NNK-87
Moderator
அஞ்சனம் டீஸர்: 01
திருமண முகூர்த்த பட்டுக்களுக்கே பிரசித்தி பெற்ற அந்த ஜவுளி கடை சேல்ஸ்மேன் துவக்கம், பல வாடிக்களையாளர்கள் பார்வைகள் அவளை தான் மொய்த்து கொண்டிருந்தது.
"இது அந்த பொண்ணு தானே!
ச்சே… வெட்கமே இல்லாம எப்படி தான் வெளிய வர்றாளோ!
நான்லாம் இவ இடத்தில இருந்திருந்தா? இந்நேரம் தூக்குல தொங்கி இருப்பேன்.
மானம் ரோஷம் இருக்கவ அப்படி ஒரு காரியத்தை எப்படி பண்ணுவா?
இப்படி உடம்ப காட்டி தான் ஜெயிக்கணுமா என்ன?
எனக்கு இது போல ஒரு பொண்ணு இருந்திருந்தா சோத்துல விசம் வச்சி கொன்னுருப்பேன். என்ன பிறவி தானே இதுங்க எல்லாம்.."
ஆயிரமாயிரம் ஏச்சு, பேச்சுகள் நடுவே முகூர்த்த சேலை பார்த்துக் கொண்டிருந்தவள், விழிகள் செவ்வென சிவந்து போக, மூச்சை உள்ளிழுத்து கொண்டே தன்னை நிலைப்படுத்த முயன்று கொண்டிருந்தாள் அஞ்சனா.
அவள் தாய், தந்தையோ கூனி குறுகி மகளுக்கு அரணாக இருபுறமும் நின்றிருக்க,
ருத்ரா வீட்டு ஆட்களோ, அருவருப்பாக தான் அங்கே நின்றிருந்தார்கள்.
"அக்கா இதெல்லாம் தேவையா நமக்கு? அப்படி இவகிட்ட என்ன இருக்குன்னு, இவளை தான் கட்டிப்பேனு ஒத்த கால்ல நிற்கிறான். அசிங்கமா இருக்கு எங்களுக்கு. இனி கல்யாண ஷாப்பிங் எங்கேயும் எங்களை கூப்பிடாதீங்க. அவ கூட வந்தா நம்ம மேலையும் தான் சேர அள்ளி பூசுவாங்க." என்று சொல்லிக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்து, தங்களுக்கான உடைகளை தெரிவு செய்ய சென்று விட்டார்கள் உறவுகள் எல்லாம்.
அவர்கள் பேச்சிலும், மற்றவர்கள் பார்வையிலும் கோபம் கொண்டு அஞ்சனா அருகே வந்த ருத்ரன் அன்னையோ,
"எவ்வளவு நேரம் தான் செலக்ட் பண்ணுவ? எல்லாரும் உன்னை தான் பார்க்கிறாங்க, சீக்கிரம் எடுத்துட்டு கிளம்பு" என்று அடிகுரலில் சீற,
விரல்கள் நடுங்க அமர்ந்து இருந்தவள், கையருகே கிடந்த புடவையை காட்டி விட்டு வேகமாக அவ்விடத்தை விட்டு எழுந்து ஓட,
மேலும் சில வக்கிர விழிகள் அவள் உடலை மொய்த்த படி தங்கள் கைகளில் இருந்த போனில் அஞ்சனாவை புகைப்படம் எடுக்க,
உடல் கூசி போனது அவளுக்கு.
இது போதாதென்று மீடியாக்கள் வேறு, அவள் வெளியே வந்த தகவல் அறிந்து வந்து சுற்றி வளைத்து விட்டார்கள்.
"மேடம்… அந்த வீடியோ பத்தி என்ன சொல்றீங்க?
எதுக்கு இந்த அவசர கல்யாணம்?
ஃபோர்ட் ஆப் மெம்பர்ஸ் இனி நீங்க அந்த கம்பிடிஷன்ல கலந்துக்கவே முடியாது சொல்லிட்டாங்களே, அதனால தான் கல்யாணம் பண்றீங்களா?
நீங்க வின் பண்ண போட்டிகள் எல்லாமே இதே போல குறுக்கு வழில தான் வின் பண்ணத வேற சொல்றாங்களே? அது உண்மையா?"
சுற்றி சுற்றி நான்கைந்து கேமாராக்களோடு மைக்கை அவள் வாயருகே நீட்டி நீட்டி கேள்விகள் கேட்க,
உடல் நடுங்க அரண்டு நின்றிருந்தவளுக்கு அரணாக வந்து அணைத்து கொண்டான் ருத்ரான்ஷன்.
ஈயென மொய்த்து கொண்டிருந்த கேமராக்களையும், மைக்கையும் கைகளை நீட்டி தட்டி விட்டவனை அஞ்சனாவும் இறுக பற்றி கொண்டாள்.
இத்தனை நேரம் அஞ்சனாவை துகிலுரித்த கேள்வி கணைகள் இப்போது ருத்ரன் மீது ஏவப்பட்டது.
*********
பயம் இல்லாது வாழ்க்கை இல்லை தான்…
ஆனால் பயமே அவள் வாழ்க்கையாகி போனது.
பயம் என்னும் அணங்கை கொன்று அவனவளை மீட்பான இந்த ருத்ரான்ஷன்.
விரைவில் அஞ்சனத்தின் பயணம் தொடங்கும்.
இணைந்திருங்கள் எப்போதும்..
நன்றி….
Last edited: