எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என்னை ஆளும் காதலே 23

Sathya theeba

New member
தன் எதிரே அமர்ந்திருந்த மகனை அமைதியாக பார்த்திருந்தார் சுபத்திரா. அவன் சொன்ன செய்தி கேட்டு அதிர்ச்சியான போதும் அதனை வெளிக்காட்டாமல் அவன் முகத்தைப் பார்த்தார்.


தன் மகன் குறித்து எப்போதுமே அவருக்கு ஒரு பெருமையுடன் கூடிய கர்வம் இருக்கும். படிக்கும் காலத்திலும் சரி தொழிலில் தன்னை ஈடுபடுத்த ஆரம்பித்த பின்னும் சரி மிகவும் நிதானமாக அவன் முடிவெடுப்பதை அவர் எப்போதும் கண்டு இருக்கின்றார். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்ய மாட்டான். அவன் எடுக்கும் முடிவில் எப்போதும் ஒரு தெளிவு இருக்கும். தீர்க்க முடியாத பல சிக்கல்களை அநாயசமாகத் தீர்த்து வைத்துவிடுவான். தொழிலில் அவனது ஈடுபாட்டையும் அவனது திறமையையும் கண்ணுற்ற சுபத்திரா தொழிலில் இருந்து தான் மெல்ல விலகிக் கொண்டார். அவனை முழுதாக அதில் ஈடுபட வைத்தார். தேவைப்பட்ட விடயங்களில் மட்டும் தன் ஆலோசனையை வழங்கினார்.

இப்பொழுது அவன் கூறிய விடயத்திலும் ஒரு நிதானத்தையும் தெளிவான முடிவையும் அவரால் உணர முடிந்தது அவன் கூறியதில் நிச்சயம் அவன் உறுதியாக இருப்பது புரிந்தது.

“அம்மா நான் சொன்னதற்கு இன்னும் நீங்கள் உங்கள் முடிவைச் சொல்லவில்லையே”

“தனா நீ முடிவெடுத்து விட்டால். அப்புறம் என் பதிலை மட்டும் ஏன் எதிர்பார்க்கிறாய்?”

“ நீங்கள் சொல்வது கரெக்ட் தான். பட், இப்போ உங்கள் பதிலையும் நான் தெரிந்து கொள்ளத்தானே வேண்டும்”

சுபத்திராவிற்கு அவன் எடுத்த முடிவில் சங்கடம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

“தனா... இத்தனை நாளாக நீ கல்யாணம் பண்ணாமல் இருந்தது எனக்கு பெரும் கவலையாகவே இருந்தது. நீ லவ் பண்ணியது எனக்குத் தெரியாது. உனக்கு நல்லது என்று எண்ணித்தான் நான் மிருணாளினியை செலக்ட் பண்ணினேன். அவள் கொஞ்சம் பேராசைக்காரிதான். ஆனாலும் அவள் நம் வீட்டு வாரிசு தானே என்ற எண்ணத்திலும் எப்படியாவது மாறிவிடுவாள் என்று நம்பியும் தான் நான் அதற்கு ஏற்பாடு செய்தேன். ஆனால் அத்தையும் அவளும் சேர்ந்து அவ்வளவு தில்லுமுல்லு செய்திருக்கிறார்கள். கடைசியில் அவளைப் அவளைப்பற்றி தெரிந்தது நன்மையாக முடிந்தது. இவ்வளவு நாளாய் மனம் நொந்து போய் தான் நான் எதுவும் பேசாமல் இருந்தேன். இப்போது தர்ஷினியை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்பட்டேன். எனக்கு அவளை சிறுவயது முதல் தெரியும். நான் பார்க்க வளர்ந்தவள் எவ்வளவுதான் காசு பணம் இருந்தாலும் அவள் ரொம்பவும் எளிமையானவள். அதனால் தான் இந்த முடிவை எடுத்தேன். நீ இப்போது ஒரு முடிவெடுத்து விட்டாய். நான் ஸ்டேட்டஸ் பார்ப்பவள் தான்... ஆனாலும் உனக்கு எது நல்லதோ அதை இனி முடிவெடு. உன் முடிவுக்கு நான் சம்மதிக்கிறேன்” என்றார் சுபத்திரா.

தாயின் அந்த ஒரு வார்த்தை அவனுக்குப் போதுமானதாக இருந்தது. மடமடவென புறப்படுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டான்.

நிஷாந்தினியைச் சந்திக்கவே இவ்வளவு ஆர்ப்பாட்டமாகப் புறப்படுகின்றான். அவன் மனம் இப்போது சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தது. தன்னவளை மீண்டும் தனக்கே உரிமையாக்கிக் கொள்ளும் உத்வேகம் அவனுள் மூண்டது.

அவனவளைக் காண அங்கே ஒருவன் புறப்படும்போது, இங்கே அவனை மீண்டும் ஒருமுறை சந்திக்காமல் இருக்க வேண்டும் என அவள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள்.

‘அவனை மறந்து விடு மனமே... உனக்காக இந்த உலகத்தில் சுபிக்ஷாவை விட்டால் யாருமில்லை’ என்று மீண்டும் மீண்டும் தனக்குள் சொல்லிக் கொண்டு அதற்கான முயற்சியையும் மேற்கொண்டாள். ஆனாலும் அதிலும் தோற்றுத்தான் போனாள்.

‘நான் எவ்வளவு முட்டாளாக இருக்கிறேன். இப்பொழுது அவனிடம் காதலை எதிர்பார்க்க முடியுமா? எல்லாமே முடிந்து போன ஒன்றாகிவிட்டது. அவன் சொல்லாமல் போனது ஏன் என்னை இவ்வளவு பாதிக்க வேண்டும்’ எனத் தன்னையே நொந்து கொண்டாள்.


அவளால் அடுத்து வந்த நாட்களிலும் இயல்பாய் இருக்க முடியவில்ல. பெரும் தவிப்பில் நாட்கள் நகர்ந்தன.

இந்த மனம் இருக்கின்றதே... மிகப் பொல்லாதது. அது யாரை நினைக்க கூடாது என்று நாம் எண்ணுகின்றோமோ அவரை மட்டுமே நினைத்துக் கொண்டு இருக்க வைத்துவிடும். வேறு எதையும் சிந்திக்க விடாமல் செய்துவிடும் அவனை நினைக்க கூடாது என்று எண்ணிய அவளை அவனை மட்டுமே நினைக்க வைத்துவிட்டது அந்த மனம். சில நாட்களாக அவன் நினைவுகள் அவளைப் படாதபாடு படுத்திவிட்டது. அவன் நினைவுகளால் பல இரவுகள் தூக்கம் இன்றிய இரவுகளாகவே கழிந்தன

அன்று ஞாயிற்றுக்கிழமை ஆன போதும் வழமைபோல காலை எழுந்ததும் செய்யும் வேலைகளைத் துரிதமாக செய்தாள். என்றும் இல்லாதவாறு இன்று மனம் படபடப்பதை உணர்ந்தவள் காரணம் அறியாது தடுமாறினாள்.

தலைக்கு குளித்துவிட்டு வந்து வாசலில் கோலம் போடத் தொடங்கினாள். மார்கழி மாதக் குளிரில் தேகம் சிலிர்க்க தன் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தவளை வாயில் படையைத் திறக்கும் ஓசை ஈர்த்தது. திரும்பிப் பார்த்தவள் ஒரு சில நொடி ஸ்தம்பித்து போனாள். அங்கே நிற்பது அவனாக இருக்குமோ என்ற எண்ணம் அவள் மூளையை ஸ்தம்பிக்கும் செய்தது. தனது தலையை சிறிது அனைத்துத் தன்னை இயல்புக்கு கொண்டு வந்தவள், அவன் ஏன் இங்கு வரப் போகிறார் அவனையே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பதால் பார்க்கும் இடமெல்லாம் அவன் போல தோன்றுகின்றது என்று தன்னையே கடிந்து கொணடாள். எல்லாமே ஆசை கொண்ட மனதின் கற்பனைதான் எனத் தனக்குத்தானே கூறிக் கொண்டவள் மீண்டும் தன் கோலம் போடும் வேலையை ஆரம்பித்தான்.


“வீட்டுக்கு வந்தவர்களை வரவேற்கும் பண்பு கூட மறந்துவிட்டதா?” என்ற குரலில் தூக்கிவாரிப் போட மீண்டும் வாசலை நோக்கினாள். அங்கே நிற்பது அவன் தான்... தன் கண்களை நம்பாமல் சிறிது மூடிவிட்டு மீண்டும் திறந்து பார்த்தாள். அது அவனே..

வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது. மீண்டும் அவனை சந்திக்கவே கூடாது என்று மனதில் உறுதி கொண்டு அதை செயற்படுத்த அவள் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும்போது, மீண்டும் அவன் கண் எதிரில் வந்து நிற்கின்றானே. அதுவும் அவள் வீட்டுக்கே வந்து நிற்கின்றான்.


தன் கண்ணெதிரே நின்றவனை அதிர்ச்சி, சந்தோசம், காதல் என ஒரு கலவையான உணர்வில் பார்த்து நின்றாள் பெண்ணவள். இப்படியே திரும்பி உள்ளே ஓடிவிடலாம் எனத் தோன்றியது.



அவள் அருகே வந்தவன் குனிந்து அவள் முகத்தைப் பார்த்து,

“என்ன பாப்பு... இந்த மாமாவை வச்ச கண் வாங்காமல் பார்க்கிறாய். அவ்வளவு அழகனாவா தெரிகிறேன்?” என்று கிசுகிசுப்பாகக் கேட்டாள்.

அவனது கேள்வியும் அந்தக் குரலும் அவளை இம்சை செய்யத் தடுமாறிப் போனவள்,

என்ன பேசுவதெனப் புரியாமல் “அது.. அது.. நீங்க இங்கு... எப்படி..” என்றாள்.

“ஏன் உன் வீட்டுக்கு நான் வரக்கூடாதா?”

“அப்படி நான் சொல்லவில்லை”

“வேறு...?”

அவனது கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தடுமாறினாள் பேதையவள்.

அவளது தடுமாற்றமும் அந்தக் கண்களின் அலைப்புறுதலையும் ரசித்து நின்றான்.

“உன் வீட்டிற்குள் கூப்பிடமாட்டாயோ?”

“உள்ளே வா.. வாருங்கள்...” என்றுவிட்டு கடகடவென உள்ளே சென்றாள்.

அவள் வீட்டில் இருந்த ஒரேயொரு இருக்கையில் அவனை அமர வைத்தவள் அடுத்து என்ன செய்வது, பேசுவது எனப் புரியாமல் கைகளைப் பிசைந்துக் ஓரத்தில் நின்றாள்.

அந்த வீட்டைச் சுற்றி நோட்டமிட்டான். ஒரு சிறிய வரவேற்பறை. அதனை ஒட்டி சிறிய படுக்கையறை. வரவேற்பறையில் ஒரு பகுதியை தடுப்பால் மறைத்து சமையலறையாக மாற்றியிருந்தாள்.

அவளைத் திரும்பிப் பார்த்து,

“ஒரு காபி கூடத் தரமாட்டியா பாப்பு...” என்றான்.

எதுவும் கூறாது சமையல் பகுதிக்குள் சென்றாள். சில நொடிகள் தன்னை ஆசுவாசப்படுத்தியவள், பலதையும் யோசித்தபடி தடுமாற்றத்துடன் அவனுக்கு காபி போட்டாள்.

அவள் உள்ளே செல்லவும் எழுந்தவன் படுக்கையறைக்குள் சென்றான். அங்கே ஒருக்களித்துப் படுத்திருந்த சுபிக்ஷாவைக் கண்டான். தன்னவளின் மகள் அவள். இனித் தனக்கும் அவள் மகளே என்ற உள்ளுணர்வு உந்த அவளின் அருகில் சென்று அமர்ந்தான்.

தூக்கத்தில் புரண்டு படுத்த குழந்தை தனது சிறிய கால்களை தூக்கி அவனது மடியில் போட்டது.

அந்த மெல்லிய ஸ்பரிசம் அவன் மனதிற்கு இதமளித்தது. அதன் கால்களை மெல்ல தடவி விட்டான். அப்போது காபியுடன் உள்ளே வந்தவள் அந்தக் காட்சியைக் கண்டாள். அதுவும் பேசாதே காப்பி அவனிடத்தில் கொடுத்தவள் சற்று தள்ளி நின்று கொண்டாள்.

அந்நேரம் துயில் கலைந்து எழுந்த குழந்தை தன் அருகில் அமர்ந்திருந்தவனைக் கண்டதும் மிரட்சியுடன் பின்வாங்கியது.

அவன் “ஹாய் குட்டி குட்மார்னிங்...” என்றான். “குட்... குட் மார்னிங்” என்று தட்டுத்தடுமாறி கூறியது மழலை.


அவனைத் தலை சரித்து பார்த்த சுபிக்ஷா,

“அங்கிள் நீங்கதானே தருண் வீட்டுல இருந்த அங்கிள்”

“யெஸ் சுபிக்குட்டி..”

“ஐ.. என் நேம் உங்களுக்குத் தெரியுமா அங்கிள்?”

“ஆமா எனக்குத் தெரியுமே”

“உங்க நேம் என்ன அங்கிள்?”

“தனஞ்சயன்... என் நேம் நல்லாயிருக்கா?”

“ஓஓ... சுப்பர்.. அங்கிள் எங்க வீட்டுக்கா வந்தீங்க?”

“ஆமா சுபிக்குட்டியப் பார்க்கத்தான் வந்தேன்”

“ஐ.. ஜாலி...”

மகளும் அவனும் இயல்பாகப் பேசுவதைக் கண்டவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
 
Top