அத்தியாயம் – 19
நம்ப முடியாத பாவனையில் திரும்பவும் தன் அண்ணன் அகிலனைப் பார்த்த யாழினி, “நிஜமாவா அண்ணா? என் தோழி தீபாவா?” என்று ஆனந்த அதிர்ச்சியாகி கேட்டாள்.
அவன், “ஆம்” என்று தன் தலையை ஆட்ட, மகிழ்ச்சியில் துள்ளி குதித்தவள், “அம்மாவும் அப்பாவும் இப்ப உயிரோட இருந்துருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்க. தீபா நைஸ் சாய்ஸ் அண்ணா” என்று நெகிழ்ந்து போய் கூறினாள்.
‘எனக்கும் அப்படித்தான் தோணுது யாழி. தீபாவோட அப்பா, இதைப் பத்தி முன்னவே என்கிட்ட பேசுனாரு. அதைப்பத்தி யோசிக்குறதா சொன்னேன். இப்ப அது எனக்கு ஓகேன்னு தோணுது. அவள் உனக்கும் தோழி தானே!” என்று அகிலன் கூற, வேகமாக தன் தலையை ஆட்டியவள், “தீபா உங்களோட மிகப்பெரிய பேன் அண்ணா. ரொம்ப நல்ல பொண்ணு. நீ அவளை நல்லா பாத்துக்கணும்” என்று அவளுக்கு சான்றிதழ் வழங்கி, அவளின் நலனுக்கும் பேச.
“ரொம்ப நல்ல பொண்ணு தான். அதனால் தான் நான் செலக்ட் பண்ணிருக்கேன்” என்று ஏதோ துணிக்கடையில் சட்டையை தேர்வு செய்ததைப் போல, அவன் கர்வமாக கூற, அதில் யாழினிக்கு சிறிது நெருடல் ஏற்பட்டது.
இருந்தும் அப்போதைக்கு அதை தள்ளிவைத்தவள், “உன் கல்யாணத்துக்கு நான் தான் டிரெஸ் டிசைன் எல்லாம் பண்ணுவேன்” என்று சந்தோஷமாகவே அகிலனுடன் உரையாட ஆரம்பித்தாள்.
இவர்களால் தீபா என்று அழைக்கப்பட்டவள், திரைப்பட தயாரிப்பாளர் தானுவின் மகள். அகரயாழினியின் கல்லூரித் தோழி.
அகரயாழினி, தன் அண்ணனுடனான பேச்சில் எப்போதும் தீபாவின் பெயர் இருக்கும். அதனால் தான் அவன் தீபாவின் பெயரை உச்சரித்ததும், அவள் துள்ளி குதித்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்தாள். தீபாவைப் பற்றி அகரயாழினியின் வழியாக அதிகம் அறிந்திருந்தான் அகிலன். அதன் மூலமே அவள் தனக்கு சரியான துணை என்று முடிவு எடுத்திருந்தான்.
யாழினியின் தோழிகள் குழுவில், மிகவும் வித்தியாசமானவள் தான் இந்த தீபா. இப்போது இந்தியாவில் இல்லை. தன் தாத்தா பாட்டியைப் பார்க்க லண்டன் சென்றிருக்கின்றாள்.
“அண்ணா, இன்னைக்கு நைட் நாம கே சீரீஸ் பார்க்கலமா?” என்று தன் மனதில் எழுந்த சில சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவே, அந்தக் கேள்வியைக் கேட்டாள் யாழினி.
அகிலனும், சற்றும் யோசிக்காமல், “ம்... பார்க்கலாமே!” என்று அவன் சொல்ல, யாழினியின் முகத்தில் மகிழ்ச்சி.
இனி அனைத்தும் தங்களுக்கு நல்லதாகவே நடக்கும், என்று நினைத்து உள்ளம் கனிந்தாள்.
இங்கே இருவரும் மகிழ்ச்சியில் திளைத்திருக்க, அகிலனின் வரவுக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தாள் நிலா. ஆனால் அவன் அலைபேசிக்கு அழைப்பதை மட்டும் அவள் நிறுத்தவே இல்லை.
ஏனோ நிலாவிற்கு, சொல்ல முடியாத படபடப்பு எழுந்தது. அதன் காரணமாகவே அவள் அகிலனுக்கு விடாமல் அழைத்துக் கொண்டிருந்தாள். அவனுடன் பேசாத ஓவ்வொரு நொடியும், ஒரு யுகத்தைக் கடப்பதைப் போலவே அவளுக்குத் தோன்றியது.
அவளைப் பற்றியும், ஒளியோனைப் பற்றியும் இன்றே அகிலனிடம் சொல்லிவிடத் துடித்தாள். ஒளியோனுக்கும் அவளுக்கும் இருக்கும் உறவைப் பற்றி யாருக்கும் சொல்லக்கூடாது என்று அவள் அளித்த சத்தியம் எல்லாம் அவளின் நியாபகத்தில் இல்லை.
அப்படி இருந்தாலும், அதை அவள் கண்டுகொள்ளமாட்டாள். ஏனென்றால், அவளும் அகிலனும் இருவர் அல்ல ஒருவர் என்ற முடிவுக்கு எப்போதோ வந்திருந்தாள் பெண்.
நேரமாகிக் கொண்டே இருந்தது. அந்த பௌர்ணமி நிலா வெளிச்சம், பிரகாசமாய் மின்ன, பறவைகள் தங்கள் கூட்டை அடைய, ஆனந்தமாய் குரல் எழுப்பி பறந்து கொண்டிருந்தது. அதில் நிலா மட்டுமே அனாதையாகத் தெரிந்தாள்.
அவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிய ஆரம்பித்தது. “என்னை விட்டு ஏன் அம்மா போனீங்க!” என்று இல்லாத அம்மாவிற்கு, அவள் மனது ஏங்க ஆரம்பித்தது.
ஒரு நிலைக்கு மேல் அவளால் தன் கண்களைத் திறந்து வைக்க முடியவில்லை. பசி மயக்கம் வேறு, அவளை சோர்வடையச் செய்ய, தான் அமர்ந்திருந்த சோபாவில் சாய்ந்தபடி தன் கண்களை மூடினாள்.
இங்கே வீட்டிற்கு வந்ததும், முதல் வேலையாக தன் அலைபேசியைத் தான் எடுத்துப் பார்த்தான் அகிலன். அதில் நிலாவிடம் இருந்து மட்டுமே ஐம்பதுக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்திருந்தது.
அதைப்பார்த்த அகிலன், நிஜமாகவே என்னமோ ஏதோவென்று பதறிவிட்டான், ‘நிலாவுக்கு ஏதும் பிரச்சனையா இருக்குமோ! நான் அழைப்பை எடுக்கலைன்னா, இப்படி எல்லாம் கூப்பிட மாட்டாளே!’ என்று அவன் நெஞ்சம் பதறியது.
நிலா இல்லாமல் அவனுக்கு ஒரு நாளும் நகராது. வெறும் காமத்துடன் உடல் வேட்கைக்காக அவளை இவன் பயன்படுத்திக் கொண்டாலும், நிலா என்றுமே அவனுக்கு தனித்துவமானவள் தான். அவள் நலனுக்காக இப்போது, அவன் துடிப்பதும் உண்மை தான்.
நிலா இருக்கும் போதே, மற்ற பெண்களிடமும் வரம்பு மீறி பழகுபவனுக்கு, நிலாவை வேறு ஒருவனுடன் கனவிலும் கூட பொருத்திப் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு அவள் மேல் தீவிரமாக இருந்தவன், எப்போது தீபாவை கரம் பிடிக்க நினைத்தானோ, அப்போதே, இனி நிலாவின் பக்கமே திரும்பக்கூடாது, என்ற கொள்கையை எடுத்துக் கொண்டான்.
தன்னையே உயிராக நினைத்து காதலிக்கும் பெண்ணுக்கு உண்மையாக இல்லாதவன், தான் கரம் பிடிக்க நினைப்பவளுக்கு உண்மையாக இருக்க நினைக்கின்றான்.
அகிலனின் கொள்கை வித்தியாசமான கொள்கை தான். கரம் பிடிக்க நினைப்பவளுக்கு, உண்மையாக இருக்க நினைப்பதனால் மட்டும் அவன் நல்லவனாகிவிட மாட்டான். இது அகிலனின் சிறு புத்தியைக் காட்டுகின்றது.
அதுமட்டும் இல்லாமல், நிலா இல்லாமல் தான் அகிலனால் இருந்துவிட முடியுமா?.
நிலாவின் மேல் தோன்றிய ஈர்ப்பு அவனுக்கு வேறு எந்த பெண்களிடமும் தோன்றவில்லை. தான் பழகிய அனைத்து பெண்களிடமும் ஒதுக்கத்தைக் காட்டியவன், அந்த ஒதுக்கத்தை எல்லாம் தகர்த்து எறிந்தது நிலாவிடம் மட்டுமே.
இதற்குப் பெயர் காமம் அல்ல காதல் என்று பாவம் அனைத்தையும் கற்றறிந்து மிகப்பெரிய டைரக்டரான அகிலனுக்குத் தெரியவில்லை.
இப்போது அவனது மனம் வேகமாக துடிக்க, நிலாவின் நலம் வேண்டி, வேகமாக அவளின் அலைபேசிக்கு அழைத்தான் அகிலன்.
அப்போது தான் கண் அசைந்து இருந்த நிலா, அகிலனின் அழைப்பு ஒலி அவள் காதில் விழுந்ததும் கண்களில் மின்னிய ஆர்வத்துடன், அதை எடுத்து தன் காதில் வைத்தாள்.
“நிலா! ஆர் யூ ஓகே” என்று அவன் கேட்டதும், பெண்ணவளின் உள்ளம் உருகித் தான் போனது.
“ம்... ஓகே இல்ல அகி. நீங்க எப்ப வருவீங்க? உங்களை மிஸ் பண்றேன்” என்று கண்களில் காதலைத் தேக்கி, அதை அவனுக்கு ஒலி மூலம் அனுப்பிக் கொண்டிருந்தாள் நிலா.
“அது... நிலா... என்னால இன்னைக்கு வரமுடியாது” என்று வார்த்தைகளை மென்று விழுங்கினான். நிலாவிடம் மௌனம்.
“அது யாழிக்கும் எனக்கும் சின்ன பிரச்சனை” என்று அவன் கூற, அவன் சென்ற வேகத்தை வைத்தே, அவன் சொல்வதை உண்மை என்று நம்பியவள், “நீங்க யாழிகிட்ட கோபப்பட்டீங்களா? எதுவும் பிரச்சனை இல்லையே! நான் அங்க வரவா?” என்று அவசரமாக வினாவினாள்.
“இல்லை நிலா. இப்ப யாழி நார்மல் தான். அவளுடன் வெளிய போய் இருந்தேன்” என்று சொல்லிவிட்டு அமைதியாக.
“நீங்க யாழிய முதலில் பாருங்க அகி. நமக்கு யாழி தான் முக்கியம்” என்று சொன்னவள், சிறிது இடைவெளிவிட்டு, “உங்களுக்கு நான் ரொம்ப நேரமாக ட்ரை பண்ணேன் அகி. நீங்க ஏன் என் அழைப்பை எடுக்கல” என்று சோர்வான குரலில் கேட்க.
மூச்சை இழுத்துவெளியேவிட்ட அகிலன், “சொன்னேனே நிலா... யாழி கூட வெளிய போய் இருந்தேன். என் அறையிலையே அலைபேசியை மறந்து வச்சிட்டு போயிட்டேன்” என்று பொய்யையும் மிகவும் அதிக ஈடுபாட்டோடு சொல்லிமுடித்தான்.
அவளும் விடாமல், “எப்போதும் இதுபோல் எல்லாம் நடந்தது இல்லையே! போனை மறக்குற அளவு ஏதாவது டென்ஷன்ல இருந்தீங்களா அகி” என்று கேட்க.
“மச்... அதான் சொன்னேனே! யாழிய நினைச்சு கொஞ்சம் டென்ஷன்...” என்று நிலாவிடம் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, “அண்ணா!” என்ற அழைப்போடு, அந்த இடத்திற்கு அகரயாழினி வந்துவிட்டாள். அவள் அழைத்தது, நிலாவின் காதுகளிலும் வந்து விழுந்தது.
அகிலன் அதிர்ச்சியோடு தன் தங்கையைப் பார்க்க, அவன் அருகில் வந்தவள், “யாரு அண்ணா போனில்?” என்று வினாவினாள்.
படாரென்று அழைப்பை துண்டித்தவன், “முக்கியமானவங்க இல்லை யாழி. ஏதோ ராங்கால்” என்று சொல்லிக் கொண்டே அவள் தோள்களைச் சுற்றி தன் கையைப் போட்டவன், “சரிவா, நாம நெட்பிளிக்ஸ்ல சீரீஸ் பார்க்கலாம்” என்று சொல்லி அழைத்துப் போனான்.
இங்கே அகிலன் செயலால் குழம்பிய நிலா, தன் அலைபேசியைப் பார்த்தபடி, ‘என்னாச்சி இவருக்கு திடீருன்னு கட் பண்ணிட்டாரு. சரி நாளைக்குப் பேசிக்கலாம்’ என்று யோசித்தபடியே தன் அறைக்குள் சென்றாள்.
அகிலனுடன் சிறிது நேரத்திற்கு முன்பு தோன்றிய உரையாடல், நிலாவை சிறிது உயிர்ப்புடன் வைத்திருந்தது. அது தந்த இதத்தில் இப்போது அவள் உறங்கச் சென்றாள். அவள் மனதில் சிறிது கசப்பு தான் தீர்ந்ததே தவிர, அவளின் பாரம் இன்னும் அப்படியே தான் இருந்தது. அவளைப் பற்றிய முழு உண்மையையும் அகிலனிடம் கூறினால் தான் அந்த பாரமும் இறங்கும்.
படுக்கையில் படுத்து தன் கண்களை மூடியவளுக்கு தூக்கம் வரவில்லை. அகிலனின் அருகாமைக்கு அவளின் மனம் ஏங்கியது. வீட்டுவிலக்கு சமயத்தில் கூட, அகிலனைக் கட்டிக் கொள்ளாமல் அவளுக்கு உறக்கம் வந்தது இல்லை. அவன் வெறும் உடல் சுகத்திற்காக மட்டும் தன்னை நாடவில்லை என்ற நினைப்பு தித்திப்பைத் தர. அதுவே, அகிலன் மீது காதலைப் பெருக வைத்தது.
பின் படுக்கையில் உருண்டு கொண்டே இருந்தவள், நேரம் கடந்து தான், தன் கண்களை மூடினாள்.
மறுநாள் காலை அலைகடலாய் ஆர்பரித்து, தன் சூரியகதிர்கள் மூலம், பூமிக்கு தன் ஒளியைப் பாய்ச்சிக் கொண்டிருந்தான் கதிரவன். அந்த வேளையில், சூரியனுக்குப் போட்டியாக சிறிதும் இரக்கம் இல்லாமல், தன் விழிகளால் வெப்ப கதிர்களை நிலாவின் மீது வீசிக்கொண்டிருந்தான் ஒளியோன் சக்கரவர்த்தி.
நிலாவோ சற்றும் அதிராமல், அவன் பார்வைக்கு எதிர்பார்வை பார்த்தவள், “நான் கேட்குறதுக்கு பதில் சொல்லுங்க சார்?. எதுக்காக தேவை இல்லாம யாழி விசயத்தில் எல்லாம் மூக்கை நுழைக்குறீங்க” என்று தன் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டபடி வினாவினாள்.
“மேடம் நிலா! இது என்னோட தனிப்பட்ட விஷயம் இதில் எல்லாம் நீங்க ஏன் உங்க மூக்கை நுழைக்குறீங்க?” என்று எதிர்கேள்வி கேட்டான்.
அதில் கோபம் வரப்பெற்ற நிலா, “யாழி எங்கவீட்டுப்பொண்ணு” என்று கூற.
அவளைப் பார்த்து கேலி சிரிப்பு ஒன்றை சிந்திய ஒளியோன், “யாழி, நான் கல்யாணம் பண்ணிக்கப்போறப் பொண்ணு” என்று கூறி நிலாவுக்கு அதிர்ச்சி அளித்தான்.