எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இவள் வசந் ‘தீ’ - முன்னோட்டம்

முன் கதை சுருக்கம் …

வசந்தி வீட்டில் திருமண நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த நிலையில்…



சந்தோச வசந்தி …2

நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்திருந்த அந்த வீட்டில் மகிழ்ச்சி அனைவரின் முகத்தில் தாண்டவமாடியது.

நிஷாந்தி , அக்கா வசந்தியை வம்பிழுக்க அவள் இவளை அடிக்க ஓடிக் கொண்டு இருந்தாள். அப்பா ராகவன் ஓரமாய் உட்கார்ந்து கல்யாண பத்திரிக்கையில் பெயர் எழுதும் பட்டியலை சரிபார்த்துக் கொண்டு இருந்தார்.

அம்மா பத்மா வழக்கம் போல பதட்டம் அடைந்து வீட்டில் உள்ள தட்டுகளை எல்லாம் பறக்கும் தட்டுகளாக மாற்றிக் கொண்டு இருந்தாள்.



மணமகன் சுந்தர் மிக அழகாக இருந்தான், நல்ல வேலையில் இருந்தான். தெத்துப் பல்லில் அவன் காட்டும் சிரிப்பு வசந்தியை தூங்க விடாமல் மயக்கியிருந்தது. இவர்கள் இருவரால் அவர்கள் பயன்படுத்திய அலைபேசி நிறுவனம் லாபம் அடைந்தது. போனில் பேசினாலும் அவன் வரம்பு தாண்டி பேசியதில்லை. மிக நாகரீகமாக ஆனால் உடலில் ஓடும் நரம்புகளை இனிமையாய் தூண்டும் அளவிற்கு அளவாய் பேசுவான். வசந்தி வம்பிழுத்தாலும் மணிரத்ன பட வசனம் போல கத்தரித்து பேசுவான்.

வசந்தி கண்களில் கனவுகளோடும் , மனதில் ஏக்கத்தோடும் , நிறைய எதிர்கால எதிர்பார்ப்புடனும் கால் தரையில் படாமல் வீட்டில் அம்மா திட்டினாலும் காது கேட்காதவள் போல தனி உலகத்தில் நடமாடிக் கொண்டு இருந்தாள்.

அன்று ஒரு நாள் தங்கை நிஷாந்தியுடன் வசந்தி கடை வீதிக்கு சென்ற சமயம் பத்மா மெதுவாக ராகவன் பக்கத்தில் வந்து நின்றாள்.



“ என்னங்க மாப்பிள்ளை வீட்டுல சொன்ன விசயத்தைபத்தி யோசிச்சுப் பார்த்தீங்களா ?’



“ நானும் யோசிச்சுகிட்டுதான் இருக்கேன். எவ்வளவுதான் புரட்டி தள்ளிப் பார்த்தாலும் பத்து பவுன் இடிக்குது”.

“ மாப்பிள்ளை நம்ம பொண்ணை விட அதிக படிப்பு , சம்பளம் இருந்தாலும் அவக அப்பா கேட்கறது நியாயமாபடலை. அவக அம்மா அதுக்கு மேல நகைக் கடை , பாத்திரக் கடையா அடுக்கி வைக்குது. ஒரே பையன்தான் , அதுக்காக இப்படியா ? ஒருவழியா எல்லாம் பேசி சமாளிச்சு கூனி குறுகி போய் நின்னாலும் இவளும் சம்பாதிக்கறவதானே “.



“ பத்மா சில பேரு ஆம்பளை பிள்ளைக்கு ஆசைப்படறது கல்யாணத்தை வியாபாரமா மாத்த தான். பொம்பளை பிள்ளை பிறந்தா செலவு, ஆம்பளை பிள்ளை பிறந்தா வரவு. இதுதான் இன்றைய நிலைமை”.



“ ஏங்க அப்படி இப்படி பேசி எல்லாம் கைகூடி வந்தாலும் இந்த பத்து பவுன் இடிக்குது . ஏங்க மாப்பிள்ளைகிட்ட பேசி பார்த்தீங்களா ?”



“ ம்ம்…! பேசிப் பார்த்தேன் . மகள்கிட்ட எதுவும் கேட்க வேண்டாம்னு சொல்லி பத்து பவுன் பிர்ச்சனையை சொன்னேன். அதுக்கு அவரு “ பெரியவங்களுக்கு இடையில சின்னப் பையன் என்னாத்த சொல்ல முடியும்னு நழுவிட்டாரு>



“’சரிங்க, நாம பேசுனது மகளுக்கு தெரிய வேணாம். நமக்கு அடுத்து ஒருத்தி இருக்கா. இதை ஞாபகம் வச்சுக்கங்க. கொஞ்சம் டையம் கேளுங்க”.



“ சரி , சரி பார்ப்போம் “



இருவரும் பேசி முடிக்கவும் , மகள்கள் இருவரும் உள்ளே நுழையவும் சரியாகவும் இருந்தது.



வசந்தி கோபத்துடன் தந்தை ராகவனை நோக்கி வர ஆரம்பித்தாள்.



ராகவன் தடுமாறினார். ’ஒருவேளை இவளுக்கு ஏதாவது பத்து பவுன் விசயம் தெரிந்திருக்குமா ?. ’



வசந்தியின் வேகமான கோபத்திற்கு காரணம்…?

காத்திருங்கள்…..வசந்தி வருவாள்.
 
Top