எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பச்சையன் --- 4

பச்சையன் --- 4

நிலாச்செய்தி……

சனிகிரகத்திற்கு உள்ள நிலாக்களின் எண்ணிக்கை 62

இதுவரை பச்சையன்…..

தன் தோழிகளுடன் குற்றாலம் வந்த இடத்தில் நிலாமகள் எதிர்பாராதவிதமாக தனியே செல்லும்பொழுது பச்சையனை சந்திக்கின்றாள், மனதை பறிகொடுக்கின்றாள். நிலா மகள் பச்சையனுடன் பேசிவிட்டு திரும்பும் பொழுது……..

பச்சையன் --- 4

நிலா மகள் பச்சையனுடன் பேசிவிட்டு திரும்பிகொண்டிருந்த பொழுது, பச்சையனுக்கு அருகில் இருந்த ஒரு மரக்கிளை கை பக்கவாட்டில் கீறி இரத்தம் வர பச்சையன் திடுக்கிடுகின்றான். அதே நேரம், அதே சமயத்தில் முன்னால் சென்ற நிலா திரும்பி பார்க்க , பச்சையன் அவன் உடலில் வெளியேறிய இரத்தத்தை உடனே துடைத்து சிரித்து சமாளித்தான். தனது இரத்தத்தை நிலா மகள் பார்க்கவில்லையென நினைத்து மகிழ்ச்சி அடைந்தான்.

நிலா மகள் கீழே இறங்கினாள். அவளைக் காணாமல் அங்கே ஒரு சிறு குழப்பமே தோழிகளுக்குள் நடந்து கொண்டு இருந்தது. . விமலாவை ஆள்ஆளாக்கு பிலுபிலுவென பிடித்துக் கொண்டு இருந்தார்கள்.

“ என்னடி விமலா, நான் குளிக்கறப்பவே கவனிச்சேன். நீங்க இரண்டு பேரும் எதிர்தாப்பல நின்னு ஏதோ ரகசியம் பேசுனீங்க. எங்க போனா நிலா ? “

“ வசந்தி கேட்கறாள்ல சொல்லுடி . என்னவோ எல்லா பாடத்திலையும் பெயிலாயிட்டு ரேங்க கார்டை அப்பாகிட்ட காட்ட பயப்படற பையன் மாதிரி திருதிருன்னு முழிச்சிகிட்டு நிக்கற. சொல்லுடி”.

விமலா திகைத்தாள் . சொல்வதா அல்லது வேண்டாமா என குழம்பி நின்றாள். சொல்லவில்லையென்றால் எல்லாரும் சும்மா விட மாட்டார்கள்.

“ அவ அவ… தேனருவி பக்கம் போயிருக்கா. நான் எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன், கேட்காம பிடிவாதமா கிளம்பி போயிட்டா. இப்ப நான் மாட்டிகிட்டு முழிக்கறேன் “.

“ ஏண்டி யாருமே அந்த பக்கம் போக பயப்படுவாங்க. ஆபத்தான பகுதி, மிருகங்கள் உலவற பகுதி, ஆபத்து வரக்கூடிய இடம் . எந்த குருட்டு தைரியத்துல இவ அங்கே போயிருக்கா ? “

மாதவி குறுக்கிட்டாள்.

“ இப்ப நாம என்ன செய்ய போறோம் ? யாருகிட்ட போய் சொன்னாலும் நம்மளை கடிச்சு குதறிடுவாக “

மாலா திடீரென கத்தினாள்.

“ யேய் , அங்க பாருங்கடி நிலா வர்றா “

“ என்னடி நடையே மாறியிருக்கு போல ?”.

” ஆமாம்டி , முகம் மாறியிருக்கற மாதிரி தெரியுதுடி “

நிலா இவர்கள் பக்கத்தில் வந்தாள். எல்லாரும் அவளைச் சுற்றி வளைத்தார்கள்.

“ எம்மா வீரத்தமிழச்சி , எல்லாரையும் கொஞ்ச நேரத்துல பயமுறுத்திட்டியேடி “.

மாலா நிலாவை கண்ணீர் நிறைந்த கண்களுடன் கட்டிப்பிடித்துக் கொண்டாள். விமலா நிலாவின் கைகளைக் கோர்த்துக்கொண்டாள்.

நிலா மகள் யாருக்கும் பதில் சொல்லாமல் தலையை கவிழ்ந்தாள்.

“ ஏய், இங்க பாருங்கடி புதுசா வெட்கப்படுறா பாரு. ஐயய்யோ யாராவது இங்க வந்து பாருங்களேன். பகல்ல ஒரு நிலா சூரியனைவிட பிரகாசமா மின்னுது”.

நிலா எல்லாரையும் நிமிர்ந்து பார்த்தாள் .

தன்னைச் சுற்றி நிற்கும் தனக்காக உயிர் கொடுக்கக் கூடிய தோழிகளிடம் இப்ப்பொழுது என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தாள், தயங்கினாள்.

” சொல்லுடி என்ன ஆச்சு ? ஏன் இந்த மவுனம் ? “

“ ஏய் , இங்க பாருங்கடி , அவ காந்த கண்ணுல இருக்கிற பவர் குறைஞ்சு போன மாதிரி தெரியுது. எல்லாருக்கும் முகத்துல வெட்கம் தெரியும், ஆனா இவ கண்ணுல வெட்கம் தெரியுது பாருங்கடி”

தனக்காக உயிர் கொடுக்கும் தோழிகளிடம் தன் உயிரை கவர ஒருவன் வந்துவிட்டான் என எப்படிச் சொல்வது என திகைத்து நின்றாள்.

“ அது ஒண்ணுமில்லை. தேனருவியில ஒருத்தரைப் பார்த்தேன், மனதை பறிகொடுத்துட்டேன்”.

அவளைச் சுற்றி நின்றவர்கள் ஒருநிமிடம் சற்று பின்வாங்கினார்கள். அவளை மேலும் கீழும் பார்த்தார்கள்.

“ அடிப்பாவி , பாவம் அந்தபய புள்ள. இவள்கிட்ட மாட்டிகிட்டானே. கடவுளே நீதான் அவனை காப்பாத்தனும்”.

வசந்தி வயதான பெண்மாதிரி அங்கலாய்த்தாள். மற்ற எல்லாரும் சிரித்தார்கள்.

இப்போது மாலா ஆரம்பித்தாள்.

“ ஏண்டி நீ அருவி பக்கம் சுத்திப்பார்க்க போனியா ? இல்ல அவனைப் பார்க்கப்போனியா ?”

நிலா மெதுவான குரலில் சொல்ல ஆரம்பித்தாள்.

“ மேல போன இடத்துல திடீரென வழுக்கி விழுந்துட்டேன். அப்பதான்…அப்பதான் அவர் என்னை காப்பாத்துனாரு”

“ ஓ ! நீ வழுக்கி விழுந்தது , பாதையில இல்ல காதல்ல.. அப்படிதானே மேடம்”.

“சும்மா இருங்கடி , அவளே கீழே விழுந்து எழுந்திருச்சிருக்கா, எங்காவது அடிபட்டுருக்கான்னு பாருங்கடி “

அப்பொழுதுதான் எல்லாரும் அவளை நன்றாக பார்த்தார்கள். எலுமிச்சை நிற சுடிதாரில் முதுகுப்பக்கம் சிறு சிறு மண் தீற்றல்களும், இடுப்புப்பகுதியில் சிறிதளவு ஈரமான புற்கள் ஒட்டி இருந்தன. சுடிதாரின் பக்கவாட்டில் துணி இலேசாக விரிசல் இருந்தது.

மொத்தத்தில் ஏதோ மஞ்சள் நிலாவில் ஆங்காங்கே ஹோலிப்பண்டிகை வண்ணத் தீற்றல் போல பார்க்க அழகாக இருந்தாள் நிலா மகள்.

ஒரு இடத்தில் பெண்கள் கூட்டமாக இருந்து யாராவது தனது துயர நிலையில் இருந்தாலோ அல்லது உடல்நலக்குறைவாக தென்பட்டாலோ அங்கிருக்கும் மற்ற பெண்கள் எல்லாரும் வயது வித்தியாசமின்றி தாயாக மாறி விடுவார்கள். இங்கேயும் அதுதான் நடந்தது.

நிலா மகளை சுற்றி நின்ற நால்வரும் பரபரப்பாக இயங்க ஆரம்பித்தார்கள். ஒருத்தி முழங்கைப் பகுதியில் இருந்த சிராய்ப்பை துடைத்து விட்டு முதலுதவி பெட்டியில் இருந்த மருந்தை எடுத்து தடவ ஆரம்பித்தாள். இன்னொருத்தி அவள் ஆடைகளை சரிசெய்தாள் மற்றவள் மண் தீற்றல்களையும், ஒட்டியிருந்த புற்களையும் தட்டி விட்டாள்.

விமலாவோ மற்றவர்கள் யாரும் இந்த சரிசெய்வதை பிறர் பார்க்காவண்ணம் மறைத்து நின்றுகொண்டாள்.

“ என்னதான்டி உண்மையில நடந்துச்சு ? “ மாலா வாயை கிளறினாள்.

“ அது வந்து… வந்து ..” நிலா எதனாலோ தடுமாறினாள்.

“ அதான் காதல் வந்து உன்னோட மனசுக்குள்ள போயிருச்சே , அப்புறம் ஏன் வந்து ..வந்துன்னு இழுத்துகிட்டு இருக்கே “

“ஏய் , சும்மா இருடி. உன்னோட அவன்.. சரி சரி முறைக்காத அவர்ர்ரு .. எப்படி இருப்பாரு ?”

நிலாவை வெட்க மேகம் சூழ்ந்து கொண்டது. ஆனாலும் காதல் சூரிய ஒளியில் அவள் முகம் பிரகாசமாக ஆரம்பித்தது. அவள் கண்களில் மீண்டும் எல்லாரையும் கவரும் ஒளி, ஈர்ப்பு விசை உட்கார்ந்து கொண்டது.

எல்லாரும் அவளை மெதுவாக நகர்த்தி ஒரு இடத்தில் உட்கார வைத்து அவளைச் சுற்றிலும் உட்கார்ந்து கொண்டார்கள். எத்தனையோ தடவை அவள் பேசுவதை, முகபாவனை மற்றும் கண்கள் அசைவை ரசித்து இருக்கின்றார்கள். ஆனால் இப்போதோ ஏதோ புதிதாக அவளை பார்ப்பதை போல பார்த்து உட்கார்ந்து இருந்தார்கள்.

நிலா இன்ப உணர்வில் தவித்தாள். உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டாள். அவள் முன் தண்ணீர் பாட்டில் நீட்டப்பட்டது. குடித்துவிட்டு நிமிர்ந்தாள். அவள் தொண்டையை லேசாக செருமிக்கொண்டது ஏதோ வீணை வாசிப்பதற்கு முன் கம்பியை சரிசெய்தால் வரும் இசை ஓசையாக இருந்தது.

” உண்மையில் அப்படி ஒரு அழகனை நான் கண்டதில்லை. எதற்கும் பணியாத , தோற்காத என் கண்களின் பார்வை அன்று தோற்றுப்போனது. நல்ல உயரம் , கம்பீரமான நடை, ஆழ்ந்த ஊடுருவிய பார்வை, வசீகரிக்கும் குரல், மெல்லிய நிற தேகம் ஆனால் வலுவான தசைகள். எவரையும் நகரவிடாத அந்த ஆளுமை. குறிப்பாக அவன் கைகளை பிடித்து நான் எழுந்தபொழுது நரம்புகள் முழுவதும் மின்சாரம் பாய்வது போலவும் , உடலில் தானாக சூடு ஏறுவது போல ஒரு உணர்வு. என்னமோ நீண்ட நாள் உறவை பிரிய முடியாதது போல ஒரு பரிதவிப்பு. அப்புறம்…”

நிலா மகள் ஏதோ கனவில் ஆழ்ந்தது போல கண்களை மூடி வானத்தை பார்த்து அமர்ந்தாள்.

வசந்தி அவளை உலுக்கினாள்.

“ அடியே கனவு நாயகி, திடீரென வேற உலகத்துக்கு போயிடாத. சொல்லு தாயி..யாரு அவன்…சாரி சாரி அவர். பெயர் என்ன ? என்ன வேலை செய்யறார் ? எங்க இருக்காராம் ?”

வசந்தி கேள்விகளாக கேட்டு மூச்சு வாங்கினாள். விமலா குறுக்கே புகுந்தாள்.

“ அவரு பெயரு தெரியலைடி. சொல்லாம சிரிச்சிகிட்டு இருந்தாரு. அந்த சிரிப்பே தனி அழகுடி. பெயர் சொல்லாதனால நானே பெயரை வச்சிட்டேன் பச்சையன்னு “.

“ என்னடி உலக அதிசயமா இருக்கு. எல்லாரும் காதலுக்கு பெயர் வைப்பாங்க. உண்மைக் காதல், அமரக்காதல், தெய்வீகக்காதல் அப்புறம் காவியக்காதல். இது எல்லாத்துலேயும் சேராத க……. காதல். ஆனா முதமுதல்ல காதலனுக்கே பேர் வச்ச காதலி உலகத்துல நீ ஒருத்திதான்டி.” வசந்தி அங்கலாய்த்தாள்.

” சரிடி அது என்ன புதுசா ஒரு பெயரு. இப்படி ஒரு பெயரை அதிகமா கேள்விபட்டது இல்லையே “

ஒருத்தி கேட்க நிலா மகள் வாயை திறந்தாள்.

“ அவர் உடலை கவனிச்சப்ப கொஞ்சம் பச்சை நரம்புகள் ஓடினதை கவனிச்சேன். அந்த நேரத்துல எனக்கு உதிச்ச பெயருதான் இந்த பச்சையன்”.

“ ஓ ! இது வித்தியாசமான காதல். சரி பெயரு நீங்க வைச்சீங்க. சார் எப்ப வருவாரு ? அவரு ஊரைப்பத்தி ஏதும் சொன்னாரா ? “ மாதவி குறுக்கே புகுந்தாள்.

“ அவர் எந்த ஊரைப்பத்தியும் சொல்லலை, எதையும் பத்தி சொல்லலை. அவரை சீக்கிரம் சொல்வாருன்னு நினைக்கறேன். அவரைப்பத்தி எதுவும் எனக்குத் தெரியாது. ஏதோ அந்தக் கண்களைப் பார்த்தா எதுவும் கேக்க தோணலை”.

“ எந்த நம்பிக்கையிலமா காதலிக்க போறீங்க ? இப்ப அவரு எங்கே ? வருவாரா ? வரமாட்டாரா ? “ விமலா ஆர்வமாய் நிலாவைப் பிடித்து உலுக்கினாள்.

நிலா மகள் நிதானித்தாள். கடைசியாக அவன் என்ன சொன்னான் என்பதை ஞாபகத்திற்கு கொண்டு வரப் பார்த்தாள். ‘காதல் நம்மை சந்திக்க வைக்கும்’ என்ற வார்த்தைகள் அவளுக்குள் வந்து வந்து போனது. இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு வந்திருக்கலாமோ என நினைத்து வருந்தினாள்.

காலம் இந்த காதலர்களை சேர்க்குமா ? அல்லது காதல் காதலர்களை சேர்க்குமா ? யாருக்கு தெரியும் ? நிலா திகைத்தாள்.

சற்று நேரம் அங்கு அமைதி ஊஞ்சலாடியது. அவளை நினைத்து அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். யாருக்கும் அசைந்து கொடுக்காத அவளது விழிகளும் , அவள் மனதும் காதல் சூறாவளி காற்றால் கலைக்கப்பட்டு , சிதைக்கப்பட்டு நிலைகுலைந்து நிற்பதை கண்கூடாக கண்டார்கள்.

நிலா மகளோ அவன் வருவான என்று பாதையை பார்வையால் அளந்து கொண்டு இருந்தாள்.

விமலா மறுபடி கேட்டாள். “ஹலோ மேடம், நான் கேட்டது உங்க காதுல விழவில்லையா ? உங்க அவரு எப்பதான் வருவாரும்மா ?”

வசந்தி இப்போது கேட்க ஆரம்பித்தாள்.

“ அம்மா தாயி , உன்னோட காதலரை கண்ணுல காட்ட மாட்டீயா ? எல்லாரும் மாறி மாறி கேக்கறோம்ல ? சொன்னா என்னாவாம், வாயிலயிருக்கற முத்து உதிர்ந்திடுமா ? “

“ சத்தியமா எனக்கு தெரியாது. இது என்னோட வாழ்க்கையில நான் எதிர்பார்க்காத ஒரு இனிய சந்திப்பு. என்னோட நாடி நரம்பெல்லாம் உள்ள ஒருவித இன்ப உணர்வு ஓடிகிட்டு இருக்கு. நடந்தது எல்லாம் கனவா இல்லை கற்பனையா இல்லை நிஜமா ? எதுவும் எனக்கு புரியலை. கண்டிப்பா அவரு வருவாரு”.

காதல் எத்தனையோ பேரை காக்க வைத்திருக்கிறது, கதற வைத்திருக்கின்றது, எதிர்பார்ப்பை கூட்டியிருக்கின்றது, ஏங்க வைத்திருக்கின்றது, இதயத் துடிப்பை எகிற வைத்திருக்கின்றது, வாழ்க்கை நிலையையே மாற்றி இருக்கிறது.

இதில் நிலா மகள் மட்டும் என்ன விதிவிலக்கா ? மீண்டும் அவனைப் பார்க்க வேண்டும் , அவன் குரலைக் கேட்க வேண்டும் என்று அனுமதி இல்லாமல் நுழைந்த காற்றைப் போல அவள் மனதை ஆட்டுவித்துக் கொண்டு இருக்க, அவள் தவித்தாள். ஐஸ்கீரிம் பக்கத்தில் வைத்து விட்டு திண்ணவிடாமல் தடுப்பது போல அவள் நிலை இருந்தது.

ஊருக்கு திரும்பாமல் குற்றாலத்திலேயே தங்கி விடலாமா என்ற ஒரு பேராசை மெதுவாக சுனாமி அலை போல மனதில் எழுந்தது. தலையை சிலிர்த்துக் கொண்டாள். அப்படியும் இப்படியும் ஆட்டிப் பார்த்தாள்,ஆனால் அவன் முகம், குரல் ஆகிய இரண்டும் மலைப்பாம்பிடம் மாட்டித்தவிக்கும் மலைஆடு போல அவள் மனதை சுற்றி வளைக்க தடுமாறினாள்.

மெல்ல எழுந்தாள். சுற்றி இருக்கும் தோழிகளை எப்படியாவது இந்த இடத்தை விட்டு நகர்த்தினால் இவர்களின் கேள்விகளிலிருந்து தப்பிக்கலாம்,

” சரி வாங்க எல்லாரும் எந்திருச்சு போகலாம். நடக்கற வேலையை பார்க்கலாம் “

“ யம்மா நிலா , பேச்சை மாத்தாதே. நடக்க போறதை பார்க்கலாம்னு பார்த்தா, இங்க எதுவும் நடக்காதான்னு பார்த்தா ஒண்ணையும் காணோமே “

வசந்தி நக்கலடித்தாள். இப்போது விமலா குறுக்கிட்டாள்.

“ ஏண்டி நேரமாச்சுன்னு போன் பண்ணினா எடுக்கவே மாட்டேன்னுட்ட. போன் ஆப் ஆகி இருந்தது. ஏண்டி போன் எடுக்கலை ? அவ்வளவு காதல் மயக்கமா ? “

நிலா அப்பொழுதுதான் கவனித்தாள். அவளது சுடிதாரில் பக்கவாட்டில் தையல் பிரிந்து இருந்த பகுதியைப் பார்க்க , அந்தப் பகுதியில் உள்ளே தைக்கப்பட்டு இருந்த பைத்துணியில் வைத்த செல்போனை காணாம். நிலா மகள் பதறினாள்.

அந்த போனில்தான் அவள் நிறுவனம் சார்ந்த எல்லா தகவல்களையும் பதிந்து வைத்திருந்தாள். கண்களில் பயமும், கலக்கமும் எட்டிப் பார்த்தன.

“ என்னடி திருதிருன்னு முழிக்கற ? எங்க உன்னோட போனு ? நீ விழுந்த இடத்துல அது தவறி விழுந்துருச்சா ?”

“ ஆமாடி , இங்க பாரு அவ பக்கவாட்டுல தையல் பிரிஞ்சு இருக்கறதை.. ”

நிலாவிற்கு கண்களில் நீர் எட்டிப்பார்க்க, மாதவி அவளைத் தேற்றினாள்.

“ கவலைப்படாதடி முடிஞ்சா போய் தேடிப்பார்ப்போம்”

நிலாவிற்கு மிக மிக துக்கமாக இருந்தது.

அலைபேசியில் உலகத்தோடு தொடர்பு கொண்டவர்கள், இன்று அலைபேசியையே உலகமாக நினைத்து மற்ற தொடர்புகளை நினைக்க மறுக்கின்றோம். பத்து பேரின் பத்து இலக்க அலைபேசி எண்கள் இருந்தாலும் பதறாமல் சொல்லிய நாம், இன்று எல்லாவற்றையும் அலைபேசி எனும் சிறு உயிரில்லா கருவியில் பதிந்து வைத்துவிட்டு எதுவும் ஞாபகம் இல்லாமல் மூளையை பயன்படுத்தாமல் தொலைந்து போய் நிற்கின்றோம்.

இங்க நிலாவும் அப்படிதான். தான் காதலில் தொலைந்ததை நினைத்து மகிழ்வதா அல்லது அலைபேசி தொலைந்துப்போனதை நினைத்து அழுவதா என தெரியாமல் நின்றாள்.

“ பாதுகாப்பு இல்லாத அந்தப் பகுதிக்கு மறுபடி எப்படி போறது ? யாராவது கேட்டா எப்படி சமாளிக்கறது ? “

எல்லாரும் கவலையில் ஆழ்ந்தார்கள்.

நிலா தொலைத்தது மனது மற்றும் செல்போன் மட்டுமல்ல… ?

பச்சையன் தேடி வருவானா ?

காத்திருங்கள்…….
 
Top