எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

"நானும் இங்கே நீயாக" - கதைத் திரி

வணக்கம் நட்பூக்களே

நான் தான் #நானும் இங்கே நீயாக கதை எழுதுபவர்.

இந்தக் கதை ஒரு அழுத்தமான காதல் கதை

இப்போது கதைக்குள் செல்லலாம்.


அத்தியாயம் 1

"மது! " என்று ஆர்வமாக அழைத்தார் வாசுகி.

"என்ன ஆச்சு அம்மா" என்று தன் அறையில் இருந்து வெளியே வந்தாள் மது ஷாலினி.

"உன் நாவல் தான் டீ இப்போ தமிழ்நாட்டிலேயே அதிக விற்பனையில் இருக்காம்..இங்கப் பாரு பேப்பரில் எல்லாம் வருது"

"ஓ.. ஆனால் எப்படி! நான் அதை பிரபலமாக்க எதுவுமே செய்ய வில்லையே.. புக்கை வெளியிட்டே ஒரு வாரம் தானே ஆகுது" என்று சந்தேகமாய்க் கூற

"ஏன்டீ இப்படி இருக்க உன் முகத்துல சிரிப்புக் கூட இல்லை"

"வாழ்க்கையில் தோத்துப் போன எனக்கு சிரிப்பு மட்டும் தான் ஒரு கேடு" என்று அவள் சொல்லி முடிக்கும் போதே அவளின் தோழி பிருந்தாவிடம் இருந்து கால் வந்தது.

"சொல்லு பிருந்தா"

" வாழ்த்துகள் டீ உன்னுடைய கதை 'விழியில் ஒரு வலி' நாவல் தமிழ்நாட்டிலேயே பாப்புலர் ஆயிடுச்சு டீ.. ரொம்ப சந்தோஷமா இருக்கு"

"ஆனா பிருந்தா.. நான் அந்த புக்கை விளம்பரம் படுத்தவே இல்லையே, அப்போ எப்படி தமிழ்நாட்டில் அதிக விற்பனை ஆச்சுன்னு புரியலை"

"இப்போ அதுவா முக்கியம்.. நீ ஏன் உணர்ச்சியே இல்லாமல் இருக்க? .. எனக்குப் புரியுது உன் கணவனை இழந்து ஒரு வயசுக் குழந்தையோடு நீ இப்போது தனியா இருக்கேனு.. ஆனால் இதுல இருந்து வெளியே வந்து தான டீ ஆகனும்"

" ஆமா டீ.. என்னால சுத்தமா எதுலயும் கவனம் செலுத்த முடியலை... நரேஷ் அவ்வளவு நல்லவர்.. அவருக்கு ஏன் இப்படி ஒரு விபத்து நடந்து எங்களை விட்டுட்டுப் போயிட்டாரு.. என்னால முடியலை டீ.. "என்று அழ ஆரம்பித்தாள் மது.

" டீ மது அழாத.. நீ அழுதா ஆன்ட்டியும் உடைஞ்சு போயிடுவாங்க, அப்பறம் அவங்களுக்கு யாரு ஆறுதல் சொல்லுவாங்க.. அதை யோசிச்சுப் பாரு"

" ஆமா.. என் அம்மா என் முன்னாடி சந்தோஷமா இருக்குற மாதிரி காட்டிக்கிட்டு, தினமும் ராத்திரி அழுறாங்க டீ.. இந்த இரண்டு வருஷத்துல எவ்வளவு கஷ்டங்கள்! அப்பாவும் எங்களை விட்டுப் போயிட்டாரு, நரேஷூம் போயிட்டாரு"என்று அழுதவளை எப்படித் தேற்றுவது என்றுத் தெரியாமல் தவித்தாள் பிருந்தா.

அப்போது குழந்தை அழும் சத்தம் கேட்டது." பிருந்தா பிரனவ் அழுறான்.. பசிக்குதுப் போல நான் கால்லை வெக்குறேன்"என்று கால்லை கட் செய்தவள், தன்னுடைய ஒரு வயதுக் குழந்தை பிரனவ்விற்குத் தாய்ப்பால் கொடுக்கச் சென்றாள்.

சென்னையைச் சேர்ந்த விசுவநாதன் வாசுகி தம்பதியினரின் ஒரே மகளான மது ஷாலினியை, பிகாம் முடித்த உடனேயே கல்யாணம் செய்து வைத்தனர் அவளின் பெற்றோர்கள்.

சென்னையில் உள்ள ஒரு பெரிய ஐடி கம்பெனியில் மென்பொருள் பொறியாளராக வேலைப் பார்க்கும் நரேஷ் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன்.

நரேஷின் தந்தை ஒரு பள்ளியில் வேன் ஓட்டுநராகவும், அவனின் அம்மா ஒரு துணிக்கடையிலும் வேலைப் பார்த்துக் கொண்டு தான் இரு மகன்களையும் படிக்க வைத்தனர்.

நரேஷின் அண்ணன் சுரேஷூம் ஒரு ஐடி கம்பெனியில் வேலைப் பார்க்கிறான். சுரேஷூம் தன்னுடைய மனைவி மேகலா மற்றும் ஐந்து வயது மகள் ஸ்வேதாவுடன் பெங்களூரில் வசித்து வந்தான்.

நரேஷ் தான் மதுவையும் சந்தோஷமாக வைத்து, தன் தாய் தந்தைக்கும் வேண்டிய பொருள்களை வாங்கிக் கொடுப்பான்.

சென்னையில் உள்ள ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் மதுவுடன் வசித்து வந்த நரேஷ், மது ஐந்து மாதம் கருவுற்று இருக்கும் போது ஒரு சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தான்.

கல்யாணம் ஆகி ஓராண்டு கூட நிறைவடையாத பொழுது, தன்னுடைய கணவன் விபத்தில் சிக்கி உயிரிழந்தால் அதை யாரால் அவ்வளவு சீக்கிரம் தாண்டி, கடந்து வர முடியும்?

மதுவுக்குக் கல்யாணம் ஆகி ஒரு மாதத்தில் அவளின் தந்தை விஷ்வநாதன் உயிரிழக்க, அதில் இருந்த மீண்டு வரும் போது நரேஷின் இழப்பு மதுவிற்கு வாழ்வே வெறுத்து விட்டது. அதுவும் ஐந்து மாதம் கருவுற்று இருக்கும் போது, ஒரு பெண் தன் கணவனை இழந்தால் அவளின் மனநிலை எப்படி இருக்கும்! .எவ்வளவு அழுகைகள், எவ்வளவு கவலைகள் மனதில் ஓடிய பொழுதிலும் மூன்றாவது கவலையாகத் திகழ்ந்தது மதுவிற்கு வாழ்வாதாரம் தான்.

நரேஷ் இருக்கும் வரையில் அவர்கள் இடத்தில் இருந்த பணச் செழிப்பு இப்போது இல்லை. விஷ்வநாதன் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றதமையால், வாசுகிக்கு மாதாமாதம் முப்பது ஆயிரம் ரூபாய் குடும்ப ஓய்வூதியமாய் வந்தது.

கல்லூரி முடித்தவுடனேயே மதுவிற்குத் திருமணம் நடந்ததால்,அவள் வேலைக்குச் செல்லவில்லை. நரேஷூம் அவளை வேலைக்குச் செல்லும்படி கட்டயப்படுத்தவில்லை.

நரேஷின் மறைவிற்குப் பின், மது தன் தாயுடன் அவர்களின் வீட்டில் இருந்துக் கொண்டாள். ஆனால் வீட்டு வாடகை மாதாமாதம் கொடுக்க, அதற்கு வேறு தனிச் செலவு என்று, தன் மாமனார் மாமியாரிடம் "அத்தை நான் இனி உங்களுடனேயே வந்து இருந்திடவா" என்று கேட்டாள்.

"நீ ஒரு வருஷமாவது உன் அம்மாவுடன் இருந்துவிட்டு வாம்மா, அப்போது தான் உன் மனதிற்கும் ஒரு மருந்து கிடைச்ச மாதிரி இருக்கும்.. வயித்துல புள்ளைய வெச்சிக்கிட்டு இவ்வளவு சின்ன வயசுலேயே உன்னை தனியா தவிக்க வெச்சிட்டுப் போயிட்டானே நரேஷு"என்று மாமியார் கதற அப்போது தான் மதுஷாலினிக்கும் ஒரு பிரேக் தேவைப்பட்டது.

கல்லூரி படித்துக் கொண்டிருந்த சமயத்திலேயே மதுவிற்குக் கதைகள் எழுதுவது பிடிக்கும். சின்ன வயதில் இருந்தே வாசுகி தமிழ் காதல் கதைகளின் புத்தகப் பிரியை. அதனால் விசுவநாதன் நூலகம் சென்று மனைவிக்குப் பிடித்த புத்தகங்களை எடுத்துக்கொண்டு வருவார்.

வீட்டிற்கு ஒரே மகள் என்பதால் மதுவிற்குப் பேச்சுத் துணைக்கும் ஆள் இல்லாமல் போனது. அதனால் அம்மாவைப் போல் புத்தகம் படிப்பதை தன்னுடைய பொழுதுபோக்காக வைத்துக்கொண்டவளுக்கு, நாளடைவில் கதாசிரியர் ஆக வேண்டும் என்பது குறிக்கோளாக மாறியது.

தான் கல்லூரி படிக்கும் போது எழுதத் தொடங்கியவள் அப்போது ஆரம்பித்த கதையைக் கல்யாணச் சமயத்தில் கைவிட்டு இப்போது நரேஷின் பிரிவை நினைக்காமல் இருக்க மறுபடியும் பேனாவைக் கையில் எடுத்தாள். அது தான் 'விழியில் ஒரு வலி'

நான்கு வருடங்களுக்கு முன் ஆரம்பித்தக் கதையை இப்போது முடித்து, தமிழ்நாட்டிலேயே அதிக விற்பனையில் உள்ள புத்தகமாய் அவளுடைய நாவல் இருக்கிறது.

பிரனவ்விற்கு ஒரு வயது ஆகிவிட்டது என்ற நிலையில் தன் மாமனார் மாமியாருடனே இனி வசித்துக்கொண்டு நரேஷின் நினைவுகளில் வாழலாம் என்று கிளம்பினாள் மது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் தான் வசிக்கின்றனர் நரேஷின் அப்பா திவாகர் மற்றும் அம்மா லட்சுமி.

இவ்வளவு வருஷம் தாங்கள் வேலைப் பார்த்து சேர்த்தப் பணத்திலும், மகன்களின் உதவியோடும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை வாங்கினார்கள் நரேஷின் பெற்றோர்கள்.

ஒன்றரை வருடங்களுக்கு மேலேயே தன் தாய் வீட்டில் இருந்தவள், தன்னுடைய முதல் புத்தகம் வெளி வந்த பின்னர், தன் மாமனார் வீட்டிற்கு நிரந்தரமாகச் செல்ல முடிவெடுத்து தாய் வீட்டில் இருந்து கிளம்பினாள்.

இப்போதும் திவாகர் மற்றும் லட்சுமி வேலைப் பார்த்துத் தான் கொண்டிருக்கிறார்கள். மது மற்றும் பிரனவ்வை மிகவும் அன்பாகப் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

மதுக்கும் வேலைக்குப் போய் தன் மகனைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. ஆனால் லட்சுமி அதற்குச் சம்மதிக்கவில்லை.

"நான் வேலைக்குப் போறேன்ல மது.. அதனால் நீ வீட்டில் குழந்தையோடு நேரம் செலவழி.. எங்களால் உங்கள் இருவரையும் காப்பாத்த முடியும்.. பிரனவ்விற்கு பள்ளிக்குச் செல்லும் வயசு வந்த அப்பறம், உனக்கு வீட்டில் இருக்க போர் அடிச்சா வேலைக்குப் போ" என்றார் லட்சுமி.

நரேஷை மறக்க முடியாமல் தவித்த மது அவனை நினைக்கக் கூடாது என்று முடிவெடுத்து பிரனவ்விற்காக வாழ்க்கையில் ஒரு பிடித்தம் கொண்டு அவனுக்காகத் தன் முழு வாழ்க்கையை அர்ப்பணிக்கத் தொடங்கினாள்.

ஒரு வருடம் சென்ற நிலையில் இன்று பிரனவ்விற்கு இரண்டாவது பிறந்தநாள். இந்த இரண்டு ஆண்டுகளில் பிரனவ்விற்காக எந்த ஒரு விசேஷமும் கொண்டாடப்படவில்லை. அதில் மதுவிற்கு பெரிதாக ஈடுபாடும் இல்லை. ஆனால் பிரனவ்வின் இரண்டாம் பிறந்தநாள் நெருங்கும் போது, திவாகர் மற்றும் லட்சுமி அதை வீட்டிலேயே எளிமையாக கொண்டாடலாம் என்று பெங்களுரில் வசிக்கும் தன் முதல் மகனான சுரேஷிற்கு கால் செய்து அழைத்தனர்.

பிரனவ்வின் பிறந்தநாள் விழாவும் எளிமையாக நடந்தது. சுரேஷூம் மேகலாவும் மதுவிற்கு ஆறுதலாகவே இருந்தலும் அவர்களால் மதுவிற்கு பணம் கொடுத்து உதவ மனதில்லை. எங்கே வாழ்க்கை முழுதும் மது மற்றும் பிரனங் தங்களுக்கு பாரமாக ஆகி விடுவார்களோ என்று நினைத்தனர். இதனால் அவளிடம் அளவாகத் தான் பேசினார்கள். இது மதுவிற்குமே புரிந்தது. கண்டிப்பாக கொஞ்ச நாள் கழித்து தான் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

கதையைப் பற்றிய கருத்துகளைப் பதிவிட

 
Top