அகம் - 20
இனியா தன் நகத்தை கடித்து துப்பியவள், “இப்போ எதுக்காக இரண்டு பேரும் என்னை திட்டுறீங்க”.
ஆதிரை, “எல்லாமே நடந்து முடிஞ்சு போச்சு.. இப்போ டென்ஷன் ஆனா மட்டும் நடந்தது இல்லன்னு ஆயிடுமா.. சும்மா எல்லாத்துக்கும் பயந்துகிட்டே இருக்காத.. கொஞ்சமாவது தைரியமா இரு” என்று இவள் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே வீட்டு வாயிலில் கார் நிற்கும் சத்தம் கேட்டது.
இனியா படபடத்த இதயத்துடன், “அச்சச்சோ! அவங்க எல்லாம் வந்துட்டாங்க போலருக்கே” என்கவும்.
ஆதவன் எழுந்து வாசலை நோக்கி நடந்தான். கவின் தன் தாய், தந்தை, தங்கையுடன் அங்கே வந்திருக்க.
ஆதவன், “வாங்க.. வாங்க..” என்றவாறு அவர்களை வரவேற்று வீட்டிற்குள் அழைத்து சென்றான்.
சற்று நேரத்திற்குள்ளாக அனைவருமே ஹாலில் கூடி விட்டனர்.
அகிலாண்டேஸ்வரி, “பசங்க அவசரப்பட்டு இப்படி ஒரு காரியத்தை செஞ்சுட்டாங்க.. அவங்க நம்ம கிட்ட வந்து சொல்லி இருந்தால் நாமலே அவங்களுக்கு சந்தோஷமா கல்யாணத்தை செஞ்சு வச்சிருந்திருப்போம்.
இருந்தாலும், அவங்களுக்கு இருந்த பயம் அவங்களே அவசரப்பட்டு இப்படி எல்லாம் செஞ்சுட்டாங்க. இதுல கண்டிப்பா உங்களுக்கு வருத்தம் இருக்கும்னு எனக்கு புரியுது.
ஆனா, வாழ போறது அவங்க ரெண்டு பேரும் தான். அவங்க ரெண்டு பேருமே விருப்பப்பட்டு கல்யாணம் செஞ்ச பிறகு நாம தடுப்பதற்கு இதில் எதுவும் இல்லை.
அவங்க விருப்பத்துக்கு அவங்களை வாழ விடுவது ஒன்னும் தப்பில்லையே..” என்றபடி கவினின் தந்தையை நேர் பார்வை பார்த்தார்.
அகிலாண்டேஸ்வரியின் கம்பீரமான தோரணையிலும், ஆளுமையான பேச்சிலும், நேர் பார்வையிலும் அனைவரின் பார்வையுமே ஆச்சரியமாக அவரின் மீது படிந்தது.
கவினின் தந்தை கோபிநாத், “நீங்க சொல்றதும் வாஸ்தவம் தான் மா. இனி நடந்ததை மாற்ற முடியாது பசங்களுடைய கல்யாணத்தை நேரில் பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் தான் எங்களுக்கு இருக்கு.
மத்தபடி, வேற எந்த வருத்தமும் இல்லை. சரி, அவங்க விருப்பம் தானே நமக்கு முக்கியம்.. எப்படியோ அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தாலே போதும்”.
பிறகு, இரு குடும்பத்தாரும் பொதுவாக தங்கள் குடும்பத்தை பற்றி மற்றவருக்கு கூறிக் கொண்டிருக்க.
வேலாயுதம், “மாப்ள இப்போ நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?”.
கவின், “நான் இப்போ டென்டிஸ்ட்க்கு தான் பிராக்டீஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன் மாமா” என்றான் உரிமையோடு.
இரு குடும்பத்தாருக்குமே ஒருவரை ஒருவர் பிடித்து போய்விட்டது. இப்பொழுது தான் இனியாவிற்கு நிம்மதி மூச்சே வெளிவந்தது. குடும்பத்தில் உள்ள அனைவரும் அவர்களுக்குள் பேசிக்கொண்டு இருக்க.
கவினின் தங்கை கல்கியின் பார்வை மட்டும் ஆதவனின் மேலேயே நிலைத்திருந்தது. யாரும் அறியா வண்ணம் அவ்வப்பொழுது ஆதவனை ஓரப்பார்வை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
சுப்புலட்சுமி, “நீ என்னமா படிக்கிற?” என்று கல்கியை இன்முகமாக விசாரிக்க.
அவளோ சட்டென்று தன் இருக்கையில் இருந்து எழுந்தவள் அனைவரின் முன்பும் பட்டென்று சுப்புலட்சுமியின் காலை பிடித்தவாறு, “என்னை பிளஸ் பண்ணுங்க ஆன்ட்டி”.
அவளின் செயலில் திடுக்கிட்டு தடுமாறிய சுப்புலட்சுமி, “ஆங்.. நல்லா இருமா.. எழுந்திரு.. எழுந்திரு..” என்றார் படபடப்பாக.
கல்கி, “ஆன்ட்டி நான் இப்போ தான் காலேஜ் பர்ஸ்ட் இயர் படிச்சிட்டு இருக்கேன்”.
சுப்புலட்சுமி, “ஓ! அப்படியா.. சரி மா உட்காரு” என்கவும்.
கல்கியோ பாரபட்சம் இன்றி அனைவரின் காலிலுமே விழுந்து எழுந்து கொண்டிருந்தாள்.
அவளின் தாயும், தந்தையும் கூட அவளை விழி விரித்து ஆச்சரியமாக பார்த்தனர். பிறகு, வீட்டில் எல்லாம் வாயாடுபவள் இப்படி சடாரென்று அனைவரின் காலிலும் விழுந்து பவ்யமாக பேசுவதை பார்க்க அவர்களுக்கும் ஒரு நொடி திகைப்பு தான்.
உண்மையிலேயே, இது தங்கள் மகள் தானா என்னும் ரேஞ்சுக்கு அவளை பார்க்க.
ஆருத்ர வர்மன், ‘பாரு பொண்ணுங்கன்னா இப்படி தான் இருப்பாங்க.. நீயும் தான் இருக்கியே பஜாரி மாதிரி சண்டை போட்டுக்கிட்டு’ என்று எண்ணியவாறு அவளை நோக்கி ஒரு பார்வையை வீச.
அவனின் பார்வையை வைத்தே அவன் எண்ண ஓட்டத்தை சரியாக கணித்த ஆதிரையோ உதட்டை சுழித்து தன் முகத்தை வெடுக்கென்று திருப்பியவள்.
இனியாவின் காதில் கிசுகிசுப்பாக, “என்னடி உன் நாத்தனார் வந்தவுடனேயே ஓவரா பர்பார்ம் பண்றாளே..”.
இனியா, “ஆமா டி. எனக்கே அவளுடைய பெர்ஃபார்மன்ஸ் ஓவரா தான் தெரியுது” என்று கூறி நகைக்க.
அவ்வப்பொழுது கல்கியின் பார்வை ஆதவனின் மீது படிந்து மீள்வதை கவனித்த ஆதிரை தன் நெற்றியை நீதியவாறு, “எனக்கென்னமோ அவ நம்ம ஆதவனை கரெக்ட் பண்ண ட்ரை பண்றாளோனு தோணுது” என்றாள் மெல்லிய குரலில் கிசுகிசுப்பாக.
இனியா அவள் கூறிய பிறகு கல்கியின் பார்வை போகும் திசையை பார்த்தவள், “ஆமா டி. ஆதவன் அண்ணாவையே நைசா ரூட்டு விட பார்க்கிறா”.
பிறகு, அகிலாண்டேஸ்வரி, “இந்த வருஷத்தோட இனியாவுடைய படிப்பு முடியுது. படிப்பு முடிந்ததும் ரிசப்ஷன் வச்சு நாங்க அவளை உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம். இதில் உங்களுக்கு சம்மதம் தான..”.
கோபிநாத், “சம்மதம் தான் மா.. உங்க விருப்பப்படியே செய்யுங்கள்” என்றவர்கள் அனைவரிடமும் விடை பெற்று சென்றனர்.
கல்கி அனைவரிடமும் விடை பெற்றவள் ஆதவனின் அருகே சென்றவாறு, “ஹாய்.. எனக்கு உங்க போன் நம்பர் கொடுக்குறீங்களா”.
ஆதவன் அவளை புரியாமல் பார்த்தவன், “எதுக்கு?”.
கல்கி, “உங்க கூட பேச தான்” என்றாள் தன் ஒற்றை கண்ணை சிமிட்டியவாறு.
ஆதவன், “என்கிட்ட போன் எல்லாம் இல்ல” என்றான் சட்டென்று.
ஆதிரையோ இனியாவின் காதில், “பாத்தியாடி.. பார்த்து பத்து நிமிஷம் தான் ஆகுது. எப்படி தைரியமா போய் டைரக்டா உன் அண்ணன் கிட்டயே போன் நம்பர் கேக்குறா பாரு.. நீயும் தான் இருக்கியே சரியான பயந்தாங்கோலி”.
இனியா, “ஆனா, ஆதவன் அண்ணா முகத்தை பார்த்தா அவருக்கு அவளை பிடிக்கல போலருக்கே”.
கல்கி அவனின் பதிலில் முகம் வாடியவாறு, “என்ன உங்க கிட்ட போன் கூட இல்லையா.. சும்மா சொல்லாதீங்க”.
ஆதவன், “நான் ஏங்க சும்மா சொல்ல போறேன். நான் நிஜமா தான் சொல்றேன்.. நான் செல்போன் எல்லாம் யூஸ் பண்றது இல்ல.. எதுவாக இருந்தாலும் என் அண்ணனுடைய போனை தான் வாங்கி யூஸ் பண்ணுவேன். உங்களுக்கு வேணும்னா என் அண்ணனுடைய நம்பர் கொடுக்கவா” என்கவும்.
கல்கி அவனின் வார்த்தையில் ஜெர்க் ஆனவள், “வேண்டாம்.. அவரை பார்த்தாலே டெரர் பீஸ் மாதிரி இருக்கு. எனக்கு போன் நம்பரே வேண்டாம்” என்றவாறு அவனை நோக்கி மீண்டும் தன் ஒற்றை கண்ணை சிமிட்டு விட்டு அங்கிருந்து விடை பெற்றாள்.
அவள் சென்ற பிறகு ஆதவனோ ‘உஃப்’ என்று இரு பக்கமும் தன் தலையை குலுக்க.
ஆதிரை அவன் அருகில் வந்தவள், “என்ன ஆதவ் போன் நம்பரை கொடுத்துட்டீங்க போலருக்கே” என்று கிண்டல் செய்ய.
ஆதவன், “நீங்க வேற ஏன்.. அந்த பொண்ணு என்னை பார்த்த உடனேயே போன் நம்பர் கேக்குது..”.
“கண்டவுடன் காதல் போல..” என்று கூறி இனியாவும், ஆதிரையும் நகைக்க.
ஆதவன், “ஐயோ! நமக்கு இந்த லவ் எல்லாம் செட் ஆகாது” என்றவாறு, “இனியா உன் நாத்தனார்கிட்ட சொல்லு.. தேவையில்லாம ட்ரை பண்ணி அவங்க டைம் வேஸ்ட் பண்ண போறாங்க” என்றவாறு அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
ஆதிரையோ இனியாவின் தோளில் தன் கையை போட்டவாறு, “என்னடி இது.. லவ்வுனாலே உன் அண்ணனுங்க எல்லாம் இப்படி தெறிச்சு ஓடுறாங்க”.
இனியா, “அதான் டி எனக்கும் புரியல.. ஏன் இப்படி பயப்படுறாங்க” என்று கேட்டுக் கொண்டு நின்று இருக்க.
சுப்புலட்சுமி அவர்களை வழி அனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தவர் மகாலட்சுமியிடம், “ரொம்ப நல்ல பொண்ணு இல்லக்கா.. எப்படி பட்டு பட்டுன்னு எல்லார் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்குறா.. நான் கூட ஒரு நிமிஷம் அந்த பொண்ணு என் காலில் விழுந்ததும் பதறிட்டேன்”.
மகாலட்சுமி, “ரொம்ப நல்ல பொண்ணா தான் தெரியுறா”.
‘ரீச்டு’ என்ற குறுஞ்செய்தி இனியாவின் செல்பேசிக்கு இதழினியிடம் இருந்து வந்தது.
அதைப் பார்த்த இனியா ஆதிரையின் காதில் மெல்லமாக, “இதழ் தான் மெசேஜ் பண்ணி இருக்கா.. சென்னை ரீச் ஆயிட்டாலாம்”.
ஆதிரை, “சரி வா நாம போயி அவளை ஹாஸ்டலில் டிராப் பண்ணிட்டு வரலாம். பாவம், ஃபர்ஸ்ட் டைம் வந்து இருக்கா இல்ல.. இங்க எல்லாமே அவளுக்கு புதுசா இருக்கும்” என்கவும்.
யாரின் கவனத்தையும் கவராதவாறு ஆதிரையும், இனியாவும் நைசாக வீட்டில் இருந்து வெளியே செல்ல எத்தனித்தனர்.
“ஏய் நில்லு!” என்ற ஆருத்ர வர்மனின் குரலில் சடன் பிரேக் போட்டது போல் இருவரும் திகைத்து நிற்க.
ஒருசேர அவனை திரும்பி பார்த்தவர்கள் ‘என்ன’ என்பது போல் தங்கள் பார்வையை வீசினர்.
வர்மன், “எங்க போறீங்க ரெண்டு பேரும்?”.
இனியா பதில் கூறுவதற்கு முன்னதாகவே எங்கே ஏதேனும் பதட்டப்பட்டு சொதப்பி விடுவாளோ என்று பயந்த ஆதிரை.
அவளின் கையில் சற்று அழுத்தத்தை கொடுத்தவாறு, “அது.. அது வந்து.. சும்மா அப்படியே கோவிலுக்கு போயிட்டு வரலாம்னு இனியா சொன்னா.. அதான்.. கோவிலுக்கு போயிட்டு வரலாமேனு போறோம். அப்படித்தானே இனி..” என்று அவளைப் பார்த்து தலையை ஆட்டவும்.
இனியாவும் ‘ஆமாம்’ என்று பலமாக தன் தலையை உருட்டினாள்.
அதில், ஆருத்ரவர்மன் அவர்களை சந்தேக பார்வை பார்த்தவன், “நீங்க சொல்றது நம்புற போலவே இல்லையே.. இந்த நேரத்தில் எதுக்கு கோவிலுக்கு?” என்கவும்.
ஆதவன் அவன் அருகில் வந்தவன், “என்ன ஆச்சு அண்ணா?”…
ஆருத்ரவர்மன், “இவங்க ரெண்டு பேரும் எங்கேயோ வெளியில் போறாங்க.. கேட்டா கோவிலுக்கு போறேன்னு சொல்லி கதை விடுறாங்க.. நம்ம இனியாவுக்கு ஒன்னும் தெரியாது. கண்டிப்பா இவ தான் அவளை எங்கேயோ அழைச்சிட்டு போறாள்” என்று ஆதிரையை முறைத்து பார்த்தபடி அவன் கூற.
ஆதிரை, “ஆமா.. உங்க இனியா வாயில் விரல் வச்சா கூட கடிக்க தெரியாத சின்ன குழந்தை.. நான் அவளை என் இடுப்புல தூக்கி வச்சுக்கிட்டு கடத்திட்டு போக போறேன் பாருங்க..
அவ தான் கவின் அண்ணா வீட்டிலிருந்து இங்கே வரும்பொழுது எந்த பிரச்சனையும் வராமல் இருந்தா கோவிலுக்கு வருவதாக வேண்டிகிட்டாலாம்.
அதுக்காக கோவிலுக்கு என்னை துணைக்கு வர சொல்லி ரொம்ப கெஞ்சி கூப்பிட்டா.. அதனால் தான் போனால் போகுதுன்னு நானும் அவளோட போகலாமேன்னு கிளம்புனேன்” என்று உண்மை போலவே கூறவும்.
ஆருத்ர வர்மன், “அதான் கல்யாணத்தையே பண்ணிட்டியே.. இனிமே என்ன பெரிய பிரச்சனை வரப்போகுது” என்றான் இனியாவை பார்த்து கோபமாக.
“கல்யாணம் பண்ணிக்கிட்டா மட்டும் போதுமா.. அதான் இவ்வளவு பெரிய பிரச்சனை வீட்டிலேயே இருக்கீங்களே.. உங்களால் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்ற பயத்தில் தான் அவ வேண்டிகிட்டாளாம்” என்று கிடைக்கும் சந்தர்ப்பத்தில் வர்மனையும் சேர்த்து தாக்கினாள்.
அவளி
ன் பேச்சில் இனியா திருதிருவென ‘அடிப்பாவி!’ என்று அவளை அதிர்ந்து விழிக்க..
வர்மனோ கோபமாக தன் அனல் கக்கும் விழியால் ஆதிரையை பொசுக்கினான்.