எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வரமாக நீ 12

S.Theeba

Moderator
வரம்12

வெகு கவனமாகப் பராமரிக்கப்பட்டிருந்த செடிகளும் கொடிகளும், அவற்றில் பல வண்ணங்களில் பூத்து நறுமணம் வீசிய மலர்களும் அந்தத் தோட்டத்தை ரம்மியமாக வைத்திருந்தன. அளவான இடைவெளி விட்டு நேர்த்தியான முறையில் தோட்டம் பராமரிக்கப்பட்டிருந்தது. பூச் செடிகளுக்கு இடையில் பரந்து விரிந்து இளந்தளிர்களும் பூவுமாக மாமரம் ஒன்று நின்றிருந்தது. அந்த மாமரத்தின் கீழே அலங்கார வேலைப்பாடுகளுடன் இருவர் அமரக்கூடிய வெள்ளை நிற ஊஞ்சல் ஒன்றும் காணப்பட்டது. அந்த மாமரத்தின் குளிர்மையில், வீசும் தென்றல் காற்றில் ஊஞ்சலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பதே ஒரு சுகமான அனுபவம்.
அந்தத் தோட்டத்துக்கு நடுவே சிறிய பாதை ஒன்று சென்றது. அப் பாதை முடியும் இடத்தில் வெள்ளை நிறத்தில் மிகப் பெரிய வீடு இல்லையில்லை மாளிகை அமைந்திருந்தது. அந்த மாளிகையை பார்த்துப் பார்த்து இரசனையுடன் கட்டியிருந்தார் ஈஸ்வர் எனப்படும் கமலேஸ்வர். அவர் வேறு யாருமில்லை, யதுநந்தனின் தந்தைதான்.
ஈஸ்வரின் பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பூம்பொழில் எனப்படும் விவசாயக் கிராமம். அவரது மூதாதையர் வழிவழியாக விவசாயத்தையே தொழிலாகக் கொண்டவர்கள். அந்த ஊரில் பெரிய தனக்காரக் குடும்பம் என்றே அவர்களை அழைப்பார்கள். அந்த அளவுக்கு பெரும் செல்வாக்கோடும் செல்வச் செழிப்போடும் வாழ்பவர்கள்.
அவர்கள் குடும்பத்தில் விவசாயத்தை விடுத்து வேறு தொழில் ஆரம்பிக்கப்போவதாகக் கிளம்பினார் ஈஸ்வர். பெரியவர்களுக்கு வருத்தம் இருந்தாலும் அவரது ஆசைக்கு அணை போடாததுடன் அதற்கான பொருளாதார உதவியையும் செய்தார்கள்.
சென்னை வந்த ஈஸ்வர் சிறிதளவில் கொன்றக்சன் கம்பனி ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தார்.
அவருக்கு சொந்தத்திலேயே பேசி சந்திரமதியைத் திருமணம் செய்து கொடுத்தார்கள். சந்திரமதி மிகவும் சாந்தமானவர். பிள்ளைகளைக் கூட அதட்டிப் பேசமாட்டார். அவர்களுக்கு யதுநந்தன், பானுமதி என இரண்டு பிள்ளைகள்.
யதுநந்தன் பிறந்ததும் ஈஸ்வரின் தொழில் முன்னேறியது. நந்தன் கொன்றக்சன் என்ற மிகப்பெரிய நிறுவனத்தை உருவாக்கினார்.

யதுநந்தன் லண்டனில் படித்துவிட்டு வந்ததும் தொழிலை அவனிடம் ஒப்படைத்தார் ஈஸ்வர். யதுநந்தன் தொழிலை மிகச் சிறப்பாக நடத்தியதைப் பார்த்த பின்னர் தொழிலை முழுமையாக அவனிடம் ஒப்படைத்துவிட்டு ஆலோசகராக மட்டும் தன் பணியைச் சுருக்கிக் கொண்டார். அவன் தன் தந்தை ஆரம்பித்த தொழிலை முன்னேற்றியதோடு நந்தன் இம்போர்ட் அன்ட் எக்ஸ்போர்ட் நிறுவனத்தையும் தொடங்கி, இன்று அத்துறையில் முதலிடத்தையும் பிடித்துள்ளான்.
"சந்திரா... சந்திரா..." என்று அழைத்தபடி வந்த ஈஸ்வர் வரவேற்பறை சோஃபாவில் வந்தமர்ந்தார். அன்றைய பத்திரிகையை எடுத்து வாசிக்கத் தொடங்கினார்.
அழகிய புன்னகையுடன் அவருக்கு காஃபி எடுத்துவந்து கொடுத்தார் சந்திரமதி. வீட்டில் வேலை செய்வதற்காக பல பேர் இருந்தபோதும் தன் குடும்பத்திற்காகத் தானே தன் கையால் சமைக்க வேண்டும் என்பது அவரது ஆசை.
காஃபியை வாங்கிக் குடித்தவர் "சந்திரா.. உன் கைப்பக்குவத்திற்கு இணை எதுவுமில்லை. என்னை உன் அடிமையாய் வைத்திருப்பதே இந்தக் காஃபிதான்மா..." என்றபடி சப்பு கொட்டிக் குடித்தார். மலர்ந்து சிரித்தபடி அவர் அருகில் அமர்ந்து அவர் காஃபி குடிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தார் சந்திரமதி.
"என்ன சந்திராம்மா.. இந்த மாமாவ சைட் அடிக்கிறியா.."
என்று கண்ணடித்துக் கேட்டார் ஈஸ்வர்.
"பேரப்பிள்ளைகளைப் பார்த்தபிறகு பேசுற பேச்சைப் பாருங்க. சும்மா இருங்க.."
"ஏன்மா.. பேரப்பிள்ளைகள் வந்திற்றா பொண்டாட்டி மேல வச்ச லவ் குறைஞ்சிடும்னு யார் சொன்னது. காதலுக்கு வயதேயில்லை. நீ எனக்கு கிடைச்ச பொக்கிஷம். உன்னை என் ஆயுசுக்கும் லவ் பண்ணிக்கிட்டே இருப்பேன்மா. லவ் யூ டா.." என்று சொல்லி அவரின் கன்னத்தைக் கிள்ளினார்.
வெட்கத்தில் கன்னம் சிவந்தவர்
"போதும்.. பேசாம காஃபியை குடிங்க.."
என்று சொல்லி விட்டு எழுந்து சமையலறைக்குள் சென்று விட்டார்.

அந்த மாளிகையின் இரண்டாவது மாடியில் இருந்த பிரமாண்டமான அறையொன்றில் தூக்கத்தில் புரண்டு படுத்தான் யதுநந்தன். அப்போதுதான் ஆழ்ந்த தூக்கத்துக்குப் போயிருந்தான். இரவு முழுவதும் தூக்கமின்றித் தவித்திருந்தான். காரணமின்றி மனதிற்குள் ஏதோ ஒரு பதட்டம் ஏற்படுவது போல் உணர்ந்தான். அருகில் உறங்கிக் கொண்டிருந்த மகளை மெல்லிய விளக்கொளியில் பார்த்துக் கொண்டிருந்தான். அவளது தலையை ஆதூரத்துடன் தடவி விட்டான்.
"இது எனக்குத் தேவையற்ற பாரம். இதைத் தூக்கிச் சுமக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை" என்று பிஞ்சுக் குழந்தையை இவன் கைகளில் வைத்துவிட்டு சென்றவளை நினைக்கும்போது இப்போதும் அவனுக்கு மனதில் அருவருப்பான உணர்வே தோன்றியது.

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தானோ தன்னையறியாமல் மீண்டும் உறங்கியிருந்தான்.
காலையில் கதவு தட்டப்பட்ட சத்தத்தில் திடுக்கிட்டு கண்திறந்தவன் மணியைப் பார்க்க அது ஏழு எனக் காட்டியது. எழுந்து சென்று கதவைத் திறந்தான். அங்கே புன்னகைத்தபடி நின்றிருந்தாள் பானுமதி
"குட்மோர்னிங் அண்ணா.."
"குட்மோர்னிங் பானுக்குட்டி.."
"ஏழு மணியாகியும் நீங்க எழுந்துக்கலையா.. அதுதான் கதவைத் தட்டினேன்.."
"இற்ஸ் ஓகே டா.. அசந்து தூங்கிட்டேன்"
பானுமதி உள்ளே சென்று இலக்கியாவை எழுப்பினாள். யதுநந்தனும் உடையை மாற்றி விட்டு தனது உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்றான்.

எட்டரை மணிக்கு அலுவலகம் செல்ல ஆயத்தமாகி கீழே வந்தவன் சாப்பாட்டறையில் சிரிப்பொலி கேட்கவும் அங்கே சென்றான். இலக்கியாவை மேசையில் உட்காரவைத்து சாப்பாடு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தாள் பானுமதி. சந்திரமதி அருகில் உட்கார்ந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
தன் மகளின் சிரிப்பில் தன்னையே மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவனைக் கண்டதும்
" வா நந்தும்மா... உனக்கு டிபன் எடுத்து வைக்கிறன்" என்றபடி எழுந்து அவனுக்கு உணவு பரிமாறினார் சந்திரமதி. தன் மகளுடன் பேசியபடி உணவை உண்டவன் அவளையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.
பானுமதி கர்ப்பமாக இருப்பதால் இலக்கியாவை அதிகநேரம் பார்த்துக் கொள்ள முடிவதில்லை. எனவேதான் அவளை மாலைவரை பிளே ஸ்கூலில் விட்டு பின்பு அழைத்து வருகின்றான்.

மகளை ஸ்கூலில் விட்டுவிட்டு ஆராத்யா ஹோட்டலுக்குத் தனது காரைச் செலுத்தினான். இன்று ஹோட்டல் ஆராத்யாவில் ரஷ்ய நாட்டிலிருந்து வந்துள்ளவர்களுடன் தொழில்முறை சந்திப்பொன்றிற்கு ஏற்பாடாகியிருந்தது. அவன் ஹோட்டலைச் சென்றடைந்தபோது பார்க்கிங் பகுதியிலேயே இவனுக்காகக் காத்திருந்தான் அன்பழகன். யதுநந்தனின் பெர்சனல் செகரட்டரி.
"அன்பு மீட்டிங்குக்கு எல்லாம் ரெடியா..? எல்லாமே ஃபெர்பெக்டா இருக்கணும்"
"எவ்ரிதிங்க் ஓகே சார். இன்னும் ரென் மினிட்சில் அவங்க வந்திடுவாங்க."
"குட்" என்றபடி மிடுக்கோடு நடந்து தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றான். போட்டி நிறுவனங்களுக்குத் தகவல் கசிந்து விடாது இருக்கவே இந்தச் சந்திப்பை ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தான். மீட்டிங் எதிர்பார்த்தபடி முடிவடைந்து ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடப்பட்டது. வந்தவர்களை உபசரித்து விட்டு மகிழ்ச்சியான மனநிலையுடன் புறப்பட்டான் யதுநந்தன்.
அந்தக் ஹோட்டலின் கீழ்த்தளத்தில் மிகப்பெரிய ரெஸ்டாரன்ட் இருந்தது. அன்பழகனுடன் பேசியபடி ரெஸ்டாரன்ட் வழியாக வெளியேற முயன்றான். அங்கே கேட்ட பெரும் சிரிப்பொலியில் அந்தப் பக்கம் கவனம் ஈர்க்கப்பட்டு திரும்பிப் பார்த்தான். அங்கே ஆர்ப்பாட்டமான சிரிப்புடன் மேசையில் இருந்து எழுந்து புறப்பட ஆயத்தமானவளைக் கண்டதும் திகைத்துப்போய் கால்கள் நகர மறுத்து அப்படியே நின்றுவிட்டான்.
 
Top