எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இலக்கணப்போலி

இலக்கணப்போலி

“இலக்கணம் உடையது போல் சான்றோரால் தொன்று தொட்டு வழங்கப்படும் சொல்”


அத்தியாயம் – 1 (பாட்டாளி)

“பச்சரிசி மாவெடுத்து மாவெடுத்து”
என்ற பாடல் ஆரம்பித்து

“மதுர மரிக்கொழுந்து வாசம்
என் ராசாத்தி உன்னுடைய நேசம்”


என்பதில் வந்து நிற்க, கேட்டுக் கொண்டிருந்த மீனாட்சியின் உதட்டின் ஓரங்கள், இத்தனை நேரமிருந்த இறுக்கத்தைத் தொலைத்து பூத்து விரிய ஆரம்பித்திருந்தன.

மதுரை மாநகரில் அதிகமாக ஒலிக்கப்பட்டப் பாடல்கள் என்று ஒரு கருத்தாய்வு செய்தால் முதல் ஐந்து பாடல்களில் ஒன்றாக இப்பாடல் வந்துவிடும் என்று அடித்துச் சொல்லும் அளவிற்கு இந்தப் பாடலைப் போட்டுப் போட்டுப் தேய்த்து எடுத்திருந்தனர் மதுரையின் பேருந்து ஓட்டுனர்கள்.

காரணம்? அதில் வரும் ‘மதுர’ என்கிற ஒற்றை வார்த்தை.

மதுரையினுள் நுழைந்தவுடன் அவ்வூரின் சிறப்பை எடுத்துச்சொல்லும் ஆயிரம் விஷயங்கள் நம் கண்களில் பட்டாலும்,

‘அவையெல்லாம் போதாது, மேலும் தெரிந்துக்கொள்ளுங்கள்’ என்பது போல் மதுரை என்ற சொல் இடம் பெறுகிற அனைத்து பாடல்களையும் உங்கள் காதுகளில் பாய்க்கக்காத்திருப்பர் நம் மதுரை வாசிகள்.

‘இந்த மதுரக்காரைங்க இருக்காய்ங்களே...’ என்று தலையை இருபுறமும் ஆட்டியபடியே நினைத்தவளின் இதழ்கள் சிரிப்பில் மேலும் அகன்றுவிரிய, பேருந்துக்குள் பயணச்சீட்டைக் கூட வாங்காமல் ஜன்னலின் வழித் திருட்டுத் தனமாக அத்துமீறி நுழைந்துக்கொண்டிருக்கும் ஆதவனின்கீற்றை ஏந்தித் தாங்களும் ஒளிவீசத் தொடங்கின அவளது இதழினுள் இளைப்பாறி கிடந்த ‘மல்லிகைப் பூ’ பற்கள்,

அடுத்த வினாடியே ‘இருக்க பெருமையத் தானப் பீத்துறோம், இல்லாததையாப் பீத்துறோம், ஹூம்’ என்று சிலுப்பிக் கொண்டவளின் கண்களில் சிரிப்போடுச் சேர்த்து மிதப்பும் குடிகொண்டது.

“தெப்பக்கொளோ வாங்குனவிங்க எல்லாம் வெளியவந்துரேய்ய்ய்...” என்று நடத்துனர் கூவ, மடியிலிருந்த கைப்பையை எடுத்துத் தோளில் மாட்டியபடி எழுந்தவள், எக்கித் தலைக்கு மேலிருக்கும் கம்பியை பிடித்தபடி பேருந்தின் கதவை நோக்கி ஜனங்களின் இடிகளை வாங்கிக் கொண்டும், சில இடிகளைத் தானும் பிறருக்கு பலமாகக் கொடுத்தபடியும் நகர ஆரம்பித்தவள் ஒருவழியாகக் கீழேயிறங்கியபோது ஒருபெரும் போரை முடித்ததுப் போன்ற பெருமூச்சு ஒன்று எழுந்தது.

ஏற்கனவே பழக்கப்பட்டிருந்தக் கால்கள் தானாக தான் போக வேண்டியயிடம் நோக்கி நடக்க ஆரம்பிக்க, அவளது கண்கள் வழக்கம் போல சாலையில் வரும் வண்டிகளின் மீது கவனம் செழுத்த ஆரம்பித்தன.

காலையிலேயே சுள்ளென அடித்த வெயிலுக்குப் பிறந்த பிள்ளைகளான வியர்வைத் துளிகளைப் புறங்கையால் துடைத்தவள் “வாழ்த்துகள்”என்று பலகை வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தினுள் நுழைந்தாள்.

உள்ளேயிருந்த
அறையின் தரையில் தவழ்ந்து கொண்டிருக்கும் அழுக்குகளை ஒரிருப் பெண்கள் துடைப்பம் கொண்டு அகற்றிக் கொண்டிருக்க, எட்டி அங்கு மூலையிலிருந்த ஒரே ஒரு தனி அறையைப் பார்த்தாள்.

“ஹ்ம்ம் தீயா வேலப் பாக்குறாப்புல” என்று நினைத்தபடி தலையை அசைத்து உதட்டைப் பிதுக்கியவள் மேசையில் கைப்பையை வைத்துவிட்டு அதனுள்ளிருந்த அலைபேசியை வெளியே எடுத்தபடி பக்கத்திலிருந்த சுழல் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி மணியைப் பார்த்தாள்.

8.45!

வேலை நேரம் ஆரம்பிக்க இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருக்கின்றன என்ற எண்ணத்தோடு அவள் ஏதோ யோசனையில் சுழல் நாற்காலியில் சுழன்று கொண்டிருக்க,

அப்பொழுது “ங்ருக்கும்” என்று கேட்ட கனைப்பின் ஓசையில் திரும்பியவளோ பட்டென எழுந்து நின்று “எ..எஸ் சார்” என்றாள்.

அவளது எலிக்கீச்சுக் குரல் சிறிது படபடப்போடு வெளிவந்தது.

படபடக்கும் அவளது விழிகளையும் இதழ்களையும் ஆழமாக கவனித்தவன் அவளிடம் ஒரு கோப்பை* நீட்டி “இந்த ப்ராஜக்ட் புதுசு... புரட்டிப் பாரு... நாளைக்கு இந்தக் கிளையண்ட்ஸ் இங்க வருவாங்க... அப்போ நடக்குற டிஸ்கசன்ல பைனல் அவ்ட்லைன் கிடைச்சுடும்” என்று அடுத்தடுத்து அடுக்கிக் கொண்டிருந்தவனின் கண்கள் சிவந்து காணப்பட, மீனாட்சியின் பார்வை படபடப்பு நீங்கி அராய்தலோடு அவன் மீது படிந்தது.

கேசமெல்லாம் கலைந்து கசங்கிக் கிடக்க, சோர்வெனும் கடலில் குளித்து எழுந்தவன் போலிருந்தான் அவளின் முதலாளி.

உடையும் கூட நேற்றுப் பார்த்த அதே உடை தானென்று உள் மூளை சொல்ல, அவன் இரவு முழுக்க அலுவலகத்திலேயே இருந்து வேலை செய்திருக்கிறான் என்பது கருத்தில் பதிந்தாலும் அவன் கொடுத்த வேலைக்கு மட்டும் “எஸ் சார்” என்று பதில் கூறியபடி வாங்கிக் கொண்டாள்.

முதலில் அவள் தன்னை ஆராய்ந்ததையும் அதன் பின் வேலையின் பொருட்டு மட்டும் வந்த பதிலையும் குறித்துக் கொண்டவன் அவளை அரை நொடி கண்களைச் சுருக்கி கூர்ந்து நோக்கிவிட்டு அவ்விடம் விட்டு அகன்றுவிட்டான்.

அதுவரையில் பார்வையை கோப்பின் மீதே வைத்திருந்தவள், அவன் அகன்றவுடன் தொப்பென அமர்ந்து அவன் கொடுத்த கோப்பைப் புரட்ட ஆரம்பித்தாள்.

ஏனோ அவன் தன்னை கூர்ந்து பார்த்ததாய் எண்ணம் தோன்ற, ‘அவனது பார்வையே அப்படித்தான்’ என்று நினைத்து ஏதேதோ திரித்து சொல்ல வந்த மனதை அடக்கியபடி வேலையில் கவனம் செழுத்த ஆரம்பித்தாள்.

தனது அறைக்கு சென்று அமர்ந்து கண்ணாடி தடுப்பு வழி அவளைப் பார்த்தவனின் கண்கள் அவள் மீதே சில வினாடிகள் உறைந்து போயின.
பின்னர் தனது இருக்கையில் பின்னந்தலையை சாய்த்து உறங்க முயன்றான்.

இரவு முழுக்க உறக்கமில்லாமல் தலையெல்லாம் ஆங்காங்கே முள்ளால் குத்தப்படுவது போலிருந்தது.

உடல் முழுவதும் சிறிது ஓய்விற்காக அவனுக்கு மனு அனுப்ப, பட்டென எழுந்து வெளியே சென்றவன் தெரிந்த கடையில் ஒரு டீயை வாங்கிக் குடித்துவிட்டு திரும்பி வந்த பொழுது அவனிடம் வேலை செய்யும் மற்ற ஏழு பேரும் வந்திருந்தனர்.

எல்லோரும் இவனைப் பார்த்தவுடன் அதுவரையிலிருந்த கலகலப்பை நிறுத்திவிட்டு தலையை தொங்கப் போட்டுக் கொண்டு வேலையில் மும்முரமாய் இருப்பது போல் பாவனை செய்ய, யாரையும் கருத்தில் கொள்ளாமல் கடகடவென நடந்து சென்றவன் தனது மேசையின் அடியில் வைத்திருந்த போர்வையை எடுத்து கீழே விரித்து படுத்து உறங்க ஆரம்பித்துவிட்டான்.

அவன் சிவா வைத்தியநாதன்!
அடுத்த மாதத்தின் முடிவில் அவன் வயது இருபத்தி ஆறு.

தோராயமாக ஐந்து அடி பத்து இன்ச் உயரமும், பளீச்சுக்கும் கருப்பிற்கும் இடைப்பட்ட உடல் நிறமும் நாள்தோறும் நாம் பார்க்கும் சாதாரண ஆட்களுள் ஒருவனாய் அவனைக் காட்டினாலும், அவனது அடர்த்தி நிறைந்த புருவங்கள் பார்ப்பவரின் கண்களை தன் மீதே படிய வைக்கும் சக்தி பெற்றிருந்தது.

சிகரெட் பிடித்து கருக்கக் காத்திருக்கும் உதடுகள் தங்களது எதிர்காலத்தின் சாயலை இப்பொழுதே மிதமாக வெளிக்காட்ட ஆரம்பித்திருந்தது.

அதை கூர்ந்து கவனிக்கவிடாமல் மறைத்திருந்தது அவனது பல மாதங்களாக வழிக்கப்படமால் இருந்த தாடி.

ஒரு காதில் இருந்த கருப்பு நிற கடுக்கனும், அதே அளவில் சிறிதாக அவனது மூக்கின் வலது மேட்டிலிருந்து வளைந்திருக்கும் இடத்திலிருந்த சிறிய அடர் மச்சமும் ஒன்று போல் காட்சியளித்தன.

அடர்ந்து கிடந்த கேசத்தை சூரியன் ஊடுருவ முடியா கானகம் போல் தான் வளர்த்து வைத்திருந்தான்.

பொதுவான குணநலன்களைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் காணும் அழகை எல்லாம் ரசிப்பவன், மற்றவர்கள் விமர்சிப்பார்கள் என்று தெரிந்தாலும் மனதில் தோன்றுவதை எதுவானாலும் அதை அப்படியே வெளிப்படுத்தும் விசித்திரன்.

அவனது வெளிப்படையான குணமே அவனது பலமும், பலவீனமும் ஆகும்.
நம் எல்லோரையும் போல் அவனுக்கென கனவுகள் உண்டு.

அவனுக்கென விருப்பங்கள் உண்டு.

இப்பொழுதைய அவனது நகர்வெல்லாம் அவனது இலக்குகளை நோக்கியே பயணப்பட்டுக் கொண்டிருந்தன.

நடுத்தர குடும்பமொன்றில் பிறந்து வளர்ந்தவனுக்கு பெரிதாக சாதிக்க வேண்டுமென்ற ஆசை அதிகமாக இருந்தது.

ஆனால் அதற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

படிப்பு அதிகம் மண்டையில் ஏறவில்லை என்றாலும் பகுத்தறிவில் சிறந்தவன்.

சொந்தமாக தொழில் தொடங்கி கோலோச்ச வேண்டும் என்ற அவனது அவாவை அணுகுண்டு போட்டு தடுத்தது குடும்பத்தின் பணச்சூழ்நிலை.

இருபது வயதில் அப்பனிடம் தன் ஆசையை சொல்லி நின்றபொழுது “நம்ம தரத்துக்கு வேலைக்கு போய் சம்பாதிடா... சொந்தத் தொழில்னு எல்லாம் கைவச்சா ஆரம்பிச்சா கெடைக்குற ரெண்டு வாய் சோறும் இல்லாம போயிடும்” என்று அடித்துத் துரத்தாத குறையாகக் கூறிவிட்டார்.

மகனின் ஆசையில் விழும் முட்டுக்கட்டைகளை கையைப் பிசைந்தபடி பார்த்து வருத்தம் கொள்வதைத் தவிர அவனின் தாய்க்கு வேறு வழி தெரியவில்லை.

கணவனின் பேச்சை மீறமாட்டார் கண்ணம்மா.

ஏன் கடன் வாங்கிக் கூட கோட்டை கட்டலாம் தான். ஆனால் அது அந்தக் கடனென்னும் கடலிலேயே அடித்துக் கொண்டு போய்விட்டால்? என்ற பயம் வேறு அகலக்கால் வைக்க சிவாவை யோசிக்க வைத்தது.

அதனால் முதலில் வேலைப் பார்த்து பணத்தோடு சேர்த்து அனுபவத்தையும் சம்பாதித்துவிட்டு முதலீடு செய்யலாம் என்று முடிவெடுத்தான்.

அதன் முதல் அடியாக மதுரையை சேர்ந்த ஒரு நிகழ்ச்சி மேலாண்மை கம்பனியில் வேலைக்குச் சேர்ந்தான்.
நிகழ்ச்சி மேலாண்மை கம்பனிகள் முளைத்து துளிர்விட ஆரம்பித்திருந்த காலகட்டம் அது.

பேரின் பின்னால் போட்டுக்கொள்ளவென பட்டப் படிப்பு படித்தவன் என்பதால் எடுத்தவுடன் உயர் பதவியெல்லாம் அங்கே கிடைக்கவில்லை.

கீழ் நிலையிலிருந்து தான் ஆரம்பித்தான்.

கீழே வேலை செய்பவன் என்கிற ஒற்றைக் காரணத்திற்காகவே அளவுக்கு அதிகமான அவமானங்கள் அவனுக்கு பரிசாக கிடைத்தது.

ஆரம்பித்தில் மூக்கு விடைத்து , கை முஷ்டி இறுகி பல அடிதடி சம்பவங்கள் அவனது பெயரின் இறுதியில் பட்டத்திற்கு அடுத்ததாக சேர்க்கப்பட்டன.
அவனது முன்கோவம் அவனை ஓர் இடத்தில் வேலைப்பார்க்க விடவில்லை.

ஒரு கட்டத்திற்கு மேல் நிதானித்தவன், தன்னை சுற்றியுள்ள இயக்கங்களின் கோட்பாட்டை கிரகிக்க ஆரம்பித்தான்.

ஆட்களின் மீது கவனம் செழுத்துவதை விட்டுவிட்டு தனது உழைப்பின் மீது மட்டும் கவனம் செழுத்த ஆரம்பித்தான்.

சில மாதங்களிலேயே அவனது உழைப்பின் அளவைப் பார்த்து அவனுக்கு நிறைய பொறுப்புகளை தர ஆரம்பித்தனர் அவனது மேலாளர்கள்.
சிறிது சிறிதாக அத்தொழிலின் நுணுக்கங்களை அவனது மூளை கிரகித்துக்கொள்ள ஆரம்பித்தது.

உடலும் மூளையும் சேர்ந்து அயராது வேலை செய்த அந்த நான்கு ஆண்டுகள் அவனுக்கு சொல்லிக் கொடுத்த பாடம் அளப்பரியது.

கடந்த ஆறு ஆண்டுகள் அவனுக்குக் கிடைத்த அனுபவங்கள் ஒவ்வொன்றும் அவனது அதற்கு முன்னான இருபது ஆண்டு கால அனுபவங்களை விட அதிகமானது என்று சொன்னால் மிகை ஆகா!

மேலதிகாரியின் கட்டளையோ துணையோ இல்லாமல் ஒரு நிகழ்ச்சி முழுவதையும் மேலாண்மை செய்யும் அளவிற்கு அவன் தேறியிருந்த சமயம் வேலையை விட்டுவிட்டு வெளியே வந்து தனது கைப்பணத்தோடு சேர்த்து லோன் வாங்கி அவன் தொடங்கியது தான் இந்த “வாழ்த்துகள் ஈவென்ட் மேனேஜ்மண்ட்ஸ்” .

ஆரம்பித்த நாளிலிருந்து காற்று வாங்கிக் கொண்டிருந்த கம்பனி,
ஒன்னு மண்ணாக இவனோடு சுற்றி திரிந்த நண்பன் தனது தங்கையின் பூப்பு புனித நீராட்டு விழாவை சிவாவிடம் ஒப்படைக்க, இவனது கம்பனி பெயர் நண்பனின் விழாவிற்கு வந்திருந்த சொந்த பந்தங்களிடம் பரவ ஆரம்பித்தது.

நிகழ்வுகளை பொறுப்போடு எடுத்து செய்து திருப்திகரமாக முடித்து தரும் சிவாவை நம்பி சொந்தங்கள் எல்லோரும் தங்களது வீட்டு விசேஷங்களை ஒப்படைக்க ஆரம்பித்திருந்தனர்.

அதனால் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக கல்லாகட்ட ஆரம்பித்திருக்கிறது.

தொழிலை மேலும் நல்வழியில் எடுத்து செல்ல வேண்டும் என்று இராப்பகலாக உழைக்க ஆரம்பித்திருக்கிறான் சிவா.

-தொடரும்-
 
இலக்கணப்போலி
2.கனவுகளின் நாயகி

“என்னடி மீனாட்சி? நேத்து ராத்திரியும் மனுஷன் இங்கயே தான் சிவராத்திரி கொண்டாடிருப்பாரு போல” தன்னிடம் வந்து முணுமுணுத்த மலரின் வார்த்தைகளில் கவனத்தை திருப்பிய மீனாட்சி “அது நமக்கெதுக்கு?” என்றாள் சிவா கொடுத்து சென்றிருந்த கோப்பை புரட்டியபடி.

“அதென்னடி நமக்கெதுக்குன்னு என்னையும் கூட சேர்த்துக்குற? எனக்கெல்லாம் அவரப் பத்தி தெரிஞ்சுக்க ஆசதேன்” கோணிக்கொண்டு சொன்ன மலரின் முகத்தில் வெட்கச்சிரிப்புப் பூத்திருந்தது.

திரும்பி அவளைப் பார்த்த மீனாட்சி ‘இது திருந்தாது’ என்பது போல தலையாட்டிவிட்டு மீண்டும் கோப்பினுள் பார்வையை புதைத்துக் கொண்டாள்.

சில மணி நேரங்களில் அந்தக் கோப்பு முழுவதையும் அலசி முடித்து, தேவையான விடயங்களை தாளில் அடுக்கி, பின்னர் அதை பவர் பாயின்ட் ப்ரசெண்டேஷனாக மாற்ற நினைக்கும் பொழுது தான் மடிக்கணினிக்கு அவனறைக்கு தான் செல்ல வேண்டும் என்பது ஞாபகம் வந்தது.

சில நொடிகள் ‘போகலாமா? வேண்டாமா?’ என்று மனதினுள்ளேயே சீட்டுக்குழுக்கிப் போட்டுப் பார்த்துக் கொண்டவள், பின்னர் எழுந்து சென்றாள்.

சத்தம் எழாதவாறு மெல்ல அந்தக் கண்ணாடி கதவை திறக்க முயற்சிக்க, அதுவே க்ரீச் என்ற சத்தத்தை எழுப்பி பல்லிளித்தது. அச்சத்தத்தில் இவள் கண்கள் மூடி நாக்கைக் கடிக்க, அவனோ முதுகு காட்டி புரண்டு படுத்தான்.

ஒற்றை விழியை திறந்துப் பார்த்தவள், அவன் எழவில்லை எனத் தெரிந்ததும் ஆசுவாச மூச்சோடு மறுகண்ணையும் திறந்தாள்.

வலது காலை மட்டும் அறையினுள் வைத்தவள் எக்கி மேசை மீது மின்னேற்றத்திலிருந்த* அவனது மடிக்கணினியை உருவியவள் அதை எடுத்துக் கொண்டு மீண்டும் அறைக் கதவை சத்தமின்றி சாத்த முற்பட்டு தோற்றுப் போய் ஓடி வந்துவிட்டாள்.

இதயம் தாறுமாறாக துடித்தது.

“அடச்சே... என்ன இது ஒரு லேப்டாப்ப எடுத்துட்டு வாரதுக்குள்ள... ஏதோ சிங்கத்தோட குகைக்குள்ள போயிட்டு வார மாதிரி இருக்கு...” என்று நொந்து கொண்டாள்.

மதிய நேரம் வாக்கில் தூக்கம் கலைந்து எழுந்து வந்தான் சிவா.

முன்னர் இருந்த தலை பாரம் இப்பொழுது சற்று மட்டுபட்டிருப்பது போலொரு உணர்வு எழுந்தது.

வெளியே உணவு விடுதியில் உண்டுவிட்டு வந்தவன், நேரே சென்று தனது அறையில் அமர, மடிக்கணியை எடுத்துக்கொண்டு அவன் பின்னால் வந்திருந்தாள் மீனாட்சி.

“ஹ்ம்ம்” என்றான் அவளது கையிலிருக்கும் மடிக்கணியை ஒரு பார்வை பார்த்தபடி

“நீங்க குடுத்த ஈவென்ட் பைல்ல மென்ஷன் பண்ணிருந்த ப்ரிபரன்சஸ் வச்சு அதுக்கு ஏத்த மாதிரி பீபிடி ரெடி பண்ணிருக்கேன்... பாத்துட்டு உங்க பீட்பேக் சொன்னிங்கன்னா அதுக்கு ஏத்த மாதிரி சேன்ஞ் பண்ணிக்கலாம்... நாளைக்கு கிளையண்ட்ஸ் வந்தோன அவுங்ககிட்ட இதக் காமிச்சுட்டு அவுங்களோட முடிவையும் கேட்டுக்கலாம்” அடக்கமான குரலில் எடுத்துரைத்தவளின் முகம் பாராமல் அவள் சொல்வனவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தவன், தலை அசைத்துவிட்டு

“ஹ்ம்ம் பாத்துட்டு கூப்பிடுறேன்....” என்றான்.

அதற்கு தலை அசைத்தவள் நகரப்போக “அந்த அருப்புக்கோட்டை கிளையண்ட்ஸ்க்கு பத்திரிகை அடிக்க சொல்லிக் குடுத்துருந்தோமே..” என்று ஆரம்பித்தவன் தான் சொல்ல வந்ததை சொல்லி முடிக்கும் முன்னரே

“ காலைல போன் பண்ணி பேசுனேன் சார்.. நாளைக்கு டெலிவர் பண்ணிடுவோம்னு சொல்லிட்டாங்க” என்றாள்.

அதற்கு தலை அசைத்தவன் “இன்னும் ரெண்டு மாசம் தான் இருக்கு கல்யாணத்துக்கு... லைட் செட்டிங்க்கும் சமையலுக்கும் மட்டும் தான் சொல்லிருக்கு... நாளைக்கு இன்விடேசன்ஸ் வந்துடுச்சுனா மூனு வேலை முடிஞ்சுருக்கும்...” என்று அவன் அடுக்கிக் கொண்டிருக்க

“மணப்பெண் அலங்காரத்துக்கு என் ப்ரென்ட்ட ஆல்ரெடி கிளையண்ட்ஸ் குடுத்த டேட்ல புக் பண்ணிட்டேன்” என்று மீனாட்சி இடை புகுந்து சொல்ல,

மெலிதாகச் சிரித்தான்.

அவள் தலையை குனிந்துக் கொண்டாள்.

“ஓகே அப்போ நாலு வேலை ஆல்மோஸ்ட் முடிஞ்சுருச்சு... டெகரேஷன நாம தான் பண்ணப் போறோம்... மத்தபடி வாடகை கார் வேன், மண்டபம்லாம் அவுங்களே பாத்துகிறேன்னு சொல்லிட்டாங்க.. சோ ஆல்மோஸ்ட் முக்கிய விஷயங்கள் எல்லாமே முடிஞ்சுருக்கும்னு நெனைக்குறேன்...” என்று தனக்கு தானாக சொல்லிக் கொண்டவன்

“ஓகே அப்போ மலர்கிட்ட சொல்லி, கிளையண்ட்ஸ் வீட்டுக்கு அப்டேட் பண்ண சொல்லிடுங்க” என்றுவிட

வேகமாக தலை ஆட்டியவள் வேகமாக அவ்வறையை விட்டு வெளியே வந்துவிட்டாள்.

செல்பவளை அரை வினாடி அளவிட்டவன் பின்னர் தனது மடிக்கணினி பக்கம் திரும்பிக் கொண்டான்.

மலரிடம் வந்தவள் சிவா சொன்ன விடயங்களை தெரிவித்துவிட்டு தனது இருக்கையில் அமர,

அவளருகே வந்தான் அழகர்.

அவளின் சக தொழிலாளி.

அவனுக்கு அவளிடம் பேச எதாவது காரணங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும், கிடைக்கவில்லை என்றாலும் தானே உருவாக்கிக்கொள்வான்.

“ஹாய் மீனு சாப்டியா?...”

“ஹே மீனு நைட்டு நல்லா தூங்குனியா?” என்று அவன் வழியும் வழிசலில் வறண்டு கிடக்கும் வைகையை நிரப்பிவிடலாம்.

ஆனால் இதைக் காணும் சிவாவின் உஷ்ணம் அமேசானையே எரிக்கும் அளவிற்கு ஆக்ரோஷமாக இருக்குமென்று அவன் அறியமாட்டான்.

என்றும் போல் இன்றும் தானாக கண்ணாடி தடுப்பு வழி கண்கள் மீனாட்சி மீது விழ, அமர்ந்திருந்தவளின் அருகே நின்று பல்லிளித்தபடி பேசிக் கொண்டிருந்த அழகரைப் பார்த்ததும் அடிவயிற்றில் சுரந்த ஒரு ஆசிட் கபகபவென தலைக்கு ஏறுவது போல் எரிச்சல் வர, இறுகும் கைமுஷ்டியையும், கிளறப்படும் கோபத்தையும் அடக்க முடியாமல் தவிக்க ஆரம்பித்தான்.

சிவாவின் உணர்வுகளுக்கு பொறாமை என்று பெயர் சூட்டுவதை விட, பாதுகாப்பின்மை என்று பெயர் சூட்டினால் சரியாக இருக்குமென்று நினைக்கிறேன்.

மீனாட்சி!

சிவாவின் காதல் கனவுகளின் நாயகி.

கடந்த ஐந்து வருடங்களாக அவனது மனதுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பவள்.

அவளைக் கண்ட நாளும், அவள் இறுதிவரை அவனின் கனவுகளுக்கு மட்டுமே நாயகியாக இருக்கப்போகிறாள், அவனுக்கு நாயகியாக அல்ல என்று முடிவு செய்த நாளும் இன்றும் நினைவில் நிற்கின்றன.

ஆனால் மனிதனின் முடிவுகளை காலம் சட்டைசெய்வதில்லை, அது அதன் போக்கிலேயே நகரும் என்று அவனுக்கு அன்று தெரிந்திருக்கவில்லை.

அவன் தெரிந்துகொண்ட நொடி சிரிப்பதா? அழுவதா? என்று தெரியாத நிலையில் தானிருந்தான்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு...

மதுரையின் ராஜ்மஹால் சில்க்ஸ் துணிக்கடை.

சிவாவிற்கு முழுதாக மீசை முளைத்தே சில மாதங்களே ஆகியிருந்த காலமது.

நண்பனின் காதலிக்கு பட்டு எடுப்பதற்காக ராஜ்மஹாலினுள் நுழைந்திருந்தார்கள்.

அவனின் நண்பன் வண்ணங்களின் வரிசைகளில் குழம்பிக் கொண்டிருக்க, தாங்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு சற்றே எதிரே இருக்கும் ஆளுயரக் கண்ணாடியில் விழுந்தது சிவாவின் பார்வை.

அது அப்படியே இவனுக்கு எதிர்திசையில் இருக்கும் இடத்தைப் பிரதிபலிக்க,

ஐந்தாறு பெண்கள் சூழ நடுவில் அமர்ந்திருந்தாள் மீனாட்சி.

அவளைச் சுற்றியிருந்த எல்லோரும் கலகலவென இருந்தாலும் அவளிடம் மட்டும் ஒருவிதமான அமைதி தென்பட்டது.

நிர்மூலமான அமைதி அது.

சிவா பல பெண்களின் அழகை ரசித்திருந்தாலும் முதல் முறையாக ஒரு பெண்ணின் அமைதியை ரசித்தான்.

அவளைச் சுற்றியிருக்கும் பெண்களின் கேலிப்பேச்சுக்களைக் கேட்டபோது அவள் தான் திருமணப் பெண் என்று புரிந்தது.

ஆனாலும் அவளிடம் எந்த ஒரு கலகலப்பையும் காணவில்லை. அதே நேரம் அவளிடம் சோகமும் தென்படவில்லை.

உண்மையில் இது தான் அவனுக்கு பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியது.

பொதுவாகவே லொடலொடவென பேசிக் கொண்டிருப்பவர்களை விட, அமைதியாக இருப்பவர்களின் மீது தான் அவனின் கவனம் அதிகமாகக் குவியும்.

மற்றவர்களை விட அப்படிப்பட்டவர்களிடம் நெருக்கமாக முயற்சிப்பான். அவர்களைப் பற்றி அறிந்துகொள்ள முயற்சிப்பான்.

ஏனோ மிகவும் அமைதியாக இருப்பவர்கள் தங்களது சுற்றத்தை மிகவும் குறுக்கியே வைத்திருப்பார்கள் என்றும், அக்குறுகிய வட்டத்திற்குள் இருப்பவர்களை அவர்கள் மிகவும் ‘ஸ்பெசலான’ இடத்தில் மனதில் வைத்திருப்பார்கள் என்று சிவாவினுள் அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை இருந்தது. அப்படிப்பட்டவர்களின் ‘ஸ்பெசலான’ இடத்தினுள் தானும் இருக்கவேண்டுமென்று சிறுபிள்ளை போல் சிந்திப்பான்.

அதனாலோ என்னவோ அவனது கவனம் சற்று அதிகமாகவே மீனாட்சி மீது நிலைத்தது.

அவளது யவ்வனத்தின் விளைவுகளின் மீதெல்லாம் நிலைத்து மீண்டது.

அவளை இரசித்திருந்த நேரத்தில் அவள் ஆங்காங்கே சிந்தும் சிறு சிறு சிரிப்பை எல்லாம் மனக்கிடங்கினுள் சேகரித்துக் கொண்டான்.

அவளை நோக்கி அள்ளித்தெளிக்கப்பட்ட அனேகக் கேள்விகளுக்கு அவளின் தலையசைப்பே பதிலாக இருந்தது.

சுருங்கி விரியும் கண்களும், அவள் சொல்ல நினைக்கும் பதிலுக்கு ஏற்ப வெளிப்படும் உதட்டின் பிதுக்கல்களோ, சுருக்கல்களோ தான் மற்றவர்களின் கேள்விகளுக்கான பதிலை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது.

அவளையே வெகு நேரமாக கவனித்துக் கொண்டிருந்தவனின் இதழின் ஓரம் சிறிய சிரிப்பால் நிறைந்தபடியே இருந்தது.

திடீரென அவளின் முகப்பொலிவு அதிகமானது.

அவளது கண்கள் ஆசையோடு அசைந்தன.

யாரைப் பார்க்கிறாள் என்று கேள்வியோடு அவள் பார்வை போனப்பக்கம் திரும்பினான்.

மீனாட்சிக்கு எதிரே வந்து நின்றவன் சற்று பின்னே நகர்ந்து அவளை மேலிருந்து கீழாகப் பார்த்து ‘சூப்பர்’ என்பது போல் விரல் குறியீடுக் காட்டினான்.

அவளின் முகம் அங்கிருந்த மின்விளக்குகளோடு போட்டிப் போட்டு ஜொலிக்க ஆரம்பித்தது.

சிவாவிற்கு புரிந்துவிட்டது.

வந்திருப்பவன் தான் அவளின் வருங்கால கணவன்.

ஏனோ இத்தனை நேரம் இதழோரம் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த சிறு புன்னகை இப்பொழுது தொலைந்து போக, பார்வையை தன் நண்பனின் பக்கம் திருப்பிக் கொண்டான்.

அவள் உடுத்தியிருந்த முழு பேபி பிங்க் நிற சுடிதாரும், இழுத்து வாரிப்பின்னப்பட்டிருந்த தலை முடியும், ஏன் நெற்றிப் பொட்டின் கீழ் குட்டியாக இருந்த அன்று முளைத்தப் பருவைக் கூட இன்றும் ஞாபகம் இருக்கிறது.

காலம் செல்ல செல்ல காதல் என்ற வார்த்தைக்கு அவன் மூளையில் இருக்கும் இடம் முழுவதையும் தானே நிரப்பிக்கொண்டு பரந்து படர்ந்துவிட்டிருந்தாள் மீனாட்சி.

ஆனால் இவனின் நிலையில் அவளிருக்கிறாளா என்று கேட்டால், 'இல்லை' என்று தான் பதில் வருமென்று அவனுக்குமே தெரியும்.

அதனால் உண்டான பாதுகாப்பின்மை தான் மீனாட்சியிடம் அழகர் வந்து பேசும் பொழுதெல்லாம் அவனுக்கு எழுந்திருப்பது.

அடுத்த எண்ணங்கள் எழும் முன் கடகடவென எழுந்து மலரிடம் வந்தவன் “மலர் நா சொன்ன விசயத்த கிளையண்ட்ஸ்கிட்ட இன்பார்ம் பண்ணிட்டிங்களா?” என்று கேட்க,

திடீரெனக் கேட்ட அவனது குரலில் உடல் துள்ளி திரும்பியவள் “ஆ..ஆச்சு.. ஆச்சு சார்” என்றாள்.

“ஹ்ம்ம்” என்று தலை அசைத்தவன், அழகரை நோக்கித் திரும்பினான்.

அவனது முகத்தில் அப்பொழுது தான் அவன் அழகரைப் பார்ப்பது போலொரு பாவனை உண்டானது.

“அழகர் நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று கேட்டான் அவனையும் மற்ற இரு பெண்களையும் மாற்றி மாற்றி பார்த்தபடி.

“அ....அது.. ஒரு புது ப்ராஜக்ட் வந்துருக்குன்னு மீனாட்சி சொல்லிட்டு இருந்தாங்க.. “

“ஓ... யாருகிட்ட...”

“ம்ம்ம்....”

“புது ப்ராஜக்ட் வந்துருக்குன்னு மீனாட்சி யாருகிட்ட சொல்லிட்டு இருந்தாங்க?

உங்ககிட்டையா?”

“இ..இல்ல... மலர்கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க...”

“ஹ்ம்ம்ம்ம்ம்” என்று சிவா கூரிய பார்வையுடன் ஆழ்ந்து உரைத்ததில், தலையைக் குனிந்துகொண்டான் அழகர்.

“போங்க போய் வேலையைப் பாருங்க” என்று அழகரின் தோளை சற்று பலமாகவே தட்டிவிட்டு நகர்ந்துவிட்டான் சிவா.

-தொடரும்-
 
இலக்கணப்போலி

3. திருப்பம்

"கொண்டச் சேவல் கூவும் நேரம்

குக்குக் குக்கூ...குக்குக் குக்கூ

கெட்டி மேளம் தாளம் கேக்கும்

டும்டும்டும்டும் டும்டும்டும்டும்

கழுத்துல ஏறனும் தாலி,

அடுத்தது அணைக்கிற ஜோலி

அதை நெனைக்கையில் நாக்குல தேனூறுதேஏஏ..."

இங்கு ஒரு கல்யாணம் நடக்கிறது என்று ஊரைக் கிழித்துக்கொண்டு கூவிக் கொண்டிருந்தது அக்கல்யாண வீட்டு ரேடியோ.

சிரிப்பும் கும்மாளமும் பரபரப்புமாக களைக்கட்டிக் கொண்டிருந்தது கல்யாண அரங்கம்.

கல்யாண விருந்துக்கான ஏற்பாடு நடக்குமிடத்தில் நின்று, அங்கே வேலை செய்து கொண்டிருந்துக்கும் ஆட்களை கவனித்துக் கொண்டிருந்தாள் மீனாட்சி.

அவளுடன் வேலை செய்யும் மற்றவர்களும் அவரவர்களுக்கான பகுதிகளில் வேலைகள் ஒழுங்காக நடக்கின்றதா என்ற கண்காணிப்பில் இருக்க, இவர்கள் எல்லோரையும் ஓடி ஓடி கவனித்துக் கொண்டிருந்தான் சிவா.

இக்கல்யாணத்தின் வேலைகளுக்காக பல நாட்களாக தூங்கவில்லை அவன்.

இது அவனின் பக்கத்து ஊர்க்காரர் வீட்டு திருமணம். இத்திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தால் பக்கத்து ஊர்க்காரர்களிடமிருந்தும் புதிய வேலை ஒப்பந்தங்கள் வர வாய்ப்பு அதிகமாகவே இருக்கின்றன.

அதனால் தன் வீட்டுக் கல்யாணத்திற்கு எப்படி செய்வானோ அதற்கு ஒரு படி மேலேயே எல்லாவற்றையும் சிறப்பாக செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தான்.

இன்னும் சற்று நேரத்திலிருந்து விருந்தினர்கள் வர ஆரம்பித்துவிடுவார்கள்.

வரவேற்பில் நிற்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெண்கள் வந்து, தயாராகிவிட்டார்களா? என்று உறுதிபடுத்திக்கொள்வதற்காக மலரிடம் சென்று கொண்டிருந்தான்.

அவள் அலைபேசியும் கையுமாக வாயிலில் நின்று கொண்டிருக்க, "மலர், அந்தப் பொண்ணுங்க வந்துட்டாங்க தான? எங்கிருக்காங்க?" என்று சுற்றியும் முற்றியும் பார்த்தபடி பரபரப்பான குரலோடு அவன் கேட்க, திருதிருவென முழித்தாள் மலர்.

அவளின் முழியைப் பார்த்தவனின் கண்கள் சுற்றுப்புறம் விடுத்து, அவள் மீது ஆழப் பதிந்தன.

"என்னாச்சு?" நிறுத்தி நிதானமாக அவன் கேட்டகுரலில், ஏற்கனவே பயத்திலிருந்தவளுக்கு இப்பொழுது உடல் சில்லிட்டது.

'இப்போ சொன்னா வேற இந்தாளு கத்துவானே... என்ன பண்ணுறது...' என்று மனதுக்குள்ளே புலம்பியடி அவள் நிற்க

"மலர்??!!" என்றான் அதிகாரமான கேள்விக் குரலில்.

"அ..அது... அந்த பொண்ணுங்க.. அவுங்க வர்ற வழியில வண்டி ப்ரேக்டவுன் ஆகிடுச்சாம்..." என்று அவள் சொல்ல,

புருவம் சுருக்கியவன் "அதனால?" என்று கேட்டான்.

"அதனால அவுங்க இப்போ கிளம்பினாலும் வர ரொம்ப லேட் ஆகுமாம்.."

ஒரு வினாடி கண்களை மூடி கடுப்பை அடக்கியவன் "இப்போ அவுங்களால வர முடியுமா? முடியாதா?" என்று கேட்டான்.

தலையைக் குனிந்தபடி இடவலமாக ஆட்டினாள்.

வாயை ஊதி ஆழ்ந்த மூச்சை விட்டபடி அவன் நெற்றியை நீவ, நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் மலர்.

அப்பொழுது அவனுக்குப் பின்னே வந்து கொண்டிருந்த மீனாட்சியைப் பார்த்தவளுக்கு மண்டையில் பல்ப் எரிய, "வேணும்னா நானும் மீனாட்சியும் கெஸ்ட்ஸ்ச வரவேற்க நிக்கவா?" விழி மின்ன அவள் கேட்டபொழுது திரும்பி மீனாட்சியைப் பார்த்தான் சிவா.

அவனது முகத்தில் சிந்தனைக் கோடுகள் அதிகமாகின.

"இல்ல... நீங்க ரெண்டுபேரும் முன்னாடி நின்னுட்டு இருந்தா உள்ள இருக்க வேலையெல்லாம் யார் பாப்பா?" என்று சிவா சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே மீனாட்சி இவர்களுக்கு அருகில் வந்துவிட்டாள்.

அங்கிருந்த அசாதாரண சூழ்நிலையை சிவா மற்றும் மலரின் முகத்தை வைத்து உணர்ந்துக்கொண்ட மீனாட்சியின் நடையின் வேகம் குறைந்தது. இருவர் முகத்தையும் மாறி மாறிப்

பார்த்தபடி "என்னாச்சு?" என்று கேட்டாள்.

மீனாட்சியின் அருகே சென்று அவளது கையைப் பற்றிய மலர் "மீனாட்சி... என்ட்ரன்ஸ்ல வரவேற்புக்கு நிக்க சில பொண்ணுங்கள ஏற்பாடு பண்ணிருந்தோம்ல.. அவுங்களால நாம எதிர்பார்த்த நேரத்துக்கு வர முடியாது போல... அதனால நாமளே வரவேற்புக்கு நிப்போமா?" என்று கேட்டவளின் கண்களில் இறைஞ்சுதல் இருந்தது.

இன்று அந்தப் பெண்கள் வராததால் ஏதாவது கோளாறு ஆனால் நிச்சயம் சிவா அலுவலகம் சென்றவுடன் தனது ருத்ர அவதாரத்தை காண்பிப்பான் என்பது அவளுக்கு மிக நன்றாகவே தெரிந்திருந்தது.

அதனால் தான் வேறு வழி தெரியாமல் மீனாட்சியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

"நா.. நாமளா..? நா நா எப்படி வரவேற்க நிக்குறது?" மீனாட்சியின் குரல் வெகுவாக உள்ளே போய்விட்டது.

அவளது கண்கள் தடுமாற்றத்துடன் அங்குமிங்கும் அலைபாய ஆரம்பித்தன.

"ஏன் மீனாட்சி... அந்தப் பொண்ணுங்களுக்குப் பதிலா நாம நிக்கப்போறோம்... ஒருவேள கிராண்டா டிரஸ் பண்ணலைன்னு கவலைப்படுறியா? கல்யாணப் பொண்ணுக்கு மேக்கப் போட வந்துருக்கது உன் ப்ரென்ட் தான? அந்த புள்ளட்ட சொல்லி கொஞ்சம் மேக்கப்பும், நகைகளையும் வாங்கிப் போட்டுகிட்டம்னா பாக்க லுக்கா தெரிவோம்" என்று மலர் ஐடியா சொல்ல, மீனாட்சி கையைப் பிசைந்தாள்.

இவர்களின் உரையாடலைக் கவனித்தபடி அமைதியாக மீனாட்சியின் முகத்தை ஆராய்ந்தபடி நின்றிருந்தான் சிவா.

"இ..இல்ல.. மலர்... உள்ளிருக்க வேலையெல்லாம் யார் பாக்குறது?..."

"நம்ம ஏற்பாடு பண்ணிருக்க ஆளுங்க எல்லாம் ஒழுங்கா வேலைப்பாக்குறாங்களான்னுப் பாக்குறது தான... அத நா பாத்துக்குறேன்.. மலர் சொன்னபடியே ரெண்டுபேரும் ரெடியாகி வந்து விருந்தாளிங்கள வரவேற்க நில்லுங்க... சீக்கிரம்!" என்று கட்டளையாக சொல்லிவிட்டு, சொன்ன வேகத்தோடு உள்ளேயும் சென்றுவிட்டான் சிவா.

'என்ன இவரு... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான " நீங்க ரெண்டுபேரும் முன்னாடி நின்னுட்டு இருந்தா உள்ள இருக்க வேலையெல்லாம் யார் பாப்பா"ன்னு கத்துனாரு நம்மகிட்ட' என யோசித்த மலர்

"என்னவோ நம்ம மேல எந்தப் பழியும் வரலேன்னா சரி" என்று நினைத்தபடி 'மாட்டேன்.. மாட்டேன்' என்று சொன்ன மீனாட்சியை வற்புறுத்தி உள்ளே இழுத்துச் சென்றாள்.

மீனாட்சியின் தோழி, மலர் மற்றும் மீனாட்சிக்கு மிதமான அலங்காரம் செய்துவிட்டு சென்றிருக்க,

சற்று நேரத்தில் மீனாட்சியும், மலரும் இருந்த அறைக்குள் கல்யாண பரபரப்புடன் நுழைந்தான் சிவா.

"என்னாச்சு இன்னும் ரெடியாகலையா? சீக்கிரம்... எல்லாரும் வர்ற டைம் ஆகிடுச்சு..." என்று துள்ளிக்கொண்டே வந்தவன், நின்றான்.

அவன் வரும் முன் அங்கு ஒரு விவாதம் நடந்துக் கொண்டிருந்ததையும், அவன் வந்ததும் அது நிறுத்தப்பட்டதையும் உணர்ந்தவன் இருவரது முகத்தையும் பார்த்து " இப்போ என்ன ஆச்சு?" என்றான் சிறிது கடுப்புடன்.

"இந்த மீனாட்சி பூ வச்சுக்க சொன்னா வச்சுக்கவே மாட்டேங்குறா" என்று புகார் செய்வது போல் மலர் சிணுங்க, ஏற்கனவே சங்கடத்துடன் நெளிந்துக் கொண்டிருந்த மீனாட்சி இப்பொழுது மேலும் சங்கடமடைந்தாள்.

ஏற்கனவே கடுப்பில் இருந்தவன் "பூ தான வச்சுக்கவும் ..." என்று மலர் முடித்த வேகத்தோடு ஆரம்பித்தவன் மீனாட்சியின் முகத்தைப் பார்த்ததும் தனது வாக்கியத்தை அந்தரத்தில் நிறுத்தினான்.

அங்கே ஓர் ஆழ்ந்த அமைதி அரங்கேறியது.

இருவரின் அமைதியும் இருவருக்கும் எதையோ உணர்த்தியது.

மீனாட்சியின் முகத்திலிருந்து தனது பார்வையை திருப்பிக் கொண்டவன் "சரி சரி... டைம் ஆச்சு... இன்னைக்கு எதாச்சும் சொதப்புச்சுனா நடக்குறதே வேற...! சீக்கிரம் கிளம்பி கீழ வாங்க" என்று

மலரைப் பார்த்து சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

மீனாட்சியின் கூர்பார்வை தன் முதுகில் குத்திக் கொண்டிருந்ததை உணர்ந்தே வேக நடையுடன் வெளியில் வந்திருந்தான்.
 

Mathykarthy

Active member
Nice..
மீனாட்சி கல்யாணம் நடந்து கணவர் உயிரோடு இல்லையோ.. பார்த்த உடனே பிடிச்சு போன பொண்ணோடா இந்த நிலை சிவாவுக்கு வருத்தமா தானே இருக்கும்..
 
Top