எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதல் ஆல்பா 8

இதுவரை ஆல்பா…..



அது 3050 ஆம் ஆண்டு. விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் மணி மற்றும் மேகலா. புதிய கோள் எக்ஸ்ஸை கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷ்ய விஞ்ஞானி டேவ் இணைகின்றார். இதனிடையே மணி மேகலாவிடம் தனது காதலை சொல்ல முயற்சிக்கின்றான். ஆனால் மேகலா தயங்குகின்றாள். இனி………



காதல் ஆல்பா 8



மேகலா பேச ஆரம்பித்தாள்,” மணி, உனக்கு நல்லாத் தெரியும். எனக்கு சின்ன வயசிலிருந்து அப்பா, அம்மா இல்லாம ஆதரவற்றோர் விடுதியில் வளர்ந்து கஷ்டப்பட்டு படிச்சேன். எனக்கு தாய், தந்தை இல்லாததால கடவுளை முழுசா நம்பினேன். ஆனா நீங்க அறிவை மட்டுமே நம்பி கடவுளை மறந்தவர். எனக்கு இதுவரைக்கும் வேறு எந்தவித எண்ணமும் இல்லை. புரிஞ்சுக்கங்க. வரேன்.”



”ஒரு நிமிசம் மேகலா” மணி இடைமறித்தான்.

மேகலா திரும்பி நின்று அவனைப் பார்க்க மணி தன் அருகில் வழக்கமாக கொண்டு வரும் பெட்டியைத் திறந்து உள்ளிருந்து ஒரு சிறிய மடிக்கணிணியைத் திறந்து விசையை அழுத்த அந்தக் காட்சி விரியத் தொடங்கியது.

மேகலாவின் சிறு வயது புகைப்படம் முதல் தற்போதைய நிலை வரை ஒளி ஒலிக்காட்சியாக 15 நிமிடங்கள் ஓடி முடிந்தது.



கண் இமைக்காமல் பார்த்த மேகலா கலங்கிப் போனாள். அவளுக்கே தெரியாத பல பிறப்பு ரகசியங்களை மணி சிரமப்பட்டு சேகரித்திருந்தான்.



“மேகலா, உன்னை காதலிக்கறதுக்காக இதை செய்யல. உன்னை இதுவரைக்கும் மனதார விரட்டியிருக்கேன தவிர வேறு எந்த தொந்தரவும் பண்ணதில்லை. உனக்கும் தெரியும். நானும் உன்னை மாதிரிதான்.

சின்ன வயசுலேயே பெற்றோரை இழந்து பரிதவிச்சவன். பல சிரமத்திற்கிடையே வாழ்க்கையில முன்னேறிவன். அதிக கஷ்டம் வாழ்க்கையில இருந்ததால கடவுள் மேல் நம்பிக்கை இல்ல.”



மேகலா கண்கலங்கி நின்றாள். யாரும் இந்தளவு அவளை நேசித்தது இல்லை. ஏனென்றால் உறவுகள் ஏதும் இல்லாமல் தாய் தந்தையைப் பார்க்காதவள் அவர்களின் பழைய புகைப்படங்களும் அவர்களைப் பற்றிய குறிப்பும் அவர்கள் தீ விபத்தில் இறந்த நிகழ்வுவரை அனைத்தையும் அவன் அற்புதமாய் சேகரித்து இருந்தான்.



இதுவரை மணிசேகரனை வேறு கோணத்தில் பார்த்தவள் இன்று மாறுபட்ட கோணத்தில் பார்த்தாள்.



ஒரு சில நொடிகள் மவுனம் அங்கு காற்றாய் வீசியது.



”எனக்கு தெரிந்த எல்லாவற்றையும் நான் சொல்லி விட்டேன். நான் நாத்திகவாதிதான் ஆனாலும் உனக்காக மனசு ஓரத்துல ரகசியமா கடவுளை வேண்டிகிட்டு இருந்தேன், வெளியில ஏதும் காட்டிக்கவில்லை.” மணி பேசி விட்டு மேகலாவை பார்த்தான்.

மேகலா கண்களில் நீர் நிறையப் மணியைப் பார்த்தாள்.



’என் மீது கொண்ட காதலுக்காய் எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டிருக்கின்றான். காதல் ஒரு மனிதனை எப்படி எல்லாம் மாற்றுகிறது. தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்தவனுக்கு காதலை மனதில் விதைத்தவன் யார் ? அடங்காத சுனாமி அலை போல எழுந்து உடல் முழுவதும் என்னையும் ஆக்ரமித்து நிதானம் இழக்க வைக்கின்றதே. கடவுள் நம்பிக்கை இல்லாத இவன் கூட காதல் ஜெயிக்க வேண்டும் என கடவுளை கும்பிட வைத்து விட்டதே இந்த காதல். யாருக்கும் வராது ஆனால் வந்தால் விடாத தீவிர தீர்க்க முடியாத நோய் அல்லவா இந்த காதல். காதலால் வீழ்ந்த சாம்ராஜ்யங்கள், வாழ்ந்த மனிதர்கள எத்தனை பேர். எல்லாருடைய வாழ்க்கையிலும் காதல் கடந்து போகும். ஆனால் அதை உணர்பவர் மட்டுமே காதலிக்க முடியும்’.



மேகலா மனதிற்குள் மலைத்துப் போனாள். பேச வாய் வரவில்லை. இரு சோடி கண்கள் மட்டும் அங்கு மவுன மொழியால் பேசிக் கொண்டன. அறையில் காற்று மட்டும் இருவருக்கு இடையில் நடைப் போட்டு கொண்டு இருந்தது.



மணிக்கு பேச்சு வரவில்லை. காதலை மனதிற்குள் பூட்டி வைத்தவன் இன்று வாய் தவறி சொல்லி பின் தான் மேகலாவின் காதலுக்காய் செய்த அனைத்தையும் சொல்லி விட்டு அவள் பதிலுக்காக காத்திருந்தான்.





”மணி இதுவரைக்கும் நாத்திகவாதியாய் இருந்த நீங்க இனி ஆத்திகவாதியாய் மாறிக்கலாம். கடவுள் இதுவரைக்கும் கஷ்டம் கொடுத்ததே இப்ப உனக்கு தரப்போற சந்தோஷத்துக்குத்தான்.”



மணி முதலில் புரியாமல் முழித்தவன் பின் அவளைப் பார்க்க அவள் கண்களில் காதல் தெரிந்தது.



காதல் அங்கு கண்சிமிட்டிச் சிரிக்க, காதலர்கள் பார்வைகளால் பேசி தம்மை மறக்க, விதி ஓரமாய் நின்று வேடிக்கைப் பார்த்தது.



காதல் துளிர் விட ஆரம்பிக்க……அருகில் விதி களைச் செடியாய் வளர ஆரம்பித்தது.



ஆல்பா வரும்….​
 
Top