எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

துயர் தீராயோ தூயவா! - 2

** 2 **

1d7e34e5c10e6b454e7b2ad8d3915bb3.jpg


“அம்மா… அம்மா… எங்க இருக்கீங்க?” என கத்தியப்படியே தாயை தேடி ஒவ்வொரு அறையாக வித்யாம்பிகை ஓடினாள்.


மகளின் கூச்சலில் தனது வேலையை பார்த்துக்கொண்டே சுனைனா, “வித்யா குட்டி இங்கே இருக்கேன்டா” என குரல் கொடுத்தார்.


தாயின் குரல் கேட்டதும் அவரின் அறைக்குச்சென்ற வித்யாம்பிகை, “அம்மா! உங்களுக்கு விஷயம் தெரியுமா? நியூஸ் பார்த்தீங்களா?” என மூச்சு வாங்க கேட்டாள்.


“நான் எதையும் பார்க்கவில்லை வித்யா. நீ இப்படி மூச்சு வாங்க ஓடி வரும் அளவிற்கு என்ன நடந்தது?” என கேட்ட சுனைனா வேலையில் கண்ணாக இருந்தார்.


“என்ன நடந்ததா? இதை பாருங்க உங்க பையன் பண்ணிய வேலையை” என்று கூறியபடி பேப்பரை காட்டியவள்,


“போச்சு! இந்த முறை எங்க போகப்போறோமோ தெரியல? அனேகமா தண்ணியில்லாத காடாகத்தான் இருக்கும். இல்லை அதற்கும் வாய்ப்பு ரொம்ப குறைவு. நாம தான் முக்கால்வாசி காட்டை சுற்றியாச்சே. கண்டிப்பா இந்த முறை எந்த வசதியும் இல்லாத மலை, பனி பிரதேசமாக பார்த்து தான் டிரான்ஸ்பர் பண்ணப்போறாங்க” என அலறினாள்.


மகளின் இடைவிடாத அலறலில் பேப்பரை பார்த்த சுனைனா, “இதுக்கு தான் இவ்வளவு குதிக்கிறீயா?” என சாதாரணமாக கேட்டவர்,


“உன்னோட அண்ணன் ஒரு மாதமாக சரியாக வீடு வராமல் சுத்தும்போதே ஏதோ பெருசா பண்ணப்போறான்னு நினைத்தேன். நான் நினைத்ததை கொஞ்சம் கூட தப்பில்லாமல் சரியா செஞ்சுட்டான்” என அசால்ட்டாக கூறினார்.


“நீங்க உஷாரான மாதிரி என்னையும் உஷார்படுத்தியிருந்தா எனக்கும் இப்போது இவ்வளவு டென்ஷன் இருந்திருக்காது. போங்கம்மா…” என அப்பாவியாக அன்னையிடம் கேட்டவள்,


“அதெப்படி சொல்லுவீங்க? ரெண்டு பேரும் கூட்டுகளவாணிங்களாச்சே” என முகத்தை தூக்கி வைத்தபடி சொன்னாள்.


“எனக்கும் இவன் வேலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லடி. இதை பற்றி துவா சொல்லவே இல்லை, அவன் நடவடிக்கையை வைத்து நானா தான் யூகித்தேன்” என்றவர்,


“அம்மா இருக்கேனில்லை விடுடா பார்த்துக்கலாம்” என்றார்.


இருப்பினும் வித்யாம்பிகை, “விடுவதா? அதெல்லாம் முடியாது அம்மா” இவன் போலீஸ் ஆனாலும் ஆனான் என்னால் முடியல. இதுவரை நான் எத்தனை ஸ்கூல்? எத்தனை காலேஜ் மாறிட்டேன்? ஒரு ஊரில் கூட ஒழுங்க படிக்க போனதில்லை, அவ்வளவு ஏன் சொல்லிக்கும்படி ஒரு ஃப்ரண்ட்ஸ் கூட இல்லை” என அழாத குறையாக கூறினாள்.


“இருக்க ஃப்ரெண்ட்ஸ் போதும். அவங்க நம்பரை சேவ் பண்ணவே உன்னுடைய போனில் மெமரி பத்தாது போல், இதில் உனக்கு இப்படி ஒரு குறையா? சும்மா சின்ன பிள்ளை மாதிரி அடம் பண்ணிக்கிட்டு, வா வந்து அம்மாவுக்கு உதவி பண்ணு” என வாரியபடி மகளை அழைத்தார்.


ஆம்! வித்யாம்பிகைக்கு நண்பர் பட்டாளம் அதிகம்.


“இந்த முறை அம்மா உனக்கு தான் ஆதரவா பேசுவேன் சரியா?” என்று கூறி தாஜா செய்ய பார்த்தார்.


“நீங்க இப்ப இப்படித்தான் பேசுவீங்க. அண்ணா வந்து பெட்டியை கட்டுங்கனு சொன்னா உடனே கிளம்பிடுவிங்கனு எனக்கு நல்லா தெரியும்” என்று பிடிவாதம் பிடித்தாள்.


“அவன் வரட்டும் நாம இதை பற்றி பேசலாம் நீ வந்து அம்மா சொன்னதை செய்” என்று செல்ல

மகளை அழைத்தார்.


தாய் சொன்ன வேலை அவளுக்கு மிகவும் இஷ்டம் என்பதால் மற்றையதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு தனது திறமையை திறையில் காட்ட ஆரம்பித்தாள்.


அடுத்த சிறிது நேரத்தில் மகள் வரைந்த ஆடையை பார்த்த சுனைனா, “வாவ்! சூப்பர் வித்யா. இதை மட்டும் கல்யாண பொண்ணு பார்த்தா அப்படியே மயங்கிடுவா” என்றவர்,


“இவ்வளவு திறமையை வச்சுக்கிட்டு ஏன் உட்கார்ந்து ஒழுங்கா வேலை பார்க்கமாட்டேங்கிற? போன வாரம் கூட உன்னோட லக்சரர் என்னை கூப்பிட்டு பேசுனாங்க. வர வர ஒழுங்கா எதையும் செய்யமாட்டேங்கிறையாம். ப்ராஜெக்ட் கூட சரியா பண்ணலையாம். எதிலும் லேசியா இருக்கன்னு புகார் படிக்கிறாங்க. இங்க இவ்வளவு பண்றவள் ஏன் காலேஜில் சரியா இருக்கமாட்டேங்கிற?” என கண்டிப்பு கலந்த குரலில் அன்னையாக கேட்டார்.


“நான் என்னம்மா பண்ண? எனக்கு காலேஜில் எதுவும் சரியா வரமாட்டேங்கிறது. எவ்வளவு முயற்சி பண்ணி பண்ணாலும் சொதப்புகிறேன். அதே வேலையை வீட்டில் பண்ணா நினைத்ததை விட பல மடங்கு நல்லா வருது. அப்படித்தான் போனமுறை நான் செய்த ப்ராஜெக்ட் நல்லா வந்து கிளாஸ் டாப்பரா வந்தேன். அவ்வளவு ஏன் எக்ஸாம் கூட நல்லா தான் எழுதறேன். ஆனால் கிளாஸ்னா மட்டும் கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி ஆகிடுது” என பாவமாக கூறினாள்.


அவளின் வார்த்தையில் தாங்கள் மறக்க நினைத்த நினைவுகள் சுனைனாவை மூச்சடைக்க செய்தது. அதில் கலங்கிய கண்களை மகளுக்காக முயன்று கட்டுப்படுத்திக் கொண்டார்.


சுனைனா, “இப்படியே ஏதாவது ஒரு காரணம் சொல்லி கிளாஸ் கட்டடிக்க பார்க்கிறியா? அதெல்லாம் முடியாது ஒழுங்கா நல்ல பிள்ளையா படிப்பில் கவனமா இருக்கணும்” என்று அழுத்தமாக கூறியவர்,


மகளின் வாடிய முகத்தை கண்டு, “ரொம்ப கஷ்டமா இருக்காடா?” என வாஞ்சையாக கேட்டார்.


“முன்பு இருந்த அளவுக்கு இப்ப இல்லைமா நல்லாவே முன்னேறி இருக்கேன்” என புன்னகையுடன் கூறியவள்,


தாயின் வருத்தத்தை காண சகிக்காமல், “நான் யார்? டெல்லி, மும்பை, ராஜஸ்தான், ஒடிசானு பல இடங்களை கதிகலங்க வைத்த ஐ.பி.எஸ் அதிகாரி தூயவன் நம்பிநாடனுடைய தங்கச்சி. கோழை மாதிரி பயந்து ஓடமாட்டேன் துணிந்து நிற்பேன். அதற்கான தைரியத்தை என்னோட அண்ணணும் அம்மாவும் கொடுத்திருக்காங்க” என கர்வத்துடன் கூறினாள்.


“அடடா! என்ன ஒரு அழகான காட்சி? இதல்லவோ இந்த நூற்றாண்டின் சிறந்த காட்சி” என்றபடி விமலேஷின் அன்னை மீனாகுமாரி உள்ளே வந்தவர்,


“என்னடி மருமகளே உங்க அம்மா என்ன சொல்றா? வழக்கம் போல் அட்வைஸ் பண்றாளா? என்னோட மருமகனிடம் சொல்லி கண்டிக்க சொல்றேன்” என்று தோழியை கலாய்த்தார்.


“வாடி! வந்ததும் வம்புக்கு ஆள் தேடறியா? ஆளைவிடு அடுத்த வாரம் ஒரு மேரேஜ் கான்ட்ராக்ட் வந்திருக்கு அதற்கு தீம் ரெடி பண்றேன். இப்ப உன்னோட சண்டை போட நான் தயாரா இல்லை” என புன்னகைத்தபடி கூறினார்.


சுனைனா ஓர் வெட்டிங் பிளானர். கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக மேரேஜ் ஈவன்ட் செய்து வருகிறார். இவரின் ரசனையும் தனித்துவமும் மக்களுக்கு பிடித்துவிட சென்னையில் டாப் டென் பிளானராக உள்ளார். அதோடு அவரின் திறமை கண்டு சென்னை மட்டுமல்லாது பல ஊர்களிலிருந்து ஆர்டர்கள் குவிந்து வருகிறது. தற்போது அவருக்கு துணையாக வித்யாம்பிகையும் சேர்ந்து விட்டாள்.


இவளின் ஆடை வடிவமைப்பு மணமக்களுக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் பிடித்து விட சமூகத்தில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை சிறுக சிறுக உருவாக்கி வருகிறாள்.


தாய் போல் மகளின் திறமையும் மெல்ல மெல்ல சென்னையை தாண்டி வெளியேயும் பரவி வருகிறது.


“சரிதான் போடி. நான் ஒன்னும் உன்னிடம் சண்டைக்கு வரலை, என்னுடைய மருமகன் செய்த சாகசத்தை உனக்கு காட்டிட்டு போகலாம்னு தான் வந்தேன்” என நியூஸ் பேப்பரை காட்டி கூறினார்.


“அத்தை! இதில் சாகசம் முக்கியமில்லை அடுத்து நடக்கவிருப்பது தான் முக்கியம்” என்று கூற,


சுனைனா, “இவளொருத்தி, சும்மா அதையே சொல்லி புலம்பிகிட்டு இருப்பா” என சலித்துக்கொண்டவர்,


மீனாகுமாரியிடம், “அவன் வந்ததும் முதல் வேலையாக இவங்க பஞ்சாயத்தை முடிக்கணும்டி” என்றார்.


அதற்கு அவரோ, “என்னமோ பண்ணு அது உன்னோட பாடு நான் இதில் தலையிடமாட்டேன்பா” என்று வாய் வார்த்தையாக சொன்னவர்,


வித்யாம்பிகையிடம், “உனக்கு இப்ப என்னடி பிரச்சினை? துவாக்கு டிரான்ஸ்பர் ஆகும்னு உனக்கு யார் சொன்னா? ஏதாவது கட்டாயம் இருக்கா? இல்லையில்லை? அப்படியே ஏதாவது நடந்தாலும்

பரவாயில்லை விடு. நீ அத்தை கூட வீட்டுக்கு வந்திரு இவங்க ரெண்டு பேரும் எங்கேயோ போகட்டும். உனக்கு செமஸ்டர் முடிந்ததும் அங்க போயிடுவ சரியா? அதோடு நானும் இங்கே தனியாக தான் இருக்கேன். நீ வந்தா எனக்கும் துணையா இருக்கும்” என அழைத்தார்.


“என்னது நீ தனியா இருக்கியா? அப்ப அண்ணா வீட்டிற்கு வராமல் எங்கடி போரார்?” என்று கேலியாக கேட்ட சுனைனா,


“மகனும் மகளும் வீட்டில் இல்லைனா உனக்கு தனியா இருப்பது போல் இருக்கா? அப்ப இத்தனை வருஷமாக உன்னை கொண்டாடிகிட்டு இருக்காரே அவரை பார்த்தால் மனுஷனா தெரியலையா?” என்று குறும்பாக கேட்டார்.


“விமலேஷ் தான் வேலையினால் ஊர் ஊரா சுத்தறான்னு பார்த்த இந்த மோகனா இருக்காளே படிக்கிறேன்னு சொல்லி மும்பை போய் உட்கார்ந்துட்டா. இதுங்க தான் இப்படி இருக்காங்கனா அவர் அதுக்கும் மேல்.


என்னோடு இருக்கார்னு தான் பெயர் மத்தபடி அவருக்கு முதல் பொண்டாட்டி வேலை. அதற்கு பிறகு தான் நான். அந்த லட்சணத்தில் வீட்டுக்கு வருகிறார். இருபத்தி நாலு மணி நேரத்தில் இருபது மணி நேரம் ஏர்போர்ட்டே கதினு இருக்கிறார். சேர்ந்து உட்கார்ந்து நாலு வார்த்தை எங்க பேச முடியுது? காலில் வெந்நீர் கொட்டின மாதிரி ஓடுகிறார். ஏதோ பக்கத்து வீட்டில் நீங்க இருப்பதால் நேரம் போகுது இல்லைனா பைத்தியமே பிடிச்சுடும்” என அழுத்துக்கொண்டார்.


“போதும் ரொம்ப தான் அழுத்துக்காதடி. நீ மட்டும் என்னவாம்? மகனை பார்க்க போறேங்கிற பெயரில் மதுரையில் ஒரு வாரமும் மகளை பார்க்க போறேங்கிற பெயரில் மும்பையில் ஒரு வாரமும் டேரா போட்டுற. இதில் அண்ணனை குறை சொல்றியா?” என மீனாகுமாரியை வாரினார்.


“உங்க அண்ணனை சொன்னா போதுமே அப்படி வரிஞ்சுக் கட்டிக்கிட்டு வந்திடுவ” என்றவர்,


“இதெல்லாம் போகட்டும் துவா எப்ப வரான்?” என ஆசையாக கேட்டார்.


“கொஞ்ச நேரத்தில் வந்திடுவான்னு நினைக்கிறேன்டி” என்ற சுனைனா,


“மருமகனுக்கு என்ன வைத்திருக்க?” என புன்னகையுடன் கேட்டார்.


“அழகா, அம்சமா ஒரு பொண்ணையே பெத்து வைத்திருக்கேனே போதாத?” என அவரை போலவே கேலியாக கேட்டார்.


அப்பொழுது உள்ளே வந்த தூயவன், “அவள் பொண்ணில்லை அத்தை பிசாசு. அதுவும் ரத்தம் குடிக்கிற காட்டேரி” என்றபடி அமர்ந்தான்.


ஆசை மருமகனை பார்த்ததும் புன்னைகையோடு, “வாடா வாடா! உன்னை பார்க்கத்தான் வந்தேன்” என்றவர்,


“ஊர் கண்ணே பட்டிருக்கும் துவா. முதலில் சுத்தி போடனும்” என்றார்.


“ரொம்பத்தான். இவ்வளவு நேரம் என்னை கொஞ்சுனிங்க இப்ப அவன் வந்ததும் நான் மறந்து போய்ட்டேனா? என்ன இருந்தாலும் உங்களுக்கு இந்த தடிமாடு தான் முக்கியம்” என பொறாமையில் வித்யாம்பிகை பொங்கினாள்.


அதற்கு தூயவன், “பொறாமை! போ போய் சூடா டீ போட்டு வா தலை வேற வலிக்குது” என்றான் அதிகாரமாக.


“பொறாமையும் இல்லை ஒரு மண்ணும் இல்லை” என கத்தியவள் அண்ணன் கேட்டதை தவறாமல் செய்தாள்.


தங்கை சென்றதும் தூயவன், “என்ன அத்தை காற்று இந்த பக்கம் வீசுது?” என்று வம்பிழுத்தான்.


“வேற என்ன? என்னுடைய மருமகளையும் மருமகனையும் பார்க்கத்தான் வந்தேன்” என்றார்.


“பொய் சொல்லாதிங்க அத்தை. அடுத்து எந்த ஊருக்கு கிளம்பறீங்க?” என நாடியை பிடித்தான்.


“பொய்யெல்லாம் ஒன்னுமில்லைடா. ஆனாலும் ஊருக்கு போவது உண்மை தான்” என்றவர்,


“அடுத்து எங்க?” என ஆவலாக கேட்டார்.


“ஒரு மாசம் வீட்டில் தான் அத்தை இருக்க போறேன்” என அலட்டிக் கொள்ளாமல் கூறினான்.


அதை கேட்ட சுனைனா, “என்ன ஒரு மாதமா ஏன்?” என சந்தேகமாக கேட்டார்.


டீ கொண்டு வந்த வித்யாம்பிகை, “உன்னை நம்பற மாதிரி இல்லையேடா. ஏதோ இருக்கு என்ன விஷயம்டா?” என கேள்வியாக கேட்டாள்.


“வேற என்ன? உயர் அதிகாரிகளுடைய ஆர்டரை மீறியதால் சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க” என அசால்ட்டாக கூறினான்.


அதற்கு வித்யாம்பிகை, “நல்லது பண்ணா சஸ்பெண்ட் செய்திடுவாங்களா? அவங்க பேச்சை கேட்டுக்கிட்டு இருந்தால் குழந்தைகளை காப்பாற்றியிருக்க முடியுமா? இதெல்லாம் அநியாயம் அண்ணா” என மூக்கு விடைக்க கேட்டாள்.


இதுதான் இவள். என்ன தான் இருவருக்கும் முட்டிக்கொண்டாலும் மற்றவர்களிடம் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். வித்யாம்பிகையின் முன் யாராவது தூயவனை குறை கூறிவிட்டால் அவ்வளவு தான். ருத்ரதாண்டவமே ஆடி தீர்த்துவிடுவாள். அந்த அளவுக்கு அண்ணன் மேல் அதீத பாசம் கொண்டவள்.


“நல்லது பண்ணா சில அடிகள் விழத்தான் செய்யும் உருண்டை. அதெல்லாம் மண்டையில் ஏற்றிக்கிட்டா நாம எதுவும் பண்ண முடியாது. தூசி தட்ற மாதிரி தட்டிவிட்டுக்கிட்டே போயிடணும்” என உண்மையை கூறினான்.


“உருண்டைனு சொன்ன கொன்னுடுவேன்டா" என்று அண்ணனை மிரட்டியவள்,


"நல்லது பண்ணாக்கூட இங்க குற்றம். என்ன உலகமோ இது?” என முனுமுனுத்தவளை அடக்கிய சுனைனா,


மகனிடம், “குழந்தைகள் எப்படி இருக்காங்கடா?” என கவலையாக கேட்டார்.


“சொல்லப்போனால் பாதிக்கு பாதி பேரை வீட்டுக்கு அனுப்பியாச்சு. மீதி பேரை அனுப்ப ஏற்பாடு நடந்துக்கிட்டு இருக்குமா” என்றவன் பார்வை தாயை ஊசியாக துளைத்தது.


மகனின் பார்வையில் தடுமாறிய சுனைனாவை கண்ட மீனாகுமாரி, “போதும் இதை பற்றி பேசினது. போடா போய் குளிச்சிட்டு வா சாப்பிடலாம். மணி ஆகுது பார்” எனக்கூறி அனுப்பி வைத்தவர் வித்யாம்பிகையுடன் கிச்சனுக்கு சென்றுவிட்டார்.


இவர்கள் செல்லவும் தான் சுனைனாவிற்கு மூச்சே வந்தது. எங்கே மகன் ஏதாவது கேட்டு விடுவானோ என்ற பயம் அவரை தின்றது.


எந்த விஷயம் மகனுக்கு தெரியக்கூடாது என மறைக்கிறாரோ அதை தன் வாயாலே விரைவில் சொல்லப்போகிறோம் என்று பாவம் சுனைனாவிற்கு தெரியவில்லை.
 
Top