எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அரசியல் ஆல்பா (2)… பாகம் 11

---------------------------------------------------------------------------------



இதுவரை ஆல்பா

3050ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சியில் புதிய கோளான பிளானட் எக்ஸ்ஸை கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ள ஆராய்ச்சிக்கூட தலைவர் மல்கோத்ரா, ரஷ்ய ஆராய்ச்சியாளர் டேவ், ஆராய்ச்சியாளர்கள் மணி மற்றும் மேகலா ஆகியோர் ஒரு தனிப்பட்ட அரசியல் அமைப்பினால் சூழப்பட்ட சதி வலையில் சிக்கி உள்ளதை உணர்ந்து அதிர்ச்சி அடைகிறார்கள். இனி…..



அரசியல் ஆல்பா (2)… பாகம் 11



டேவ் சொன்னதைக் கேட்ட மணி மற்றும் மேகலா மிரண்டு போனார்கள். சற்று முன் காதல் வானில் பறக்கத் தொடங்கிய இருவரும் தற்பொழுது கால் ஒடிந்த கன்றுக் குட்டி போல ஆனார்கள்.



டேவ் தொடர்ந்தார். “ மணி, மேகலா இப்ப நாம செய்ய வேண்டியது அவங்க நமக்கு கொடுத்த ரகசிய வேலையை முடிச்சு கொடுத்துட்டு ஒதுங்க வேண்டியதுதான்”



டேவ் அந்த ரகசிய வேலையை பற்றி சொல்லாமல் சுற்றி வளைத்துப் பேசினார்.



‘சார் இதை நாம அரசாங்கத்தற்கு தெரியப்படுத்துனா நாம தப்பிக்க முடியாதா?” மணி கேட்டான்.



“ ஆமா சார் மணி சொல்ற மாதிரி நம்ம நாலு பேரும் ஏதாவது முயற்சி பண்ணி இந்தப் பிரச்சனையிலிருந்து வெளி வர முடியாதா?” மேகலா கேட்டாள்.



டேவ் இடது வலதாக தலையாட்டினார்.

“கண்டிப்பாக முடியாது. ஒவ்வொரு நொடியும் நாம கண்காணிக்கப்படுகிறோம். சிறிது நம்ம நடவடிக்கை மாறினாலோ அல்லது வித்தியாசம் தெரிஞ்சாலோ அடுத்த நிமிசம் அடையாளம் தெரியாம ஆக்கப்படுவோம். நாங்க இரண்டு பேரும் பண ஆசைக்கு மயங்காததால மரண பயம் காட்டி வழிக்கு கொண்டு வந்தாங்க. எங்களை வச்சு உங்களை சரிகட்ட சொன்னாங்க. உங்ககிட்ட உண்மையான காரணம் சொல்லாம வேலை வாங்க சொன்னாங்க. ஆனாலும் என்னால மறைக்க முடியலை”.



மேகலாவும் மணியும் சற்று நிதானித்தார்கள். எதிரி யார் என்று தெரியாத நிலையில் மோதுவது காற்றை எதிர்த்து சண்டை போடுவது போல வீணான வேலை என்று மனதிற்குப்பட்டது.



“வேலை பார்ப்பது போல பார்த்துவிட்டு கண்டுபிடிக்க முடியவில்லை என சொன்னால் என்ன செய்ய முடியும்? அவர்களுக்கு இதைப்பற்றி தெரியவா போகிறது” ?.



“ ஆமா சார், மேகலா சொல்றது மாதிரி அவங்களை ஏமாத்த முடியாதா ?”.



டேவ் அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்தார். அவர்களுக்காக பரிதாபப்பட்டார்.



“ மேகலா, கோடிக்கணக்கில் பணம் இதற்காக செலவழிப்பவர்கள் நொடிப்பொழுது வீணாக்க மாட்டார்கள். இதில் பணத்திற்கு ஆசைப்பட்டு சில விஞ்ஞானிகளும் வேலை செய்கிறார்கள். நமக்கு பிப்ரவரி 12 இறுதி நாளாக கெடு கொடுத்துள்ளார்கள். அதற்குள் நாம் நமது வேலையை முடிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் தகவல் அனுப்ப வேண்டும். நாம் கண்டுபிடிக்க சிரமமான வண்ணமயமான ’எஸ்ரா’ கோளை எனது பிட் கருவியால் சிறிது நேரம் பார்த்த தகவல் அவர்களுக்கு சென்றவுடன் என்னை வேகப்படுத்துகின்றார்கள். எனது குடும்பம் மற்றும் மல்கோத்ரா குடும்பம் அவர்களின் நிழல் கண்காணிப்பு பிரிவால் கவனிக்கப்படுகிறது” – வேதனையுடன் பேசினார் டேவ்.



“ சார் நாங்க இரண்டு பேருமே குடும்பம் இல்லாதவங்க. எங்களை அவர்களால் என்ன செய்ய முடியும் ? அதுதவிர இனிமேதான் குடும்பமா மாற போறோம்”.



மணி அந்த சூழ்நிலையிலும் தனது காதல் நிலையை வெளிப்படுத்தியது கண்டு மேகலாவிற்கு கோபம் வந்தது.

’இன்னும் காதலே உறுதிப்படுத்தாத நிலையில் , அதுவும் ஆன்மீகத்தோடு நாத்திகம் மோதும் இந்த நிலையில் இவன் வேறு நேரம் காலம் தெரியாமல் பிதற்றிக் கொண்டு இருக்கின்றான்’ இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை ? கண்ணைக் காட்டி காட்டுக்குள் விட்டாலும் பரவாயில்லை, இவர் சொல்ல வருவதைக் கேட்டால் கண்ணைக் கட்டி கழுதைப் புலி கூட்டத்திற்கு இடையில் மாட்டியது போல இருக்கிறதே. ஆண்டவா என்ன செய்றது ?’





“ மணி சார் பேசாம இருக்க மாட்டீங்களா ?

சரி சார், அந்த ரகசியத்தை நாம கண்டுபிடிச்சு சீக்கிரம் சொல்லிட்டா நமக்கு பிரச்சனை இல்லைதானே”.



“ மேகலா, ஒரு நிமிடம், உன் கேள்விக்கு பதில் அப்புறம் சொல்றேன். மணி உங்களுக்கு குடும்பம் இல்லைன்னு சொன்னீங்க. ஆனா அவங்க நினைச்சா குடும்பம் நடத்த நீங்க இருக்க மாட்டீங்க. மேகலா அவங்க சொன்ன வேலை மிக எளிதானதல்ல. ஏன்னா…”



டேவ் பேசி இடையில் நிறுத்த, மணி மற்றும் மேகலா அவரை ஆர்வமான குழப்பத்துடன் பார்த்தார்கள்.



டேவ் தொடர்ந்தார்.

“ அந்த ரகசிய வேலை காத்துல படம் வரையறதுக்கு சமம். மிக கடுமையானது, மிக மிக மிக சவாலானது. அந்த ரகசிய ஆராய்ச்சி இதுதான்”



டேவ் அந்த ரகசியத்தை சில நிமிடங்கள் ஒதுக்கி சொல்ல ஆரம்பித்தார்.



டேவ் சொன்ன ரகசியத்தை கேட்ட மணி மனதிற்குள் சிரித்துக் கொண்டான். மேகலாவிற்கு கோபம் ஏற ஆரம்பித்தது.



அந்த ரகசிய வேலை என்ன ? மணி ஏன் சந்தோசப்பட்டான் ? மேகலா கோபப்பட காரணம் என்ன ?



விதி ஓரமாய் நின்று நக்கலாக பல்லைக் காட்டியது.
 
Top