எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

KEK - Story thread

Status
Not open for further replies.

NNK63

Moderator
வணக்கம் செல்லம்ஸ்!

இங்கு 'கனிமொழியே! என் கண்ணம்மா' கதை பதிவேற்றப்படும். கனிமொழியும், அவள் மணாளனும் உங்கள் மனதைக் கொள்ளை கொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.
படித்து மகிழுங்கள்!❤️
 

NNK63

Moderator
அத்தியாயம் 01

பவளக் கடலிலிருந்து நீரை முகந்து சூலுற்றிருந்த கருமேகக் கூட்டம் திரண்டு வந்து, அந்த பெங்களூர் நகரை ஷோவென நனைத்துக் கொண்டிருந்தது.

நேரம் எப்படியும் ஆறுமணி இருக்கும்! ஆனால் கும்மென இருட்டிக் கிடந்த நீள்வானம் நள்ளிரவோ என்னவோ என சந்தேகிக்கும்படி மிக மோசமாகக் காட்சியளித்தது.

மழை முகில்களின் உதவியுடன் குளிர்மை அடைந்திருந்த அந்த சூழலில், அந்த அடுக்குமாடி அபார்ட்மெண்ட் வீட்டின் அறையினுள், வெடவெடக்கும் குளிரில், உடலைக் குறுக்கி கட்டிலில் கண்மூடிக் கிடந்தான் ஆறடியில் ஒருவன்.

அவன்.. அவன் சிபிநந்தன். இல்லையில்லை, சிபிச்சோழ வேந்தன்! அவன் தனக்குத் தானே சூட்டிக் கொண்ட பெயர் தான் அந்த நந்தனோ, நாரதனோ அது!

அவனது தந்தை தமிழ் மீது கொண்ட அளவற்ற நாட்டத்தின் காரணமாக வைத்த தமிழ் வாடை கமழும் பெயரின் மீது ஆர்வமின்றி, தொழில் வட்டாரத்தில் தன்னை சிபிநந்தன் என அறிமுகப்படுத்திக் கொண்டவன் இதோ அரையடி அமுங்கும் மெத்தையில் புருவங்கள் நெறிய சுருண்டு கிடக்கிறான்.

'என்னைக் கொஞ்சம் கவனிச்சாத் தான் என்னவாம், மகாராஜாவுக்கு?' என்ற ஆதங்கத்தோடு வெகு நேரமாய் விட்டு விட்டு அலறிக் கொண்டிருந்தது, சார்ஜில் போடப்பட்டிருந்த அலைபேசி.

எந்தவொரு அழைப்பும் அவனை எட்டவில்லை. அவன் தனியொரு உலகில் சகலமும் மறந்து சஞ்சரித்துக் கொண்டிருக்கையில், ஏனையவை யாவும் வீண் தொந்தரவுகளாகவே தெரிந்தன.

யாரவள்.. இளரோஜா வண்ண நிறத்தில் கைகால்கள் முளைக்கப் பெற்ற பார்பி பொம்மை போல் பால்பற்கள் காட்டி சிரித்தவள். அவளைப் பற்றி நான் ஏன் இந்தளவுக்கு யோசிக்க வேண்டும்? தன்னைக் கண்ட மாத்திரத்தில் 'ப்பா..' என்று அழைத்து கை நீட்டினாளே! அந்த நேரத்தில் ரோஜா மொட்டாய் அழுகையில் பிதுங்கிய குட்டி இதழ்கள்.. கண்மூடி சிலிர்த்தான் சிபி.

கிட்டத்தட்ட ஒருமணி நேரம் முன்பு நடந்தேறிய அந்த சம்பவம் இன்னுமே மனக்கண்ணை விட்டு அகன்றபாடில்லை. நினைக்க நினைக்க உடல் மயிர் கூச்செறிந்து நின்றது.

ஐந்தடுக்கு ஷாப்பிங் மாலின் கீழ்மாடியில், கோர்ட் சூட்டின் கால்சட்டைக்குள் கரம் விட்டு, மற்றொரு கையால் அவன் அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்த போது தான், "ம்மீ.. ப்பா.." என்ற வீறிடல் அவன் செவிகளை நிறைத்தது.

திடுக்கிட்டு இமை தூக்கியவன் கண்டது தாயின் நெஞ்சில் பலம் கொண்ட மட்டும் தட்டியபடி தன்னை நோக்கி கை நீட்டி அழுது கொண்டிருந்தவளைத் தான்.

"ப்பாஆ.. ப்பாஆ.." என நிமிடத்திற்கு ஒரு முறை அழைப்பு வேறு!

திகைத்து நின்றவனின் பார்வை ஒருநொடி.. ஒரேயொரு நொடி அவ்விள மொட்டை சுமந்து கொண்டிருந்த இருபதுகள் கடந்து ஓரிரு வருடங்கள் பயணித்திருந்த மாதுவின் பதற்ற முகத்தில் பதிந்து மீண்டது.

அதற்குள் அவளே, "ஷ்ஷு! அச்சும்மா. அவர் உன்னிட அப்பா இல்ல. ச்சும்மா அழாதையும்.." என்ற அதட்டலோடு குழந்தையைத் தூக்கிக் கொண்டு வேக வேகமாய் நகர்ந்து விட்டாள்.

போகும் போது தன்னைத் திரும்பிப் பார்த்தபடி அழுது கொண்டே அன்னையின் நெஞ்சில் முகம் புரட்டி அழுத சிறியவளின் கண்ணீர் இப்போதும் சிபிநந்தனை உருக்கியது. ஏனென்றே தெரியாமல் நெஞ்சம் உருகி நின்றான் ஆடவன்.

இத்தனைக்கும் அவனறிய எந்த ஒரு பெண்ணையும் காதலித்ததில்லை. இதில் எங்ஙனம் இந்த குழந்தை குட்டியெல்லாம்?

'ஏதோவொரு நெனப்புல அந்த பேபி உன்னைப் பார்த்து அப்பானு கூப்பிட்டுட்டா! இன்னுமே அவளுக்கு விவரம் பத்தலை. ஆள் அடையாளம் தெரியாம சும்மா கூப்பிட்டு இருப்பா. அதை நினைச்சு நீ இப்படி உருகிட்டு இருக்கியே! ச்சை, வெட்கமா இல்ல?' என சிபியின் மனசாட்சி காறித் துப்பியது.

"மண்டையை பொளந்துருவேன், த்தூ! ஓடிப்போ.." என அதை விரட்டி விட்டவன் முகத்தை வலக்கரத்தால் அழுந்தத் துடைத்தபடி கட்டிலில் எழுந்து அமர்ந்தான்.

குளிரில் உடல் வெடவெடத்தது.

ஓரமாய் கிடந்த போர்வையை இழுத்து தன் கட்டுடம்பை போர்த்திக் கொண்டவன், "ஆனா.. அந்த பொண்ணு.. அந்த பேபியோட அம்மாவை நான் இதுக்கு முன்ன எங்கயோ பார்த்திருக்கேனே! என்னைப் பார்த்ததும் அவ ஏன் அந்தளவு பதறணும்? ஸ்ட்றேன்ஞ்!" என சலித்துக் கொண்டான்.

'பார்த்திருப்ப! பார்த்திருப்ப! இது தான் நீ பெங்களூரு வந்த முதல் தடவையா என்ன.. இதற்கு முன்னவும் பல தடவைகள் பிசினஸ் விஷயமா வந்திருக்க தானே? அப்போ பார்த்திருப்ப! விட்டுத் தள்ளுப்பா..' என அகம் கூறிய அறிவுரையும் சரியென்று தான் தோன்றியது.

"யாரோ.. எவரோ.. விட்டுத் தள்ளு சிபி!" என வேகமாகப் படபடத்த நெஞ்சை நீவிவிட்டபடி பெருமூச்செறிந்தவன் ஒரு பில்டர் காபி குடித்தால் நன்றாயிருக்கும் என்ற எண்ணத்தில் போர்வையை உடலோடு போர்த்திக் கொண்டு எழுந்து சமையலறை நோக்கி நகரும் போது தான், 'அவளின்' நினைவு சட்டென்று நெஞ்சில் மோதியது.

மின்னல் தாக்கினாற்போல் சட்டென்று நடையை நிறுத்திக் கொண்டவன், "ஓ கோட்! சிபி! ஆர் யூ க்ரேஸி? லிஷாவை ஷாப்பிங் மால்லயே விட்டுட்டு வந்துட்டியா பரதேசி.." என தன்னைத் தானே திட்டிக் கொண்டு அலைபேசியைத் தேடி ஓடினான்.

அவளிடமிருந்து பத்துக்கு மேற்பட்ட அழைப்புகள் வந்து குவிந்திருந்தன.

அவன் அந்த ஷாப்பிங் மால் வரை சென்றதே லிஷா கெஞ்சிக் கூத்தாடி அழைத்ததால் தான். மீட்டிங்'கை முடித்துக் கொண்டு அபார்ட்மெண்ட்டுக்குத் திரும்பி வரும் வழியில், "நாளைக்கு சென்னை கெளம்பணுமே நந்து. எனக்கு சில திங்ஸ் வாங்க வேண்டியிருக்கு. ப்ளீஸ் என்கூட வாயேன். உன்னால வர முடியாதுனா நீ கார்லயே வேணா வெயிட் பண்ணு! நான் சீக்கிரமா வந்திடறேன்.." என கண்கள் சுருக்கி கிள்ளையாய் கொஞ்சிய லிஷா எனும் நவநாகரிக மங்கையின் முகம் விழித்திரைக்குள் நடனமாடியது.

அவசர அவசரமாக அவளுக்கு அழைப்பு விடுத்தவன், தன்னை நினைத்தே அதிருப்தியுற்று முகம் சுளித்தான்.

அந்த சின்னஞ்சிறு பிஞ்சின் 'ப்பா..' என்ற ஒற்றை அழைப்பு அவனை ஆழ்ந்த யோசனையில் கதறக் கதற தள்ளி விட்டதன் விளைவு, லிஷாவை மறந்து தன்னை அபார்ட்மெண்ட் வரை அழைத்து வந்திருக்கிறது எனப் புரிந்தது.

"ஹலோ.." - அழைப்பு ஏற்கப்பட்டு மறுபுறத்தில் பற்களை நறநறத்தாள், லிஷா.

"ஹேய், லிஷ்! ஐம் சாரி யார்.. காருக்குள்ள நின்னுட்டுருக்க போர் அடிக்குதுனு வெளிய வந்து உனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேனா.. அப்போ என் சைல்ட் ஹூட் பிரெண்ட் ரோஹித்தைப் பார்த்தேன். அவன் கிட்ட பேசிக்கிட்டு அப்படியே அபார்ட்மெண்ட் வரைக்கும் வந்துட்டேன்.." என உண்மையுடன் பொய்யையும் இரண்டறக் கலந்து விளம்பி மன்னிப்பு யாசித்தவன், மறந்தும் கூட மற்ற எதையும் அவளிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.

லிஷா சற்று ஆசுவாசமடைந்தாள்.

"நான் எங்க திரும்பவும் லிஷானு ஒருத்தி இருக்குறதை மறந்துட்டியோனு நினைச்சேன். பார்ட்டிக்கு கூட்டிட்டு போய், என்னை அங்கேயே விட்டுட்டு வார ஆள் தானே நீயி?" என கேலி செய்தாள் லிஷா.

சிபி அசடு வழிந்தான். அது என்னவோ வீட்டினரால் முடிவாக்கப்பட்டு, இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் என்று நாள் குறிக்கப்பட்டு இருந்தாலும், அவனுக்கு இந்த காதல் கன்றாவி மீது எந்தவொரு ஆர்வமும் எழுந்ததில்லை. அதை லிஷாவும் அறிவாள்.

இருப்பினும், காலப்போக்கில் அவனை நான் என் விருப்பத்துக்கேற்ப மாற்றிக் கொண்டே தீருவேன் என்ற அசராத நம்பிக்கையின் அடிப்படையில் அவனை தொங்கிக் கொண்டு திரிகிறாள்.

குடும்ப நண்பர்கள் கூடவே அழகன், செல்வந்தனும் ஆயிற்றே? ஆதலால் தந்தையின் வழியே கை தேடி வந்த வரத்தை விட்டுத் தள்ள மனமின்றி மண்டையை ஆட்டி அவனோடு சுற்றிக் கொண்டிருக்கிறாள்.

"இப்போ நீ எங்க இருக்க?"

"நான் என் பிரெண்ட் வீட்டுல இருக்கேன் நந்து. மழை நின்னதும் வந்து என்னைக் கூட்டிட்டு போ!" கிட்டத்தட்ட கொஞ்சினாள்.

சிபிநந்தனுக்கு எரிச்சலாக வந்தது. இந்த கொஞ்சல், கெஞ்சல் எல்லாம் அவனைப் பொறுத்த வரை ஓவர் வழிசல்! இந்த காதல், நேசம் எல்லாம் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ள வெறுமனே ஒரு நாடகம்!

"சரி வை!" என ஒட்டாத்தன்மையுடன் கூறி விட்டு மீண்டும் கட்டிலில் முகம் குப்புற விழுந்தவனின் மனம் அச்சிறிய தாரகையின் பால் மீண்டும் ஓட்டமெடுத்தது.

இங்கே அவனது சிந்தையை கொள்ளை கொண்டவளோ, "ம்மீ.. ம்மீ.." என தாயின் கன்னம் தொட்டு கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தாள்.

"என்ற பேத்திக்கு உம்மேல அன்பு ஜாஸ்தி கனியா. பாத்தியோ என்ன கொஞ்சு கொஞ்சுறானு? அழகு, என் ராசாத்தி.." என வீடியோ காலில் அழகாய் திருஷ்டி கழித்தாள் கோதை.

கனிமொழி சிரித்துக் கொண்டே மகளின் கன்னத்தை இதமாய் வருடினாள். அவனது நினைவு அழையாமலே வந்து நெஞ்சை அலைக்கழித்தது.

"வைம்மா, நான் பிறகு உன்கிட்ட பேசுறன்.." என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துக் கொண்ட கனிமொழி, சிறியவளைக் கட்டிலில் அமர்த்தி,

"அதென்னடி உங்க அப்பாரைப் பாத்தா மட்டும் அம்புட்டு பாசம் பொத்துக்கிட்டு வருது? கொஞ்சம் விட்டுருந்தா கையும் களவுமா அவர்கிட்டே சிக்கி இருப்பேன், ஆமா.." என்ற புலம்பலோடு மகளின் காலில் நோகாதபடி ஒரு அடி வைக்க,

"அப்பாஆஆ.." என ஓவென அழத் தொடங்கினாள் அர்ச்சனா.

"திரும்ப தொடங்கிட்டியோ.." என முழி பிதுங்கிப் போனவள், மூன்றாம் உலகமகா யுத்தத்தை சளைக்காமல் எதிர்கொண்டு ஈற்றில் மகளை உறங்க வைத்துவிட்டு நிமிரும் போது நாக்குத் தள்ளியது.

"ரொம்பப் படுத்துறேடி.." என செல்லமாய் சலித்துக் கொண்டாள்.

மனம் ஏனோ ஏமாற்றத்தில் தத்தளித்து, ஏக்கக் கடலில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தது.

பெரிதாக ஒன்றுமில்லை. தன்னைக் கண்டதும் அவன் ஓடி வந்து பேச வேண்டுமென்றோ, நான் செல்லுமிடம் எங்கும் பின் தொடர்ந்து வந்து 'என்னை மன்னிச்சிக்கோ..' என கெஞ்ச வேண்டுமென்றோ எதிர்பார்க்கவில்லை.

குறைந்தபட்சம் ஒரு புன்னகை. இல்லையென்றால் 'எக்கேடும் கெட்டுப் போ..' என்கின்ற ஒரு அலட்சிய முகம் திருப்பல் அல்லது 'விட்டுட்டு போனவ தானே நீயி?' எனும் விதமாய் ஒரு முறைப்பு!

ம்ம்கூம், எதுவும் இல்லை. அந்நியன் போல் கண்களை சுருக்கி தன்னையும், குழந்தையையும் பார்த்து வைத்த அந்தப் பார்வை அவளை உயிருடன் வதைத்தது. நினைக்கும் போதே வலித்தது.

"அதுக்குள்ளார என்னிய மறந்துட்டிங்களா? யாரந்த பொண்ணு.. நீங்க கட்டிக்க போறவுகளா?" எனக் கேட்டு வீசிக் கொண்டிருந்த சீதள காற்றை அவனுக்கு தூதனுப்ப முயன்றாள் கனிமொழி.

நெஞ்சம் வழித்துக் கொண்டே இருந்தது. மனம் அமைதியடைய மறுத்து சண்டித்தனமாய் பிகு செய்தது.

"என்ற மனசும், அச்சும்மாவும் உங்களைத் தான் தேடிட்டுருக்கு வேந்தா. எங்களைப் பார்க்க வர மாட்டீகளா? நாங்க உமக்கு வேண்டாமோ.." என புலம்பித் தீர்த்தவள் மறுநாளில் செய்ய வேண்டியிருந்த வேலைகளை நினைவு கூர்ந்தவாறே வெகு நேரம் கழித்து உறங்கிப் போனாள்.

கனிமொழி, நடராஜன் - கோதையின் மகள். ஈழத்தில் வடக்கு- கிழக்கு பிரச்சனை கிளம்பிய போது உய்வதற்கு வழியின்றி இந்தியாவின் தென்புலத்தில் வந்து குடியேறியவர்களில் கோதையின் குடும்பமும் ஒன்று!

அவள் தன் சகோதரர்கள் மற்றும் தாயுடன் அங்கு வாழ்ந்து வருகின்ற காலத்தில், கோதையைக் கண்டு விருப்பம் கொண்டு வீட்டில் பேசி மணந்து கொண்ட நடராஜன், அவளை கண் கலங்காமல் பூப்போல் கவனித்துக் கொண்டான்.

அவர்களது இன்ப வாழ்வின் முதல் பொக்கிஷம் கனிமொழி, இரண்டாமவள் கயல்விழி!

நடராஜன், கனிமொழிக்கு பதினைந்து வயதிருக்கும் போதே ஒரு விபத்தில் அகால மரணமடைந்து இறைவடி சேர்ந்து விடவே, சகோதரர்களின் புறக்கணிப்பில் மனம் நொந்து, வேறு வழியின்றி- பிரச்சனைகள் ஓய்ந்து போயிருந்த ஈழத்து மண்ணுக்கே திரும்பினாள் கோதை, தன் இளைய மகளுடன்.

கனிமொழிக்கு என்றுமே கோதையை விட, நடராஜனின் அக்காள் குடும்பத்தோடு சற்று ஒட்டுதல் அதிகம். ஆகையால் அவள் தமிழகத்தை விட அகலாமல் அங்கேயே தன் படிப்பைத் தொடர்ந்தாள்.

இப்போது கயல்விழி படிப்பை முடித்துக் கொண்டு ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டிருக்க, காதலில் ஏமாற்றத்தைத் தழுவி - திருமணம் தோல்வியில் முடிவுற்று அர்ச்சனாவுடன் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் மற்றவள். அடிக்கடி சென்னையில் இருக்கும் நடராஜனின் அக்காள் சௌந்தர்யத்தின் குடும்பத்தினரோடு உண்டு மகிழ்ந்து விட்டு வருவதுமுண்டு!

சௌந்தர்யத்துக்கு 'அந்த எடுபட்ட பயல் உனக்கு பொருத்தமா இருக்க மாட்டான்..' என தான் பல தடவைகள் மறுத்தும் கேளாத கனிமொழியின் மீது ஏக வருத்தம் இருந்தாலும், ஒரு போதும் அவள் வருந்துமாறு முகம் திருப்பியதில்லை. ஆனால் அவ்வப்போது வார்த்தைகளால் வதைத்து 'நான் சொன்னதை நீ கேட்டிருக்கலாம்..' என்கின்ற தன் ஆதங்கத்தைத் தீர்த்துக் கொள்ளவும் மறக்க மாட்டாள்.

வெள்ளத்தில் அடிபட்ட ஓடம் போல் நகர்ந்து கொண்டிருக்கும் கனிமொழியின் வாழ்க்கையில், சூறாவளியாய் மாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்டு இதோ மீண்டும் பெங்களூரு வந்திருக்கிறான் சிபிநந்தன்.

நடந்தது என்ன?! இனி நடக்கப் போவது என்ன..

தொடரும்.

உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள, Thread 'KEK - Comments thread' https://www.narumugainovels.com/threads/10917/
 
Last edited:

NNK63

Moderator
அத்தியாயம் 02

மழை ஓய்ந்த பிறகும் அதன் மிச்சம் மீந்து, பெங்களூரை சீதள காற்றால் ஸ்பரிஷித்துக் கொண்டிருந்த இளங்காலைப் பொழுதில் அலைபேசியும் கையுமாய், அபார்ட்மெண்ட்டை ஒட்டியிருந்த பூந்தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தான் சிபிநந்தன்.

"இன்னைக்கு வர்றதா சொல்லி இருந்தியே? விடிய காலைலயே நீ அங்கிருந்து கெளம்பி இருப்பனு நினைச்சேன். என்னாச்சு நந்தா? எவ்ரிதிங் ஒகே?" என அக்கறைப்பட்டுக் கொண்ட சந்தியாவின் குரலை உள்வாங்கி முறுவலித்தவன்,

"ரிலாக்ஸ்க்கா! இங்க எல்லாம் ஓகே தான். நேத்து மீட்டிங் கூட நல்லபடியா முடிஞ்சுது. ஆனா பார்ட்டி அது இதுனு பிஸினஸ் பார்ட்னர்ஸ் படுத்துறாங்க. அதை எல்லாம் அலட்சியப்படுத்திட்டு நான் சென்னை வந்துட்டா தப்பா போயிரும்.

அதுவுமில்லாம இந்த லிஷா வேற.. இந்த மழையால என் பிரெண்ட்ஸை மீட் பண்ணல, என்ஜோய் பண்ணலனு ஒரே புலம்பல். முடியல!" என சலித்துக் கொண்டு பெருமூச்சு விட்டான்.

"பார்றா! என் தம்பி எப்போ லிஷாவைப் பத்தியெல்லாம் யோசிக்க தொடங்கினான்?" என வியப்பும், கேலியும் இரண்டறக் கலந்த குரலில் அவனை வாரினாள் சந்தியா.

"ப்ச், கலாய்க்காதக்கா. ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் இல்லையா? நான் என் வேலையைப் பார்ப்பேன். அவ பிரெண்ட்ஸ் கூட இன்னும் ஒரு ரெண்டு நாள் என்ஜோய் பண்ணட்டும்னு நினைச்சேன். அவ்ளோ தான்!" என பொறுமையாக விளக்கம் கொடுத்தவன்,

"ஆஹான்.." என குரலில் ஒட்டிக் கொண்ட கேலியின் மிச்சத்தோடு பேசியவள் மீது கோபம் கொண்டு,

"போ, நான் ஃபோனை வைக்கிறேன்.." என்று விட்டு பட்டென்று அழைப்பைத் துண்டித்துக் கொண்டான்.

சந்தியா அவனது கூடப் பிறந்த சகோதரி! அவளை விட ஐந்தாறு வருடங்கள் இளையவன் தான் சிபிநந்தன். லிஷாவின் ஒன்று விட்ட அண்ணனான பிரதீப்பைத் திருமணம் செய்து கொண்டு, இரண்டு ஆண் குழந்தைகள் சகிதம் வாழ்வை இதமாய், சுகமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

லிஷாவின் மீது நந்தனுக்கு எந்தவொரு அபிப்பிராயமும் இல்லையெனத் தெரிந்தாலும், காலம் சகலத்தையும் மாற்றி விடும் என்ற நம்பிக்கையுடன் தம்பியைக் கலாய்த்து இன்பம் காண்பதில் வல்லவள்.

சிபிநந்தனுக்கும் சிறு வயது தொட்டே அன்னை - தந்தையை விட சந்தியா என்றால் சற்று உசத்தி தான். அவளுக்காக எதையும் செய்யத் துணியும் ரகம்! இங்கு வந்த ஓரிரு நாட்களில் நேரம் தவறாமல் அவளுக்கு அழைப்பு விடுத்து அரைமணி நேரம் வளவளக்க ஒருநாளும் தவறியதில்லை.

சிரிப்புடனே அலைபேசியை பாக்கெட்டினுள் பத்திரப்படுத்திக் கொண்டு, மார்புக்குக் குறுக்காக கைகளைக் கட்டியபடி அபார்ட்மெண்ட் வளாகத்தினுள் நுழையும் போது,

"உங்களைக் கூட்டிக் கொண்டு போக, நான் நாலாவது மாடியில இருந்து இங்க வர வேண்டியிருக்கு பார்த்தீங்களோ? வந்தது தான் வந்தீங்க, உள்ள வாருங்களேன் மாமா.." என்ற கிள்ளைக் குரலொன்று சிபியின் செவி தீண்டியது.

சற்று வித்தியாசமாக இருந்த அந்த பேச்சு வழக்கில் கவரப்பட்டு சட்டென்று நடையை நிறுத்திக் கொண்டவனது கண்கள் குரல் வந்த திசை நோக்கி அனிச்சையாய் பயணித்தது.

அங்கு, கம்பளி ஸ்வெட்டருக்குள் தன்னைப் புகுத்திக் கொண்டு ஒரு நெடுநெடு ஆடவனிடம் உரையாடிக் கொண்டிருந்தவள், கனிமொழி!

சட்டென்று சிபிநந்தனின் விழிகள் ஆர்வ மிகுதியில் மின்னின.

'இவ அந்த பொண்ணு தானே? அந்த குட்டி பேபியோட அம்மா!' என நொடியில் அடையாளம் கண்டு கொண்டு,

"ஹேய்.." என ஏதோவொரு அவசரத்தில் அவளை அழைக்கவென வாய் திறந்தவன்,

"நோ கனியா! நான் இப்போ போயாகணும். இன்னொரு நாள் கண்டிப்பா வருவேன். அப்போ, வா மாமானு என்னை கை பிடிச்சு உள்ள கூட்டிட்டு போ என்ன.." என வினவியவனை புருவம் நெறிய ஏறிட்டான்.

புதியவன் புறமுதுகு காட்டி நின்றிருந்தபடியால், அவனது சீண்டும் விதமான கண் சிமிட்டலையோ, அந்த முகத்தில் தாண்டவமாடிய குறும்பையோ சிபி கவனிக்காமல் போனது தான் அவலம்!

"வா மாமா, இப்போவும் கை பிடிச்சு தானே கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன்?" என கன்னக்குழி விழ சிரித்து மாற்றானின் கரம் பற்றியவளைக் கண்டு ஏனென்றே தெரியாமல் உள்ளுக்குள் எரிந்தது சிபிக்கு.

'ச்சே, என்ன இந்த பொண்ணு..' என முகம் சுளித்தவனுக்கு மேனியெங்கும் குபுகுபுவென்று தீப்பற்றி எரியும் உணர்வு!

வெறித்த பார்வையும், நறநறத்த பற்களுமாய் குளிரில் உடல் விறைக்க சற்றும் நகராமல் கல்லுளி மங்கன் போல் அவ்விடத்திலே நின்றிருந்தான்.

"வர்றேன், வர்றேன் கனியா. குட்டிம்மா எங்க?" - இது புதியவன்.

"அவ தூங்குறா! நீ இங்க வந்திருக்க எண்டு தெரிஞ்சதும் நாலு சைடுலயும் பில்லோ அடுக்கிட்டு இந்தா ஓடி வந்துட்டேன். உள்ளார வந்துட்டு போ மாமா.. இல்லனா இனிமே என்கிட்ட பேசக் கூடாது, சொல்லிட்டேன்!" கிட்டத்தட்ட கெஞ்சினாள் கனிமொழி.

அவளுக்கு என்றுமே சௌந்தர்யத்தின் மூத்த மகன் கவியரசன் மீது அலாதிப் பிரியம் உண்டு! அவனுக்குமே அவளைக் கலாய்க்காமல், சீண்டாமல் தூக்கமே வராது.

"இங்க பாரு, நான் இப்போ ஒரு அவசரத்துல இருக்கேன். உடனே கெளம்பியாகணும். அடுத்த வாட்டி வந்தா நாலு நாள் தங்கிட்டு போறேன்.." என கனிமொழியின் கன்னம் தாங்கி கொஞ்சலாய் பேசியவனின் முகம் பாராமலே,

"நாலு மணி நேரம் தங்கி பேசிட்டு போவ ஐயாவுக்கு நேரமில்ல. இதுல நாலு நாள் தங்கப் போறாராமே! ஆருக்கு காது குத்த நினைக்கிற மாமா?" என சத்தமாய் புலம்பினாள்.

அந்தப் புலம்பல் சிபிநந்தனையும் எட்டியது.

"அவன் தான் முடியாதுனு சொல்லுறான்ல.. இவ ஏன் கெஞ்சி சாகுறா!" என எரிச்சல் பட்டுக் கொண்டவன் அவர்களின் கண் பார்வையில் சிக்காதபடி ஒரு சுவற்றில் சாய்ந்தவாறு அவர்களை நோட்டம் விடத் தொடங்கினான்.

ஏனென்றே தெரியாமல் நெஞ்சம் தவித்தது. மறைந்திருந்து மற்றவர்களின் அந்தரங்கம், ரகசியம் கேட்கும் அளவுக்கு நாகரிகம் கெட்டவன் இல்லை. ஆனால் இன்றேனா அவ்விடத்தை விட்டு நகர்வேனா என கால்கள் அடம் பிடித்தன.

ஆதலால் ஏதோவொரு உந்துதலில் அவர்களை கண்காணித்துக் கொண்டிருந்தான். ஏற்கனவே அவளிடம் பேசி இருப்பதாய் நெஞ்சம் சேதி சொல்லிச் சென்றது.

'நீ ஏன் வியக்குற? அவ பாஷையே அது தான் போல. நீயும் இதுக்கு முன்ன பல தடவை இந்த பேச்சு வழக்கைக் கேட்டிருக்க தானே?' என குட்டையைக் கிளப்பி அவனைப் பைத்தியகாரனாக்க முயன்றது மனசாட்சி.

இத்தனைக்கும் நடுவே, கனிமொழியையே மிக ஆழமாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் சிபி.

'எங்கோ பார்த்த முகம்.. ஏற்கனவே கேட்டுப் பழகிய பேச்சு வழக்கு..' என ஏதேதோ சிந்தித்து கிட்டாத பதிலுக்காய் அவன் மண்டையை சூடேற்றிக் கொண்டிருக்கும் போதே, பாவையின் பிறை நுதலில் ஒரு முத்தம் பதித்து விட்டு அந்த ஆடவன் அங்கிருந்து சென்று விட்டிருந்தான்.

அவன் சென்ற திசையை கண்களில் நீர் குளம் கட்டப் பார்த்திருந்தவளின் சோர்ந்த தோற்றம் இங்கு ஒருவனுக்கு புகைச்சலைக் கிளப்பியது.

"ச்சை!" என வெளிப்படையாகவே சலித்து கைகளை உதறியவன் அவளை நோக்கி அடியெடுத்து வைக்க,

"பேபிஈஈ.. ஐம் பேக்!" என கூறிக் கொண்டு அங்கம் உரச எங்கிருந்தோ ஓடோடி வந்து அவனைக் கட்டி அணைத்துக் கொண்டாள் லிஷா.

ஸ்தம்பித்து நின்றான் சிபிநந்தன்.

லிஷாவின் கூச்சலில் சட்டென்று திருப்பிப் பார்த்த கனிமொழியின் பார்வை தன்னை குற்றம் சுமத்துவதாய், கேவலமாய் பார்ப்பதாய் உணர்ந்தவனுக்கு முள்ளின் மேல் நின்றிருப்பதாக மனம் உறுத்தியது.

லிஷாவை தன்னிலிருந்து விலக்குவதற்கு பதிலாக, 'ஏன்! ஏன்! ஏன் இந்த உறுத்தல்? எனக்கு என்னாச்சு?' என குழம்பி விடை தெரியும் ஆவலுடன் கனிமொழியையே பார்த்திருந்தான் சிபி.

அதற்குள், "அத்தை இப்போ தான் சொன்னாங்க. ஹவ் ஸ்வீட்! நீ எனக்காக எவ்ளோ யோசிச்சிருக்க நந்து.." என்ற கொஞ்சலோடு நந்தனின் கன்னத்தில் தன்னிதழ் பதித்து வெட்கத்தோடு விலகி நின்றிருந்தாள் லிஷா.

திடுக்கிட்டுத் தெளிந்து, "லிஷ்.." என சிறு குரலில் கடிந்து கொண்டவன் முதல் பார்வையிலே தன் உடலுக்குள் ரசாயன மாற்றங்களைத் தோற்றுவித்து, தன்னைக் குழப்ப வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டவளைச் சடேரென்று திரும்பிப் பார்க்க, என்ன நினைத்தாளோ நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு நகர்ந்து சென்றாள் கனிமொழி. அது நமட்டுச் சிரிப்பா.. விரக்திச் சிரிப்பா என்பதை அவளின் ஆள்மனம் மட்டுந்தான் அறியும்..

"ஹேய்.." என சுற்றம் மறந்து அவளைப் பின் தொடர முயன்றவனைத் தடுத்து,

"வாட்ஸ் ராங் வித் யூ நந்து?" என நிச்சயிக்கப்பட்டவள் வினவிய பின் தான், "ஓ ஷிட்!" என தலையில் கை வைத்துக் கொண்டான் சிபிநந்தன்.

'வாட்ஸ் ராங் வித் மீ? வாட்ஸ் கோயிங் ஆன் இன்சைட் மீ.. ஓ காட்! யாரிந்த பொண்ணு?' என தடுமாறி நின்றவனை மீண்டுமொரு உலுக்கி,

"யாரவ?" என்று வினாத் தொடுத்தாள் லிஷா, புரியாத பாவனையோடு.

தான், தன் தோழியுடன் காரில் வந்து இறங்கியதைக் கூட அவதானிக்காத அளவுக்கு சிபி அந்தப் புதியவளையும், எவனோ ஒரு ஆடவனையும் மறைந்திருந்து பார்த்திருப்பதை அவளும் தான் பார்த்தாளே?

இப்போதும் கூட இருவரின் பார்வைப் பரிமாற்றம்.. தான் கட்டியணைத்த மாத்திரத்தில் வியர்த்துப் போய் அவளைத் திரும்பிப் பார்த்த சிபியின் பதற்ற முகம்.. இமைக்காமல் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள்.

"ஐ டுன்னோ லிஷ். அந்த பொண்ணு.. அந்தப் பொண்ணு.." எனத் தடுமாறி விழி சுழற்றியவன் சட்டென்று,

"அந்த பொண்ணு பிங்கர்ல இருந்து ரிங் கழன்று விழுந்ததைக் கூட அவதானிக்காம நின்னுட்டு இருந்தா.. அதான்!" என நிலத்தில் மின்னிய மோதிரத்தைக் கை காட்டி உளறினான்.

அதன் பிறகு தான் லிஷாவால் மூச்சு விடவே முடிந்தது. ஆசுவாசமாக ஏறி இறங்கிய நெஞ்சை நீவி விட்டுக் கொண்டாள்.

'அது சரி, நாயா பேயானு நான் இவனை இவ்ளோ சுத்தி வரேன். இருந்தும் கொஞ்சம் கூட கண்டுக்க மாட்டேங்குறான். இவன் போய் அந்தப் பொண்ணை பார்த்து மயங்கி நின்னுட்டான்னு நினைஞ்சிட்டேனே.' என மானசீகமாக நொந்தவள்,

"ஒகே, லெட்ஸ் கோ!" என முன்னேறி நடக்க, ஈரடி வைத்து அந்த மோதிரத்தை பொறுக்கி எடுத்து உள்ளங்கைக்குள் பொத்திக் கொண்டான் சிபிநந்தன்.

தனக்கு என்னவாயிற்று என்று அவனுக்கே புரியவில்லை. முதல் பார்வையிலே புத்தியையும், மனதையும் ஒருங்கே ஆட்டிப்படைத்து வெற்றி வாகை சூடிக் கொண்டவளைச் சுற்றியே நினைவுகள் வலம் வந்தன.

'வாட் ஹப்பெண்ட் நந்தா? அந்த பொண்ணு யாரோ ஒரு பையன் கிட்ட பேசிட்டு இருந்தா உனக்கேன் மேன் வலிக்குது? அப்படியே பொசபொசனு புகை வருதாப்ல பீல் பண்ணுறியே! வாட்ஸ் திஸ்?' என வருந்தி நின்றவனை,

'ரிலாக்ஸ்! ரிலாக்ஸ்! அது ஒன்னுமில்ல, நேத்து அந்த குட்டிப் பொண்ணு உன்னை அப்பானு கூப்பிட்டால்ல? அது உன் மனசுல ஆழப் பதிஞ்சி போய்டுச்சுனு நினைக்கிறேன். அதான் பேபியோட அம்மா வேற ஒருத்தங்க கிட்ட பேசும் போது உனக்கு பத்திக்கிட்டு வருது..' என அமைதிப்படுத்த முயன்றது மனம்.

'லாஜிக் இடிக்குதே!' என புத்தி ஒப்புக்கொள்ள மறுத்தாலும்,

'அப்படி தான் இருக்கும் போல..' என நெஞ்சை நீவி தன்னை சமன்படுத்திக் கொண்டவன் எப்போது தன்னுடைய அறையை வந்து அடைந்தானோ, சித்தப் பிரமை அற்றவன் போல் திருதிருத்து நின்றவன்,

"நந்து.." என லிஷா ஐந்தாவது முறையாக தோள் தொட்டு உலுக்கிய பிறகு தான் நிகழ் மீண்டான்.

"ஏன் ஒரு மாதிரியா இருக்க நந்து?"

"அது.. ஒன்னுமில்ல, தலை வலிக்குது.." என்று கூறிக் கொண்டு கட்டிலில் மல்லாக்க சாய்ந்தவன்,

"ஈவினிங், நம்ம பிஸினஸ் பார்ட்னர் ரௌந்திர பிரதாப் ஏற்பாடு செஞ்ச பார்ட்டி இருக்கு லிஷ். நீ எங்க வேணா போ.. யாரை வேணா மீட் பண்ணு. ஷார்ப்பா ஐஞ்சு மணிக்கு ரெடியாகி என் கண்ணு முன்ன நிற்கணும். அவ்ளோ தான்!" என பணிக்க,

"வாவ்! நீ எவ்ளோ ஸ்வீட் தெரியுமா?" என துள்ளிக் கொண்டு வந்து அவனது கன்னத்தை எச்சில்படுத்தி விட்டு விலகினாள் லிஷா.

சிபிநந்தனின் மூக்கிலிருந்து புகை பறந்தது.


தொடரும்..

கதைக்கான உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள, Thread 'KEK - Comments thread' https://www.narumugainovels.com/threads/10917/
 
Last edited:
Status
Not open for further replies.
Top