“போய் சாத்விகாவ அழைச்சிட்டு வா! சர்வேஷ் ஹோட்டலுக்கு போயிட்டான்”
இப்படியே இவர்கள் நேரம் செல்ல, ஆரவாரத்தோடு ஹோட்டலுக்கு அழைத்து வரப்பட்டாள், சாத்விகா. அதன் பின் ஒப்பனை கலைஞர்கள் அவளின் நேரத்தை களவாடிச் சென்றனர். சரியாக சுப நேரத்தில் அரக்கு நிற பட்டுடுத்தி, வைரத்தால் அலங்கரிக்கப்பட்டு, நீண்ட ஜடை முழுவதும் கெட்டியான மல்லி பூவே சூடி, மலைக்குன்றை போல் குவிந்த வயிற்றை ஒற்றை கையில் தாங்கிப் பிடித்தவளின் மற்றக் கையை ஜனனி தாங்க, மறுபுறம் ராகவி தாங்க அன்ன நடையிட்டு மேடைக்கு வந்தவள், அனைவருக்கும் பொதுவாக வணக்கம் வைத்து அமர்ந்து கொண்டாள்.
அவள் தூரத்தில் வரும் பொழுதே சர்வேஷ் மனைவியைக் கண்டு கொண்டான்.
தங்க ஜரிகையில் நெய்யப்பட்ட பட்டோ, உடல் முழுவதும் ஜொலித்த வைரமோ, தலையில் சூடிய மணம் கமழும் மலரோ, தீட்டப்பட்ட அலங்காரமோ எதுவுமே அவள் இதழ்கள் பிரிந்து சிந்திய புன்னகைக்கும், நாணத்தில் சிவந்த கன்னங்களுக்கும், மலர்ந்திருந்த கண்களுக்கும், வெட்க குறுகுறுப்பில் விகசித்திருந்த அவள் முகத்துக்கும் ஈடு இணை இல்லை. அத்தனை கண்ணும் அவள் மீது தான். தன் மனைவி இத்தனை அழகா என்று அந்த கண்களில், அந்த புன்னகையில், பெண்மையின் நளினத்தில், சர்வேஷ் கண்டு கொண்டான்.
அப்படியே அவனையும் அழைத்து சாத்விகா அருகில் அமர வைத்தனர்.
காலையில் நெற்றி முத்தத்தோடு தன்னை விட்டு அகன்று சென்றவனை இப்போதுதான் பார்க்கிறாள். வெள்ளையும் அல்லாத ஆஃப் வைட் நிறமும் அல்லாத தங்க நிற பட்டு வேட்டி சட்டையும், மேல் நோக்கி வாரி கழுத்தில் வழிந்த பிடரி முடியும், முறுக்கி விட்ட மீசையும், அவனுக்கு சிரிக்க தெரியும் என காட்டும் இதழ்களை முகத்தோடு மறைக்கும் தாடியும், நெரித்து தடித்த புருவமும், ஒற்றை கையில் வைரக் காப்பு, அடிக்கடி அதை முறுக்கி விடும் அழகும், நெற்றியில் சந்தன கீற்றுமாக, அசரடிக்கும் ஆண்மகனாக தன்னருகே வந்தமர்ந்த கணவனில் இருந்து கண் அகற்றவில்லை சாத்விகா.
அவள் ஒரு ஆணின் அழகில் மெய்மறந்த முதல் தருணமது. அவன் கண்களின் தேங்கிய கர்வம், மீசையை முறுக்கிய ஆண்மை, நெறித்த புருவத்தில் நிலைத்து நின்ற திமிர், சிந்திய புன்னகையில் ஓர் அடக்கம் என அத்தனை அழகாக இருந்தான். இருவரையும் மனையில் அமர்த்தி சாத்விகாவுக்கு நலங்கு வைத்து முதலில் வேப்பிலை காப்பு அணிவித்து, பின்பு கண்ணாடி காப்பு, அதன் பின்னால் உள்ள சாங்கியங்கள் செய்து ஆரத்தி எடுத்து இனிதே வளைகாப்பு விழாவை ஆரம்பிக்க, அதுவரை அமைதியாக அமர்ந்திருந்தவள், ஒவ்வொருவராக வந்து நலங்கிட்டு கண்ணாடி காப்புடன் வைரமும், தங்கமுமாக வளையல்களை அவள் கையில் நிறைக்கவும்,
கணவன் புறம் மெதுவாகச் சரிந்தவள்,
“ராட்சச ராவணா! அள்ளுறீங்க!”
“என் மண்டோதரி பக்கத்துல இந்த ராவணன் சுமார் தான்.”
“அப்படி இல்லையே உங்க ட்ரெஸ், ஆட்டிட்டியூட்ல இருக்கும் ஸ்டைல், உங்க பர்சனாலிட்டி எல்லாத்தையும் விட அதிகமா கொஞ்சம் நீட்டிக்கிட்டு நிக்குதே அந்த மூக்கு நுனி அதுகூட சொல்லுதே உங்க அழகை. பிடிச்சிருக்கு, இந்த ராட்சச ராவணனை, தாடி வச்ச என்னோட கேடியை ரொம்ப்ப பிடிச்சிருக்கு.
அவர் பொண்டாட்டிய பார்க்கும்போது அந்த கண்களில் தோன்றின பிரம்மிப்பு, ஸ்ஸ்ப்பா! அவ்வளவு பிடிச்சிருக்கு!”
அவள் கண்ணில் ஓர் ஆர்ப்பரிப்பு. குறையாத உற்சாகக் கூச்சலோடு, அவளோ..
“அடக்கமான அந்த சிரிப்புல இருக்க மென்மையை பிடிச்சிருக்கு. நிமிர்ந்து நிற்கும் இந்த ஆறடி ஆண்மகனோட ஆண்மையின் அழகை ரொம்ப, ரொம்ப பிடிச்சிருக்கு. இதுவரைக்கும் நான் உங்களுக்கு ப்ரொபோஸ் பண்ணுனது இல்ல, புருஷ். பட்.. இப்போ கொஞ்சம் பயமா இருக்கு எங்க என்னோட மேன்லி புருஷனை ப்ரொபோஸ் பண்ணிடுவனோனு...!”
“அவ்வளவு அகம்!” என்றவன் மீசையை முறுக்க.
“அவ்வளவு அகம் தான்!” என்றாள். அதே துளி குறையாத திமிரோடு,
“என் காதல், என்ன அவ்வளவு சீப்பா?”
“ஓவ்!” அவன் புருவம் தூக்க,
“பின்ன ஐ லவ் யூங்கிற மூனு வார்த்தையில அடங்கக் கூடியதா, இந்த சாத்விகா சர்வேஷோட லவ்? அந்த மூனு வார்த்தை என் காதலை நிரூபிச்சிருமா என்ன? இல்லைன்னா, அந்த மூனு வார்த்தை தான் என் காதலா? என் காதல் என்ன சர்வ சாதாரணமா? நான் சாத்விகா சர்வேஷ்!”
அவள் கண்களில் தெரித்த திமிரில்,
“எனக்கும் பிடிச்சிருக்குடி. முதல் முறை நான் சாத்விகா சர்வேஷ்னு சொன்ன என் பொண்டாட்டியோட உரிமையை. உன்னை விட எனக்கு திமிரு ஜாஸ்திடான்னு சொல்லும் உன் கண்களை. மூனு வார்த்தை என்னோட மூச்சக் கூட தீர்மானிக்காதுன்னு சொல்ற, உன் ஆணவத்தை ரொம்ப பிடிச்சிருக்குடி!”
“ஹம்.. அது சரி. எல்லாரும் கிஃப்ட் தந்துட்டாங்க. நீங்க ஒன்னுமே தரலையே புருஷ்”
“நானே..” அவன் ஆரம்பிக்கவும்,
“உஷ்!” அவனை தடுத்து நிறுத்தியவள்,
“நானே பெரிய கிஃப்ட், உனக்கு என்னை விட ஒரு கிஃப்ட்டானு மொக்கையா ஆரம்பிக்காதீங்க புருஷ்!”
அதில் அவன் வாய் விட்டுச் சிரிக்க, கீழே குடும்பம் மட்டுமல்ல வந்திருக்கும் உறவினர்கள், பிரபலங்கள் என தொலைக்காட்சி சேனல்கள் வரை, இந்த அன்யோனியத்தை, காதலை, அவர்கள் முகங்கள் வெளிப்படுத்திய பாவனையை, அந்தச் சிரிப்பை அழகாக உள்வாங்கியது.
“சிரிக்காதீங்க புருஷ். எங்க என் கிஃப்ட்?”
“என்னடி அப்படி கேட்கிற? இந்த வளைகாப்புல நீ போட்டு இருக்க அத்தனையும், நான் வாங்கித் தந்த கிஃப்ட் தானே!”
“மச்.. போயா! பொன்னும், பொருளும் பொண்டாட்டிய சேட்டிஸ்பை பண்ணுங்கிற உங்க ஓல்ட் புருஷன் கான்செப்ட்ட, டிராப் பண்ணா தான் என்னவாம்?”
அதில் இன்னும் அவன் புன்னகை நீள, மீளாப் புன்னகையோடு,
“உன்னோட கிஃப்ட் என்னன்னு தெரிஞ்சுக்கணுமா?”
அவள் ஆர்வமாக அவன் புறம் சற்று அதிகம் சாயவும், இன்னும் அவளை நெருங்கி,
“வலிக்க வைக்கிறேன். இன்னிக்கு நைட் வலிக்க, வலிக்க வைக்கிறேன்..”
அதில் வெட்கத்தில் வெந்தாமரை முகம் சிவந்தாள் என்றால், காலம் உடன் சேர்ந்து சிரித்தது.
இரு ஜோடிக் கண்கள் மட்டும் இந்தக் காட்சியை குரோதத்தோடு நோக்கின.
அதில் கவிதாவின் மனமோ மகளின் வாழ்க்கையை வாழ்கிறாளே என்று குமைந்தது என்றால்..
இன்னொரு ஜோடி விழிகளோ, நேரம் வந்து விட்டது என தன்னைத்தானே தேற்றிக்கொண்டு வெளிப்படும் நேரத்தை குறித்துக் கொண்டன.
அதே நேரம் மேடை நோக்கி எறிய ராகவி,
“டேய் கொழுந்து!”
ராகவியை சர்வேஷ் புருவம் சுருக்கிப் பார்க்கவும், நக்கல் சிரிப்போடு,
“வேறொன்றுமில்லை கொழுந்து உனக்கு கல்யாணம் ஆயிடுச்சாம், குழந்தை பிறக்கப் போகுதாம், நீ பெரிய பையனாம். அதனால உனக்கு மரியாதை கொடுக்கட்டுமாம்!”
“ஓவ்!” அவன் தாடியைத் தடவவும், ராகவியோ,
“என்ன.. ஓ! என் புருஷர் ஆடர் போட்டு இருக்காரு. அதனால, தடியால இருந்து கொழுந்துக்கு புரமோட் ஆகலாம்னு நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிற?”
“அடிச்சா மூஞ்சி பேந்துக்குமா? இல்ல, ஓங்கி குத்துனா மூஞ்சி பேந்துக்குமானு யோசிக்கிறேன்!”
அதில் ராகவி அவனை முறைக்க, அவனும் அதே நக்கலோடு,
“என்ன அமைதியாகிட்டீங்க? ஹம்.. ஓகே சொல்லுங்க. இப்ப எதுக்கு என்னைக் கூப்பிட்டாங்க?”
“பாரு, உன்னால வந்த விஷயத்தை மறந்துட்டேன். டேய் சும்மா, சும்மா அவளை சிரிக்க வைக்காத!”
“ஏன்? ஏன்?”
“ஏன்னா கீழே பாரு. இருக்க ஜனமே உங்கள தான் பார்க்குது. வாயும் வயிறுமா இருக்க பொண்ண, இப்படி மத்தவங்க கண்ணு வைக்கவே கூடாது. ஏதோ இன்னைக்கு நம்ம ஃபங்ஷன்னு பொறுத்துக்கிட்டு இருக்க வேண்டியதா இருக்கு. ரொம்ப சிரிக்க வைக்காத, சிரிக்கும்போது அழகா இருக்கீங்க. எனக்கே பார்த்துகிட்டே இருக்கணும்னு தோனுது.
அவள் கண்கள் லேசாகக் கலங்கவே, நெகிழ்ந்த சர்வேஷ், அதை முகத்தில் காட்டாது கருவிழிக்குள் மறைத்தவன்..
“சரி!” என்றான்.
இப்படி உறவினர்களும் பிரபலங்களும் மேடை வரை வந்து வாழ்த்திவிட்டுப் போக.
அதே நேரம் அந்த பால் ரூமில் (Ballroom) ஒரு பரபரப்பு. திடீரென வந்திருப்பவர்கள் பரபரப்போடு திரும்புவதும், அருகில் இருப்பவர்களோடு பேசுவதுமாக இருக்க,
அந்தக் குறுகுறு சத்தத்தில் மனைவியில் இருந்து மீண்ட அவனின் கண்கள், தந்தையை நோக்கித் தேட, அக்கண்யனோ இறுகிப் போயிருந்தான்.
ஆத்விக் முகமோ ரௌத்திரத்தில் சிவந்து போயிருந்தது. அங்கே ஜனனி முகத்தில் மித மிஞ்சிய வேதனை என்றால், வருணும் அரவிந்தனும் உணர்வு தொலைத்த முகத்தோடு இருக்க, கவிதாவின் முகம் மலர்ந்து கனிந்திருந்தது.
இத்தனையையும் உள்வாங்கிய அவன் மூளைக்குள் ஒரு அதிர்வு, மனமோ வேண்டாத ஒன்றை அறிவுறுத்த அவன் நாசிகளோ ஒவ்வாமையோடு ஒரு மணத்தை சுவாசிக்க தொடங்கவே நிமிர்ந்து பார்த்தவன், ஆண் அகலிகை ஆனான்.
ஆறடி சிலை, அசைவின்றி நிலை குத்திய பார்வையோடு பார்த்த இடம் மாறாது இருக்க. அவன் உடல் நடுங்கியது, கூசி கூனி குறுகியது. முகம் கன்றியது. இரு விழிகளில் மித மிஞ்சிய அருவருப்பு.
நீண்ட மாதங்களுக்குப் பிறகு கணவனின் மாற்றத்தைக் கண்டவள், பார்வை அவன் கண்களை பின் தொடர, அங்கே ஒரு அழகிய மங்கை மேடையை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.
வெண் பட்டில் அளவான ஆபரணங்கள் போட்டு செதுக்கி வைத்த தங்க சிலையை போல் மேடையை நெருங்கவே,
அவள் முக வடிவத்தை வருணில் கண்ட சாத்விகா, தன் ஞாபக எண்ணங்களை தட்டிப் பார்த்து அடையாளம் காணவும்,
அவளோ நொடியில் அவர்களை நெருங்க, சர்வேஷ் எனும் ஆறடி ஆண் மகன் நிலத்தை தோண்டி உள்ளே புதைந்து கொண்டால் என்னவென்று எண்ணினான்.
கிட்டத்தட்ட ஒரு வருடமாக சர்வேஷை கண்ட நாள் முதல் சாத்விகா பார்த்து செதுக்கிய அவன் உணர்வுகள் கொஞ்சம், கொஞ்சமாக சிதையத் தொடங்கியது. கைப்பிடியில் வைத்திருந்த அவன் இதயம் அவள் கையை விட்டு நழுவும் உணர்வு.
அவர்களை நெருங்கிய பெண்ணோ,
கண்களில் வன்மத்தோடு..
“ஐ அம் சயத்தா!”
அவள் தொடங்கும் முன்..
“சயத்தா அரவிந்தன்! அம் ஐ ரைட்?”
சாத்விகா அழுத்தி முடித்து வைத்தாள்.
அவள் விழிகள் வெறியோடும், குரல் நக்கலோடும்..
“ஓ.. நீங்க?”
“ஐ அம் சாத்விகா சர்வேஷ். என் புருஷன் பக்கத்துல இவ்வளவு உரிமையா ஒட்டி நின்னும் இந்த கேள்வியை கேட்குறீங்களே! ஆச்சரியமா இருக்கு?”
சாத்விகாவின் கேள்வியில், தொனித்த நக்கலில் சயத்தாவின் முகம் கறுக்க, இங்கே ஒருவன் இறுகிக் கொண்டிருந்தான்.
சாத்விகோ அவளோடு தைரியமாக வாயாட நினைத்தாலும், அவள் மனமோ கணவனுக்காகத் துடித்தது. இவள் வருகையை கண்ட முதல் இறுகி விறைத்தவன் தோற்றம், அவமானத்தில் கன்றிய முகம், அருவருப்பில் பூத்த விழிகள், அத்தனையும் சாத்விகா எனும் பெண் சிலையைக் கொல்லாமல் கொன்றது.
‘இவ்வளவு தானா, என் காதலின் ஆழம்? உன்னை செதுக்கி, செதுக்கி சிலையாக்கிய என் காதல், அவளைக் கண்ட நொடி சிதறுகிறதா?’
சாத்விகாவின் மனம் ஊமையாக அழ, அவள் மனசாட்சியோ,
‘எதுக்கு இந்த ஒப்பாரி? என்ன நடந்துச்சுன்னு இப்படி அழுகிற?’
‘என்ன நடக்கணும்?’
‘நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்க? என் காதலோட வெற்றி ஆறடியில என் பக்கத்துல இருக்க மனுஷனும், அவரு கொடுத்து நான் வாழ்கிற பணக்கார வாழ்க்கையும்னு நினைச்சியா? பைத்தியம்!
இல்லவே இல்ல, இப்போ கூனி குறுகி போயிருக்க மனுஷனோட தலைய, ஒத்த சொல்லால நிமிர்த்தி வச்சேனே! அதுதான் என் காதலோட வெற்றி.
அருவருப்பில் தன்னிலை இழந்து ரணத்தோட தவிச்ச மனுஷன, அதன் சுவடு தெரியாம இத்தனை மாசமா வச்சிருந்தேனே, அதுதான் என் காதல்.
உணர்வுக் குவியலாக தவிச்சி, துடிச்சி, செத்துகிட்டு இருந்த இந்த ராவணனோட பிராணனை இறுக்கிப் பிடிச்சு, அவர் உணர்வுகள் சாத்விங்கிற பெண்ணோட சுண்டு விரலில் இருக்குனு, இத்தனை நாள் கர்வமா ஆட்டி வச்சுக்கிட்டு இருந்தேனே! அதுதான் என்னோட காதல்.
எல்லாம் அவளைப் பார்த்த உடன் படிப்படியா சரியுதே. என் ஸ்பரிசம் போதும்னு சொன்னவர் கையை என் கைகள் உரசியும், அவரோட உரம் ஏறிய விரல்கள் நடுங்குதே! இதை பார்த்து சத்தெல்லாம் வடிந்து போறத உணர்றேனே! இப்படி என் மனசு என்ன பாடுபடும்?’
அவள் மனசாட்சியோடும், மனதோடும் வாதாட..
‘ரிலாக்ஸ், ரிலாக்ஸ்’ தன்னையே ஆசுவாசப் படுத்தியவள் கணவன் கையை இறுகப்பற்றி கொண்டாள்.
அதில் மனைவியை நோக்கியவன் கண்களில் தெரிந்த அருவெருப்பில், வெறுப்பில், அவமானத்தில் அவள் உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக சோர்ந்து கொண்டிருந்தன. அவன் கையை இறுக அழுத்தியவள்,
“ரிலாக்ஸ், ரிலாக்ஸ்” என்றாள் அவன் புறம் நெருங்கி மெதுவாக. கண்ணை மூடித் திறந்த தன்னை ஆசுவாசப்படுத்த முயன்றவனுக்கு முடியவில்லை.
வந்தவளும் அவன் உணர்வுகளுக்கு அமைதியை கொடுக்க விரும்பவில்லை போலும்..
“நைஸ் டு மீட் யு சர்வேஷ்! ரொம்ப மேன்லியா மாறிட்டீங்களே. முன்ன இருந்ததை விட அழகா அம்சமா இருக்கிறீங்க. இதோட ரகசியம் ஐ திங்க் உங்க பிராப்ளம் எல்லாம் க்யூர் ஆகிருச்சுன்னு நினைக்கிறேன். எனிவே நாம வீட்ல சந்திக்கலாம்!”
நக்கலான வார்த்தைகளை வீசி அவள் இறங்கிச் செல்லவே, சர்வேஷ்கோ தன் மூர்க்கத்தை அடக்க வழி தெரியவில்லை. இங்கிருக்கும் அத்தனையையும் அடித்து நொறுக்க வேண்டும் என்ற வெறி உடலெல்லாம் கிளம்பியது.
எதைக் கொண்டாவது தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வோமா, வலிக்க வைத்துக் கொள்வோமா, தன் உறுப்புகளை ஒவ்வொன்றாக அறுத்தெறிவோமா இப்படி கொதித்துக் குமுறி தன்னையே வெறுத்துக் கொண்டிருந்தான்.
அவன் காதுகளில் கேட்ட அவள் நக்கல் குரலில் ‘இன்னுமா நீ வாழ்கிற?’ என்று அவன் மனம் அவனையே எள்ளி நகையாடியது.
வந்திருக்கும் உறவினர்கள் கருதி, சுற்றம் கருதி, ஒரு முறை தொலைந்த அவன் கௌரவம் மறுமுறை தொலைந்து விடக்கூடாது என்ற வைராக்கியம் கருதி, இதையெல்லாம் விட தன்னருகே விழிகளில் துடிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் அவன் உயிரானவளின் காதல் உள்ளம் கருதி, வெகுவாக அமைதி காத்தான். முதல் முறை, அவன் வாழ்வில் முடியாத ஒன்றான பொறுமையை, சாத்விகா என்னும் அவன் தேவதைக்காகச் செய்ய முனைந்தான்.
ஆனால் நேர்மாறாக ஆத்விக் எனும் அமைதியான ஆறடி மனிதனுக்குள், பூகம்பம் வெடிக்கத் தொடங்கியது. தந்தையை அவன் அழுத்தமாக ஒரு பார்வை பார்க்க, அக்கண்யனோ வேதனையோடு காண, அதை விட வேதனையை தன் நண்பனின் முகத்தில் கண்டவன், அவனுக்காக வருந்தச் செய்தான்.
அதில் மிக அழுத்தமாக தலையை ஆட்டிய ஆத்வீக்...
“டாட்! இனியும் உங்க ப்ரண்டுக்காக நீங்க பொறுமையா இருக்கத்தான் போறீங்களா? நீங்க இருங்க, என்னால முடியாது. நான் அவ்வளவு சொல்லியும் என்ன தைரியம் இருந்தா, அவ இந்த சிலோன்ல கால் எடுத்து வைப்பா. அவளோட முடிவு என் கையில தான்!”
“ஆத்விக் அமைதியாக இரு. உன்னோட லைஃப் மட்டும் இல்ல. சாத்வி சர்வேஷோட லைஃப்ம் இதுல இருக்கு. சோ.. உன்னோட கோபத்தை கொஞ்சம் குறை!”
“அத்து.. ரிலாக்ஸா இருங்களேன்.”
மனைவியின் வேதனையான விழிகளை அழுத்தமாகப் பார்த்தவன்,
“நடந்ததெல்லாம் மறந்து போச்சா ராகவி? என்ன தங்கச்சியை கண்ட பாசமோ? திரும்பி வந்த உன் தங்கச்சி, திமிரா இங்கே வந்தது உனக்கு பெருசு இல்ல? ஆனா.. நான் அவளை ஏதாவது செஞ்சுருவேன்கிறது பெருசா இருக்கா? அந்த அளவுக்கு தங்கச்சி பாசம் நெஞ்ச முட்டுதோ?”
அவன் கடுமையோடு கொஞ்சம் வன்மத்தையும் கலந்து கேட்க, அதில் துடித்த அவளோ,
“நீங்க என்னை அப்படி சொல்லலாமா, அத்து? நான் அப்படி நினைக்கக் கூடியவளா? நீங்க நான் இல்லையா? நான் நீங்க இல்லையா?”
அதிக அழுத்தமான பார்வையோடு,
“இனியும் அவன அரக்கனா மாத்த என்னால முடியாது, ராகவி. அப்படி ஒன்னு நடக்கும்னு தெரிஞ்சா, அதை தடுக்க சர்வேஷோட அண்ணன் இந்த ஆத்விக் அக்கண்யன், என்ன வேணும்னாலும் செய்வான்!”
அங்கே மகனுக்கு இணையாக சிலையாக மாறிய ஜனனியை, பிடித்துத் தாங்கிய அக்கண்யன், ஆத்விக்கை முடிந்த அளவு சாந்தப்படுத்த முனையும் போதே,
சயத்தாவோ கவிதாவின் முன் வந்து...
“என்னை மறந்துட்டீங்களே அம்மா. எப்படி என்னை விட மனசு வந்துச்சு? நான் தான் அம்மா வேணும்னு தேடி வந்து இருக்கேன். என்னோட அம்மாக்கு, இந்த பொண்ணு வேணும்னு தேடி வரத் தோனலையே!”
“சாயா!” என்ற கதறலோடு சயத்தாவை கட்டிக் கொண்டு கண்ணீர் வடிக்க, அவளும் தாயை தாங்கிக் கொண்டாள்.
ஆனால் அரவிந்தனும் வருணும் அருகில் செல்ல முயலவில்லை. அதேநேரம் இந்த விழா, அதன் மகிழ்வு குலைந்து விடக்கூடாது என்பதில், அத்தனை பேரும் கவனமாக இருந்தனர்.
வந்திருந்த உறவுகளுக்கு இது அவலாக மாறியது என்பதும் உண்மைதான். வந்தவர்கள் அத்தனை பேரும் வயிறார உண்டனர், மனதார மகிழ்ந்தனர். ஆனால் சயத்தாவை கண்டவுடன் அவர்கள் பழையவையை நினைத்து தூஷிக்கவும் தயங்கவில்லை.
அக்கண்யனின் குடும்பத்திற்கு சர்வேஷின் இறுகிய தோற்றம், மணமேடையில் கலங்கிய சாத்விகா, இருவரையும் கண் கொண்டு பார்க்க முடியவில்லை. அத்தனை வேதனைப்பட்டனர்.
ஆரவாரத்துக்கும் அவச் சொற்களுக்கும் மத்தியில், விழா இனிதே நடைபெற்று முடிய, குடும்பங்கள் அவரவர்கள் இல்லத்திற்குப் போய்ச் சேர்ந்தார்கள். அங்கே அரவிந்தன் வீட்டிலோ பூகம்பமே வெடித்து விட்டது.