மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பொறுமையாக எழுந்த காவ்யா, நேற்று விளையாடிய அசதியில் தன்னைக் கட்டிக்கொண்டு நன்கு உறங்கிக் கொண்டிருந்த சித்துவை நகர்த்தி நேராகப் படுக்கவைத்தாள்.
தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு காலை உணவை மட்டும் செய்துவைத்தாள். பின் சித்துவை எழுப்பி தயார் செய்து இருவரும் சாப்பிட்டுவிட்டு மாலிற்கு கிளம்பினர்.
கதவைப் பூட்டிக்கொண்டே அவனைப் பார்த்தவள், "எல்லாமே வாங்கிடலாம்" என புன்னகைத்தவள் அவனின் கைபிடித்து அழைத்துச் சென்றாள்.
கீழே பார்கிங்கில் இருந்த தனது இருசக்கர வாகனத்தை காவ்யா எடுக்க, அவளின் பின்னே அன்னையை இடையோடு கட்டிக்கொண்டு சித்து அமர்ந்து கொண்டான்.
அந்நேரம் காரினை எடுக்க வந்த கார்த்திக்கைப் பார்த்த சித்து ஆரவாரமாக, "ஹாய்! கார்த்தி அங்கிள்.." என்றான்.
சத்தம் வந்த திசையை யாரென்று திரும்பி பார்த்தான். அங்கிருந்த சித்துவைப் பார்த்து சிரிப்புடன் கையை மட்டும் அசைத்துவிட்டு காரை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டான்.
அவனிற்கு சித்துவிடம் சென்று பேச வேண்டும் என்ற ஆசை நேற்றில் இருந்து மனதில் துளிர்த்தது. ஆனால் காவ்யா அவனைத் தவிர்ப்பதாகத் தோன்ற தள்ளியே இருந்து கொண்டான்.
காரை ஓட்டிக்கொண்டு சென்ற கார்த்திக்கிற்கு அப்பொழுதுதான் 'நாம இன்னும் சித்துவுடைய அப்பாவை பார்க்கவே இல்லையே!' என்ற சிந்தனை முளைத்தது. "சரி ஒரே அபார்ட்மெண்ட் தான..? பார்க்காமலா போய்டுவோம்" என எண்ணிக்கொண்டான், 'காவ்யா தன் குழந்தையுடன் தனியாக தான் வசிக்கிறாள்' என்பதை அறியாதவன்.
காவ்யாவும் சித்துவும் முதலில் சென்றது அந்த மாலில் உள்ள குழந்தைகள் விளையாடும் இடத்திற்கு தான். அங்கிருந்த விளையாட்டில் சித்துவை சிறிது நேரம் விளையாட வைத்தாள். பின் இருவரும் சென்று பிரைட் ரைஸ், பிங்கர் சிப்ஸ் என்று ஆர்டர் செய்து உண்டனர்.
மாதத்தில் ஒருமுறையாவது சித்துவை இதைப்போல் வெளியே அழைத்துச் செல்வாள் காவ்யா. அப்படி செல்கையில் மட்டும் வெளியே உணவருந்துவர்.
அடுத்து அங்கிருந்த பல்பொருள் அங்காடியில் அடுத்த வாரத்திற்கு தேவையானதை காவ்யா வாங்கிக் கொண்டிருக்க அவளின் கைபிடித்து சித்துவும் கூடவே நடந்து கொண்டிருந்தான். அனைத்தையும் வங்கியவள் மறக்காமல் சித்து கேட்ட விளையாட்டுப் பொருட்களையும் வாங்கிக் கொண்டாள்.
பின் வாங்கிய அனைத்தையும் தன் வண்டியில் சீட்டிற்கு கீழ் வைத்து பூட்டியவள் சித்துவைப் பார்த்தாள். "சித்து தூக்கம் வருதுன்னா? முன்னாடி வந்து நின்னுக்கோ.. இல்லனா பின்னாடி உட்கார்த்துகிட்டே தூங்கி கீழ விழுந்துட போற.." என்றாள் தூக்கம் சொக்க நின்றிருந்த சித்துவை பார்த்து.
"ம்ம்ம் சரி மம்மி" என முன்னே நின்று கொண்டான்.
மிதமான வேகத்தில் வண்டியினை ஓட்டி வீட்டினை அடைந்த பொழுது மணி இரண்டாகி பதினைந்து நிமிடங்கள் கடந்திருந்தது.
வந்தவுடன் சித்துவின் கைகால்களை கழுவிவிட்டு உறங்க வைத்தாள். அதன் பின் வாங்கிய பொருட்கள் அனைத்தையும் அடுக்கிவிட்டு தானும் சென்று அவனுடன் படுத்துக் கொண்டாள்.
தன் நண்பனை சந்தித்துவிட்டு அவனுடனே மதியவுணவையும் முடித்துவிட்டு வந்த கார்த்திக் நேற்றுப்போல் இன்றும் நான்கு மணியளவில் பார்க்கில் விளையாடச் சென்றான்.
ஐந்து மணிபோல் எழுந்த காவ்யா சித்துவிற்கு பாலை சூடு பறக்க ஆற்றிக் கொடுத்தாள். அதனைக் குடித்துவிட்டு, "ம்மா பார்க் போகலாமா?" என்றது குழந்தை.
"நேத்து தான சித்து போனோம்? இன்னைக்கு காலைல கூட மாலில் விளையாடினாய் தான? இப்ப பார்க் எதுக்கு?" என்றாள் கண்டிக்கும் விதமாக.
"ப்ளீஸ் மம்மி.." என்று தாடையை பிடித்து கெஞ்சும் குழந்தையை பார்த்தால் கல்நெஞ்சும் கரைந்துவிடும். பெற்ற தாயின் மனம் கரையாதா?
"சரி. ஆனா குட்டி பிள்ளைங்க விளையாடுற இடத்துல மட்டும் தான் விளையாடணும். சரியா?" என்ற மிரட்டலில் தன் சம்மதத்தை தெரிவித்தாள் காவ்யா.
"ஓகே மம்மி" என்று ஒத்துக்கொண்டவன் அந்த பார்க்கிற்கு சென்றதும் "கார்த்தி அங்கிள் கூட விளையாட போகிறேன்" என அடம்பிடித்தான். காவ்யாவையும் சித்துவும் வந்ததுமே அவர்களை பார்த்த கார்த்திக்கின் கண்கள் ஒளிர்ந்தன.
சித்துவின் அடம் தாங்க முடியாமல் நேற்றுப் போல் இரண்டு முறை பேட் செய்யவைத்து அவனை வலுக்கட்டாயமாக இழுத்து வந்தாள் காவ்யா.
"ம்மா ஊஞ்சல்ல விளையாடலையே?" என்று உதட்டைம் பிதுக்கியவனைப் பார்த்தவளின் இரத்த அழுத்தம் ஏகத்துக்கும் ஏறியது.
அங்கிருந்த முதியவர் ஒருவர், "குழந்தைங்கன்னா? அப்படி தானம்மா இருக்கும். கொஞ்சநேரம் விளையாட வைத்து கூட்டிட்டு போ" என இலவச அறிவுரை வழங்கினார்.
பெருமூச்சுடன் சித்துவை ஊஞ்சலில் வைத்து தள்ளிக்கொண்டே அங்கே சுற்றிப் பார்த்தாள். அங்கிருந்த ஒரு பதினைந்து வயதுள்ள சிறுமி கார்த்திக்கையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
"என்ன! இந்த பொண்ணு இப்படி பார்க்கிறா?" என நினைத்துக்கொண்டே கார்த்திக்கை காவ்யா பார்த்தாள்.
டீஷர்ட், ட்ராக் பேண்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஷூ என அணிந்திருந்தவன் விளையாட்டில் மட்டுமே கவனம் வைத்திருந்தான்.
‘நமக்கெதுக்கு காவ்யா வம்பு. ஏற்கனவே பக்கத்துவீட்டு லட்சுமி ஆன்ட்டி முறைச்சுக்கிட்டு இருக்காங்க. நாம எதையும் கண்டுக்காம இருப்போம்' என தனக்குள் கூறிக்கொண்டாள்.
"விளையாடியது போதும் சித்து. வா நாளைக்கு ஸ்கூல் வேற போகணும்ல" என சித்துவை அழைக்க,
"இதோ மம்மி" என காவ்யாவிடம் பதிலளித்தவன், "பை கார்த்தி அங்கிள்" என கார்த்திக்கை பார்த்து அங்கிருந்தே கத்திவிட்டு காவ்யாவுடன் வீடு திரும்பினான்.
அவனைப் பார்த்து கையசைத்து விடைகொடுத்த கார்த்திக், 'முதல்ல சித்து அப்பாவை பிரண்ட் பிடிக்கணும். அப்பதான் அவரு கூட இருக்கப்ப சித்துகிட்ட நல்லா பேச முடியும். காவ்யா வெளியாளுங்க கிட்ட பேசமாட்டாங்க போல' என அவனாக காவ்யாவை பற்றி ஒரு எண்ணத்தை உருவாக்கிக் கொண்டான். பின் அவனும் தன் விளையாட்டை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றான்.
பதினைந்து வயது நிரம்பிய ஸ்ரேயா அவனையே பார்த்துக் கொண்டிருந்ததை கார்த்திக் கவனிக்கவே இல்லை. காவ்யா மட்டும் அதனைக் கவனிக்க அவளும் தனக்கெதற்கு வம்பு என அமைதியாகிவிட்டாள்.
இதனால் கார்த்திக்கின் நற்பெயருக்கு ஏதாவது பங்கம் விளையுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
இரவு சித்து தன் மாமன் கௌதமிடம் அன்று நடந்த அனைத்தையும் கதையாக கூறிக்கொண்டிருந்தான். "மாமனும் மருமகனும் பேச ஆரம்பித்தால் போதும், உலகத்தையே மறந்துடுவீங்க போல.. மணி ஒன்பதாகுது அண்ணா. அவன் இப்ப தூங்கினால் தான் காலைல ஸ்கூல் போக எழுந்திருப்பான். நாளைக்கு பேசுண்ணா" என அழைப்பைத் துண்டித்தவள் சித்துவை உறங்க வைத்தாள்.
நாட்கள் யாருக்கும் காத்திருக்காமல் வேகமாக சென்றன. அந்த வாரயிறுதியில் காவ்யா சித்துவை அழைத்துக்கொண்டு அவளின் புகுந்த வீடான அவளின் கணவன் ரமேஷின் வீட்டிற்குச் சென்றாள்.
அங்கு அவளை வா என்று அழைக்கவுமில்லை; ஏன் வந்தாய் என்று கேட்கவுமில்லை.
ஆனால் வராமல் இருந்தால் மட்டும் "எங்களையும் எங்க பேரனையும் பிரிக்க முயற்சிக்கிறாள்" என்று சொந்த பந்தத்திடம் குற்றப் பத்திரிக்கை வாசிப்பர்.
இதற்காகவே காவ்யா பிடிக்கிறதோ? பிடிக்கவில்லையோ? மாதத்தில் இருநாட்கள் அங்கு சென்று தங்கிவிட்டு வருவாள்.
இந்த பாராமுகம் காவ்யாவிடம் மட்டுமே காட்டுவர். சித்துவை அவன் தாத்தா குணசேகரனும் பாட்டி மங்கலமும் அந்த இரண்டு நாட்களுக்கு கீழே விடாமல் தாங்குவர். ரமேஷின் சகோதரன் ராஜேஷ் கூட அண்ணன் மகனை கொஞ்சி தீர்த்துவிடுவான். ஆனால் தன் அண்ணியிடம் 'எப்படி இருக்கீங்க?' என ஒரு வார்த்தை கேட்டுக்கொள்ள மாட்டான்.
உள்ளே வந்த சித்துவை அவன் தாத்தா, பாட்டி பிடித்துக் கொண்டனர்.
தன் இரண்டாம் குழந்தையை அப்பொழுது தான் குளிக்கவைத்து தூக்கிக் கொண்டு வந்த ராஜேஷின் மனைவி பிரியா காவ்யாவை பார்த்து "வாங்க.." என கூறினாள்.
பிரியாவிற்கு இரண்டுமே பெண் குழந்தைகள். மூத்தவள் தாரிணிக்கு மூன்று வயது. அடுத்தது ஆறு மாதம் முன் பிறந்த ஹரிணி.
ஒருவகையில் காவ்யா இந்த வீட்டைவிட்டு வெளியே செல்ல பிரியாவும் ஒரு காரணம் தான்.
ஆனால் அதனை என்றைக்கும் காவ்யா காட்டிக்கொண்டு இருந்ததில்லை. அவரவருக்கு அவரவரின் நியாயம் பெரியது! என்று கடந்துவிட்டாள்.
துண்டை போற்றியெடுத்து வந்த ஆறு மாத குழந்தையை காவ்யாவின் கையில் கொடுத்த பிரியா சமையலறைக்கு சென்றாள்.
அழகாக ஒரு ரோஜா குவியலை போல் இருந்த அந்த பெண் குழந்தையை பார்த்த காவ்யாவின் மனம் மட்டுமில்லாமல் உதடும் மலர்ந்தது.
மெல்லத் துடைத்து பவுடர் போட்டு மையிட்டு பருத்தியில் உடை உடுத்தி அதனை அலங்கரித்தாள். அவளின் அருகில் அமர்ந்து சித்துவும், தாரிணியும் குழந்தையின் குட்டி கை, கால்களை தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அந்நேரம் வெளியே சென்றிருந்த ராஜேஷ் உள்ளே வந்தான். இவர்களை பார்த்துவிட்டு, "வாங்க அண்ணி!" என்று மட்டும் கூறியவன், "டேய் குட்டி பையா.." என அண்ணனின் மகனை தூக்கிக்கொண்டு வெளியே செல்ல முயன்றான்.
"அப்பா நானும் வரேன்.." என பின்னே ஓடிய தாரிணியையும் அழைத்துக்கொண்டு ஐஸ்கிரீம் கடைக்கு அழைத்து சென்றான்.
தன் மடியில் இருந்த குழந்தையும் உறங்கி இருக்க, அவளை அங்கு கூடத்திலே இருந்த தொட்டிலில் போட்டு ஆட்டினாள்.
"எதுக்கு? இப்ப புதுசா வீடு மாறியிருக்க?" என அதட்டலாகவே மங்கலம் கேட்டார்.
'உண்மையை கூறினால்.. எங்கே? மறுபடியும் தனியாக விட மாட்டார்களோ..?' என்றுதான் தன் குடும்பம் உட்பட அனைவரிடமும் உண்மையை மறைத்திருக்கிறாள்.
"ஆபிஸ் கொஞ்சம் தூரமா இருந்த மாதிரி இருந்தது அத்தை. அதுக்குத்தான்" உள்ளே போன குரலில் சொன்னாள்.
"என்னமோ செய். எல்லாமே உன்னிஷ்டம் தான். உங்க வீட்லயும் எதையும் ஒழுங்கா சொல்லி கொடுக்க மாட்டிங்குறாங்க! நீ சொன்னதுக்கு எல்லாம் ஆடுறாங்க!" என அவளையும் அவளின் குடும்பத்தையும் ஒரு மூச்சு பேசித் தீர்த்தவர்,
"அம்மாடி பிரியா! எனக்கு ஒரு டீ போட்டு கொடுமா" என தன் இரண்டாம் மருமகளான தன் தம்பி மகளிடம் அன்பொழுகக் கேட்டார்.
மங்கலத்திற்கு தன் இரண்டாம் மகனிற்கு இரண்டுமே பெண்ணாக போனதில் சிறிது அல்ல பெரிய வருத்தமே! ஆனால் காவ்யாவிற்கு மட்டும் ஆண் வாரிசு என்பதை அவ்வப்பொழுது பார்க்கும் அவளிடம் தவறாமல் காட்டிக்கொள்வார்.
இதற்குமேல் இங்கிருந்தால் இன்னும் பே(ஏ)சுவார்கள் என்றுணர்ந்த காவ்யாவும் சமையலறை சென்று பிரியாவிற்கு உதவ முயன்றாள்.
அங்கிருந்த இரண்டு நாட்களும் நிறைய வசவுகளையும், ஜாடை பேச்சுக்களையும் கேட்டவள் அமைதியுடனே வீட்டிற்கு வந்துவிட்டாள்.
'உடையவனே போய் விட்டான்! இனி இவர்களிடம் வாதாடி என்ன பயன்?' என்று நினைத்தவள் பல்லைக் கடித்துக்கொண்டு சித்துவிற்காக அனைத்தையும் பொறுத்துக் போகப் பழகிக்கொண்டாள்.
ஆனால் இரண்டு நாட்கள் சித்துவை பார்க்காமல் கார்த்திக்கிற்கு தான் எதையோ இழந்த உணர்வு அவன் மனதை அழுத்தியது. இத்தனைக்கும் அவன் சித்துவை நான்கு, ஐந்து முறை மட்டுமே பார்த்திருக்கிறான்.
எப்பொழுதும் போல் பார்க்கில் விளையாடினாலும் மனதினில் ஒரு வெறுமை அவனை சூழ்ந்து கொண்டது. கண்கள் அந்த சிறுவனைத் தேடித் தேடிக் களைத்துப் போயின.
மறுபடி வாரநாட்களில் அவனைப் பார்ப்பது அவ்வளவு எளிதல்ல என்றுணர்ந்தவன், அடுத்த வார இறுதிவரை காத்திருக்க முடிவெடுத்தான்.
ஆனால் அடுத்த வார இறுதியில் இவனின் நிலைமையே வேறாக இருக்கப்போகிறது என அவனுக்கு அப்பொழுது தெரியவில்லை!
__________
"மெதுவா தான் சாப்பிடேன் ஸ்வேதா? எதுக்கு இந்த அவசரம்?" வேகவேகமாக உணவினை வாய் நிறைய அள்ளி போட்டு கொண்டிருந்தவளை கடிந்துக் கொண்டிருந்தாள், அனு.
"இல்ல அனு. அந்த ஒர்க் ஸ்டேட்டஸ் இன்னைக்கு கார்த்திக் கிட்ட கொடுக்கணும். திங்கள் செவ்வாய் ரெண்டுனாலும் நான் லீவு வேற. அதான்.." என கூறிக்கொண்டே வாய்க்குள் உணவை திணித்தவளைப் பார்த்து,
"பேசாம சாப்பிட்டு போய் வேலைய பாரு" என அதட்டி அவளை அனுப்பிவைத்தாள் அனு.
அனு, ஸ்வேதா, ரம்யா மூவரும் கார்த்திக்கின் கீழ் தான் வருவர். ஆகவே அவர்கள் செய்யும் வேலையை அவனிடமே வாரத்தின் இறுதியில் தகவல் கூற வேண்டும்.
மாலை ஐந்து மணிபோல் கார்த்திக்கின் அனுமதி பெற்று உள்ளே வந்த ஸ்வேதா, "கார்த்திக்! நான் இந்த ஒர்க்ல பாதியை இந்த வாரம் முடிச்சிட்டேன். மீதியை அனு கிட்ட கொடுத்திடுறேன்" என்றாள் அறிவிப்பதாக.
"வாட்? என்ன பேசறீங்க நீங்க? அனுக்கு வேற வேலை இல்லையா?" என கத்திவிட்டான்.
பின் அவள் காண்பித்த தகவலை பார்த்துவிட்டு, "இது அடுத்த வாரம் தான முடிக்கணும். இன்னும் தான் டைம் இருக்கே? அதுக்குள்ள என்ன?" யோசனையுடன் ஸ்வேதாவை ஏறிட்டான்.
"திங்கள் எனக்கு என்கேஜ்மெண்ட் கார்த்திக். சோ புதன் தான் ஆபிஸ் வருவேன்" என்றாள் அவன் கத்தியதில் தயங்கி தவிப்பாக.
"ஓஹ்! ஆமால. சாரி நான் மறந்துட்டேன்" என்று புருவத்தை சுருக்கி யோசித்தவன், "ஓகே ஸ்வேதா. நாங்க பாத்துக்குறோம். நீங்க டென்ஷன் இல்லாம என்ஜாய் பண்ணுங்க.. வாழ்த்துகள்!" என வாழ்த்தவும் செய்தான்.
ஸ்வேதவிற்கு மயக்கம் வராத குறை தான். அலுவலகத்தில் வேலையை தவிர்த்து பேசாதவன் வாழ்த்து கூறியதும் என்ன சொல்ல வேண்டும் என தெரியாமல் ஒரு நொடி முழித்தவள், "தேங்க்ஸ் கார்த்திக்" என வெளியே செல்ல முயல,
"நீங்க ஹாஸ்டல்ல தான தங்கிருக்கீங்க? உங்க ஊர் எது? எப்படி? எதுல போறீங்க?" என விசாரித்தான் ஏதோ ஒரு சிந்தனையில்.
'கார்த்திக் இப்படியெல்லாம் கேட்கமாட்டாரே?' என்ற யோசனையிலேயே, "திருச்சி தான் எங்க ஊர். நான் பஸ்ல போய்டுவேன் கார்த்திக்" ஸ்வேதா கூறியவுடன்.
'திருச்சில பஸ் ஏறிட்டேன். வந்துடுவேன் கார்த்திக்' என்ற குரல் பல நாட்களுக்கு பிறகு அவன் ஞாபக அடுக்கில் இருந்து ஒலித்தது.
முயன்று தன்னை சமன் செய்தவன், "ஓகே ஸ்வேதா. பார்த்து போய்ட்டு வாங்க" என்றான் அக்கறையுடன்.
சரி என்று தலையசைத்தவள் வெளியே வந்து அங்கு நடந்ததை தன் தோழிகளிடம் கூறியவள், "கத்திட்டு சாரிலாம் கேட்டாரு டி. கார்த்திக் கொஞ்சம் நல்லவர் தான் போல" என நற்சான்றிதழை வழங்கினாள்.
"ரொம்ப புகழாத ஸ்வேத், நிச்சய பொண்ணுன்னு அப்படி சொல்லிருப்பாரு" என்றவர்கள் அவரவரின் வேலையை பார்க்கத் தொடங்கினர்.
இங்கு அறையிலிருந்து ஸ்வேதா சென்றதிலிருந்து மனதிற்குள் ஒரு முகம் மின்னி மறைய, கூடவே அதனின் காந்தக் குரலும் அவனை சூழ்ந்து கொண்டது.
'இவ்வளவு நாள் இல்லாமல் இன்னைக்கு எதற்கு இந்த நினைவு?' மனதின் அழுத்தத்தை தாங்க முடியாமல் தவித்தான் கார்த்திக். இதற்கு மேல் முடியாது என்றுணர்ந்தவன் லேப்டாப்பை அதனின் பையில் வைத்து மாட்டிக் கொண்டவன், காரினை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டான்.
ஸ்வேதா கூறிய திருச்சி, பஸ் பயணம் என்ற இரண்டு வார்த்தையினால் அவனுள் ஒரு பிரளையமே தோன்றியது.
வீட்டிற்கு வந்தும் பழைய ஞாபகங்கள் அடிமனதில் இருந்து மேலே எழும்பி மற்றதை சிந்திக்க விடாமல் அவனைப் படுத்தி எடுத்தன. தன் உணவினை மறுத்து கட்டிலில் படுத்திருந்தவன் மெல்ல எழுந்து பால்கனிக்கு வந்தான்.
மழை பூந்தூரலாய் தூறிக் கொண்டிருக்க கையை நீட்டி அதனை உணர்ந்தான். மழையினால் எழுந்த மண்வாசனையை சுவாசித்தவனின் உதடு "சரோ.." என மெல்லச் சொல்லியது.