எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இன்ப ஆல்பா – 9

இதுவரை ஆல்பா…..




3050ஆம் ஆண்டு புதிய கோளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்த மணி தன்னோடு இணைந்து பணியாற்றும் மேகலாவிடம் அவளுக்குத் தெரியாத பிறப்பு ரகசியங்களை சொல்லித் தன் காதலை வெளிப்ப்படுத்துகின்றான். இறுதியில் அவளும் ஏற்றுக் கொள்ள இனி…….



இன்ப ஆல்பா – 9



மணி பரவசத்தில் இருந்தான். முகம் பிரகாசமாய் மாறியது. ஏதோ கையில் கிடைத்த மிட்டாயைக் கண்டு மகிழ்ந்த குழந்தை போல சிரித்த அவனைக் கண்டு வெட்கப்பட்டாள் மேகலா.



”போதும்யா கனவு கண்டது . நிஜ உலகிற்கு வா”

மேகலாவின் குரலைக் கேட்டு மணி நிதானத்திற்கு வந்தான்.



“சரி மேகலா, நம்ம வேலையைப் பார்ப்போம்”

“எது, காதலிக்கிற வேலையா?”



“சும்மா இரு மேகலா, முன்னாடி உன் கண்ணைப் பார்த்து தைரியமா பேசுவேன். இப்ப உன்னைப் பார்க்க முடியலை”



“ஹலோ வெட்கப்பட வேண்டியது நான்தான். நீங்க வெட்கப்படுறதைப் பார்த்தா எனக்கே வெட்கம் வருது”



“இல்லை மேகலா, காதல் வந்தப் பிறகுதான் எனக்கு அந்த அவஸ்தைப் புரியுது. கலகலப்பு போய் படபடப்பு வருது. இது நானா இல்லை வேறு யாராவதான்னு எனக்கு புரியலை.”



“உண்மையை சொல்லட்டுமா, உன்னுடைய சுறுசுறுப்பு, புத்திக்கூர்மை பார்த்து எப்பவோ நான் காதல்ல விழுந்தாச்சு, ஆனா அப்பவே நான் சொல்லிட்டா நீ விண்வெளியை விட்டுட்டு என்னை ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சிருவ, அதுக்குதான் நான் சொல்லாம மறைச்சிட்டேன்”



மணி அவளை வியப்பாய் பார்த்தான். இவள் தனக்குள் காதலை வைத்துக் கொண்டு அழுத்தமாய் இருந்திருக்காளே என்று நினைத்து மகிழ்ந்தான்.



மேகலா தொடர்ந்தாள்.

“உனக்கும் எனக்கும் உள்ள ஒரே இடைஞ்சல் கடவுள் பக்தி. நீ நம்பாத கடவுளை நான் நம்புனேன். நான் அதிதீவிர கடவுள் பக்தை. உன்னை விலக்கவும் தயக்கம், சேர்க்கவும் தயக்மா இருந்துச்சு. ஆனா கடைசியில உன் காதல் மன்னிக்கவும் உங்க காதல் என்னை ஜெயிச்சது.”



“சரிடி, நீ பெரிய கள்ளிதான். உன்னை என்னமோ நினைச்சா பெரிய மாயக்காரி நீ”



“சரிதான் போடா, இவரு பெரிய மன்மதன், இவரு பின்னாடி நாங்க அலையறோமாக்கும்”



” நீங்க அலையலை. ஆனா உங்க மனசு அலைபாஞ்சு இருக்கும்ல “



“ஆமா அலைபாஞ்சு அந்த பக்கம் வந்துருச்சு, இவரு காப்பாத்தினாராக்கும் “.



“ உன் மேல காதல் வர்றதுக்கு நான் பட்ட பாடு எவனுமே பட்டிருக்க மாட்டான். எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா ?”.



”ஐயா இஷ்டப்பட்டாலும் கஷ்டப்பட்டாதான் நஷ்டமில்லாம வாழ முடியும் “



”ஓகோ, அப்படி போகுதா விசயம். ஒரே தத்துவ பேச்சா இருக்குதே “.



“ நல்லா வேலை பார்த்துகிட்டு இருந்த நான் இப்ப உன்னால தடுமாற வேண்டி இருக்கு. மூளையே வேலை செய்ய மாட்டேங்குது”.

“அதான்மா காதல். ஆளை உருக்கி, மனசை நெருக்கி ஒண்ணுமில்லாம ஆக்கிரும். கொஞ்சம் கொஞ்சமா ஆளை கிறங்க வைக்கும், உளற வைக்கும் , தூக்கத்துல அலற வைக்கும், ஏன் தேவையில்லாததுக்கு பதற வைக்கும். சும்மா நினைச்சியா காதலை ? மனசை சுத்தி வளைச்சு மலைப் பாம்பு மாதிரி முழுசா முழுங்கும், உண்மை காதல்னா தப்பிக்க முடியாது “.



” ஏ அப்ப பெரிய ஆராய்ச்சியே பண்ணியிருக்க . பேசாம நீ எப்படி காதலிப்பதுன்னு புத்தகம் எழுதலாம் “



“ காதல் சோம்பேறியைக் கூட கொம்பேறி மூக்கனா மாத்திரும்”.



“ என்னால முடியலை மணி . இப்படியே போனா நான் பார்க்கிற வேலையை மறந்து கனவு உலகத்துக்கு போயிருவேன் போல . வர்றீயா நம்ம ஆராய்ச்சி மையத்துல கடைசியில இருக்கற கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டு வரலாம்”.

மணி மேகலாவை திரும்பி பார்த்தான். தலையை வலதும் இடதுமாய் ஆட்டினான். அவன் வேண்டாம் என மறுத்து தலையாட்டுவதைக் கண்டு மேகலா அவனை குழப்பமாய் பார்த்தாள்.



“ ஏன் மணி என்ன ஆச்சு ? கோயிலுக்கு வரமாட்டியா ?”.



மணி பேசாமல் திருதிருவென முழித்தான். பதில் வராமல் போகவே மேகலாவிற்கு கோபம் தலைக்கேறியது. ஆனாலும் அடக்கிக் கொண்டு அவனுக்கு முன் இடுப்பில் இரு கைகளையும் வைத்து அவனை கூர்ந்து பார்த்தாள்.



மணி அவள் பார்வையின் வீச்சு தாங்காமல் சட்டைக்குள் பூச்சீ ஊர்வது போல நெளிந்தான்.



” வந்து … வந்து இன்னொரு நாளைக்கு போவோமே, இப்ப வேண்டாம். எனக்கு மூடு இப்ப சரி இல்ல ”



இவ்வளவு நேரமாக ஒழுங்காக பேசிக் கொண்டு இருந்தவன் இப்பொழுது தடுமாறுவதைக் கண்டு காரணம் புரியாமல் குழப்பத்துடன் திணறினாள் மேகலா.



“ மேகலா, உண்மையை சொல்லனும்னா எனக்கு உன் மேல காதல் வந்தது உண்மைதான். ஆனா அதே சமயம் எனக்கு மனசு கடவுள் பக்கம் திரும்பலை. அதனால…”



“ அப்ப காதலுக்கு மட்டும் கடவுள், மத்த எல்லாத்துக்கும் வேணாம். அப்படிதானே மணி சார் “.



“ அப்படியில்லை மேகலா, நான் வச்சிருக்கற காதல் நம்பிக்கை பொய்யானது இல்லை. அதே சமயம் என்னோட கொள்கையை நான் விட்டுக் கொடுக்க முடியாது “.



மேகலாவிற்கு கோபம் வந்தது .’ என்ன மனிதன் இவன். தேவைக்கு மட்டும் பயன்படுத்த கடவுள் என்ன கைக்குட்டையா ? இவன் மட்டுமல்ல நிறைய பேர் இப்படித்தான் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள். சே! என்ன பிறவி இவன்’



சிறிது நேரத்திற்கு முன்வரை காதல் வசனம் பேசிய இருவர் இப்பொழுது எதிரும் புதிருமாய் இருந்தது. விசித்திரமாக இருந்த து.



“ என்ன மணி இது. இப்பதான் காதல் பறவைகளா சிறகடித்து பறந்த கொஞ்ச நேரத்துல என்ன இது புது பிரச்சனை ? அப்ப நம்ம காதல் உண்மையில்லையா ? அவ்வளவுதானா, ஆரம்பிச்ச வேகத்துல முடிஞ்சிருச்சா ?”



”இல்ல மேகலா , இரண்டையும் போட்டு குழப்பிக்காத. காதல் வேறு, சாமி நம்பிக்கை வேறு. தயவு செஞ்சு புரிஞ்சிக்க”



“ இரண்டு பேருமே நான் ஏற்கனவே சொன்ன மாதிரி வேறு வேறு முரண்பட்ட கொள்கை கொண்டவங்க. நமக்கு எப்படி ஒத்துப் போகும் ?”

மணி மேகலாவை ஒருமுறை பார்த்து விட்டு தலையை குணிந்துக் கொண்டு மெதுவாய் சொன்னான்.





“மேகலா உன் காதல் விசயத்துல மட்டும் நான் கடவுளை நம்புறேன். மற்றபடி…”



மணி பேசியதைக் கேட்டு மேகலா ஏதோ சொல்ல வாயைத் திறக்க முயல…. விஞ்ஞானி டேவ் உள்ளே நுழைந்தார். அவருடன் விதியும் உள்ளே நுழைந்தது.



மணி சொல்ல வந்தது என்ன ? டேவ் இப்போழுதாவது அவரும் விண்வெளித் தலைவரும் மறைத்த ரகசியத்தை சொல்வாரா ?

காத்திருங்கள் பொறுமையாக…..

ஆல்பா வரும்…..​
 
Top