எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வரமாக நீ 16

S.Theeba

Moderator

வரம் 16

ஹரிணி குழந்தையை அவன் கையில் கொடுத்து விட்டு அந்தக் குழந்தைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று வார்த்தையால் மட்டுமல்ல செய்கையாலும் உணர்த்திச் சென்றுவிட்டாள். இதுவரை அவனுடன் தான் வாழ்ந்த வாழ்க்கையையும் பொய்யாக்கி விட்டாள்.

யதுநந்தன் மனமோ கேள்விகளால் நிரம்பியிருந்தது. 'நான் எங்கே தவறுவிட்டேன்? உண்மையான காதல் இப்படி ஏமாற்றிச் செல்லாதே. தான் பத்து மாதம் சுமந்து பெற்ற பிஞ்சுக் குழந்தை மீது கூடப் பாசம் இல்லை. கட்டிய கணவன் மீது காதல் இல்லை. அவள் காதலே பொய்யா? இப்படிப்பட்ட ஒருத்தியையா நான் காதலித்தேன்? ஒரு பெண்ணின் உண்மைக் குணம் அறியாமல், அவளின் மனம் புரியாமல் காதல் கொண்ட நான் எப்படிப்பட்ட முட்டாள். நான் வாழ்க்கையில் தோற்றுவிட்டேனோ?' என்று மனங்கலங்கி நின்றான். 'இல்லை. நீ தோற்கவில்லை' என்று அவனுக்குத் தைரியமூட்டுவதுபோலும், 'உனக்காக நான் இருக்கிறேன்' என்று நினைவூட்டுவது போலும் தன் மென்மையான மழலைக் குரலில் சிணுங்கினாள் அவனது மகள்.

அவளது அழுகுரல் கேட்கவும் தன் சுயபச்சாதாபத்திலிருந்து விடுபட்டவன் நடப்பை உணர்ந்தான். அடுத்து என்ன செய்வது என்று சிந்தித்தவனுக்கு எதுவும் புரியவில்லை. ஒரு முடிவுடன் தன் தந்தையை அழைத்தான். முதலில் நடந்தவை அனைத்தையும் அவரிடம் கூறித் தான் செய்த பிழைக்கு மன்னிப்பையும் கேட்டான். அடுத்து நான் என்ன செய்வது என்று ஏதுமறியாப் பாலகனாய் தன் தந்தையிடம் கேட்டு நின்றான்.

எப்போதும் எதிலும் நிதானமாக சிந்தித்து செயற்படும் ஈஸ்வரே அவன் சொன்னதைக் கேட்டதும் ஆடிப்போய் விட்டார். படித்துக் கொண்டிருப்பதாய் நினைத்தவன் கல்யாணம் செய்தது மட்டுமல்ல, ஒரு குழந்தைக்குத் தந்தையாகவும் நிற்கின்றான் என்பதே அவரை நிலைகுலைய வைத்தது. ஆனால், சிறுகுந்தையைப் போல என்ன செய்யட்டும் அப்பா என்று பரிதவிப்போடு அவன் கேட்டதும் கோபப்படுவதை விடுத்து அவனைத் தைரியப்படுத்தினார். அவனை ஊருக்குக் கிளம்பி வருமாறும் அம்மாவிடம் தான் பக்குவமாக எடுத்துச் சொல்வதாகவும் கூறினார்.

அவரிடம் பேசி அரை மணி நேரத்தில் மீண்டும் அழைத்தார். அவன் ஹலோ சொல்லவும் அந்தப் பக்கம் அழுகையுடனும் கோபத்துடனும் பேசினார் சந்திரமதி.

கடந்த கடந்த சில மாதங்களாக அவன் மிக அரிதாகக்தான் அழைப்பான். அதிலும் தந்தைக்கு அழைத்து விட்டு நல விசாரிப்போடு அப்புறமாகப் பேசுகிறேன் என்று வைத்துவிடுவான். தந்தையிடமும் மேலதிகமாக ஒரு கோர்ஸ் பண்ணுறதாகவும் அதுமுடிய ஊருக்கு வருவதாகவும் கூறியிருந்தான். அவன் படிப்பில் மும்முரமாக இருப்பதால்தான் சரியாகப் பேசுவதில்லை என்று தாயுள்ளம் தன்னைத் தானே சமாதானம் செய்திருந்தது.

ஆனால், தவமிருந்து பெத்த மகனுக்கு கல்யாணம் நடந்திடுச்சு. அதுவும் பெத்தவங்க, சொந்த பந்தம் யாருமின்றி அநாதை போல நடந்திருக்கு. இது எல்லாவற்றையும் விட தன் மகனுக்கு வாரிசு பிறந்திருக்கு. இவையெல்லாம் அவரை கோபப்பட வைத்தன.
அவரின் ஆதங்கம் தீரும்மட்டும் பேசி முடிக்கட்டும் என்று அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

அப்போது அவனின் செல்வமகள் பசியில் அழத் தொடங்கினாள். அந்த அழுகுரல் அந்தப் பக்கம் புலம்பிக் கொண்டிருந்த சந்திரமதியின் காதில் விழவும் அவரின் தாயுள்ளம் பதறிவிட்டது.
“ஏனப்பா, குழந்தை பசியில் அழுகின்றதா? அவ குழந்தையை விட்டுப் போயிற்றாள் என்றாரே. அப்படியென்றால் அதற்குப் பசியாற என்ன செய்யப் போகின்றாய்?”
“அதுதான்மா எனக்கும் புரியல.”
“கருமாரித் தாயே! இது என்ன சோதனை? இப்படி ஒரு நிலை என் வீட்டு வாரிசுக்கு வரணுமா?என்ன செய்யட்டும்?” என்று பதறினார்.
அவர் பேசுவதை அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வர் அவரிடமிருந்து ஃபோனை வாங்கிப் பேசினார். சில ஆலோசனைகளை அவனுக்கு வழங்கினார்.

அதன்படி உடனேயே சிவானந்தையும் அழைத்துக் கொண்டு குழந்தையுடன் குழந்தை நல வைத்தியரிடம் சென்றான். அவரிடம் குழந்தையின் நிலையை எடுத்துக் கூறி ஆலோசனை கேட்டான். அவரது ஆலோசனைக்கமைய
குழந்தைக்குத் தேவையான பால்மாவை வாங்கினான். அத்தோடு அந்த வைத்தியரிடமே வேண்டுகோள் விடுத்து குழந்தையைப் பார்த்துக் கொள்ளவென ஒரு தாதியையும் வேலைக்கு அமர்த்தினான். எனினும் அந்தத் தாதி முழு நேரமும் பணிபுரிய முடியாதென்று விட்டார். இரவில் குழந்தையை அவனே பார்த்துக் கொண்டான். உடனேயே நாட்டிற்குச் செல்ல அவனால் முடியவில்லை.

மூன்று நாட்களிலேயே விவாகரத்துக்கான பத்திரத்தை அனுப்பி வைத்திருந்தாள் ஹரிணி. அது தொடர்பான அலுவல்களை முடிக்கவும் குழந்தையை இந்தியா அழைத்துச் செல்வதில் இருந்த சிக்கல்களைத் தீர்க்கவுமே அவனுக்கு ஒரு மாதம் ஆகிவிட்டது. புறப்பட்டு வருவதாகச் சொன்ன சந்திரமதியையும் தடுத்து விட்டான். குழந்தையைத் தாதி ஒருவர் கவனித்துக் கொள்வதாகவும் தெரிவித்தான்.

அந்த ஒரு மாதத்தில் ஒரு தடவை கூட குழந்தையைப் பார்க்க ஹரிணி வரவில்லை. அவன் குழந்தையுடன் இந்தியா வரவும், அதனைப் பார்த்துக் கொள்ளும் வேலையை அவனது தங்கையான பானுமதி ஏற்றுக் கொண்டாள். சந்திரமதியும் ஈஸ்வரும் தங்கள் பேர்த்தியை கண்ணுக்குள் வைத்துப் பார்த்தனர்.

???

தன் நினைவுகளில் இருந்து மீண்டவன் அறையில் இருந்த சிவானந்தைத் தேடினான். அவனைக் காணவில்லை. யதுநந்தன் தன் பழைய நினைவுகளில் மூழ்கி இருக்கவும் அவனைக் குழப்ப வேண்டாம் என்று நினைத்தவன் எழுந்து அந்த ஆஃபிஸ் கீழ்த்தளத்தில் இருந்த காஃபி ஷொப்பிற்குச் சென்றிருந்தான். யதுநந்தன் அழைக்கவும் அங்கே வந்தவன், அவனுக்கு வாங்கி வந்த ஃகாபியை அவனிடம் கொடுத்தான்.
"மச்சி... முதல்ல இதைக் குடி. ரிலாக்ஸாகுடா... நீ எதைப் பற்றியும் யோசிக்காத. அவள் திரும்பவும் உன் லைஃப்பிற்குள் வரமாட்டாள்." என்று ஆறுதல் கூறினான்.
 
Top