எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பா. ஷபானாவின் சிறுகதைகள் - 10

Fa.Shafana

Moderator
மார்ச் 08
_____________


"அடியே அராத்து என்ன பண்ணி வெச்சுருக்க?"

"ஏன்? என்ன பண்ணினேன்?"

"என் போஸ்ட்க்கு என்ன கமெண்ட் போட்டு வெச்சிருக்க? ஆளாளுக்கு ஹா ஹா ரியாக்ஷன், ஹார்ட்னு பறக்க விட்டிருக்காங்க"

"ஈஈஈஈஈ" என்று கிண்டலாக சிரித்து,
"நொட் ஒன்லி யுவ போஸ்ட் அத்தான், என் டைம்லைன்ல கூட அதைத்தான் போட்டு வெச்சிருக்கேன்" என்றாள் அவள்.

"உன்ன.." என்றவன் அவளது முகநூல் கணக்கை ஆராய அத்தனை அத்தனை பின்னூட்டங்களும், விருப்பங்களும், இதயங்களும்.

"காலைலயே நான் போட்ட போஸ்ட். நீங்க தான் லேட், பார்க்கவே இல்லை. அதான் உங்க போஸ்டுக்கு கீழ இதையே கமெண்ட் பண்ணினேன்" என்றாள் அவனைப் பாராமலே தன் வேலையைத் தொடர்ந்து கொண்டே.

"காலைல இருந்து ஆபீஸ்ல வேலை, ஃபோன் எடுக்க டைம் கிடைக்கவே இல்லை. கிடைச்ச கேப்ல வுமன்ஸ் டே விஷ் ஒன்று போட்டுட்டு ஆஃப் லைன் போய்ட்டேன். இப்போ பார்த்தா நீ சம்பவம் பண்ணி வெச்சுருக்க"

"சிறப்பான சம்பவம்னு சொல்லுங்க அத்தான்"
என்றவள் இரவுணவு தயாரிக்கும் வேலையில் மும்முரமாகிவிட,

அவளது பதிவை மீண்டும் ஒரு முறை வாசித்துக் கொண்டே சென்று தங்களது அறையில் கட்டிலில் சாய்ந்தான்.

'மங்கையராய் பிறப்பதற்கே..'

'அக்கினிச் சிறகே..'

'சிங்கப் பெண்ணே..'

'சாதிக்கப் பிறந்தவளே..'

இதெல்லாம் தேவையே இல்லை எங்களுக்கு. சக மனிதப் பிறவியாக எங்களை மதியுங்கள், ஆதரியுங்கள், அரவணைத்துக் கொள்ளுங்கள்,
வாழ விடுங்கள்!

இவற்றை எல்லாம் பார்த்துக் கேட்டு மகிழ்ந்து சிலாகித்த காலம் மாறி உண்மை புலப்பட்டு மங்கையருக்கு நடக்கும் அடக்குமுறைகளும் வன்முறைகளும் எங்களுக்குள்ளேயே பேசப்படும் காலமிது!

ஆறு அறுபதென்ற வயது வித்தியாசம் சிறிதுமின்றி
பெண்ணென்ற ஒற்றைக்
காரணத்தினால் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றனர்!

பெற்ற தாயோ பெற்றடுத்த மகளோ யாராயினும் பெண்ணென்றால் எனக்கு அடங்கியே நீ என்ற அடக்குமுறைக்குள அமிழ்த்தப்படுகின்றனர்!

தாரமென்ற தகுதியன்றி வேறெதுவுமில்லை உனக்கென்று ஒடுக்கவும்படுகின்றனர்!

ஆண்களால் மட்டுமல்ல சக பெண்களாலேயே
வீட்டிலும், வெளியிடங்களிலும்,
வேலை இடங்களிலும்
அநீதி இழைக்கப்படகின்றனர்!

இன்றளவும் இத்தனையும் நடந்து கொண்டேயிருக்க..

சமூக ஊடகங்களிலும், வலைத்தளங்களிலும் இன்னபிற இடங்களிலும் மட்டும் போற்றப்படும் பெண்மை தேவையில்லை இங்கே!

அவை கடந்து உங்களை சூழவுள்ள உங்களை சார்ந்துள்ள பெண்களை மதியுங்கள்.. போற்றுங்கள்..
கொண்டாடுங்கள்!

அப்படி ஒரு நாள் வரும் வரை இது ஒரு மார்ச் எட்டு என்ற சாதாரண நாள் மட்டுமே!

முடிந்தால் உங்கள் மகளிரைக் கொண்டாடுங்கள்
மகளிர் தினத்தையல்ல!

என்றிருந்தது அவளது முகநூல் பதிவு. அதற்குக் கீழே பல பின்னூட்டங்களும் வித்தியாசமான கோணத்தில் இருந்த அவளது பதிவுக்கு வாழ்த்துகளும் இருக்க
அதிலே மூழ்கி விட்டவனை சற்று நேரத்தில் கலைத்தது அவளது குரல்.

"நான் சொன்னது சரி தானே அத்தான்? இப்போல்லாம் பெண்கள் என்னன்னவோ சாதிக்கிறாங்க தான் இல்லைன்னு சொல்ல முடியாது ஆனாலும் ஐந்துல இருந்து பதினைந்து வீதமான பெண்கள் தானே சாதிக்கிறதும் கொண்டாடப்படுறதும்?

ஏதாவது செய்து முன்னேறலாம்னு நினைச்சா கூட அதுக்கான சப்போர்ட் கிடைக்குறதும் இல்லை. அதெல்லாம் கடந்து சாதிச்சாலும் சரியான அங்கீகாரம் கிடைக்குறதும் இல்லையே" என்றாள்.

"ம்ம்.." என்று ஆமோதிப்பாக தலையசைத்தவன் நிமிர்ந்து அவளைப் பார்த்து,

"சரி.. இந்த மேடம் என்ன சாதிச்சிருக்கீங்க?" என்றான் அவளை மேலும் சீண்டிப் பேச வைக்கவென.

"போய்யா யோவ் உங்க கூட குப்ப கொட்டுறதே பெரிய சாதனை தான்" என்று அவளும் பதிலுக்குக் கூற

"கொழுப்புடி உனக்கு" என்றவன் அவளை இழுத்து தன் அணைப்புக்குள் இருத்தினான். அந்த அணைப்புக்குள் அடங்கியவள், திரும்பி அவனது முகம் பார்த்து,

"நான் சாதிச்சவ இல்லை அந்த கேட்டகிரில வர மாட்டேன் ஆனா கொண்டாடப்படுறவ. என்னை என் இயல்பு மாறாம இருக்க வெச்சு, நான் எது செய்தாலும் சப்போர்ட் பண்ணி, என்னை உங்களுக்கானவளா கொண்டாடுறீங்கல்ல அப்போ நான் கொண்டாடப்படுறவ தானே அத்தான்? இந்த அங்கீகாரம் கூட இல்லாத பலபேர் இங்க இருக்காங்க தானே? அங்கீகாரம் என்ன! தான் நினைக்கிறத பேசவே வாய்ப்பு இல்லாம இருக்காங்களே" என்றாள் தன் கண்களை அவன் கண்களுடன் கலக்க விட்டு.

அலைபாயும் அவள் விழிகளில் ஈரத்தைக் கண்டவன்,

"என்னடா இமோஷனல் ஆகிட்ட?" என்று கேட்க,

"நான் சொன்னது உண்மை அத்தான். இங்க நிறைய பெண்களுக்கு அவங்களுக்கான அங்கீகாரமே கிடைக்குறதில்லை. எனக்கு அது கிடைச்சுட்டதால நான் அதைப் பற்றி யோசிக்காம, பேசாம இருக்க முடியுமா?

நிறைய பேர் ரேப், அப்யூஸ் பற்றி மட்டுமே பேசுறாங்க டொமெஸ்டிக் வயலன்ஸ் (domestic violations) பற்றி பேசுறதென்ன அதை யோசிக்கிறது கூட இல்லையே.

வயலன்ஸ்னா அடிச்சு, உதைச்சு கொடுமைப்படுத்துறது மட்டும் இல்லை. வார்த்தையால காயப்படுத்தி கஷ்டப்படுத்துறதும் வயலன்ஸ் தான்.

ஒரு பொண்ண அடக்கி ஆள நினைச்சு அவள கட்டுக்குள்ள வெச்சு அவ எது செஞ்சாலும் தப்பு, சிரிச்சுப் பேசினாலும் கூட தப்புன்னு சொல்லி அவளை அடக்கி வெச்சு கொடுமைப்படுத்துறாங்களா இல்லையா?

அதெல்லாம் வயலன்ஸ் தானே?

நம்ம பக்கத்து வீட்டுப் பொண்ணு இருக்கால்ல அவள அவங்க அப்பா, அண்ணா எல்லாரும் சேர்ந்து காலேஜ் போக விடாம பண்ணிட்டாங்களாம்.

பெரிய படிப்பு படிச்சி என்ன செய்ய? வேலைக்குப் போய் நீ சம்பாதிச்சு தான் நாங்க காலம் தள்ளணுமான்னு கேட்டு அவளை வீட்டுக்குள்ள முடக்கிட்டு, கொஞ்சம் நாள் போக கல்யாணம் பண்ணி வெச்சுருக்காங்க.

இப்போ அவ ஹஸ்பண்ட் அவளுக்கான தேவைக்கு கூட பணம் கொடுக்குறதில்லையாம். வீட்டுல சும்மா இருக்குற உனக்கெல்லாம் பணத்தோட அருமை தெரியுமா? நீ உழைச்சா தான் அந்த கஷ்டம் தெரியும்னு திட்டுவாராம்.

பசங்களோட தேவைக்கு கூட பணம் கேட்க அவ்வளவு பயப்படுவா.

முன் வீட்டு ஆன்ட்டி இருக்காங்கல்ல? அவங்க எடுக்குற பென்ஷன் பணத்த முழுக்க அவங்க மகன் வாங்கி வெச்சுக்குவாராம். ஆன்ட்டிக்கு ஏதாவது மருந்து எடுக்கணும்னா கூட அவர் கிட்ட கேட்டு தான் வாங்கணுமாம், அதுவும் கணக்குப் பார்த்து தான் கொடுப்பாராம்.
இதுக்கு முன்ன அவங்க ஹஸ்பண்ட் இருக்கும் போதும் இதே போல தான் நடந்திருக்கு.

சாலரி முழுக்க அந்த அங்கிள் வாங்கி வெச்சுப்பாராம். இவங்க ஒவ்வொரு தேவையா சொல்லி பணம் கேட்டு வாங்கணுமாம். அதனால எனக்கு இது பழகிடுச்சுன்னு ஒருநாள் சொல்லி வருத்தப்பட்டாங்க.

இப்படி இருக்கு இங்க பல பெண்களோட வாழ்க்கை, இதுல எங்க இருந்து ஹாப்பி வுமன்ஸ் டே?" என்று அவள் கேள்வியாக, கேலியா நிறுத்தினாலும் அவளது கூற்றுகளில் மறைந்திருந்த வலியை அவனால் உணர முடிந்தது.

"நீங்க தனியா எனக்கு விஷ் பண்ணி இருந்தா நான் தேங்க்ஸ் சொல்லி இருப்பேன் ஏன் லவ் யூன்னு கூட சொல்லி இருப்பேன்.

ஏன்னா என்னை சந்தோஷமா வெச்சிருக்குற நீங்க அதை சொல்லலாம் தப்பில்லை. நானும் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லலாம். அதுக்கு நீங்க தகுதியானவர் தான்"
என்று குறும்பு செய்தவள்,

"ஆனா நீங்க பொத்தாம் பொதுவா உங்க டைம்லைன்ல போட்ட போஸ்ட் உங்க ஃப்ரெண்ட்ஸ், கூட வேலை செய்ற பெண்கள் எல்லாருக்கும் தானே? அவங்க நிஜமாவே ஹாப்பியா இருப்பாங்களா? அந்த வாழ்த்தை ஏத்துக்குற மனநிலை இருக்குமா?
பெர்த் டே, வெட்டிங் டே விஷ் மாதிரி இது தனிப்பட்ட ஒருவருக்கான வாழ்த்து இல்லையேன்னு ஒரு யோசனை வந்தது.

சரி ஒரு மாற்றுக் கருத்தா என்னோடது இருக்கட்டும், பலரை யோசிக்க வைக்கட்டும்னு தான் உங்க போஸ்ட்டுக்கு இதை கமெண்ட்டா போட்டேன்.

வாழ்த்தவே வேண்டாம்னு சொல்லல்லை நிதர்சனத்தை கொஞ்சம் புரிஞ்சுக்கணும்னு சொல்றேன்.

என் கமெண்ட்டுக்கு ஹா ஹா ரியாக்ஷன் கூட வந்திருக்கு பாருங்க. அது ஏன்? என்னை கிண்டல் பண்ணவா இல்லை உங்களை சீண்டிவிடவான்னு தெரியல்லை. ஆனா இப்படி ஒன்றைப் பார்த்து சிரிச்சு வைக்கக் கூட இங்க ஆள் இருக்குன்னு மட்டும் புரியுது தானே?" என்றாள்.

"புத்திசாலி பொண்டாட்டி.." என்று அவள் மூக்கைப் பிடித்து ஆட்டியவன்,

"இதெல்லாம் ஓகே. அதென்ன ஆறு அறுபது வயது தெரியாமன்னு சொல்லி இருக்க. பெண்கள் மீதான வன்முறைகள அடிக்கடி கேள்விப்படுறோம் அதுவும் ஆறு வயசு பத்து வயசுன்னு குழந்தைகள் பற்றி நிறைய கொடூரமான செய்திகள் வருது தான். ஆனா அறுபது வயசு பாட்டிய அப்யூஸ் பண்ணினத நீ பார்த்தியா?" என்றான் அவன்.

அவனுக்கு சிறு பதற்றம் எங்கே இல்லாத ஒன்றை அவள் கூறி எங்காவது எதையாவது இழுத்துக் கொள்வாளோ என்று.

"நான் பார்க்கல்லை அத்தான். பார்த்திருந்தா அந்த வயசுல அதை தாங்கி இருப்பேனான்னு தெரியாது" என்க

"என்னடா சொல்ற..?" என்றவனுக்குள் எழுந்த அதிர்ச்சி அவன் குரலில் பிரதிபலித்தது.

ஆமோதிப்பாக தலையசைத்தவள்,

"எங்க வீட்டுல இருந்து கொஞ்சம் தூரம் அவங்க வீடு. ரிட்டயர் டீச்சர் அவங்க. மகன் வீட்டுல தான் இருந்தாங்க. அறுபது இல்லை எழுபது, எழுபத்தைந்து கடந்த வயசு அவங்களுக்குன்னு என் யூகம்.

வயசானவங்க மட்டும் இல்லை கொஞ்சம் மனநிலையும் பாதிக்கப்பட்டவங்க. ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு விதமா நடந்துக்குவாங்க. பென்ஷன் பணத்த வெச்சுட்டு ரோட்ல இருக்குற நாய்களுக்கு பால் ஊத்தி கொடுப்பாங்க. அவங்க வீட்டுல இருந்து எங்க வீட்டுப் பக்கத்துல இருக்குற நாய்க்கு பால் ஊத்த மெனக்கெட்டு நடந்து வருவாங்க அதனால அவங்களை எனக்கு நல்லாத் தெரியும்.

ஒரு நாள் அவங்களோட மகன், மருமகள் பேரப்பிள்ளை எல்லாரும் வெளியூர் போய் இருந்தாங்களாம். நைட் அவங்க தனியா இருக்குறது தெரிஞ்சு, குடிச்சிட்டு வந்த ஒருத்தன் அவங்க தூங்கும் போது அவங்களை அப்யூஸ் பண்ணி இருக்கான்.
அடுத்த நாள் காலைல வந்த அவங்களோட மகன் அவங்க இருந்த கோலத்த பார்த்து தான் தெரியும்.

அவங்க கதவை சரியா மூடாம விட்டாங்களா, இல்ல அந்த குடிகாரன் கதவை உடைச்சு உள்ள போனானா என்னன்னு தெரியல்லை. நான் அதை எல்லாம் விசாரிக்கவும் இல்லை.

அவ்வளவு ஏன்? அவங்களை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனாங்களான்னு கூட நான் விசாரிக்கல்லை.

அந்த சம்பவத்தோட அவங்களோட நடமாட்டம் குறைஞ்சது, முன்ன இருந்தத விட மனநலம் பாதிக்கப்பட்டுச்சு. அடுத்த சில மாதங்கள்ல இறந்தே போய்ட்டாங்க.

என் மனச ரொம்பவே பாதிச்ச ஒரு விஷயம் அது.
அதுக்குப் பிறகு வயசானவங்க யாராவது தனியா இருக்குறதா கேள்விப்பட்டாலே உள்ளுக்குள்ள உதறும் எனக்கு" என்றவளுக்கு தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது.

"என்னால ஜீரணிக்கவே முடியல்லை.." என்று அவன் கூற

"உடம்பு நலிந்து மனம் மரத்துப் போன அந்த வயசானவங்க கிட்ட என்ன சுகத்தை கண்டிருப்பான் அவன்? ஆளாளுக்கு கை ரேகை மாறுபடுமெங்குறத போல ஒவ்வொரு பொண்ணுக் கிட்டயும் புதுசா ஏதாவது தேடுறானுங்களா இவனுங்க?" என்றவளது குரலில் அத்தனை நேரம் இருந்த நெகிழ்ச்சி மறைந்து கோபம் எட்டிப் பார்த்தது.

"கூல் டா.. யாரு வந்து என்ன பேசினாலும் தனி மனித ஒழுக்கம், கட்டுப்பாடு இல்லாம இதெல்லாம் மாறவே மாறாது. மதம், இனம், கடந்த பொதுவான பிரச்சனை இது" என்று அவன் கூற,

சட்டென்று அவனை நிமிர்ந்து ஏறிட்டவள்,
"இதுன்னா..? எது?" என்றாள்.

"இதுன்னா.. இதெல்லாம் தான். இப்போ நீ சொன்ன எல்லாமே தான். டொமெஸ்டிக் வயலன்ஸ் உட்பட இதெல்லாம் மதம், இனம் கடந்த சமூக ரீதியான பிரச்சினை தான். அவங்கவங்க உணர்ந்து திருந்தும், மாறணும்" என்றவனை இடையிட்டு

"க்கும்.. மாறிட்டாலும். ஜென்ஸ் மட்டுமில்ல சில லேடீஸ் கூட இருக்காங்க.

உங்க அம்மா வீட்டுக்குப் பக்கத்து வீட்டு அக்கா அவங்க வீட்டுல வேலை செய்றவங்கள நடத்துறது ரொம்ப கொடூரமா இருக்கும்.

அவங்க ஆஃபிஸ்ல கூட அப்படித்தானாம். அவங்களுக்கு கீழ வேலை பார்க்குறவங்கள தாறுமாறாக பேசி, திட்டி வைப்பாங்களாம் அத்தை சொன்னாங்க" என்றவளுக்கு ஆமோதிப்பாக,

"அவங்க ஸ்கூல் படிக்கும் போதே அப்படித்தான். யார் கிட்ட என்ன பேசணும், எப்படிப் பேசணும், எப்படி நடந்துக்கணும்னு கூட தெரியாது" என்றான்.

"பூவைப் போல மென்மையான குணம் கொண்ட பெண்கள்னு யாராவது ஆரம்பிச்சா அவங்களை முன்னாடி கொண்டு போய் நிறுத்தலாம்னு சொல்றீங்க" என்று கலகலவென சிரிக்க அவனையும் அந்த சிரிப்பு தொற்றிக்கொண்டது.

"நாம எங்கேயோ நடக்குறத பற்றி பேசிட்டு இருக்கோம். இன்னைக்கு என் போஸ்ட்க்கு ஹார்ட் விட்டு பாசிடிவ் கமெண்ட் போட்ட உங்க தம்பி அன்னைக்கு உங்க பண்ணின சம்பவம் தெரியுமா?" என்றாள்.

"ஏன்? என்னாச்சு?" என்றான் நெற்றி சுருக்கி.

"உங்க தங்கச்சி எழுதின கவிதை ஒன்றைப் பார்த்து, யாரை நினைச்சு இதை எழுதின? யார லவ் பண்றன்னு கேட்டு திட்டி இருக்கார்" என்று கூறிக் கொண்டே அவள் எழுந்து நிற்க,

"எதே.. லூசா அவன்? எதுக்கு அப்படி ஒரு கேள்வி கேட்டானாம்?"

"ம்ம்.. அண்ணன் தங்கச்சிய பொத்தி வெச்சு வளர்க்குறாராம்" என்று கூறிவிட்டு அவள் வெளியே செல்ல

"பைத்தியமா அவன்? நாம அவளை நம்பாம வேற யாரு நம்புவாங்க. அவன.." என்றவன் உடனே தன் தம்பியை அழைத்திருந்தான்.

"நம்ம தங்கச்சிய, அவளோட திறமைய நாம தான் எங்கரேஜ் (encourage) பண்ணணும் தம்பி" என்றவனின் குரலில் இளையவனுக்கு
உதறல் எடுத்தது.

'கூட்டுக் களவாணிங்க போட்டுக் கொடுத்து கோர்த்து விட்டுட்டாங்களா?' என்றெண்ணியவன்,

"அது வந்து அண்ணா.. நான் சும்மா விளையாட்டுக்கு.." என்று வார்த்தைகளைத் தேடி தடுமாற

"விளையாட்டுக்கு சொல்லி இருந்தா இந்தத் தடுமாற்றம் இருக்காது தம்பி. நீ சீரியஸா தான் சொல்லி இருக்க. உன் கண்டிப்பு அவளோட திறமைய முடக்கிடக் கூடாது ஞாபகம் இருக்கட்டும்.

தப்பு செய்தா மட்டும் கண்டிக்கப் பழகு அது தங்கச்சியா இருந்தா மட்டும் இல்லை, உனக்கு மனைவியா வர்றவளா இருந்தாலும் சரி, உன் பிள்ளைகளா இருந்தாலும் சரி. தேவை இல்லாத கண்டிப்பும் கட்டுப்பாடும் உறவுகளுக்கு இடைல சங்கடத்தையும் மனக் கசப்பையும் கொண்டு வரும்" என்றான் கடுமையாக.

"சாரி அண்ணா. இனிமேல் அப்படி எதுவும் பேச மாட்டேன்" என்று அவன் குரல் தேய்ந்து வந்தது.

"இந்த மன்னிப்ப தங்கச்சி கிட்ட கேளு" என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

"என்ன சார் லெக்சர் முடிஞ்சதா? சாப்பிடலாமா?" என்று கேட்டுக் கொண்டே உணவுப் பதார்த்தங்களை மேசையில் எடுத்து வைக்க, கைகளைக் கழுவிக் கொண்டு வந்து அமர்ந்தவன்

"நீ ஏன் அன்னைக்கே இதை சொல்லல. அப்போவே தம்பிக்கிட்ட பேசி இருப்பேனே" என்றவனின் அலைபேசியில் குறுஞ்செய்தி வந்த சமிக்ஞை ஒலி.

அவளது பதிவைப் பார்த்து விட்டு பாராட்டி வாழ்த்து சொல்லி வந்திருந்த குறுஞ்செய்தியில்,

அவள், அவளது இயல்பு மாறாமல் இருக்க உறுதுணையாக இருந்து அவளது மகிழ்ச்சியில் உவகை அடையும் அவனுக்கும் சேர்த்தே வாழ்த்தி வந்திருந்த அந்தக் குறுஞ்செய்தி இறுதியில்,

'தன்னவளை மகிழ்வித்து மகிழும், கொண்டவளைக் கொண்டாடும் கேள்வனுக்கும் வாழ்த்துகள்' என்று முடிந்திருந்தது.

 
Last edited:

Fa.Shafana

Moderator
(வாழ்த்து சொல்றது ஒரு குத்தமான்னு கேட்டு யாரும் கட்டய தூக்கிட்டு வராதீங்கப்பா. நானே பாவம்)

மகளிர் தின வாழ்த்துகளையும் சமகால நிகழ்வுகளையும் மனதில் வைத்து எழுதிய கதை இது.
வாழ்த்துப் பரிமாறிக் கொள்வதில் முரண்படுபவள் இல்லை நான். ஆனால் இது போன்ற வேறு கோணத்தில் யோசிப்பவள்.

கதையை வாசித்து விட்டு உங்கள கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அன்பர்களே!
=========

எனது பிரத்தியேக முகநூல் குழுவில் இணைந்து கொள்ள 👇🏻


=============

மேலும் என் சிறுகதைகள் வாசிக்க :

 
Last edited:
Top