எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பச்சையன் –16

நிலாச்செய்தி…..

நிலாவை நாம் இலக்கியத்தில் பெண்ணின் முகத்திற்கும், பெண்ணின் அழகிற்கும் ஒப்பிடப்படுவது நமக்கு தெரியும். ஆனால் அறிவியல்படி நிலா ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல , அது ஒரு கோள் அவ்வளவுதான்.

இதுவரை பச்சையன்……..

பச்சையனை சந்திக்க பூங்காவிற்கு செல்கிறாள் நிலாமகள் . இங்கே வசந்தி விமலாவின் போனில் பதிவான விசயத்தை கேட்க முயல அது பாதியில் கட் ஆகிறது. இனி….

பச்சையன் --- 16

தன்னைப் பார்த்து , தன்னுடைய பதட்டத்தை பார்த்து சிரித்த பச்சையனை கண்டு நிலா மகளுக்கு கோபம் வருகிறது. அவனை சுட்டெரிப்பது போல அவனைப் பார்க்க , அவன் அவளை மீண்டும் சிரிப்பில் எதிர்கொள்ள கோபம் உச்சத்திற்கு போகிறது. நிலா சீற ஆரம்பித்தாள்.

“ கண்டவனை காதலிப்பது தப்பு என இப்பதான் தெரிகிறது “

“ கண்ட பிறகுதானே காதல் வரும்.அதாவது கண்ணால் கண்ட பிறகு”.

“ கண்டபடி காதலிப்பது தவறு என சொல்ல வந்தேன் “.

“ யார் முதலில் காதலில் விழுந்தது ? சாரி, அதாவது என் காலில் உருண்டு விழுந்தது ?”

“ விழுந்தது தப்பு இல்லை, ஆனா விழுந்த இடம் சரியில்லை”.

” நிலா என்றாலே குளிர்ச்சிதானே, இங்கு என்ன எரிமலை வெடிக்குது ?”

“ விமலாவை என்ன செய்ய முயற்சி செஞ்ச ? அவ உன்னை என்ன பண்ணா ? அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா உன்னை சும்மா விட மாட்டேன் “.

” ஓ ! இதுதானா விசயம். இப்ப உனக்கு விமலாவை பத்தி தெரியனுமா ? இல்லை என்னைப் பத்தி தெரியனுமா ?”.

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கையில் நிலாமகள் ஏற்கனவே போனை ஆன் செய்து வசந்தியுடன் தொடர்புபடுத்தி மடியில் வைத்திருந்தாள் கான்பரன்ஸ் காலில் போட்டிருந்ததால் சற்று தள்ளி உட்கார்ந்து இருந்த மாலாவும் இதுவரை இவரகள் பேசிக்கொண்டதை கேட்டு கொண்டிருந்தாள்.

“ உன்னை பத்தி தெரிந்து கொண்டாலே எல்லாம் தெரிந்து விடுமே. நீ தங்கி இருந்த இடத்தில் போய் விசாரித்து விட்டு வந்தேன். அதற்குள் அறையை காலி செய்து விட்டு எங்கோ போய் விட்டாய். பேர் கூட ஏதோ போட்டிருந்தது. அது….”

நிலா ஞாபகப்படுத்த முயற்சி செய்ய முயன்று நினைவுக்கு வராமல் தவித்தாள்.

“ மேன்ரோ என்ற பெயரை பார்த்திருப்பாய் . நீ வந்தது, பார்த்தது , விசாரித்தது எல்லாவற்றையும் நான் தூரத்தில் இருந்து உனக்குத் தெரியாமல் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன் “.

” தைரியமான ஆளாய் இருந்தால் என்னிடம் வந்து பேசியிருக்கலாமே ?”.

“ நான் தைரியமான ஆள்தான். ஆனால் உன்னை பார்த்தாலே, உன்னுடைய கண்களை பார்த்தாலே நான் தடுமாறுகிறேன் . காதல் மொழியை கண் வழி பேசுபவளுக்கு முன் என் வழி தடுமாறுகிறேன். நீயே அழகுதான் , உன் கோபமே அழகுதான். என்னை ஏறேடுத்து பார்த்து என் மனதை கண் ஏரால் உழுபவளே , நான் உன்னிடம் தோற்கிறேன்.

பச்சையன் பேசியதை கேட்டுகொண்டு இருந்த மாலாவுக்கும், வசந்திக்கும் சிரிப்பு வர, நிலாமகளுக்கோ வெட்கம் பிடுங்கி தின்று காதல் மலைபாம்பாய் அவளைச் சுற்ற, இவள் தவித்துப் போய் நிற்க , கோபம் ஆவியாகி மறைந்து போனது.

“ நான் ஏதோ கேட்க , நீங்கள் வேறு ஏதோ பேசி மாற்றுகிறீர்கள் “.

“ என்னை மாற்றியது நீதானே”.

“ பேசி ஏமாற்றுவது ஆண்களுக்கு வாடிக்கைதானே”.

“ கண் பார்வை வீசி ஏமாற்றுவது பெண்கள்தானே”.

” உன் பேச்சால் நட்பை உறங்க வைக்கின்றாய், காதலில் கிறங்க வைக்கின்றாய்”

“ உன் நிலை அறிந்து பரிதவிக்கின்றேன், ஆனால் உன்னால் நான் காதலில் தவிக்கின்றேன்”.

“ நான் கேட்டதற்கு பதில் வரவில்லை. திசை திருப்பிகின்றாய் பேச்சை “

“ அடி பெண்ணே , என்னை திசை திருப்பும் விசையே நீதானே !”

“ உன் பேச்சால் என் மனதை கரைக்க முயல்கின்றாய்”

“காற்றில் கரைந்த ஊதுபத்தியின் நறுமணமாய் என்னில் நீ கரைந்திருக்கின்றாய், கரைந்தது நான் அல்லவா !”

“ காதலால் காதலர்களை சந்திக்க வைக்கிற இறைவன், அவர்களை சிந்திக்க வைக்க வாய்ப்பு கொடுக்காததால் ஏமாற்றப்படுவது எங்களை போன்ற பெண்கள்தானே”.

“ நட்புக்காக உயர்வான காதலை துறக்க நினைப்பதோ ?”

“ காதலுக்காக நட்பை விற்பதோ ?”

இருவரின் பேச்சுக்கு இடையில் வசந்தி நிலாவிற்கு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்ப, நிலாவின் திரையில் மேல் பகுதியில் அதற்குரிய படம் மின்னிக்கொண்டு இருந்தது. பேச்சிற்கு இடையே நிலா தன் பார்வையை போனில் பதிக்க அதை கவனித்தாள். பச்சையனுக்கு தெரியாமல் எடுத்தி ஓரப்பார்வையால் பார்க்க அதில் ‘பச்சையன் ஆபத்தானவன், கவனம். ஜாக்கிரதையாக பேசி அவனிடமிருந்து விசயத்தை வாங்கவும். சீக்கிரம் விலக முயற்சிக்கவும்’ என்ற செய்தி கண்டு உஷாரானாள். அவன் போக்கில் பேசி ஏமாற்றி விசயத்தை கறக்கம முயற்சி செய்தாள்.

பாவம் நிலாவுக்கு தெரியாது, அந்த குறிப்பிட்ட இடைவெளியில் இவள் மடியில் பாதி வெளியில் தெரிகிற மாதிரி இருந்த போனை பார்த்ததை அவன் உன்னிப்பாக கவனித்ததை.

அவனை சீண்ட நினைத்தாள்.

“ உங்கள் அழகைப் பார்த்து நான் ஒன்றும் காதலிக்கவில்லை “

“ அழகு பார்த்து வருவதல்ல காதல், காதலிப்பதே அழகுதானே “

“ பழகிய நாள் ஒன்றும் அதிக நாள் இல்லையே “

“ பழகிய நாளை விட என்னை உன் மனதில் உலவ விட்ட நாள் அதிகம்தானே “

நிலா திகைத்தாள். அவனை நினைத்து குமுறியது , கவலைப்பட்டது, விமலாவின் நட்பை மறந்தது எல்லாம் இவனுக்கு எப்படி தெரியும் என திகைத்தாள். வசந்தியின் எச்சரிக்கை ஒருபக்கம் இருந்தாலும் , காதல் அவளை பாடாய்படுத்தியது.

நிலா மீண்டும் ஆரம்பித்தாள்.

“ தத்து பித்து என உளறுகிறீர்கள்”

“உண்மைதான், உன் மீதி கொண்ட பித்தால் உளறுகிறேன்”.

” என்னை காதல் பேச்சால் மயக்கி, தூண்டி விடுகிறீர்கள் நீங்கள்”.

“ காதலிக்காத மாதிரி, உன்னில் காதல் வராத மாதிரி பேசி எனக்குள் இருக்கும் உன் மீதுள்ள காதலை வெளியே வர சீண்டுகிறாய்”.

நிலாவிற்கு அவன் மீது கொண்ட காதலால் ஒருமைக்கு தாவினாள்.

“ நன்றாக கிறுக்குப் பிடித்து உளறுகிறாய் நீ”.

“ என்னை கிறுக்கனாக்கியது காதல்தானே, நீ முறுக்கி கொண்டு நிற்பது ஏன் ?”

இதே நேரத்தில் மாதவியிடமிருந்து வசந்திக்கு போன் வர எடுத்து காதில் வைத்து கேட்டவள் அதிர்ந்து போனாள்.

அங்கே ஆஸ்பத்திரியில் விமலா திணறி திணறி ஒவ்வொரு வார்த்தையாக பேசி அவளின் கால் காயம் பச்சையனால் ஏற்பட்டது என மாதவியிடம் தெரிவித்திருந்தாள்.

வசந்திக்கு உடனே நிலா மகளை எச்சரிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்ப்பட்டது. பதட்டத்துடன் டைப் அடிக்க ஆரம்பித்தாள். காதல் போதையில் ஏதாவது பேசி அவன் கோபமடைந்து நிலாவையும் அவளை தொடர்ந்து போயிருக்கும் மாலாவையும் ஏதும் செய்து விட்டால் என்ன செய்வது என்ற கவலை அவளை ஆக்ரமித்தது.

“நிலா நீ என்னை வேண்டாம் என்கிறாயா ? அல்லது காதலே வேண்டாம் என விலக நினைத்து உள்ளுக்குள் காதலை வைத்துக்கொண்டு வெளியே நடித்து என்னுடன் வாக்குவாதம் செய்கிறாயா?”

பச்சையனின் கேள்வி நிலாவைத் தாக்க, முட்டுச் சுவருக்கும் மோத வரும் மாட்டிற்கும் இடையில் நிற்பது போல மாட்டிக் கொண்டு தவித்தாள்.

“ பச்சையா, ஏன் என் முன் நின்று என்னை இம்சிக்கிறாய். என்னிடமிருந்து நகர்ந்து விடு . இல்லையேல் நகர்த்தி விடுவேன்”

“ உன் காதலை பகிர்ந்து கொடு, மகிழ்ந்து போவேன் நான்”

அதே சமயம் மாலாவிற்கு வசந்தியிடமிருந்து தகவல் போக, அவள் சுதாரித்து எழுந்து இவர்கள் இருவரும் பேசி கொண்டு இருந்த இடத்திற்கு அருகில் , அதாவது பச்சையனுக்கு பின்னால் இருந்த ஒரு மரபெஞ்சில் உட்கார்ந்தாள்.

பச்சையனிடம் பேசிக்கொண்டே நிலா தன் போனை பார்க்க, அதில் வந்த செய்தி கண்டு அதிர்ந்தாள். தன் கண்ணை மறைத்த காதலை விலக்கி, விமலாவை நினைத்து பரிதாபப்பட்டாள்.

கோபத்தில் தன்னை மறந்தாள். பச்சையனிடம் பேசி வாங்க வேண்டிய விசயத்தை ஏசி வாங்க நினைத்தாள். விமலா பச்சையனை காதலிப்பதாக சொல்லி நடித்தது தன்னை காப்பாற்றதான் என அறிந்து நிலாமகள் அதிர்ச்சி அடைந்தாள்.

“ பச்சையா , உண்மையில் உன் மேல் ஈர்ப்பால் எனக்கு காதல் வந்தது எதிர்பாராதவிதமானது. உன்னால் நான் பட்ட அவதி சொல்ல முடியாதது. ஏன் என்னை வதைக்கின்றாய் ? உன்னால் நான் நட்புக்கும், காதலுக்கும் இடையே தொங்கி கொண்டு இருக்கின்றேன். மாய வலை போல காதல் என்னை பின்னிக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. நான் என்ன செய்ய ? விமலா அந்த பக்கம் , நீ இந்த பக்கம் என இருதலைக்கொள்ளி எறும்பாய் தவிக்கின்றேன் நான்.”

நிலா மகள் பேசிகொண்டு இருக்கும் போதே பச்சையன் முகத்தை பார்க்க அவன் முகம் ஒரு நொடியில் மாறி மறுபடி இயல்பு நிலைக்கு வந்ததை கவனித்தாள்.

“ விமலாவிற்கு என்ன ஆயிற்று ? ஏதாவது பிரச்சனையா ?”

பச்சையன் இப்படி கேட்டவுடன் நிலாமகளுக்கு கோபம் எல்லை தாண்டியது. பிள்ளையை தொட்டிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு அது அலறியவுடன் யார் தள்ளியது என கேட்டது போல இருந்தது பச்சையன் கேட்ட கேள்வி.

இவர்கள் பேசியதை கேட்டுக்கொண்டிருந்த மாலாவும் . வசந்தியும் பயப்பட ஆரம்பித்தார்கள். நிலா மகள் அதிக கோபப்பட்டால் பச்சையன் ஏதாவது செய்து விடுவானே என்று கவலைப்பட்டார்கள். வசந்தி நிலாமகளுக்கு ‘ பொறுமை , பொறுமை , கவனம் ‘ என செய்தி அனுப்ப அவள் அதை கண்டுகொண்டதாக இல்லை. மாலா ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதைத் தடுக்கும் எண்ணத்தில் எழுந்து நின்றாள்.

“ நீ யார் ? என் தோழியை என்ன செய்தாய் ? என் மீது காதல் என்றால் ஏன் ஓடி ஒளிந்தாய் ? விமலா ஏன் இடையில் புகுந்து உன்னை காதலிப்பதாக குழப்பினாள் ? அவளுக்கும் உனக்கும் என்ன பிரச்சனை ? ஊர் பெயர் தெரியாத உன்னை காதலித்தது என் தப்பா ? நீ யார் எங்கள் நட்புக்குள் குழப்பத்தை உண்டு பண்ண ? “

ஆவேசப்பட்ட நிலா எழுந்து நின்றாள் பச்சையனும் எழுந்து நின்றான். கோபத்தில் அவன் முகத்தில் சற்று பச்சை கூடியது போல இருந்தது. அவன் பேச முற்படுவதற்குள் நிலா மகள் அந்த கேள்வியை கேட்டாள்.

“ நீ யார் ? மனிதனா இல்லை வேறு யாருமா ? ஏதாவது கருப்பு மந்திரம் கற்றவனா ? சொல்லுய்யா , சொல்லு “

பச்சையன் சற்றே கம்பீரமாய், அதே சமயம் உறுதியாய் சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டு அனைவரும் அதிர்ந்தனர். நிலா மகளுக்கு மயக்கமே வரும்போல இருந்தது.

அவன் சொன்னது இதுதான்…

“ நான் இந்த பூமியை சேர்ந்தவன் இல்லை “

அப்படி என்றால் மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் இல்லையா ? அதையும் தாண்டி………..?

காத்திருங்கள் காதலோடு……எதிர்பார்ப்போடு

இனி…….
 
Top