நேரம் பார்க்கத் தெரியாது!
ஒரு நாள் மோகனின் அப்பா மோகனிடம், "நேரம் என்ன?" என்று கேட்டார்.
அதற்கு மோகன், "எனக்கு நேரம் பார்க்கத் தெரியாது" என்று சொன்னான்.
"நேரம் பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும். அது உனக்கு உதவியாக
இருக்கும். யாராவது நேரம் என்ன என்று கேட்டால் செல்லத் தெரிந்திருக்க வேண்டும்" என்றார் மோகனின் அப்பா.
அதைக் கேட்ட மோகன், "சரி நான் பழகிக் கொள்கிறேன் அப்பா" என்றான்.
அவன் சொல்லி விட்டு கோபாலுடன் விளையாடச் சென்றான். சில நாட்கள் கழிந்தன. மோகனும் நேரம் பார்க்கப் பழகிக் கொள்ளவில்லை.
ஒருநாள் மோகனின் அப்பா வேலையில் இருந்து வந்து, "மோகன் நேரம் என்ன?" என்று கேட்டார்.
அதற்கு மோகன், "தெரியாது" என்றான்.
"நேரத்தைப் பார்த்துச் சொல்" என்று சொன்னார் அவனின் அப்பா.
அவன் கடிகாரத்தின் முன் சென்று நேரம் செல்லத் தடுமாறிக் கொண்டிருந்தான்.
அவ்விடத்திற்கு வந்த மோகனின் அம்மா, "கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு என்ன செய்கிறாய்?" என்று கேட்டார்.
அதற்கு மோகன், "அப்பா நேரம் என்ன என்று கேட்கிறார். ஆனால் எனக்கு நேரம் பார்க்கத் தெரியாதே" என்றான்.
அதற்கு மோகனின் அம்மா, "அதற்கு நாள் முழுவதும் கடிகாரத்தையே பார்த்துக் கொண்டு இருக்கப் போகிறாயா?" என்று கேட்டார்.
"வேறு என்ன செய்வது அம்மா?" என்று அம்மாவைப் பார்த்து மோகன் கேட்டான்.
"போய் அப்பாவிடம், அப்பா எனக்கு நேரம் பார்க்கத் தெரியாது என்று சொல்" என்றார் அவனின் அம்மா.
"என்னால் முடியாது" என்றான் மோகன்.
அம்மா மோகனிடம்,"ஏன் முடியாது? ஏதாவது காரணம் உண்டா?" என்று கேட்டார்.
"ஆம் அம்மா. சில மாதங்களுக்கு முன்பு அப்பா இதே போல நேரம் என்ன என்று கேட்டார். நான், எனக்கு நேரம் பார்க்கத் தெரியாது என்று சொன்னதும், நேரம் பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும், நான் திடீரென கேட்பேன் என்று அப்பா சொன்னார். நானும் சரி என்று சொன்னேன். இப்பொழுது அவர் சொன்னது போலவே நேரம் என்ன என்று கேட்கிறார். மீண்டும் நான் போய் எனக்கு நேரம் பார்க்கத் தெரியாது என்று சொன்னால் அவர் என்னை திட்டுவார். அதற்காகத் தான் நான் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்" என்றான் மோகன்.
அதைக் கேட்ட அம்மா அவ்விடத்தில் இருந்து சென்றார். அப்பா மீண்டும், "நேரம் என்ன?" என்று கேட்டார்.
அதற்கு மோகன் ஒன்றும் சொல்லாமல் இருந்தான். அவரிடம் வந்த அவனின் அம்மா, "இவனுக்கு நேரம் பார்க்கத் தெரியாது" என்றார்.
அப்பா மோகனைப் பார்த்து, "இன்னும் நீ நேரம் பார்க்கக் கற்றுக் கொள்ளவில்லையா? சரி நான் இந்த முறை உன்னை மன்னித்து விடுகிறேன். ஆனால் நீ நேரம் பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த முறை நான் கேட்டால் சொல்ல வேண்டும்" என்றார்.
அதைக் கேட்ட மோகனின் முகத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டது.
சில நாட்கள் கழிந்தன. அப்பா மீண்டும் மோகனிடம் நேரத்தைக் கேட்டார். அதற்கு மோகன் நேரத்தை சரியாகக் கூறினான்.
அதற்கு அப்பா, "அதற்குள் நீ நேரம் பார்க்கப் பழகி கொண்டாயா? எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று சொல்ல, அனைவரும் இரவுணவு உண்ண சென்றார்கள்.