அத்தியாயம்02
மாலை மங்கிய வேளை அது! காலையில் இருந்து வாட்டி எடுத்த சூரியனாரின் வெக்கை தணிந்து மெல்லிய தாலாட்டுப்போல சிலுசிலுவென காற்று வீசிக்கொண்டிருந்தது.
“வாணிக்கா, அரவிந்தண்ணா சொன்னது உண்மையோ?” வீட்டின் பின்பக்கம் வாழை மரங்களும் தென்னை மரங்களும் வரிசையாக நாட்டியிருந்தார்கள். மறுகோடியில் தன் கையாலே பயிரிட்ட பூக்கன்றுகளுக்கு தண்ணீ பாய்ச்சிக் கொண்டிருந்த வாணிக்கு காதில் கேட்ட குரலில் சிரிப்பு மலர்ந்திற்று.
“வாணிக்கா எங்க அத்தை?” இந்ராணியிடம் அவள் கேட்பது காதில் விழ, காதை அவளிலே வைத்து சிரிப்புடன் வேலையை தொடர்ந்தவளுக்கு முன் மூச்சு வாங்க வந்து குதித்த நியந்தனாவுக்கு அப்போது பதினாறு வயது இருக்கும்.
இருபத்திமூன்று வயது வாணிக்கும் அவளுக்கும் இடையே வயது வித்தியாசம் பாராத, அன்பெனும் பாசக்கயிறு மிக வலிமையாகக் கட்டப்பட்டு இருந்தது.
இத்தனைக்கும் இந்ராணி அவளுக்கு சொந்த அத்தையும் இல்லை. வெறும் அயலட்டை உறவுதான். நியந்தனாவுக்கும் வாணிக்கும் ஏற்பட்ட நட்பே நாளடைவில் இரு குடும்பங்களுக்கும் இடையே பிணைப்பை ஏற்படுத்தி இருந்தது.
துரு துருவென ஓரிடத்தில் நில்லாமல் வளைய வரும் அவளை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும். “வாணி மட்டுமில்ல, இந்தா நித்தியும் எங்கட வீட்டுப்பிள்ளை போலதான்” பெருமையாக அறிமுகப்படுத்துவார் இந்ராணி. அந்தளவில் அவர்களின் குடும்பத்தில் ஒருத்தியாய் இணைந்திருந்தாள்.
“வகுப்பு முடிஞ்சதா நித்தி? அதுக்குள்ள அஞ்சாகிற்றா” முன்னுக்கு நின்றவளை நிமிர்ந்து பார்த்து விசாரித்தாள்.
ஓஎல் படிக்கும் அவளுக்கு ஒவ்வொரு நாளுமே பின்னேர வகுப்புகள் நடைபெறும். இப்போதும் வகுப்பு முடிந்த களை முகத்தில் தெரிய, ஓடி வந்ததில் இடுப்பில் கைகுத்தி மூச்சுவாங்கிக் கொண்டிருந்தாள்.
“ஓமோம். இப்பதான்” பெரிய பெரிய மூச்சுக்களுக்கிடையே சொன்னவள் “நான் கேட்டதுக்கு பதில் வரேல்ல” முகத்தை சுருக்கினாள்.
“என்ன கேட்டனீ” கடைசி பூக்கன்றுக்கும் தண்ணீ பாய்ச்சி முடிய, ஹோர்சை கழற்றி அதனிடத்தில் வைத்தவள் கைகள் இரண்டையும் கழுவிக்கொண்டே கேட்க,
‘அத என்ர வாயால இன்னொரு தரக்க வேற சொல்லோணுமா?’ புறுபுறுத்த மனதை அடக்கேலாமல் “பெரிய்ய்ய கொம்பர், கனடால இருந்து கேட்டு வந்திருக்காராம். உண்மையா?” வேண்டாவெறுப்பாக கேட்டவளுக்கு மனதே ஆறவில்லை.
அவளுக்கு வாணி என்றால் கொள்ளை பிரியம். பிறந்த ஊரை விட்டு திடுதிடுப்பென்று ஒருநாள் யாழ்பாணத்துக்கு குடிவந்தபோது அவளின் உலகமே வெறிச்சோடிப் போயிருந்தது. சோகமே உருவாக தெருவில் நின்று புதினம் பார்த்தவளிடம் “பக்கத்து வீட்டை புதுசா வாடகைக்கு வந்த ஆக்கள் நீங்கதானா?” விசாரிப்புடன் அறிமுகமாகியவள் வாணி.
அப்பிராணியாக தலையை உருட்டியவளை அந்தக் கணமே பிடித்துப்போயிற்று வாணிக்கு. “என்ர பேர் இசைவாணி. வாணி எண்டு எல்லாரும் கூப்பிடுவீனம். இது தான் என்ர வீடு. என்னையும் தேவை எண்டா கேளும், சரியோ” பெரிய பிள்ளையாக சொல்லியவள் “உன்ர பேர்?” எனக்கேட்டு “நியந்தனா” என்றவளை “நித்தி எண்டு கூப்பிடுறனான்” என்று முதல் முறை அழைத்ததும் அவள்தான்.
அதனாலே அவள் என்றால் நியந்தனாக்கு எப்போதுமே ஸ்பெஷல் தான்.
“ஆரு சொன்னது?” அவள் கேட்ட தோரணையில் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டே கேட்க,
“அதா இப்ப முக்கியம். முதல் நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்கோ!” பிடிவாதமாக முகம் பார்த்திருந்தவளுக்கு நேராக பதில் சொல்லாமல் “பொம்பிளை எண்டு இருந்தா மாப்பிள்ளை கேட்டு வரத்தானடீ செய்வினம்” என்றவள் கன்னங்கள் அவளை மீறியும் மிளிர்ந்திற்று.
“வெக்கப்படுறியலா… அப்ப ஓமெண்டு சொல்லிட்டியல் என்ன!” உறுதிப்படுத்த கேட்டவளுக்கு மனதே விட்டுப்போயிற்று.
“அப்பிடி என்ன அவசரமாம் மாமிக்கு!” முறைப்புடன் சொல்லி முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள,
“அட! மூக்கு நுனியில் கோபத்தை கட்டி வச்சிருக்கிறயோ. வரவர சட்சட்டென்று கோபப்படுறாயடி நித்தி” நொடியில் அவளின் கோபத்திற்கான காரணத்தை ஊகித்துவிட்ட வாணியின் முகத்தில் பெரிதாக புன்னகை விரிந்திற்று.
அவளும் ஓம் எண்டு சொல்ல இருக்கவில்லையே! திடுதிடுப்பென்று ஒருநாள் ஃபோட்டோவுக்கு சிரித்துக் கொண்டிருந்தவனை காட்டி “ என்ன எண்டு பாத்துப்போட்டு சொல்லு” என்றிருந்தான் அரவிந்தன். அதிலேயே பின்னால் அவன் விபரங்களும் அடங்கியிருக்க, எதற்கென்று புரிந்துபோயிற்று.
“இப்ப என்னத்துக்குடா அவசரமா”
“உனக்கு பிடிக்காம ஒண்டும் நடக்காது. சும்மா பாரு, பிடிச்சிருந்தா மிச்சத்தை பிறகு பாப்பம்” என்றிருந்தான்.
அவன் சொல்லிச்சென்ற பிறகு கையில் இருந்த ஃபோட்டோவில் சிரித்துக்கொண்டிருந்தவனைத் தான் பார்த்தாள். ஏன், எதற்கு என்று தெரியவில்லை. அவன் சிரிப்பு அவளுக்கும் தொற்றிக்கொண்டிற்று.
அடுத்த தடவை அரவிந்தன் வந்து கேட்டபோது “எதுக்கும் ஒருதடவை கதைச்சிப் பாக்கிறன்” என்றிருந்தாள். அதிலே அவள் சம்மதம் தெரிந்துபோக, “இப்போதைக்கு அம்மாட்ட ஒண்டும் சொல்லிப்போடாதே!” என்றான். “ஏன்?” என்றதற்கு “எல்லாம் சொல்லுறன்” என்றவன் வாயே திறக்காமல் இருக்க, பிறகு தான் அவளுக்கு விசயம் தெரிந்தது.
லோகானந்தம்-இந்ராணி தம்பதினருக்கு ஆண்கள் இரண்டும் பெண் ஒன்றுமாக மூன்று பிள்ளைகள். மூத்தவனுக்கு மூன்று வருடங்களுக்கு முன்பே கட்டிக்கொடுத்திருக்க, இளையவன் தங்கைக்கு பாருங்கள் என்று விட்டான்.
இவர்கள் அவசரப்படவும் இல்லை. இசைவாணியை கோயிலில் எங்கோ பார்த்துவிட்டு அவர்களாகவே கேட்டு வர, “தங்கச்சிக்கு நல்ல இடம் ஒண்டுல இருந்து கேட்டு வருகினம் அப்பு” என்றிருந்தார் இந்ராணி. மூத்தவன் சரவணனும் குடும்பத்தோடு வந்திருக்க, இளையவன் அரவிந்தனும் கணவரும் இருக்க, நல்ல சந்தர்ப்பமென உடைத்து சொல்லி விட்டார்.
“இப்ப என்னத்துக்கம்மா அவசரமா பாக்கிறயல். இன்னும் ஒரு இரண்டு வருஷம் போகட்டும். என்ன வாண்டு?” அரவிந்தன் தங்கையை குறுகுறுவென பார்க்க, சரவணனும் அதை ஆமோதித்தான்.
“எனக்கு என்ன அவசரம் இருக்கப் போகுது சொல்லுங்கோ பாப்பம். நல்ல அருமையான வரன். பிக்கல் பிடுங்கல் இல்ல… அவியலாவே கேட்டு வருகினம்.” என்றவருக்கு விசாரித்த வரையில் நல்ல திருப்தியே. நல்ல வரனை தவறவிடக்கூடாது என்கிற பரபரப்பும் கூடவே இருந்தது.
அதுவரை அமைதியாக மனைவி சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த லோகானந்தம் மெதுவாக தொண்டையை செரும, அதுவே அவர் கதைக்கப்போகிறார் என்றிற்று.
மனைவி மக்களின் கவனம் அவரிடத்தில் திரும்ப, நால்வரையும் மேல்கண்ணால் பார்த்தவர் “இந்த காலத்துல ஆரை நம்புற, ஆரை நம்பக்கூடாதென்டு ஒண்டும் சொல்லுறபடிக்கு இல்லையெல்லோ. எதையும் அவசர அவசரமா செய்யவும் ஏலாது. அதுவும் கலியாண விசயத்தில நாலையும் அலசி ஆராஞ்சிபோட்டு தான் செய்யோனும். ஒண்டும் அவசரம் இல்ல பாப்பம்” என்று தன் கருத்தை முன்வைத்தார்.
கணவரின் பேச்சு அவருக்கும் ஏற்புடையதாக இருந்தாலும் ‘நல்ல வரன்’ கைநழுவி விடுமோ என்று முகமே விழுந்துவிட்டது.
“இப்ப என்னத்துக்கு முகம் சுருங்குது” அரவிந்தன் அம்மா அருகில் வந்தமர்ந்தான்.
“இல்ல தம்பி, நல்ல சம்மந்தம் எண்டு எல்லாரும் சொல்லினம். கோயில் ஐயாட்ட கூட கேட்டனான். நல்ல பெடியனாம் என்டவர். நம்பிக்குடுக்கலாம் என்ற படியால் தான் உடைச்சு சொன்னனான். கலியாணம் எண்டேக்க அப்படி விசாரிக்காம எடுத்தோம் கவுத்தோம் எண்டு செய்யுவேனா…” எப்படியாவது இந்த சம்மந்தத்தை முடித்தே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு முன்னரே வந்துவிட்டவருக்கு வீட்டினரின் கருத்தை முழுமனதாக ஏற்க முடியவில்லை.
அவரும் ஒன்றும் பேச்சுக்கு சொல்லவும் இல்லை. ஒரே மகளாயிற்றே. அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்ற ஆசையும் அவாவும் அவருக்குள்ளும் இருக்குமல்லவா. அவரே நேரில் சென்று விசாரித்து எல்லாம் திருப்தி என்ற பிறகே வாயை திறந்திருந்தார்.
அப்பா, மகன்கள் மூவரும் ஒருவரையொருவர் பார்க்க, “என்னப்பா யோசிக்கிறயல்? அதான் சொல்றனானல்லா” என்றார், விட்டால் அழுதுவிடுபவர் போல்.
அதற்கு மேல் அடக்க முடியாமல் நொடியில் மூவருக்குமே முறுவல் அரும்பிற்று. அதுவரை தவிப்புடன் இருந்த இந்ராணி குடும்பத்தினரை சந்தேகமாக பார்த்தார்.
“பேர் சாய்ரூபன். வயசு 28. கனடாவில் வேலை. ரெண்டு அக்காக்கள். ரெண்டு பேரும் கலியாணம் முடிச்சிக்கு போய்ட்டீனம். இவர் மனுசியை கட்டிக்கொண்டு ஆறு மாதத்தில் கனடாக்கு எடுக்கயாம். அப்பா ஸ்கூல்ல சேராம். அம்மா…” கடகடவென ஒப்பித்த அரவிந்தனை, கை நீட்டி தடுத்து, அகல கண்களை விரித்து ஆவென்டு வாய் பிளந்து பார்த்தவரோ “கள்ளா!” பட்டென்று முதுகில் ஒன்றை போட்டார். லேசாக சிரிப்பு கூட வந்து விட்டது.
அம்மாவை பார்த்து அவனுக்கும் சிரிப்பு வரும் போலிருக்க, கலகலத்து சிரித்தான் அரவிந்தன்.
அப்பாவும் சரவணனும் சேர, கதிரையில் முழங்கால்களை கட்டிக்கொண்டு இருந்த இசைவாணிக்கும் சிரிப்பை தாண்டிய வெட்கமும் கூச்சமும் போட்டி போட்டுக் கொண்டு முகத்தில் வந்தமர்ந்தது.
“அட அட! வெக்கத்த பாருங்கோவன் வாண்டுக்கு. வேற என்ன அம்மா வேணும். அதுதான் அந்த பக்கமிருந்தே க்ரீன் சிக்னல் வந்துட்டெல்லா. ஆக வேண்டியதை பாருங்கோ” பட்டென்று உடைத்து அவரை உற்சாகபடுத்த, இசைவாணியின் முகத்தை பார்த்தவருக்கு ஆனந்தத்தில் ஒரு துளி கண்ணீர் அரும்பிற்று.
‘என்ர மகள்’ வாஞ்சையுடன் அவளில் படிந்து, நிலைத்து, பின் மீண்டது அவர் விழிகள். கைக்குள்ளயே வைத்து பொத்தி பொத்தி வளர்த்த மகளை இன்னொரு வீட்டுக்கு தாரை வார்த்து குடுக்கும் நேரம் வந்துவிட்டதே.
அவரால் நம்பவே முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. கண்களுக்கு இடையில் துளிர்த்திருந்த கண்ணீர் உண்மை தான் என்று சொல்லிற்று.
அதிலும் இப்படியொரு திருப்பத்தை அவர் எதிர்பார்க்கவே இல்லையே!
“எப்படியப்பா” என்றார் கணவரிடமே.
“என்ர மனுசிய எனக்கு தெரியாதா” ஆர்ப்பாட்டமாக சொல்லியவருக்கு, அவர் சொல்லாமல் விடமாட்டார் என புரிந்து போயிற்று.
“தமயந்தி அண்டைக்கு கோலெடுத்திருந்தவள்” என்றதிலே இந்ராவுக்கும் எல்லாமும் புரிந்தது.
அவரின் தோழி தமயந்தியின் கணவரும் இசைவாணிக்கு கேட்டு வந்த பெடியனின் குடும்பமும் ஒரு வகைக்கு நெருங்கிய சொந்தம் தானாம். அதனால் அவளிடம் ‘ஒன்றுக்கு இரண்டு தடவை விசாரித்து சொல்லும்’ என்று இவரே கேட்டிருந்தார். அதற்கு தான் அன்று அழைத்திருக்க வேணும்.
இவர் பாத்ரூமுக்குள் இருந்ததில் “கன நேரமா கோல் வருது. ஆரென்டு பாருங்கப்பா” உள்ளிருந்தே குரல் குடுக்க, லோகானந்தம் எடுத்து பேசியபோது தான் அவள் இதுதான் விசயம் எண்டு சொல்லியிருக்க வேண்டும். அவள் எடுத்தே ஒரு வாரமாகியிருக்கும்.
ஆக அவரைப் போலவே இவர்களும் இந்த ஒரு வாரமாக மாப்பிள்ளை வீட்டாரை பற்றி விசாரித்து, இவர் வாயாலே வரட்டும் என்று கமுக்கமாக காத்திருந்திருக்கிறார்கள். ‘எப்படியோ நல்ல சம்மந்தம் நல்ல படியாக முடிந்தால் போதும்’ என நினைத்துக் கொண்டார்.
இதில் மகளுக்கும் பிடித்திருக்கிறது என்பதில் இரட்டிப்பு சந்தோசம் தான்.
அப்படி ஆரம்பித்தது இதோ இருபக்கமும் எந்த குறையும் இல்லாமல் பொருந்தி வர, இனி மற்ற மற்ற வேலைகளும் சம்பிரதாயங்களும் மட்டுமே பாக்கி இருந்தது. கலியாணம் என்றால் சும்மா அல்லவே!
“வாணிக்கா!” தன் மனவெளியில் மிதந்து கொண்டிருந்தவளை பிடித்து உலுக்கி நிகழ்காலத்துக்கு அழைத்து வந்த நித்தி, “அத்தை கூப்பிடுறா” என்றவள் இப்போதும் உம்மென்றே இருக்கவும் லேசாக சிரித்துக்கொண்டாள்.
இப்போதும் அவனை நினைக்கையில் எழும் சிரிப்புக்கு அணைபோட, நித்தியின் சுரத்தே இல்லாத முகமும் ஒரு காரணமாயிற்று. ‘சும்மாவே ஆள் நல்ல விசரில் இருக்கிறாள்’ என அவள் முகத்தை பார்த்தே கண்டு கொண்டாள்.
“மாப்பிள்ளைக்கு ஃபோனை போட்டு எங்கட வீட்டு சின்னக்குட்டி பிடிச்சிருக்கு எண்டாத்தான் கலியாணம் எண்டு சொல்லிப்போடுவமா நித்தி” அவளை சமாளித்து ஆகவேண்டுமே. அதில் நமட்டுச் சிரிப்புடன் அவளை குறுகுறுவென பார்த்துக்கொண்டே கேட்ட வாணிக்காவை முறைக்க முயன்று தோற்ற நித்தி, அதுதான் சந்தர்ப்பம் என்று “இப்பயே அவருக்கு ஃபோனை போட்டுத்தாங்கோ!” என்று நின்றாள்.
உடனே கேப்பாள் என்று எதிர்பாராதவள் ஒரு நொடி அதிர்ந்து மறுகணமே வாய்விட்டு சிரித்தாள்.
“அடியேய் கள்ளி!” முதுகில் கைபோட்டு உள்ளுக்கு கூட்டிச்சென்றபடி முதுகில் தட்டிய வாணிக்கு “ஆருக்கிட்ட!” சட்டையில் இல்லாத கொலரை தூக்கிவிட்டுகொண்டே ஒற்றை புருவம் உயர்த்திய நித்தி, “அதெல்லாம் லேசில ஆரும் ஏமாத்தேலாதாக்கும்” கொடுப்புக்குள் சிரித்தவள் “நாளைக்கு வருவன். கோலெடுத்து வச்சிருந்தா சரி. இல்லையோ கனடா கொம்பர் எப்பிடி என்ர அக்காவை கனடாக்கு எடுக்கிறார் எண்டுறத நானும் பாக்கிறன்” சவால்விட்டவளுக்கு அவனைப் பாராமலே ஏனோ பிடிக்காமல் போயிற்று.
‘கனடாகார மாப்பிள்ளை எண்ட உடனே பெண்ணை தூக்கி குடுத்திருவோம் எண்டுற எண்ணமாக்கும்’ கடுகடுத்தாள்.
உண்மையில் மாப்பிள்ளை பார்த்தது கூட அவளுக்கு பெரிய விசயமாக படவில்லை. மாப்பிள்ளை கனடா என்பதே அவளின் பிரச்சனைக்கு காரணமாக அமைந்தது. நினைத்த நேரம் இனி அக்காவை பார்க்கேலாதோ என்ற எண்ணமே அவளை கவலைக்குள்ளாக்க, அதுவே இன்னும் சொந்தமேயாகாத அத்தானிடம் திரும்பி அவளை கோபம் கொள்ளவும் வைத்திற்று.
அண்டைக்கு முழுக்க அதே கோபமும் கடுப்புமாக சுற்றிவர, அந்தநாள் முடிந்து மறுநாளும் விடிய, அன்று சனிக்கிழமை.
பள்ளிக்கு தான் விடுமுறையே ஒழிய, காலையில் ஆறுமணிக்கெல்லாம் வகுப்பு ஆரம்பித்திருந்தது.
“இரவில நேரத்துக்கு படுடீ எண்டா கேக்கறேல்ல. இப்ப கும்பகரண்னுக்கு முறை பொடிச்சு போல தூங்குறது. அடியேய் பெட்ட! எழும்படி நேரமாகிட்டு” காலையிலே சுப்ரபாதத்தை தொடங்கியிருந்தார் புஷ்பாவதி. நியந்தனாவின் ஒரே அம்மா. மற்றும்படி அவளுக்கும் அவருக்கும் என்றுமே ஆகாது.
இப்போதும் அவர் குரல் காதிலே கேக்காதளவுக்கு தலையணையில் குப்பறபடுத்து பெட்சீட்டால் இழுத்துப் போர்த்தியிருந்தாள்.
அவளுக்கு பிடிக்குமென்று காலையில் வழக்கமாக எழும்பும் நேரத்துக்கு முதலே எழுந்து இடியப்பம் அவித்து, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, உறைப்புக்கு பச்சை மிளகாய் ஒண்டும் செத்தல்மிளகாய் ஒண்டும் போட்டு தாளித்து, அது நன்கு வெந்து வந்ததும் இடியப்பத்தை பிய்த்து போட்டு, அதுக்கு மேலால் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, அளவுக்கு உப்பு, மிளகுத்தூள், மஞ்சள்தூள், கொஞ்சமாய் தலைப்பால் சேர்த்து பிரட்டி சுடச்சுட இடியப்ப கொத்தை இறக்கி எடுத்து சூடு ஆற அவள் தட்டில் போட்டு வைத்தவர் நேரத்தை பார்த்துவிட்டு விறுவிறுவென அவள் அறைக்கு நடந்தார்.
ஒரே இழுவையில் பெட்சீட் கையோடு வர, அதாலயே இரண்டு போட்டார்.
நோகவே இல்லை. ஃபேன் காத்துக்கும் ஜன்னலில் மேல் விளிம்பில் இருந்த இடைவெளியூடாக உள்ளே வந்த குளிர் காத்துக்கும் காலை கையை குறுக்கி கொண்டு சுருண்டவளின் மேல் நல்ல விசர் வந்திற்று.
நேரமாகிற்றோ அதுக்கு வேறு குய்யோ முய்யோ எண்டு அவரிடம் தான் சண்டைக்கு வருவாள். “உடனே எழும்புவமா நாங்க? எழுப்ப வேண்டியது உங்கட கடமை!” வாய் கிழிய வியாக்கியானம் பேசி, அதுக்கு அவர் கோபப்பட்டு கத்தி, பதிலுக்கு அவளும் கத்தி என தினம் ஒரு சண்டை அவர்கள் வீட்டில் நடப்பது வழமையாயிற்று.
அருகிலே இருந்த அவளின் தண்ணீ போத்தலில் இருந்த நீரை கவிழ்த்து ஊற்ற, அடித்துப்பிடித்து எழுந்து அமர்ந்தவளை தரதரவென இழுத்துக்கொண்டு போய் பாத்ரூமுக்குள் தள்ளி பைப்பை திறந்து விட்டர் வெளியே வந்து மாற்று உடையையும் டவலையும் கதவில் போட்டுவிட்டு போக, ‘ஆஊ!’ என்று அலறிக்கொண்டே குளித்து முடித்தவள் பற்கள் டைப்படிக்க நடுங்கிக் கொண்டே வெளியில் வந்தாள்.
“நீங்க எல்லாம் ஒரு தாயா?” விசரில் சீறியவளின் ஆவென்ற வாய்க்குள் இடியப்பக்கொத்தை திணித்தார். எதில் குறையோ இல்லையோ புஷ்பாவதியின் கைப்பக்குவத்துக்கு என்றும் குறை வந்ததில்லை.
அவளுக்கு பிடித்த பதத்தில் அளவான சூட்டில் சுவையாக தொண்டைக்குள் இறங்கிய இடியப்பக்கொத்தை அப்பிடியே விழுங்கினாள்.
அடுத்தடுத்து அவர் வாய்க்குள் அடைக்க, “அம்மா!” சினந்தவளை காதிலே விழுத்தாமல் “கெதியா வெளிக்கிடு. அப்பா கடைக்கு போகேக்க இறக்கிவிட்டுப்போட்டு போவார்.” என்றவர் தீத்தி முடிந்ததும் கணவருக்கும் அவருக்கும் தேத்தண்ணி வைக்க கெட்டிலில் தண்ணீயை நிரப்பி அடிப்பில் ஏற்றினார்.
ஐந்தே முக்கால் என்றால் அங்கால் ஆறுமணி. நேரம் சிறகு முளைத்ததுபோல பறந்துவிடும். அதில் அவசர அவசரமாக வெள்ளை உடுப்பை உடுத்திக்கொண்டு பரபரவென தயாராகி, முகத்துக்கு கொஞ்சமாய் பவுடர் போட்டு கண்ணாடி முன் நின்று சிரித்துப் பார்த்து திருப்தியான பிறகே தலைவாரி அவசர பின்னல்போட்டு கொப்பியும் கையுமாக ஓடிவர, சாய்மனை கதிரையில் தேத்தண்ணியும் கையுமாக சிவலோகநாதனும் அவருக்கு பக்கத்தில் குஷன் கதிரையில் புஷ்பாவதியும் மெல்லிய குரலில் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.
‘அவிர தேத்தண்ணி டைம்!’ மெல்லிய சிரிப்போடு அம்மாவையும் அப்பாவையும் பார்த்தவள் “எஹெம் எஹெம்!” லேசாக தொண்டையை செருமினாள்.
“கண்ணம்மா!” இவளைக் கண்டுவிட்டு கைநீட்டி அழைத்தார் நாதன்.
ஈரெட்டில் அப்பாவின் சாய்மனை கதிரையின் கைப்பிடியில் அமர்ந்தவள் அவரின் கையிலிருந்த தேத்தண்ணி கப்பின் கடைசி சொட்டை வாய்க்குள் சரித்தாள். அவள் தேத்தண்ணி குடிக்க பழகியதும் அப்பிடித்தான். அதனாலே என்னவோ இன்றளவும் அந்தப் பழக்கம் மட்டும் மாறவில்லை.
‘அந்த மனுசர நிம்மதியா ஒரு வாய் தேத்தண்ணி குடிக்கவிடமாட்டாள்’ மகளை பார்வையாலே எரித்த புஷ்பா தலையில் அடித்துக்கொண்டு எழுந்து செல்ல, “சரியான பொறாமை பிடிச்ச மனுசிய எங்கிருந்து தான் தேடிப்பிடிச்சு கட்டினியலோ தெரியேல்ல” அப்பாவுக்கு கண்ணை சிமிட்டுவிட்டு சத்தமாக அறிவித்தவளுக்கு குசினிக்குள் இருந்து அகப்பக்கணை பறந்து வந்தது.
“வரவர இவவின்ர போக்கு சரியாப் படயில்ல அப்பா. உங்களுக்கும் என்ன வயசாயிட்டு சொல்லுங்கோ பாப்பம். பேசாம எனக்கொரு சித்தியை பாத்திங்கள் எண்டா எனக்கும் பொழுதுபோகும்… ஒரே இவட மூஞ்சை பாத்து பாத்து அலுத்துப்போயிட்டு” என்றவளின் முன் பத்ரகாளியாக வந்து நின்றார் புஷ்பா.
“ஓமடி, அவருக்கு வயசாகேல்ல. நீ இன்னொண்டு பாத்து கட்டி வை. கதைக்கிறாள் கதை. இவள பெத்ததுக்கு பேசாம ரெண்டு மாட்டை கட்டி வச்சு வளத்திருந்தாலும் பிரயோசனமா போயிருக்கும்.” அவளிடம் எரிந்து விழுந்தவர் “அவள்தான் மண்ணாங்கட்டி கதை கதைக்கிறாள் எண்டால் நீங்களும் அவளை கதைக்கவிட்டு வேடிக்கை பாக்கிறயல் என்ன” நொடியில் மூக்கை உறிஞ்சுக்கொண்டு நாதனிடம் வெடித்தவர் குசினுக்கு திரும்ப, நாதன் மகளை பரிதாபமாய் பார்த்தார்.
காலையில் அவர் செய்ததுக்கு திருப்பிக்குடுத்துவிட்ட நிறைவோடு இல்லாத தூசை தட்டுவதுபோல கையை தட்டிவிட்டவள் “ரெண்டு நிமிசம் டைமப்பா. வெளியில் நிக்கிறன், உங்கட ஆளை சமாதானப்படுத்திப்போட்டு கெதியா வாங்கோ” நேற்று மறதியாய் வெளியில் இருந்த மேசையில் வைத்த கறுப்பு கலர் அட்லஸ் சூட்டி பென்னை கொப்பி மட்டையில் சொருகிக்கொண்டு வெளியில் நடந்தாள்.
அவள் தந்த இரண்டு நிமிடத்தில் புஷ்பாவை குளிர்வித்துவிட்டு வேகமாய் பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்த நாதன், நேரே அவளின் வகுப்படிக்கு சென்று இறக்கிவிட்டு கடைக்குப் புறப்பட்டார்.