எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பச்சையன் – 9

நிலாச் செய்தி…

மற்ற கிரகங்களுக்கு உள்ள அனைத்து நிலாக்களுக்கும் பெயர் வைக்கப்பட்டாலும் பல சில நிலாக்கள் தொலைநோக்கியின் பார்வை தூரத்திற்கு அப்பால் இருப்பதால் அவைகள் மங்கலாகவே , தெளிவில்லாமல் தெரிகின்றன்.

இதுவரை பச்சையன் ……

இரண்டு நாளுக்கு மேலாக காணாமல் இருந்த விமலா ஆபிஸூக்கு வருகிறாள். மற்ற எல்லாரும் சென்றுவிட நிலா மகள் காரணம் கேட்க இறுதியில் விமலா பச்சையனை தானும் காதலிப்பதாக சொல்ல நிலாமகள் அதிர்ச்சி அடைகின்றாள். இனி….

பச்சையன் ---- 9

விமலாவின் பதிலைக் கேட்ட நிலாமகள் அதிர்ச்சி அடைந்தாள். கோபம் தலைக்கேறியது.

“ என்னடி விளையாடிறீயா ? தெரிஞ்சுதான் பேசுறியா ? இல்லை புத்தி பேதலிச்சுப் போச்சா ? நான் காதலிக்கறது உனக்கு தெரியாதா ? “

“ ஏன், காதல் உனக்கு மட்டும்தான் வரனுமா ? எனக்கெல்லாம் வரக்கூடாதா ? “

“ வரலாம்டி, அதுக்காக நான் காதலிக்கற ஆளையே , நான் காதலிக்கறது தெரிஞ்சும் , நீயும் அதே ஆளையே காதலிக்கறேன்னு சொன்னா என்ன அர்த்தம் ? “

“ எனக்கும் காதல் வந்துருச்சுன்னு அர்த்தம் “

” என்னோட எல்லாத்திலேயும் போட்டி போடுவ . அதுக்காக இதுலேயுமா ? என்னடி இது புது விளையாட்டு ? விளையாட்டா சொல்றீயா இல்ல நிசமாதான் சொல்றீயாடி “

“ உண்மைதான். நீ அவன் பேசுன சில வார்த்தைகள்ல மயங்கியிருக்கலாம், ஆனா நான் அவரைப் பார்த்த அடுத்த வினாடியே என்னோட மனசை பறிகொடுத்துட்டேன்”.

“ இது கண்மூடித்தனமான குருட்டு காதல். இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது “.

“ ஓ ! நிலா நீ காதலிச்சா அது கண்டதும் காதல் , நான் காதலிச்சா கண்மூடித்தனமான காதலா ? நல்லா இருக்கடி உன் நியாயம் “.

“ இது சரியில்லடி. நான் உன்னோட உயிர்த்தோழின்னு தெரிஞ்சும் , நீ பண்றது யாரும் ஒத்துக்க மாட்டாங்க “

“ நானும் ஒத்துக்க மாட்டேன்” . புதிதாக ஒரு குரல் கேட்க இருவரும் திரும்பி பார்க்க அங்கே வசந்தி இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.

“ நான் வந்தது கூட தெரியாம , இரண்டு பேரும் பேசிகிட்டு இருக்கீங்க . விமலா என்ன ஆச்சுடி உனக்கு ? நான் என்னோட செல்போனை மறந்து வச்சிட்டு போயிட்டேன், எடுக்கலாம்னு வந்தா இங்க என்ன என்னமோ நடக்குது. நிலா காதலிச்சவன் எதுவும் பேசலைன்னு வருத்தப்பட்டதை விட உன்னை இரண்டு நாளைக்கு மேல காணாம்னு வருத்தப்பட்டது அதிகம்டி. விமலா நீ பண்றது பச்சைத் துரோகம்டி “

விமலா வசந்தி பக்கம் திரும்பினாள்.

“ ஒரு பொண்ணை இரண்டு ஆண்கள் காதலிக்க முயற்சி செய்யலாம் தப்பில்லை, ஆனா ஒரு ஆணை இரண்டு பெண்கள் காதலிக்கறது தப்பா ? எனக்கு பிடிச்சிருக்கு காதலிக்கறேன் .இதுல என்ன தப்பு ? “

“ நிலா உன்னோட பிரண்டுடி . தெரிஞ்சுமா அவ காதலோட விளையாடலாமா ? “

” காதல் ஆள் பார்த்து , நேரம் பார்த்து வருவதில்லைடி. எங்க வேணும்னாலும் , எப்ப வேணும்னாலும் நுழையக்கூடிய காத்து மாதிரிடி. காதலுக்கு வரைமுறை , சட்டம் எதுவும் கிடையாது. எனக்கு வந்திருக்கு நான் காதலிக்கறேன். வேணும்னா அவளும் காதலிக்கட்டும். எனக்கு ஆட்சேபனை இல்லை “.

நிலா மகள் குறுக்கே புகுந்தாள்.

“ என்னை என்ன பைத்தியகாரின்னு நினைச்சியா ? மரியாதையா விலகிரு. இது உனக்கு நல்லதல்ல . மீறீனா ….?

நிலா ஆட்காட்டி விரலை காட்டி குரலை உயர்த்தி கோபத்துடன் கத்த ஆரம்பித்தாள். பதட்டத்தில் உடல் ஆட ஆரம்பித்தது. வசந்தி திகைத்தாள் விமலா எதைப்பற்றியும் கவலைப்படாமல் திமிராக நிற்பது போல நின்றிருந்தாள்.

வசந்தி கவலைப்பட்டாள்.

‘ நேற்று வரை உயிர் தோழிகளாய் இருந்த இவர்கள் , இன்று இந்த பாழாய் போன சனியன் பிடித்த காதலால் நட்பாய் சுற்றிய இவர்கள் இன்று சண்டைக்கோழிகளாய் மாறி விட்டார்களே. ஒருத்தி காதலின் உச்சத்தில் இருக்கறாள், மற்றவளோ அதே காதலை பிடித்துக் கொண்டே உச்சத்தில் நிற்கிறாள். இது எங்க போய் முடியும்னு தெரியலையே’

காதல் ஒரு பக்கமும் , விதி ஒரு பக்கமும் நின்று சிரித்து கொண்டிருந்தன. நேற்றுவரை பழகியவர்கள் , இன்று விலகியவர்களாக மாறியது விசித்திரமாக இருந்தது.

வசந்தி பதறிப்போனாள். இப்படி ஒரு கோபத்தை நிலாமகளிடம் அதுவரை யாரும் கண்டிதில்லை. இப்படி ஒரு திமிர் முக பாவனையை விமலாவிடம் எதிர் பார்க்கவில்லை.

“ யாரும் என்னை மிரட்ட முடியாது, யாருடைய மிரட்டலுக்கும் நான் பயப்பட மாட்டேன். அடித்து பழுக்க வைக்க இது காய் அல்ல, காதல் அம்மணி”

விமலாவின் பதிலை கேட்டு நிலாமகள் கோபத்தோடு சற்று முன்னேற , வசந்தி குறுக்கே புகுந்தாள். கைகளால் அணை கட்டி நிலாவை சற்று ஆசுவாசப்படுத்தும் விதமாக அவளை அணைத்து தட்டிக் கொடுத்து பின்னால் தள்ளி பக்கத்து நாற்காலியில் உட்கார வைத்தாள். பின் விமலாவை கையைப் பிடித்து வலுகட்டாயமாக்கி உட்கார வைத்தாள்.

இருவருக்கும் நடுவில் உட்கார்ந்து கொண்டாள்.

“ இந்த நொடிவரை நீங்க தோழிகள்தான். கூடபிறக்காத சகோதரிகள். இடையில வந்த காதலால இப்படி ஆவேசப்படறது நல்லதில்லைமா !”

விமலா சற்று அமைதியானாள். ஆனால் காதல் சும்மா விடுமா நிலாமகளை ? காதல் எரிமலையை ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அணைத்து விட முடியுமா ? அதுவும் இரண்டு எரிமலைகள் அருகருகே இருந்தால்…….

விமலா ஆரம்பித்தாள். காதல் போர் ஆரம்பமானது.

” நான் காதலிப்பது குற்றமா ?”

“ஒருத்தி காதலிக்கின்றாள் எனத் தெரிந்தும் அவனையே இன்னொருத்தி காதலிப்பது குற்றமில்லையா ?”

“ நான் உன்னைப் போல உடல் அழகைப் பார்த்து காதலிக்கவில்லை “

“ காதலிக்கும் மனசு என் உடலில்தானே இருக்குது “. நிலா மகள் எகிற ஆரம்பித்தாள்.

“ பொறாமையால் பேசுகின்றாய் “

“ காதலை பெறாமையால் ஏசுகின்றாய் “.

“ மறுத்துப் பேசுவது அழகல்ல “

“ என் காதலை மறித்து நிற்பது உனக்கு நல்லதல்ல”

“ உன் கோபம் கண்ணை மறைக்குது “

“ தேவையில்லா காதல் உன் அறிவை மறைக்குது “

“ காதல் வலி வந்தவளுக்கு தெரியும் “

“ காதல் தோல்வி அதில் நொந்தவளுக்கு தெரியும் “

வசந்தி குறுக்கே பேசினாள்.

“ பழகியவர் விலக நினைக்கலாமா ?”

விமலா பட்டென்று சொன்னாள்.

“ விலக நினைப்பவர் ஏன் பழக வேண்டும் ?”.

நிலா மகள் கோபம் தணியாமல் கேட்டாள்.

“ நான் காதலிப்பனை நீ காதலிப்பது உன் முடிவா ?”

“ என் முடிவே காதலிப்பதுதானே ?”.

“ முறையற்ற காதல் வேண்டாமே உனக்கு “

“ எனது காதல் ஒன்றும் முறை தவறியது இல்லையே “

இரண்டு பேர் பேசி வாதாடியது கண்டு வாயடைத்துப் போனாள். விமலா இப்படி பேசியதை கண்டு அதிசயத்துப் போனாள்.

‘விமலாவா இப்படி பேசுகிறாள் ? அமைதியாக ஆனால் அழுத்தம் திருத்தமாக எப்படி சரிக்குசரியாக பேசுகிறாள். நிலா மகள் அதற்கு மேல் ஒருபடி போய்விட்டாளே !காதல் கயிறாக நிலாமகளையும், பாம்பாக விமலாவையும் சுற்றி உள்ளதே ! யாரை காப்பாற்றுவது ? ‘ வசந்தி மனதிற்குள் குழம்பினாள், தனக்குதானே புலம்பினாள் உள்ளுக்குள்.

பேசி களைத்துப் போய் இருவரும் அமர, வசந்தி இருவரையும் மாறி மாறி பார்த்தாள். மெதுவாக ஆனால் பக்குவமாக பேசினாள்.

“ காதல் உங்கள் மனதை மத்தளமாக்கி இரண்டு பக்கமும் நன்றாக அடித்து விளையாடுகிறது. ஒருத்தி தன் பக்கம் காதலை இழுத்துக் கொள்ள , அதே சமயம் அதே காதல் இன்னொருத்தியை தனக்குள் இழுத்து போட்டுக் கொண்டு விளையாடுகிறது. குறிஞ்சிப் பூவை விட வாழ்க்கையில் பூக்க கூடிய ஒரே பூ நட்பு மட்டும்தான். அதை உலர விடாமல் வளர வைப்பதே தோழமை. எது வந்தாலும் எதிர்த்து நிற்க வைப்பது உண்மையானது நட்பு மட்டும்தான். நீங்க என்னடான்னா பழகினதையே மறந்து திடீர் காதலுக்காக அடிச்சிகிட்டு அலையிறிங்க. இது நல்லாவா இருக்கு ? “

விமலாவும் , நிலா மகளும் அமைதியானார்கள் . அவர்கள் முகபாவமே யோசிப்பதற்கு நேரம் எடுத்துக் கொள்கிறார்கள் என்று வசந்திக்கு நன்றாக தெரிந்தது.

வசந்தி தான் சொல்வதை தொடர்ந்தாள்.

“ ஒருவனுக்கு ஒருத்தி என்பது கல்யாணத்திற்கு மட்டுமல்ல , காதலுக்கும் அது பொருந்தும். நான் உங்களை குற்றம் சொல்லவில்லை, பாழாய் போன காதல் இடையில புகுந்து உங்க நட்பை பிரிக்க பாக்குதே , அதைதான் குற்றம் சொன்னேன். கொஞ்ச நேரம் கோபத்தை தள்ளி வச்சிட்டு , நட்பை பக்கத்துல வைச்சி யோசிங்க . எல்லாம் நல்லபடியா நடக்கும். எனக்கு நேரமாச்சு. வர்றேன்.”

வசந்தி தனது போனை கையில் எடுத்துக் கொண்டு இரண்டு பேர் தலையையும் ஆதரவாய் தடவி , கன்னத்தை தட்டி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

சுனாமி புறப்பட்டு வந்து ஊரை சுற்றி விட்டு போனது போல ஆபிஸ் அமைதியாயிருந்தது. மணி ஐந்தை நெருங்கி கொண்டு இருந்தது.

சிறிது நேர அமைதிக்குப் பிறகு நிலா மகள் எழுந்து விமலாவின் அருகில் உட்கார்ந்தாள். கண்களில் நீர் பளபளக்க அவளை தேருக்கு தேர் பார்த்தாள். விமலா சிறிது தலையை உயர்த்த அவள் கண்களிலும் நீர் பளபளப்பாக தெரிந்தது.

“ ஏண்டி, உண்மையை சொல்லுடி , குற்றாலத்தில் என்ன நடந்தது ? இரண்டு நாளுக்கும் மேலாக காணாமல் ஆக்கிக் கொண்டது ஏன் ? . உன்னை இப்படி நான் பார்த்ததில்லை. மறைக்காமல் சொல்லுடி. நான் கோபப்படாம கேக்கறேன். சொல்லுடி “.

விமலா திடிரென விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள்.. அழாமல் இருக்க முயற்சி செய்து தோற்றுப் போனாள். நிலா மகள் அவள் அழுது ஓயட்டும் என காத்திருந்தாள், அவள் தோள்களில் ஆதரவாக தனது கைகளை வைத்திருந்தாள்.

விமலா கண்களை துடைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.

“ அது வந்து.. அது..”

“ இன்னும் என்னடி தயக்கம் ? ஏன் தடுமாறுற ? சொல்லுடி , சொல்லும்மா ! “

தனக்கு எதிரே நிற்கும் நிலாமகளை விமலா பார்த்தாள். அவளுக்கு பழகிய நினைவுகள் வந்து வந்து போனது. தாய்க்கு அடுத்தபடியாக தாயாய் இருந்து தன்னை சீராட்டியவளை நன்றியுடன் நோக்கினாள். நிலாமகளை காயப்படுத்தி விட்டோமே என்று குற்ற உணர்வில் தலை கவிழ்ந்தாள்.

இந்த நேரத்தில் எதேச்சையாக மேசை மேல் இருந்த நிலாமகளின் செல்போன் பக்கம் அவள் கவனம் திரும்ப, அதன் திரையில் வெளிச்சம் தெரிந்தது. அவசரமாய் எடுத்துப் பார்க்க அம்மா பார்கவி நிறைய தடவை போன் பண்ணியிருந்தது மிஸ்டு காலில் இருந்தது.

நிலா மகள் தலையில் தட்டிக் கொண்டாள். விமலாவிடம் பேச ஆரம்பித்த நிமிடம் போனை ஊமையாக்கியது நினைவுக்கு வந்தது.

போன் அடித்தாள், உடனே எடுக்கப்பட்டது.

“என்னடி மணி ஐந்தரைக்கு மேல் ஆச்சு. நாலரைக்கே வீட்டுக்கு வந்துருவ. என்னடி பண்ற இன்னும் அங்கே ?”

“ அம்மா கோவிச்சக்காதம்மா , தேடின விமலா வந்துட்டா, கொஞ்ச நேரத்துல அவளை நம்ம வீட்டுக்கு கூட்டிகிட்டு வர்றேன் “

போனை வைத்துவிட்டு விமலா பக்கம் திரும்பினாள். தன்னையே விமலா உற்று பார்த்து கொண்டிருப்பது கண்டு வியந்தாள். விமலா கண்களில் ஏதோ ஒரு செய்தி சொல்ல துடிப்பது போல தெரிந்தது.

“ என்னடி வார்த்தையை மென்னு முழுங்குற ? என்னமோ சொல்ல வர்றே, அப்புறம் தயங்குற , சொல்லும்மா உனக்கு என்கிட்ட சொல்றதுல உனக்கு என்ன பிரச்சனை ?”

விமலா இன்னும் தயங்கினாள்.

“ உன் கண்களைப் பார்த்து பேச பயமாக இருக்கிறது நிலா. இதற்கு முன் உன்னிடம் சகஜமாக பேசியவள் இல்லை நான். என்னுடைய நிலை அப்படி. சொல்லவும் முடியாமல் , முழுங்கவும் முடியாமல் அவித்து முட்டையை முழுங்கும்போது தொண்டையில் விக்குவது போல தவிக்கின்றேன் நான். எங்கே ஆரம்பித்து , எங்கே முடிப்பது என தெரியாமல் முழிக்கின்றேன் நான். நானா இப்படி , ஏன் இப்படி, எதனால் இப்படி என பல ’இப்படிகள்’ எனக்குள் இடிக்கின்றது. சொல்லாமல் இருக்க கூடிய நிலை இல்லை, சொல்ல நினைக்கும் போது பயம் என்னில் ஏறி அழுத்தி தள்ளுகிறது. என்னுடைய காதலும் அப்படிதான், அது உன்னுடைய காதலுடன் போட்டி போடுவது என்னுடைய நிலையாக மாறியதற்கு நான் வருத்தப்படவில்லை. ஏன்னா…”

சொல்லி கொண்டே வந்த விமலா திடீரென நிலா மகளின் முகத்தை கவனித்தாள். அதுவரை தன்னை உன்னிப்பாக கவனித்து வந்த நிலா மகளின் முகபாவனை மாறுவது கண்டு விழித்தாள். நிலா மகளின் முகம் படிபடியாக பிரகாசத்திற்கு போய்கொண்டு இருந்தது.

தன்னைத் தாண்டி நிலா மகளின் பார்வை போவதைக் கண்டு விமலா திடுக்கிட்டு பின்னால் திரும்பி பார்த்தாள். அங்கே………..

இனிதான் பச்சையன் ஆட்டம் ஆரம்பமாக போகுது. காத்திருங்கள்…..எதிர்பாரா திருப்பங்கள் ….

காதலா ? நட்பா ? அல்லது மர்ம நிகழ்வுகளா ? விரைவில்…
 
Top