எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ரத்த ரங்கோலி 2

Status
Not open for further replies.

NNK-105

Moderator
ரத்த ரங்கோலி 2

அடுத்து ஒரு வாரம் எந்த ஆரவாரமின்றி அமைதியாக நகர்ந்தது. சென்னை புறநகர் பகுதியில் அமைந்திருந்திருக்கும் தங்கள் தொழிற்சாலைக்குக் கார்மேகமும் பூமிநாதனும் எப்பொழுதும் போல செல்லத் தொடங்கினர். நண்பர்கள் முதலில் அங்கு மறைந்த மணிவண்ணனுக்கு இரங்கல் கூட்டம் நடத்தினர்.

அவர்களின் அலுவலக அறையில் மணிவண்ணன் அமரும் சுழற் நாற்காலி வெறுமையாக இருப்பதை கண்ட நண்பர் இருவருக்கும் இன்னும் வேதனையானது. அதை எடுக்க மனம் இல்லாமல் அப்படியே விட்டுவிட்டனர்.

தொழிற்சாலை வளாகத்தில் இரண்டு பெரிய அலுவலக அறைகள் உள்ளன. அங்கு அனைத்து வசதிகளும் இருந்தன. அதற்குப் பின்புறம் மிகப் பெரிய மைதானம். அந்த இடத்தில் அள்ளப்படும் குப்பைகள் லாரிகளில் கொண்டுவரப்படும்.

வெளியே கிடக்கும் குப்பைகளுக்கு நேர் எதிராக இருக்கும் அலுவலக அறைகள். பெரிய மேசை அதன் பின்னே மூன்று சுழற் நாற்காலிகள். அந்த நாற்காலிக்குப் பின் சுவரில் தொழிற்சாலையின் பெயர் அதன் லோகோவுடன் காணப்பட்டது. இடது பக்கச் சுவரில் பெரிய புகைப்படம் அதில் மூவரும் புன்னகைத்தபடி நின்றிருப்பர். அவர்கள் வாங்கிய விருதுகள் மற்றொரு பக்கம் அலங்கரித்திருக்கும்.

வெளி மைதானத்தில் மக்கும் குப்பை மக்காத குப்பையைப் பிரித்தெடுத்து அதன்பின் மக்கும் குப்பைகளை எரித்துவிட வேண்டும். மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் இரும்பு போன்றவை தனியே பிரித்தெடுத்து மறுசுழற்சிக்கு அனுப்பப்படும். இவற்றை பொது மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இடையூறும் ஏற்படாத வண்ணம் செய்ய வேண்டும்.

இவை அனைத்தும் நண்பர்கள் அரசு அனுமதி மற்றும் தேவையான ஆவணங்களுடன் முறையாகச் செய்கின்றனர்.

தங்கள் அலுவலக அறையில் கார்மேகம் மற்றும் பூமிநாதன் அமர்ந்திருந்தனர். போன் அலறியது கார்மேகம் காது கொடுக்க “ஆதி வந்திருக்கான் அப்பா” என்றான் பவன்.

“உள்ள அனுப்பு”

இந்த ஒரு வாரத்தில் ஆதியிடம் மிகப் பெரிய மாற்றம். சவரம் செய்யாத முகம். கண்களைச் சுற்றி கருவளையம். கலைந்த கேசம் எனப் பார்க்கவே பாவமாக இருந்தது. ஒரே வாரத்தில் பத்து வயது கூடிப் போனது போல அவன் தோற்றம் காணப்பட்டது. அவன் இன்னும் துயரத்திலிருந்து மீளவில்லை எனப் பார்த்த மாத்திரத்தில்ப் புரிந்தது.

அங்கே பணிபுரியும் சிலர் அவனுக்கு ஆறுதல் அளித்தனர். வேறு சிலரோ “உங்க அப்பா மாதிரி நல்லவரை பார்க்க முடியாது தம்பி. தைரியமா இருப்பா“ என்றனர். அனைவருக்கும் ஆதி கைகூப்பி நன்றித் தெரிவித்தான்.

பின்னர் பூமிநாதன் மற்றும் கார்மேகம் இருக்கும் அறைக்கு வர.

“வா ஆதி உட்கார்” எனப் பூமி அழைத்தார்.

ஆதி இயந்திரகதியில் அமர்ந்தான். அவன் கண்கள் தானாக அவன் தந்தையின் நாற்காலி மேல் பதிந்தது.

ஆதி எம்.பி.ஏ இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறான். அவன் தன் தந்தையிடம் “அப்பா நான் படிப்பு முடிச்சதும் உங்க பேக்டிரில வேலை செய்யலாம்னு இருக்கேன். சேர்த்துபிங்கதானே?” எனக் கொஞ்சலாகக் கேட்க

இதைச் சொன்ன தருணத்தில் மணிவண்ணன் ஆனந்தமாக அவனை அணைத்துக் கொண்டார் “ என் நாற்காலி உனக்குத்தான். அதுல ஜம்முனு உட்கார்ந்து வேலை பார்” என்றார்.

நாற்காலியைக் கண்டதும் பழைய நினைவு உழன்றது. அதை நினைத்த நொடி ஆதி கண்கள் குலமாகின. தன் துயரத்தைக் கஷ்டப்பட்டு அடக்கினான்.

கார்மேகத்தின் வளர்ப்பு மகன் பவன் இங்குதான் பணிபுரிகிறான்.

பூமிநாதனின் மகன் கைலாஷ் ஐ.டி. பக்கம் சென்றுவிட்டான். இதில் அவனுக்கு நாட்டமில்லை. மணிவண்ணனின் மூத்த மகன் இந்த பக்கம் கூட வந்ததில்லை.

பெரியவர்களுக்கு அடுத்து இதைக் கொண்டு செல்ல ஆதி மற்றும் பவன் மட்டுமே உள்ளனர். அதுவுமில்லாமல் இது ஒன்றும் மிகப் பெரிய தொழில் இல்லை ஆதலால் பெரியவர்களும் தங்கள் வாரிசுகளை நிர்பந்தபடுத்தவில்லை.

பூமியும் கார்மேகமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இருவர் முகத்திலும் சொல்ல முடியாத வேதனை.

“ஆதி அப்பாக்கு வரவேண்டிய பணம் இருக்கு. உன் அம்மா பேங்க் அகெளண்ட் நம்பர் வேணும். பணம் அனுப்பிடுவோம்” எனப் பூமி தயங்கிச் சொன்னார்.

இப்படியெல்லாம் சொல்ல வேண்டி இருக்கிறதே என அவர் மனம் குமுறியது.

ஆதி “சரி வாட்சப்ல அனுப்பிடறேன் அங்கிள்” என்றவன் சற்றே தயங்க

“எதாவது சொல்லணுமா?” கார்மேகம் கேட்க

“நான் தொடர்ந்து படிக்கிற ஐடியால இல்ல. அதனால இங்க வேலைக்கு வரலாம்னு பார்க்கிறேன் ”

“இது உன் கம்பெனி ஆதி. நீ எப்ப வேணா இங்க வரலாம். ஆனா அதுக்காக படிப்பை நிறுத்தாத. படிப்பு ஒரு பக்கம் போகட்டும். உனக்கு நேரம் கிடைக்கும்போது இங்க வா” வருத்தமும் அக்கறையுமாக கார்மேகம் சொன்னார்.

அதைத் தலையாட்டி ஆமோதித்தார் பூமி “ஆமா ஆதி உன் அப்பாக்கு நீ எம்.பி.ஏ படிக்கிறதுல அப்படி ஒரு சந்தோஷம். அதனால படிப்ப நிறுத்தாத. நேரம் கிடைக்கும் போது இங்க வந்து வேலப் பார் ” என்றார்.

இருவர் சொல்வதும் நியாயமாகப் படவே சம்மதமாகத் தலையசைத்தான். அவன் அப்பாவின் பொருட்களான பேனா சில தாள்கள் டைரி சில்லறை பணம் என ஒரு பெட்டியில் போட்டு பவன் கொடுத்தான். அவற்றை கண்டவனால் துக்கத்தை மறைக்க முடியாமல் அழுதுவிட்டான். அவனை மற்றவர் சமாதானப் படுத்தினர்.

பவன் வந்து சில நிமிடங்கள் அவனுடன் ஆறுதலாக உரையாடினான். ஆதி சிறிது நேரத்திற்குப் பிறகு விடை பெற்றான்.

வெளியே வந்த ஆதித் தன் போனை எடுத்துப் பார்க்க அபூர்வா பலமுறை அழைத்திருந்ததைக் கண்டான்.

இந்த ஒரு வாரத்தில் அவளுடன் ஓரிரு வார்த்தை மட்டுமே பேசியிருந்தான். அவளின் முகம் கண்முன்னே நிழலாடியது. ஆனால் அவளுடன் பேசும் மனநிலையில் இல்லை.

அவளின் நினைவுகள் சாமரம் வீச மனம் இளைப்பாறியது.

ஆதி, அபூர்வாவை எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படிக்கையில் சந்தித்தான். அவன் கல்லூரியில்தான் முதன் முதலில் பார்த்தான். அது மிகப் பெரிய கல்லூரி.

கல்லூரியின் ஒரு பகுதியில் கிட்டதட்ட ஐம்பது நபர்களுக்கு மேல் இருந்தனர். அது படப் பிடிப்பு எனத் தெரிய வந்தது.

ஆதியும் அவன் நண்பர்களும் இரண்டாம் தளத்திலிருந்து வேடிக்கை பார்த்தனர். படப்பிடிப்பில் ஆண் பெண் ஜோடி ஒன்று கோபத்துடன் பேசிக் கொண்டே சில அடிகள் நடக்க வேண்டும். இதுதான் காட்சி.

இதைப் பலமுறை எடுத்துவிட்டனர். ஏதோ தவறு என மீண்டும் மீண்டும் எடுத்தனர். பெரிய பெரிய உபகரணங்கள், கேமரா என நிறையச் சாதனங்கள் இருந்தன. பலவற்றின் பெயர் தெரியவில்லை. ஆதி பிரம்மிப்புடன் பார்த்து கொண்டிருந்தான்.

அந்த கூட்டத்தில் அபூர்வமாய் காட்சியளித்தாள் அபூர்வா. சுற்றிலும் ஆண்கள் வேலைப் பார்க்க, நடிகையும் இவளும் மட்டுமே பெண்கள். நடிகைக்கு எல்லா வசதிகளும் கொடுக்கப்பட்டன.

அபூர்வா ஜீன்ஸ் டிஷர்ட் எனச் சாதாரணமாக இருந்தாள். காட்சி முடிந்ததும் நடிகை அருகே அமர்ந்து ஏதோ சொல்லிக் கொண்டே இருந்தாள். அவள் கையில் சில தாள்கள் மற்றும் ஒரு பேனா. பெரும்பாலும் பேனா அவள் போனிடைலில் வாசம் செய்தது. அபூர்வா நடிகையுடன் பேசுகையில் கையை ஆட்டி பேசுவதும் முகபாவங்கள் மாறுவதும் ஆதியை வெகுவாக கவர்ந்தது. காட்சியை விவரிக்கிறாள் எனப் புரிந்தது.

நடிகையும் மேக்அப் செய்து கொண்டே அபூர்வாவைக் கவனித்தாள்.

“அந்த நடிகைக்குப் பதில் இவளே நடிக்கலாம்” என ஆதி எண்ணினான்.

“டேய் சார் வந்திட்டார்” எனக் குரல் வந்ததும். அவன் மனமே இல்லாமல் அகன்றான்.

பேராசிரியர் வந்ததும் வகுப்பைத் தொடங்கினார். அடுத்த அறை மணிநேரம் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆதியால் முழுமையாகப் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. அவன் மனதை அந்த அபூர்வ பெண் மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்திருந்தாள்.

ஒருவழியாகப் பேராசிரியர் கிளம்பியதும் ஆதி வந்து பார்க்க அங்கு அவள் இல்லை. தோளைக் குலுக்கியபடி சென்றுவிட்டான்.

ஆனாலும் மனதில் முகம் மறையவில்லை. நாட்கள் செல்லச் செல்ல அவள் நினைவுகள் மறைந்து போயின. அடுத்த ஒரு மாதம் குடுகுடுவென ஓடியது.அவன் கவனம் முழுவதும் படிப்பிலிருந்தது.

அப்பொழுதுதான் ஒரு நாள் மாலில் அவளைக் கண்டான். பின்பு ஒரு நாள் கோயிலில் சேலை உடுத்தி கொள்ளை அழகுடன் காட்சி தந்தாள். அவள் அழகில் சொக்கி போனான். அவனுடன் மூன்று நண்பர்கள் குடும்பமும் சேர்ந்து இருந்ததால் அவனால் அவளைக் கண்டு ரசிக்கக் கூட முடியவில்லை.

பின்பு ஒரு நாள் டிங் டாங்கு என்று வீட்டில் அழைப்புமணி அடிக்கும் சத்தம் கேட்க “ஆதி கதவ திறட பக்கத்து வீட்ல புதுசா குடி வந்தவங்கதான்” என ஆதி அம்மா குரல்

“எதாவது ஒரு கெழவிதான் மொக்க போட வந்திருக்கும்” என அலுத்தபடி கதவைத் திறக்க அழகாய் நின்றிருந்தாள் அபூர்வா. இமை மூட மறந்தவனாக நின்றிருந்தான் ஆதி.

கையை சேலை முந்தானையில் துடைத்தபடி “ வாம்மா” என ஆதியின் அம்மா பத்மாவதி உள்ளே அழைத்துச் சென்றார்.

“இவன் என் ரெண்டாவது மகன் ஆதி”

“இது அபூர்வா நம்ம பக்கத்து வீட்டுக்குக் குடி வந்திருக்காங்க ” என அவன் அம்மா அறிமுக படலத்தைத் தொடங்கினார்.

“ஹாய்” என்றாள் அபூர்வா மென்னகையுடன். இடதுகையால் முகத்தில் விழுந்த கூந்தலை பின்னுக்குத் தள்ளியபடி

ஆதி “ஹாய்” எனப் பதில் சொன்னது அவனுக்கே கேட்டிருக்குமா என்பது சந்தேகமே

“வாம்மா உட்கார் … வீட்ல சாமான் எல்லாம் எடுத்து வைக்கணுமா?”

“ஆமா ஆன்ட்டி இன்னும் வேலை இருக்கு” என்றாள்.

அபூர்வாவும் அவன் அம்மா மற்றும் அவன் அண்ணி பேசிக் கொண்டே இருந்தனர்.

ஆதித் தன் அறைக்குச் சென்று அங்கிருந்து அவளை சைட் அடித்துக் கொண்டிருந்தான். பலமுறை அவள் பெயரை உச்சரித்தான் மந்திரமாய்.

அவள் சென்றதும் “பாவம்டா அந்த பொண்ணு” என அம்மா மற்றும் அண்ணி அபூர்வாவைப் பற்றி ஆதியும் அந்தமுமாகப் பல தகவல்களைச் சொன்னார்கள்.

அவற்றை கேட்டதும் அவனின் இதய சிம்மாசனத்தில் சக்கரவர்த்தினியாக அமர்ந்துவிட்டாள்.

”ஆதி இவங்க சினிமால வேலை பார்க்கறாங்க டா .” என முகத்தில் அத்தனை ஆச்சரியத்தைத் தேக்கி வைத்தபடி அம்மா கூறத் தொடங்கினார்.

“தெரியும்” என உளற இருந்தவன் சமாளித்து “ஐ சீ ” என்றான்.

அபூர்வா உண்மையில் அபூர்வமான பெண்தான். சிறுவயதில் அவளின் தோழிகள் பாட்டு நடனம் என கற்றுக் கொள்ள இவளோ கராத்தே கிளாசுக்குச் சென்றாள்.

அவளின் பத்து வயதுவரை எந்த பிரச்சனையும் தெரியாமல் வாழ்க்கை இருந்தது. அதற்குப் பின் அவள் பெற்றோர் விவாகரத்து செய்தனர். அந்த வயதில் அவளுக்கு எதுவும் புரியவில்லை. கணவனும் மனைவியும் விவாகரத்து பெறலாம். ஆனால் தாயும் தந்தையும் விவாகரத்து பெற்றால் குழந்தை நிலை என்னவாகும்?

குறிப்பிட்ட வயதுவரை கோர்ட்டின் ஆணைப்படி தாயிடமும் தந்தையிடமும் மாறி மாறி இருந்தாள். தாயும் தந்தையும் அவர்களுக்கென தனி துணையைத் தேடிக் கொண்டனர்.

ஆனால் இவை எதுவும் அபூர்வாவை அத்தனையாய் பாதிக்கவில்லை. சுயமாகச் சிந்தித்துச் செயல்படுத்தும் திறன் பெற்றவளானாள். எதற்கும் பெற்றோரிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவர்கள் கேட்கவும் இல்லை.

அவள் அப்பா இரண்டாம் திருமணம் செய்து கொண்டதால் அவளுக்கான தாத்தாவின் சொத்து அவளை வந்தடைந்தது. பணத்திற்குப் பஞ்சம் இல்லை.

சினிமா தொடர்பாகப் படித்தாள். தற்பொழுது அசிஸ்டெண்ட் டைரக்டராக பணிபுரிகிறாள். தனியே வீடு பார்த்தாள். அவள் குடி புகுந்தது. ஆதியின் பக்கத்து வீடு.

தனக்கென யாரும் இல்லை என எப்பொழுதாவது ஏங்கித் தவிப்பாள். அப்படியானவளுக்கு ஆதி குடும்பத்தின் அரவணைப்பு அருமருந்தாக இருந்தது.

ஆதி அவள் நினைவிலிருந்து மீண்டு வீட்டுக்குள் சென்றான். எப்பொழுதும் கலகலவெனவென இருக்கும் அவன் வீடு மயான அமைதியிலிருந்தது.

தன் அப்பாவின் பொருட்களைத் தனது அறையில் வைத்தான்.

அதில் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா என்று கார்மேகம் கையெழுத்திட்டு தன் தந்தைக்கு கொடுத்திருந்த வாழ்த்து மடலைக் கண்டான்.

பிறந்தநாளுக்கு வாழ்த்தியவர் வெகு விரைவில் இறந்த நாளை காணப் போகிறார் என அந்த நொடி ஆதிக்குத் தெரிய வாய்ப்பில்லைதான்.



தொடரும் …..


























 
Status
Not open for further replies.
Top