எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பச்சையன் -6

நிலாச்செய்தி….

நமது விண்வெளியில் உள்ள நெப்டியுன் கிரகத்திற்கு உள் நிலாக்களின் எண்ணிக்கை 14

இதுவரை பச்சையன்…

நிலாமகள் குற்றாலத்தில் பச்சையனை சந்தித்து காதல்வயப்படுகின்றாள். தோழிகளுடன் அவள் விடைபெறும் நேரம் விமலா எதேச்சையாக திரும்பி பச்சையனை பார்க்க அங்கே…….

பச்சையன் – 6

விமலா ஏதோ கேட்கவேண்டுமென திரும்பி பச்சையனை நோக்கி வர, அவன் கை முழங்கை பகுதியில் அந்த வித்தியாசத்தை கண்டு திகைக்கின்றாள். அவள் கை விரலை நீட்டிஅதை காட்டி என்னவென்று கேட்க முயல, பச்சையன் அவளைப் பார்த்தி பார்வையில் தனது கால்களை பின்னுக்கு இழுத்துக்கொண்டு திரும்பி நடந்தாள்.

“ என்னடி விமலா திடீர்னு பச்சையன் சாருடன் ஏதோ பேச போன, என்ன விசயம் ?” வசந்தி கேட்க விமலா ஒண்றுமில்லை என தலையசைத்து பேசாமல் நடந்தாள்.

இரண்டு நாட்கள் கழித்து……

பார்கவி தன் மகளை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டு இருந்தாள். எப்பொழுதும் பரபரப்பாக ஆபிஸ் கிளம்புபவள் ஏதோ காற்றில் நடப்பவள் போல மெதுவாக நடப்பது அதிசயமாகப்பட்டது.

நிலா தனக்குள் தவித்துக்கொண்டாள்.

‘ ஊருக்கு வந்ததுல இருந்து அந்த மனுஷன்கிட்ட இருந்து ஒரு தகவலும் இல்லை. விசிட்டிங் கார்டு கொடுக்கலை, போன் நம்பர் கொடுக்கலை, என்ன மனுஷன் இவரு ? ஒருத்தி வெட்கத்தை விட்டு காதலை சொன்னா ஒரு ரியாக்ஷனும் காட்டாம கல்லுமாதிரி இருக்காரு. இவருக்கெல்லாம் காதல் ஒரு கேடு ‘ மனதிற்குள் திட்டிக்கொண்டே பைக்குள் ஏற்கனவே எடுத்து வைத்த சாப்பாடு பாத்திரத்தை மீண்டும் வெளியே வைத்தாள்.

“ இந்தாடி , உனக்கு என்ன ஆச்சு ? நீ நீயாவே இல்லைடி. குற்றாலத்துல என்ன நடந்துச்சு ? நானும் நீ போயிட்டு வந்ததுல இருந்து பார்த்துகிட்டுதான் இருக்கேன. கேட்டுகிட்டு இருக்கேன். நீ என்னடான்னா ஒண்ணும் சொல்லாம இங்கிட்டு இருந்து அங்கிட்டு போற, அங்கிட்டு இருந்து இங்கிட்டு வர்ற. நீயா சிரிக்கற, நீயா யாருமே போன் பண்ணாதப்ப உத்து உத்து பார்க்கற “

“ அம்மா, நீயே புரிஞ்சுக்குவன்னே பார்த்தா இப்படி அசடாட்டம் இருக்க. நான் கீழே விழுந்து எந்திரிச்சேன், ஆனா மறுபடி காதல்ல விழுந்துட்டேன். ஒரு வயசு பொண்ணு நடந்துக்கறவிதத்தைப் பார்த்தா உனக்கு தெரியாதா ? அது காதல்னு புரியாதா ? “

” ஏண்டி நான் உன் அம்மா. எனக்கு தெரியாதா ? உன்னோட திருவாயில இருந்து வரணும்னுதான் உன்னை இரண்டு நாளா விட்டு பிடிச்சேன். யாருடி அது ? “

நிலா மகள் நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

“ இது என்னடி அதிசயமா இருக்கு ? ஊர் தெரியுது, ஆனா பேரு சொல்லலை, அட்ரஸ் கொடுக்கலை, இதுல உலக அதிசயமா நீ பச்சையன்னு பேரு வச்சிருக்க. இது எதுல போய் முடியும்னு தெரியலையே ? அம்மா வளர்த்த பிள்ளை சரியில்லைன்னு பின்னாடி யாரும் பேசிட கூடாதடி”.

அம்மா புலம்பலைக் கேட்ட நிலாமகள் பார்கவியை சமாதானப்படுத்தும்விதமாக அவளை தன்னுடன் அணைத்துக்கொண்டாள்.

“ அம்மா கவலைப்படாதே, எல்லாம் நல்லபடியா முடியும்மா. எதுவும் யோசிக்க விடாம என் மனசு தடுமாறிருச்சும்மா. அவரோட அழகா ? என்னை காப்பாத்துனதா ? அந்த வசீகர குரலா ? தெரியலைம்மா ! ஊருக்கே உபதேசம் பண்ணவ, ஊரையே உத்துப்பார்க்க வச்சவ இன்னைக்கு இந்த நிலைக்கு ஆயிட்டேம்மா. எதையும் இதுவரை உன்கிட்ட மறைச்சதில்லைம்மா. எத்தனையோ பேரு என்னை தப்பா பார்த்தாலும் பார்வையால எரிச்சவ நானு, ஆனா இன்னைக்கு யாரோ பெயர் தெரியாத ஒருத்தருக்காக ……”

அதற்கு மேல் பேச முடியாமல் நிலாமகள் தாயின் தோளில் சாய்ந்து அழ ஆரம்பிக்க பார்கவி தடுமாறினாள், மகளை எப்படி தேற்றுவது என்று தெரியாமல் தவித்தாள்.

காதல் பொல்லாதது. உள்ளே நுழையும்வரை எதுவும் தெரியாது, ஆனால் வந்துவிட்டால் நுழைந்தவருக்கு என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. பெற்றவளை மறக்கவிட்டு, உறவுகளை தவிக்கவிட்டு படாதபாடுபடுத்திவிடும்.

இந்த ‘காதல் புதைகுழி ‘ விழுபவரை தனக்குள் இழுக்கும் இன்ப பாதாளம். புதைகுழியில் விழுபவர் மேலே ஏற முயற்சி செய்வர், ஆனால் காதல் புதைகுழி விழுபவருக்கு போதை ஏற்றி இன்னும் கொஞ்சம் உள்ளே போக மாட்டோமா என்ற ஏக்கத்தை கபாலம் முதல் கால் கட்டைவிரல்வரை பரப்பிவிடும். யாரும் தப்பிக்க நினைக்காத ஒரே இன்ப தண்டனை இதுதான்.

கோபக்கார தந்தையிடம் அடிக்குத் தப்பி தாயின் சேலைக்குள் பதுங்கி இருக்கும் குழந்தை போல , தன்னை இறுக அணைத்து ஆறுதல் தேடும் நிலாமகளை, பார்கவி தோளில் தட்டி தலையைத்தடவி கொடுத்தாள்.

“ உன் வேதனை எனக்கு புரியாம இல்லைடி. இரண்டு நாளா உன்னை கவனிச்சுகிட்டுதான் இருக்கேன். வழக்கமா லீவு நாள்ல செல்போனை தொட மாட்டே, ஏதாவது எமர்ஜென்ஸியா இருந்தா உன்னோட தோழிகள்கிட்ட வாட்ஸ்அப்ல மெசேஜ் அனுப்புவ, ஆனா இந்த இரண்டு நாளா எதையோ பறிகொடுத்தமாதிரி இருக்க, அடிக்கடி தனியா உட்கார்ந்துக்கற. கலங்காத உன்னோட அழகான கண்கள் கலங்கி தவிக்குது, சாப்பாடு சரியா சாப்பிடமாட்டேங்கிற. கண்டிப்பா அவன் உன்னை பார்ப்பான். கவலைபடாதே, ஆபிஸுக்கு கிளம்பு. எல்லாம் நல்லபடியா நடக்கும்”

நிலா மகள் மெதுவாய் தாயை விட்டு தள்ளி நின்றாள். கண்களை துடைத்துக் கொண்டாள்.

“ அம்மா என்னோட வேதனை உனக்குப் புரியாது. ஊர்ல ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பிச்சவுடனே அவனவன் ஆயிரத்தெட்டு மிஸ்டு கால், நூத்தியெட்டு மெசெஞ்னு அனுப்ப ஆரம்பிச்சுருவான், அடுத்து எப்ப பார்க்கலாம் எப்ப பார்க்கலாம்னு நச்சரிக்க ஆரம்பிச்சிடுவான். வெளியே அவன் காதலிக்கற பொண்ணு வெளியே கருப்பு பூனை படை மாதிரி பாதுகாப்பா பின்னாடியே சுத்த ஆரம்பிச்சிருவான். இவரு என்னடான்னா..”

“ சரிம்மா . உன்னோட பச்சையன் வித்தியாசமான ஆளா இருக்கார்டி. அடுத்து பார்த்தா உன்னோட அவரைப்பத்தி எல்லாத்தையும் விசாரிச்சுரு. வீட்டுக்கு கூட்டிகிட்டு வா , பேசுவோம்”.

“ எப்படிம்மா உன்னால எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்க முடியுது ? உன்னோட பொண்ணு காதலிக்கறேன்னு சொன்னவுடனே உனக்கு கோபம் வரலையா ? “

“ எப்படிடி எனக்கு கோபம் வரும் ? மக மேல நம்பிக்கை இல்லாத தாய் யார்மா இருக்க முடியும் ? உங்க அப்பா போன பிறகு எனக்கு எல்லாமே நீதாம்மா ? எல்லாத்தையும் வெளிப்படையா என்கிட்ட சொல்ற என்னோட அருமையான மகளை நான் நம்பாம இருப்பேனா ? இந்த காலத்துல காதல்ல விழுந்த பெண்கள் எளிதில், அதிக அளவில் உணர்ச்சிவசப்படுவாங்க. இந்த உணர்வுகளை தவறா பயன்படுத்தி ஏமாத்தற கூட்டம் இருக்கு. சுதாரிக்கறவங்க தப்பிச்சுக்கிறாங்க. சுதாரிக்காதவங்க….தன்னோட அப்பாகிட்டேயும் , அம்மாகிட்டேயும் எதையும் மனம்திறந்து பேசுற எந்த பொண்ணும் தன் வாழ்க்கையை தொலைக்க மாட்டா, தன்னோட பொண்ணோட எண்ணங்களை , ஏக்கங்களை புரிஞ்சுக்கற பெத்தவங்க இருந்தா எந்த பொண்ணும் கவலைப்பட தேவையில்லை”.

பார்கவி பேசியதைக் கண்டு நிலாமகள் விரல்களுக்கு வலிக்காமல் கைதட்டினாள்.

“ போதும்டி , உனக்கு ஆபிஸ்க்கு நேரம் ஆகலையா ? கிளம்பலையா நீ ? “

“ பரவாயில்லம்மா, விமலா வீடு ஆபிஸ்க்கு பக்கத்துலதான். அவ முன்னாடி போய் திறந்துருவா. அவகிட்ட ஒரு மாத்து சாவி இருக்கு “

“ சரிம்மா. நல்லதே நடக்கும் . போயிட்டு வா. அவனுக்கு அங்க என்ன பிரச்சனையோ ? கண்டிப்பா உன்னைத்தேடி வருவான்மா. நீ எதைபத்தியும் கவலைப்படாம உன்னோட வேலையை பாரு. எல்லாத்தையும் மறந்துட்டு வேலையில கவனமா இரு. மத்தியானத்துக்கு தேவையான சாப்பாடு , தண்ணி எல்லாத்தையும் மறக்காம எடுத்துகிட்டியா ?”

“ எல்லாம் எடுத்திகிட்டேன்மா. நீ பத்திரமா இரு. நான் கிளம்பறேன்”.

பார்கவி நிலாமகளை வாசல்வரை வந்து வழியனுப்ப நடந்தபொழுது நிலாமகளின் போன் கூப்பிட்டது.

வசந்தி மறுபக்கம் இருந்தாள்.

“ நிலா இன்னும் ஆபிஸ் திறக்கலைடி. நானும் மாதவியும் வெளியே நிக்கறோம்டி. அவளுக்கு போன் அடிச்சா ஸ்விட்ச் ஆப் ஆகி இருக்கு. நீ கிளம்பிட்டியா ? “

“ இதோ கிளம்பிட்டேன்டி. இன்னும் ஐஞ்சு நிமிசத்துல வந்துருவேன் “.

நிலாமகள் தலையை கீறிக்கொண்டாள்.

‘வழக்கமா எப்பவும் சரியா நேரத்துக்கு வர்றவ ஏன் இன்னும் வரலை ? ‘

யோசனையுடன் அம்மாவுக்கு மறுபடி டாட்டா காட்டிவிட்டு கிளம்பினாள்.

என்னதான் பச்சையனை மறக்க நினைத்தாலும் அவள் கண்முன் வந்து வந்து போனான். காதல் எதையும் மறக்க விடுமா ? ஆபிஸை நெருங்கும் போது விமலாவை தவிர எல்லாரும் இருந்தார்கள்.

யாரிடமும் எதுவும் பேசாமல் கதவை திறக்க அனைவரும் உள்ளே போனார்கள்.

விமலாவிற்கு என்ன ஆனது ? காத்திருங்கள் ,

பச்சையன் வருவான்……
 
Top