எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என்னை ஆளும் காதலே 4

Status
Not open for further replies.

S.Theeba

Moderator
காதல் 4

திருமண வீட்டில் இருந்து புறப்பட்டவன் நேராக தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்தான். அவன் திருநெல்வேலி வந்ததே பிஸ்னஸ் விஷயமாகத்தான். அவர்களது கே.எஸ்.குயின் நிறுவனம் சார்பில் திருநெல்வேலியில் பொறியியல் கல்லூரி ஒன்றை நிறுவுவது தொடர்பான ஆரம்பகட்ட வேலைகளை மேற்கொள்ளவேண்டும். அதே நாட்களில் கல்லூரி நண்பனின் திருமணமும் திருநெல்வேலியில் ஒரு கிராமத்தில் எனவும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என புறப்பட்டு வந்துவிட்டான்.

தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் கட்டிலில் படுத்திருந்த தனஞ்சயனது மனமோ பெரும் தவிப்பில் இருந்தது. அவனது நினைவுகள் ஐந்து வருடங்கள் முன்னோக்கி பயணித்தது.

அதேவேளை, வீட்டிற்கு வந்த நிஷாந்தினியின் மனமோ உலைக்களமாகக் கொதித்துக் கொண்டிருந்தது. மகளைக் குளிப்பாட்டி தூங்க வைத்தவள் எழுந்து வீட்டிற்குப் பின்னால் சென்ற சிற்றாறின் கரையில் கிடந்த பாறை ஒன்றில் சென்று அமர்ந்தாள். அந்த இரவின் கருமையைப் போக்கடித்துக் கொண்டிருந்தது நிலவொளி. நிலாவின் வெளிச்சமும், ஆற்றங்கரையின் குளிர்மையும் அவளது மனதை சமாதானப்படுத்தும் போதுமானதாயில்லை. அவளது நினைவுகளும் கடந்த காலத்தை அசைபோடத் தொடங்கியது.

அந்த இல்லத்தின்.. ம்கூம் மாளிகையின் நுழைவாயிலில் தங்க நிற எழுத்துக்களால் ‘கோகுலம்’ என்னும் நாமம் பொறிக்கப்பட்டிருந்தது. அழகிய - நேர்த்தியாக பராமரிக்கப்பட்டிருந்த தோட்டத்தைக் கடந்து மிகப் பிரம்மாண்டமாக நின்ற அந்த வெள்ளை நிற மாளிகை கம்பீரமாகக் காட்சி தந்தது. உள்ளே பிரமாண்டமான வரவேற்பறையின் வலது பக்கத்தில் போடப்பட்டிருந்த சாப்பாட்டு மேஜையில் நடுநயமாக வீற்றிருந்தார் சுபத்திரா. அவ் வீட்டின் தலைவி. அவரைத் தவிர அம்மேசையைச் சுற்றி நால்வர் அமர்ந்திருந்தனர். சுபத்திராவின் இடதுபக்கத்தின் முதல் இருக்கையில் அமர்ந்திருந்தார் வேதாச்சலம். சுபத்திராவின் மாமனார். அவருக்கு அருகில் அவரது மனைவி ராஜலட்சுமி. அடுத்து அவ்வீட்டின் கடைக்குட்டி, சுபத்திராவின் மகள் கவிப்பிரியா அமர்ந்திருந்தாள். கவிப்பிரியா மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயில்கின்றாள். அவர்களுக்கு எதிர்பக்க இருக்கையில் அமர்ந்திருந்தான் பிரசாந்த். சுபத்திரா வின் இரண்டாவது மகன். தாயின் வார்த்தையை மீறும் துணிவில்லாததால் தனக்குப் பிடித்த சட்டக் கல்வியை விடுத்து பொறியியல் படிப்பை எடுத்து தற்போது இறுதியாண்டு படிக்கின்றான்.

இவர்களுக்கான காலை உணவைப் பரிமாறிவிட்டு வேலைக்காரர்கள் அவ்விடத்தை விட்டு அகன்று விட்டனர். எனினும் யாருமே உண்ணவில்லை. தமது தட்டையும் சுபத்திராவையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஏனெனில் சுபத்திரா உண்ணாமல் இவர்களும் உண்ண முடியாது. மீறி தட்டில் கையை வைத்தால் சுபத்திராவின் அக்கினிப் பார்வை அவர்களை எரித்துவிடும்.

சுபத்திராவோ மாடிப்படிகளையும் தனது வலது கையில் அணிந்திருந்த கடிகாரத்தில் நேரத்தையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென கம்பீரத்துடன் கூடிய -திமிருடன் என்று கூட சொல்லலாம்- புன்னகை அவரது வதனத்தில் விரிந்தது. அவரது பார்வையைப் பின்பற்றி அங்கிருந்தவர்களும் மாடிப்படியைத் திரும்பிப் பார்த்தனர்.

அங்கே கம்பீரத்துக்கு இலக்கணமாக இறங்கி வந்து கொண்டிருந்தான் தனஞ்சயன். சுபத்திராவின் மூத்த புதல்வன். பிரவுண் நிறத்தில் ஜீன்ஸும் கிரீம் நிறத்தில் முழுக்கை சட்டையும் அணிந்து அதற்குத் தோதாக டை, சூ என அணிந்திருந்தான். வலது கையில் ரோலக்ஸ் வாட்ச். உறுதியான தனது கால்தடத்தைப் பதித்து பாடிப் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தான் தனஞ்சயன்.

சாப்பாட்டு மேஜையருகே சென்றவன் சுபத்திராவின் வலது பக்கத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தான்
“குட்மோர்னிங்மா.. சாரிமா, கரெக்டா ரெடியாகி கீழே வர டைம் பார்த்து லண்டனில் இருந்து சாரா ஹோல் பண்ணி விஷ் பண்ணினாள். அதுதான் லேட்டாச்சு. சாரிம்மா…”
“குட்மோர்னிங் தனா.. இட்ஸ் ஓகே”
என்றுவிட்டு அவனுக்கான உணவைத் தாமே பரிமாறினார் சுபத்திரா. தொடர்ந்து அவர் சாப்பிடவும் ஏனையவர்களும் சாப்பிடத் தொடங்கினர்.

“தனா இன்று நீ முதன் முறையாக நம்ம ஃபிஸுக்குு வரப்போறாய். அதற்காக நான் கோயிலில் அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்திருக்கேன். சோ, ஏர்லியா புறப்பட்டு கோயில் போயிற்று அங்கிருந்து அப்படியே ஆஃபிஸ் போவோம். ஓகே யா”
“ஓகேமா” என்று தனஞ்சயன் பதிலளிக்கவும் சுபத்திராவிற்கு தொலைபேசி அழைப்பு வரவும் சரியாக இருந்தது. அதில் வந்த எண்ணைப் பார்த்துவிட்டு
“ஓகே நீங்க சாப்பிடுங்க. இம்போர்டன் ஹோல். சோ…” என்று தலையாட்டிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.

அவர் அங்கிருந்து அகலவும் அதுவரை மூச்சுப் பேச்சின்றி அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்த நால்வரும் உப்… என்று பெரிய மூச்சொன்றை வெளியிட்டு இயல்பாகினர். மாறிமாறி தனஞ்சயனுக்கு வாழ்த்தைக் தெரிவித்தனர்.
“அண்ணா நீ மட்டும் எப்படின்னா அம்மா கூட இவ்வளவு ரிலாக்ஸாக பேசுறியோ? எனக்கு அவங்களைக் கண்டாலே உதறல் எடுக்குது” என்றான் பிரசாந்த்.
“ஆமாண்ணா… எனக்குக் கூட ஏதோ மிலிட்டரி ஃகாம்பில் இருப்பது போல் ஃபீல் ஆகுதுண்ணா” என்று அழாக்குறையாகச் சொன்னாள் கவிப்பிரியா. அதைக் கேட்ட வேதாச்சலம் வாய்விட்டு சிரித்தார். அவரது இடுப்பில் குத்து ஒன்றைவிட்ட ராஜலட்சுமி “மெல்லச் சிரிங்க. உங்க மருமகளுக்கு கேட்டிடப் போகுது. அப்புறம் சாப்பிடும் போது என்ன சிரிப்புன்னு அதுக்கும் திட்டிடப் போறாள்” என்றார்.
“நீ வேணா உன் மருமகளுக்கு பயந்துக்கோ. நானெல்லாம் சிங்கம்டி. எனக்கு எந்தப் பயமுமில்லை.”
“ஓகோ… அதுதான் முந்தாநேத்து உங்க மருமகளுக்கு முன்ன அந்தப் பம்மு பம்முனிங்களே”
“தாத்தா என்ன ஆச்சு… அம்மா கிட்ட டோஸ் வாங்கிட்டிங்களா?” என்று கேட்டாள் கவிப்பிரியா.
“ஆமாடா குட்டிமா… நேற்று கிளப்புக்கு போயிற்று வரும்போது ராகவன் வீட்டுக்குப் போனனா… அவன் வற்புறுத்தவும் ஒரே ஒரு பெக்தான் குட்டிமா… வீட்டிற்கு வரும்போது உங்க அம்மா எப்படியோ கண்டுபிடிச்சிற்றாள். சரியான மோப்ப …” மேலே சொல்லாமல் இழுத்தவர், “ரொம்பவும் திட்டிற்றாள்.” என்றார் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு.
“தாத்தா அம்மாவை டோக் என்றா சொல்லுறிங்க. அம்மாகிட்ட போட்டுக் கொடுத்துடுவேன்” என்றான் பிரசாந்த்.
“முதல்ல உன் அம்மாகிட்ட நீ முன்னால் நின்று பேசுடா… அப்புறமா என்னைப் போட்டுக் கொடுக்கலாம்” என்றார் வேதாச்சலம்.

இவர்கள் பேசுவதை மெல்லிய முறுவலுடன் கேட்டுக்கொண்டிருந்தான் தனஞ்சயன்.
“அம்மா ரொம்ப நல்லவங்க தாத்தா. அவங்க சின்ன வயதிலிருந்தே இப்படியே பழகிட்டாங்க. எவ்வளவு ஸ்ரிக்டா இருந்தாலும் தாத்தா, பாட்டி மேல் ரொம்பப் பாசம். நம்ம எல்லோர் மேலயும் தான்.” என்றான் தனஞ்சயன்.
“ம்கூம்… அம்மாவுக்கு நீ என்றால் இன்னும் ஸ்பெஷல்” என்று சொன்ன பிரசாந்தின் வார்த்தைகளிலும் மனதிலும் எந்தவித பொறாமை உணர்வும் இல்லை.
“என் மருமகளைப் பற்றி எனக்கு நல்லாத் தெரியும்பா… சும்மா சொன்னேன். புருஷனையும் அப்பாவையும் அடுத்தடுத்து இழந்து போனபோதும் துவண்டு போகாமல் பிஸ்னஸையும் முன்னுக்குக் கொண்டு வந்ததோடு உங்களையும் எந்தவிதத் குறையுமின்றி வளர்த்து ஆளாக்கியிருக்காள். போதாக்குறைக்கு எங்கள் பிள்ளை இல்லாவிட்டாலும் எங்கள் இருவரையும் எந்தவித குறையுமில்லாமல் ஒரு மகளைப் போலவே பாதுகாக்கின்றாள்.” என்று தழுதழுத்த குரலில் கூறிய வேதாச்சலத்தின் மனதில் அன்பு பொங்கியது.

சாப்பிட்டு முடித்ததும் கவிப்பிரியாவும் பிரசாந்தும் காலேஜுக்கு புறப்பட்டனர்.

தாயுடன் புறப்பட்ட தனஞ்சயன் சென்றது அவ்வூரிலே பிரசித்தி பெற்ற கோயிலான காளிகாம்பாள் கோயிலுக்கே. அன்று திங்கட்கிழமை என்பதால் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. அபிஷேக நேரத்திற்கு வரமுடியாது என்பதால் கோயில் நிர்வாகத்திடம் எல்லா ஏற்பாடுகளையும் செய்யுமாறு சுபத்திரா ஏற்கனவே தெரிவித்திருந்ததால் அவர்கள் பூசை நேரத்திற்கு சரியாக வந்தனர்.
பூசை முடிந்து பிரசாதத் தட்டை பெற்றுக் கொண்ட சுபத்திரா அதனை டிரைவரிடம் காரில் வைக்குமாறு கொடுத்துவிட்டு கோயில் தர்மகர்த்தாவுடன், இன்னும் சில நாட்களில் நடைபெறவிருந்த இலட்சார்ச்சனை குறித்து பேசிக் கொண்டிருந்தார். தனஞ்சயனுக்கு மொபைலில் அழைப்பு ஒன்று வரவும் கோயில் வீதியில் நின்று பேசிக் கொண்டிருந்தான்.
தனக்குப் பின்னால் யாரோ தன்னைத் திட்டிக்கொண்டிருப்பது போல் உணரவும் திரும்பிப் பார்த்தான். அங்கே இவனது தோள் அளவே உயரமுடைய சிறுபெண் நின்றுகொண்டிருந்தாள். மொபைலில் எதிர் பக்கம் பேசுபவரிடம் கூறிவிட்டு அழைப்பை நிறுத்தியவன், அவள் தன்னைத்தான் திட்டுகின்றாளா என்பதை அவதானித்தான். ஆம்.. அவள் இவனைத்தான் திட்டினாள்.
“ஏன் சார், உங்களுக்கு காது தான் அவுட்டாகிச்சு என்று பார்த்தால்.. கண்ணும் பியூஸ் போச்சுதா? ஒருத்தி இங்க கரடியா கத்திட்டு இருக்கேன். எந்த ரியாக்ஷனும் இல்லாமல் நிற்கிறதைப் பார். சார் இது கோயில். உங்க வீடில்லை…” என்று கத்திக் கொண்டிருந்தாள்.

ஒரு சிறுபெண் தன்னெதிரே நின்று அதிகாரம் செய்வது வேடிக்கையாக இருந்தது தனஞ்சயனுக்கு.
 
Status
Not open for further replies.
Top