எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ரத்த ரங்கோலி 4

Status
Not open for further replies.

NNK-105

Moderator
ரத்த ரங்கோலி 4

இருள் சூழ்ந்த அறை. நடுவே ஒரு நாற்காலி அதில் அவன் கைகள் பின்னே கட்டப்பட்ட நிலையில் அமர்த்தப்பட்டிருந்தான். தலைக்கு மேல் ஒரு குண்டு பல்பு தொங்கியபடி வெளிச்சத்தை அவனுக்கு மட்டுமே உமிழ்ந்தது. சுற்றி நின்ற மூன்று காவலர்கள் முகம் அவனுக்குச் சரியாகப் புலப்படவில்லை. அது லோகல் காவல் நிலையம்.

அவன் முகம் வீங்கி கிடந்தது. போலீஸ் அடிக்குத் தாங்காமல் உதடு கிழிந்து ரத்த கோடுகள் உறைந்திருந்தது. மேடு பள்ளமான சாலைப் போல அவன் உடல் முழுவதும் ஆங்காங்கே ரத்த காயமும் வீக்கமும் தென்பட்டது. அவன் பெயர் செல்வா. பெயரில் மட்டுமே செல்வம் இருந்தது.

“சொல்லுடா நீதான கொலை செஞ்ச” ஆயிரமாவது முறை கான்ஸ்டபிள் மிரட்டாத குறையாகக் கேட்டார். அவர் உடல் வியர்வையில் குளித்திருந்தது. கையிலிருந்த லத்தி வீடு துடைக்கும் மாப்பைப் போலப் பரட்டையாக இருந்தது. அது செல்வா உடலில் விளையாடி இருப்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இனியன் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி செல்வா இருந்த அறைக்குள் பிரவேசித்தார். மற்ற காவலர்கள் சல்யூட் அடித்து இரண்டடி பின்னுக்கு நகர்ந்தனர்.

இனியன் நாற்காலியை இழுத்து செல்வா முன்னே போட்டு அமர்ந்தார். சில நொடிகள் மௌனமாகக் கழிந்தன . அவன் உடல்மொழியைக் கவனித்தார். அவனின் உறுதி கொஞ்சம் கொஞ்சமாகக் குலைவது நன்றாகப் புரிந்தது. முகத்தில் வலி வேதனை அப்பட்டமாகத் தெரிந்தது. இனியும் அடித்தால் அவன் இறந்துவிடுவான் என யூகித்தார்.

இனியனின் நேரடி பார்வையைத் தவிர்த்தான் செல்வா. என்ன ஆனாலும் வாயைத் திறக்கக் கூடாது என உறுதிக் கொண்டான்.

இனியனுக்கு நன்கு தெரியும் எப்போது எதைப் பேச வேண்டும் என்று கொலையாளியை கைது செய்தவுடன் கேள்வி கேட்டால் உடலிலும் மனதிலும் தெம்பு இருக்கையில் எகத்தாளமாகப் பதில் வரும்.

அதுவே அவனை அடித்துத் துவைத்த பின்னர் அவன் உறுதி பறந்துவிடும். அப்போது உளவியல் என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டும்.

இனியன் அருகிலிருந்தவரை நோக்கி “ஏட்டு இவன் கிட்னி, கண்ணு, ஹார்ட் இன்னும் என்னென்ன எடுக்க முடியுமோ எடுத்து வித்திட்டுங்க .. தப்பிக்கப் பார்த்தான் அதனால என்கவுன்டர்ல சுட வேண்டியதாச்சுனு கேசை முடிச்சிடலாம்” என்றுவிட்டு எழ முயன்றார்.

செல்வாவிற்கு அவ்வார்த்தைகள் பகீரென்றது. போலீஸ் சொன்னதையும் செய்யும் சொல்லாததையும் செய்யும் என்று தெரியும்.

ஆதலால் உடனே “நீங்க அப்படி செய்தா மனித உரிமை மீறலுக்குப் பதில் சொல்ல வேண்டிவரும்” என இனியனுக்குப் பதில் சொல்ல வாயைத் திறந்தான் செல்வா.

அவன் சொற்களைச் சற்றும் கனியாதது போல இனியன் “டெட் பாடிய அவன் குடும்பத்துக்கு கொடுக்க அவசியமில்ல .. அதான் பொண்டாட்டி புள்ள எல்லாரும் விட்டுடு போயிட்டாங்கல” என ஏட்டிடம் சொன்னார். அவனைப் பற்றித் தெரியும் என காட்டிகக் கொள்ள கடைசி வாக்கியம்.

அவனும் “சரி சார்” எனத் தலையாட்டினான். இனியனின் பயிற்சி அப்படி.

செல்வன் “என் குடும்பம் நாசமா போனதுக்குக் காரணமே அந்த கார்மேகம் தான். அதான் அவனை கொன்னுட்டேன்” எனக் கர்ஜிக்காத வகையில் பேசத் தொடங்கினான்.

இனியன் கண்ணசைவில் அனைத்தும் ரெகார்ட் ஆனது.

மந்திரத்தால் கட்டுண்டவன் போலப் பேசத் தொடங்கினான்“கடந்த ஆறு மாசமா கார்மேகம் குப்பை கிடங்கல்ல இருந்து யாருக்கும் தெரியாம கொஞ்சம் கொஞ்சமா கிட்டதட்ட இருநூறு கிலோ இரும்பு திருடி வித்திட்டு இருந்தேன். அது தெரிஞ்ச கார்மேகம் என்னை வேலைய விட்டு நிறுத்திட்டான். எனக்கு வேற வேலையே கிடைக்கல்ல. இதனால தெனிக்கும் வீட்ல சண்டை. என் பொஞ்சாதி புள்ளைய கூடிட்டு அவ ஆத்தா வுட்டுக்கு போயிட்டா. இன்னிக்கு நான் அனாதைய நிக்றேன். சோறு சாப்ட்டு மூணு நாள் ஆச்சு. எல்லாத்துக்கும் காரணம் கார்மேகம். அதான் கார்மேகத்த கொன்னுடலாம்னு முடிவு பண்ணேன். அவன் வீட்டு பின் வாசல் வழியா வீட்டுக்குள்ள போயி அவன அடிச்சி செவுறுல நாலு தடவ அவன் தலைய முட்டினேன். கிழம் செத்திடுச்சி” இன்னமும் அவன் கண்களில் அந்த வெறி அடங்கவில்லை.

“அங்க நடந்தத அப்படியே சொல்லு” இனியன் ஆணையிட

அவன் தான் கண்டு கேட்ட அனைத்தையும் கூறி முடித்தான்.

கூர்மையாகக் கவனித்த இனியன் “புட் ஆர்டர் செஞ்ச ஆள் பவன் பேரா சொன்னான்?” கேட்க

“ஆமா சார்”

“கொண்டு வந்தவன் எப்படி இருந்தான்?”

“இருட்டுல அடையாளம் தெரியில .. முகத்துல மாஸ்க் போட்டிருந்தான் தலைல இருந்து கால்வரை மூடின மாதிரி பெரிய ரைன் கோட்டுக் கண்ணாடி கூட போட்டிருந்தான். ஆஹ .. நானே நினைச்சேன் இந்த ராத்திரியில அதுவும் மழைல எதுக்கு கண்ணாடினு”

“கார்மேகம் அந்த உணவை சாப்பிட்டாரா?”

“நான் உடனே போயி கொலை பண்ணதா நினைச்சேன். ஆனா கடைசி சோறு சாப்பிடட்டும் வெயிட் பண்ணேன். சாப்பிட்டு மிச்சத்த பிரிட்ஜல வெச்சான்.”

“நீ அடிக்கும் போது அவர் உன்ன திரும்பத் தாக்கலையா?”

“முதல்ல தாக்கினார். ஆனா என் அடிக்கு முன்னால அந்த பெரிசால சமாளிக்க முடியலை” பெருமையாகச் சொன்னான்.

“ம்ம்”

“கொலை பண்ணதும் வேற ஊருக்குத் தப்பிக்க அங்க இருந்து நேரா பஸ் ஸ்டாண்ட் போயிட்டேன் … ஆனாலும் நீங்க பிடிச்சிட்டிங்க” என்றான்.

“டேய் எங்க மோப்ப நாய் பத்தி என்ன நினைச்ச … கப்புனு கரெக்டா பிடிச்சிடும்” என கான்ஸ்டபிள் பீற்றிக் கொண்டான்.

பின் செல்வா அச்சத்தில் “சார் என் ஹார்ட்டை எடுத்திடுவிங்களா?” குரல் நடுங்கக் கேட்க

சுள்ளென “உனக்கு இதயம் இருக்கா என்ன?” என்றுவிட்டுத் திரும்பிவிட்டார் இனியன்.

பத்து நிமிடத்திற்குப் பிறகு அவன் கை கட்டை அவிழ்த்து அவனுக்கு தண்ணீர் மற்றும் உணவு கொடுத்தனர்.

கைதியை இருபத்தி நாலு மணி நேரத்திற்குள் நீதிபதிமுன் ஆஜர் படுத்த வேண்டும் என்பதால் அவனை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.

நீதிபதி அவனுக்கு பதினைந்து நாள் ரிமாண்ட் வழங்கினார். சிறைக்குச் செல்லும் முன் அவன் உடல் பரிசோதிக்கப்பட்டது.

சிறை அதிகாரி “உடம்புல என்ன டா அடி?” கேட்க

“பாத்ரூம்ல வழக்கி விழுந்துட்டேன்” என்றான். சிறை அதிகாரிக்குத் தெரியும் அவனுக்கு அது சொல்லிக் கொடுக்கப்பட்ட வழக்கமான பல்லவி என்று.



நாட்கள் நகர்ந்தன. கைலாஷ் அவன் அப்பாவிடம் “அப்பா உங்களுக்கு வர்ற சனிகிழமை ராத்திரி பிலைட் டிக்கெட் பிளாக் செஞ்சாச்சு. போலீஸ் அனுமதி கொடுத்த உடனே நீங்க லண்டன் கிளம்பிடலாம். நான் எப்படியும் போலீஸ்கிட்ட பர்மிஷன் வாங்கிடுவேன்” கராராகச் சொன்னான்.

கடந்த சில நாட்களாகவே கைலாஷ் “இந்த பிசினஸ் போதும். இனி நீங்க அங்க போக வேண்டாம். நம்ம கான்டிராக்ட் முடிஞ்சி போச்சு. நல்லவேளை இன்னும் ரின்யூ ஆகலை. இனி நமக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்ல. பவனுக்கு வேற வேலை வாங்கிக் கொடுக்கிறது என் பொறுப்பு. அவனைப் பத்தி நீங்க கவலை படாதீங்க. நீங்க லண்டன்ல சங்கீதா கூட நிம்மதியா இருங்க. அவகிட்ட பேசிட்டேன். இனி எந்த பிரச்சனையும் இல்ல ” எனப் படபடவென பொரிந்தான்.

தன் அப்பாவைப் பத்திரமாகச் சகோதரி சங்கீதாவிடம் அனுப்ப வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தான். எந்த தருணத்திலும் தன் தந்தையை இழக்க அவன் தயாராக இல்லை.

பூமிநாதன் முற்றிலும் மனமுடைந்து போயிருந்தார். அவருக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் எனப் புரியவில்லை. அடுத்தடுத்து தன் நண்பர்களை இழந்ததால் அவர் அதிர்ச்சியில் உறைந்திருந்தார். மகன் சொல் பேச்சைக் கேட்பதா வேண்டாமா? எனக் குழம்பி இருந்தார். அவனிடம் கேட்கவும் தயக்கமாக இருந்தது.



பவன் மீண்டும் ஒருமுறை தான் அனாதை ஆகிவிட்டதாய் உணர்ந்தான். கார்மேகத்தின் உடலை கூர் ஆய்வுக்குப் பின் வாங்கி அடக்கம் செய்து முடித்துவிட்டான்.

ஒருவர் இருக்கும் பொழுதைவிட அவர் இல்லாத சமயத்தில்தான் அவர்களின் நினைவு அதிகமாக ஆக்கிரமிக்கும். அப்படிதான் பவன் மனதைக் கார்மேகம் முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தார்.

அவரின் ஒவ்வொரு பொருளும் தன் அப்பாவின் நினைவை அதிகப்படுத்தியது.

காலிங் பெல் சத்தம் குறுக்கிடவே பவன் கதவைத் திறந்தான். ஆதியும் அபூர்வாவும் நின்றிருந்தார்கள். அபூர்வா ஆதியின் தோழி என்ற முறையில் பவனுக்கு முன்னமே அறிமுகம்.

புகைப்படத்தின் வழியே தன்னை பார்க்கும் கார்மேகத்தின் முன் கைகூப்பி வணங்கினாள் அபூர்வா.

“பவன் உங்க அப்பா இடத்த யாரலையும் நிரப்ப முடியாது. இதுல இருந்து நீ மீண்டு வரனும்” என ஆறுதல் அளித்தாள்.

மனம் கனத்த பவனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. அணையிலிருந்து கண்ணீர் வெளிவரத் துடித்தது.

“இந்த வீட்டை காலி பண்ணிடு பவன். அப்பா நினைவா இருக்கும். அதுலயும் நீ தனியா வேற இருக்க .. உனக்கு ஒரு மாறுதல் தேவை” என ஆதி கூற

“ஆமா பவன் ஆதி சொல்றது கரெக்ட். நீ என் கூட இருக்கலாம். நான் தனியா தானே இருக்கேன்” என்றாள் அபூர்வா

இதைக் கேட்ட ஆதிக்குக் கோபம் வந்தது. காதலனுக்கே உரியக் குணம் தலைதூக்கியது. அவனுக்குப் பிடிக்கவில்லை. மற்ற இருவரும் அவன் முகத்தைக் கவனிக்கவில்லை.

சில நிமிடங்கள் கார்மேகத்தைப் பற்றிப் பேசிவிட்டு

ஆதி “அபூர்வா நேரம் ஆகுது பார். நாம கிளம்பலாம்“ என அவளை இழுக்காத குறையாக அழைத்துக் கொண்டு வெளியேறினான்.

பவன் அவள் வீட்டில் இருக்கக் கூடாது. அவளிடம் சொல்லியே ஆக வேண்டும். ஆனால் சொன்னால் நிச்சயம் அபூர்வா தவறாக என்னுவாள். தன்மேல் நம்பிக்கை இல்லை என எண்ணுவாள். ஆதலால் குழம்பினான் ஆதி. இறுதியாகப் பவனிடம் பேசலாம் என்னும் முடிவுக்கு வந்தான்.

“நான் இங்கதான் இறங்கணும்” என அபூர்வா சொன்னதும் பைக்கை நிறுத்தினான்.

“சீ யூ ஆதி. பவனுக்கு துணையா இரு. பாவம் அவன்” என்றுவிட்டு சென்றாள்.

ஆதி தன் எண்ணத்தை மறைத்து “நான் பாத்துக்றேன் நீ போயிட்டு வா” என அவளை அனுப்பினான். அப்போது போன் அலற எடுத்து “ஹலோ”

“இன்ஸ்பெக்டர் இனியன் பேசுறேன் ஆதி” என்றார்

“சொல்லுங்க சார்”

“இப்ப ரெயின்போ ரெஸ்டாரண்ட்க்கு வர முடியுமா?”

“லொகேஷன் ஷேர் செய்ங்க இப்பவே வரேன் சார். எதுக்குனு தெரிஞ்சிக்கலாமா?”

“பயப்படாதீங்க முக்கியமான விஷயம் பேசணும்”

அடுத்த இருபதாவது நிமிடம்

இனியனும் ஆதியும் ரெஸ்டாரண்டில் எதிரெதிர் நாற்காலியில் அமர்ந்திருந்தனர். இருவருக்கும் காபி கோப்பைகள் வைக்கப்பட்டிருந்தன.

“எனக்கு இந்த கேஸ்ல அன்அபிஷியல் ஹெல்ப் தேவை”

புரியாமல் விழித்தான் ஆதி

“நீங்க ஒருத்தரை கண்காணிக்கணும். அவர் கொலைக்கு உடைந்தாயா இருக்கலாம்னு தோனுது. ஆனா சாலிட் எவிடன்ஸ் கிடைக்கல”

தலை சுற்றாத நிலை ஆதிக்கு “யாரை?”

“பவன்”

ஆதி “அவன் ரொம்ப நல்லவன் சார்” எனச் சொல்ல வந்தவனை அவரின் அடுத்த வார்த்தைகள் கட்டிப் போட்டன.





தொடரும் …
































 
Status
Not open for further replies.
Top