எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வரமாக நீ 15

S.Theeba

Moderator
வரம் 15

ஹரணி கர்ப்பமாக இருக்கும் இந்நிலையில் இனிமேலும் தாமதிப்பது நல்லதில்லை என்பதை உணர்ந்தான் யதுநந்தன். ஹரிணியைத் தான் காதலித்து கல்யாணம் செய்து கொண்டதையும் அவள் கர்ப்பமாக இருப்பதையும் கட்டாயம் தன் வீட்டிற்கு கூறிவிட வேண்டும். அத்துடன் ஹரிணியையும் அழைத்துக் கொண்டு ஊருக்குப் போய்விட வேண்டும். தனது குழந்தை இந்தியாவில் பிறக்க வேண்டும் என்று முடிவெடுத்தான். இது குறித்து ஹரிணியிடம் பேசுவதற்காகச் சென்றான்.

அவள் வைத்தியசாலை சென்று வந்ததிலிருந்து சோர்ந்து போய்க் கட்டிலில் படுத்திருந்தாள். அவள் உடல் இருக்கும் நிலையில் அசதியில் இருக்காள் என்று புரிந்து அவள் அருகில் அமர்ந்து ஆதரவாகத் தலையைக் கோதி விட்டான். அவள் கண்முழித்து அவனைப் பார்த்து புன்னகைத்தாள். இவள் இப்போது பெரியவர்கள் அருகில் இருப்பதே நல்லது. அவர்கள் இந்நேரத்தில் தேவையானதைப் பார்த்துப் பார்த்துச் செய்வார்கள் என்று நினைத்தவன், அவளிடம் தான் எடுத்த முடிவைக் கூறினான்.

அவனைச் சிறிதுநேரம் ஆழ்ந்து பார்த்தாள் ஹரிணி. மெதுவாக எழுந்து அமர்ந்தவள் அவனது கைகளைப் பற்றிக்கொண்டு
"நந்து பேபி, நமக்கு இந்த பேபி தேவையில்லை" என்றாள் சர்வசாதாரணமாக.
முதலில் அவள் சொன்னதை அவன் நம்பவில்லை. என் காதுகளில் தான் ஏதோ கோளாறு. அவள் சொன்னதை நான்தான் சரியாகப் புரிந்து கொள்ளாமல் தப்பாக யோசிக்கிறேன் என்று நினைத்தவன்,
"என்னம்மா, மயக்கமாகவே இருக்கா? அப்புறமாய் வீட்டிற்குச் சொல்வோம். நீ எதையும் யோசிக்காத. உனக்காக நான் இருக்கேன். நீ ரெஸ்ட் எடும்மா." என்றான்.
"நந்து, நான் சொன்னது உனக்குப் புரியலையா? அல்லது புரியாத மாதிரி ரியாக்ட் பண்ணுறியா?"
"என்னம்மா? என்ன விஷயம்?"
"நந்து, நமக்கு இந்த பேபி வேண்டாம். அபார்ஷன் பண்ணிடுவோம்"
அதிர்ச்சியில் எழுந்து நின்றுவிட்டான்
"ஏய், ஏய்... நீ... என்ன பேசுறாய் என்று புரிஞ்சுதான் பேசுறாயா?"
"நான் புரிஞ்சுதான் பேசுறன். நீதான் நந்து பேபி என் நிலையைப் புரியாமல் இருக்காய். எனக்கு இந்த பேபி வேண்டாம்."
"ஏன்...?" என்று தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டான்.
"என் கனவே ஒரு மாடலாக வரணும்... இந்த வேர்ல்டுல பெஸ்ட் மாடலாக வரணும் என்பதுதான். அதுக்கு என் அழகு ரொம்ப ரொம்ப முக்கியம். இப்போ இதை அப்படியே விட்டால் என் இந்தத் தட்டையான வயிறு ஊதத் தொடங்கும். இடுப்புப் பெருக்கும். சீச்சீ… என்னால் எல்லாம் அப்படி அசிங்கமாகக வயிற்றைத் தள்ளிக் கொண்டு திரிய முடியாது" என்று அருவருப்பாக முகத்தைச் சுழித்துக் கொண்டு கூறினாள்.

முதலில் அவள் சொன்னதை நம்ப முடியாமல், நம்பினாலும் அவள் சொன்னதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்து நின்றான். ஒரு பெண் தன் வயிற்றில் இருக்கும் சிசுவை… அசிங்கம் என்பதா என்று அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.
“என்ன நந்து பேபி பேசாமல் நிற்கிறாய்.. நான் சொன்னது சரிதானே நமக்கு இது இப்போதைக்குத் தேவையில்லை. ஃபைவ் இயர்ஸ் கழிச்சு பார்ப்போம். ஓகேதானே. இப்போவே ஹொஸ்பிடல் போவோம் வா பேபி” என்று அவனது கையைப் பிடித்து அழைத்தாள்.

சிறிதுநேரம் நிதானமாக இருந்தவன், மீண்டும் அவளிடம் சொல்லிப் பார்த்தான். இது நம் குழந்தை. நம் காதலுக்குக் கிடைக்கும் பரிசு. போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் என்று பலவாறு நைச்சியமாக பேசிப் பார்த்தான். ஆனால், அவளோ பிடிவாதமாகவே இருந்தாள்.

அவன் சம்மதிக்கவில்லை என்று தெரிந்ததும் ஒருநாள் அவனுக்குத் தெரியாமல் தானே அபார்ஷன் பண்ணச் சென்று விட்டாள். அவள் அதற்கெனச் சென்ற டாக்டருக்கு யதுநந்தனை நன்கு தெரியுமாதலால் அவனுக்கு அழைத்து விவரத்தைக் கூறி விட்டார். அவன் பதறியடித்து கொண்டு அங்கே சென்று அவளுடன் போராடி, அவளை வீட்டுக்கு அழைத்து வந்தான்.

மீண்டும் மீண்டும் அவளிடம் கெஞ்சிப் பார்த்தான், மிரட்டிப் பார்த்தான். எந்தப் பலனும் இல்லை. இறுதியாக இந்தக் குழந்தையைப் பெறும் வரைக்கும் தான் பொறுத்துக் கொண்டாலும் அதை வளர்ப்பது தன்னால் முடியாது என்று விட்டாள். "நான் ஆயா வேலை செய்வதற்குப் பிறக்கவில்லை. என் லைஃப் ஸ்டைலே வேறு. என் ஆம்பிஸன் கெட்டுவிடும்" என்றாள். இந்தியா செல்வோமென்றால் "அந்த நாடு எனக்கு செட்டாகாது. அங்கேயெல்லாம் என்னால் வாழ முடியாது" என்றாள்.
அவளை என்னதான் செய்வதென்று புரியாமல் ஓய்ந்து போய் விட்டான். சிவானந்த் கூட ஒருசில தடவைகள் அவளிடம் பேசிப் பார்த்தான். பலன்தான் கிடைக்கவில்லை. யதுநந்தன் தன் வாழ்க்கையை அழித்து விட்டதாகப் புலம்பத் தொடங்கிவிட்டாள். தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் கேட்டாள்.

யதுநந்தன் இறுதியாக முடிவெடுத்தான். இப்போதைக்கு அவளைக் குழந்தையைப் பெற சம்மதிக்க வைப்போம். குழந்தை பிறந்ததும் அதன் மீது கொண்ட பாசத்தில் அவள் எப்படியும் மாறிவிடுவாள் என்று நம்பினான்.

"அந்தக் குழந்தையைப் பெற்றுத் தந்துவிடு. நான் உனக்கு விவாகரத்துத் தந்து விடுகிறேன்" என்று அவளைக் கேட்டான்.
ஒருநாள் முழுவதும் யோசித்தவள் ஒருவாறு அதற்குச் சம்மதித்தாள். ஆனால், குழந்தையைப் பெற்றுத் தருவது மட்டுமே தன் வேலை. அதற்குப் பிறகு ஒரு நிமிடம் கூட அதனைப் பராமரிக்க என்னால் முடியாது என்று விட்டாள்.

அன்றிலிருந்து அந்தக் குழந்தையை ஈன்றெடுக்கும் வரை அவனை ஒருவழி பண்ணிவிட்டாள். தொட்டதுக்கெல்லாம் கோபப்பட்டாள். கையில் அகப்பட்டதையெல்லாம் போட்டு உடைத்தாள். வயிற்றை அடிக்கடிப் பார்த்துப் பார்த்து அது பெரிதாவதால் தன் அழகு கெடுவதாகப் புலம்பினாள். வெளியில் செல்லவே அசிங்கமாக இருப்பதாக அழுதாள். வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தாள்.

அவளுக்கு யார் சொல்லிப் புரிய வைப்பது. தாய்மையின் அழகு கோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காது என்று.

அவள் செய்த அழிச்சாட்டியங்களை எல்லாம் அவன் தன் குழந்தைக்காகப் பொறுத்துக் கொண்டான். சிவானந்தும் அவனுக்குத் துணையாக அவனது ஃபிளாட்டுக்கே வந்துவிட்டான். ஏனெனில், அவளைவிட்டு அசையவே யதுநந்தனால் முடியவில்லை. எங்கே அவளைக் கொஞ்சநேரம் விட்டுச் சென்றாலே குழந்தையை ஏதாவது செய்து விடுவாளோ என்று பயம் ஏற்பட்டது. எனவே, உதவிக்கென சிவானந்தும் கூடவே வந்திருந்தான்

ஒருவழியாக அவளுக்கு பிரசவ நாளும் வந்தது. அன்று அவள் பண்ணிய ஆர்ப்பாட்டம் இந்த ஜென்மத்துக்கும் போதுமடா சாமி என்றாகிவிட்டது அவனுக்கு. காலையில் தொடங்கிய பிரசவ வலி மாலைவரை நீடித்தது. அந்த நேரம் முழுவதும் அவனைத் திட்டித் தீர்த்து விட்டாள். மாலையில் ரோஜாப்பூ போன்ற அழகுடன் குட்டித் தேவதையை ஈன்றெடுத்தாள்.

குழந்தையைக் கொண்டு வந்து யதுநந்தனுக்குக் காட்டினார்கள். அதனைக் கையில் வாங்கியதும் அவனுக்கு சந்தோசத்தில் அழுகையே வந்துவிட்டது. இந்த உலகையே வென்று விட்டவன் போல உணர்ந்தான். வெண்பருத்திப் போர்வைக்குள் பூக்குவியலாய் கண்மூடிப் படுத்திருந்தாள் அவனது மகள்.

குழந்தை மிகவும் நிறை குறைவாகப் பிறந்திருந்தது. குழந்தை வயிற்றில் இருந்தபோது போதிய சத்தான உணவுகளை ஹரிணி உண்ணவில்லை. யதுநந்தன் வற்புறுத்திக் கொடுத்த உணவுகளும் குப்பைத் தொட்டிக்கே சென்றன. அதிகளவு உணவு உண்டால் தான் அதிகம் பெருத்து இன்னும் அசிங்கமாகி விடுவேன் என்று காரணமும் சொன்னாள். இதனால் குழந்தை நிறை குறைவாகப் பிறந்திருந்தது. எனவே குழந்தையை சில நாட்கள் வைத்தியசாலையிலேயே வைத்திருக்க வேண்டிய சூழல். ஹரிணியும் மிகவும் பலவீனமாக இருந்ததால் அவளுக்கும் சிகிச்சை தேவைப்பட்டது. பத்து நாட்கள் வரை தாயும் பிள்ளையும் வைத்தியசாலையிலேயே இருந்தனர். யதுநந்தனும் வைத்தியசாலையை விட்டு நகரவில்லை. சிவானந்த்தான் அவர்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுத்தான்.

குழந்தை பிறந்து பத்தாம் நாள் இருவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மிகவும் சந்தோசத்தோடு தன் மனைவியையும் மகளையும் வீட்டிற்கு அழைத்து வந்தான் யதுநந்தன்.

அந்தப் பிஞ்சுக் குழந்தையின் முகத்தைப் பார்த்ததும் தன் மனைவி மனம் மாறியிருப்பாள் என்றே நம்பினான்.

வீட்டிற்கு வந்ததும் குழந்தையை அவன் கையில் கொடுத்து விட்டு அறைக்குள் சென்று விட்டாள். என்ன என்று அவன் யோசிப்பதற்குள் ஒரு சூட்கேஸை இழுத்துக் கொண்டு வெளியில் வந்தாள்.
"என்ன ஹரிணி. சூட்கேஸூடன் வந்திருக்காய். ஏன்?" என்று அவளை வினவினான்.
"அதுதான் நீ கேட்ட மாதிரி உன் குழந்தையைப் பெற்று உன் கையில் தந்து விட்டேன். நான் சொன்னதை நிறைவேற்றி விட்டேன். நீயும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவாய் என்று நம்புகிறேன்."
"இந்தக் குழந்தை உன்னதில்லையா ஹரிணி?"
"இல்லை. எப்போதும் எனக்கு குழந்தை வேண்டாம். இதுநாள் வரை என் லைஃப்பை வேஸ்ட்டாக்கியது போதும்."
"அதுக்கு..."
"என் ஃபிரண்ட் ஸ்ரிபன் எனக்கு யார்ட்லி பிராண்டுக்கு மாடல் சான்ஸ் வாங்கித் தாரேன் என்றான். சோ, நான் என் ஃபியூச்சரப் பார்க்கணும். டிவோர்ஸூக்கு அப்ளை பண்றேன். நீ சொன்னமாதிரி சைன் பண்ணு."
"ஹரிணி, நீ யோசித்துத் தான் பேசுறியா? பிறந்து பத்து நாளான குழந்தை. அதுக்கு அம்மா கட்டாயம் தேவை. அதுக்கு தாய்ப்பால் தானே கொடுக்கணும்."
"நோ... என்னால் முடியாது. எனக்கு குழந்தையை விட என் ஃபியூச்சர்தான் முக்கியம். குழந்தைக்குப் பால் கொடுத்தால் என் பியூட்டி என்னாவது. நீதானே சொன்னாய், குழந்தையைப் பெத்துத்தா, டிவோர்ஸ் தாறன் என்று. சோ, நான் பெத்துத் தந்திட்டேன். நீ சொன்னமாதிரி டிவோர்ஸூக்கு சைன் பண்ணிடு." என்று அசால்ட்டாகக் கூறிவிட்டு வெளியேறிவிட்டாள்.
 
Top