எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் - 5

அத்தியாயம் 5​

அடுத்து வார நாட்களில் இருமுறை சித்துவை லிப்டில் பார்த்தாலும் சிரிப்புடனே கார்த்திக் கடந்துவிட்டான். எப்பொழுதும் போல் வாரயிறுதியில் அந்த பார்க்கில் சித்து விளையாடிக் கொண்டிருந்தான்.​

அந்நேரம் காவ்யாவிற்கு அவளின் அலுவலகத்தில் இருந்து ஒரு அழைப்புவர, எடுத்து பேசிவிட்டு வைத்தவள் சித்துவை அழைத்து "வீட்டிற்கு போகலாம்" என்றாள்.​

சித்து, "மம்மி இப்ப தான வந்தோம்?" என ஏமாற்றமாகக் கேட்க,​

முக்கியமான ஒரு கோப்பினை மெயில் அனுப்ப சொல்லி வந்த அழைப்பை அவனுக்குப் புரியும்படி, "மம்மிக்கு ஆஃபீஸ்ல இருந்து கால் வந்தது சித்து. ஒரு சின்ன வேலை முடிச்சிட்டு மறுபடி நாம வந்து விளையாடலாம்" என சமாதானமாகக் கூறினாள்.​

"நீங்க போய் முடிச்சிட்டு வாங்க மம்மி. நான் இங்கயே விளையாடுறேன். மேல போனா அடுத்து என்னை கூட்டிட்டு வரமாட்டிங்க.. எனக்கு தெரியும்" என அடம்பிடித்தவனை முறைத்தவள், 'தெரிந்தவர் யாரும் இல்லாததால் யாரிடம் விட்டு செல்ல..' என்ற யோசனையுடன் அங்கிருந்த கார்த்திக்கிடம் சென்றாள்.​

"மிஸ்டர் கார்த்திக்.." என காவ்யா அழைக்க,​

"சொல்லுங்க மிஸ்ஸஸ் காவ்யா.." என்றான்.​

"அது வந்து.. சித்துவை ஒரு பத்து நிமிஷம் பாத்துக்குறீங்களா? உங்களால முடியுமா? நான் வீட்டுக்கு போய்ட்டு உடனே வந்துடுவேன்" என தயக்கத்துடன் அவனிடம் கேட்டாள்.​

அவளின் கேள்வியில் ஒருநிமிடம் அதிர்ந்தே விட்டான் கார்த்திக். எப்பொழுதும் கங்காரு குட்டியை போல் தன் கூடவே வைத்திருக்கும் மகனை பார்த்துக்கொள்ள சொல்வதால் வந்த அதிர்ச்சி.​

'கரும்பு தின்ன கூலியா?' என மனதிற்குள் எண்ணிக்கொண்டே, "ஷுர் காவ்யா.." என சம்மதமாக உரைத்தவனிடமும் சித்துவிடமும் ஆயிரம் பத்திரம் சொல்லிவிட்டு சென்றாள்.​

அவள் அப்படி சென்றதும் வெகுநாட்களாக சித்துவிடம் கேட்க நினைத்ததை கேட்டேவிட்டான் கார்த்திக். ஆம்! "உன்னோட அப்பா பெயர் என்ன? என்ன பண்ணுறாங்க?" என சித்துவை தூக்கி அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார வைத்துவிட்டு தானும் அமர்ந்தவன் கேட்டான்.​

"எங்க அப்பா ரொம்ப நல்லவரா.. அதுனால சாமி எங்க அப்பாவை அவரோடவே கூட்டிட்டு போய்ட்டாங்க.." என மழலை குரலில் காவ்யா அவனிடம் கூறியதை அப்படியே கூறினான்.​

"அப்பா எங்க மம்மி? எப்ப வருவாரு?" என ஒருநாள் அழுகையுடன் கேட்ட சித்துவிடம், "அப்பா சாமிக்கிட்ட இருக்காரு சித்து. நீ அப்பாகிட்ட சொல்ல வேண்டியதை சாமிக்கிட்ட தான் சொல்லணும்" என அழுகையில் கரைந்தவனை காவ்யா சமாதானப்படுத்தியிருக்கிறாள். அதனை நினைவில் வைத்தே சித்து கார்த்திக்கிடமும் அப்படியே கூறினான்.​

சிறுவனின் பதிலில் ஒருநிமிடம் கற்சிலையாக சமைந்துவிட்டான் கார்த்திக்.​

இந்த வாழ்க்கை தான் எவ்வளவு விந்தையானது! ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு சோகம் இழையோடிக் கொண்டேதான் இருக்கிறது. அதனை மனதிற்குள் மறைத்து வைத்துக்கொண்டே தான் அனைவரின் வாழ்க்கையின் ஓட்டமும் இருக்கிறதோ? என எண்ணிக்கொண்டான்.​

'தனியாக இருப்பதினால் தான் காவ்யா யாரிடமும் பேச யோசிக்கிறாங்களோ?' என அவளைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியவனை உலுக்கி நிகழ்விற்கு கொண்டுவந்தான் சித்து.​

"கார்த்தி அங்கிள் வாங்க விளையாடலாம்" என தன் கைபிடித்து இழுத்தவனிடம் ஆர்வத்துடன் சென்றான்.​

சென்ற வேலையை முடித்துவந்த காவ்யாவும் கார்த்திக்கிடம் நன்றி கூறிவிட்டு சித்துவை அழைத்துச் சென்றுவிட்டாள்.​

அவளைப் பார்க்கவே கார்த்திக்கினுள் ஒரு வித மரியாதை தானாகத் தோன்றியது. "கண்டிப்பா என்னை விட சிரியவர்களாக தான் இருப்பார்கள். ஆனால் இவ்வளவு சிறியவனை வைத்துக்கொண்டு தனியாக இருப்பது அவ்வளவு சுலபம் இல்லையே! அன்னைக்கு கூட அவங்க அம்மா, அண்ணாவெல்லாம் வந்தார்களே?" என மீண்டும் அவளின் பின்னே தறிகெட்டு ஓடிய மனதினிடம், "டேய் கார்த்திக்.. என்னடா பண்ணுற?" என அடக்கினான்.​

காலில் சக்கரம் கட்டாத குறையாக காலம் யாருக்கும் காத்திராமல் ஓடியது. நாட்கள் வாரங்களாகி; வாரம் மாதங்களாகின.​

ஆம் இருமாதங்கள் ஓடிவிட்டன. அந்த இருமாதங்களிலும் வாரம் முழுக்க பள்ளி செல்வது, அன்னையுடன் இருப்பது என இருக்கும் சித்து வாரயிறுதியில் பார்க்கிற்கு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டான்.​

அப்படி செல்வதால் கார்த்திக்கைப் பற்றி தன் இரு பாட்டில்களின் வீடுகளிலும் தவறாமல் கூறிவிடுவான்.​

காவ்யா வீட்டில் சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும், அவளின் புகுந்த வீட்டில் யார்? என்ன? என்று பலவிதமாக விசாரித்தனர்.​

அடுத்த வாரயிறுதியில் காவ்யாவின் அன்னை தேவிகா, அண்ணி கண்மணி, அண்ணன் கௌதம் என மூவரும் காவ்யாவின் வீட்டிற்கு வந்தனர்.​

தன் மாமனின் மகள் தர்ஷினியை கொஞ்சிய சித்து, "மாமா நம்ம ஈவினிங் பார்க் போகலாம். நான் உங்களுக்கு கார்த்தி அங்கிளை காட்டுறேன். தர்ஷி பாப்பாவையும் கூட்டிட்டு போகலாம்" என கௌதமிடம் ஆர்ப்பரித்தான்.​

கார்த்திக்கிடம் ஏற்கனவே அறிமுகமாகி இருந்தாலும், "ஆமா டா. எப்ப போன் பண்ணாலும் அவரை பத்தியே பேசுற. கண்டிப்பா பார்க்கலாம்" என சிறுவனிடமும் கௌதம் கூறினான்.​

கண்மணி, "தர்ஷி ரொம்ப குட்டி பொண்ணுல சித்து. இன்னொரு நாள் பார்க் கூட்டிட்டு போகலாம்" என மறுத்துவிட்டாள்.​

மாலையில் காவ்யாவை தவிர்த்து கௌதம் மற்றும் சித்து மட்டுமே பார்க்கிற்கு சென்றனர். அங்கு ஏற்கனவே இருந்த கார்த்திக்கிடம் ஓடிய சித்து, "இது எங்க கௌதம் மாமா! என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுப்பாங்க" என பெருமையுடன் கார்த்திக்கிடமும்,​

"இது தான் கார்த்தி அங்கிள் என்னோட பிரண்ட்!" என மகிழ்ச்சியுடன் கௌதமிடமும் ஒரு அறிமுகப் படலத்தை முடித்தவன் விளையாட ஓடிவிட்டான்.​

"நீங்க எப்பவும் இப்படி தான் சின்ன பசங்க கூட விளையாடுவீங்களா கார்த்திக்?" சுற்றி அங்கிருந்த சிறு பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டே கேட்டான்.​

"வீக்கெண்ட்ல இப்படி வந்துடுவேன். எனக்கும் ஒரு புத்துணர்வா இருக்கும்" என்றவன், "நீங்க ஷட்டல் விளையாடிவீங்களா கௌதம்?" என கேட்டான்.​

"ம்ம்ம் விளையாடுவேன். என்னை விட காவ்யா நல்லா விளையாடுவா.." என்றான் சிறுவயதில் தங்கையிடம் தோற்றதை நினைத்துக் கொண்டே சிரிப்புடன்.​

சில நேரம் இறகுபந்து விளையாடுபவர்களை பார்த்துக்கொண்டே அமர்ந்திருக்கும் காவ்யாவை பலமுறை பார்த்த கார்த்திக்கிற்கு அந்த பார்வையின் அர்த்தம் இன்று புரிந்தது.​

இருந்தும் எதுவும் காட்டிக்கொள்ளாமல், "சரி வாங்க நம்ம ஒரு ரவுண்ட் விளையாடலாம்" என கௌதமை அழைத்தான்.​

"ஓகே.." என தோள் குலுக்களுடன் கௌதமும் ஒத்துக்கொண்டான்.​

ஒரு ரவுண்ட் என்பது, மூன்றாகியது. இடையிடையே சித்துவையும் பார்த்துக் கொண்டனர். மூன்று ரௌண்டிலும் கார்த்திக் தான் வென்றான்.​

"ஹே! கார்த்தி அங்கிள் தான் வின்.." என சித்து குதித்தான்.​

"என்னை ஈஸியா வின் பண்ணிட்டீங்க கார்த்திக். ஆனா காவ்யாவை அப்படி ஜெயிக்க முடியாது.." என ஆடியதால் மூச்சுவாங்கியபடியே கௌதம் கூறினான்.​

தன் கையிரண்டையும் கால் முட்டியில் முட்டுக்கொடுத்து குனிந்து நின்றுக் கொண்டிருந்த கார்த்திக், "அதையும் ஒருநாள் பார்க்கலாம்" என வலதுகையின் பெருவிரலை தூக்கிக் காட்டினான்.​

அந்நேரம் கௌதமை காவ்யா போனில் அழைக்க, "வீட்டில் இருந்து கால் வந்துடுச்சு.. நாங்க கிளம்புறோம்" என்ற கௌதம் சித்துவையும் அழைத்துக்கொண்டு சென்றான்.​

மறுநாள் மாலை காவ்யா வீட்டில் சித்து தனது பீல்டிங் ப்ளாக்ஸ்ஸை வைத்து விளையாடி கொண்டிருந்தான். கண்மணி மற்றும் தேவிகா ஒரு அறையில் இருக்க, காவ்யாவும் கௌதமும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர்.​

அப்பொழுது, "நீ என்கிட்ட கூட மறைச்சிட்டல காவ்யா..? அவ்வளவு பெரிய பொண்ணாகிட்டியா நீ? தனியாகவே எல்லாத்தையும் சமாளிக்க?" என சராமாரியாக வினவினான்.​

அண்ணன் எதைப்பற்றி கேட்கிறான் என தெரியாதவள் திருதிருவென முழித்தாள்.​

"ரொம்ப முழிக்காத.. பழைய வீட்டை நீ எதுக்கு காலிபண்ண சொன்னனு நான் கண்டுபிடிச்சுட்டேன்" என அவளை கூர்ந்து பார்த்தான்.​

அவனின் பர்வையில் கலங்கியவள், "இல்லண்ணா உங்களுக்கு சிரமம்.." என தொடங்கியவளிடம், "பொய் சொல்லாத.." என அழுத்தமாக உரைத்தான்.​

"சொன்னா? எங்கே என்னையும் சித்துவையும் உன்கூட கூட்டிட்டு போய்டுவியோனு தான்" என குனிந்த தலை நிமிராமலே கூறினாள்.​

"இப்பதான் எனக்கு தெரிஞ்சிடுச்சே? உன்னையும் சித்துவையும் வீட்டிற்கு கூட்டிட்டு போகவா..?" என அதிரடியாக வினவினான்.​

விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள் காவ்யா.​

மறுப்பாக தலையசைத்தவளின் கண்களிலும் கண்ணீர் குளம் கட்டியிருக்க, "அந்தாளை கவனிக்கிற விதத்துல நான் கவனிச்சிட்டேன். நீ பயப்படாத.." என மூன்று மாதங்கள் முன் நடந்த சம்பவத்திற்கு தங்கையின் கையை ஆதரவாக பற்றி கூறினான்.​

மேலும் தொடர்ந்தவன், "நீ எதுனாலும் என்கிட்டே சொல்லிடுவேன்ற நம்பிக்கைல தான் அம்மு நான் அங்க தைரியமா இருக்கேன். ஆனா இதையே நான் தான் கண்டுபிடிக்க வேண்டியதா இருக்கு.." என கசப்புடன் கூறியவனிடம்,​

"இனிமே எதையும் மறைக்க மாட்டேன் அண்ணா" என கலங்கிய விழிகளைத் துடைத்துக் கொண்டாள்.​

"அம்மா.. அப்பாக்கு தெரியுமா ண்ணா?" என கேட்டாள்.​

"இல்ல அம்மு. நான் சொல்லல நீ கவலைப்படாத.." என காவ்யாவைத் தேற்றியவன், "சரி இன்னைக்கு நான் டீ போடுறேன். நீ போய் முகம் கழுவிட்டு வா" என தங்கையை அனுப்பியவன் தேநீர் தயாரிக்கப் சென்றான்.​

பின் மாலை சிற்றுண்டியை முடித்த கௌதம் மற்றும் சித்து பார்க்கிற்கு சென்றனர்.​

நேற்றுப்போல் இன்றும் கார்த்திக்கும் கௌதமும் விளையாடினார்கள்.​

"இனி வீக்கெண்ட் இங்க வரலாம் போலயே? நல்லா டைம் பாஸ் ஆகுது!" என கௌதம் கூற,​

"கண்டிப்பா கௌதம். எனக்கு எனர்ஜி பூஸ்டர் இது தான்" என பெருமை பொங்கக் கூறினான்.​

விளையாடிய பின் அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு கார்த்திக்குடனே கௌதமும் சித்துவும் வந்தார்கள்.​

மின்தூக்கியில் ஏறிய கார்த்திக் ஐந்தை அழுத்திவிட்டான். ஆனால் கௌதம் நான்கை அழுத்தாததால், அது நேராக ஐந்தாம் தளத்திற்கே சென்றது.​

மேலே வந்ததும் தான் கவனித்த கௌதம் நான்கை அழுத்த சென்றான். அதை பார்த்த கார்த்திக், "வீட்டுக்கு வந்துவிட்டு போங்க கௌதம்.." என அழைக்க, கௌதம் நாசுக்காக மறுத்துவிட்டான்.​

"மாமா.. கார்த்திக் அங்கிள் வீட்ட நான் பார்த்ததே இல்லை போகலாம்" என கெஞ்சிய சித்துவை அழைத்துக் கொண்டு கார்த்திக்கின் வீட்டிற்குள் சென்றான் கௌதம்.​

இப்படி யாரையும் சட்டென்று வீட்டிற்கு அழைத்துவிட மாட்டான் கார்த்திக். ஆனால் கௌதமுடன் நல்லதொரு அறிமுகம் ஏற்பட்டிருக்க, அவனை இலகுவாக வீட்டிற்கு அழைத்துவிட்டான்.​

தன்னை சுத்தம் படுத்திக்கொண்டு வந்த கார்த்திக் அங்கிருந்த பாத்ரூமில் அவர்களையும் முகம் கழுவிவர சொன்னான்.​

பின் தனக்கும் கௌதமிற்கு காப்பியை கலந்துக் கொண்டவன், சித்துவிற்கு பாலை ஆற்றிக் கொண்டான்.​

"கார்த்தி அங்கிள் உங்க வீட்ல த்ரீ ரூம்ஸ் இருக்கா?" என மூன்று படுக்கையறைகளை பார்த்து கேட்ட சித்து, "எங்க வீட்ல டூ தான்" என அவனே சொல்லிக்கொண்டான். அவனின் இந்த கேள்வியில் கார்த்திக், கௌதம் இருவரும் சிரித்தனர்.​

காப்பியை கார்த்திக் எடுத்துக்கொண்டு வருவதை பார்த்த கௌதம், "வீட்ல வேற யாரும் இல்லையா கார்த்திக்?" என்றான் சுற்றியும் பார்த்துக்கொண்டே.​

"இல்லை கௌதம் நான் மட்டும் தானிருக்கேன்" என பதிலளித்தவனிடம் வேறெதுவும் கேட்டுக்கொள்ளவில்லை கௌதம். சற்று நேரம் அங்கிருந்துவிட்டு கௌதமும் சித்துவும் கீழிறங்கினர்.​

வேறு யாராவதாக இருந்தால், "ஏன் தனியா இருக்கீங்க? இன்னும் கல்யாணம் பண்ணிக்கலையா? என்ன பிரச்சனை?" என கார்த்திக்கின் வாழ்வை தோண்டி துருவியிருப்பர். ஆனால் அப்படியேதும் கேட்டுக்கொள்ளாத கௌதமை கார்த்திக்கிற்கு இன்னுமே பிடித்தது. அங்கே அவர்களுள் நல்ல ஒரு புரிதலுடன் கூடிய நட்பு அரும்பத் தொடங்கியது.​

அம்மா, அண்ணன், அண்ணி என அனைவரையும் வழியனுப்பிவிட்டு உள்ளே வந்த காவ்யாவிடம், "காவ்யா மேடம் அடுத்தவார சனிக்கிழமை நம்ம அபார்ட்மென்ட் அஸோசியேட் மீட்டிங் இருக்கு. நீங்க இங்க வந்து முதல் மீட்டிங் வேற.. மறக்காம கலந்துக்கோங்க" என அங்கிருந்த செக்யூரிட்டி அறிவிப்பாய் சொன்னார்.​

"சரி அண்ணா" என சொல்லியவள் மற்ற தகவலையும் கேட்டுக்கொண்டு வீட்டிற்கு சென்றாள்.​

__________​

"சொல்லுங்க ம்மா.. " என அப்பொழுதுதான் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்த கார்த்திக் தன் அன்னை விசாலாட்சியுடன் போனில் பேசிக் கொண்டிருந்தான்.​

"அப்பா வீட்டு சைடுல இருக்க சொந்தக்காரங்க கல்யாணம் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வருது கார்த்தி. அதான் நானும் அப்பாவும் சென்னை வந்துட்டு அப்படியே ஒருவாரம் அங்க இருந்துட்டு போகலாம்னு இருக்கோம்" என்றார் விசாலாட்சி.​

"அம்மா இதுக்கெல்லாம் என்கிட்ட கேட்கணுமா? நீங்களும் அப்பாவும் வந்து எவ்வளவு நாள் வேண்டுமென்றாலும் தங்குங்க" என தன் சம்மதத்தை கூறினான்.​

"சரிப்பா. நான் வைக்கிறேன்" என வைத்துவிட்டார்.​

அவர்கள் சென்னை வருவது திருமணத்தில் கலந்துக்கொள்ள மட்டுமில்லையே! அவனின் திருமணத்தையும் பற்றி பேசவே வருகின்றனர். ஆனால் அதை போனில் சொன்னால் கத்துவான் என விசாலாட்சி மறைத்துவிட்டார்.​

 
Top