எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பச்சையன் --2

இதுவரை பச்சையன்…….

நிலாமகள் தன் தோழிகளாகிய உடன் பணியாற்றும் நான்கு பேருடன் குற்றாலம் செல்ல முடிவெடுக்கிறாள். எதற்கும் அசைந்து கொடுக்காத அவளது அழகிய கண்கள் எல்லாரையும் அசைத்துப் பார்க்கும் . ஆனால் அந்த கண்களே………

பிறை நிலா –2

நிலவு செய்தி….

செவ்வாய் கிரகத்திற்கு உள்ள நிலாக்களின் எண்ணிக்கை 2

அவன்……..​

அந்த மலைபாங்கான பகுதி சற்று அதிக அழகாக காணப்பட்டது. பச்சை போர்வை போர்த்திய நிலமகள், தலை சீவி வகுடெடுத்தது போல அந்த அழகிய தார் சாலை மலை ஓரமாக ஒட்டிச் சென்றது அந்த பாதையில் ஒரமாய் அந்த பஸ் நின்று பெருமூச்சு விட்டு இளைப்பாறி சில பேரை உதிர்த்து விட்டு சென்றது. ரோட்டோரமாய் இருந்த சில கடைகளில் இங்கொன்றும் அங்கொன்றுமாய் சில ஆட்கள் நின்று கொண்டு இருந்தனர்.

இவர்களில் நாம் தேடும் அவன் இல்லை. இந்த கதையில் உள்ளே நுழைகின்றவன் இன்னும் வரவில்லை. பஸ்ஸிலிருந்து இறங்கிய கூட்டத்திலும் , ரோட்டோர கடை ஆட்களிடமும் இல்லை. பின் அவன் எங்கே ? பஸ் இன்னும் கிளம்பாமல் இருந்தது.

திடீரென்று பஸ்ஸுக்கு பின்னால் இருந்து அவன் வெளிப்பட்டான். தோளில் ஒரு பெரிய கரடி உருவ வடிவமைப்பில் அந்த பை தொங்கி கொண்டு இருந்தது. ஆறடி உயரம். ஏதோ காற்றில் மிதப்பது போல அவன் நடை இருந்தது. அவன் நடை மிடுக்காக இருந்தது.

அவன் நடந்த நடையில் அவன் காலில் அணிந்து இருந்த ஷூக்களின் சத்தம் ஏதோ தாள நயத்துடன் வித்தியாசமாக இருக்க அங்கே திடீர் என ஒரு அமைதி நிலவியது. கடையில் நின்றவர்களும் கடையில் வியாபாரம் பார்த்தவர்களும் , பஸ்ஸிலிருந்து இறங்கி நின்றவர்களும் அவன் நடை சத்தத்தைக் கேட்டு திரும்பி அவனைப் பார்த்தார்கள்.

ஏதோ ஒன்று அவனிடம் இருந்தது. எல்லாரும் அவனை வைத்த கண் எடுக்காமல் பார்க்க ஆரம்பித்தார்கள். அதாவது அவனைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. கவரந்து இழுக்கும் வசீகர முகம், அதில் கண்கள் ஏதோ சொல்ல வருவதுபோல இருந்தது. அவன் யாரையும் லட்சியம் செய்யாமல் ஆள் அதிகம் இல்லாத கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

பஸ்ஸில் இருந்த சிலர் அவனை யோசனையாய் பார்த்தார்கள். ‘ இவன் நம் கூட வந்தவன் இல்லையே, இவன் எங்கிருந்து முளைத்தான் ? எங்கே போகிறான் ? ஆளே வித்தியாசமா இருக்கானே….’ இப்படி குழம்பி தவித்தார்கள்.

அவன் அந்த கடையின் முன் நின்றான். கடையில் இருந்த அந்த பெரியவர் கேட்டார்.

“ தம்பி, என்ன சாப்பிடறீங்க ? “

அவன் சற்று நிதானித்தான். எல்லாரும் தன்னை பார்ப்பதை கவனித்து மெதுவாக சிரித்துக்கொண்டான்.

“ காபி கொஞ்சம் தூக்கலா போடுங்க “

குணிந்து டம்ளரை கழுவிக்கொண்டு இருந்த பெரியவர் அவன் குரலைக் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்தார். கேட்பவர் மனதை மயக்கும் வசியப்படுத்தும் குரல். ஏதோ அவர் மனதை மயக்கியது போல இருந்தது. அவர் செயலற்று நிற்க மறுபடி கேட்டான்.

“ ஐயா, காபி போட்டு கொடுக்கிறீகளா ? “

அவர் தலையை தட்டிகொண்டார். அவனை கூர்ந்து கவனித்துக்கொண்டே காபி போட ஆரம்பித்தார்.

எல்லாரும் இந்தி நடிகர் போல இருப்பார்கள் என சொல்வதுண்டு, ஆனால் உண்மையில் அவர்கள்தான் இவனைப் போல அழகாக , கொஞ்சம் அழகில் குறைவாக இருந்தார்கள்.

அவன் அருகிலிருந்த சிறிய மர பெஞ்சில் உட்கார்ந்தான். கால் மேல் போட்டு அழகாய் நிமிர்ந்து உட்கார்ந்தான். வேடிக்கை பார்த்த சில திருமணம் ஆகாத இளம் பெண்களின் மனது அவர்களை அறியாமலே இவன் பக்கம் பாய்ந்தது.

எவரையும் மயக்கும் எந்த கண்களையும் மயக்க கூடிய, வீழ்த்தக் கூடிய கண்களால் எல்லாரையும் ஒருமுறை பார்த்தான். அங்கு நின்று இருந்த பஸ் கிளம்பிச் செல்ல கூட்டம் குறையத் தொடங்கியது. அவன் காப்பியை ரசித்து ரசித்து மெதுவாய் குடித்துக்கொண்டு இருந்தான். கை விரல்கள் மரக்கட்டை பெஞ்சின் ஒரு ஓரத்தை தடவிக்கொண்டு இருந்தன.

“ தம்பி, எதுவரைக்கும் போறிங்க ? “

அவன் ஊர் பெயரைச் சொன்னான்.

“ பக்கத்துல மூணு கிலோமீட்டர் தம்பி. அருமையான இடம். நல்ல குளிர்ச்சி, மனதுக்கு அமைதி கொடுக்க்கூடிய இடம்”.

” உண்மைதான் ஐயா, அதுக்காகதான் இவ்வளவு தூரம் வந்தேன் “.

அவன் காப்பிக்குரிய பணத்தை கேட்டு அதை கொடுத்து விட்டு அவரைப் பார்த்து சிரித்தான். மீதி பணம் கொடுக்க அவர் கையை நீட்டியபோது மறுத்து விட்டு அவரிடமே திருப்பி தள்ளினான்.

அவர் மகிழ்ந்து போனார்.

“ தம்பி அடுத்த பஸ் கொஞ்ச வர கொஞ்ச நேரம் ஆகும். பரவாயில்லையா ? “

“ நான் பஸ்ல போகலை, எல்லாத்தையும் ரசிச்சிட்டு காலார நடந்து போக போறேன் . பக்கத்துல கொஞ்சம் கிலோமீட்டர்தானே”.

“உண்மைதான் தம்பி, எல்லாரும் கூண்டு மாதிரி ஏதோ ஒரு வண்டியில ஏறிகிட்டு போறாக, எதையும் ரசிக்க தெரியாதவக. இல்லாட்டினா உட்கார்ந்துகிட்டே நகர்ற ஏதாவது ஒரு 2 சக்கர வண்டியில ஊர்ந்து போறாக “

அவன் பதிலேதும் சொல்லாமல் சிரித்துக்கொண்டே எழப்போகும் போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது.

உட்கார்ந்து இருந்தவன் விரல்களால் பெஞ்சை தடவிக்கொண்டு இருந்தவன் கை விரல்களில் ஒன்று அங்கிருந்த கூரிய ஆணி ஒன்றில்பட்டு இரத்தம் எட்டிப்பார்க்க, இவனை எட்டிப்பார்த்துக் கொண்டு இருந்தவர் இவன் கைவிரல்களில் வழிந்த இரத்தத்தை கண்டு மயங்கி கடைக்குள் சரிந்தார். சிறிது நேரம் கழிந்தது.

அவன் பதட்டப்படாமல் எழுந்து நடக்க ஆரம்பித்தான். குற்றாலம் செல்லும் அந்த தார்ரோட்டில் நடக்க ஆரம்பித்தான்.

குற்றாலத்தில் என்ன நடக்கும் ?

பச்சையனுக்காக காத்திருங்கள்… வருவான்
 
Top