எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இல்லத்தரசி- கதைத்திரி

NNK34

Moderator
இல்லத்தரசி...

அந்த அதிகாலை வேளை, அலைப்பேசியில் வைத்த அலாரம் விடாமல் அடிக்க, அன்னையை குலுக்கி எழுப்பினாள், அபூர்வா. "அம்மா.. அலாரம் ரொம்ப நேரமா அடிக்குது ம்மா" என்று அவள் குலுக்கவும், சிரமப்பட்டு கண் விழித்த வர் முன் கையில் புத்தகத்துடன் அமர்ந்திருந்தாள்.


அலைப்பேசியை எடுத்து மணியைப் பார்த்தவர் ஐந்தரை மணி ஆகிவிட்டதைக் கண்டு, "ஏ அஞ்சு(ஐந்து) மணிக்கே எழுப்பிருக்கலாம்ல?" என்று சாதனா வினவ, "நேத்து நீ முடியலைனு சொன்னல ம்மா. அதான் எழுப்பலை" என்று அபூர்வா கூறினாள்.
"நீ எப்போ எழுந்த?" என்று சாதனா வினவ, "நாலு மணிக்கே எழுந்து பிரஷ்ஷாகி காபி போட்டு குடிச்சுட்டு படிக்க உக்கார்ந்துட்டேன்" என்று மகள் புத்தகத்தை விரித்துக் காட்ட,
"சரிடா. நீ படி" என்றுவிட்டு சென்றவர் மடமடவென வாசல் தெளித்து கோலமிட்டு உள்ளே வந்தார்.

எழுந்து பல்துலக்கிவிட்டு வந்த வேலன், "சாது.." என்க, "ஏங்க நான் வாசதெளிக்க போனப்பவே எழுந்துட்டீங்கள்ல? அந்த பால காச்சி ஒரு காபி போட்டு குடிக்கக் கூடாதா?" என்று கேட்டபடியே அடுப்பில் பாலை ஏற்றினார். கணவரவர் வழக்கம் போல் மௌனமாக நாளிதழைப் புரட்ட, சுடச்சுட பில்டர் காபியுடன் வந்தவர் கணவருக்கு ஆற்றி கொடுத்துவிட்டு தானும் பருகினார்.

இருவரும் அந்த மாத வரவு செலவுகளைப் பற்றிப் பேசிக்கொண்டே காபியை குடித்து முடிக்க, காபி கோப்பையை மேசையில் வைத்துவிட்டு வேலன் குளிக்கச் சென்றார்.
'இதை அந்த சிங்குல போட்டுட்டு போகக்கூடாதா?' என்று வழமை போல் மனதோடு மட்டுமே கூறிக் கொண்டவர், அன்றைய சமையலுக்கான காய்கறிகளை நறுக்கி வைத்து குக்கரை ஏற்றிவிட்டு குளித்து முடித்து வந்த மகளிடம் "ஏ காத்து வந்தா விசில மட்டும் போட்டுடுடி" என்றுவிட்டு குளிக்கச் சென்றார்.

குளியலறை மூலையில் கிடந்த பாதி நனைந்து நாற்றம் எடுத்த துணிகளை அள்ளிக் கொண்டு வந்து சலவை இயந்திரத்தில் போட்டவர், மேலும் அழுக்குக் கூடையில் இருந்த துணிகளையும் உள்ளே போட்டு "வாஷிங் மிஷின் இருக்குனு பெயரு தான்.. இதுக்கு தண்ணிய கூட நாம புடிச்சு புடிச்சு கொட்ட வேண்டியிருக்கு" என்று புலம்பியபடி தண்ணீரை அதில் நிறைத்துவிட்டு இயக்கத்தை கொடுத்துவிட்டு குளிக்கச் சென்றார்.

தான் உடுத்திய துணியை துவைத்துவிட்டு குளித்து முடித்தவர் மகள் துவைத்து வாளியில் வைத்திருந்த அவளுடைய துணியையும் சேர்த்து உளரப் போட்டு விட்டு வரவும் குக்கரில் மூன்றாம் விசில் அடிக்கவும் சரியாக இருந்தது. "எத்தன விசில் அபூ?" என்றவர் கேள்விக்கு "மூனு ம்மா" என்று பதிலுரைத்தவள் சீப்பை எடுத்துக் கொண்டு தலை பின்னத் துவங்கிட, சென்று குக்கரை இறக்கியவர் ஒரு அடுப்பில் சாம்பாருக்கான வேலைகளையும் மற்றைய அடுப்பில் காலை உணவான தோசைக்கான கல்லையும் போட்டார்.

மறுபக்கம் கணவரிடம் ஒரு வருடம் கெஞ்சி வாங்கிய மின்சார அடுப்பு இருக்க, அதில் உடல்நலமற்ற மாமியாருக்காக கஞ்சியையும் தயார் செய்தார். தோசைகளை சுட்டு ஹாட் பாக்ஸில் அடுக்கி மூடியவர் சாம்பாரை இறக்கிவிட்டு வெண்டைக்காய் பொறியலை தயார் செய்ய, கஞ்சியும் தயாராகியது.

"அபூ.. காய் போட்டிருக்கேன் அப்ப அப்ப கிளறிவிடு. பாட்டிய எழுப்பி இந்த டீய குடுத்துட்டு வரேன்" என்று ஆவாரம் பூவில் தாயாரித்த நேநீரை எடுத்துச் சென்றவர், மாமியாரை எழுப்பி பல்துலக்க வைத்து அந்த தேநீரை ஆற்றிக் கொடுத்துவிட்டு வந்தார்.

சமையல் வேலையை முடித்தவர் கணவருக்கும் மகளுக்கும் மதிய உணவை கட்டி முடிக்க, தயாராகி அலைப்பேசியில் பேசியபடியே தன் தலையைக் கோதிக் கொண்டிருந்த வேலன் தனது முதலாளி கேட்கும் கேள்விகளுக்கு முகத்தின் சளிப்பு குரலில் வராதபடி பேசிக் கொண்டிருந்தார்.

அவர் முகத்தை வைத்தே அவரது மனநிலை சரியில்லை என்பதை புரிந்துக் கொண்ட சாதனா, "அபூ.. அப்பா ஏதோ கோவத்துல இருக்காரு. காலேஜ் செட் டிரஸ்ஸுக்கு காசு இப்ப கேட்காத. அப்றம் வெல்லுனு விழுவாரு. பரிச்சை எழுதப்போற நேரம் திட்டு வாங்கி கண்ண கசக்கிட்டு நிக்காத" என்று மகளுக்கு அறிவுரை கூறிவிட்டு தோசையும் சட்டினியும் போட்டு அவருக்கு மேஜையில் வைத்தார்.

பேசியபடி வேலன் உண்ண அமர, அவர் கொண்டு செல்ல உணவைக் கட்டி அவரது அலுவலகப் பையின் அருகே வைத்தவர், மகளது உணவை அவளிடம் கொடுக்க காலை உணவை உண்டு முடித்து மதிய உணவை எடுத்துக் கொண்டு சாமி கும்பிட்டுவிட்டு புறப்பட்டாள்.

உணவின் சுவையையும் ருசியையும் உணர்ந்து உண்ட காலம் சென்று வயிற்றின் தேவைக்காக மட்டுமே உண்ணுவதாகிப்போன நிலையில் விறு விறுவென உண்டு முடித்தவர் தன் அன்னையிடமும் மனைவியிடமும் கூறிக் கொண்டு புறப்பட, வேக வேகமாக கஞ்சியை எடுத்துக் கொண்டு மாமியார் அறை சென்றாள்.

அவரும் குளித்து முடித்து புடவையைக் கட்ட போராடிக் கொண்டிருக்க, "அதான் அவரு ரெண்டு நைட்டி வாங்கி கொடுத்திருக்காரே அத்தை. அப்றம் ஏன் இதை கஷ்டப்பட்டு கட்டிக்குறீங்க?" என்று கேட்டபடியே அவருக்கு அதை கட்டிவிட்ட சாதனாவைப் பார்த்தவர், "அடப்போமா.. இந்த வயசுல போய் நான் அதெல்லாம் போட்டா நல்லாவா இருக்கு?" என்றார்.

அதில் சிரித்துக் கொண்டவர், அவருக்கான கஞ்சியை ஆற்றிக் கொடுத்துவிட்டு மருந்துகளையும் கொடுத்துவிட்டு வர, மணி பத்தை கடந்திருந்தது. ஒரு பெருமூச்சுடன் அடுப்படியைக் கண்டவர், "சாப்பிட்டா வேலை செய்ய முடியாதே" என்று நொந்தபடி சென்று பாத்திரங்களை மட்டும் துலக்கினார். அதை முடித்து மேடையையும் கையோடு சுத்தம் செய்து வர மணி பதினொன்று ஆகிவிட, காலை சுட்டு வைத்த ஆறிப்போன தோசை அவரைப் பார்த்து பிரகாசித்தது.

ஒரு கோணல் புன்னகையுடன் அதைப் போட்டுக் கொண்டு உண்டு முடித்தவர் சில நிமிடங்கள் அப்பாடா என அமர, 'கீங் கீங்' என்று அடித்த சலவை இயந்திரத்தின் சத்தம் வந்தது. "அய்யோ.." என்றபடி சென்றவர் மீண்டும் அதில் தண்ணீரை இறைத்து ஊற்றி அலசுவதற்கு இறக்கிவிட, தன் இயக்கத்தை தொடர்ந்து சுற்றி முடித்தது. அவற்றை எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றவர், பன்னிரெண்டு மணி வெயிலில் கால்கள் அப்பளமாய் பொறிவதை உணர்ந்தும் உணராத மரத்துப்போன நிலையில் உளரப் போட்டு விட்டு கீழே வர, மாமியாருக்கு மருத்துவர் கொடுக்கச் சொன்னபடி உணவை தயார் செய்ய வேண்டிய கட்டளை அழைத்தது!

அதை முடிக்க சரளமாய் ஒருமணி நேரம் முடிய, உணவை எடுத்துச் சென்றவர் மீண்டும் அதை அவருக்குக் கொடுத்துவிட்டு மருந்துகளை கொடுத்து வர இரண்டு மணியும் ஆகிவிட, அதே ஆறிப்போன சாதம் விறைத்துக் கொண்டு அவரை முறைத்தது. ஏதும் சாப்பிடப் பிடிக்காத போதும் சிறிதளவு போட்டுக் கொண்டு மோரை ஊற்றி வயிற்றை நிறைந்தவர் 'அப்பாடா' என்று அமர, அந்த நிமிடத்தின் சுகம் சொர்க்கமாய் தோன்றியது!

அவரே சாதனா! ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பத்தின் இல்லத்தரசி! பதவியின் பெயரில் மட்டுமே அரசியைக் கொண்ட ஏவலாளி என்றும் கூறலாம். வேலன் என்ற கட்டிடக்கலை நிறுவனத்து ஊழியரைக் கணவனாகக் கொண்டு, அபூர்வா என்ற பத்தொன்பது வயது ஒற்றைப் பெண்பிள்ளைக்குத் தாயாகவும் விளங்கும் சாதாரண மனிதப் போர்வையில் மூடி மறைக்கப்பட்ட அசாதாரணப் பெண்.

காலை ஐந்து அல்லது சிலநாட்களில் நான்கிலேயே துவங்கிவிடும் அவரது விடியல், இரவு பதினோரு மணிக்குத்தான் முடிவைப் பெரும்.

அதில் அவருக்கே அவருக்கென்று இறைவன் ஒதுக்கிக் கொடுத்தது தான் மதியம் இரண்டரை முதல் நான்கு மணிவரையான நேரம்!

தனது அலைப்பேசியில் அரைமணிநேரம் 'யூடியூப்' காணொளிகளைப் பார்த்து செலவழித்தவர் தனது நாட்குறிப்பேட்டை எடுத்தார். அவரது முத்துமுத்தான எழுத்துக்கள் அதில் மின்னியது. அந்த நாட்குறிப்பு அவரது குட்டி உலகம். அவருக்கு பிடித்த பாடல் வரிகள், அலைப்பேசியில் முகபுத்தகத்தில் பார்த்து படித்து பிடித்த வரிகள், சமையல் குறிப்பு மருத்துவக் குறிப்பு சிலசமயம் அவரது இன்பம் துன்பங்களைத் தாங்கிய கவிக்கிறுக்கல்கள் என்று அத்தனையையும் தாங்கி மிளிரும் புத்தகம் அது!

என்றும்போல் இன்றும் அதில் தனது எண்ணம் போல் வார்த்தைகளைக் கோர்த்து கவிமாலை தடுத்து வைத்தவர், முந்தைய நாள் எடுத்து இன்னும் படித்து முடிக்காத அந்த கதையின் நினைவு பெற்றவராக எடுத்துப் படிக்கத் துவங்கினார்.

அவரது குணங்களைக் கொண்ட ஒரு சாதாரண இல்லத்தரசியின் கதையே அது! படித்துக் கொண்டிருந்தவருக்கு சில இடங்களில் தன்னை பொருத்திப் பார்த்து கண்ணீரும் வந்தது. பிறந்த வீட்டிலும் அவர் பெரிதும் சுகம் கண்டதில்லை. அவரது பிறந்த வீடும் நடுத்தர வர்க்கத்திற்கும் சற்று கீழ்படிந்த தரம் தான். சரியான அசைவுகளைத் துறந்த கையினை உடைய தாயும், ஒரு அண்ணன், ஒரு தங்கை மற்றும் வெளியூரில் வீட்டுக்காவலராக பணிபுரியும் தந்தையும் கொண்டவரது வாசஸ்தலமே, அவ்வீட்டு சமையலறை தான்!

கூறினாலும் யாரும் நம்ப முடியாதபடி, எட்டு வயதிலிருந்தே தன்னை வீட்டுக்கு அர்பணித்த ஜீவன். வகைவகையாய் சமைக்கத் தெரிந்தும் சமைத்தும், அதை உடன் பிறந்தோருக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் பகிர்ந்துவிட்ட பின்பே தனக்கென ஒதுக்கிக் கொள்ளாததைக் கண்டுகொண்டு ஒரு பெருமூச்சுடன் கடந்துவிடுபவர்!

அதிகாலை அவர்கள் வீட்டுக் கோழி கூட தூங்கிக் கொண்டுதான் இருக்கும். ஆனால் சாதனா எழுந்து குளித்து தனது வீட்டு வேலைகளை செய்து முடித்து பள்ளிக்குக் கிளம்பிச் செல்வார். உடல் நலம் சரியில்லை என்றாலும் அவரைக் கேட்க அங்கு யாரும் இல்லை. என்றேனும் விடுமுறைக்கு வீடு வரும் தந்தை, மகள் சுருண்டு கிடப்பதைப் பார்த்தாள் துடிப்போடு, "எம்பொண்ணு உங்க எல்லாரையும் பார்த்து பார்த்து கவனிக்குறா. ஆனா அவளுக்கு சாப்டியானு கேட்கக் கூட இங்க யாருமில்லை. பிள்ள சுருண்டு கிடக்குதே என்னனு ஒருத்தர் கேக்குறீங்களா?" என்று கண்டு கொள்ளாத மூவரையும் திட்டிவிட்டு மகளை மருத்துவமனைக் கூட்டிச் செல்வார்.

வீட்டுக்காக வேலைக்கு சென்று தங்கைகளைப் படிக்க வைக்கும் அண்ணன் என்று அவனையும் வேலை செய்ய கூப்பிட்டுக் கொள்ள மாட்டாள், சுட்டிப் பெண்ணாக திரியும் தங்கையையும் உதவிக்கு அழைக்க மாட்டாள். அனைத்தையும் தானே செய்து பழகியவளுக்கு புகுந்த வீட்டிலும் எந்தவொரு வித்தியாசமும் இன்றி அதே ஏவலாலி வேடம் தான் கிடைத்தது!

அமைதியான ஒருவரிடம், அதுவும் கதை படிக்க விரும்பும் வாசகர்களின் கனவுகள் மிக அழகாகவும் ஆழமாகவும் இருக்கும். அப்படியான கனவுகளில் மட்டுமே தன் ஆசைகளைக் கொண்டு அனுபவித்துப் பார்ப்பவர் சாதனா!

தனக்குத்தான் ஒன்றும் அமையவில்லை, தன் மகளுக்காவது அவை கிடைத்திட வேண்டும் என்று போராடும் அவரது போராட்டத்தில் வறுமை என்ற அரக்கன் கணவன் ரூபத்தில் வந்து முட்டுக்கட்டைப் போட்டு மேலும் நோகடித்தான். ஏதோ ஒன்று கிடைத்தது என்று ஏற்று தனது பயணத்தை சிறப்பாக தொடரும் மகளின் துணிவில் தன்னை தேற்றிக் கொண்டு வாழ்பவருக்கு அவளே ஒற்றைப் பிடிமானம்.

மாமியார் கொடுமை கணவன் கொடுமை என்றெல்லாம் அவருக்கு ஏதுமில்லாத போதும், பாசமும் அன்பும் கலந்த அன்னையை போன்ற மாமியாரும் இல்லை, காதலும் கரிசனமும் பொழியும் கணவரும் இல்லை. கால் போன போக்கில் பயணம் என்ற ரீதியில் கடிகாரத்தின் முள்ளோடு ஓடும் வாழ்வு அவரது!

படிக்கும் ஆர்வத்தில் தன்னை மறந்தவர் மணி ஐந்தானதைக் கண்டு மாமியாருக்கு தேநீர் போட்டுக் கொடுத்துவிட்டு, வீட்டை பெருக்கி சுத்தம் செய்து உளர்த்திய துணிகளை எடுத்து வந்து மடித்து வைத்து இரவு உணவுக்கான ஏற்பாடுகளை முடிக்க, மகள் வந்து சேர்ந்தாள்.

அவளிடம் சிலநிமிடம் பேசிவிட்டு தனது இரவுப் பணிக்காக சமையலறை சென்றவர் அனைத்தையும் முடித்த நேரம் கணவர் வந்து சேர்ந்தார்.

குளித்து முடித்து புத்துணர்ச்சி பெற்று வந்தவரிடம், "ஏங்க.. நம்ம அபூ காலேஜ்ல எல்லாரும் ஒன்னு போல டிரெஸ் எடுக்கணுமாம். அதுக்கு ஐநூறு ரூபா கேட்டிருக்காங்க" என்று கூற, "டிரெஸ் எடுக்க எதுக்கு அவ்வளவு காசு?" என்றார்.

"எல்லாரும் ஒன்னா எடுக்குறாங்க. நல்லதா பார்த்து எடுத்தா கொஞ்சம் முன்னபின்ன தானே வரும்" என்று அவர் கூற,


"திடீர்னு வந்து ஐநூறு ரூபா கொடுனா நான் என்ன பணம் காய்க்குற மரமா வச்சிருக்கேன்? ஒவ்வொரு நாளும் அந்த வெயில்ல வெந்துட்டு வரேன். சாதாரணமா அவ கேட்குறா குடுனு சொல்ற? வீட்ல சும்மா இருக்குறதால உனக்கு பணத்தோட அருமை தெரியாம இருக்கலாம். அங்க போய் வெந்து சம்பாதிக்குறேன் நான்" என்று வார்த்தைகளை கூர்தீட்டி எறிந்தார்.

"நான் வீட்ல சும்மா இருந்தேன்னு நீங்க பார்த்தீங்களா? நான் சும்மா இருந்தா எப்படி உங்களுக்கு மூனு வேளை சாப்பாடு வரும்?" என்று ரோஷத்துடன் சாதனா சண்டை பிடிக்க,

"மூனு வேலை சாப்பாடு செய்யுறதை இவ்வளவு பெரிய விஷயமா பேசுறியே அப்ப நாள் முழுக்க அங்க வேலைல வேகுற நான் என்ன சொல்ல?" என்று அவரும் காய்ந்தார்.

இவர்களது சத்தம் கேட்டு அடித்துப்பிடித்து வந்த அபூர்வா "என்னாச்சும்மா?" என்க, "என்ன உங்கம்மாகிட்ட தூது விடுறீங்களாக்கும்? ஐநூறு ரூபா குடுத்து ஒன்னும் டிரெஸ் எடுக்கணும்னு அவசியம் இல்லை. போ போய் படிக்குற வழிய பாரு" என்றார். சண்டைக்கான அடித்தளம் அவளுக்கு புரிந்திட, பாவை முகம் சுணங்கிப் போனது!

மகள் முகம் கண்டு வருந்தியவர், "அவ என்ன வெட்டிச்செலவா பண்ணுறா? எல்லா பிள்ளைகளும் வாங்கும்போது அவ மட்டும் வாங்காம இருந்தா நல்லாவா இருக்கும்? உங்களால குடுக்க முடியலைனா விடுங்க. நான் கொடுத்துக்குறேன் என் பொண்ணுக்கு" என்று கத்த, "நீ கொடுக்குறனா நீயா சம்பாதிக்குற? என் சம்பாத்தியம் பணம் உன் பர்ஸுக்கு வந்துட்டா உன் பணமாகிடுமா?" என்றார்.

இருவரது வாக்குவாதத்தை வேதனையோடு பார்த்த அபூர்வா, "அம்மா.. அப்பா.. எனக்கு வேண்டாம். நான் எடுக்கலைனு சொல்லிடுவேன். விடுங்க" என்றுவிட்டு செல்ல, "எம்பொண்ணுக்கு அடிப்படை தேவைக்குக் கூட கெஞ்ச வேண்டி இருக்கு" என்று தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சென்றார். மௌனமாய் சில நிமிடங்கள் கழிய, யாவரும் இரவு உணவுக்குக் கூடினர்.

உணவுப் பொழுது முடியவும் எழுந்து செல்லவிருந்த மகளை நிறுத்திய வேலன் பணத்தை எடுத்துக் கொடுக்க, "இல்லப்பா வேணாம். நான் எடுக்கலைனு சொல்லிக்குறேன்" என்றாள்.

"வேணாம்மா. எல்லாரும் எடுக்கும்போது நீ எடுக்கலைனா நல்லா இருக்காது இந்தா" என்று காட்டமாக அவர் கூறியும் அவள் மறுக்க,


"இந்த ரோஷத்துக்கு அம்மா பொண்ணுக்கு குறைச்சல் இல்லை. இந்தா" என்றவர் பணத்தை வைத்துவிட்டுப் படுக்கச் சென்றார்.

அதில் சிரித்துக் கொண்ட சாதனா மகளிடம் பணத்தை எடுத்துக் கொடுக்க,

"எப்படிம்மா உன்னால சிரிக்க முடியுது?" என்று அபூ வினவினாள்.


"ஏ.. உனக்குமேல ரோஷம் பார்த்தவடி நானு.‌ இன்னிக்கு புருஷன் புள்ளகுட்டினு ஆனபிறகு அதெல்லாம் பார்த்தா ஆகாதுனு நிலமைக்கு வந்துட்டேன். அவரு ரொம்ப கஷ்டத்த பார்த்து அடிமட்டத்துலருந்து வந்தவரு. அதனால நாலு காசுனாலும் நானூறு முறை யோசிச்சுத்தான செலவழிப்பார். அப்ப இப்படி லேசா நாலு வார்த்தைய விடுவதுதான். அதை நான் பெருசு பண்ணிட்டு இருந்தா வாழ்க்கையே வேணாம்னு தான் போகணும். குடும்பஸ்திரியாகிட்டா இதெல்லாம் கடந்துதான் வரணும். போ" என்றுவிட்டு மீதிமுள்ள வேலையைப் பார்க்கச் சென்றார்.

அனைத்து வேலைகளையும் முடித்து படுக்க வந்தவர் தனது அலைப்பேசியில் சில நிமிடங்கள் செலவழிக்க, கண்களைத் தூக்கம் வருடியது. அலைப்பேசியை வைக்க இருந்த நேரம் அந்த வரிகள் அவர் கண்ணில் பட்டது…

'நான் ராணியில்லை தான்
ஆனால் அரசியென்ற பட்டம் பெற்றேன்…
நான் ஏவலாளி இல்லை தான்
ஆனால் பல ஏவல்களுக்குக் கட்டுப்பட்டேன்…
எதையும் ஆசைபட்டுப் பெற்றதில்லை தான்
ஆனால் பல ஆசைகளோடு கனவு வளர்த்தேன்…
அனைத்தையும் தாங்கும் கற்சிலை இல்லை தான்
பூ மனதிற்கு கடுமையை கற்பித்துக் கொண்டேன்…
ஏனோ என்று தான் என் வாழ்வு செல்கிறது..
அதில் தானோ என்ற பயணத்தில் எனக்கான சில பிடிமானங்களைத் தேடி பிடித்துக் கொண்டு தான் பயணிக்கின்றேன்..
ஏனெனில் நான் இல்லத்தரிசியாயிற்றே!'

சன்னமான புன்னகையோடு அலைப்பேசியை அணைத்து வைத்தவர், அடுத்த நாள் ஓட்டத்திற்கான தயார்நிலையோடு உறக்கம் கொண்டார்…




வீடே உலகம் என்று தங்களை சுற்றியுள்ளோருக்காக தங்களை அற்பனித்த அனைத்து இல்லத்தரசிகளுக்கும் இக்கதை சமர்ப்பணம்.. மேலும் அடுத்தவர்களுக்காக மட்டேமே என்று இல்லாமல் அவர்களுக்கான நேரத்தை உருவாக்கி 'தனக்கான நேரம்' என்று அவர்கள் வாழ இன்றைய தலைமுறை பிள்ளைகள் உதவி புரிய வேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறேன்.. நன்றி💞


கதை பிடித்திருந்தால் கீழே உள்ள திரியில் உங்கள் நிறைக் குறைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தங்கம்ஸ்🥰

 
Top