ஜனவரி 1ஆம் தேதி நள்ளிரவு 12:00A.M. மணியளவில் ஆங்கில புத்தாண்டு அன்று நம் கதை களத்தின் Teaser வெளியிடப்படும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
படிக்க தயாரா இருங்க friends....
நள்ளிரவு நேரம். வானத்தில் மேகக்கூட்டங்கள் திரண்டு நிற்க, செவ்வானமாக காட்சியளித்து மழை வரும் அறிகுறியை உணர்த்தின. சற்று நேரத்தில் ஆயிரம் ஊசிகள் ஒரே நேரத்தில் வின்னிலிருந்து தரையிறங்குவதுபோல் கனத்த மழை பெய்யத் துவங்கியது. புயல் மழையிலும் அந்த நீண்ட சாலையில் ஒரு டாக்ஸி வேகமாக சென்றுகொண்டிருந்தது.
அன்று தன்னுடைய கடைசி சவாரியை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த அந்த ஓட்டுனர் மழையையும் பொருட்படுத்தாமல் மின்னலென வாகனத்தை ஓட்டினார். அப்போது சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த பெண் வாகனத்தை நிறுத்துமாறு சைகை செய்தாள். அவளைக் கண்டதும் அந்த ஓட்டுனருக்கு குழப்பமும், பயமும் உண்டாயிற்று. ஆனாலும் அவளுடைய நிலையைக் கண்டு அவளருகே நிறுத்தினார்.
அவள் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அந்த வண்டியினுள் ஏறிக்கொண்டாள். வாகனம் மீண்டும் பயணிக்க அந்த ஓட்டுனர், "நீங்க எங்க போகணும் மேடம்?" என்று கேட்க அவள் ஒரு பிரபலமான நட்சத்திர விடுதி ஒன்றிற்கு செல்லவேண்டும் என்று சுருக்கமாக பதிலளித்தாள். அவளுடைய செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் அவர் முன்கண்ணாடியின் மூலமாக கவனித்துக்கொண்டே இருந்தார். அவளுடைய கைகால்கள் பதற்றத்தால் நடுங்கின.
அந்த டாக்சியின் இரு பக்கங்களிலும் உள்ள கதவுக் கண்ணாடிகளை முழுவதுமாக மூடிக்கொண்டாள். அவள் வெளியே பார்த்துக்கொண்டே வந்தாள். அப்போது தற்செயலாக அவளுடைய பார்வை முன்கண்ணாடியின் பக்கம் சென்றது. அந்த ஓட்டுனர் தன் சைகைகளை கவனிக்கிறார் என்பதை அறிந்ததும் பதற்றத்தைக் குறைத்துக்கொண்டு இயல்பாக அமர்ந்தாள். பின் தன்னுடைய கைபேசியில் எதையோ செய்துகொண்டிருந்தாள்.
நட்சத்திர விடுதி வந்ததும் அவசர அவசரமாக டாக்சியிலிருந்து இறங்கினாள். தன் கைக்கு வந்த பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு அந்த ஹோட்டலினுள் நுழைந்தவள் தன் அறைக்குச் செல்ல லிஃடினுள் புகுந்தாள். அறை இருக்கும் தளத்தின் எண் பொறிக்கப்பட்ட அந்த பொன்னிற பொத்தானை பலமுறை வேகமாக அழுத்தினாள். பலமுறை அவளுடைய கண்கள் லிஃடின் வெளியே பதற்றத்துடன் நோக்கியது.
சிறிதுநேரத்தில் அந்த லிஃடின் உலோக கதவுகள் தாமாக மூடிக்கொண்டன. அவள் தன் தளத்தை அடைந்ததும் விரைந்து வெளியேறி தன்னுடைய அறையை நோக்கிச் சென்று கதவை தாழிட்டாள். உள்ளே வந்தவள் செய்வதறியாது கைகளைப் பிசைந்தவாறு அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள். அந்த குளிர்ந்த அறையிலும் அவளுக்கு வியர்த்துக் கொட்டியது. ஏதோ தோன்ற விரைந்து லக்கேஜை எடுத்து தன்னுடைய துணிமணிகளை அதனுள் அவசர அவசரமாக நிரப்பத் துவங்கினாள்.
அப்போது அந்த அறையின் அழைப்புமணி ஒலித்தது. அதைக் கேட்டவுடன் அவளுடைய நெஞ்சத்தில் குளிர் பரவியது. அவளுடைய இதயம் இயல்பைவிட பலமடங்கு வேகமாக துடித்தது. அந்த கதவையே வெறித்தவண்ணம் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தாள். அழைப்புமணி மூன்றுமுறை ஒலித்துவிட்டு பின் நின்றது. அப்போது அவள் பயத்துடன் மெல்ல அந்த கதவை நோக்கி அடியெடுத்து வைத்தாள். குமிழை மெல்ல திருகி கதவைத் திறந்து பார்த்தபோது அவளுடைய கண்கள் அதிர்ச்சியால் விரிந்தன.