தீரா 58
பாலாய் நிலவு பொழிய அமைதின்றி நிலவை வெறித்துக் கொண்டிருந்தான் கௌதம். இன்னும் ஐந்து நாளில் ஸ்ரீனிக்கு மூளையில் அறுவை சிகிச்சை. அவள் என்னோவோ தைரியமாய்தான் இருகின்றாள் கௌதமுக்கு தான் நித்திரை என்பது அவன் திசையைக் கூட எட்டிப் பார்க்க மாட்டேன் என்று நின்றது.
‘நான் டென்சன் ஆகுவேன் என்று நடிக்கிறாளா?’ என்று கூட யோசித்து சோதித்து கூட பார்த்தான். அவள் சாதாரணமாய் தான் இருந்தாள். இரவு வேளையில் பசியிலோ அல்லது பேபி உள்ளே விளையாடுவதிலோ எழுந்தால் கூட அவனை எழுப்ப மாட்டாள். அவளுக்கும் தெரியும், அவன் தன்னை மறந்து கண்ணயர்வது தவிர உறங்க மாட்டான் என்று. ஆனால் அவள் மெலிதாய் அசைந்தாலே எழுந்து விடுவான்.
ஏதோ தோன்ற திரும்பிப் பார்த்தால் நன்றாகவே வெளியே தெரிந்த ஏழு மாத கருவின் மேல் கைவைத்தவாறே கதவில் சாய்ந்து நின்று அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீனிகா. அன்று அவன் மெலிவைக் கவனித்த பின்னர் ஒவ்வொரு நாளும் அவள்தான் சாப்பாடு கொடுக்கிறாள், இன்னுமும் சரியாக் சொன்னால் ஊட்டி விடுகிறாள். இருந்தும் அவன் மெலிந்து கொண்டுதான் போகிறான். உள்ளே அரிக்கும் கவலை உடலையும் அரிக்கின்றதோ! வேகமாக அருகே வந்தவன் தோளைச் சுற்றிக் கையைப் போட்டு அழைத்துச் சென்று ஊஞ்சலில் வசதியாய் அமர வைத்துக் “யு ஒகே! பசிக்குதா? உள்ளே பூட்பால் நடக்குதா?” சிறு முறுவலுடன் கேட்டான்.
அவன் கேள்விகளைக் காற்றில்விட்டவள் “உறங்கவில்லை” கூர்ந்து பார்த்துக் கேட்க சிறிது நேரம் அசைவின்றி வானத்தை வெறித்தவன் தன் சந்தேகத்தை வாய்விட்டே கேட்டுவிட்டான். “உனக்கு பயமாய் இல்லையா?” இத்தனை நாள் அவளைக் குழப்பக் கூடாது என்று கேட்கவில்லை இன்றோ கேட்காமல் முடியவில்லை.
தளிர் விரல்களால் அவன் தலைகோதிக் கொடுக்க கண் மூடி உள்வாங்கியவன் கண்களை மட்டும் திருப்பி கேள்வியாய் நோக்கினான்.
பரிதாபமாய் பார்த்தாள் ஸ்ரீனிகா. எல்லாத்திற்கும் பயந்தவள்தான் ஆனால் அவன் அருகில் இருந்தாலே பயம் அவள் பக்கத்தில் வராது இப்போதோ கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்ள அவளுக்கு பயம் பக்கத்தில் என்ன கண்ணுக்கு எட்டிய தொலைவிலேயே இல்லை.
‘இல்லை’ என்று தலையாட்டினாள்.
“எப்படி” ஆவேசமாய்க் கேட்டவனை எப்படி சமாதானப் படுத்த என்று தெரியாமல் விழித்தவள் கன்னத்தை அழுத்தமாய் பற்றினான். முன்பெல்லாம் தசையின்றி எலும்பாய் இருந்த அவள் உடல் இப்போது அவனின் முழுதான அன்பிலும், தாய்மையிலும், குடும்பத்தினர் கவனிப்பு என மெருகேறி தளதளவென்று இருக்க அவன் உள்ளங்கையில் அவள் கன்னம் அல்வா துண்டாய் அமுங்கியது.
“எனக்கு நீங்கள் மூவருமே வேண்டும் புரியுதா?” அவளை வலிக்க பிடிப்பதைக் கூட உணரமால் கேட்க தலையாட்டினாள். அவளுக்கு கருவில் இரட்டையர்கள்தான். அதிலும் கௌதமின் குரல் கேட்டுவிட்டால் போதும் இருவரும் உள்ளே போடும் ஆட்டத்தில் இவளால் இருக்கவே முடியாது. அதனால் சிலவேளைகளில் கௌதம் ஏதாவது பேச வந்தால் “இப்போது தான் இருவரும் சற்று அடங்கினார்கள் உங்கள் சத்தம் கேட்டால் மீண்டும் தொடங்கிவிடுவார்கள்” என்று அவன் வாயை மூடிவிடுவாள். வீட்டில் எல்லோரும் விளையாட்டாய் ‘பூட்பால் நடக்குதா?’ என்றே கேட்க தொடங்கிவிட்டார்கள்.
“ப்ரோம்மிஸ்” குழந்தையாய் கைகளை நீட்டினான். அவன் உள்ளங்கையில் இதழ் பதித்து “ப்ரோம்மிஸ், எங்கள் மூவருக்குமே நீங்கள் வேண்டும். நிச்சயமாய் பிழைத்து வருவேன் போதுமா?” என்றாள் பதிலுக்கு.
சிவந்திருந்த கண்கள், மூன்று நாள் தாடியுடன் சோர்ந்திருந்த முகம், தளர்ந்திருந்த உடல் என அனைத்தையும் பார்த்தவள் உதட்டைக் கடித்தாவாறே அவனிடமிருந்து ஏழ “எங்கே?” தானும் எழுந்தான்.
அவன் தோளைப் பிடித்து அழுத்தி இருத்தி ஏதோ சொல்ல வந்தவன் உதட்டில் கை வைத்து தடுத்து “ஷுப் சத்தம் வரக் கூடாது” என்று அதட்டி இருத்திய அழகில் அவனையும் அறியாமல் சிறுபுன்னகை மலர அவளைப் பார்த்தான்.
கீழே இறங்கி வந்தவள் நேரே கிட்சின் சென்று அவனுக்கு பிடித்த விதத்தில் தேநீர் ஊற்றி விட்டு கையை விரித்துப் பார்த்தாள். சிறிது தயங்கி விட்டு மேலே பார்த்தவள் முகம் இறுக அதையும் தேநீரில் போட்டுக் கலக்கினாள். மேலே ஏறி வர மாடிவளைவில் அவளுக்காய் காத்திருந்தான்.
கீழே அவளின் அசமானத்தில் வெளியே வந்த அசோகன் “என்னம்மா தனியா இங்கே என்ன செய்யுறாய்? கௌதம் எங்கே? உள்ளே பூட்பால் நடக்குதா?” கேட்டவரைப் பார்த்து செல்லாமாய் உதட்டை பிதுக்கியவள் நெருங்கிச் சென்று அவர் காதில் ஏதோ சொன்னாள்.
கவலையையும் மீறிய சிறு சிரிப்புடன் மேலே நின்ற கௌதமைப் பார்த்தவர் “சரிம்மா ஏதாவது அவசரம் என்றால் கூப்பிடு வருவேன்” அவள் தலையை வருடி உள்ளே சென்றுவிட்டார்.
மேலே ஏறி வர பாதி வழியிலேயே இறங்கி வந்து அவள் கையிலிருந்த தேநீரை வாங்கியவன் அவள் ஏற உதவியவாறே “அப்பாவிடம் என்ன சொன்னாய்? ஏன் சிரித்தார்?” வினாவினான். கடந்த மூன்று மாதமாகவே அவனைக் கேலி செய்வதையே தலையாய பணியாய் கொண்டிருந்தனர் அவன் குடும்பத்தினர்.
அதிலும் வத்சலாவும் நதியாவும் அடக்கவே முடியாது.
“ஹ்ம்ம்... எதையோ சொன்னேன். முதலில் இதைக் குடியுங்கள்” தேநீரைக் குடிக்க வைத்தாள்.
குடித்தவனுக்கு சில நிமிடங்கள் கடந்தே வித்தியாசம் புரிய “ஏஏய் என்னத்தடி கலந்தாய்” கண்ணைச் சுற்றிக் கொண்டு வர தலையை குலுக்கியவாறே கேட்டான்.
“இரண்டே இரண்டு ஸ்லீப்பிங்க் டப்லேட்” கையில் அபிநயம் காட்டியவளை முடிந்த வரை முறைத்தவன் “உனக்கு ஏதாவது அவசரம் என்றால் எப்படி எழும்புவேன் அறிவில்லை” கோபமாய்தான் சொன்னான். ஆனால் வார்த்தைகள் உறக்கத்தில் முணுமுணுப்பாய் கேட்டது.
அருகே அமர்ந்து சரியாய் படுக்க வைத்தவள் நெற்றில் முத்தமிட்டு “மாமாவிடம் சொல்லிவிட்டேன் முழித்துதான் இருப்பார். இப்ப நேரம் மணி நான்கு நீங்கள் முதலில் நன்றாக உறங்குங்கள். நாளையில் இருந்து மருத்துவமனை அது இது என்று நேரம் போகும்” அவனிடம் கெஞ்சினாள்.
அவள் அமர்ந்திருக்க அவளை நெருங்கிப் படுத்தவன் ஒரு கையை அவளை சுற்றிப் போட்டவாறே “இப்படியே இருக்க முடியாது நீயும் படு” உறக்கத்தில் முனங்கினான். திரும்பிப் பார்க்க அப்போதும் ஆழ்ந்த உறக்கமின்றி விழிகள் அங்குமிங்கும் ஓடிக் கொடிருப்பது புரிய பெருமூச்சை சத்தமின்றி விட்டவள் அவனருகே தலை வைத்துப் படுத்து மெதுவே ஹ்ம் செய்யதபடியே பாடத் தொடங்கினாள்.
ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு நேர் இவரோ ஒ... ஒ...
தாயான தாய் இவரோ தங்கரத தேர் இவரோ ஒ... ஒ...
மூச்சு பட்ட நோகுமேன்னு மூச்சடக்கி முத்தமிட்டேன்
நிழலுபட்ட நோகும்மேன்னு நிலவடங்க முத்தமிட்டேன்
தூங்க மணி விளக்கே தூங்கமா தூங்கு கண்ணே
ஆசை அகல் விளக்கே அசையாமல் தூங்கு கண்ணே
ஆராரோ ஆரிரரோ ஆரீரரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ ஆரீரரோ ஆரிரரோ
பாடியாவாறே அவன் தலையைக் கோதிக் கொடுக்க வழமை போல் முகத்தில் தென்பட்ட அமைதியின்மை மறைந்து ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றான்.
நன்றாக உறங்கி எழுந்திருந்தவளுக்கு நித்தரை வர மறுக்க அவன் முகத்தைப் பார்த்தவாறே வெகு நேரம் படுத்திருந்தவள் வானம் வெளிக்கவே திரைச்சீலைகளை இழுத்து வெளிச்சம் வரமால் மூடினாள். பேபிஸ்க்காக பாதி பின்னியிருந்த சொக்ஸ்சை எடுத்துக் கொண்டு சோபாவில் அமரப் போனவள் அவன் அவளைத் தேடி படுக்கையில் புரண்டு படுக்க அருகே வந்து அமர்ந்து “பக்கத்திலேயேதான் இருக்கின்றேன், தூங்குங்கள்” செல்லமாய் கோபப்பட்டாள்.
உறக்கத்திலேயே திரும்பி அவள் மீது கையைப் போட்டு பக்கவாட்டில் முகம் புதைத்து மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தான் கௌதம்.
பெட்டில் அமர்ந்து சோம்பல் முறித்தவன் முதலில் தேடியது ஸ்ரீனிகாவைத்தான். “ஸ்ரீனி” அவசரமாய் எழுந்தவன் வாஷ்ரூமில் சத்தம் கேட்க போய்க் கதவைத் தட்டினான். குளித்து பெரிய பாத் டவலுடன் சொட்ட சொட்ட ஈரத்துடன் முறைத்துக் கொண்டு நின்றாள் அவள். பின் கழுத்தை அழுத்தி விட்டவன் அசட்டு சிரிப்புடன் “அது” என்று தொடங்கவே வயிற்றில் லேசாய் குத்தி “வழியுது போய்க் குளித்து விட்டு வாருங்கள் சாப்பிட்டு செக்கிங் போகணும்”
“என்ன நேரம் இப்ப” இன்னும் தூக்கம் வழியும் குரலில் கேட்க கபோர்டில் இருந்து போட வேண்டிய ஆடையை எடுத்தவாறே சாதரணமாய் சொன்னாள் “காலை பத்து”.
“ஒ” என்றவன் குளிக்க செல்ல “அடுத்தநாள் காலை” சிறு சிரிப்புடன் சொல்ல “என்ன?” அதிர்ச்சியில் கத்திவிட்டான்.
அவன் சத்தத்தில் எடுத்த ஆடை கீழே விழுந்திருக்க “அதை எடுத்து தாருங்கள்” என்றவாறே முகத்தை துடைத்தாள்.
குனிந்து எடுத்தவன் தன் போனைத் தேடி எடுத்து திகதியைப் பார்த்தான். அது அவள் சொன்னது சரி என்றது. ‘முப்பது மணி நேரமா உறங்கினேன்’ தன்னைத் தானே கேட்டுக் கொண்டவன் “ஏன் என்னை எழுப்பவில்லை?” டென்சனாகி போய் “இன்றிரவு ஹோச்பிடல் போக வேண்டும் இல்லையா?” முகத்தை உள்ளங்கையில் அழுத்தித் தேய்த்தவாறே கேட்டான்.
“ம்க்கும்... ஏற்கனவே இரண்டு நாளாய் உறங்கவே இல்ல. இதில் ஹோச்பிடல் போனால் நீங்கள் படுக்கவே மாட்டீர்கள். இப்போது எடுப்பது தான் ரெஸ்ட். மருத்துவமனை போவது இரவு பத்து மணிக்கு இன்னும் முழுதாய் பன்னிரண்டு மணி நேரம் இருக்கு. முதல்ல போய் குளிச்சிட்டு வாங்கோ. இன்னும் எதுவும் சாப்பிடவில்லை” கண்டிப்பாய் கூறி முதுகில் கை வைத்து தள்ளினாள்.
“உடை மற்ற ஹெல்ப்” இழுக்கவே “கவுன்தான் நானே போட்டுக் கொள்வேன்” போகும்படி சைகை செய்ய நெற்றியை தேய்த்தவாறே குளிக்க சென்றான்.
அவள் சொன்னது போலவே அடுத்தடுத்த நாட்கள் முழுதும் கௌதமுக்கு இருக்கவே நேரம் கிடைக்கவில்லை. அவளுடனே அவள் தேவைகளைக் கவனித்தபடி செக்கிங் ஸ்கானிங் என்று சுற்றியவன் இடையிடையே அலுவலக வேலைகளையும் பார்க்கவே வேண்டியிருந்தது. பெரும்பான்மையான வேலைகளை ராகவனும் அசோகனும் பார்த்துக் கொண்ட போதும் சில இன்றியையாத வேலைகளை கௌதமே மேற்பார்வை செய்ய வேண்டி இருந்தது. அவற்றை மருத்துவமனைக்கு வரவழைத்தே கையெழுத்துக்களை இட்டு கட்டளைகளை பிறப்பித்தவன் சிகிச்சைக்கு முதல் நாள் யாதவ் ஜிஎம் இருவருக்கும் தான் திரும்ப சொல்லும் வரை தன்னை தொல்லை செய்யக் கூடாது என்றுவிட்டான்.
அன்று ஸ்ரீனியை ஒரு அண்டி பயோடிக் ஷாம்பூ மூலம் தலை குளிக்க வைத்து தலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் இடமான காதுக்கு பின்புறமாய் ஐந்து சென்டிமீட்டர் வட்டத்தில் ஷேவ் செய்து அடுத்ததாய் தியோட்டருக்குள் போக தயாராய் இருந்தாள் ஸ்ரீனிகா.
“மாமா...” என்றவளை ஆதூரத்துடன் அசோகன் நோக்க “பேசாமல் இவருக்கும் அனஸ்தீசியா போட்டு விடுவோமா?” முழுப் பதட்டத்துடன் நின்றவனைப் பார்த்துக் கேட்டாள் ஸ்ரீனிகா.
அவள் பிரசரை பரிசோத்தித்த தாதி “காலையில் பார்க்கும் போது குறைவாய்தானே இருந்தது. இப்போது என்ன நடந்தது” கண்டிப்புடன் கேட்டவர் “கொஞ்சம் ரிலாக்ஸாய் இரும்மா” என்றவாறே வெளியேறினார்.
அவள் கண்களோ தந்தையின் அருகே பதட்டத்தின் மொத்த உருவமாய் நின்றவனையே கவலையுடன் பார்க்க அவளின் சலனத்தைக் கவனித்த ராகவன் கௌதமை இழுத்துக் கொண்டு வெளியே சென்றான்
“கிருஷ்ணா அவளுக்கு உன்னைப் பதட்டமாக பார்க்க ப்ரெஷர் ஏறுது கொஞ்சம் காட்டிக் கொள்ளாமல் இருக்கப் பார்” அவன் எச்சரிக்க அவனோ சட்டென அருகே போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டான்.
“எனக்கு கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்” என்றவன் தலையில் கை வைத்து செல்ல தன் உள்ளங்கையில் முகத்தைப் புதைத்தான் கௌதம். எழுந்து சென்று மறுபுறம் இருந்த பல்கனி வழியே வெளியே பார்க்க எதிரே கடல் சத்தமின்றி தென்பட்டது. ஏனோ கடலைப் பார்க்க மனது அமைதியடைய வெகுநேரம் வரை பார்த்துக் கொண்டே நின்றான், திரும்ப ராகவன் வந்து அழைக்கும் வரை.
“கிருஷ்ணா ஸ்ரீகுட்டி உன்னைத் தேடுகிறாள்”
“வாரேன்” திரும்பியவன் முகம் அமைதியாய் இருக்க யோசனையுடன் பார்த்தான் ராகவன்.
அறையில் அவள் மட்டும்தான் இருந்தாள். அனைத்தும் தயார் செய்யப்பட்டு இன்னும் ஒரு மணி நேரத்தினுள் தியோட்டரினுள் எடுத்து விடுவார்கள். அனஸ்தீசிய கொடுப்பது எல்லாம் தியேட்டரினுள் உள்ள அறையில் வைத்துதான். அதன் பின்னர் சிகிச்சை முடிந்த பின்னர் தான் பார்க்க முடியும்.
அறையினுள் சென்று அவள் முகம் பார்த்தவனுக்கு நொடியில் புரிந்தது, பயந்துவிட்டாள். இத்தனை நாள் எப்படியோ சமாளித்துவிட்டான். ஸ்டூலை அருகே இழுத்துப் போட்டு அமர அவளோ பெட்டில் விலகி படுத்தாள். ‘இங்கே இரு’ என்பது போல்.
அவள் விருப்பபடி அருகே அமர்ந்து முகம் நோக்கிக் குனிய கன்னங்களை பற்றிக் கொண்டவள் “பயமா இருக்கு கௌதம்” பயம் நிறைந்த பெரிய கண்களால் அவனை பார்த்தாள்.
“ஷ்...” அவள் கண்களில் இதழ் பதித்து நிமிர “இத்தனை நாள் உங்களைப் பார்த்ததில் எனக்கு என் பயம் தெரியல” சொன்னவள் கண்கள் இன்னும் பெரிதாய் விரிய அவனைப் பார்க்க அவனோ கண்விழியை மட்டுமாய் அசைத்து வேறுபுறம் பார்த்தான். அன்று ஒருநாள் தன்னை மீறி பயத்தை வெளிக்காட்டி விட அவனைத் தேற்றுவதில் தன் பயத்தை மறந்ததை கவனித்துவிட்டானே! இல்லாவிட்டால் அவன் பயத்தை அப்படி வெளிப்படையாக காட்டியிருக்கமாட்டனே.
ஆனால் அதன் பிறகு இந்தக் கணம் வரை அவள் உண்மையில் பயத்தை மறந்து தான் போனாள். தனக்காக ஒருவன் உயிராய் உருகுகின்றறான் என்ற என்னமோ இல்லை அவனின் காதல் தந்த நம்பிக்கையோ இந்தக் கணம் வரை பயம் அவளருகே கூட வரவில்லை.
“இதுதான் நீங்கள்...” நடுங்கும் உதடுகளைக் பற்களால் கடிக்க பெருவிரலால் வருடி அவள் உதடுகளை விடுவித்து லேசாய் இதழ் ஒற்றி நிமிர்ந்தவன் அவள் கண்ணை ஆழ்ந்து பார்த்து கேட்டான் “என் மீது நம்பிக்கை இருக்கா?”.
அவன் கண்ணில் தென்பட்ட ஏதோ ஒன்றிற்கு கட்டுப்பட்டவளாய் “இருக்கு” தலையசைத்தாள்.
அவள் ஒரு கை அவன் பெரிய கையினுள் நெஞ்சோடு சிறைபட்டிருக்க அவளை நோக்கிக் குனிந்திருந்தவன் “உனக்கு எதுவும் நடக்காது நடக்க விடமாட்டேன்” அவன் குரலில் இருந்த உறுதியில் மனம் அமைதியுற மெலிதாய் புன்னகைத்தாள்.
குனிந்து அழுத்தமாய் கன்னத்தில் இதழ் பதிக்க அன்று மோலில் வைத்து கன்னத்தில் முத்தமிட்டது ஞாபகத்தில் நிழலாட புன்னகையுடன் ஆழ்ந்த மயக்கத்திற்குச் சென்றாள் ஸ்ரீனிகா.
விலக அப்போதும் புன்னகையுடன் இருந்தவள் முகத்தைப் பார்த்தவனுக்கு தொண்டை கரகரக்க “சீக்கிரம் வந்துருடி” என்று எழுந்தவன் அருகே நின்ற அனஸ்டியடிக் (Ananstiatic) இனைப் பார்த்து “தேங்க்யூ” என்று சிறு நன்றியை உதிர்த்தவன் அப்போதும் தன் கையில் இருந்த அவள் கையில் இதழ் பதித்து விடுவித்தான்.
எப்படியும் அவளுக்கு கடைசி நேரம் ஒரு பயம் வரும் என்பதை அனுமானித்தவனாய் அனஸ்டியடிக் கொடுப்பவரிடம் அவளின் பயந்த சுபாவத்தை எடுத்துச் சொல்லி அறையில் வைத்தே அனஸ்தீசியா கொடுக்க சம்மதிக்க வைத்திருந்தான்.
பூப் போல தூக்கில் ஸ்டேச்சரில் படுக்க வைத்தவன் கன்னத்தை அவள் தலையில் வைத்து அழுத்த தொண்டைக் குழி ஏறி இறங்கியது. உணர்ச்சியற்று இறுகிப் போன முகத்துடன் தியேட்டர் வரை சென்றவன் அவளை உள்ளே எடுத்து கதவைச் சாற்ற முன்னிருந்த இருக்கையில் அமர்ந்தான்.
உணர்ச்சியற்று இறுகியிருந்த முகத்தைப் பார்த்துவிட்டு யோசனையுடன் அருகே வந்தான் ராகவன் “கிருஷ்ணா நீ...” மேற் கொண்டு என்ன கேட்க என்று தெரியாமல் தடுமாற “பேப்பர்ஸ் கொஞ்சம் நீங்கள் பார்த்து கொள்ளுங்கள் அண்ணா” என்றவன் முழங்காலில் முழங்கையூன்றி நெற்றியை உள்ளங்கையில் தாங்கியவன் அறுவை சிகிச்சை நடை பெற்ற அந்த பன்னிரண்டு மணி நேரமும் அசையக் கூட இல்லை. அவசரமாய் கையெழுத்து போட மட்டும் எழுந்தவன் மீண்டும் அதே இருக்கையில் போய் இருந்துவிட்டான்.
பன்னிரண்டு மணி நேரம் நூறு ஆண்டுகளைப் போல் கடந்திருந்தது.
சிவப்பு விளக்கு அணைந்து சத்திர சிகிச்சை பிரிவு கதவைத் திறந்து கொண்டு இன்னொரு பத்து டாக்டர்ஸ் புடை சூழ வந்த ரிச்சர்ட்டை உணர்ந்தவன் போல் சட்டென எழுந்து நிற்க அத்தனை நேரம் ஒரே நிலையில் இருந்த கால்கள் அவனின் பேச்சைக் கேட்க மறுக்க தள்ளாட இரு பக்கமும் பிடித்துக் கொண்டானர் அசோகனும் ராகவனும்.
சிவந்திருந்த கண்களும் கலைந்திருந்த தலையும் தாடியுமாய் அவனைப் பார்த்த ரிச்சர்ட் ஆதூரத்துடன் அவன் தோளில் தட்டி “கட்டியை வெற்றிகரமா அகற்றியாகிவிட்டது. அதனால் இனிப் பயமில்லை. ஆபத்தான இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை அதனால் இன்னும் மூன்று நாட்களுக்கு மயக்கத்தில்தான் இருக்க வேண்டும். இதுவரை உடல் ரீதியாக எந்தப் பிரச்சனையும் இல்லை” தொடந்து ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டு வந்தவர் சிறிது நிறுத்தி அருகே நின்ற இருவரையும் பார்த்து “மூளை தொடர்பான விடயங்களை இலகுவில் இப்படித்தான் என்று யாராலும் சொல்ல முடியாது. இதுவரைக்கும் அவர் உயிருக்கு எந்த விதத்திலும் ஆபத்தில்லை” சொல்லி முடிப்பதற்குள் அடைத்திருந்த தொண்டையில் இருந்து கரகரத்த சத்தம் மட்டும் வரக் கேட்டான் “பேபிஸ்”.
அந்த மருத்துவர் குழாமில் நின்ற சென்னையின் மிகச் சிறந்த கைனொலோஜிஸ்ட்டும் பீரியடிசனும் “பேபிஸ் ஆரோக்கியமா இருக்கிறாங்க. எந்தப் பிரச்சனையும் இல்ல” புன்னகையுடன் கூறினார்கள். அவர்களிடம்தான் மாதாமாதம் செக்கிங்கிற்காக அழைத்துச் செல்வான். அவருக்கு ஸ்ரீனிகா தொடர்பான முழு விடயங்களும் அத்துப்படியாகியிருந்தது. அத்தனை நேரமிருந்த இறுக்கம் தளர அப்படியே நாற்காலியில் சரிந்துவிட்டான் கௌதம்.
அசோகனும் ராகவனும் திடிரென சரிந்ததில் பயந்து போய் பார்க்க ரிச்சர்ட் அவன் பல்சைப் பரிசோதித்து விட்டு “ஹி இஸ் ஒல்ரைட், ஜஸ்ட் ஸ்ட்ரெஸ் ரிலீவ்” புன்னகையுடன் கூறியவர் “கெட் அப் ஜங் மேன், கெட் பிரெஷ் அண்ட் வெல்கம் பாக் யுவர் லவ். இன்னும் இரண்டு மணி நேரத்தில் பேசண்டை ஐசியு மாற்றிவிடுவார்கள். அதன் பிறகு டிஸ்ட்ரப் செய்யாம உள்ளே போய் பார்க்கலாம். நான் நாளை வந்து பார்க்கிறேன்” தோளில் தட்டி விட்டு சென்றார்.
மறுபுறம் இருந்த ஐசியு யூனிட்டுக்கு தியோட்டரில் இருந்து உள் புறமாகவே மாற்றி விட ஒவ்வொருவராக சென்று ஸ்ரீனிகாவைப் பார்த்து விட்டு வர உடையவனோ இத்தனை நேர அழுத்தம் விடை பெற்றதில் அசைய முடியாது இருந்தான். உள்ளே சென்று பார்க்கத்தான் வேண்டும், ஆனால் அசையவே முடியவில்லை.
ஒவ்வொருவராய் வந்து அழைத்துப் பார்த்துவிட்டார்கள் கல்லுள்ளி மங்கன் போல் அசையாமல் இருந்தான் கௌதம். கடைசியாய் மீண்டும் ஒரு முறை “தம்பி எவ்வளவு பெரிய அறுவை சிகிச்சை, இப்போது நினைவு இல்லாவிட்டாலும் அவள் ஆழ்மனம் உங்களைத் தானே தேடும்” எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க முயன்றாள் வத்சலா.
அவனுக்குமே புரிந்துதான் இருந்தது. ஆனால் அவனால் அசைய முடியும் போல் தோன்றவில்லை. கிட்டத்தட்ட ஏழு மாதமாய் உள்ளே அடக்கி வைத்திருந்தது. உடல் பஞ்சு போல் பாரமேயின்றி இருக்க எழுந்து ஐஸியூ வரை செல்ல முடியம் போல் தோன்றவில்லை. ரிச்சர்ட் சும்மாவெல்லாம் சொல்ல மாட்டார் அன்றே அவ்வளவு கறாராய் பேசியவர். எனவே அவள் உயிருக்கு ஆபத்தில்லை என்றால் ஆபத்தில்லைதான். அவள் உயிரோடு இருக்கும் வரை வேறு எந்தப் பிரச்சனை வந்தாலும் அவனால் சமாளிக்க முடியும்.
மெல்லிய முறுவலுடன் “இல்ல அண்ணி அது... என்னால்...” அவன் இழுக்கவே “நான் அவரை இல்ல மாமாவை வர சொல்லட்டுமா?” அவன் நிலை புரிந்து கேட்க “வேண்டாம் அண்ணி கொஞ்ச நேரத்தில் நானே போய்ப் பார்க்கிறேன்” என்ற கௌதம் அடுத்த பத்து மணி நேரம் வரை அந்த இருக்கையை விட்டு அசையவில்லை.
அவன் நிலையை ஓரளவு புரிந்து கொண்ட குடும்பத்தினரும் அவனை அதற்கு மேல் வற்புறுத்தவில்லை.
“அண்ணா அண்ணிக்கு எல்லாம் ஒகே தானே” ஐசியுவில் ஸ்ரீனிகாவை பார்த்து விட்டு வெளியே வந்த நதியா அவனருகே தன் பெரிய வயிற்றை தள்ளிக் கொண்டு அமர்ந்தவாறே கேட்டாள்.
“ஹ்ம்ம்” சோபையாய் தலையாட்டியவன் இருட்டி நடுசமாத்தை நெருங்கியிருக்க மென்மையாய் கடிந்தான் “ஏன் இந்த நேரம் வந்தாய் நாளை காலையில் வந்திருக்கலாம் தானே?”.
“பரவாயில்ல அம்மா இப்பதான் வீட்டிற்கு வந்தார்கள். அண்ணியை பார்க்கனும் எ..” சொல்லிக் கொண்டே வந்தவள் திடிரென நிறுத்த வத்சலா கேட்டாள் “என்னம்மா எங்காவது வலிக்குதா?” கௌதம் தன் கையைப் பிடித்த அழுத்தத்தின் அளவில் அவள் வலியை உணர்ந்தவன் கீழே பார்க்க அவள் காலின் கீழே நீர் குளம் கட்டியிருந்தது.
“நர்ஸ்” சத்தமாய் அழைத்தான்.
அடுத்த நொடி பொறுப்பை கையில் எடுத்தவனாய் நதியாவை அதே மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தான். கூடவே வேறு பேசண்டை பார்த்துவிட்டு அப்போது தான் பார்கிங்கிற்கு சென்றிருந்த கைநோலோஜிஸ்டை திரும்ப அழைத்து நதியாவைப் பார்க்கும்படி கேட்டுக் கொண்டவன் ஐசியுவின் கண்ணாடி வழியே ஸ்ரீனியை பார்த்தான். மயக்கத்தில் கருவிகளின் துணையோடு மூச்சு விட்டவளை காண நெஞ்சுக்குள் ஏதோ பிசைந்தது.
அவளை இப்படிப் பார்க்க தைரியம் இல்லாமல் தானே வெளியே பழியாய் கிடக்கின்றான்.
‘இதற்கு மேல் அவளை வேறு எந்த துன்பமும் அவளை அணுகக் கூடாது என்று கடவுளே’ மனதினுள் நினைத்தவனாய் அந்த இடத்தை விட்டு செல்லவதற்கு காலெடுத்த கௌதம் நின்று “யாதவ் அஜா நீங்கள் இருவரும் இங்கேயே இருக்க முடியும் தானே” தயக்கமாய் கேட்டான். ஏனெனில் அவர்கள் இருவரும் நேற்றில் இருந்து இங்கேயேதான் இருக்கின்றார்கள்.
“நோ ப்ரோப்லேம் பாஸ், நீங்கள் மேடத்தை பாருங்கள்” என்று யாதவ் கூற “ஜிகே முதலில் போய் தங்கச்சியை பார் பிறகு தங்கச்சி மேடத்தை பார்த்து விட்டு வந்து கதை” என்றான் அஜா.
நதியாவை அட்மிட் செய்திருந்த இடத்தை அடைந்த போது அவளை உள்ளே எடுத்திருந்தார்கள். அவர்களுடன் வெளியே நின்றவனை அனைவரும் முறைக்க “இல்ல நதியை பார்த்திட்டு போறேன்” அப்பாவியாய் சொன்னான். கிட்டத்தட்ட சிகிச்சை முடிந்தும் பத்து மணி நேரத்திற்கு மேல் இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருந்தவனை வீட்டிற்கு அல்லது அதே மருத்துவமனையில் இருந்த அறைக்குச் சென்று பிரெஷ் ஆகி வர சொல்ல மறுத்து இருந்தவன் இப்போது எழுந்து வந்திருந்தான்.
அதிக நேரமேடுக்காமல் நதியா சுரேஷின் செல்வன் சுகப் பிரசவமாய் அடுத்த அரை மணி நேரத்தில் பூமிக்கு வர அவனை கையில் ஏந்திக் கொண்டு வெளியே வந்தான் சுரேஷ். சுரேஷின் கையில் கண்ட சிறு உருவம் தன் மனைவியின் கருவில் இருக்கும் தன் வாரிசுகளை ஞாபகப்படுத்த குனிந்து குழந்தையின் நெற்றியில் முத்தம் வைக்க தாடி குத்தியதில் அது சிணுங்கியது. கன்னத்தை வலிக்காமல் கிள்ளி விட்டு அங்கிருந்து நேரே ஐஸியூ சென்றுவிட்டான்.
ஸ்ரீனி கையை தன் கையில் எடுத்து வைத்து கொண்டு “உடனே பார்க்க வரல நதியாவைப் பார்க்க போய்ட்டான் என்று கோபிக்கதேடி, இப்படி வயர் தலையில் கட்டு பார்க்க முடியல என்னால் அதான் வரல. நதியின் பேபி கூட கையில் தூக்கல, தூக்கவும் முடியல. ஆனா ஆனா நதியின் குட்டி பேபி பார்த்தும்... இவர்கள் இருவரையும் எப்போ கையில்” அவள் வயிற்றில் கைவைக்க அவன் கையை உணர்ந்து உதைத்தார்கள். அவளின் ஹோச்பிடல் கௌனின் மேலாய் வயிறு அசைவது தெரிய “ஷ்... அம்மா பாவம், இன்னும் ஒரு இரண்டு வாரம் அம்மாவை கரைச்சல் கொடுக்க கூடாது” செல்லமாய் கண்டித்தான்.
அவன் சொன்னது கேட்டது போல் அதற்கு மேல் அசையவில்லை அவனின் பிரின்சஸ்சும் லிட்டில் சம்ப்பும். கண்டடூலா போடாத கையை தன் கைகளுக்குள் பொத்தி வைத்தவாறே அவள் புருவ மத்தியைப் பார்த்தவாறே வெகு நேரம் அசையாது அமர்ந்திர்ந்தான் கௌதம்.
உள்ளே வந்த தாதி அவன் நிலையைப் பார்த்து தலையை குறுக்கே ஆட்டி “இது ஐசியு நிறைய நேரம் இருக்க முடியாது. போய்க் குளித்து பிரேஷ் ஆகி வாருங்கள் இல்லை அவர்களுக்கு இன்ஃபேக்ஷேன் ஆக்கிரும்” அவர் அனுபவம் அவனைக் கையாள துணை வந்தது. மறுபேச்சின்றி எழுந்தவன் வெளியே வர அவனை எதிர் கொண்டார் அசோகன்.
“அப்பா” சட்டென அனைத்து அவர் தோளில் முகம் புதைக்க அவன் உடல் குலுங்கியது. சற்று நேரம் அழவிட்டவர் மெல்லத் தட்டிக் கொடுத்தார் “அதுதான் இப்போது அவளுக்கு ஒன்றுமில்லையே”
சிறு வெட்கத்துடன் விலகியவனை “போய் குளித்து பிரெஷ் ஆகி வா. வீட்டிற்கு போவதாய் இருந்தால் அஜாவை அழைத்துச் செல்” தலையைக் கலைத்துவிட்டார். இன்னும் அவன் உடல் அடித்துப் போட்டது போல்தான் இருந்தது.
திரும்பி கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தவனுக்கு ஸ்ரீனிகா சொன்னது ஞாபகம் வந்தது. அவன் நெஞ்சில் கையூன்றி “ஒப்பரேசன் முடிந்து என்னைப் பார்க்க வரும் போது இந்த தாடி எல்லாம் எடுத்து தலைமுடி வெட்டி ஹன்ட்சம்மா வரணும். அப்பத்தான் உங்களிடம் பேசுவேன்” அதற்கு அவன் பதில் பேசமால் நெற்றியில் ஊதி தன்னுடன் அணைத்திருந்தான்.
ஐசியு கண்ணாடியின் ஊடே அவள் தெரிய கண்ணாடியில் பிரதிபலித்த தன் பிம்பத்தை கண்டவன் முகத்தில் இருந்த பத்து நாள் தாடியை தடவ அவன் இதழ்களில் மில்லி மீட்டர் புன்னகை அரும்பியது “அஜா” என்றவாறே முன்னே செல்ல நிம்மதி பெருமூச்சுடன் பின்தொடர்ந்தான் அஜா.
ஏற்கனவே ரிச்சர்ட் கொடுத்த கெடுவில் இரண்டு நாட்கள் கழிந்திருக்க இன்று மூன்றாவது நாள். அம்மா அப்பாவை வீட்டிற்கு போய் ரெஸ்ட் எடுத்து விட்டு மருத்துவர் வரும் நேரமான இரவு பத்து மணியின் பின்னர் வர சொல்லி விட்டு ரகாவனும் வத்சலாவும் கெளதமுடன் மருத்துவமனையில் நின்றார்கள்.
நதியாவும் இன்னும் வீட்டிற்கு சென்றிருக்கவில்லை. ஸ்ரீனிகா கண் விழிப்பதை பார்த்து விட்டு செல்வோம் என முடிவாய் சொல்லிவிட்டாள். எப்படியும் அனைவரும் அதிக நேரம் மருத்துவமனையில் நிற்கும் போது வீட்டில் தனியாக பாப்பாவை பார்த்துக் கொள்வது கடினம் என்று யாசோதாவும் அங்கேயே இருக்கட்டும் என்றுவிட்டார்.
பிள்ளைகளுக்காக யசோதா இரவில் போய்த் தங்கி வர பிரச்சனையின்றி சென்றது. கூடவே ஸ்ரீனிகா நிலா தீப் இருவரிடமும் சொல்லியிருந்தாள் “ஸ்ரீமா கொஞ்ச நாள் வெளியே போவேன் அந்த டைம் நீங்கள் இருவரும் குழப்படி இன்றி இருக்க வேண்டும், சரியா?” என்று ஸ்ரீமாவின் வார்த்தைகள் அவர்களுக்கு வேதம், அதை அப்படியே பின்பற்றினார்கள்.
அனைவரையும் மூன்று நாட்கள் விதவிதமாய் தவிக்க விட்டு ரிச்சர்ட் வந்திருந்த நேரம் கண்விழித்தாள் ஸ்ரீனிகா.
அவர் சில பரிசோதனைகளை மேற்கொண்டு விட்டு கௌதமை உள்ளே அழைக்க இறுகியிருந்த அவன் முகத்தைப் பார்த்துவிட்டு ராகவனும் கூடவே சென்றான்.
கௌதமை ஸ்ரீனிகாவின் முன் நிறுத்திய ரிச்சர்ட் கேட்டார் “இவரை உங்களுக்கு தெரியுமா?”
அறிமுகமற்ற பார்வையுடன் கௌதமைப் பார்த்த ஸ்ரீனிகா புருவத்தை சுருக்கிக் கேட்டாள் “யார் நீங்கள்?”