அன்று இரவே உமையாள், கயல் வீட்டிற்கு சென்றாள். கமலம் அம்மா சொல்லின் படி கயல் அவளது அறையில் தான் இருந்தாள். ஆனால் வரவேற்பறையில் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என தெரிந்து கொள்ள அவள் அறை கதவை அவள் மூடவில்லை.
உமையாளை வரவேற்ற கமலம் அம்மா. அவளை அமரவைத்து அவள் குடிக்க தேநீர் குடுத்தார். தேநீர் அருந்தி கொண்டவளையே அழுத்தமாக பார்த்து கொண்டிருந்தார் கமலம் அம்மா.
பின் அவர் "என் மகள் வாழ்க்கை இப்படி வீணாய் போவதை பார்க்க எனக்கு பிடிக்க வில்லை. இன்னும் எவ்வளவு காலம் தான் அவள் இப்படியே இருப்பது. அவள் வாழ வேண்டும் கண்டிப்பாக நல்ல வாழவேண்டும். அதற்கு நீ தடையாய் இருக்கிறாய். அவள் வாழ்க்கையை விட்டு போ" என கூறினார்.
இதனை கேட்ட உமையாளோ என்ன சொல்வது என்று தெரியாமல் விக்கித்து போனாள். கயலுக்குமே தன் தாயை நினைத்து அவ்வளவு ஆத்திரம் வந்தது. அவள் முன் அறைக்கு செல்ல முற்பட உமையாள் குரல் அவள் காதில் ஒலித்தது.
"உண்மைதான் அத்தை நான் எல்லோருக்கும் பாரமாய் உள்ளேன். என் மகளை அழைத்துக்கொண்டு நான் எல்லோர் வாழ்க்கையில் இருந்தும் சென்று விடுகிறேன்." என கூறினாள்.
அது மேலும் கயலுக்கு எரிச்சலை அதிக படுத்தியது 'நம் அம்மாதான் முட்டாள் மாதிரி பேசுகிறார்கள் என்றால் இந்த அண்ணி ஒரு பக்கம்' என பொரிந்து கொண்டே முன்னறைக்கு விரைந்தாள்.
அவள் அவர்கள் முன் செல்வதற்குள் கமலம் அம்மாவின் குரல் மறுபடியும் ஒலித்தது "ஹ்ம்ம் போய்விடு எப்போ போகிறாய்? அதாவது உன்னுடன் இருக்கும் இந்த பிடிவாதத்தை கேட்கிறேன். அதை உன்னிடம் இருந்து எப்போ அனுப்ப போகிறாய்?" என கேட்டார்.
உமையாளுக்கு புரியவில்லை. அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த கயலும், கமலம் அம்மாவின் இந்த கூற்றை கேட்டு அங்கேயே நின்று விட்டாள். உமையாள் கமலம் அம்மவை புரியாது பார்க்க, கமலம் அம்மாவோ மெலிதாக சிரித்து,
“என்ன பார்க்கிறாய்? நான் மகள் என்று கயலை கூறவில்லை உன்னைத்தான் கூறினேன், உன்னிடம் இருக்கும் பிடிவாதத்தைத்தான் உன்னை விட்டு போக சொன்னேன்." என கூறினார்.
கயலுக்கோ தன் தாய் கூறியதை கேட்டு மிகுந்த மகிழ்ச்சி. உமையாள் கண்கள் கூட தாய் என்றதும் கலங்கி விட்டது. மேலும் தொடர்ந்த கமலம் அம்மா,
"உமையா இதை என்னை விட உணர்ந்து சொல்ல வேறு யாரும் இருக்க முடியாது ஏன் என்றால் உன்னை போல் தான் நானும். என் கணவர் இறந்த பின் எனக்கு உலகமே இருண்ட உணர்வு.
கையில் வயதுக்கு வந்த பெண் பிள்ளை . நான் இல்லையென்றால் அவளுக்கு பாதுகாப்பு ஏது? அவளுக்காக வாழ வேண்டும் என நினைத்தேன். அவளை வளர்க்க வேண்டும்.
இன்னும் கொஞ்ச காலம் தான் அவளுக்கு துணையாய் இருந்து அவளை ஒருவன் கையில் பிடித்து கொடுத்து விட்டால் பின் அவர் பின்னால் நாமும் சென்று விடலாம் என்று நினைத்து கொண்டுதான் என் உயிரை கையில் பிடித்து கொண்டிருக்கிறேன்.
எனக்கும் ஆசை என் மகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று ஆனால் இருக்கும் இந்த வீட்டை தவிர வேறு எதுவும் என்னிடம் இல்லை இதில் எங்கு அவளை மேற்படிப்பு படிக்க வைக்க, பள்ளி படிப்போடு அவளை நிறுத்தி விட்டு, நான் வேலை செய்யும் இடத்திற்கே என்னுடன் சேர்ந்து வேலை செய்ய அழைத்து சென்றேன்.
யாரும் அவளை தவறாக பார்க்க கூடாது என்று மிகுந்த கவனமாக இருப்பேன். எப்போதும் எல்லோரிடமும் சிடு சிடுவென இருப்பேன். என் சிடு சிடுப்பு என் மகளுக்கு ஒரு கவசமாக இருந்தது.
அவள் உன்னிடம் வேலைக்கு வந்த பின் தான் எனக்கு நிம்மதியே வந்தது. உனக்கு தம்பி இருப்பதை பற்றி அவள் என்னிடம் சொன்னதே இல்லை. தாயும் செயுமாக இருக்குறீர்கள் என்று மட்டும் தான் எனக்கு தெரியும்.
நான் இப்படியே இருந்து விட்டேன். கட்டுனவனை தாண்டி வேற்று ஆணை நினைத்தால் அது கட்டியவனுக்கு நாம் செய்யும் துரோகம் என்றுதான் நினைத்தேன்.
உன் தம்பி வந்து என் அக்காவுக்கு கல்யாணம் நடந்த பின் தான் எனக்கு கல்யாணம் என்று கூறிய போது அவ்வளவு கோபம் வந்தது. ஏன் அந்த கோபத்தை வார்த்தைகளாக கூட காயலிடமும் உன் தம்பியிடமும் வெளிப்படுத்தினேன்.
கயல் கூட என்னிடம் கேட்டாள். இதுவே நான் ஒரு விதவையாக உன் வீட்டில் இருந்தால் என்னை இப்படித்தான் விட்டு வைப்பாயா என்று. அப்போது கூட என் மனம் சமாதானம் ஆகா வில்லை.
இரண்டில் ஒன்று தெரிந்து கொள்ளத்தான் இன்று உன் வீட்டை தேடி வந்த நான். ஆனால் உன் வீட்டில் நடந்த சம்பவங்களும் அதன் பின் நான் உன் வாழ்க்கையை பற்றி காயலிடம் தெரிந்து கொண்டதும் என்னையும் என் முட்டாள் தனமான சிந்தனையையும் மாற்றி விட்டது.
அருணை நான் கெட்டவன் என்று சொல்ல மாட்டேன். ஆனால் அவன் வாழ தெரியாதவன். அவனை பற்றி பேச ஒன்றும் இல்லை. கடவுள் என்று ஒருவர் இருக்கிறார். நாம் பிறக்கும் போதே நம் தலையில் நீ இப்படித்தான் ஜனிப்பாய், இப்படித்தான் வளருவாய், இப்படித்தான் வாழ்வாய், இப்படித்தான் இறப்பாய் என எழுதி வைத்து விடுவார்.
அதை யாராலும் மாற்ற முடியாது. அவன் விதி படி அவன் போய்ட்டான். அவன் இப்புவியில் இருந்த வரைக்கும் அவனுக்கு நடந்த ஒரு நல்ல விஷயம் நீ. அவன் போன பிறவியில் செய்த நன்மைக்கு கடவுள் குடுத்த வரம் நீ.
அவன் அவனுடைய வரத்தை அனுபவித்து சென்று விட்டான். அவன் அத்தியாயம் முடிந்து விட்டது ஆனால் நீ அப்படி இல்லை இங்கு உனக்கென்று ஒரு விதி உள்ளது.
அதன் படி உன் வாழ்க்கை சென்று தான் ஆகா வேண்டும். இன்று நடந்த சம்பவத்தை பார்த்து கூறுகிறேன், கடவுள் உனக்காக அனுப்ப பட்ட வரம் தான் ருத்ரன். அந்த குழந்தை, நம் மகிழிடம் உனக்கு அப்பா இல்லை என்று சொல்லும் போது அவன் முகம் வலியில் சுருங்கியது.
அது உண்மையான அன்பும் அக்கறையும் உள்ளவர்களுக்கு தான் வரும். அவன் உன்னிடம் எந்த ஒளிவு மறைவும் இன்றி உன் மேல் உள்ள விருப்பத்தை கூறினான்.
"மகிழுக்கு அப்பாவாக இருக்கிறேன். அவள் தான் எனக்கு......" என்று இப்படியான அலங்கார வார்த்தைகள் ஏதும் கூறாமல் "அவள் என் பெண். ஒரு அம்மாதான் குழந்தைக்கு அப்பா யார் என்று சொல்ல வேண்டும் சீக்கிரமே நான்தான் அவள் அப்பா என்று அவளிடம் சொல் இல்லை என்றால் நானே சொல்ல வேண்டிய சூழ்நிலை வரும்." என்று என்னை இன்றி அவளுக்கு வேறு யாரும் அப்பா இல்லை என்று ஆணித்தரமாக கூறியுள்ளான்.
இன்னும் உனக்கு என்ன வேண்டும். தன் உதிரத்தையே பொருட்படுத்தாத சில ஆண்கள் மத்தியில் மகிழை அவன் தங்குவது அதிசயம் தான். அவன் கண்ணில் போலி தன்மை இல்லை.
மகிழை அன்னைக்கும் போது அவனுள் ஒரு தந்தை இருப்பதை என்னால் உணர முடிகிறது. அவனை இழக்காதே. உன் பிடிவாதத்தை விட்டு விடு. நீயும் வாழ் அவனையும் உன்னுடன் வாழ விடு.
உன் மகளுக்கு அவன் தான் சிறந்த அப்பாவாக இருக்க முடியும்.“ என நீளமாக கூறி முடித்தார். கயல் கண்கள் குளம் கட்டி விட்டது. தனது அம்மாவை நினைத்து பெருமை பட்டாள்.
அவள் இதழ்கள் தாராளமாகவே விரிந்து கொண்டன அதே சமயம் தன்னை காக்க அவர் எத்தனை தூரம் பாடு பட்டிருக்கிறார் என்று நினைத்து வறுத்த பட்டாள்.
கமலம் அம்மாவோ எழுந்து உமையாள் அருகில் சென்றவர் அவள் தலையை வருடி “சாப்பிடுகிறாயா?” என்று கேட்டார். அவள் வேண்டாம் என தலையை மட்டும் இல்லை எனும் விதமாக ஆட்டினாள்.
அவள் உச்சந்தலையில் முத்தம் ஒன்று பதித்து “வீட்டிற்கு போ. உனக்கு இப்போது அதிகமாக தேவைப்படுவது அமைதி தான். அமைதியாய் நான் சொன்னதை யோசனை செய்து பார், அதில் நான் கூறிய உண்மை உனக்கு புரியும்.” என கூறினார்.
“அந்த பையனை ரொம்ப நாள் காக்க வைக்காதே. உன் தம்பியையும் ரொம்ப நாள் காக்க வைக்காதே.” என கூறினார்.
அவளும் ஏதும் கூறாமல் வீட்டிற்கு செல்ல எழுந்தவள் ஒரு கணம் கமலம் அம்மாவை பார்த்து அவர் அருகில் சென்று அவரை இறுக கட்டி அனைத்து விடு வித்தாள்.
பின் அவரிடம் இருந்து விடை பெற்று வீட்டிற்கு புறப்பட்டாள். அவள் சென்றவுடன், கயல் ஓடி வந்து கமலம் அம்மாவை கட்டி பிடித்து கொண்டாள். அவள் கண்களில் கண்ணீர்.
தான் கூறிய அனைத்தையும் மகள் கேட்டுருக்கிறாள் என புரிந்து கொண்டு அவள் தலையை தடவி கொடுத்தார் கமலம். போகும் வழி எங்கும் உமையாளுக்கு யோசனைதான்.
வீட்டிற்குள் வந்தவள் அமைதியாக அவள் அறையை நோக்கி சென்றாள். அவளுக்கு தெரியும் மகிழ் நீலன் கூட இருக்கிறாள் என்று. அதனால் அவளை பற்றி கவலை இன்றி ஆழமான யோசனையில் ஈடுபட்டிருந்தாள்.
யோசித்துக்கொண்டே இருந்தவள் எப்போது உறங்கினால் என்று அவளுக்கே தெரிய வில்லை. காலையில் எழுந்தவள் மனம் சற்று தெளிவடைத்திருந்தது.
ஒரு வாரம் சென்றிருக்கும், அன்று காலையில் துயில் எழுந்தவள் மகிழுக்கு பட்டு பாவாடை அணிந்து விட்டு, அவளும் ஒரு சேலையை எடுத்தி உடுத்தி விட்டு, தாயும் மகளுமாக கோவிலுக்கு சென்றனர்.
அவளுள் 'மறுமணம் செய்தால் என்ன என்ற எண்ணம் துளிர் விட்டது. ஆனாலும் எதோ ஒரு குழப்பம் அதனை தீர்த்து கொள்ளவே கோவிலுக்கு மகிழுடன் சென்றிருந்தால் உமையாள்.
சன்னதியில் நின்றவள் மனதார முருகனை பிராத்தித்து விட்டு ஆராத்தி எடுத்து கண்ணில் ஓத்திட்டு, திருநீறை எடுத்து அவளுக்கும் மகிழுக்கும் பூசி விட்டாள்.
பின் மகிழை அழைத்து கொண்டு கோவில் தூணில் சாய்ந்து அமர்ந்தாள். மனதை ஒரு நிலை படுத்தி கண்களை மூடினாள். மூடியவுடனே வந்தது என்னவோ, அன்று அவள் வீட்டிலிருந்து செல்லும் முன் அவளை பார்த்து கண் அடித்த ருத்ரனின் முகம் தான்.
சட்டென கண்களை திறந்து கொண்டாள். அவள் இதழ்களில் மெல்லிய கீற்று புன்னகை அதில் வெக்கம் ஒளிந்திருந்ததா என்று அவளுக்குத்தான் வெளிச்சம். மகிழை அழைத்து கொண்டு கோவிலிருந்து புறப்பட்டாள்.
வீட்டிற்கு சென்றவள் சாமி அறைக்கு சென்று அர்ச்சனை செய்த பிரசாதத்தை கடவுளின் முன் வைத்து விட்டு. தன் வேலையை பார்க்க தனது அறைக்கு சென்றாள்.
நீலனுக்கோ அவளை கண்டு ஒரே ஆச்சரியம். உமையாள் சாரி கட்டுவது அதுவும் கோவிலுக்கு போவதெல்லாம் ஆச்சரியம் தான். அதற்கென்று அவள் தெய்வ பக்தி இல்லாதவள் இல்லை.
வீட்டில் இருக்கும் கடவுளை மனதார வேண்டிக்கொள்வாள். அதே போல் உடை என்பது நம் வசதிக்கு தகுந்தார் போல் அணிவது. அதனால் என் வசதிக்கு சுடிதார் இல்லை குர்தி தான் நான் அணிவேன் என்று கூறுவாள். சாரி கட்டுவது அவளுக்கு அவ்வளவு வசதி இல்லை என்று எப்படியாவது தவிர்த்து விடுவாள்.
இன்றோ கோவிலுக்கு அதுவும் சாரி கட்டி சென்றிருக்கிறாள் ஆச்சரியம் படத்தானே வேண்டும். ருத்ரனுக்கு அழைப்பு விடுத்தாள். அப்போது ருத்ரனோ ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருந்தான்.
அவனுக்கு அவளை பிடித்திருக்கிறது என்று கூறிய பின்னர் இதுதான் முதல் முறை அவளாகவே அவனுக்கு அழைத்திருந்தான். உமையாளின் அழைப்பை கண்டதும் ருத்ரனின் கண்கள் அகண்டு சுருங்கியது.
இன்னும் பத்து நிமிடத்தில் மீட்டிங் முடிந்து விடும் எனும் காரணத்தினால் உமையாளின் அழைப்பை ஏர்க்கவில்லை அவன். அவளும் அவளது இரு தோள்களையும் குலுக்கி விட்டு திறன்பேசியை ஒரு மேஜையில் வைத்து விட்டு தன் வேலையை பார்க்க போனாள்.
பத்து நிமிடத்தில் ருத்ரனே உமையாளுக்கு அழைத்திருந்தான். உமையாளும் அழைப்பை ஏற்று அவன் பேசுவதற்கு முன் "ருத்ரன் நான் உங்களை இன்று சந்திக்க முடியுமா" என கேட்டாள்.
ருத்ரனும் " சந்திக்கலாமே... நானும் உன்னை பார்க்க வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். அன்றே கூறினேன் அல்லவா, ராமன் சில ஐடியாக்களை கொடுத்திருக்கிறார் என்று அதை பற்றி நாம் கொஞ்சம் கலந்துரையாட வேண்டும். என கூறினான்.
"ஓஹ்! அப்படியா.. சரி அன்று சந்தித்த அதே உணவகத்தில் சந்திக்கலாம் மாலை நான்கு மணி உங்களுக்கு ஓகே வா?” என கேட்டாள். அவனும் சம்மதித்து அழைப்பை துண்டித்தான். இருவரின் சந்திப்பும் எப்படி இருக்குமோ….