எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ரத்த ரங்கோலி 3

Status
Not open for further replies.

NNK-105

Moderator
ரத்த ரங்கோலி 3

வானில் கார்மேகங்கள் ஒன்று கூடுவதும் பின்பு பலத்த காற்றினால் பிரிவது எனக் கண்ணாமூச்சி விளையாட்டு நிகழ்த்திக் கொண்டிருந்தது.

அன்று பூமிநாதன் அலுவலகத்தில் இருந்துவிட்டார். கார்மேகம் அலுவலக வேலை காரணமாக வெளியே பல இடங்களுக்குச் சுற்றத் திரிய வேண்டியிருந்தது. இறுதி வேலையாக அரசு அதிகாரி ஒருவரைச் சந்தித்து தங்கள் காண்டிராக்ட்டை புதுப்பிப்பது போன்ற அலுவல்களை முடித்து “அப்பாடா“ என முதுகுத் தண்டு வலியோடு நிமிர நேரம் மாலை ஆறு மணியைக் கடந்திருந்தது.

பூமிநாதன் போனில் “ நீ வீட்டுக்கு போயிடு கார்மேகம். திரும்ப இங்க வர வேண்டாம். அதான் நானும் பவனும் இருக்கோம்ல. நீ ரெஸ்ட் எடு” என்றுவிட்டார்.

கார்மேகமும் கலைப்பின் காரணமாகச் சரியென வீட்டுக்குக் கிளம்பினார். வானமே கிழிந்தது போல மழை கொட்டியது. அடுத்த இரண்டு மணி நேரம் விடாது கனமழை. போக்குவரத்து நெரிசல் மற்றும் மழை காரணமாக அவர் வீட்டுக்கு வந்து சேர மேலும் தாமதம் ஆனது.

இரவு ஒன்பது மணியளவில் வீட்டை அடைந்தார். குளித்து உடை மாற்றினார். பசி வயிற்றைக் கிள்ளியது. பவன் வீட்டுக்கு வர நேரம் ஆகும். அவன் இருந்தால் போனில் உணவு ஆர்டர் செய்து கொடுப்பான். இல்லையேல் யூடூயூப் பார்த்து ஏதேனும் சமைத்துவிடுவான்.

பவனைத் தொடர்பு கொண்டு உணவு ஆர்டர் செய்யக் கேட்கலாம் தான். அவன் வேலையில் இருப்பான் தொல்லைக் கொடுக்க வேண்டாமென விட்டுவிட்டார். காலையில் வெளியே சாப்பிட்டனர் அதனால் மிச்சம் மீதி என எதுவும் இல்லை.

அப்பாவும் பிள்ளையும் எப்பொழுதுமே பசிக்குத்தான் உண்ண வேண்டி இருக்கும் ருசிக்கு உண்டது மிகச் சொற்பமான தருணங்களே. ஆனால் இருவரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். பெரும்பாலும் கார்மேகத்தின் அக்கா செல்வி உணவு சமைத்துக் கொடுப்பார். அவர் இரண்டு வீடு தள்ளி தன் மகனுடன் வசிக்கிறார். இந்நேரத்தில் அவரை கேட்க தயக்கமாக இருந்தது.

கார்மேகத்தின் வீட்டையும் செல்வி கவனித்துக் கொள்வார். செல்விக்கும் வயதாகிவிட்டதால் பவன் தானே முடிந்தவரை அனைத்தும் செய்வான். செல்வியும் விட்டுக் கொடுக்க மாட்டார். அழகான பாச போராட்டம் அரங்கேறும்.

செல்வி துணிகளை வாஷிங் மெஷினில் துவைத்து கொடியில் உலர்த்திவிடுவாள். செல்வி சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் பவனிடம் “ஏம்பா சீக்கிரமா கண்ணாலம் கட்டிக்க இப்படி அல்லாட வேண்டா இல்ல” என்பாள். பவன் பதில் சொல்லாமல் புன்னகையுடன் நழுவி விடுவான்.

பெறாத பிள்ளையானாலும் பவன் அப்பா அப்பா எனக் கண்ணும் கருத்துமாகக் கார்மேகத்தைப் பார்த்து கொண்டான். அவருக்கு ஒரு குறையும் இல்லை.

அந்த வீட்டு மாடியில் உரிமையாளர் உள்ளார். கீழே பவனும் கார்மேகமும் இருக்கிறார்கள். வீட்டிற்குப் பின்னே கிணறு அதையொட்டி துவைக்கும் கல் இருக்கிறது. உரிமையாளர் சில செடி கொடிகளை பின்னனிருந்த இடத்தில் வளர்க்கிறார். சுற்றிலும் அடுக்குமாடிக்குடியிருப்பு முளைத்திருந்தது.

மழையினால் சட்டென அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட. இனி உணவு தயாரிப்பது சிரமம்தான் என கார்மேகம் அலுத்துக் கொண்டார். மனமும் உடலும் சோர்வாக இருந்தது. மழையின் தீவிரம் குறைந்தது.

அதே நேரம் ஒருவன் தன்னை முழுவதும் கரிய துணியால் மறைத்துக் கொண்டு கார்மேகத்தின் வீட்டின் பின் சுவரில் ஏறிக் குதித்தான். மின்சாரம் இல்லாததால் அந்த இருட்டு அவனுக்கு உதவியது. இருட்டு அவனுக்குப் பழக்கமானது போல லாவகமாக அவன் செயல்பாடு காணப்பட்டது. எனினும் எச்சரிக்கையுடன் சுற்றும் முற்றும் மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொண்டான்.

கருமை தன் ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் வீட்டு இன்வெர்டர் மூலம் வெளிச்சம் இருட்டை விரட்ட முயன்று கொண்டிருந்தன. மின்னல் அவ்வப்பொழுது தானும் உள்ளதை உணர்த்தியது.
இரண்டொரு தெரு நாய்கள் எங்கோ குலைத்ததைத் தவிர வேறு எந்த அரவமும் இல்லை.

பின் கட்டு கதவு திறக்கும் சத்தம் கேட்டது. அவன் சட்டெனக் கிணற்றுக்கு அருகில் குத்திட்டு மறைவாக அமர்ந்தான். கார்மேகம் கையில் சிறிய டார்ச் லைட் வைத்திருந்தார். அதிலிருந்து வந்த விளக்கு பந்து இருட்டுடன் முட்டி மோதியது.

துணிகள் அனைத்தும் மழையில் நனைந்து போயிருந்தன. அவற்றை எடுத்து மறுநாள் காலை மீண்டும் வாஷிங் மெஷினில் போட்டுத் துவைக்கலாம் இல்லையேல் மழையில் நனைந்த துணிகளிலிருந்து வாடை வீசும் எனக் கார்மேகம் அவற்றை எடுக்க வந்தார்.

கார்மேகம் கையில் டார்ச் லைட்டும் இருந்ததால் அதை வேறு எங்கு வைத்தாலும் மழையில் நனைந்து பழுதாகிவிடும். என்ன செய்யலாம் என திணறிக் கொண்டிருந்தார்.

கிணற்றருகில் இருந்தவன் கார்மேகத்தை தாக்க முயன்ற நொடி … கார்மேகத்தின் வீட்டு காலிங்பெல் ஓசை கேட்டது. பேட்டரி மற்றும் மின்சாரம் என இரண்டு வகையிலும் வேலை செய்வது போல அமைந்திருந்த காலிங் பெல் தன் வேலையை செவ்வனே செய்தது.

காலிங்பெல் ஓசை கேட்ட கார்மேகம் பவன்தான் வந்துவிட்டான் என நினைத்தவர். அவசரமாக வீட்டின் பின்புறத்தை தாளிடாமல் உள்ளே சென்றுவிட்டார்.

பின் இருந்தவன் எரிச்சலுடன் கார்மேகத்தின் கவனத்தைக் கவராமல் உள்ளே எட்டிப் பார்த்தான்.

“கூக் கூக் கூகூ”……“கூக் கூக் கூகூ” என காலிங் பெல் இனிமையாகக் கூவியது.

கார்மேகம் வீட்டினுள் சென்று கதவைத் திறந்தார்.

அப்பொழுது மின்சாரம் உயிர்பெற்றது.

“சார் புட் ஆர்டர்” என ஒருவன் பார்சலை நீட்டினான்.

“நான் எதுவும் ஆர்டர் செய்யலையே” எனக் கார்மேகம் குழப்பமாகக் கூற

“மிஸ்டர் பவன் பேரில் .. ஆர்டர் வந்திருக்கு” என அவன் பில்லை பார்த்து சொன்னான்.

“ஆங் இங்கதான் பா” என வாங்கிக் கொண்டார்.

பசியிலிருந்த கார்மேகத்திற்கு மகிழ்ச்சியாக இருந்தது. பவன் தன் மேல் கொண்டிருந்த அன்பும் அக்கறையும் நெகிழ வைத்தது. பார்சலை வாங்கிக் கொண்டார். உணவு வாசம் பசியை அதிகரித்தது.

“டூ ஹண்டரட் ஆகுது சார்” என்றான் வந்தவன்

கார்மேகமும் பணத்தைக் கொடுத்தபடி “என்ன சாப்பாடுபா?”

“தெரிலை சார்” எனப் பவ்யமாகப் பதிலளித்தான். அதோடு “சார் உங்க கையெழுத்து” என ஒரு சிறிய தாளை பேனாவுடன் நீட்டினான்.

அதை வாங்கி கையெழுத்துப் போட முனையப் பேனா எழுதவில்லை .. அவர் கையிலும் பேனா மை ஒட்டிக் கொண்டது “என்னப்பா பேனா எழுதலை?” கேட்கவும்

“எழுதலையா?” என அவன் அதை வாங்கிப் பார்த்துச் சோதித்தான் “ஆமா சார் .. உங்ககிட்ட பென் இருந்தா அதுல சைன் போடுங்க சார் .. சாரி சார்” என மன்னிப்பு கேட்கும் பாவனையில் சொல்ல

“ம்ம் சரி சரி” என முணுமுணுத்தபடி வேறு பேனாவை எடுத்து வந்தார்.

சுவரில் தாளை நிறுத்திக் கையெழுத்திட்டுக் கொடுத்தார். பார்சலை கையில் வைத்தபடி கதவை மூடினார். அப்போது பார்சல் கைநழுவி விழப் போக அதைப் பத்திரமாகப் பிடித்து டைனிங் டேபிளில் வைத்தார். அவர் கதவைச் சரியாக தாளிடவில்லை எனக் கவனிக்கத் தவறினார்.

அதற்குள் பின்னே பார்த்திருந்தவன் வீட்டினுள் சத்தமில்லாமல் பதுங்கினான்.

இது எதையும் கார்மேகம் கவனிக்கவில்லை.

அடுத்த ஒருமணி நேரத்தில் பவன் வந்து காலிங் பெல்லை அழுத்தினான். கதவு திறக்கவில்லை. உறங்கி இருப்பார் எனத் தந்தையின் கைப்பேசிக்குத் தொடர்பு கொண்டான். பதில் இல்லை.

அப்போதுதான் கதவு சரியாக மூடவில்லை என்பதைக் கவனித்தவன் கதவைத் தொடத் திறந்து கொண்டது. இந்நேரத்தில் கதவு ஏன் திறந்துள்ளது என எண்ணியவனாக உள்ளே செல்ல

அவன் அப்பா ஹாலில் ஒருக்களித்துப் படுத்திருந்தார். இங்கு ஏன் படுத்திருக்கிறார்?” என எண்ணியபடி “அப்பா ரூம்ல போய் படுங்க” என்றான்.

ஒருவர் அசந்து உறங்குகையில் சரேலென எழுப்பக் கூடாது. அது உறங்குபவர் இதயத்தை பாதிக்கும். அதனால் மெல்ல அப்பாவை எழுப்பினான். அவர் எழவில்லை. அவன் தொட்டு எழுப்ப முயல ஒருபக்கமாகச் சாய்ந்தார். கண்கள் திறந்திருந்தன. மூக்கு மற்றும் வாய்வழியே ரத்தம் ஒழுகி தரையில் அழகிய கோலம் போட்டிருந்தது. உடல் பனிக்கட்டி போலக் குளிர்ந்திருந்தது.

பின் வாசலும் வாயைப் பிளந்தபடி கிடந்தது.

பவனுக்கு ஒரு நொடி உலகமே ஸ்தம்பித்துவிட்டது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கூட தோன்றவில்லை. அழக்கூட முடியவில்லை.

இது கொலை எனப் புரிந்தது. அப்பாவின் உடலைக் கட்டிக் கொண்டு கதறி அழ முடியாத சூழ்நிலை. தன்னை சுதாரித்தவனாக முதலில் காவல்துறைக்குப் புகார் அளித்தான்.

பின்பு கைலாஷ் அஷ்வின் ஆதிக்குத் தகவல் சொன்னான். அவர்கள் அங்கு வருவதற்கு முன்பு காவல்துறை அங்கே இருந்தது.

கனத்த இதயத்துடன் வீட்டின் மூலையில் பவன் கால்களைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான். அவன் மனமோ கார்மேகம் என்னும் நபர் மட்டும் தன்னை வளர்க்கவில்லை என்றால் இன்று ஏதோ ஒரு அனாதை ஆசிரமத்தில் இருந்திருப்பான். கல்வி .. வேலை போன்றவை அவனுக்குக் கிட்டியிருக்குமா என்பது சந்தேகமே?

இத்தனை நல்ல மனிதரை யார் கொன்றிருப்பார். அந்த முகம் தெரியாத கொலைகாரன் மீது எல்லையில்லா கோபம் பொங்கியது.

கார்மேகத்தின் உடலை கூர் ஆய்வு செய்ய அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

தடயவியல் நிபுணர்கள் வந்து தங்கள் பணியைத் தொடர்ந்தனர். பகல் இரவு என்று பாராமல் வேலையைத் தொடங்கினர்.

(BLACK MAGNETIC POWDER) பிளாக் மேக்னடிக் பவுடர் என்னும் பொடியைப் பயன்படுத்தி வீட்டில் உள்ள கைரேகைகளைச் சேகரித்தனர். வீட்டின் ஒரு அடியைக் கூட விடாமல் சல்லடைப் போட்டுத் தேடினர்.

மோப்ப நாய்களைக் கொண்டும் தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

இவற்றைக் கண்ட ஆதிக்கு தன் தந்தையின் இறப்பில் லேசான சந்தேகம் எழும்பியது. தன் தந்தையும் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தோன்றியது.

அபூர்வா வெளி மாநிலத்திற்கு சூட்டிங் சென்றிருந்தாள் . ஆதி வாட்சப்பில் அவளுக்கு தன் சந்தேகத்தை சொன்னான். அவள் நிதானமாக ஒரு முடிவை எடு. உன் குடும்பத்தோடு கலந்து ஆலோசிக்காமல் எதுவும் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தினாள்.

விஷயத்தைக் கேட்ட பூமிநாதன் இதயம் நொறுங்கிவிட்டது. அடுத்து தான்தான் பலியா? எனச் சந்தேகமும் பயமும் எழாமல் இல்லை.

இன்ஸ்பெக்டர் இனியன் இவர்தான் இந்த கேசில் ஈடுபட்டிருக்கும் ஆசாமி.

இனியன் வயது ஐம்பது. அவர் செல்லும் முன் அவர் பெரிய தொந்தி சற்றே குலுங்கியபடி முன்னே செல்லும். அவரின் குண்டான உருவம் அவரை குட்டையாகக் காண்பித்தது. சிறிய கண்கள் அவை பாதி மூடிய நிலையிலேயே காணப்படும். “மனுஷன் தூங்கிட்டாரோ” என அருகில் இருப்பவர்களுக்கு சில சமயங்களில் தோன்றும் கட்டையான குரல். எனினும் அதிர்ந்து பேச மாட்டார்.

ஆனால் இன்றுவரை அவருக்குப் பக்கபலமாக இருப்பது அவர் மூளை. எதையும் வேறு கண்ணோட்டத்தில் அலசி ஆராய்பவர்.

அவருக்கு போலீஸ் உத்தியோகம் பிடிக்காதது. அவர் தந்தை காவல்துறையில் பணியாற்றும் போது இறந்துவிட்டார். அதனால் அந்த வேலை இவருக்கு கிட்டியது. குடும்ப சூழ்நிலையால் வேலையில் சேர்ந்துவிட்டார்.

முதலில் சாதாரணமாகச் சேர்ந்தவர் இன்று இன்ஸ்பெக்டர் அளவில் இருக்கிறார். இதற்கு மேல் செல்ல அவருக்கு விருப்பமில்லை. பெரும்பாலும் எந்த வம்புக்கும் செல்ல மாட்டார். அதனால் அதிகம் இடம் மாற்றம் பெறாதவர்.

அவர் காவல்துறை உடுப்பில் இல்லாமல் இருந்தால் சாமி சத்தியமாக அவர் காவல் துறையைச் சேர்ந்தவர் என எவரும் நம்ப மாட்டார்.

அவருக்கு இரவு இரண்டு மணியளவில் கொலைகாரன் யாரெனத் தெரிந்தது.

கொலைகாரன் பிடிப்பட்டுவிட்டான் என்னும் செய்தி மற்றவர்களுக்குச் சற்றே ஆறுதலை அளித்தது. பவன் அவனைக் காண துடித்துக் கொண்டிருந்தான்.



தொடரும் ….

 
Status
Not open for further replies.
Top