அத்தியாயம் 7
நள்ளிரவு 12 மணி. ஆரோன், ஆராத்யாவின் வீட்டு கதவு தட்டப்பட, அப்போது தான் ஃப்ரிட்ஜ்யில் இருந்து கேக்கை வெளியே எடுத்து வைத்த ஆராத்யா புருவம் சுருக்கினாள்.
"இந்நேரத்தில் யாரு வந்திருக்கா?" என்று கதவை திறக்க செல்ல அவளை பின்புறத்தில் இருந்து இழுத்தான் ஆரோன்.
"விடுங்க.. யாரோ கதவை தட்டுறாங்க.."
"டைம் பார்த்தியா நீ? நடு ராத்திரியில் யாரோ கதவை தட்டினா உடனே திறக்க போயிடுறதா? இரு நான் பார்க்கிறேன்" என்று கதவை திறக்க வெளியில் ஒரு டெலிவரி பாய் நின்று கொண்டிருந்தான்.
"நான் எதுவும் ஆர்டர் பண்ணலயே சார்.. அதுவும் இந்நேரத்துக்கு யார் அனுப்பினா?"
"ஹரிணின்னு ஒரு பொண்ணு தான் சார் ஆர்டர் போட்டிருக்காங்க.. ஸ்பெஷல் பெர்த்டே கேக் வித் மட்டன் பிரியாணி"
ஆரோனுக்கு எரிச்சலாக இருந்தது.
"இதை நீங்க ரிட்டர்ன் பண்ணுவீங்களோ.. இல்ல நீங்களே சாப்பிடுவீங்களோ.. ரெண்டு நிமிஷத்தில் இடத்தை காலி பண்ணுங்க.. எனக்கு அப்படி யாரையும் தெரியாது" என்றவன் கதவை அடைத்து விட்டு உள்ளே சென்றான்.
ஆராத்யா அவனை முறைத்து கொண்டு நின்றாள்.
"யார் ஹரிணி?"
"அக்கவுண்ட் மெயின்டெனன்ஸ் டிபார்ட்மண்ட்ல ஒரு லூசு"
"அவ எதுக்கு உங்களுக்கு கேக் அனுப்புறா?"
"ஹான்… என்னை லவ் பண்ணுறாளாம்.. நம்ம கல்யாணம் முடிந்த அன்னைக்கு நைட் புரோபோஸ் பண்ணினா.. இன்னும் நான் திரும்ப ரிப்ளே பண்ண கூட இல்ல.. இப்படி சில டைம் டார்ச்சர்" அவனின் குரலில் அதீத சலிப்பு தெரிந்தது.
"உங்களுக்கு கல்யாணமாகி ஒரு வருஷம் ஆகுதுன்னு சொல்ல வேண்டியது தானே"
"எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொன்னால் என் மனைவி யாருன்னு சொல்ல வேண்டி இருக்கும்.. உன் பேரை சொன்னால் இவ்ளோ சின்ன வயசுல நான் ஏன் உன்னை கல்யாணம் பண்ணி்கிட்டேன்னு ஒரு சர்ச்சை வரும்.. இங்க பெண் சின்ன வயசுல கல்யாணம் பண்ணினா கூட பேச்சு இல்ல.. ஆனா ஆண் சின்ன வயசுல கல்யாணம் பண்ணுனா அந்த பொண்ணு தான் பதில் சொல்ல வேண்டி இருக்கு.. உன் பேரை அப்படி யாரும் கேள்வி கேக்குற மாதிரி இருக்கிறது எனக்கு பிடிக்கல.. இந்த ஹரிணி நேர்ல வந்தா அப்போ பார்த்துக்கலாம்.." என்றவன் அவளை தள்ளி கொண்டு கேக் முன்னாடி நின்றான்.
இன்னும் ஆராத்யா சமாதானம் ஆகாததை கண்டு "ஆரு இன்னைக்கு நமக்கான நாள்.. என் பிறந்தநாளை உன்கூட சந்தோசமாக கொண்டாட நினைக்குறேன்.. அதை சோகமாக்கிடாத" என்று கெஞ்சினான்.
அவனின் கெஞ்சலில் மலை இறங்கியவள் "சரி சரி பிறந்தநாள்னு சும்மா விடுறேன்.. இனி அவ என்ன பண்ணினாலும் என்கிட்ட மறைக்காம சொல்லணும்" என்ற எச்சரிக்கையுடன் விட்டாள்.
அவளின் கைக்கோர்த்து அவனின் பிறந்தநாள் கேக்கை வெட்டினான்.
"என் கிஃப்ட் எங்க?"
அவள் ஒரு பார்சலை கொடுக்கவும் "இது என்ன இவளோ சின்னதா இருக்கு?" என்று பிரித்து பார்த்தான். அவன் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது.
"உனக்கு உலகத்தையேவா பத்திரம் போட்டு தர முடியும்? என் கிஃப்ட் எப்படி?" என்று கண் சிமிட்ட அவளை இறுக அணைத்து கொண்டான்.
"தேங்க்ஸ் ஆரு.. பெஸ்ட் கிஃப்ட் குடுத்திருக்க.. எத்தனை நாள் ஆச்சு?"
"நாற்பத்தைந்து நாள் ஆச்சு.. நேத்து மார்னிங் தான் செக் பண்ணினேன்.. கன்பார்ம் ஆனதும் இதையே உங்களுக்கு கிஃப்ட் ஆக குடுக்கணும் தோனிடுச்சு.." அவள் குரலில் சிறிது வெட்கம் கலந்திருந்ததோ..!
"இத முதல்ல அம்மா, அப்பாட்ட சொல்லணும்" என்று அவன் கைபேசியை எடுக்கவும் "அப்போ என் அம்மா அப்பா?" இவள் மனம் சுணங்கியது.
"மாமா.. நீங்க தாத்தா ஆகிட்டீங்க" அவனின் உற்சாக குரலில் அவளுக்கு அவனை நம்பாமல் விட்டேனே என குற்ற உணர்ச்சியாய் இருந்தது.
இதுவரை அவன் அப்படி தான் எதை செய்தாலும் மாமா, அத்தை என்று ஜோஸப், மேரியிடம் ஒப்புவித்து விடுவான். அவர்களுக்கு அவன் மருமகன் என்பதை தாண்டி மகன் எனும் பதவியை என்றோ வாங்கியிருந்தான். இப்போதும் அதே சந்தோஷ தகவல் பரவல்.
"ரொம்ப சந்தோசம் தம்பி.. நாங்க அடுத்த வாரம் வந்திடுவோம்.. நாளைக்கு ஹாஸ்பிட்டல் போய் மருந்து எல்லாம் வாங்கிட்டு வந்துடுங்க" என்று மேரி சொல்ல அதை கவனமாக கேட்டுக் கொண்டான். பல மாதங்களுக்கு பிறகு மகள் நல்ல செய்தி சொன்னது அவர்களுக்கும் ஏக சந்தோசம்.
"ஹே ஆரு.. நாளைக்கு ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்திடலாம்.. நான் லீவ் சொல்லிடுறேன்.. நீயும் இன்பார்ம் பண்ணிடு"
"சரி ஆரோன்.."
"என்னம்மா ஸ்ருதி குறையுது?"
"சாரி நான் உன்னை தப்பா நினைச்சிட்டேன்.. அம்மா, அப்பான்னு சொன்னதும் அத்தை, மாமாக்கு தான் போன் பண்ணுறன்னு.. என் அம்மா, அப்பாவை கண்டுக்கலன்னு" அவளுக்கு நிஜமாக கஷ்டமாய் இருந்தது.
"இதில் என்ன இருக்கு ஆரு.. என்னை என்னோட பேரன்ட்ஸ் பார்த்தே ஒரு வருசம் ஆக போகுது.. நம்ம நல்லா இருக்கோமான்னு கூட தேடாத அவங்களை நான் முதலில் தேட மாட்டேன்.. பட் கண்டிப்பா இந்த நல்ல விசயத்தை சொல்லணும்" என்றவன் அடுத்து அவனின் பெற்றோருக்கு தான் அழைத்தான்.
நடு இரவில் தொந்தரவு பண்ணி கொண்டிருக்கிறோம் என்ற நினைப்பே இல்லாமல் அனைவரையும் எழுப்பி விட்டான்.
சகாயம் தான் அழைப்பை எடுத்தார். "ப்பா.." ஆரோனின் குரலில் நெகிழ்ந்தாலும் "என்ன இந்நேரத்துக்கு போன் பண்ணிருக்க?" என்று அதிகாரமாய் தான் கேட்டார்.
"அப்பா நீங்க தாத்தா ஆகிட்டிங்க" அவன் குரல் நெகிழ்ந்தது.
சகாயம் ஒரு நொடி சந்தோஷப்பட்டார். அடுத்த நொடியே "அந்த பொண்ணை விட்டுட்டு என் பையனா வரதா இருந்தா என்கிட்ட பேசு.. வேணும்னா உன் ஆசைக்காக உன் குழந்தையை நான் ஏத்துக்கறேன்" என்று சொல்ல ஆரோன் உடைந்து விட்டான்.
"ப்பா இன்னுமா கோபம் போகல? நான் காதலிச்சு ஒழுங்கா தானே கல்யாணம் பண்ணேன்.. ஒரு வருஷம் ஆக போகுது.. ஆரு வீட்ல எவ்ளோ சந்தோசப்பட்டாங்க தெரியுமா? ஆனா நீங்க சந்தோசத்தை காட்டிக்கலன்னாலும் பரவாயில்ல.. இன்னைக்கு என் பிறந்தநாள் அதுவுமா என்னை காயப்படுத்தி இருக்க வேண்டாம்" என்றவன் அலைபேசியை அணைத்து விட்டான்.
அவனின் முகத்தை பார்க்க வேதனையாக இருந்தது அவளுக்கு.
"என்ன சொன்னாங்க ஆரோன்?"
"உன்னை விட்டுட்டு போகனுமாம்.. அப்படி போனா என் உயிரே போயிடும்னு இவங்களுக்கு இன்னுமா புரியல" என்றவன் அவளின் அதிர்ந்த பார்வையை கண்டு தன் தலையில் அடித்து கொண்டான்.
"ஏதோ வாய் தவறி சொல்லிட்டேன் ஆரு.. நீ டென்ஷன் ஆகாத"
"இது உனக்கு வாய் தவறி சொல்லுறதா? இப்படியே பேசிட்டு இரு.. உனக்கு முன்னாடி நான் போயிடுவேன்.." என்றவள் அவன் "ஆரு…" என்று கதறியதையும் பொருட்படுத்தாமல் தங்கள் அறைக்குள் சென்று விட்டாள்.
ஆரோன் தான் இந்த நேரம் தன் பெற்றவர்களுக்கு அழைத்திருக்க வேண்டாமோ என்று வருந்தினான்.
அடுத்த நாள் காலை இருவரும் மருத்துவமனை சென்று பரிசோதித்து கர்ப்பத்தை உறுதி படுத்தி கொண்டனர்.
ஆரோன் மகிழ்ச்சியில் அவளை தன்னோடு இறுக அணைத்துக் கொண்டான்.
"வி ஆர் பிரக்னன்ட் ஆரு.."
"ஆமா ஆரோன்.." அவளுக்கும் மகிழ்ச்சிக்கு குறைவு இல்லை.
"இனி தான் நீ ரொம்ப கவனமா இருக்கணும் ஆரு.. முதல் மூணு மாசம் ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும்.. டாக்டர் கொடுத்த மாத்திரை மருந்து எல்லாம் ஒழுங்கா எடுக்கணும்.. போகும் போது பழங்கள் வாங்கிட்டு போயிடலாம்.. இனி டெய்லி பழங்கள் நிறைய சாப்பிடணும்.. அப்போ தான் பாப்பா ஹெல்தியா இருக்கும்.."
"சரி பெரிய மனுஷா.. நீ என் கூடவே தானே இருக்க போற.. கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்கோ.."
அவளின் பேச்சில் ஆரோனுக்கு வெட்கம் வந்து விட்டது.
"ரொம்ப பேசுறேனோ?"
"நீங்க இப்படி தான் பேசணும்.. இது உங்க உரிமை, கடமை, லவ் எல்லாமே.."
இருவரும் வீட்டுக்கு கிளம்பி வரும் வழியில் தேவையான அனைத்தையும் வாங்கி விட்டு அவளின் பெற்றோருக்கும் சொல்லி அவர்களின் அறிவுரைகளையும் பெற்று கொண்டனர்.
அடுத்த நாள் அலுவலகத்தில் ஜெனியிடம் தான் கர்ப்பமாக இருப்பதை பகிர்ந்து கொள்ளவும் அவள் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்காத குறை தான்.
"ஹே ஆரோன் ட்ரீட் வச்சிடு.." சத்தமாக சொல்ல "என்ன ட்ரீட்?" என்று அவர்கள் டீமில் உள்ளவர்கள் கூடி விட்டனர்.
ஜெனியை முறைத்த ஆரோன் "நேத்து எனக்கு பிறந்தநாள்.. அது தான் ட்ரீட் கேக்குறாங்க" என்றவன் அவர்களின் வாழ்த்துகளை பெற்று கொண்டு மதிய உணவு அவன் செலவு என்று கூறி விட்டான். இது அக்கவுண்ட் மெயின்டெனன்ஸ் வரை சென்று விட ஹரிணி நேரில் வந்தாள்.
முதல் முறை ஆரோனிடம் நேரடியாக பேச செல்கிறாள். முகத்தை கண்ணாடியில் பார்த்து ஒப்பனை செய்து கொண்டவள் சிந்துவை அழைத்து கொண்டு அவனிடம் சென்றாள்.
"ஹாய் ஆரோன்.. ஹேப்பி பர்த்டே" அவனின் முகம் பார்த்து சொல்ல அவனோ அவளை கண்டு கொள்ளாமல் "தேங்க்ஸ்" என்றான்.
"நான் நேத்து அனுப்பின பர்த்டே கேக் அண்ட் பிரியாணி எதனால் திருப்பி அனுப்பிட்டீங்க?"
"பீ இன் யூர் லிமிட் மிஸ். ஹரிணி.. நீங்க யாரு எனக்கு இதெல்லாம் அனுப்ப? என் வைஃப் கூட கொண்டாட வேண்டிய பிறந்தநாள் ரொம்ப மோசமா அமைய வச்சிட்டீங்க.. நல்லா கேட்டுகோங்க.. நான் கல்யாணம் ஆனவன்.. ஸ்டே அவே ஃப்ரம் மீ" என்றவன் ஜெனியை அழைத்து கொண்டு ஆராத்யா கேபின் வந்தான்.
"ஆரு டீம் மேட்ஸ் ட்ரீட் கேட்டாங்க.. வெளில போகலாம்.. பெர்மிஷன் வாங்கிக்கோ" என்றான்.
"சரி ஆரோன்.." ஆராத்யா டீம் லீடரை பார்க்க போகவும் ஜெனி அவனிடம் வந்தாள்.
"நீ என்னடா பொசுக்குன்னு கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்லிட்ட.. அத வச்சு ஒரு மீட்டிங்கே போடுவாங்க.."
"வேற வழி இல்ல ஜெனி.. அவளை அவாய்ட் பண்ணி தான் ஆகனும்.. இல்லன்னா ஆருக்கு டென்ஷன்.. இந்த மாதிரி நேரத்தில் அது அவளோட ஹெல்த்க்கு நல்லது இல்ல.. பேசினா பேசிட்டு போகட்டும்" என்றவன் அறியவில்லை ஹரிணி அவனின் கூற்றை நம்பாமல் எடுக்க போகும் அவதாரத்தை.
ஹரிணி தன் கேபினில் உச்சக்கட்ட கோபத்தில் இருந்தாள். சிந்து அவளை நெருங்கவே பயப்பட்டு கேண்டீன் சென்று விட்டாள்.
"அவன் எப்படி மனைவி இருக்குறான்னு சொல்லலாம்? என்னை அவாய்ட் பண்ண அவனுக்கு வேற பொய்யே கிடைக்கலையா? அவன் எனக்கு தான்.. எனக்கு மட்டும் தான்.." என்று சீறியவள் அடுத்து கொடுத்தது ஆரோனின் உயிர் வரை வலித்தது.