த்துக் கொண்டே அங்கிருந்த ஷோபாவில் அமர்ந்தாள்.


பல தடவை இந்த அறைக்கு வந்திருப்பாள் ஆனால் சுற்றிப் பார்த்தது இல்லை. அவன் முன் தலையைக் கவிழ்ந்து தரையைப் பார்த்துக்கொண்டே வருவாள், அவனிடம் நல்லா வாங்கிக்கட்டிக் கொண்டு தரையைப் பார்த்தபடியே சென்றுவிடுவாள். இன்று தான் சுற்றி பார்த்தாள்.


அழகாக வடிவமைத்திருந்தான். கண்ணைப் பறிக்காத நிறம், ஆங்காங்கே சிறு சிறு உட்புற செடிகள், அலங்கார பொருட்கள் என வரிசையாகப் பார்த்துக்கொண்டே வந்தவள் கண்கள் அங்கே இருந்த ஒரு புகைப்படத்தில் நிலைகுத்தி நின்றது.


மெதுவாக எழுந்து சென்று அந்தப் புகைப்படத்தின் அருகே நின்றாள். இவர்களது பழைய சிறுவயது புகைப்படம் அது. நடுவில் விராஜ் நிற்க, அவனது இருபுறமும் விஹானும், ஷிம்ரித்தும் நின்றிருந்தனர்.


ஷிம்ரித் சாத்விகாவை தூக்கி வைத்திருக்க, விஹானின் கையில் அமர்ந்து, அவன் கழுத்தை இருகைகளாலும் கட்டிக்கொண்டு அவன் கன்னத்தில் உதடு பதித்து இருந்தது வேறுயாருமில்லை சாட்சாத் அவளே தான்.


“அப்போவே நீ கிஸ் பண்ணிருக்க என்ன” என அவன் குரல் மிக அருகில் கேட்க, நெஞ்சில் கைவைத்து திரும்பிப் பார்த்தாள், குறும்பு மின்னச் சிரித்துக் கொண்டிருந்தான் விஹான்.


“எனக்கு தூக்கம் வருது” என நகரப்போக, அவளை நகராதவாறு இருபுறமும் கைகளால் அணைகட்டி சுவற்றோடு சாயவைத்தான்.


மூச்சுக்காற்று உரசி முத்தமிட்டுக் கொண்டது. முன்பே இப்படியொரு நிலையில் இருவரும் நின்றதும், அவன் அவளுக்கு வலுகட்டாயமாக முத்தமிட்டதும், அழையாமல் ஞாபகம் வந்து அவள் வயிற்றில் பட்டாம்பூச்சியை பறக்கச் செய்தது.


“அழகா இருக்குல போட்டோ” என அவளைக் கண்ணைப் பார்த்துக் கேட்டான். அவள் எங்கு அவன் கண்ணைப் பார்க்க? தரையைப் பார்த்தவாறு ‘ஆமாம்’ எனத் தலையாட்டினாள்.


“இந்த போட்டோ எப்படி உங்க கிட்ட வந்துச்சு?” எனக் கேட்டாள். அதைக் காணாமல் வீட்டையே இரண்டாக மாற்றியது அவளுக்குத் தானே தெரியும்.


“ஏன் காணோம்னு தேடினியா என்ன?” என அவள் தேடியதை தெரிந்து கொண்டே அவனும் கேட்டான்.


“ஹாங்.. இல்ல.. அது எங்க வீட்டுல இருந்துச்சு இங்க எப்படினு” என அவனைக் குற்றம் சாட்டும் பார்வை பார்த்துக் கேட்க,


“உங்க வீட்டுல இருந்து தான் நான் எடுத்தேன்” என அசராமல் பதிலளித்தான்.


“ஓஹ்..” என உதடு குவிக்க, அவள் உதட்டை நோக்கிக் குனிந்தான் விஹான். சடுதியில் அவள் உலகம் மாறியது. கண்கள் படபடவென அடித்துக்கொள்ள, உதடுகள் நடுங்க அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். இரு இதழும் அருகருகே வர, மெல்லமாய் கண்களை மூடினாள்.


மனம் அவன் முத்தத்தை எதிர்பார்த்து காத்திருந்தது. அவன் மூச்சுக் காற்றை அவள் கன்னங்கள் உணர்ந்தது. இதழ்களை ஈரமாக்கினாள். கால்கள் நடுங்க ஆரம்பித்தது.


“தூக்கம் வருதுனு சொன்ன.. போ.. போய் தூங்கு போ” எனக் காதருகில் அவன் கூற, சட்டென உணர்வுகள் வடிந்தது அவளுக்கு. கண்களைப் பட்டெனத் திறந்தாள். மிக நெருக்கமாக அவன் முகம் இருந்தது. வேண்டுமெனறே அவளது உணர்வுகளுடன் அவன் விளையாடுகிறானெனத் தெரிந்தது கூடவே கோபமும், ஏமாற்றமும்.


அவளிடமிருந்து விலகப் போனவன் கழுத்துப்பட்டியை பிடித்து இழுத்தாள், அவன் முகம் அவளுக்கு மிக நெருக்கமாக வர, எக்கி அவன் இதழில் இதழ் பதித்திருந்தாள். எதிர்பாராத ஆனந்த அதிர்ச்சி அவனுக்கு. அந்த அதிர்ச்சி விலகும் முன் அவனைத் தள்ளிவிட்டுத் தனியறைக்குள் புகுந்து கதவடைத்துக் கொண்டாள்.


செய்யும் முன் யோசிக்கவில்லை ஏதோ உணர்வு தாக்கத்தில் செய்துவிட்டாள் ஆனால் செய்தபின் தான் மனம் அடித்துக் கொண்டது. ‘மூணு நாளுக்கு முன்ன யாரோ ஒருவனை காதலிக்கிறேன் என அவனிடமே கூறிவிட்டு, இன்று இவனுக்கு முத்தமிட்டதை அவன் எவ்வாறு நினைப்பானோ!’ என வருந்தினாள்.


‘லூசு லூசு.. என்னடி பண்ணி வச்சிருக்க? இப்போ எப்படி அவன் முகத்துல முழிப்பேன்.. என்ன என்னனு நினைப்பான்?’ என்று நினைத்தபடி கதவிலேயே சாய்ந்து அமர்ந்துவிட்டாள்.


அவள் முத்தமிட்ட தாக்கம் அவனுக்குக் குறையவில்லை. அவள் அதிரடியாக இப்படி முத்தமிடுவாளென அவனும் நினைக்கவே இல்லை. இன்றும் கூட அவளிடம் சீண்டி விளையாட நினைத்தானே ஒழிய, அவளை முத்தமிட அவன் நினைக்கவில்லை. அது இயல்பாக அவள் விருப்பத்தோடு நிகழவேண்டுமெனத் தான் அவனும் காத்திருந்தான்.


காத்திருந்தவனுக்கு கிடைத்த அதிஷ்டம் போலத் தானாகக் கிடைத்த முதல் முத்தம். கைகளால் உதட்டைத் தடவிப் பார்த்தான் சிலிர்த்தது அவன் உடல். உள்ளே இருப்பளின் மனநிலையை நினைத்துப் பார்க்கச் சிரிப்பு வந்தது.


‘என்னடி இவ்ளோ வீக்கா இருக்க? நான் கூட உன்னை மடக்க ரொம்ப கஷ்டப்படனுமோனு நினைச்சேன்.. ச்சச்ச எனக்கு கஷ்டமே இல்லாம நீயே எல்லாம் முடிச்சிடுவ போல.. ஆர்வக்கோளாறு’ எனச் சிரித்தவன், வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.


அவளோ எந்தச் சத்தமும் இல்லாமல் இருக்க, கோபமாக இருக்கிறானோ என நினைத்தவள் எழுந்து, மெதுவாகக் கதவைத் திறந்து எட்டி பார்க்க, அவனும் பார்த்துவிட்டான்.


“எதுவும் வேணுமா? காபி குடிக்கிறியா?” என அவன் கையிலிருந்த காபியைக் காட்டி கேட்க, “வேண்டாம்” எனத் தலையை ஆட்டினாள்.


“எனக்கு வேலை இருக்கு.. நீ போய் தூங்கு.. லாக் போடாத.. வேலை முடியவும் தூங்க வருவேன்” எனக்கூற, “சரி” எனத் தலையை ஆட்டிப் படுக்கைக்கு வந்தாள்.


அங்கேயும் ஒரு சோதனை அது ஒருவர் மட்டும் படுக்கும் கட்டில். அதைப் பார்த்தவளுக்கு பகீரென்றது. ‘எதே இதுல இரண்டு பேரா’ என நெஞ்சில் கை வைத்தாள்.


“பேசாம சாத்வி கிட்டயே போயிடலாம்.. இன்னைக்கு உனக்கு வாய்ல வாஸ்து சரியில்லடி” என வாய்விட்டே புலம்ப ஆரம்பித்தாள். அதைக் கேட்டுச் சிரித்தவன்,


“சும்மா சொன்னேன் அங்கலாம் வரமாட்டேன்.. நீ தூங்கு.. எனக்கு தூக்கம் வராது.. வந்தாலும் இங்க ஷோபால தூங்கிக்கிறேன். புலம்பாம இரு.. உன் மைண்ட் வாய்ஸ் இங்க வரை கேட்க்குது” என்றவன் சிரித்துக் கொண்டே அவன் வேலையைப் பார்க்க, தலையில் அடித்துக் கொண்டு இழுத்து மூடிப் படுத்துக் கொண்டாள்.


அவனும் வேலையைப் பார்த்துக் கொண்டே, இடையிடையே சாத்விகாவுக்கு அழைத்து தம்பியின் நிலை என்ன எனக் கேட்கவும் தவறவில்லை.


அங்கு சாத்வி அவனருகிலேயே அமர்ந்து அவனைப் பார்த்துக் கொண்டாள் இரவு முழுவதும். ஒரு நொடி கூட அவள் தூங்கவில்லை. அவள் கண்கள் அவன் நலத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது. தூக்கத்தில் அவன் அசையும் போதெல்லாம், வென்ஃபிளான் மாட்டிய கையில் எதுவும் பட்டுவிடாமல் கையை அசையாமல் பார்த்துக்கொண்டாள்.


டிரிப்ஸ் முடியும் நேரம் சரியாகப் பார்த்துப் பார்த்து அடுத்த டிரிப்ஸை மாத்தினாள். யூரின் பையைப் பார்த்துப் பார்த்துச் சுத்தம் செய்தாள். அவன் காயத்தை மெல்ல வருடிவிட்டாள். கண்களில் கண்ணீர் ஆறாய் வடிந்து கொண்டே இருந்தது.


‘இப்படி எல்லாம் ஆபத்து இதுல இருக்குனு தான தலைபாடா அடிச்சேன்.. இந்த அரசியலே வேண்டாம்னு.. ஏண்டா உனக்கு இது பிடிக்குது? தினம் தினம் உன்னை நினைச்சு நான் செத்து செத்து பிழைக்கனுமா?


இதுல இந்த பிரணி இழுத்த வச்ச வேலையால உன்னைப் பார்க்கவோ, பேசவோ கூட இனி நான் திருட்டு தனம் பண்ணித்தான் ஆகனுமா? நீ என்னை விட்டுத் தூரமா போற மாதிரியே இருக்குடா எனக்கு.. நீ இல்லாம என்னால இருக்க முடியாது வீர்.. ஐ லவ் யூ டா’ என நினைத்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.


இரவோடு இரவாக விராஜ்ஜை கத்தியால் குத்தியவனை காவல்துறை கண்டுபிடித்துக் கைது செய்திருந்தனர். அவன் விராஜ்ஜூக்கு எதிராகத் தேர்தலில் நின்றவனின் கையாளெனக் கண்டுபிடிக்கப்பட்டு, அவனையும் சேர்த்து இரவோடு இரவாகக் கைது செய்துவிட்டனர். அதன் பிறகே சந்தோஷால் மூச்சி விட முடிந்தது.
 
Top