எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மண்ணின் காரிகையவளோ - கதை திரி

Status
Not open for further replies.

admin

Administrator
Staff member
எங்கள் தளத்தில் தன் பயணத்தை தொடர இருக்கும் எழுத்தாளர் கனிமொழிக்கு என் வாழ்த்துக்கள்...
 

Kani Mozhi

Moderator
எங்கள் தளத்தில் தன் பயணத்தை தொடர இருக்கும் எழுத்தாளர் கனிமொழிக்கு என் வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி அக்கா ❤?
 

Kani Mozhi

Moderator
அத்தியாயம் - 1

மேகம் மறைத்திருந்த வானத்தில் ஆதவன் தன் செங்கதிர்களைப் படரச் செய்ய இருள் விலகிக் காலைப்பொழுது அழகாகப் புலர்ந்தது...

அந்திவானமாய் வானம் சிவந்திருக்க பச்சை பசேலென்று நிலம் செழித்திருக்க கண்களைக் கொள்ளைக் கொள்ளும் மலர்களோ பூத்துக் குலுங்கிருக்க மெய்சிலிர்க்கும் அழகோடு காட்சியளித்தது கோவை மாவட்டத்தில் இருக்கும் அக்கரைசெங்கப்பள்ளி கிராமம்...

"கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு... "

பூஜையறையில் சுப்ரபாதம் பாடியப்படியே தீபாராதனைக் காட்டிக் கொண்டிருந்தார் நாச்சியார்...

சரியாக அப்போது உள்ளே வந்த ஊர்காரர்கள் " ஐயா வணக்கமுங்க... " என்று வணங்க நிமிர்ந்துப் பார்த்தார் சுந்தரபாண்டியன்...

தான் படித்துக் கொண்டிருந்த தினசரி நாளிதழை கீழே வைத்துவிட்டுப் புன்னகை முகமாய் அவர் தலையசைக்க "ஐயா திருவிழாக்கு முதல் பத்திரிக்கை கொடுக்க வந்துருக்கோமுங்க அய்யா..." என்று வயதில் மூத்தவரொருவர் பணிவுடன் தெரிவிக்க தனது மனையாளை நோக்கினார் சுந்தரபாண்டியன்...

கணவரின் கண்ணசைவில் அவர் கூற வந்தததைப் புரிந்துக் கொண்ட நாச்சியார்

"அம்மாடி சவி.... " என்று குரல் கொடுக்க உள்ளிருந்து புள்ளிமானாய் துள்ளி குதித்து வந்தாள் அவள்...

பச்சை நிற தாவணியில் கழுத்தில் தங்கச்செயினும் காதில் குடைஜிமிக்கியும் கையில் பவளமோதிரமும் அணிந்து இடையை தாண்டியக் கூந்தலை தளரப் பின்னி முல்லைச்சரம் சூடியிருந்தாள்....

பிறை நெற்றி.... மீன் விழிகள்... எலுமிச்சை நிறம்... கூர் நாசி.... நிலவைப் போன்று ஜொலிக்கும் வட்ட முகமென அழகோவியமாய் ஓடி வந்தாள் சாம்பவி....

"சவிம்மா திருவிழாக்குப் பத்திரிக்கை கொடுக்க வந்துருக்காங்கடா... வாங்கிக்கோ... " என்று சுந்தரபாண்டியன் தெரிவிக்க தலையாட்டினாள் சாம்பவி...

வெள்ளித் தட்டில் பழங்கள் வெற்றிலைபாக்கு வைத்து அதன் மேல் பத்திரிக்கையை வைத்து ஊர்காரர்கள் கொடுக்க அதைப் பெற்றுக் கொண்டு தன் பாட்டி கொடுத்தப் பழங்கள் நிறைந்த தாம்பூலத்தை அவர்களுக்கு கொடுத்தாள் சாம்பவி....

"அய்யா அப்போ நாங்க கிளம்பட்டுமாங்க அய்யா... "

"என்ன அவசரம் இருந்து சாப்பிட்டுப் போங்க.... "சுந்தரபாண்டியன் கூற அதற்குள் அனைவருக்கும் இலைப் பரிமாற ஆரம்பித்துவிட்டார் நாச்சியார்...

வயிறார உண்டவர்கள் அவர்களிடம் விடைபெற்று வெளியே வர "ஏங்க அம்மன் பாதத்தில வைச்ச முதல் பத்திரிக்கைய சுந்தரபாண்டியன் அய்யாவுக்கு கொடுக்குறதே அவர கவுரப்படுத்ததானு சொன்னாங்க.... ஆனா அவர் வாங்காம ஒரு சின்னபொண்ணப் போய் வாங்க சொல்றாரு.... " கூட்டத்தில் ஒருவர் வினவ சட்டென்று அனைவரும் அவரை நோக்கினர்....

"என்னப்பா ஊருக்கு புதுசா .... பேரென்ன"

"ஆமாங்க வந்து இரண்டு வாரம் தான் ஆச்சு... பேரு மாரியப்பனுங்க " என்று பதிலளிக்க அனைவரும் சிரித்தனர்...

அவர்களின் சிரிப்பின் அர்த்தம் புரியாமல் மாரியப்பன் முழிக்க அங்கிருந்த பெரியவரொருவர் அதற்கான விளக்கமளித்தார்...

"இங்கப் பாரு மாரியப்பா... சுந்தரபாண்டியன் அய்யா இந்த ஊர் தலைவர் மட்டும் இல்ல மொத்த ஊருக்கும் காவல்தெய்வம்... நாங்க அவர அப்படி தான் நினைக்குறோம்... எங்கய்யாவுக்கு ஏத்தமாறியே தாயுள்ளம் கொண்டவங்க நாச்சியா அம்மா... அய்யாவுக்கு சிங்கக்குட்டிக மாதிரி அஞ்சு பேரப்பசங்க இருக்காங்க... ஆனா அய்யாவையே உரிச்சு வைச்சுப் பிறந்தவங்க தான் சாம்பவி பாப்பா... அய்யாவோட மறுவுருவம் அவுங்கதான்... அவுங்க பொறந்ததுக்கு அப்புறம் தான் இந்த ஊர் பூமியே செழிசுச்சு... அய்யா வீட்டுல மட்டுமில்ல இந்த ஊர்லயே சாம்பவி பாப்பா பேச்ச ஒத்த ஆள் மீற மாட்டாங்க... வெளில போய் இப்படி கேட்டுபுட்டு திரியாத... அடி பொலந்துருவானுங்க... " என்று விளக்கியப் பெரியவர் இறுதியில் எச்சரிக்க ஒருநிமிடம் மாரியப்பனின் உடல் பயத்தில் சிறிது நடுங்கியது...

தனது பாட்டனார் தந்தை என தலைமுறை தலைமுறையாய் அவ்வூரை அவர்கள் கட்டிக் காத்த ஒற்றுமையை சுந்தரபாண்டியனும் கட்டிக் காக்க அரசனுக்கு ஏத்த அரசியாய் அவருக்கு நல்ல மனையாளாக அன்பின் திருவுருவமாக கணவனுக்கு பக்கபலமாக இருக்கிறார் நாச்சியார்...

சுந்தரபாண்டியன் நாச்சியார் தம்பதியருக்கு மூன்று வாரிசுகள்... மூத்தவர் எழிலரசு... இரண்டாமவர் அன்புச்செல்வி... இளையவர் முத்தரசு...

எழிலரசு அன்னபூரணி தம்பதியருக்கு இரண்டு மகன்கள்... மூத்தவன் இளமாறன்... இருபத்தியாறு வயது இளம்காளை... பொறுமையும் பொறுப்பும் ஒருங்கே சேர்ந்த அன்பானவன்...

இரண்டு வருடங்கள் கழித்து பிறந்தவன் பாரிவேந்தன்... கோவமும் பிடிவாதமும் இருந்தாலும் அண்ணனின் பேச்சை மீறாத தம்பி.... இருவரும் தங்களது தாத்தா மற்றும் தந்தையைப் போலவே விவசாயமே உயிர்மூச்சென வாழ்பவர்கள்...

அன்புச்செல்வி சத்யமூர்த்தி தம்பதியருக்கும் இரண்டு மகன்கள்... மூத்தவன் விஷ்வேஷ்வரன்.... இருபத்தியேழு வயது சிங்கக்குட்டி... முரட்டுத்தனமும் கோவமும் ஒருங்கே சேர்ந்த நல்லவன்... தாத்தாவிடம் விவசாயம் கற்று அவரை போலவே மண்ணை நேசிப்பவன்...

மூன்று வருடங்கள் கழித்துப் பிறந்தவன் கவியரசன்.... கல்வியின் மீது பற்றுக் கொண்டதனால் அதனைக் கற்றுத் தரும் பேராசிரியராக கல்லூரியில் பணியாற்றுகிறான்... தாயைப் போலவே அன்பும் அடக்கமும் பண்பும் ஒருங்கே சேர்ந்தவன்...

முத்தரசு மீனாட்சி தம்பதியருக்கு இரண்டு வாரிசுகள்... மூத்தவன் அன்புசெழியன்... இருபத்திநான்கு வயது சீறும்காளை... தாத்தா பெரியப்பா தந்தை அண்ணன்மார்களைப் பார்த்து வளர்ந்தவனுக்கும் விவசாயமே உயிர்மூச்சு...

அவனுக்கு அடுத்து நான்கு வருடங்கள் கழித்து மகாலட்சுமியாய் பிறந்தவள் சாம்பவி... குடும்பத்தின் ஒரே பெண் வாரிசு... பிறக்கும் போதே அதிர்ஷ்டத்துடன் பிறந்தவளை ஊரே கொண்டாட மொத்த ஊரின் செல்லப்பிள்ளை...

கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள்... தாத்தாவிடமிருந்து ஆளுமையும் பாட்டியிடமிருந்து அன்பும் தந்தையிடமிருந்து அமைதியும் தாயிடமிருந்து அடக்கமும் ஒருங்கே பெற்ற சேட்டைக்காரி...

**************

ஊர்க்காரர்கள் சென்றதும் துள்ளிக் குதித்து வெளியில் ஓடிய சாம்பவியை முறைத்த மீனாட்சி " சவி காலைலயே சாப்பிடாம கொள்ளாம எங்க கிளம்புற... " என்று பொய்க்கோவத்துடன் வினவினார்...

"ம்மா நான் வயலுக்கு போயிட்டு வரேன்ம்மா..... எப்படியும் எனக்கும் சேர்த்து தான் அத்தை விஷ்வா மாமாகிட்ட சாப்பாடுக் கொடுத்து விட்டுறுப்பாங்க.... நான் மாமாகூட சாப்பிட்டுகிறேன்... " என்று பதிலளித்தவள் அதற்கு மேல் நிற்காமல் ஓடிவிட பெருமூச்சு விட்டார் மீனாட்சி...

"விடு மீனா விஷ்வாவ தான பாக்கப் போறா.... அன்பு விஷ்வாவுக்கு சாப்பாடு கொடுத்து விடுறாலோ இல்லயோ மருமகளுக்கு மறக்காம கொடுத்து விட்றுவா... இவளும் அத்தை கையால சாப்பிட்டே பழகிட்டா... " பேத்திக்காக மருமகளை நாச்சியார் சமாதானம் செய்தும் மீனாட்சியின் முகம் வாடியே இருந்தது...

"இல்லத்தை நம்ம புள்ளைங்க மனசுல ஒன்னும் இல்லனாலும் சுத்தி இருக்குறவங்க வாய் சும்மாவா இருக்கும்.... கண்ணு மூக்கு வாய் வைச்சு பேசுனா நாளைக்கு அவ வாழ்க்கை என்னாகுறது அத்தை... " தாயாய் அவர் மனம் பயம்கொள்ள அதைப் புரிந்துக் கொண்டார் நாச்சியார்...

"அட ராசாத்தி இதை நினைச்சு தான் விசனப்படுறியா... என் பேரனையும் பேத்தியையும் யாராவது தப்பா பேசுவாங்களா என்ன...அப்படியே பேசுனா தான் என்ன... ஊரையே கூப்பிட்டு ஜாம் ஜாம்னு திருவிழா மாதிரி கல்யாணம் செஞ்சு வைச்சு பேசுற வாய அடைச்சுற மாட்டேன்.... சவி பொறந்தப்பவே என்னோட மருமகள்னு அன்பு சொல்லிட்டா... அப்பறம் என்னமா... " என்று வாஞ்சையாய் கேட்க மாமியாராக அல்லாமல் இன்னொரு தாயாக இருக்கும் அத்தையின் மடியில் படுத்துக் கொண்டார் மீனாட்சி...

"விஷ்வாவுக்கும் சவிக்கும் கல்யாணம் ஆனா என்ன விட சந்தோஷப்படுற ஆள் யாராவது இருப்பாங்களா அத்த... ஆனா எனக்கு இப்போலாம் ஒரு கனவு வருது அத்த... நம்ம சவி நம்மள விட்டு தூரமா போகுற மாதிரி... யாரோ ஒரு பையன் வந்து அவள நம்மகிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போற மாதிரியே கனவு வருது அத்தை... " என்று கண்கலங்கிய மருமகளின் தலையை வருடினார் நாச்சியார்...

"மீனா இதுக்கெல்லாம் விசனப்படலாமா... சாம்பவி இந்த வீட்டு மகாலட்சுமி.... அவள யாராலயும் நம்மகிட்ட இருந்துப் பிரிக்க முடியாது... இதே ஊர்ல ஊரே மெச்சுற அளவுக்கு என் பேரனுக்கும் பேத்திக்கும் கல்யாணம் நடக்கும்.... நீ மனசு நோகாம சந்தோஷமா இரு தாயி... எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்.... " தேற்றிய அத்தையை மீனாட்சி பாசமாக கட்டிக் கொள்ள மருமகளை அணைத்துக் கொண்டார் நாச்சியார்....

**************

இளம் வெயிலில் ஆண்களும் பெண்களும் வரப்பு வெட்டிக் கொண்டிருந்தனர்... அவர்களுக்கு நடுவில் மடித்துக் கட்டிய வேஷ்டியும் வியர்வையில் நனைந்த பனியனுமாய் வரப்பு வெட்டிக் கொண்டிருந்தவனின் அகண்ட மார்பும் முறுக்கேறிய புஜமும் அவனின் கம்பீரத்தைப் பறைசாற்ற மாநிறத்தில் கலையாக இருந்தான் விஷ்வேஷ்வரன்....

அங்கிருந்த இளம்பெண்களின் கண்கள் மொத்தமும் அவனைச் சுற்றியே மொய்த்துக் கொண்டிருக்க ஆணவனின் கவனமோ நிலத்தில் மட்டுமே இருந்தது...

"என்ன மச்சான் இன்னும் எந்தங்கச்சிய காணோம்.... இந்த அதிசயத்துல ஒருவேளை மழை வந்துருமோ இன்னைக்கு..." ஆச்சரியமாக தன் அத்தை மகனிடம் பாரிவேந்தன் கூற அவனை முறைத்தான் விஷ்வா...

"எலேய் வேலையப் பாருலே... இன்னும் அஞ்சு நிமிசத்துக்குள்ள வேல முடியல பேசுறதுக்கு குரவளை இருக்காது ஜாக்கிரதை.... " விஷ்வா மிரட்ட அதைக் கண்ட இளமாறனும் அன்புசெழியனும் நகைத்தனர்...

சரியாக அந்நேரம் சாம்பவி வயலுக்கு வர "அம்மாடியோவ் ஆயிசு நூறு என்ற தங்கச்சிக்கு... " என்று பாரி சிரிக்க மற்ற மூவரும் நிமிர்ந்து பார்த்தனர்....

தங்கையைப் பற்றி அறிந்ததால் அண்ணன்மார்கள் மூவரும் தங்களது வேலையைத் தொடர கைகளைக் கழுவிக் கொண்டு அவளருகில் சென்றான் விஷ்வா...

தன்னை நோக்கி வரும் விஷ்வாவைப் பார்த்து சவி சிரிக்க " என்ன புள்ள அதிசயமா தாவணிலாம் கட்டிருக்க... அம்முச்சி அத்தைங்க எல்லாம் கட்ட சொன்னாலும் நீ மாட்டேனு வீம்பு பண்ணுவியே... " ஆச்சரியமாக விஷ்வா வினவ குறும்புடன் அவனை நோக்கினாள் சாம்பவி...

"அதுவா மாமா... அது வந்து மாமா... சொல்லமாட்டேன் மாமா... " என்று குறும்பாய் கூறியவள் குடுகுடுவென்று தன் அண்ணன்களிடம் சென்று விட சிரித்துக் கொண்டே கைகளைக் கழுவி விட்டு தனது அன்னை கொடுத்து விட்ட உணவு வாலியை எடுத்தான் விஷ்வேஷ்வரன்...

அங்கிருந்த அனைவரிடமும் பேசி முடித்து சவி ஓடி வர " என்ன புள்ள எல்லார்கிட்டயும் பேசி முடிச்சுட்டியா.. எப்படி தான் எல்லா நேரமும் வாயடிக்க முடியுதோ... " பெருமூச்சு விட்டவன் அவளுக்கு ஊட்டிவிட நாக்கை துருத்திக் காட்டிவிட்டு ஆ காட்டினாள் சாம்பவி...

சிறுவயதில் சவி சாப்பிடாமல் அடம்பிடிக்கும் போதெல்லாம் அவளுக்கு வேடிக்கை காட்டிக் கொஞ்சி கொஞ்சி விஷ்வா ஊட்டிவிட அதுவே காலப்போக்கில் பழக்கமாகிவிட்டது... எதற்கெடுத்தாலும் அடம்பிடிக்கும் சவி விஷ்வாவின் பேச்சிற்கு மறுபேச்சு பேசாமல் கேட்டுவிடுவாள்...

தன்னையே சுற்றி சுற்றி வரும் தன் அத்தை மகளை மிகவும் பிடித்திருந்தாலும் படிக்கும் சிறுபெண்ணின் மனதில் வேறு எந்த எண்ணமும் வந்துவிடக் கூடாதென்று தன் நேசத்தை வெளிக்காட்டாமல் மனதிற்குள்ளேப் பூட்டிவைத்துள்ளான் விஷ்வேஷ்வரன்....

***************
அவசரச் சிகிச்சைப் பிரிவின் வெளியே தவித்து நின்று கொண்டிருந்தார் அந்த பெண்மணி.... கைகளிலும் கழுத்திலும் காதிலும் மின்னிய வைரம் அவரின் செல்வ நிலையை உணர்த்த கண்களில் நிற்காமல் வழிந்தோடும் நீரும் சோகமே வடிவாய் அவர் நிற்கும் தோற்றமும் அவரின் நிலையை எடுத்துரைத்தது... அவருக்கு துணையாக நின்றுக் கொண்டிருந்த மகனும் மருமகளும் ஆறுதல் மொழிந்தும் அவர் நிலை மாறவில்லை...

சட்டென்று கதவு திறக்கும் சத்தம் கேட்க நிமிர்ந்துப் பார்த்த பெண்மணி சட்டென்று மருத்துவரின் அருகில் சென்று தவிப்புடன் நோக்க "கவலைப்படாதீங்கம்மா உங்க கணவர் இப்போ அபாயக் கட்டத்தை தாண்டிட்டார்... அவர் இதயத்துல இருந்த புல்லட்ட எடுத்துட்டோம்... இன்னும் நாலு மணி நேரம் அப்சர்வேஷன்ல இருக்கனும்... அதுக்கப்பறம் நீங்க போய் பாருங்க.... " என்றதும் அவர் அவனின் காலில் விழப் போகச் சட்டென்று அவரைப் பிடித்து நிறுத்தினான் ஸ்ரீதரன்...

"என்னம்மா நீங்க... என் அம்மா வயசு உங்களுக்கு நீங்க போய் என் கால்ல விழுந்துட்டு.... " சங்கடமாய் கூறியவனிடம் கை எடுத்து கும்பிட்டார் மரகதம் மினிஸ்டர் அனந்தராஜின் மனைவி....

"தம்பி நீங்க காப்பாத்துனது அவர் உயிர மட்டுமில்ல என் உயிரையும்... அவரில்லாம என்னால ஒருநிமிசம் கூட வாழமுடியாது... " என்று அவர் கலங்கியதிலேயே அவரின் கணவரின் மீதுக் கொண்ட காதல் அனைவருக்கும் புரிந்தது...

"உங்க காதலும் உங்க அன்பும் தான் சாருக்கு பக்கபலமாக இருந்து அவர காப்பாத்திருக்கும்மா... " புன்னகையுடன் கூறியவன் மற்ற நோயாளிகளைப் பார்த்துவிட்டு தனது அறைக்கு வந்தமர்ந்தான் ஸ்ரீதரன்...

அந்த பெண்மணியின் கண்களில் தெரிந்த நேசத்தைப் பார்த்தவனுக்கு தன்னையும் இவ்வாறு நேசிக்கும் மனைவி வேண்டும் என்ற ஆசை தோன்ற வழக்கம் போல் மனதில் தோன்றிய யாரென்று அறியாத அந்தப் பெண்ணை வரைந்தான் ஸ்ரீதரன்...

தொடரும்??

வணக்கம் கண்மணிகளே❤❣... புதிய கதையின் ஆரம்பம் எப்படி இருக்குனு சொல்லுங்கோ.... தங்களின் அன்பையும் ஆதரவையும் தருமாறு பாசத்தோடு கேட்டுக் கொள்கிறேன்❣❣...

படிச்சுட்டு மறக்காம கமெண்ட் பண்ணீங்கனா என் லிட்டில் ஹார்ட் ஹேப்பி ஆகிரும் ??
டாட்டா கண்மணிகளே ??
 

Kani Mozhi

Moderator
அத்தியாயம் 2

அந்த பெண்மணியின் கண்களில் தெரிந்த நேசத்தைப் பார்த்தவனுக்கு தன்னையும் இவ்வாறு நேசிக்கும் மனைவி வேண்டும் என்ற ஆசை தோன்ற வழக்கம் போல் மனதில் தோன்றிய யாரென்று அறியாத அந்த பெண்ணை வரைய ஆரம்பித்தான் ஸ்ரீதரன்...

அவன் வரைந்துக் கொண்டிருக்கும் போதே கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த நர்ஸ் " டாக்டர் ஒரு எமர்ஜென்சி கேஸ்... " என்று பதற்றத்துடன் தெரிவித்தார்...

தான் வரைந்துக் கொண்டிருந்ததை ஓரமாக வைத்த ஸ்ரீதரன் உடனடியாக எமர்ஜென்சி வார்டிற்கு சென்று நோயாளியைப் பார்த்தவன் " நர்ஸ் ஆபரேசனுக்கு ரெடி பண்ணுங்க... சீக்கிரம்... " என்று கட்டளைப் பிறப்பித்துவிட்டு அவரைச் சோதிக்க ஆரம்பித்தான்....

***************

யோசனையாய் அமர்ந்துக் கொண்டிருக்கும் கணவரை வெகுநேரமாய் கவனித்த நாச்சியார் "ஏனுங்க ரொம்ப நேரமா யோசனையாவே இருக்கீங்க.... " என்று வினவ அதில் சிந்தைக் கலைந்து தன் மனைவியை நோக்கினார் சுந்தரபாண்டியன்...

"அது வந்து.... ஒன்னுமில்லமா... " என்றவர் மீண்டும் யோசனையில் ஆழ்ந்து விட

" உங்களுக்குள்ளே வைச்சுக்கிட்டு ஏனுங்க விசனப்படுறீங்க... என்றகூட சொல்லக்கூடாத விசயமா... அப்படினா சொல்ல வேண்டாமுங்க.... " என்று அப்பாவியாய் கூறிய நாச்சியாரைப் பார்த்து வழக்கம் போலவே வியந்தார் சுந்தரபாண்டியன்....

"சொல்லக் கூடாதுனுலாம் இல்ல நாச்சியா... நம்ம மாறனுக்கு ஒரு வரன் வந்துருக்கு.... ஜோசியர் வந்து கொடுத்துட்டு போனாரு... நல்ல குடும்பம் பொண்ணும் நல்லா தங்கமான பொண்ணுனு சொன்னாரு... ரெண்டு பேத்துக்கும் நல்லப் பொருத்தம்... " என்று தயங்கிக் கொண்டே கூறிய கணவரை ஆச்சரியமாகப் பார்த்தார் நாச்சியார்...

"ஏனுங்க நல்ல விஷயம் தான இதுக்கு ஏன் இம்புட்டு யோசன.... "

"நல்ல விஷயம் தான் நாச்சியா... ஆனா மாறனுக்கு மூத்தவன் விஷ்வேஷ்வரன்... அவனுக்கு கல்யாணம் பண்ணாம எப்படிமா இவனுக்கு பண்ண முடியும்... நம்ம சவியும் இன்னும் காலேசு முடிக்கல... அதுவும் இல்லாம அவுங்க ரெண்டு பேத்து மனசுல என்ன இருக்குனும் தெரியாதே நாச்சியா... " பெருமூச்சுடன் கூறினார் சுந்தரபாண்டியன்....

"ஏனுங்க சவி நம்ம விஷ்வாக்கு தானு நம்ம அவ பொறந்த அப்பவே முடிவு பண்ணியாச்சு.... அந்த குட்டிக் கழுதையும் நம்ம சொன்னா கூட கேக்க மாட்டா ஆனா அவன் சொன்னா தட்டாம கேக்குறா... மாமா மாமானு அவனையே வால் புடிச்சுட்டு சுத்துறா... அவனும் தான் யாராவது ஒருத்தர்கிட்ட ஒருநிமிசத்துக்கு மேல பேசிக் கேட்டுறுக்கோமா... ஆனா சவிகிட்ட மணிக்கணக்கா கூட பேசுறான்... " என்று நாச்சியார் விலாவரியாக எடுத்துரைக்க திருதிருவென விழித்தார் சுந்தரபாண்டியன்...

"எல்லாம் சரி நாச்சியா இதெல்லாம் தெரிஞ்ச விஷயம் தான இப்போ ஏன் சொல்லுற.... " என்று வினவியக் கணவரைக் கண்டு தலையிலடித்துக் கொண்டார் நாச்சியார்...

"இக்கும்.... நீர்லாம் என்னத்த இத்தன வருஷம் பஞ்சாயத்தப் பண்ணீலோ... உங்களுக்கு இன்னும் புரிலயா... இரண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் விரும்புறாங்க... " ரகசியம் போல் நாச்சியார் மெதுவாய் கூற
"அட... அவிங்க இரண்டு பேரும் விரும்புனா ஏன் இன்னும் நம்மகிட்ட சொல்லாம இருக்காங்க... வரட்டும் அந்த படவா இன்னைக்கு அவனுக்கு இருக்கு... " தோளில் துண்டை கோவமாக உதறி போட்டக் கணவரை முறைத்த நாச்சியா

"ஏனுங்க உங்களுக்கு காலம் போனக் கடைசில மூளை மங்கி போச்சா என்ன... "

"அடியே யாருக்கு காலம் போன கடைசிலனு சொல்லுற... இன்னமும் ஜல்லிக்கட்டுல இறங்குனா பத்துக் காளைய அசராம அடக்குவேன்டி... " ஆவேசமாய் கூறிய கணவரைக் கண்டு முகத்தை வெட்டினார் நாச்சியார்...

"ஆமா ஆமா இப்போ தான் உமக்கு இளமை திரும்புதுனு நினைப்பாக்கும்... இரண்டு பேரும் சின்னஞ்சிறுசுக எப்படி வெளிப்படையா நம்மகிட்ட சொல்லுவாங்க.... சவி சின்னப்பொண்ணு... விஷ்வா தோளுக்கு மேல வளர்ந்தப் பையன் அவன் எப்புடி நம்மகிட்ட வந்து சொல்லுவான்... அவனுக்கு சங்கடமா இருக்காதா... " என்று அவர் விளக்கியதும் பேரன் பேத்தியின் மனநிலை புரிந்தது... இருந்தாலும் மனைவியின் முன் சுந்தரபாண்டியன் விரைப்பாக இருக்க

"என்ன வயசானவரே உமக்கு புரிஞ்சுதா இல்லயா... "

"அடிக் கழுதை உன்ன... " என்று சுந்தரபாண்டியன் எழ அதற்குள் சிரித்துக் கொண்டே சமையலறைக்குள் புகுந்து கொண்டார் நாச்சியார்...

மனைவி கூறியதில் மனதில் இருந்த குழப்பம் தீர்ந்து விட திருவிழா முடிந்ததும் இரு ஜோடிகளுக்கும் திருமணம் முடிவு செய்து விடலாம் என்று முடிவெடுத்தவர் மனைவியிடமும் மகன் மருமகள்களிடமும் தெரிவிக்க அனைவரும் சந்தோஷத்துடன் சம்மதித்தனர் ...

"இப்போதைக்கு சின்னவங்ககிட்ட சொல்ல வேண்டாம்... நம்ம ஜோசியர்கிட்ட நல்ல நாள் நேரம் கேட்டுப்போட்டு சொல்லிக்கலாம்..." என்று சுந்தரபாண்டியன் கூற அனைவருக்கும் அதுவே சரியாகப்பட்டது...

"ஆமாங்க அதுவும் சரிதான்... அந்த குட்டிக் கழுத வேற தாம்தூம்னு குதிப்பா... யாரக் கேட்டு முடிவு பண்ணீங்க எனக்கு இன்னும் கல்யாண வயசு வரலனு..." என்று நாச்சியா வசவுப் பாட தனது பேத்தியைக் குறை கூறிய நாச்சியாவை முறைத்தார் சுந்தரபாண்டியன்....

"என்ற பேத்திய ஏதாவது சொல்லலனா உனக்குப் பொழுது போகாதே...." என்றதும் தாடையில் முகத்தை இடித்து திருப்பிக் கொண்டார் நாச்சியார்...

"ஆமா எனக்கு பொழுது போகலனு நீர் பாத்தீரோ... முந்தா நேத்து அசலூர்ல நல்ல வரன் வந்துருக்குனு ஜோசியர் வந்தாரு அதுக்குப் போய் அந்தக் குதி குதி குதிச்சு இனி இங்க ஜாதகத்தோட வந்தீங்க கைய வெட்டிருவேனு மிரட்டி அனுப்பிருக்கா... ஆனாலும் இம்புட்டு கொலுப்பு ஆகாது அவளுக்கு.... புடிக்கலனா பதமா சொன்னா என்ன அவளுக்கு.... எல்லாம் நீங்களும் அந்த விஷ்வா பயலும் குடுக்கறச் செல்லம்... மூன்னு அண்ணங்காரனுங்க இருக்கானுங்கனு தான் பேரு ஒருத்தனாவது கண்டிக்கிறானா அவள... " நாச்சியா கவலையாகக் கூற சிரித்தார் சுந்தரபாண்டியன்...

"என்ற பேத்தி தைரியத்தப் பாராட்டாம எதுக்குப் புள்ள திட்டுற... இந்த ஊருலயே அவள மாதிரி தைரியமா ஒத்த புள்ளய காட்டுப் பாக்கலாம்.... "

"ஆமா ஆமா உங்க பேத்தி தைரியத்த நீர் தான் மெச்சிக்கனும்... " என்று வாய் கூறினாலும் பேத்தியின் தைரியத்திலும் துணிச்சலிலும் எப்பொழுதுமே நாச்சியாருக்கு ஓர் பெருமை உண்டு....

வீட்டிற்குள் நுழைந்த சவி அனைவரும் ஒன்றாக பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து " என்ன நம்ம இல்லாம ஒரு மீட்டிங் போட்டுறுக்காங்க... என்னனு பாப்போம்.... " என்று நினைத்தவள்

"என்ன என்னை விட்டுட்டு எல்லாரும் பேசிட்டு இருக்கீங்க .... அப்பாரு நீங்களுமா... " என்று வினவியபடி தனது அப்பாரின் அருகில் அமர்ந்தாள் சாம்பவி...

"அது ஒன்னும் இல்ல கண்ணு சும்மா பேசிட்டு இருந்தோம்.. சரி பாப்பா அப்பாரு பேச்ச கேப்பீங்க தான... " மென்மையாக வினவினார் சுந்தரபாண்டியன்...

"என்ன அப்பாரு இப்படிலாம் கேட்டுப்புட்டு இருக்கீங்க... நீங்க இத செய் சவினு சொன்னா செய்யப் போறேன்..." என்றவளின் பதிலில் அனைவருக்கும் மனம் திருப்தியாகவும் நிம்மதியாகவும் இருந்தது....

*****************

வயலில் வேலை முடித்து மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்தான் விஷ்வேஷ்வரன்... முகம் கைகால் அலம்பிவிட்டு உள்ளே வந்த மகனைக் கண்ட அன்புச்செல்வி

"வாப்பா நானே உன்னய வரச்சொல்லலாம்னு இருந்தேனாக்கும்... " என்று கூறிய அன்னையை ஆச்சரியமாகப் பார்த்த விஷ்வா

"என்னங்கம்மா அப்படி என்ன தலைப்போற விசயம்... "

"இப்போ தான் எங்கய்யா கூப்பிட்டாரு விஷ்வா... திருவிழா முடிஞ்சதும் உனக்கும் சவிக்கும் கல்யாணம் பேசலாம்னு சொன்னாருப்பா.... " அகமகிழ்ந்து அன்னை கூற விஷ்வாவிற்கோ இன்ப அதிர்ச்சியாக இருந்தது...

"அம்மா சாம்பவி சரினு சொல்லிட்டாளாமா... " எனினும் மனதின் ஓரத்தில் அழுத்திக் கொண்டிருக்கும் கேள்வியை அன்னையிடம் வினவினான்...

"அவ என்ற மருமவ விஷ்வா... அவ பொறந்தப்பவே முடிவு பண்ணது இதெல்லாம்.... "

"மா எதுக்கும் சாம்பவிகிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு எதுவா இருந்தாலும் முடிவு பண்ணுங்க.... எக்காரணம் கொண்டும் அவள நீங்க யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது...அப்படி ஏதாதுனு தெரிஞ்சிச்சு நடக்குறதே வேற... " அழுத்தமாய் உரைத்தவன் உள்ளே சென்று விட சவிக்கும் விஷ்வாவைப் பிடிக்கும் தானே என்ற எண்ணத்தில் அவன் பேச்சை அன்புச்செல்வி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை...

******************

மருத்துவமனையில் வேலை முடித்து சோர்வுடன் உள்ளே வந்த ஸ்ரீதரன் ஹாலில் அமர்ந்திருந்த அன்னையின் மடியில் படுத்துக் கொண்டு கண்களை மூட மகனின் தலையை மெதுவாக நீவினார் பத்மா...

"என்ன கண்ணா இன்னைக்கு கஷ்டமான வேலையாப்பா...."

"ஆமாம்மா மினிஸ்டர் அனந்தராஜை யாரோ சூட் பண்ணிட்டாங்க... கரெக்ட்டா ஹார்ட்லயே புல்லட் ஏறிருச்சு... ரொம்ப கிரிட்கல்லான சிச்சுவேஷன்மா... சாரோட வைஃப் வேற ரொம்ப துடிச்சு போயிட்டாங்க.... ஆனா அவங்க கண்ணுலயே சார் மேல அவங்க எந்த அளவுக்கு பாசம் வைச்சுருக்காங்கனு தெரிஞ்சுதும்மா... உண்மைலயே சார் ரொம்ப லக்கி... நம்மள உண்மையா எந்த எதிர்பார்ப்பும் இல்லாம நேசிக்கிற லைஃப் பார்ட்னர் கிடைக்குறதுலாம் அதிர்ஷ்டம்மா..... " மனதிலிருப்பதை அன்னையிடம் ஸ்ரீதரன் கூற மகனை குறும்பாய் நோக்கினார் பத்மா....

"கவலைப்படாதீங்க டாக்டர் சார்... உங்களுக்கும் அளவில்லாம உங்கள நேசிக்குற மாதிரி ஒரு பொண்ண கண்டுபிடிச்சு உங்களுக்குக் கட்டி வைச்சுறேன்.... " அன்னை கூறியதும் ஸ்ரீதரனின் மனதில் தன்னால் அந்த பெண்ணின் முகம் தோன்ற அவனின் முகமோ நாணத்தில் ஜொலித்தது....

சட்டென்று அன்னை மடியிலிருந்து எழுந்தவன் " மா நான் போய் ரெப்ரஷ் ஆகுறேன்.... " என்றவன் நிற்காமல் மேலே ஓடிவிட மகனின் வெக்கத்தைக் கண்டுக் கொண்ட பத்மா சிரித்தார்...

குளித்து உடைமாற்றிவிட்டு வந்த ஸ்ரீதரன் பாதி வரைந்து வைத்திருந்த ஓவியத்தை முழுதாக வரைந்து முடித்தவன் " ஹே அழகி எங்க இருக்க நீ... உனக்காக இங்க ஒரு இதயம் உன்னையே நினைச்சு துடிச்சுட்டு இருக்குனு தெரியுமா உனக்கு.... " தனக்குள்ளே கேட்டுக் கொண்டவன் கண்ணாடியில் தன் நிலையைப் பார்த்து சிரித்தான்....

"ஒரு டாக்டர இப்படி பொலம்ப விட்டுட்டியே அழகி... நீ யாரு உன் பேரு என்ன எந்த ஊரு எதுவும் தெரியாது... ஆனாலும் எனக்கு என் காதல் மேல நம்பிக்கை இருக்கு... அது கண்டிப்பா உன்கிட்ட என்ன கொண்டு வந்து சேர்க்கும்... " முழுமனதுடன் தன் காதலின் மேல் நம்பிக்கை வைத்தான் ஸ்ரீதரன்....

(அய்யா - கோவை வட்டாரத்தில் சிலர் தந்தையை அய்யாவென்றும் அழைப்பர்.

அப்பார் - தந்தைவழித் தாத்தா

ஆத்தா - தந்தைவழிப் பாட்டி

அப்புச்சி - தாய்வழித் தாத்தா

அம்முச்சி - தாய்வழிப் பாட்டி )

தொடரும்??

ஹாய் கண்மணிகளே❤... படிச்சுட்டு மறக்காம கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்❤❣...
 
Last edited:

Kani Mozhi

Moderator
அத்தியாயம் 3

காலைப் பொழுது புலர அந்திவானமோ சிவந்து அழகாகக் காட்சி அளித்தது... அதிகாலையில் எழுந்த சாம்பவி ரங்கோலி கோலம் வரைந்து அதற்கு கலர் கொடுத்துக் கொண்டிருக்க தனது பேத்தி கோலம் போடும் அழகில் சிலோகித்து நின்றார் நாச்சியார்....

"என்ன ஆத்தா(பாட்டி) என்னையே வைச்ச கண்ணு வாங்காமப் பார்த்துட்டு இருக்க... அம்புட்டு அழகா இருக்கேனா என்ன... " சாம்பவி சிரித்துக் கொண்டே வினவ

"இக்கும் ஆமா ஆமா இவ அழகுல மயங்கிட்டாங்க.... போடி போடி இவளே... நானு வானத்தப் பாத்துட்டு இருந்தேனாக்கும்... எம்புட்டு அழகா இருக்கு.... " என்று சமாளித்தார் நாச்சியா...

"மிஸஸ்.நாச்சியார் சுந்தரபாண்டியன் பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லனும்னு உங்க அம்மையார் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கலயா.... உங்களுக்கு வாய் ஜாஸ்தியா ஆயிருச்சு அதனால மிச்சக் கலர நீங்களே போடுங்க... " என்றவள் கலர்பொடிக் கிண்ணத்தை அவரின் கையில் திணித்து விட்டு உள்ளே ஓடிவிட

"இந்த சின்னக் கழுதைக்கு இதே வேலையா போச்சு... எப்பப்பாரு பாதி கோலத்தில ஓடிறவேண்டியது..." பேத்தியை வசைப்பாடிக் கொண்டே மீதி கோலத்திற்கு கலர்பொடியைத் தூவி அலங்கரித்தார் அந்த பைங்கிளியின் ஆத்தா....

சிறிது நேரத்தில் கல்லூரிக்குக் கிளம்பி அவசர அவசரமாக கீழே வந்தவளைப் பிடித்து சாப்பிட அமர வைத்த நாச்சியாரைப் பாவமாக நோக்கியவள்

"ஆத்தா டிபன்ல போட்டுக் கொடுங்க நான் காலேஜ்ல போய் சாப்பிட்டுகிறேன்... நேரமாயிரும்... " என்று பரபரப்பாகக் கூற பேத்தியின் தட்டில் மொறு மொறு நெய் ரோஸ்டை வைத்துச் சட்னியை ஊற்றினார் நாச்சியார்...

"நீ காலேசு போய் எங்க சாப்பிடுற... இங்கனவே சாப்பிட்டுட்டு போ... வயசுப் புள்ள மாதிரியா இருக்க.... வேற வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி கொஞ்சமாவது ஒழுங்கா சாப்பிட்டு உடம்பு தேத்து... " என்ற தன் ஆத்தாவை ஆராய்ச்சியாய் நோக்கிய சாம்பவி

"வேற வீட்டுக்கு போறதுக்கு முன்னாடியா... " முறைத்துக் கொண்டே வினவ திருதிருவென விழித்தார் நாச்சியார்....

சுந்தரபாண்டியன் உளறிய தன் மனையாளை முறைத்துக் கொண்டிருந்தார.... அதனை உணர்ந்த நாச்சியார் " பின்ன இங்கனவே இருக்க முடியுமா... காலாகாலத்துல உன்ன கட்டிக் கொடுக்கோனும்ல... " என்று மெதுவாய் சமாளிக்க

"இங்கனப் பாருங்க ஆத்தா... என்ன இந்த வீட்ட விட்டுத் துரத்தனும்னு நினைச்சீங்க உம்ம உங்கய்யா வீட்டுக்கு பார்சல் பண்ணிருவேனாக்கும்... " என்று மிரட்டும் தொனியில் சாம்பவி கூறிட முகத்தைத் திருப்பிக் கொண்டார் நாச்சியார்...

"சவி... என்ன பழக்கம் இது... பெரியவங்ககிட்ட இப்படி தான் பேசுவியா கொஞ்சம் கூட மரியாதையில்லாம... வர வர உனக்கு வாய் கூடிப் போச்சு... அத்தை உன் நல்லதுக்கு தான சொன்னாங்க... எதுக்கு இப்படி எகுறுறவ..." கோவத்தில் மீனாட்சி மகளை அதட்ட அதில் சாம்பவிக்கு கண்கள் கலங்கிவிட்டது.....

பேத்தி கண்கலங்கியதும் பதறிய நாச்சியார் " இப்போ எதுக்கு என்ற பேத்திய வைறவ(திட்டுற)... என்றகிட்ட தான அவ விளையாடுறா... பாருப் புள்ளைக்கு கண்ணெல்லாம் கலங்கிருச்சு.... நீ எதுக்கு கண்ணு அழுகுற... " மருமகளை அதட்டிவிட்டு வாஞ்சையாய் பேத்தியின் கண்களைத் துடைத்தார் நாச்சியார்...

"சாரி ஆத்தா... இனிமே நான் அப்படிப் பேசல " தேம்பிக் கொண்டே கூறியவளின் கன்னத்தைக் கிள்ளியவர்

"அட சின்னக் கழுத... நீ தான் என்ற கூட ஏட்டிக்குப் போட்டியா பேசுறவ... உன்னத் தவிர யாராவது என்ற கிட்ட அப்படிப் பேச முடியுமா... இந்த நாச்சியா பேத்தி இதுக்கு போய் அழுவுலாமா... உன்ற அம்மாகிட்ட திருப்பி என்ற ஆத்தா நான் பேசுவேனு சொல்லாம இப்படி தான் கண்ணக்கசக்கிட்டு இருப்பியாக்கும்... "

"அய்யோ ஆத்தா இவள நம்பாதீங்க.... இவளாவது திட்டுறதுக்கு அழுறதாவது.... இவளுக்கு ஏதாவது காரியம் ஆகனும்னு இப்படி வாய்ப்பு கிடைச்சோன அழுது சாதிக்கப் பாக்குறா... " தங்கையைப் பற்றி நன்கறிந்த அன்புச்செழியன் கூற மொத்த குடும்பமும் இப்போது சவியை ஆராய்ச்சியாய் நோக்கினர்...

"அண்ணாவாடா நீ அண்ணாவா... இப்படி நா கஷ்டப்பட்டுப் பண்ண பர்பாமன்ஸை வந்து ஒரே நிமிசத்துல கெடுத்துவிட்டுட்டான் படுபாவி.... எரும எரும... இன்னும் அஞ்சு நிமிசம் இவன் அமைதியாயிருந்துருக்கக் கூடாதா கடவுளே..." மனதிற்குள் நொந்து கொண்டாள் சாம்பவி....

அனைவரும் தன்னை நோக்குவதை உணர்ந்தவள் சுந்தரபாண்டியனின் அருகில் சென்று "ஹீ ஹீ ஹீ அது வந்து... அப்பாரு இது கடைசி வருசங்கறனால எங்க காலேஜ்ல சென்னைக்கு எல்லாரையும் டூர் கூட்டிட்டு போறாங்க அப்பாரு... நானும் போவட்டா பிளீஸ் அப்பார்... என் ப்ரண்ட்ஸ் எல்லாரும் போறாங்க நானும் போவட்டா பிளீஸ்.... " முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு அவள் கெஞ்ச அதற்கு மேல் மனம் தாளாமல் சம்மதித்தார் சுந்தரபாண்டியன்....

"எப்ப கண்ணு போகோனும்... திருவிழா வேற வருதே... "

"நாளைக்கு அப்பார்... திருவிழாவுக்கு முன்னாடி நாள் வந்துருவேன் அப்பாரு... "

"சரி கண்ணு வீட்டுல சரினு சொல்லிட்டாங்கனு காலேசுல சொல்லிரு... "

"ஹை சூப்பரு... அப்பாருனா அப்பாரு தான்... " என்று சாம்பவி துள்ளிக் குதிக்க

"நான் சொல்லல இவ காரியத்தோட தான் அழுதானு.... இதுல இந்த ஆத்தா இவ அழுகுறானு பக்கம் பக்கமா சமாதானம் வேற... " தலையிலடித்துக் கொண்டுப் புலம்பியபடியே அன்புச்செழியன் வெளியில் சென்று தனது பைக்கை எடுக்க தாத்தா அனுமதியளித்த சந்தோஷத்தில் சாப்பிட மறந்து வெளியே ஓடினாள் சாம்பவி....

ஓடும் பேத்தியைக் கண்ட நாச்சியா " ஏனுங்க திருவிழா முடிஞ்சோன கல்யாணம் முடிவு பண்ணப் போறோம்... இப்போ போய் சவிய வெளியூருக்கு அனுப்பனுமாங்க..." என்று வினவிய தன் மனையாளிடம் திரும்பிய சுந்தரபாண்டியன்

"அதெல்லாம் நான் யோசிக்காம இருப்பேனா நாச்சியா... நான் காரணமா தான் சரினு சொன்னேனாக்கும்... " என்று புதிராகப் பேசியவரை நாச்சியாரும் மீனாட்சியும் கேள்வியாக நோக்க

"நம்ம சவிக்குட்டி ஆசைப்பட்டு இத கேட்டுருக்கு... நம்ம ஒத்துகலனா முகத்த தூக்கி வைச்சுக்கும்... அந்த கோவத்த கல்யாண விஷயத்துல காட்டும்... அதான் புள்ள கேட்டதும் சரினு சொன்னேன்... இப்போ புள்ளயும் சந்தோஷமா இருக்கும் நம்மளும் தைரியமா கல்யாண வேலை ஆரம்பிக்கலாம்.... " என்று விளக்கியவரை மாமியாரும் மருமகளும் ஆச்சரியமாகப் பார்த்தனர்...

"எங்களுக்கு இது தோணாம போச்சே... " என்று கன்னத்தில் கைவைத்து வியந்தார் நாச்சியார்....

"எப்படியோ அத்த அந்தப் பிடிவாதக்காரி கல்யாணத்துக்கு சம்மதிச்சா சரி... " என்று மீனாட்சி சிரித்துக் கொண்டே கூற

"அதெப்படி ஒத்துக்காம போவா... அவ என்ற பேத்தியாச்சே... " மீசையை முறுக்கிக் கொண்டே பெருமையாகக் கூறினார் சுந்தரபாண்டியன்....

**************

கல்லூரிக்கு வந்த சாம்பவிக்கோ சந்தோஷம் தாளவில்லை... குடுகுடுவென்று தோழிகளிடம் ஓடிய தங்கையைக் கண்டு புன்னகையுடன் " வாலுக்குட்டி... எப்படியோ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி எல்லாரையும் ஒத்துக்க வைச்சுட்டா... " நினைத்துக் கொண்டே தங்கை உள்ளே பத்திரமாக செல்லும் வரை நின்றுப் பார்த்துவிட்டு தனது வண்டியை வயலிற்கு கிளப்பினான் அன்புச்செழியன்...

மும்முரமாக வயலில் வேலை செய்துக் கொண்டிருந்த விஷ்வா வண்டியை நிறுத்தி விட்டு வரும் செழியனைக் கண்டு " என்ன மச்சான் உன்ற தங்கச்சிய காலேஜ்ல விட்டுட்டு வாரியாக்கும்... " என்று வினவ

"ஆமாங்க மாமா.... அப்புறம் இன்னொரு விஷயம் நாளைக்கு அம்மணி சென்னைக்கு போயிருவாங்க... " என்று செழியன் தெரிவிக்க அதில் புரியாமல் அவனை நோக்கினான் விஷ்வா....

"என்ன திடீர்னு எதுக்கு சென்னைக்கு..."

"காலேஜ்ல டூர் கூட்டிட்டுப் போறாங்களாம் மாமா... அதனால அடம்பிடிச்சு வீட்டுல எல்லாரையும் சம்மதிக்க வைச்சுட்டா... " என்று அன்பு கூற விஷ்வாவின் முகமோ அவள் தன்னிடம் கூறவில்லையே என்று வாடிப் விட்டது...

"எப்போ வருவாளாம்.... " முகத்தை விரைப்பாய் வைத்துக் கொண்டு விஷ்வா வினவ அவனின் மனநிலை உணர்ந்த செழியனோ

"மாமா சவி மேல கோவமா உங்ககிட்ட சொல்லலனு... " தயங்கிக் கொண்டே வினவ

"அட அதெல்லாம் இல்ல மச்சான் இதுல என்ன இருக்கு... அவ பத்திரமா போயிட்டு வந்தாலே போதும் எனக்கு... வா வேலையப் பார்ப்போம்... " சமாளித்த விஷ்வா அதற்கு மேல் நிற்காமல் சென்றுவிட செழியனும் வேலையை கவனிக்கச் சென்றான்.....

*********

பரபரப்பாக கிளம்பி கீழே வந்த மகனை பத்மா சாப்பிட அழைக்க " இல்லமா லேட் ஆகிறும்.... நான் அங்க போய் சாப்பிட்டுகிறேன்..... நீங்க சாப்பிடுங்கம்மா... " தனது பேகில் தேவையானதை வைத்துக் கொண்டே ஸ்ரீதரன் கூற

"கண்ணா அவசரமா போகனுமா.... " தயங்கிக் கொண்டே வினவினார் பத்மா....

"ஏன்ம்மா ஏதாவது முக்கியமான விஷயமா..... "

"இல்லப்பா அக்கா கால் பண்ணிருந்தாங்க.... உன்னோட ஜாதகம் அவங்ககிட்ட இருந்திச்சு.... ஒரு நல்ல வரன் வரவும் ஜோசியர்கிட்ட பொருத்தம் பாத்துருக்காங்க... பொருத்தம் அமோகமா இருக்காம் கண்ணா... பொண்ணு வீடும் அவங்களுக்கு தெரிஞ்சவங்களாம்... நல்ல குடும்பம்னு சொன்னாங்க... இது தான் பா பொண்ணு போட்டோ... " தயங்கிக் கொண்டே கூறி முடித்தவர் போட்டோவை நீட்ட அவரைச் சலிப்பாக நோக்கினான்...

"ம்மா இப்போ இதுக்கெல்லாம் என்ன அவசரம்மா..."

"அவசரமா.... உனக்கு இருபத்தியாரு வயசாகிருச்சு கண்ணா... எனக்கும் உனக்கு கல்யாணம் பண்ணிப் பாக்கனும்னு ஆசை இருக்காதா... " ஏக்கத்துடன் கூறும் அன்னையை ஆழ்ந்து நோக்கியவன்

"மா கொஞ்ச நாள் போகட்டும்மா நானே சொல்றேன்...." என்றுவிட்டு வேகவேகமாக சென்றுவிட செல்லும் மகனையே தவிப்புடன் பார்த்தார் பத்மா...

ஸ்ரீதரனின் கை காரை ஓட்டிக் கொண்டிருந்தாலும் மனமோ தவித்தவித்துக் கொண்டிருந்தது...

"இன்னைக்கு எப்படியோ சமாளிச்சாச்சு... இப்படியே அம்மாகிட்ட எல்லா நேரமும் சமாளிக்க முடியாதே.... உன்ன சீக்கிரமே கண்டுபிடிச்சாகனும் அழகி... கண்டுபிடிச்சே தீருவேன்.... " மனதில் உறுதிப் பூண்டுவிட்டு மருத்துவமனையை நோக்கிச் சென்றான் ஸ்ரீதரன்....

மருத்துவமனை வந்ததும் முக்கிய நோயாளிகளைப் பார்த்து முடித்துவிட்டு ஒரு முறை ரவுன்ஸ் சென்று வந்தபின் தனதறையில் அமர்ந்தவனின் சிந்தனையோ தன் மனம் கவர்ந்தவளிடமே நிலைத்திருந்தது...

அவளைக் கண்டுப்பிடித்தாக வேண்டும் ஆனால் எப்படி என்று யோசித்தவனுக்கு தனது தோழனின் நியாபகம் வர அவனுக்கு அழைப்பு விடுத்தான்....

எதிர்முனையில் போனை எடுத்ததும் "ஹலோ மச்சான் எப்படி இருக்க.... " என்று ஸ்ரீதரன் பாசமாக வினவ

"யார்டா நீ..."

"என்னடா இப்படி கேட்டுட்ட.... உன் ஆருயிர் நண்பன்டா.... "

"எடு செருப்ப.... ஆருயிர் நண்பனாம்... இத்தனை மாசமா ஒரு போனாவது பண்ணியா... நான் இப்போ டூயிட்டில பிசியா இருக்கறனால தப்பிச்ச இல்ல மவனே உன்ன .... " இத்தனை நாட்கள் தன்னிடம் பேசாத தன் உயிர்நண்பனை மனம் ஆறும் வரை திட்டித் தீர்த்தான் இன்ஸ்பெக்டர் விகாஷ்...

"சரி மச்சான் சரி மச்சான்.... இதுகெல்லாம் கோச்சுக்கலாமா.... டேய் அப்பறம் எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்டா... " தயங்கிக் கொண்டே ஸ்ரீதரன் கூற மேலும் கடுப்பானான் விகாஷ்....

"டேய் என்னடா இது ஹெல்ப் கில்ப்னுட்டு.... மச்சான் எனக்கு பண்ணனும்டானு சொன்னா பண்ணப்போறேன்... என்னனு சொல்லுடா...."

"அது வந்து நான் ஒரு போட்டோ அனுப்புறேன்.... அந்த பொண்ண கண்டுபிடிக்கனும்டா... "

"எதே பொண்ணா... மச்சான் நீதானா இது... " என்று விகாஷ் வாயைப் பிளக்க

"ஆமாடா... கண்டுப்பிடிச்சு தாடா மச்சான்... "

"என்னடா எதோ என்னோட நாய்க்குட்டி காணோம் கண்டுப்பிடிச்சுக் கொடுங்கற மாதிரி சொல்ற... "

"இப்போ என்ன கண்டுப்பிடிக்க முடியுமா முடியாதா... " பொறுமை இழந்து ஸ்ரீதரன் கடுப்புடன் வினவ

"உடனே வந்துருமே மூக்குக்கு மேல கோவம்... டூயிட்டில இருக்கேன் மச்சான்... நீ போட்டோ அனுப்பி விடு... நான் பாத்துக்கிறேன்... " என்று விகாஷ் கூற இனி தன் நண்பன் பார்த்துக் கொள்வான் என்ற நிம்மதியில் தனது வேலைகளை கவனித்தான் ஸ்ரீதரன்....

*************

மாலை வீட்டிற்கு வந்த சாம்பவியோ பரபரப்பாக தனது உடைகளையும் பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டிருக்க அதை மேற்பார்வை செய்துக் கொண்டிருந்த நாச்சியார்

"அடியே சின்னக் கழுதை என்ன எல்லாமே சுடிதாரா வைச்சுட்டு இருக்க... நாலு தாவணியும் எடுத்து வைச்சுக்கலாம்ல...." என்று கூறியவரை முறைத்தாள் சாம்பவி....

"ஆத்தா நான் என்ன கோவில் குளத்துக்கா போறேன் தாவணி எடுத்து வைச்சுக்க.... சுடிதார் போட்டாலே சென்னைல எல்லாரும் ஒரு மாதிரி பார்ப்பாங்க... இதுல தாவணி வேறயா... " என்று சிணுங்கிய தன் பேத்தியை ஆச்சரியமாகப் பார்த்தவர்

"அப்போ அங்கன இருக்குறப் புள்ளைங்க எல்லாம் என்னத்த போடுவாங்க... "

"அங்க எல்லாம் பேண்ட் சட்ட தான் ஆத்தா போடுவாங்க.." என்று சாம்பவி கூறியதும் இரண்டு கண்களும் வெளியே வரும் அளவிற்கு அதிர்ச்சியானார் நாச்சியார்....

"அடி ஆத்தி... நிசமாவா சொல்ற... புள்ளைங்களும் சட்டபேண்ட் தான் போடுவாங்களாக்கும்.... "

"அட ஆமா ஆத்தா அது தான் இப்போ பேஷன்... "

"என்னத்த பேசனோ... புள்ளைங்கனா அழகா புடவையோ தாவணியோ கட்டுனா தான் அழகு... அதுல தான் பாக்கவும் லட்சணமா இருப்பாங்க...." என்று கூறிய நாச்சியாரை சலிப்பாய் நோக்கினாள் சாம்பவி...

"அய்யோ உயிர வாங்காம கம்முனு போ ஆத்தா... "

"போடி சின்னக்கழுதை.... நல்லது சொன்னா எங்க கேக்குறவ... நாளைக்குப் போற எடத்துல மாமியார் கிட்ட நாலு அடி வாங்குனா தான் இந்த ஆத்தா அரும புரியும்..." புலம்பிக் கொண்டே அவர் வெளியே சென்று விட மறுநாளிற்கு தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் சாம்பவி....

கீழே பல பேச்சுக்குரல்கள் கேட்க யாரென்று சென்றுப் பார்த்தவள் தனது அத்தை அன்புசெல்வியைக் கண்டதும் "அத்தமா... " என்று ஓடிச்சென்று கட்டிக்கொண்டாள் சாம்பவி....

"சவிக்குட்டி.... " தனது செல்ல மருமகளின் கன்னத்தைக் கிள்ளி கொஞ்சியவர்

"என்னடா நாளைக்கு காலேசு டூரு போறியாமே.... அத்தகிட்ட ஒரு வார்த்தைக் கூட சொல்லல.... " வெள்ளந்தியாய் வினவியவரின் முகமோ வாடியிருந்தது...

"அத்தமா உங்க கிட்ட சொல்லாம நான் போவேனா... ட்ரஸ்லாம் பேக் பண்ணிட்டு நான் இப்போ உங்களப் பாக்கதான் கிளம்பலாம்னு இருந்தேன்.... அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க... " என்றவள் முகத்தில் நிமிடத்திற்கு நூறு பாவனைகளுடன் தனது அத்தையிடம் பேசிக் கொண்டிருக்க அவளையே வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வேஷ்வரன்....

"அதானே என்ற மருமகளாவது என்றகிட்ட சொல்லாமப் போறதாவது... " என்று பெருமையாக அன்புச்செல்வி கூற அதில் விஷ்வாவைத் தவிர அனைவரும் சிரித்தனர்....

"கொழுப்புப்பிடிச்சவ நம்மகிட்ட ஒரு வார்த்தையாவது சொல்றாளாப் பாரு.... இங்கன ஒருத்தன் நின்னுட்டு இருக்கேன் கொஞ்சமாவது கண்டுக்கிறாளா... அவளா வந்துப் பேசுற வரைக்கும் நம்ம பேசவே கூடாது.... " என்று மனதில் உறுதி எடுத்தவன் அங்கிருந்து நகர்ந்து வெளியே சென்று விட இவை எதையும் அறியாமல் தனது அத்தையிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள் சாம்பவி....

தொடரும்??

ஹாய் கண்மணிகளே❤... படிச்சுட்டு மறக்காம கருத்துக்களைச் சொல்லுங்க பட்டூஸ்❤❣...
 

Kani Mozhi

Moderator
அத்தியாயம் 4

"கொழுப்புப்பிடிச்சவ நம்மகிட்ட ஒரு வார்த்தையாவது சொல்றாளாப் பாரு.... இங்கன ஒருத்தன் நின்னுட்டு இருக்கேன் கொஞ்சமாவது கண்டுக்கிறாளா... அவளா வந்துப் பேசுற வரைக்கும் நம்ம பேசவே கூடாது.... " என்று மனதில் உறுதி எடுத்தவன் அங்கிருந்து நகர்ந்து வெளியே சென்று விட இவை எதையும் அறியாமல் தனது அத்தையிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள் சாம்பவி....

சற்று நேரத்தில் கவலைத்தோய்ந்த முகத்துடன் எழிலரசும் முத்தரசும் உள்ளே வந்தனர்.... தன் மகன்களின் முகத்தை கூர்ந்துப் பார்த்த சுந்தரபாண்டியனுக்கு எதுவோ சரியில்லை என்று தோன்ற மகன்களுக்கு கண்ஜாடை காட்டிவிட்டு தனதறைக்கு செல்ல இருவரும் அவரைப் பின்தொடர்ந்தனர்....

அறைக்குள் நுழைந்ததும் "முத்து கதவ சாத்துப்பா... " அவர் கூறியதும் முத்தரசு கதவை சாற்றினார்....

"இப்போ சொல்லுங்கப்பா என்ன
பிரச்சனை.... ஏன் இரண்டு பேரு முகமும் வாடிப் போய் கிடக்கு.... " என்று சுந்தரபாண்டியன் வினவ தந்தையின் கேள்வியில் ஒரு நிமிடம் திகைத்தாலும் இருவரும் முகத்தில் எதையும் காட்டாமல்
ஒன்றும் அறியாதது போல் அவரை ஏறிட்டனர்....

"என்னங்கய்யா சொல்றீங்க.... நாங்க நல்லாதான் இருக்கோமுங்கய்யா...." என்று சமாளித்த தன் மகன்களைப் பார்த்து சிரித்தார் சுந்தரபாண்டியன்...

"எப்பா எழிலு முத்து நானு உங்கள என் மார்லயும் தோளுலயும் போட்டு வளத்தவன்.... பெத்தவனுக்கு தெரியாதா புள்ளங்க மனசப்பத்தி... இரண்டு பேரும் மத்தவங்களுக்காக சிரிச்சாலும் இரண்டு நாளா யோசனையாவே இருக்கீங்க... என்ன விசயமுன்னு சொல்லுங்க.... இல்ல இவருக்கு வயசாயிப் போச்சு இந்தக் கிழவங்கிட்ட ஏன் சொல்லனும்னும் இருக்கீங்களா... " என்ற தந்தையின் வார்த்தைகளில் பதறிய இருவருக்கும் இதற்கு மேல் மறைத்துப் பயனில்லை என்று தோன்ற தம்பியைப் பார்த்து தலையாட்டினார் எழிலரசு....

"அய்யா இந்த வருஷம் விளைச்சல் ரொம்ப ரொம்ப கம்மியா வந்துருக்குதுங்கய்யா... அதுலயும் பாதி பூச்சிப் பிடிச்சு வீணாப்போச்சுங்கய்யா.... அதுவுமில்லாம நம்ம கோவிலுக்கு கிழக்கால ஏதோ பேக்டரி கட்டப்போறாங்களாம்... அதனால அந்த இடம் அந்த கம்பனிகாரங்களுக்கு சொந்தமாம் இனிமே நம்ம அங்க விவசாயம் பண்ணக்கூடாதுனு நோட்டீஸ் அனுப்பிருக்காங்க அய்யா... " கவலை தோய்ந்த முகத்துடன் முத்தரசு கூற அதிர்ச்சியில் பேச இயலாது சிந்தனையில் ஆழ்ந்தார் சுந்தரபாண்டியன்...

"என்னலே சொல்ற... கோவிலுக்கு கிழக்கால தான் பூமி நல்ல விளைச்சலத் தருது... நல்ல விளையற நிலத்துல கம்பேனி கட்டிப் போட்டா அப்போ விவசாயத்துக்கு என்ன பண்ணுறது.... ஏற்கனவே மண்ணுல உயிர்ப்பில்லாம தான் பாதிக்கு பாதி விளைச்சலு... இதுல நல்ல நிலமும் போச்சுனா நம்ம எங்கனப் போய் விவசாயம் பண்ணுறது.... "

"அதாங்கய்யா எங்களுக்கும் புரில... " முத்தரசு வருத்தத்துடன் கூற

"அய்யா ஆனா அந்த நிலம் மட்டும் கைமீறிப் போச்சுனா நம்ம ஊரோட பூமியே வீணாப்போயிருங்கய்யா.... கண்ட கழிவுகளக் கொட்டி மண்ணைப் பாழாக்கிருவாங்க.... " என்று நிதர்சனத்தை எழிலரசு உரைக்க மற்ற இருவரும் செய்வதறியாமல் திகைத்தனர்...

*************

மாலை ஒரு முறை ரவுண்ட்ஸ் முடித்துவிட்டு தனதறைக்கு சென்றுக் கொண்டிருந்த ஸ்ரீதரனைக் கண்ட ஒருவர் " ஸ்ரீதரா... எய்யா ஸ்ரீதரு... " என்று உரக்க கத்தி அழைக்க அந்த சத்தத்தில் திரும்பிப் பார்த்தான் ஸ்ரீதரன்...

அவரின் அருகில் சென்றவன் "சொல்லுங்க... " என்று கூறியதும் அவனின் கைகளைப் பிடித்துக் கொண்ட அந்த பெரியவர்

"யய்யா நல்லாயிருக்கியாய்யா.... பத்மாம்மா நல்லாருகாங்களா... அப்படியே உங்கப்பாவ உரிச்சுச் வெச்சாப்ல இருக்கய்யா.... " என்று அவனின் தலையை தடவியவர்

"என்னய்யா என்ன அடையாளம் தெரிலயாக்கும்... நானும் அக்கரைசெங்கப்பள்ளிக்காரன் தான்... என்ற மகள இந்த ஊர்லதேன் கட்டிக் கொடுத்தோம்... பிரசவத்துக்கு இங்கனதான் சேர்த்திருக்கோம்.... " என்று அவர் பாட்டுக்கு பேசிக் கொண்டிருக்க அக்கரைசெங்கப்பள்ளி என்ற வார்த்தையைக் கேட்டதும் திகைத்து நோக்கினான் ஸ்ரீதரன்...

பழைய நினைவுகள் வந்து தாக்க கண்களை இறுக்க மூடி மனதை ஒருநிலைப்படுத்தி சமன் செய்தவன் "என் பேரு ஸ்ரீதரன் தான் ஆனா நீங்க நினைக்குற ஸ்ரீதரன் நான் கிடையாது... அக்கரைசெங்கப்பள்ளிங்கற ஊரப்பத்தி நான் இதுவரைக்கும் கேள்விப் பட்டது கூட இல்ல.... " என்று கூறியவன் அதற்கு மேல் அங்கு நில்லாமல் விறுவிறுவென்று சென்றுவிட எதுவும் புரியாமல் முழித்தார் அந்த பெரியவர்....

தன் அறைக்கு வந்தவனின் மனமோ ஒரு நிலையில்லாமல் தவிக்கப் பழைய நினைவுகள் கண்முன்னே நிழலாடியது ... கண்களில் வழிந்தக் கண்ணீரைத் துடைத்தவனுக்கு இதே மனநிலையில் தன்னால் யாருக்கும் மருத்துவம் பார்க்க முடியாது என்று தோன்றிட வீட்டிற்கு கிளம்பினான்....

வீட்டிற்குள் நுழைந்த மகனை ஆச்சரியமாக நோக்கிய பத்மா " என்ன கண்ணா அதிசயமா இருக்கு.... இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட.... " என்று வினவ

"கொஞ்சம் டயர்ட்மா அதான் வந்துட்டேன்..." என்று சோர்வுடன் கூறிவிட்டு தனதறைக்கு சென்றுவிட்டான் ஸ்ரீதரன்.... மகனின் முகத்தைக் கண்ட பத்மாவிற்கு எதுவோ சரியில்லை என்று தோன்ற மேலே செல்லும் மகனை குழப்பத்துடன் நோக்கினார்....

"என்னய்யா என்ன அடையாளம் தெரிலயாக்கும்... அக்கரைசெங்கப்பள்ளிக்காரன் தான்..." பால்கனியில் நின்றவனின் காதில் அப்பெரியவரின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலிக்க அவ்வூரின் பேரைக் கேட்டதும் தன்னால் வரும் கோவத்தைக் கட்டுப்படுத்தும் வழியறியாது அங்கிருந்த கைப்பிடியில் ஆத்திரம் தீரும் வரை குத்தினான் ஸ்ரீதரன்....

கைகளில் ரத்தம் வழிந்தோடியப் போதும் அதனைச் சிறிதும் கண்டுகொள்ளாமல் அக்கரைசெங்கப்பள்ளி என்று கூறிக் கொண்டே மீண்டும் குத்திக் கொண்டிருக்க மகனுக்காக இஞ்சி தட்டி டீ போட்டுக் கொண்டு மேலே வந்த பத்மா அவனின் செயலில் அதிர்ந்து நின்றார்...

"ஸ்ரீ.... என்ன காரியம் பண்ணுற... " ஓடி சென்று மகனின் கைகளைப் பிடித்துக் கொண்டே பத்மா கோபமாக வினவ

"ம்மா என்ன விடுங்க.... "

"ஷ் அமைதியா இரு.... " என்று அதட்டியவர் தன் புடவையின் முந்தானையைக் கிழித்து அவனின் கையில் நிற்காமல் வழிந்தோடும் ரத்தத்தை நிறுத்துவதற்காக அழுத்திக் கட்டிவிட்டு மகனை அழுத்தமாக நோக்க அவரின் பார்வை வீச்சு தாங்க முடியாமல் தலைகுனிந்தான் ஸ்ரீதரன்...

"ம்மா என்னால முடிலம்மா... அந்த ஊர் பேரக் கேட்டாலே நமக்கு நடந்த அநியாயம் தான் நியாபகம் வருது.... " மகனின் சோர்ந்த முகத்தை கையிலேந்திய பத்மா

"கண்ணா அந்த ஊருக்கும் நமக்குமான பந்தம் இருபது வருசத்துக்கு முன்னாடியே முடிஞ்சுருச்சு.... பழச நினைச்சு இப்படி உன்ன நீயே கஷ்டப்படுத்திக்காதப்பா... இப்போ அம்மாவுக்கு நீ மட்டும் தான் இருக்க.... " என்று கண்ணீர் மல்க கூறிய அன்னையைக் கட்டிக் கொண்டான் ஸ்ரீதரன்....

"ம்மா ஆனா என்னால முடிலம்மா... அந்த ஊர் பேரக் கேட்டாலே நம்ம கண்ணு முன்னாடி அப்பா செத்தது தான் நியாபகம் வருது... " என்றவனின் தலையைத் தடவிய பத்மாவினாலும் ஒருகட்டத்திற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் போக வெடித்து அழுக ஆரம்பித்தார் பத்மா...

அன்னையின் அழுகையில் சுதாரித்த ஸ்ரீதரன் " ம்மா சாரி மா தெரியாம பழச நியாபகம் பண்ணிட்டேன்... பிளீஸ்மா அழாதீங்கம்மா... " என்று அன்னையின் கன்னங்களில் வழிந்தோடிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டே ஸ்ரீதரன் கெஞ்ச மகனுக்காக தன்னை கட்டுப்படுத்தினார் பத்மா...

"மா போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க..." என்றவன் அன்னையை அழைத்துக் கொண்டு அவரின் அறையில் படுக்கவைத்து விட்டு வந்தான்...

தனதறைக்கு வந்தவன் இனி எக்காரணம் கொண்டும் அவ்வூவரையும் அவ்வூரின் நினைவுகளையும் நினைக்கக் கூடாது என்று உறுதி எடுத்தவன் பால்கனியில் சென்று சற்று காற்றோட்டமாக நிற்க மனம் சற்று லேசாகியது....

********************

ஆதவன் தன் செங்கதிர்களைப் பூமியெங்கும் படரச் செய்ய காரிருள் விலகி காலைப்பொழுது அழகாகப் புலர்ந்தது...

காலையில் சீக்கிரமே கல்லூரிக்கு வரச் சொல்லி இருந்ததால் அதிகாலையிலேயே அனைவருக்கும் முன் எழுந்த சாம்பவி பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருக்க

"அடியே சின்னக்கழுதை என்ன இம்புட்டு சீக்கிரமா எந்திரிச்சுட்ட... " கொட்டாவி விட்டுக் கொண்டே கேட்கும் தன் ஆத்தாவை பார்த்த சாம்பவி

"காலங்காத்தாலயே என்ன வம்பிழுக்க வந்தாச்சா ஆத்தா... போங்கப் போய் குளிச்சு உங்க பூஜை வேலையப் பாருங்க.... " என்றுவிட்டு கிளம்பிக் கொண்டிருந்தாள்...

"இக்கும் பொல்லாத ஊருக்குப் போனாலும் போற ரொம்பத்தான் பண்ணிகிட்டு திரியுற... அடியே சின்னக்கழுதை இந்தா இருக்குற சென்னைக்கு இம்புட்டு பந்தா ஆகாதுடி..." தாடையில் இடித்துக் கொண்டு கூறிக் கொண்டே நாச்சியார் அங்கிருந்து செல்ல

"ஆத்தா வரவர உங்களுக்கு வாய் ஜாஸ்தியாயிருச்சு வந்து வைச்சுக்கிறேன் ... " என்றுவிட்டு தன் வேலைகளை கவனித்தாள் சாம்பவி...

அவள் கிளம்பி கீழே வந்ததும் அவளை கல்லூரிக்கு அழைத்துச் செல்வதற்காக நாச்சியார் அன்புச்செழியனை பாதி தூக்கத்தில் எழுப்பியிருக்க கடுப்புடன் எழுந்து வந்தான் அன்புச்செழியன்...

அனைவரும் பத்து தடவைக்கு மேல் அவளுக்கு பத்திரம் சொல்லிக் கொண்டிருக்க கடுப்பான சாம்பவி "அடயப்பா சாமி நான் என்ன தனியாவா போகப் போறேன்... காலேஜ் பஸ்ல ப்ரண்ட்ஸ்கூடயும் மிஸ்சுங்க கூடயும் போயிட்டு வரப் போறேன்... இதுக்கு ஏன் இவ்வளவு நேரம் அட்வைஸ் பண்ணுறீங்க... " என்று சிணுங்க

"உனக்கு என்னடி தெரியும்... இந்த காலத்தில பொம்பளப் புள்ளங்க வெளில போனாலே பெத்தவங்க வயித்துல நெருப்பக் கட்டிட்டு இருக்குறோம்... இதுல நீ வெளியூர் போகப் போற... எங்களுக்கு பயமா இருக்காதா ...." என்று தாயாய் தங்களின் நிலையை மீனாட்சி விளக்க அதைக் கேட்ட அன்புசெழியன் விழுந்து விழுந்து சிரித்தான்...

"அம்மா அந்த பயமெல்லாம் புள்ளைங்களுக்கு மா... நீங்க பெத்தது புள்ள இல்ல சரியான தொல்லை... இவலாம் எட்டு ஊரயே விலைப் பேசி வித்துட்டு வந்துருவா.. நீங்க இவளுக்கு போய் இவ்வளவு பயந்துட்டு இருக்கீங்க... சிரிப்புக் காட்டாம கம்முனு போங்க... " என்று செழியன் கூறியதும் அதை ஆமோதித்து அனைவரும் சிரிக்க கடுப்பானாள் சாம்பவி....

"அப்பாரு பாருங்க அண்ணனை... " என்று சிணுங்கிய பேத்தியின் தலையை தடவியவர்

"என்ற பேத்திய ஏதாவது சொல்லனா உனக்கும் உங்க அப்பத்தாவுக்கும் பொழுதுப் போகாதே... " என்றவர்

"அவங்க கிடக்குறாங்க விடு கண்ணு... நீ பாத்துப் பாத்திரமா போயிட்டு வா சாமி... " என்றவர் தனது சட்டையிலிருந்து பேத்திக்கு காசை எடுத்து நீட்ட

"அப்பாரு ஏற்கனவே அப்பா பெரிப்பா எல்லாரும் நிறைய பணம் கொடுத்துட்டாங்க... "

"பரவாயில்லை கண்ணு இதயும் வைச்சுக்கோ திடீர்னு தேவைப்பட்டா என்ன பண்ணுறது... " என்றவர் பேத்தியின் கைகளில் பணத்தை வைத்துவிட்டு செழியனுக்கு கண்காட்ட வெளியே சென்று வண்டியை எடுத்தான் செழியன்...

அனைவரிடமும் சொல்லிக்கொண்டு வண்டியில் அமர்ந்த சாம்பவி " அண்ணா அத்த வீட்டுக்கு போ... அத்தகிட்ட சொல்லனும்... " என்று கூற செழியன் வண்டியை அத்தையின் வீட்டை நோக்கி விட்டான்...

மருமகளுக்காக வாசலிலேயே காத்திருந்த அன்புச்செல்வியை முறைத்துக் கொண்டே நின்றான் விஷ்வேஷ்வரன்...

"அம்மா அவளுக்கு இங்கன வர வழி தெரியாதா... எதுக்கு இப்படி வாசல்லயே நின்னுகிட்டு இருக்கீங்க.... உள்ள வாங்க முதல்ல... " என்று கூறிய விஷ்வேஷ்வரனை சிறிதும் கண்டுகொள்ளாமல் அன்புச்செல்வி வாசலையே பார்த்துக் கொண்டிருக்க தலையிலடித்துக் கொண்டு உள்ளே சென்றான் விஷ்வா....

வீடு வந்ததும் செழியன் வண்டியை நிறுத்த குடுகுடுவென்று இறங்கி தனது அத்தையிடம் ஓடினாள் சாம்பவி...

"வா கண்ணு... நான் உனக்காக தான் காத்திட்டு இருந்தேன்.... செழியா வாடா.." என்றவர் சாம்பவியை உள்ளே அழைத்துச் செல்ல அவர்களைப் பின்தொடர்ந்தாள் செழியன்....

வாசலில் சாம்பவி வந்த சத்தம் கேட்டதுமே சட்டென்று கொல்லைப் புறம் சென்று விட்டான் விஷ்வேஷ்வரன் ...

அவர்களை அமர வைத்துக் காலை உணவை ஆசைப்பொங்க அன்புச்செல்வி பரிமாற இருவரும் அத்தையின் கைமணத்தில் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிட்டனர்.....

இருவரும் சாப்பிட்டு முடித்து கைகழுவி விட்டு வர அப்போது தான் வருவது போன்று கொல்லைப்புறத்தில் இருந்து வந்தான் விஷ்வேஷ்வரன்...

" என்னங்க மாமா ஆளையே காணல... வீட்டுப் பக்கமும் நீங்க வரதில்ல.. " என்று அன்புச்செழியன் வினவ என்ன சொல்வதென்று திருதிருவென்று விழித்த விஷ்வா

"அதுவாலே பக்கத்து ஊருக்கு ஒரு வேலயா போயிருந்தேன்... அதுதான் அங்கன வர முடியல... " என்று பதிலளித்தவனின் விழிகள் அவ்வவ்போது சாம்பவியிடம் சென்று கொண்டிருக்க அதைக் கவனித்த செழியனும் அன்புச்செல்வியும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்...

"அத்தமா எனக்கு லேட் ஆகிருச்சு... " என்று சவி நினைவுருத்த

"வா சவிம்மா சாமி கும்பிட்டு விளக்கேத்திட்டு நீ கிளம்பு... " என்றவர் பூஜையறை நோக்கிச் செல்ல மற்ற மூவரும் அவரைப் பின்தொடர்ந்தனர்....

சவி விளக்கேற்றியதும் அன்புச்செல்வி சாமிக்கு தீபாராதனை காட்ட மூவரும் கண்மூடி கடவுளை வணங்கினர்...

"கடவுளே இத்தன நாளு உன்கிட்ட பெருசா எதுக்கும் வந்து நின்னது இல்ல... ஆனா இப்போ என்னோட சாம்பவிக்காக வந்து நிக்குறேன்... சாம்பவிக்கும் எனக்கும் நல்லப்படியா கல்யாணம் ஆகோனும்..." என்று மனதார பிராத்தித்தவனின் மனம் ஏனோ நிம்மதியில்லாமல் தவித்தது...

"எந்தங்கச்சி மேல எங்க மாமா உயிரே வைச்சுருக்காரு... அவங்களுக்கு சீக்கிரம் ஊர்மெச்ச கல்யாணம் நடக்கனும் கடவுளே... எல்லாரும் நல்லா இருக்கோனும்..."

"ஈஸ்வரா எல்லா துன்பத்துலயும் இன்பத்துலயும் துணைநிக்குற எம்பெருமானே... என்ற வீட்டுல கூடிய சீக்கிரம் நல்ல விசேஷம் நடக்கனும்... அதுக்கு உங்க ஆசி வேணும்... " என்று மனமுருக வேண்டிய அன்புச்செல்வி தீபாராதனையை எடுத்துக் காட்ட மூவரும் கண்களில் ஒற்றிக் கொண்டனர்...

"சரி வா சவி நேரமாச்சு கிளம்பலாம்.... " என்று செழியன் கூற சவிக்காகச் செய்து வைத்திருந்த திண்பண்டங்களை அவளின் பையில் வைப்பதற்காக செழியனுடன் அன்புச்செல்வி வெளியே செல்ல விஷ்வாவும் சவியும் தனித்திருந்தனர்...

சிறிது தயக்கத்துடன் விஷ்வாவை ஏறிட்டவள் " போயிட்டு வரேன் மாமா... " என்று திணறிக் கூறிவிட அவளையே வைத்த விழி வாங்காமல் நோக்கினான் விஷ்வேஷ்வரன்...

அவன் எதுவும் கூறாமல் அப்படியே நின்று கொண்டிருக்க செழியன் அழைக்கும் சத்தம் கேட்டு அங்கிருந்து நகர்ந்தாள்....

சரியாக அவள் வாசலைக் கடக்கும் போது "பாத்து போயிட்டு வா புள்ள..." என்று விஷ்வா கூற சட்டென்று திரும்பி அவனை நோக்கினாள் சாம்பவி... அவன் கண்கள் வெகு நேரமாக எதையோ உணர்த்த முயற்சித்துக் கொண்டிருக்க அது என்னவென்று அறியாமல் குழம்பித் தவித்தவள்

"என்கிட்ட ஏதாவது சொல்லோனுமா மாமா... " என்று சவி வினவியதில் கடுகு போட்டால் பொறிந்துவிடும் என்பது போல் இருந்தவனின் முகம் புன்னகையைத் தத்தெடுத்தது...

ஆமாம் என்று தலையாட்டியவன் "ஆனா இப்போ சொல்ல மாட்டேன்.... நீ ஊருக்கு போயிட்டு வந்ததும் சொல்றேன்... நீ பத்திரமா போயிட்டு வா புள்ள...." என்று விஷ்வா கூற சரியென்று தலையாட்டிவிட்டு கிளம்பினாள் சாம்பவி....

அவளை வழியனுப்பி வைத்துவிட்டு உள்ளே வந்த அன்புச்செல்வி மகனின் முகத்தில் குடிக்கொண்டிருக்கும் வருத்தத்தைக் கண்டு மெல்ல தனக்குள் சிரித்தவர் " கண்ணா இன்னும் கொஞ்ச நாள் தான்.. அப்பறம் என்ற மருமக உரிமையா நம்ம வீட்டுக்கு வந்துருவா... " என்று கூற முகத்தில் தோன்றிய வெக்கத்தை அன்னையிடமிருந்து மறைக்கும் வழிதெரியாமல் அங்கிருந்து ஓடிவிட்டான் விஷ்வேஷ்வரன்...

மகனின் வெக்கத்தைக் கண்டு கொண்ட அன்புச்செல்வி சிரித்துக் கொண்டே தனது வேலையைப் பார்க்க செல்ல விஷ்வாவிற்கோ இன்னும் கொஞ்ச நாட்களில் சாம்பவி தன் மனைவியாகி விடுவாள் என்பதே வானில் பறப்பது போலிருக்க சந்தோஷத்தில் மிதந்துக் கொண்டிருந்தான்...

சவியைக் கல்லூரியில் இறக்கி விட்ட செழியன் சட்டையிலிருந்துப் பணத்தை எடுத்து நீட்ட "டேய் அண்ணா அதான் வீட்டுல எல்லாரும் கொடுத்தாச்சே... நீயுமாடா... இந்தா இருக்குற சென்னைக்கு போறதுக்கு எதுக்கு இவ்வளவு பணம்... இந்த பணத்தெல்லாம் பார்த்து என்ன யாரும் கடத்திட்டு போகாம இருந்தா சரி... " என்ற தங்கையின் தலையில் கொட்டியவன்

"உன்னலாம் கடத்திட்டு போனா கடத்திட்டு போறவன் தான்டி பாவம்... பேசி பேசியே அவன கொன்றுவ... " என்று கிண்டல் செய்த தன் அண்ணனை தீயாய் முறைத்தாள் சாம்பவி...

தங்கையின் முறைப்பில் சிரித்தவன் "ப்ரண்ஸோட போற... போற இடத்துல நீ ஏதாவது பிடிச்சப் பொருள் பார்க்கும் போது காசு ஒரு குறையா இருக்கக்கூடாது... அதான் எல்லாரும் கொடுத்துவிடுறோம்... " என்று பக்குவமாய் கூறிய அண்ணனைக் கட்டிக் கொண்ட சாம்பவி

"வரேன் அண்ணா... " என்று சிரித்துக் கொண்டே கூற

"பத்திரமா போயிட்டு வா... எங்கயும் தனியா போகாத... எப்பவும் போனை கைலயே வைச்சுக்கோ சவி... ஏதாவதுனா உடனே எனக்கு கூப்பிடு சரியா..." என்று பொறுப்பான அண்ணனாய் கூறியவனிடம் தலையாட்டிவிட்டு உள்ளே ஓடினாள் சாம்பவி...

தங்கை உள்ளே செல்லும் வரை நின்றுப் பார்த்த செழியன் அவள் உள்ளே சென்றதும் பைக்கை முறுக்கிவிட்டு வீட்டிற்கு கிளம்பினான்....

*************

எழும் போதே தலை விண்ணென்று வலிக்க தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தான் ஸ்ரீதரன்... சட்டென்று காபி வாசம் மூக்கை துளைக்க நிமிர்ந்து பார்த்தவனின் முன்னால் கையில் காபிக்கோப்பையுடன் புன்னகை முகமாய் நின்று கொண்டிருந்தார் பத்மா...

"குட்மார்னிங் ஸ்ரீ கண்ணா... காபி குடிச்சுட்டு ரெடியாகி வாப்பா.. அம்மா டிபன் ரெடி பண்ணுறேன்... " என்று சிரித்த முகமாக கூறிக் கொண்டு செல்லும் அன்னையை ஆழ்ந்து நோக்கியவனுக்கு அவர் பழையதை மறக்க முயலுகிறார் என்று புரிய தானும் இனி அந்நினைவுகளைக் கனவில் கூட நினைத்துப் பார்க்கக் கூடாது என்று உறுதியெடுத்தவன் காபியைப் பருக தலைவலிக்கு இதமாக இருந்தது...

காபி குடித்து முடித்து குளித்துக் கிளம்பி கீழே வந்த மகனிற்கு சுடசுட இடியாப்பமும் குருமாவும் பரிமாறினார் பத்மா... வழக்கத்தை விட அதிகம் சாப்பிட்ட ஸ்ரீதரன் அன்னையிடம் சொல்லிக் கொண்டு மருத்துவமனைக்கு காரைக் கிளப்பினான்...

காரை பார்க் செய்து விட்டு உள்ளே வந்தவனுக்கு அனைவரும் காலை வணக்கம் சொல்ல தலையாட்டிவிட்டு தனதறைக்கு சென்றவன் தனது பேக்கை வைத்துவிட்டு நிமிர செவிலியர் அவசரமாக ஓடி வந்தார்...

கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த செவிலியர் " டாக்டர் எமர்ஜென்சி கேஸ்.... பஸ் ஆக்சிடண்ட் ... ஒரு பொண்ணுக்கு மட்டும் தலைல சிவியர் இன்ஜூரி டாக்டர்..." என்று படபடப்பாக அவர் கூற பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டே அவருடன் விரைந்தான்...

மாஸ்க் அணிந்துக் கொண்டே எமர்ஜென்சி வார்ட் கதவை திறந்து உள்ளே செல்ல ரத்தம் வழிந்த முகத்துடன் வாடிய மலராய் படுத்துக் கொண்டிருப்பவளைக் கண்டவனின் மனமோ அதிர்ந்து துடிக்க விழிகள் இரண்டும் தன்னால் கண்ணீர் சுரக்க சிலையாய் திகைத்து நின்றான் ஸ்ரீதரன்...

தொடரும்??

ஹாய் கண்மணிகளே❤... படிச்சுட்டு மறக்காம கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்❤❣...
 
Status
Not open for further replies.
Top