எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வலி, வலிவழி புரியும்!- கதைத் திரி

NNK34

Moderator
மருத்துவமனையில் கண்களில் வழியும் இன்பவெள்ளத்துடன் ஓய்ந்து படுத்துக் கிடந்தாள், தமிழினி. நினைவுகள் சில வருடங்களுக்கு முன் இதே மருத்துவமனையில் சுற்றத்தாரின் கதறலுக்கு காரணமாக படுத்திருந்தது நினைவு வந்தது.

காரணம், தான் காதலித்தவன் நடத்தையில் பூஜ்ஜியம் பெற்றவன் என தெரியவந்த பின் உருவான, தாங்க முடியாத வலி… தமிழ்வேந்தன் இதழினியின் ஒற்றை வாரிசே தமிழினி. திருமணம் முடிந்து ஐந்து வருடம் குழந்தையின்றி தவித்து, ஊர் பேச்சு உலகப்பேச்செல்லாம் வாங்கி, ஏதோ ஜென்மத்தில் செய்த புண்ணியமாக பெற்ற பிள்ளையே தமிழினி.

பாசம் மொத்தமும் மகளுக்கே என கொட்டி கொட்டி வளர்த்த மகளுக்கு நல்லொழுக்கமும் பண்புகளும் கற்றுத் தந்தே வளர்த்தனர். மகள் பேச்சுக்கு வீட்டில் மறுபேச்சில்லை. அவளது காதலும் அப்படியே. கல்லூரியின் இரண்டாம் ஆண்டில் துளிர்விட்ட காதலை மூன்றாம் ஆண்டின் இறுதியில் உணர்ந்தவள் உடனேயே அதை தன் வீட்டிலும் கூறி இருந்தாள்.

'படிப்பை முடி உன் இஷ்டம் போல் செய்கின்றோம்' என புன்னகையுடன் கூறிய பெற்றோரை கட்டியணைத்து மகிழ்ந்தாள். ஆனால் அன்று..! அவளது கல்லூரி வாழ்வின் இறுதியாண்டில் அவளது காதலனின் மறுபக்கம் தெரிய வந்தது. அடிக்கடி தன்னிடம் அத்துமீற முயன்றவனை திட்டி அடக்கியவள் பின் காதல் வார்த்தைகள் பேசிவிட்டு செல்வது வழமையாக துவங்கியது.

அன்று ஆடவன் அலைப்பேசியில் அவனது மற்ற காதலியுடன் கொஞ்சி மகிழ்வதையும் அந்தரங்க பேச்சுக்களையும் கேட்டு இதயமே வெடித்து விடுவது போல் துடிதுடித்தாள் பெண். அதன் விளைவாக அவளெடுத்த ஆயுதம், தற்கொலை…

இரத்த வெள்ளத்தில் கிடந்த மகளை கண்டு தலையிலும் மார்பிலும் மாறி மாறி அடித்துக் கொண்ட பெற்றோர் மகளை தூக்கிக் கொண்டு மருத்துவமனை சென்றனர். சில மணிநேரச் சிகிச்சைக்கு பின் தமிழினி உயிர்பிழைத்த செய்தியை கூறிவிட்டு மருத்துவர் சென்றார். அனைத்து சம்பிரதாய பணிகளும் முடியவே மகளை வீட்டிற்குக் கூட்டி வந்தனர்.

உயிர்ப்பற்று விட்டத்தை வெறிக்கும் மகளை கண்டு நொந்து கரைந்தார், வேந்தன். மகளின் நிலை அந்த பாசமிகு தந்தையை மிகவும் பாதித்தது. அனைத்தையும் மௌனமாக கவனித்துக் கொண்டிருந்த இதழினி மகளிடம் இதுகுறித்து பேசவேண்டும் என முடிவானார்.

அன்றிரவு மகளின் அறைக்குள் இதழினி நுழைய, அன்னை வந்ததை கூட உணராது விட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தாள், பாவை. மகளின் அருகே வந்தவர், அவள் கரத்தில் தன் கரம் வைக்க அன்னையை திரும்பிப் பார்த்தாள். கண்களில் நீர் கோர்த்துக் கொள்ள, "அ..அம்மா.." என அன்னையை பாய்ந்து அணைத்துக் கொண்டாள்.


மகளின் தலையை பரிவுடன் மௌனமாய் கோதிவிட்டார். " அ.. அவன் சரியான ஃப்ராடு ம்மா.. நா.. நா.. ஏமாந்துட்டேன்.. எ.. என் காதல் தோத்துடுச்சு. யா.. யாரோ ஒரு பொண்ணு கூட அ.. அவன் பேசினது.. ச்சை! நினைக்கவே அருவருப்பா இருக்கு ம்மா.." என கூறி கதறிய மகளின் பேச்சு அத்தனையையும் மௌனமாக கேட்டார்.

" என் காதல் தோத்து போச்சுன்னு கூட அவ்வளவு வருத்தமா இல்ல ம்மா. இ.. இப்படி ஒரு கேடுகெட்டவனை போய் காதலிச்சுடேனேனு அவமானமா இருக்கு. இவன கரம்பிடிக்க உங்க கிட்ட பேசினத நினைச்சு அசிங்கமா இருக்கு.. நா.. நா எவ்வளவு பெரிய தப்பு பண்ணிருக்கேன்" என மேலும் கதறியழுதாள். மகளின் முகம் நிமிர்த்தி கண்ணீரை துடைத்துவர் " அதுக்கு தற்கொலை ஒரு முடிவா பாப்பா?" என கேட்க பாவை கூனிக் குறுகிப் போனாள்.

"அப்பாவும் அம்மாவும் உனக்கு இது தான் சொல்லி தந்தோமா பாப்பா?" என்ற அன்னையின் குரலில் துளியும் கோபமில்லை. சாந்தமாக ஒலித்தவர் குரலில் மேலும் வெட்கிய தமிழினி " சாரி ம்மா" எனக் கூற மகளை அருகில் அமர்த்தி தோளில் சாய்த்துக் கொண்டு தட்டிக் கொடுத்தார்.
" பாப்பா.. அப்பாவும் நானும் நீ எது கேட்டாலும் அது உனக்கு தேவையானதுனு புரிஞ்சு தான் ஒவ்வொன்னும் சம்மதிச்சோம். அது ஏன் தெரியுமா?" என்ற அன்னையை தமிழ் கேள்வியாக நிமிர்ந்து பார்த்தாள்.

" இருக்கி பிடிக்கும் போது தான் டா பாப்பா அதை தான்டி பார்த்தா தான் என்னனு எண்ணம் வரும். முடியாது முடியாதுனு முட்டுக்கட்டை போடாம அதில் உனக்குள்ள நல்லது கெட்டத சொல்லி முடிவை உன் கையில் கொடுக்கும் போது நாங்க உன்மேல் வைக்கும் அந்த நம்பிக்கையே உன்ன பாத மாறி போகவிடாம தடுக்கும். நம்ம மேல நம்பிக்கையா இருக்கும் பெத்தவங்கலை ஏமாத்தக் கூடாதுனு மனசு வரும். அதை தான் நாங்களும் பண்ணிணோம். அதை நீயும் புரிஞ்சு தான் நடந்த, இத்தனை நாள் வரை.." என்றவர் தன்னையே வருத்தமாக பார்க்கும் மகளை திரும்பிப் பார்த்தார்.


அவள் தலை கோதியவர் " அம்மாக்கு கல்யாணம் ஆகி அஞ்சு வர்ஷம் கழிச்சு தான் நீ வந்தடா.. அம்மா வாங்காத பேச்சில்லை. உங்கப்பாக்கு இரண்டாம் கல்யாணம் பண்ணிவைக்குமளவு பேச்சு போச்சு. காதலன் தப்பானவன்னு தெரிந்ததையே தாங்கமுடிலனு சொல்றியே கணவனுக்கு இன்னொரு பெண் பார்க்குறாங்கனு தெரியும்போது எனக்கு எப்படி இருக்கும்? அவ்வளவு வலி.. ஆனா உங்கப்பா அப்போ எனக்கு துணையாக இருந்தார்.. அன்னிக்கு இருந்த வலிக்கு, நான் தற்கொலை பண்ணிருந்தா?" என கூறி நிறுத்தினார். மீண்டும் தொடர்ந்தவர் " எது நடந்தாலும் அது நல்லதுக்கு‌ தான்னு நினை இதழினு அன்னிக்கு உங்கப்பா எனக்கு சொன்னதை தான் நான் உனக்கு சொல்றேன். காதலனா இருக்கும் போதே இது தெரிஞ்சுடுச்சு. நாளை உன் கணவனா மாறின பிறகு தெரிஞ்சிருந்தா? உன் பிள்ளைகளுக்கு அவன் அப்பாவா ஆனா பிறகு தெரிஞ்சிருந்தா? அதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை தானே?" என்று கேட்க அன்னையை வேதனையாக பார்த்தாள்.

" இரண்டு வருஷ காதல் பொய்ச வலியையே தாங்கமுடியாம சாக போற‌ நீ, நாளை எப்படி வாழ்க்கைய எதிர்கொள்வ? உனக்கு ஏதாவது ஆகி அந்த வலி தாங்கமுடியாம‌ எங்களுக்கும் எதாவது ஆகியிருந்தா?" என்ற அன்னையை அதிர்ந்து பார்த்தவள் "அம்மா!" என்றாள். " ஒரு உயிரோட வலி உனக்கு இப்ப புரியாது பாப்பா.. நாளை நீயும் ஒரு தாயா நரகவலியிலும் சுகம் தேடி ஒரு பிள்ளை பெருவ பாரு, அப்போ புரியும். வலி வலியின் வழிதான் புரியும்." என்றார்.


மகளின் தலைகோதி முத்தமிட்டவர்‌ " எல்லாதயும் மறந்து வா.. உனக்கான வாழ்க்கை காத்திருக்கும்" என கூறிச் சென்றார். அன்னையின் பேச்சில் தன் தவறை உணர்ந்து அன்னை கூறியபடி எழுந்து வந்தாள்.. அவளுக்கான வாழ்வை வாழ! அதன் பரிசாய் அவளின் கடந்தகாலம் யாவும் அறிந்தும் அவளை மனமார ஏற்ற கணவனும் அவனது காதலில் உதித்த குழந்தையும்.. இதோ வலிகளின் முடிவில் தற்போது தன் பிள்ளையை பெற்றெடுத்துள்ளாள்.

யாவரும் தாயையும் சேயையும் நலம் விசாரித்துச் செல்ல, பேரக் குழந்தைக்கான பணிவிடை செய்ய இதழினி வந்தார். அன்னையை கண்டு புன்னகைத்தவள் "ம்மா.." என அருகில் அழைக்க அவரும் வந்தார். அன்னையின் கரத்தை பற்றிக் கொண்டவள்‌ சாந்தமான புன்னகையுடன் " வலி வலிவழி புரியும்!" என கூற மகளின் கூற்று புரிந்த தாயவள் ஆனந்த புன்னகையுடன் மகள் நெற்றியில் முத்தமிட்டார்.

-ஆண்டாள் வெங்கட்ராகவன்
(Inspired by Janani Naveen)

உங்கள் பொன்னான கருத்துக்களை தெரிவிக்க🥳👇
 
வலி பொது அனைவருக்கும்
வலியில் இருந்து வெளிவரும்
வழி தெரிந்து விட்டால்
வாழ வழி கிடைக்கும்.......
வாழ்க வளமுடன்.....
வாழ்த்துக்கள் தோழி.... 💐💐👏👏👏👍👍👍
 
Top