எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

எனை ரக்ஷிக்க வந்த அசுரனே! - கதைத் திரி

Status
Not open for further replies.

Nuha Maryam

Moderator
அத்தியாயம் - 1

'சென்னை... சிங்காரச் சென்னை... வந்தாரை வாழ வைக்கும் சென்னை..‌.' என அந் நகரின் புகழ் அறியாதோர் அரிது.

அந்தளவு பெயர் பெற்ற நகரில் ஜானகி விலாஸை அறியாதோரே இருக்க மாட்டார்கள்.

ஏனென்றால் அச் சமயம் சென்னையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மகுடம் சூடா மகாராணி அவள்.

உயரக் கட்டப்பட்டிருந்த மதில் சுவரில் 'ஜானகி விலாஸ்' எனப் பெயர்ப் பலகை மாட்டப்பட்டிருக்க, அப் பெரிய நுழைவாயிலின் முன் சீறிப் பாய்ந்து வந்து நின்றது ஒரு கறுப்பு நிற ரோல்ஸ்ராய்ஸ் கார்.

எந்த முன் அறிவிப்பும் இன்றி அதிகாலை வேளையிலேயே திடீரென வந்த அக் காரைக் கண்டதும் நுழைவாயிலில் நின்றிருந்த காவலாளி பதட்டத்துடனுடம் விரைவாகவும் நுழைவாயிலைத் திறந்து விட்ட மறு நொடியே அப் பிரமாண்ட வளாகத்தினுள் நுழைந்தது அக் கார்.

அரண்மணை போல் பெரிய பங்களா வீடும், சுற்றியும் பச்சைப் பசேலென தோட்டமும் பூங்காவும், மாபிள் கல் பதிகப்பட்ட நடைபாதையும், நடைபாதையின் இரு பக்கமும் கையில் நீண்ட துப்பாக்கிகளுடன் ஆஜானுபாகுவான தோற்றத்தில் ஆங்காங்கு நின்றிருந்த பார்டிகார்ட்ஸும், ஆளுயர பளிங்குச் சிலைகளும் என அதிகாரத்துக்கும் ஆடம்பரத்துக்குக்குக் குறைவில்லாது காணப்பட்டது அவ் இடம்.

வீட்டுக்கு வெளியே கையில் நீண்ட துப்பாக்கியுடன் காவலுக்கு நின்றிருந்த பார்டிகார்ட் ஒருவன் கார்க் கதவைத் திறந்து விட, அதிலிருந்து இறங்கினாள் நவநாகரீகத்திலேயே தவழ்ந்து வளர்ந்த அவ் அரண்மனையின் இளவரசி மிதிலா.

நேராக தோட்டத்தை நோக்கி நடந்தவள் அங்கு சில நிமிடங்கள் இருந்து விட்டு வீட்டினுள் நுழைந்தாள்.

வீட்டுக்கு வெளியேயே அவ்வளவு பிரமாண்டமாக இருக்கும் போது வீட்டினுள் கேட்கவா வேண்டும்.

ஒவ்வொரு அணுவும் செல்வச் செழிப்பை எடுத்துக் காட்டின.

உள்ளே நுழைந்த மிதிலாவை யாருமற்ற மௌனமே வரவேற்க, கைக் கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவள் புன்னகையுடன் அங்கிருந்த பூஜையறைக்குள் நுழைந்து கொண்டாள்.

"கௌசல்யா சுப்ரஜா ராம

பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே

உத்திஷ்ட நர ஸார்தூல

கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்"


எனப் பூஜையறைக்குள் இருந்து வந்த இனிமையான குரலை பல மாதங்கள் கழித்து கண்களை மூடி ஆழ்ந்து அனுபவித்தாள் மிதிலா.

சில நொடிகள் கழித்து அவ் இனிய ராகம் ஒலிக்காமல் போகவும் மெதுவாக இமைகளைப் பிரித்தவளின் முன்னே குரலைப் போலவே முகத்திலும் தெய்வீகக்களையுடன் வயதானாலும் கம்பீரம் குறையாமல் புன்னகையுடன் நின்றிருந்தார் ஜானகி.

மிதிலாவை ஈன்றெடுத்த அற்புதப் பெண். ஜானகி விலாஸின் சொந்தக்காரி. சென்னைக்கே மகுடம் சூடா மகாராணி.

தாயின் முகத்தைக் கண்டதுமே மிதிலாவின் இதழ்கள் தானாக விரிய, மிதிலாவிற்கு தீபாராதனை காட்டி நெற்றியில் திலகம் இட்ட ஜானகியை பாய்ந்து அணைத்துக் கொண்ட மிதிலா, "மிஸ்ட் யூ அம்மா... மிஸ்ட் யூ சோ பேட்லி. அதனால தான் எல்லாத்தையும் போட்டுட்டு உங்கள பார்க்க ஓடி வந்துட்டேன்." எனச் செல்லம் கொஞ்சினாள்.

மகளின் தலையைப் பரிவாக வருடி விட்ட ஜானகிக்கும் பல மாதங்கள் கழித்து தன் செல்வப் புதல்வியைக் கண்டதில் கண்கள் ஆனந்தத்தில் கலங்கின.

சட்டென ஏதோ நினைவு வந்தவராக அவசரமாக மிதிலாவை விட்டு விலகிய ஜானகி, "அப்பாவ பார்த்துட்டு வந்தியா?" எனக் கேட்டார் புருவ முடிச்சுடன்.

மிதிலா ஏதோ தவறு செய்து விட்டவள் போல் சட்டென ஒற்றைக் கண்ணை மூடி நாவின் நுனியைக் கடிக்க, ஜானகியின் முகத்தில் இவ்வளவு நேரமும் இருந்த மென்மை மறைந்து காளி அவதாரம் எடுக்கத் தயாராகினார்.

இன்னும் சில நொடிகள் அமைதியாக இருந்தால் தாய் தன்னைப் பார்வையாலேயே பஸ்பமாக்கி விடுவார் என்பதை உணர்ந்த மிதிலா குறும்புப் புன்னகையுடன், "மிசிஸ் ஈஷ்வரன்... சாரி சாரி... அப்படி சொன்னா தான் உங்களுக்கு பிடிக்காதே. மிசிஸ் ராவணேஷ்வரன்... உங்களுக்கு ஒன்னு மறந்துப் போச்சுன்னு நினைக்கிறேன். இந்த மிதிலாவுக்கு எப்போதுமே இந்த ஜானகிய போல அந்த ராவணேஷ்வரனுக்கு அப்புறம் தான் மத்த எல்லாரும்." என்கவும் தான் ஜானகியின் முகம் மலர்ந்தது.

"அப்பாடா... நல்ல வேளை ஜானகியம்மாள் காளி அவதாரம் எடுக்கல. இல்லன்னா இந்த மிதிலாவோட நிலமை என்ன ஆகி இருக்கும்?" எனக் கேட்டாள் மிதிலா போலியாக வருத்தப்பட்டவாறு.

அவளின் தலையில் லேசாகக் கொட்டிய ஜானகி, "உனக்கு எல்லாத்துலயும் விளையாட்டு தான்." எனக் கடிந்து கொண்டவர், "அப்பா விஷயத்துல மட்டும் விளையாட வேணாம் மிதிலா." எனும் போதே அவரின் கண்கள் லேசாகக் கலங்கின.

கல்லுக்குள் ஈரம் என்பது போல இந்த ஜானகி ராவண் என்ற பெயருக்கு மட்டும் தான் இளகுவார்.

"ப்ச்.. அம்மா..‌. சாரி... இனி இப்படி பண்ணல. நான் அப்பாவ தான் முதல்ல போய் பார்த்தேன். அப்புறம் தான் வீட்டுக்கு வந்தேன்‌. உங்கள பார்க்க ஆசையா ஓடி வந்தேன். நீங்க இப்படி கண் கலங்கிய நின்னா நான் அப்படியே கிளம்பிடுறேன்." என்ற மிதிலா திரும்பி ஒரு அடி எடுத்து வைக்க, அவசரமாக அவளின் கரத்தைப் பற்றி மறுப்பாகத் தலையசைத்தார் ஜானகி.

ஒருவாறு தாயும் மகளும் கெஞ்சிக் கொஞ்சி முடித்து விட, மிதிலாவை குளிக்க அனுப்பிய ஜானகி பல மாதங்கள் கழித்து தன் கையாலேயே மகளுக்கு ஆசையாக சமைக்க ஆரம்பித்தார்.

வீடு எப்படி அரண்மனை போல் பெரிதாக இருந்ததோ அதே போல் அரண்மனை போல் வேலைக்கு ஆட்களும் நிறைந்து இருந்தனர்.

அவர்கள் அனைவரையும் தன் குடும்பமாகவே நடத்தினார் ஜானகி.

இருந்தும் ஒரு சிறிய இடைவெளியையும் கடைபிடித்தார்.

அதற்கு காரணங்கள் பல.

மிதிலா குளித்து முடித்து லாங் ஸ்கர்ட் மற்றும் ஸ்லீவ்லெஸ் சட்டை அணிந்து வந்த போது டைனிங் டேபிளில் அவளுக்கு பிடித்த கோதுமைப் பிட்டும் நாட்டுக் கோழிக் கறியும் சுடச்சுட ஆவி பறக்க தயாராக்கி வைத்திருந்தார் ஜானகி.

"வா மிதிலா... வந்து சாப்பிடு." என ஜானகி அழைக்கவும் கண்கள் பளிச்சிட அவசரமாக வந்து உட்கார்ந்த மிதிலா, "வாவ் மா... வாசனையே மூக்க துளைக்குது. உங்க கையால சாப்பிடுறத ரொம்ப மிஸ் பண்ணேன். நீங்களே ஊட்டி விடுங்களேன்." என்கவும் மறுக்காமல் ஊட்டி விடத் தொடங்கினார் ஜானகி.

இருபத்து நான்கு வயது அழகுப் பதுமை மிதிலா.

ஜானகியின் அழகும் அறிவும் மிதிலாவிற்கும் வந்திருக்க, ஒரு தடவை பார்த்தவரை மீண்டும் திரும்பிப் பார்க்க வைக்கும் பேரழகு.

தன்னவனை உரித்து வைத்தாற் போல் இருப்பதால் ஜானகிக்கு மிதிலா என்றால் உயிர்.

தற்சமயம் அவளுக்கு என்று இருக்கும் ஒரே உறவு மிதிலாவும் மிதிலாவின் இரட்டைப் பிறவியான அவளின் சகோதரனும் மட்டுமே.

இன்னும் சொந்தங்களும் உள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் பெயருக்கு தான் சொந்தங்கள்.

அவர்களைப் பற்றி கதையின் போக்கில் அறியலாம்.

மிதிலா தற்போது உயர் கல்வியை முடித்து விட்டு மும்பையில் தனியாக ஒரு ப்ராடக்ஷன் கம்பனியை நடத்தி வருகிறாள்.

கூடவே சில படங்களை இயக்கவும் செய்கிறாள்.

சிறு வயதில் இருந்தே ஏனோ அவளுக்கு சினிமாத்துறையில் ஒரு பேரார்வம்.

அதற்காக நடிக்க எல்லாம் விரும்பவில்லை.

தன் கற்பனைக்கு உயிர் கொடுக்கும் விதமாக மிதிலா ஆரம்பித்தது தான் இந்த ப்ராடக்ஷன் கம்பனி.

அவள் தயாரித்து இயக்கிய முதல் படமே மிகப் பெரிய ஹிட்.

சென்னையில் ஜானகியின் மகளாக அனைவரும் அறிந்த மிதிலாவை அதன் பின்னர் மிதிலா எனும் தனியாளாக உலகமே அறிந்தனர்.

அதில் ஜானகிக்கு ஏகப்பட்ட பெருமை.

முதல் படமே ஹிட் ஆகவும் அவளுக்கு வாய்ப்புகள் குவிய, வீட்டுக்கு வருவது வெகுவாகவே குறைந்தது.

அதில் மட்டும் ஜானகிக்கு சிறிய வருத்தம்.

ஆனால் மிதிலாவின் மகிழ்ச்சிக்காக அவை எதையும் ஜானகி அவளிடம் காட்டிக் கொள்ளவில்லை.

மிதிலாவும் வேலையில் பிஸியாக இருப்பதால் ஒன்றும் தாயை மறந்து விடவில்லை.

என்ன வேலை இருந்தாலும் தினமும் தூங்கச் செல்லும் முன் ஜானகிக்கு அழைத்து அன்று நடந்த அனைத்தையும் கதை கதையாகக் கூறி விட்டுத் தான் உறங்கச் செல்வாள்.

மிதிலாவின் நடமாடும் நாட்குறிப்பு தான் ஜானகி.

இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட, நடுத்தர வயதில் இருந்த ஜானகியின் பீ.ஏ. பாஸ்கர் அங்கு வந்தார்.

"அம்மா உங்கள சந்திக்க நம்ம ஊர்த் தலைவர் வந்து இருக்கார். ஏதோ திருவிழா சம்பந்தமா முக்கியமான விஷயம் பேசணுமாம்." என பாஸ்கர் கூறவும், "நீங்க கீழ போங்க பாஸ்கர். வெய்ட் பண்ண சொல்லுங்க. நான் வரேன்." என அனுப்பி வைத்தார் ஜானகி.

பாஸ்கர் சென்று விடவும் ஜானகி மிதிலாவைத் தயக்கமாக ஏறிட, "அம்மா... பரவால்ல நீங்க போங்க. நான் சாப்பிடுறேன். இந்த வாரம் ஃபுல்லா இங்க தான் இருக்க போறேன். நாம அப்புறம் நிறைய பேசலாம். என்னை விட இந்த மக்களுக்கு தான் உங்க உதவி ரொம்ப முக்கியம்." என்றாள் மிதிலா தாயை சரியாக உணர்ந்து கொண்டு.

கீழே ஹாலில் ஊர்த் தலைவரும் இன்னும் சில பெரியவர்களும் அமர்ந்திருக்க, மாடியில் இருந்து கம்பீரமாக இறங்கி வந்த ஜானகியைக் கண்டதும் அனைவரும் மரியாதை நிமித்தம் எழுந்து நின்றனர்.

இவ்வளவு நேரமும் மகளுடன் செல்லம் கொஞ்சிய ஜானகி இல்லாமல் முற்றிலும் வேறு ஆளாக, முகத்திலும் நடையிலும் அவ்வளவு ஆளுமையுடன் நடந்து வந்தார்.

அவர்கள் ஒருசேர வணக்கம் வைக்கவும் பதிலுக்கு வணக்கம் வைத்த ஜானகி அவருக்கான பெரிய இருக்கையில் அமர்ந்து மற்றவர்களையும் அமரக் கூறினார்.

ஜானகியைத் தொடர்ந்து அமர்ந்த ஊர்க்காரர்கள் எதுவோ கூற வருவதும் தயங்குவதுமாக இருக்க, "என்ன விஷயமா வந்து இருக்கீங்க?" எனக் கேட்டார் ஜானகி அமைதியான ஆனால் ஆளுமையான குரலில்.

அவர்களுள் சற்று வயதானவராக இருந்த ஊர்த் தலைவர், "திருவிழா சம்பந்தமா பேசணும் அம்மா..." என இழுக்க, "ம்ம்ம்... பாஸ்கர் சொன்னார். ஏதாவது பணம் கூடுதலா தேவைப்படுதா? பாஸ்கர்..." எனக் குரல் கொடுத்தார் ஜானகி.

அவரை அவசரமாக இடைமறித்த ஊர்த் தலைவர், "ஐயோ இல்லம்மா... அதெல்லாம் நீங்க தேவைக்கு அதிகமாகவே பண்ணி இருக்கீங்க. இது வேற ஒரு பிரச்சினை. அதான் உங்கள தேடி வந்து இருக்கோம்." என்றார் தயக்கமாக.

ஜானகி அவரைப் புருவ முடிச்சுடன் குழப்பமாக ஏறிட, "நம்ம ஊரு வருடாந்த திருவிழா அடுத்த வாரம் வரது உங்களுக்கே தெரியும். ஒவ்வொரு வருஷமும் பெரியவர் இடத்துல நம்ம சின்னய்யாவுக்கு தான் பரிவட்டம் கட்டி மரியாதை செய்றோம். ஆனா இந்தத் தடவை நம்ம ராமசாமி மகன் வரதன் அவனுக்கு தான் பரிவட்டம் கட்டிக்க உரிமை இருக்குன்னு மிரட்டுறான். முடியாதுன்னு சொல்லவும் எங்க வீட்டுப் பொம்பளைப் பிள்ளைங்கள வெச்சி தப்புத் தப்பா பேசி மிரட்டுறான்." என்றார் பயத்துடன்.

அவர் கூறியதைக் கேட்டு ஜானகியின் முகம் இறுக, "யார் இடத்துல வந்து யார் உரிமைய பத்தி பேசுறது? நேத்து பெய்ஞ்ச மழைக்கு முளைச்ச காளான் உரிமைய பத்தி பேசுறானா? இது ராவணனோட இடம். இங்க ராவணனோட ஆட்சி மட்டும் தான் நடக்கும்." என ஆவேசத்துடன் கூறியவாறு வீட்டினுள் நுழைந்தான் லக்ஷ்மன். மிதிலாவின் இரட்டைப் பிறவி.

தோற்றத்தில் மிதிலா தன் தந்தையை உரித்து வைத்திருந்தாலும் குணத்தில் என்னவோ லக்ஷ்மன் தான் அவரின் குணத்தை ஒத்திருந்தான்.

"லக்ஷ்மனா... நான் பேசிட்டு இருக்கேன் தானே. அமைதியா உட்கார்." என ஜானகி அழுத்தமான குரலில் கூறவும் தாயின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு தன் கோபத்தை அடக்கிக் கொண்டு ஜானகியின் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தான் லக்ஷ்மன்.

 

Nuha Maryam

Moderator
அத்தியாயம் - 2
லக்ஷ்மன் ஆவேசமாகப் பேசவும் ஊர்க்காரர்கள் பயத்தில் எழுந்து கொள்ள, லக்ஷ்மனை அதட்டி தன் அருகில் உட்கார வைத்த ஜானகி அவர்களையும் பார்வையாலே உட்காரக் கூறினார்.

குரலை செறுமிக் கொண்டு தன் இருக்கையில் மீண்டும் அமர்ந்த ஜானகி, "ஐயா... என் பையனுக்காக நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்குறேன். நீங்க எல்லாரும் வருத்தப்படாம போய்ட்டு வாங்க. அந்த ராமசாமியாலயும் அவரோட பையனாலயும் உங்களுக்கோ உங்க வீட்டு பொம்பளைங்களுக்கோ எந்தப் பிரச்சினையும் நடக்காம நான் பார்த்துக்குறேன். இன்னும் வேற ஏதாவது சொல்லணுமா?" எனக் கேட்டார்.

ஜானகி அவ்வாறு கூறவும் வந்திருந்த ஊர்க்காரர்கள் அனைவரும் சந்தோஷமாக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு எழுந்து நின்று ஜானகியைப் பார்த்து கரம் கூப்பினர்.

"ரொம்ப நன்றிங்கம்மா... நீங்களே பார்த்துக்குறேன்னு சொன்னதுக்கு அப்புறம் இனிமே எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல. வழக்கம் போலவே பெரியவர் இடத்துல நம்ம சின்னய்யாவுக்கே முதல் மரியாதை செலுத்தி திருவிழாவ சிறப்பா நடத்திடலாம். அப்போ நாங்க போய்ட்டு வரோம்மா." என்ற ஊர்த் தலைவர் மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு கிளம்பினார்.

அவர்களை நன்றி கூறி வழி அனுப்பி வைத்த ஜானகி இன்னுமே கோபம் குறையாமல் அமர்ந்திருந்த லக்ஷ்மனை அழுத்தமாக நோக்கினார்.

அதே நேரம் சாப்பிட்டு விட்டு கீழே இறங்கி வந்த மிதிலாவும் ஜானகியின் கோபம் உணர்ந்து ஒரு ஓரமாக அமைதியாக நின்று வேடிக்கை பார்த்தாள்.

தாயின் குற்றம் சாட்டும் பார்வையில் லக்ஷ்மன் தலை குனிய, "என்ன பழக்கம் இது லக்ஷ்மனா? உனக்கு எத்தனை தடவை படிச்சி படிச்சி சொல்லி இருக்கேன் இந்தக் கோவமும் ஆவேசமும் வேணாம். இதனால நாம இழந்தது ரொம்ப அதிகம்னு. அப்போ கூட புரிஞ்சிக்காமலே நடந்துக்குற. உங்க அப்பாவும் இப்படி தான். எதுக்கெடுத்தாலும் ஆத்திரமும் ஆவேசமும். கடைசியில..." எனக் கோபமாகக் கேட்ட ஜானகிக்கு இறுதியில் குரல் உடைந்தது.

மறு நொடியே எதுவும் யோசிக்காமல் ஜானகியின் காலில் விழுந்த லக்ஷ்மன் அவரின் காலைப் பிடித்தவாறு, "சாரிம்மா..‌. சாரிம்மா... தயவு செஞ்சு நீங்க இப்படி வருத்தப்பட்டு பேசாதீங்க மா. என்னால தாங்க முடியல. எனக்கு தெரியல மா... என்ன பண்ணாலும் தப்பு நடக்கும் போது சட்டுன்னு கோவப்படுறேன்‌. என்னால அதைத் தடுக்க முடியல." என்றான் கண்ணீருடன்.

லக்ஷ்மனின் தோள்களைப் பற்றி எழுப்பி நிறுத்திய ஜானகி, "வேணாம் லக்ஷ்மனா... வேணாம்... இந்தக் கோவம் ரொம்ப ஆபத்தானது. அது நம்மள ரொம்ப மோசமான இடத்துக்கு கூட்டிட்டுப் போயிடும். நிறைய இழக்க வேண்டி வரும் கண்ணா. தப்பு நடந்தா தாராளமா தட்டி கேளு. உன்ன யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க. ஆனா எது நடந்தாலும் யோசிச்சு நிதானமா முடிவு எடு. சட்டுன்னு கோவப்பட்டு கைய தூக்காதே. எனக்குன்னு மிச்சம் இருக்குறது நீங்க ரெண்டு பேரும் மட்டும் தான். இந்தக் கோவத்துக்கு உங்களையும் என்னால பலி கொடுக்க முடியாது." என்றார் கண்கள் கலங்க.

லக்ஷ்மன் உடனே தாயை அணைத்துக்கொள்ள, மிதிலாவும் அவர்களுடன் இணைந்தாள்.

சில நொடிகளில் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்த ஜானகி இருவரையும் தன்னை விட்டுப் பிரித்து நிறுத்தினார்.

"லக்ஷ்மனா... நீ ஒன்னும் யோசிக்காதே. இந்த தடவையும் நிச்சயம் முதல் மரியாதை உனக்கு தான்." என ஜானகி கூறவும், "ஐயோ அம்மா... எனக்கு இந்த முதல் மரியாதை எல்லாம் முக்கியமே கிடையாது. ஆனா எங்க அப்பாவோட இடத்துக்கு எந்தக் கொம்பனும் வரக் கூடாது. அப்போ சொன்னது தான். இது ராவணனோட இடம். இங்க ராவணனோட ஆட்சி மட்டும் தான்‌. அதுக்கு தடையா எவன் வந்தாலும் அவனுக்கு அழிவு என் கையால தான்." என்றான் லக்ஷ்மன் ஆக்ரோஷமாக.

"டேய் டேய் போதும் டா... எவ்வளவு நேரமா தான் ஃபைட் சீனே ஓட்டுவ? இதெல்லாம் நான் ஆல்ரெடி மூவீஸ்லயே பார்த்துட்டேன்." என மிதிலா கிண்டலடிக்க, "அடிங்கு..." என லக்ஷ்மன் நாக்கை மடித்தவாறு அடிப்பதற்கு போல் கை ஓங்கினான்.

மறு நொடியே, "ஐயோ ம்மா... சேவ் மீ..." எனக் கத்திக் கொண்டு ஜானகியின் பின்னால் ஒளிந்து கொண்டாள் மிதிலா.

இது வழமையாக நடப்பதால் ஜானகி அமைதியாக நின்று வேடிக்கை பார்த்தாள்.

தாயை சுற்றி கரத்தைக் கொண்டு சென்று எட்டி மிதிலாவின் காதைத் திருகிய லக்ஷ்மனோ, "வாய் வாய்... இந்த வாய் இல்லாட்டி உன்ன நாய் தூக்கிட்டு போயிடும்." என்றவன் மிதிலாவின் காதைப் பிடித்தே தன் பக்கம் இழுத்து நிறுத்தினான்.

"டேய் விடுடா பக்கிப் பயலே... வலிக்கிது டா... ஐயோ அம்மா... நான் எதுக்கு டா உனக்கு மரியாதை தரணும்? அதெல்லாம் தர முடியாது போடா..." என்றாள் மிதிலா கோபமாக லக்ஷ்மனின் பிடியில் இருந்து தன் செவியை விடுவிக்கப் போராடியவாறே.

"திரும்ப 'டா'வா? இன்னைக்கு உன்ன விடுறதா இல்ல." என்ற லக்ஷ்மன் தன் பிடியை இறுக்க, "அப்படி தான் டா பேசுவேன். நீ என்ன எனக்கு அண்ணனா மரியாதை கொடுக்க? தம்பி தானே... அடக்கி வாசி... ஐயோ டேய்... முதல்ல காத விடுடா. வலிக்கிது. விட்டா என் காதைத் தனியா எடுத்துடுவ போல. அப்புறம் ஹெட்லைன்ஸ்ல ப்ரடியூசர் மிதிலா இனி ஒத்தைக் காது மிதிலான்னு வரும். அம்மா பாருங்க ம்மா. விட சொல்லுங்க இவன. வலிக்கிது எனக்கு." என்றாள் மிதிலா அழும் குரலில்.

"டேய் லக்ஷ்மனா... விடுடா பாவம்... அவளே ரொம்ப நாள் கழிச்சி இன்னைக்கு தான் வந்திருக்கா. வந்ததும் அழ வைக்கிற." என்றார் ஜானகி.

"முடியாது ம்மா. முதல்ல ஒழுங்கா கேளு மரியாதை இல்லாம பேசினதுக்கு இவள என் கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லுங்க. என்னவோ ரொம்ப வருஷம் முன்னாடி பிறந்துட்டா போல் சீன் போடுறா. ஒரு அரை மணி நேரம் முன்னாடி பிறந்துட்டு இந்த வாய். என் ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி கூட ஏதோ நான் இவளுக்கு வாய்ச்ச அடிமை போல ட்ரீட் பண்ணி மானத்த வாங்குறா." என்றான் லக்ஷ்மன் கோபமாக.

"மிதிலா... என்ன இருந்தாலும் அவன் ஆம்பளைப் பையன். கொஞ்சம் மரியாதை கொடுத்தா தான் என்ன? அட்லீஸ்ட் வீட்டுல இல்லன்னாலும் வெளியவாச்சும்..." என ஜானகி கூறவும், "இவனுக்கு மரியாதையா? போங்க ம்மா... என்னால முடியாது." என்ற மிதிலாவிற்கு அவ்வளவு வலியிலும் வாய் மட்டும் குறையவில்லை.

சலிப்பாகத் தலையாட்டிய ஜானகி, "என்னவோ பண்ணுங்க ரெண்டு பேரும். எனக்கு கொஞ்சம் வெளிய வேலை இருக்கு. நான் போய்ட்டு ஒரு மணி நேரத்துல வந்துடுறேன்." என்றவர் அவர் பாட்டுக்கு கிளம்பிச் சென்றார்.

"அம்மா... என்னம்மா அப்படியே விட்டுப் போறீங்க? இவன திட்டுங்க ம்மா." என மிதிலா லக்ஷ்மனிடம் இருந்து விடுபடப் போராடியவாறு சோகமாகக் கேட்க, இடுப்பில் கைகளை ஊன்றி அவளை முறைத்த ஜானகி, "அம்மா தாயே... நான் வரல இந்த விளையாட்டுக்கு. இப்போ நீங்க அடிச்சுக்குவீங்க. அடுத்த செக்கனே ஒன்னுமே நடக்காத மாதிரி ப்ளேட்ட திருப்பி போடுவீங்க. உங்க ரெண்டு பேர் கிட்ட மாட்டிக்கிட்டு நான் தான் முழிக்கணும்." என்ற ஜானகி தன் பீ.ஏ உடன் ஏதோ தீவிரமாக ஆலோசித்தவாறு அங்கிருந்து அகன்றார்.

அவர் சென்றதும் மிதிலாவை விஷமமாக நோக்கிய லக்ஷ்மனோ, "மாட்டிக்கிட்டியா?" எனக் கேட்டான் கிண்டலாக.

அவனை முறைத்துப் பார்த்த மிதிலா திடீரென மயங்கிச் சரிய, பதறி விட்டான் லக்ஷ்மன்.

"மிது... என்னாச்சு? எழுந்திரு..." என்றவாறு வேகமாக மிதிலாவின் கன்னம் தட்டிய லக்ஷ்மன் அவளிடம் அசைவில்லாது போகவும் உடனே தண்ணீர் எடுத்து வர ஓடினான்.

அதற்கே காத்திருந்தது போல் மெதுவாக ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்த்த மிதிலா தன் சகோதரன் அங்கு இல்லாது போகவும் தப்பினேன் பிழைத்தேன் என தன்னறைக்கு ஓடிச் சென்று கதவை அடைத்தாள்.

தண்ணீர் எடுத்துக்கொண்டு ஓடி வந்த லக்ஷ்மன் மிதிலாவின் காணாமல் சுற்றும் தேட, கதவு அடைபடும் சத்தத்தில், "மிதிலா..." எனப் பல்லைக் கடித்தான் கோபமாக.

"ப்பா‌‌..‌‌. சரியான இராட்சசன். இவன் சோத்த திங்குறானா? கல்ல திங்குறானா? உடும்பு பிடி பிடிக்கிறான். கொஞ்சம் விட்டிருந்தா காது வேறயா வந்திருக்கும். பாவிப்பய... இருக்குடா உனக்கு. ஆஹ்... வலிக்கிது அம்மா..." என சிவந்து விட்டிருந்த காதைத் தேய்த்து விட்டபடி சகோதரனை அர்ச்சித்தவாறு வந்து கட்டிலில் அமர்ந்தாள் மிதிலா.

அதே நேரம் அவளின் கைப்பேசி ஒலி எழுப்பியது.

"ப்ச்... மனுஷன கொஞ்சம் நேரம் நிம்மதியா இருக்க விட மாட்டேங்குறாங்களே. இப்போ யாரு?" எனச் சலிப்பாகக் கேட்டவாறு கைப்பேசியை எடுத்துப் பார்க்க, அவளின் பீ.ஏ தான் அழைத்து இருந்தான்.

மிதிலா அழைப்பை ஏற்கவும், "மேடம்... சினி டக்கர் சேனல்ல இருந்து ஐந்தாவது தடவையா கால் பண்ணிட்டாங்க மேடம் உங்க இன்டர்வியூ கேட்டு. தொடர்ந்து நீங்க ப்ரடியூஸ் பண்ண எல்லா மூவீஸும் ஹிட் அப்படிங்குறதால உங்கள இன்டர்வியூ எடுக்க விரும்புறாங்க. நீங்க எடுக்குற அடுத்த படத்துக்கு நம்மளுக்கும் இது மூலமா ப்ரமோஷன் கிடைக்கும் மேடம்." என அவளின் பீ.ஏ ராஜ் கூறவும் வெகுண்டெழுந்து விட்டாள் மிதிலா.

"வாட் நான்சன்ஸ் ராஜ்? ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் உனக்கு தான் ரொம்ப நல்லா தெரியும்ல நான் வீட்டுக்கு வரதே இந்த சினிமா, மீடியா லைட்ல இருந்து கொஞ்சம் ப்ரேக் எடுக்க தான். அன்ட் யூ நோ வெரி வெல் தட் ஐ டோன்ட் லைக் டு டாக் அபவுட் எனி அஃபீஷியல் மெட்டர்ஸ் வென் ஐம் அட் ஹோம். எல்லாத்துக்கும் மேல இந்த ******* இன்டர்வியூ. அவங்க இன்டர்வியூ எடுத்து தான் என் படத்துக்கு ப்ரமோஷன் கிடைக்கணும்னு இல்ல. நான் ப்ரடியூஸ் பண்ணுற எல்லா படமும் கண்டிப்பா ஹிட் தான். ஏன்னா நான் தேர்ந்தெடுக்குற கதை அப்படி. போய் வேற வேலை இருந்தா பாருங்க." எனக் கோபமாகப் பேசி விட்டு அழைப்பைத் துண்டித்தாள் மிதிலா.

இது தான் மிதிலா. வீட்டில் தன் உறவுகளிடம் எவ்வளவு குறும்பும் மென்மையும் புன்னகையுமாக இருப்பாளோ அதற்கு நேர் எதிராகத் தான் தன் வேலையில்.

_______________________________________________

தன் பீ.ஏ பாஸ்கருடன் வெளியே கிளம்பிய ஜானகியோ நேரே சென்றது தன் குடோனுக்குத் தான்.

ஜானகி செல்லும் போது அங்கு காவலுக்கு நின்றிருந்த ஆட்கள் தலை குனிந்து அவருக்கு மரியாதை செலுத்த, சிறு தலையசைப்புடன் அவர்களைக் கடந்து உள்ளே சென்றவரது இதழ்கள் இகழ்ச்சியாக வளைந்தன அங்கே தலை கீழாகக் கட்டித் தொங்க விடப்பட்டிருந்த வரதனைக் கண்டு.

 
Status
Not open for further replies.
Top