நல்லதோர் வீணை செய்தே- அதை நலங்கெடப் புழுதியி லெறிவ துண்டோ?சொல்லடி சிவசக்தி!
இன்று பிடிப்பவை நாளை பிடிக்காமல் போகும் இந்தக் கலிகாலத்தில், நல்ல அற்புதமான வீணை ஒன்றைச் செய்து, அதன் நலம் கெடும் வகையில், புழுதியில் எறிந்திருந்தால் கூட, அதன் பெருமை உணர்ந்த யாராவது இன்னொருவர் பொக்கிஷமாய்க் கருதி அதைத் தன்னோடு எடுத்துச் சென்றிருக்கக் கூடும்.
ஆனால், தன் வீட்டில் இடம் போதவில்லை என்ற காரணத்தால், வீணையை விறகுக் கடைக்காரனிடமா விற்பது.
சங்கீத ஞானம் கொண்ட ஏழு வயது குழந்தையின் கையில், வைகையில் துள்ளி விளையாடும் மீனாய், ஆனந்தத் துள்ளல் துள்ளி தானும் மகிழ்ந்து மற்றவரையும் மகிழ்விக்க, தேன்கானம் போன்ற இசையை வெளியிடும் அற்புதமான அந்த வீணை, ஐம்பது வயது மதிக்கத்தக்க விறகுக் கடைக்காரனுக்கு, அவன் கடையின் மூலையில் கிடக்கும் பல தரப்பட்ட மரங்களின் வெட்டுப்பட்ட துண்டுகளோடு துண்டாக அதுவும் ஒரு விறகாகத் தான் தெரியும்.
உலக அறிவு இல்லாத ஒரு கழுதை மேய்ப்பவன் கையில் அரிய வைரம் கிடைப்பதால், அவனுக்கும் பிரயோஜனம் இல்லை, அந்த வைரத்திற்கும் பெருமை ஏற்படப் போவதில்லை.
ஒரு பொருளின் உண்மையான மதிப்பை உணர்வதற்கு வயதோ, அந்த வயது வரை எப்படியோ வாழ்ந்துவிட்டதால் கிடைத்த அனுபவமோ போதுமானதாக இருக்க முடியாது.
நல்ல இல்லத்தில் பிறந்து, சுயஒழுக்கமும், சுயமரியாதையோடு கூடிய மேலான எண்ணங்களை உயிராகக் கொண்டு, பெற்றவர் தெய்வத்தை விட மேலானவர் என்ற நினைப்போடு வாழ்ந்த பெண்ணை, பெற்றவரே சுமையெனக் கருதி கிடைத்த இடம் போதும் என்று தள்ளிவிட, தந்தைக்குத் தான் தன்னைப் பிடிக்கவில்லை, திருமணமாகிப் போகும் இடமாவது நன்றாக இருக்கும் என்று ஆயிரம் கனவுகளுடன் இருந்த வைரம், அவள் போய்ச் சேர்ந்தது என்னவோ அதன் மதிப்பை அறியாத கழுதை மேய்ப்பவனிடம் தான்.
துன்பம் என்ற படியால் பட்டை தீட்டப்பட்டு முன்பை விட கூடுதலாக மிளிர்ந்த பெண்ணவள், தன் மதிப்பை தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு உணர்த்தினாளா? இல்லை தான் உணர்ந்தாளா? என்பதைப் பற்றிய கதை.
பலர், பலவகையில் எழுதிய பெண்ணுரிமை பற்றிய கதை தான் என்றாலும் நான் எழுதுவதால் புதிது, அதோடு எனக்கும் இது புதிது.
இதில் நாயகி அழுவாள், அதை விட வேகமாக எழுவாள். தன் நிலையை நினைத்து புலம்புவாள், அடுத்த கணம் அதை மாற்ற நினைப்பாள்.
பொறுமைசாலியவள் அதற்காக அடிமை அல்ல, வீம்புக்காரி ஆனால் விதண்டாவாதம் செய்பவள் அல்ல. உறவின் பெருமை அறிந்தவள், அதற்காக தவறு செய்யாமல் தலகுனியமாட்டாள்.
பெண்கள் பலரின் குரலாக விரைவில் வருவாள், நிலாக்காலத்தில்...