நீண்ட மியாமி கடற்கரையின் லாமர் உணவகத்தில் அடிக்கடி கைக்கடிகாரத்தை திருப்பி திருப்பி பார்த்தபடி யாருக்காகவோ காத்திருந்தாள் அந்த வெள்ளைக்கார பெண்.
காத்திருந்து காத்திருந்து இறுதியில் ஏமாற்றம் அடைந்தவளாக திரும்பி செல்ல எத்தனிக்கையில் கடலின் மேல் அங்குமிங்குமாக பறந்து கொண்டிருந்த பாரசூட்கள் தரையை நோக்கி வர அவற்றை விடுவித்துக் கொண்டு இறங்கிய இளைஞர்கள் சிலர் கைகளில் பெட்டியுடன் அவளை நோக்கி ஓடி வந்து சுற்றி வளைத்துக் கொண்டனர்.
எதிர்பாராது நிகழ்ந்த சம்பவத்தில் பயந்து போய் அவள் அசையாமல் அப்படியே நிற்க அங்கு உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்தவர்களும் சிலர் அதிர்ச்சியுடனும் ஒரு சிலர் புரிந்து கொண்டவர்களாக ஆர்வமுடனும் பார்வையிட ஆரம்பித்தனர்.
கையிலிருந்த பெட்டியை ஒவ்வொருவராக திறக்க அதற்குள்ளிருந்த அழகிய சிறிய ரக வயலினை எடுத்து அவளை சுற்றி சுற்றி வாசிக்க ஆரம்பித்தனர்.
அச்சத்தை பிரதிபலித்துக் கொண்டிருந்தவளது முகம் இப்போது மெல்ல மெல்ல சுவாரஷ்யமாக மாற அவளது உள்ளுணர்வை பொய்யாக்காமல் வேகமாக கரை நோக்கி வந்து சேர்ந்த ஸ்பீட் போட்டிலிருந்து பாய்ந்து இறங்கிய அந்த வெள்ளைக்கார வாலிபன் அவளை நோக்கி வந்தவன் முன்னால் மண்டியிட்டு தன் கையிலிருந்த சிறிய சிவப்பு வண்ண மோதிரப் பெட்டியை பிரித்து நீட்டினான்.
உள்ளிருந்த வைர மோதிரத்திற்கு நிகராக தன் முகமும் ஜொலி ஜொலிக்க நின்றிருந்தவளின் விழிகளை பார்த்தவண்ணம் “ஐ நோ தட் யூ அன்ட் மீ ஆர் ட்ரூலி மீன்ட் டு பீ டுகெதர்.. வில் யூ பீ மை வொய்ஃப்?”
முகம் முழுக்க பூரித்து விகசிக்க கண்ணோரம் லேசாக துளிர்த்திருந்த கண்ணீருடன் “அஃப்கோர்ஸ் ஹனி ஐ வில்” என்று பதிலளித்தவளின் விரல் பற்றி அவன் மோதிரத்தை அணிவித்து முத்தமிட கடற்கரையிலும் உணவகத்திலும் கூடியிருந்த அத்தனை மக்களும் உற்சாக கூச்சலிட்டு அவர்களை வாழ்த்திக் கொண்டிருந்தனர்.
இந்த காட்சியை உணவகத்தில் அமர்ந்து கொண்டு தானும் ரசித்து ஆர்ப்பரித்தபடியே அலைப்பேசியில் அழகாக படம்பிடித்துக் கொண்டிருந்தாள் ஜியாஶ்ரீ.
ஆதீஸ்வரனின் குட்டி தேவதை.
எந்த குறையும் இல்லாமல் உத்ரா, மித்ரேஷ் இருவரின் ஒட்டுமொத்த அழகையும் ஒன்றாக்க் கொண்டு பிறந்திருந்தாள்.
உருவத்தில் மட்டும்தான் பெற்றவர்களைப்போல.. வேறு எந்தவிதத்திலும் அவர்களுக்கும் அவளுக்கும் சம்மந்தமே இல்லை. அவர்கள் இருவரின் குணங்களுக்கு நேரெதிரான குணங்களை கொண்டவள்.
எப்போதுமே துறுதுறுவென அலைப்பாயும் நீண்ட பெரிய விழிகள் அவளுக்கு. வெளிப்பார்வைக்கு சுட்டித்தனம் போல தெரிந்தாலும் உள்ளுக்குள் ஆழ்ந்த நிதானம் கொண்டவள். தன்னலமில்லாமல் அன்பு செலுத்துவதிலும் மற்றவர்கள் மனமறிந்து செயற்படுவதிலும் கெட்டிக்காரி.
அவளுக்கு அவளுடைய குடும்பம்தான் எல்லாமுமே அவர்களுக்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லக்கூடியவள்.
ஆக மொத்தத்தில் ஆதீஸ்வரனின் மினி வெர்ஷன் ஜியாஶ்ரீ.
“சோ க்யூட்ல தியா.. அவன் ப்ரபோஸ் பண்ணும்போது அவ முகத்துல வந்து போன ஃபீலிங்ஸ் பார்த்தியா.. செம்ம” என்றாள் விழிகள் மின்ன தான் படம்பிடித்த காட்சியை மீண்டும் அலைப்பேசியில் ஓடவிட்டு பார்த்தபடி.
தியா ஏதோ சொல்லவர அவளை முந்திக்கொண்டு “இதென்ன பிரமாதம் ஜியா பேபி நான் உங்க அக்காவுக்கு ப்ரபோஸ் பண்ணத நீ பார்த்திருக்கனுமே” என்றான் அஜய்.. தியாவின் கணவன்.
“எது மாமா நீங்க கவிதைங்கிற பெயர்ல கேவலமா கிறுக்கி அக்கா நோட் புக்ல ஒளிச்சி வெச்சதுதானே.. அதை முதல்ல எடுத்து படிச்சதே நான்தான். அப்பவே சொன்னேன் வேண்டாம்க்கா இந்தாளுக்கு நோ சொல்லிடுன்னு.. எங்க இவ கேட்டாதானே” என்றாள் சலித்தபடி.
பதிலுக்கு தியாவும் “என்னடி பண்றது நீ எவ்வளவு சொல்லியும் கேக்காம விட்டேன் எல்லாம் என் நேரம்” கணவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி சோகமாக கூற,
“என்ன அக்காவும் தங்கச்சியும் சேர்ந்து ஓட்டுறீங்களா” என்று கோபமாக கேட்டவன் பின்பு கடகடவென சிரிக்க ஆரம்பித்தான்.
“ஹா எனக்குதானே அதெல்லாம் சூப்பராத்தான் வந்து சிக்குவான்” என்றாள் “எங்க டாடி ஶ்ரீமாவ முதல் தடவை பார்த்த உடனே காதல்ல விழுந்த மாதிரி அவனும் என்னை பார்த்தவுடனே அப்படியே கண்ணை மூடிக்கிட்டு காதல்ல விழுந்துடனும்… எங்க டாடி ஶ்ரீமாவ தாங்குற மாதிரி அவனும் என்னை கண்ணுக்குள்ள வெச்சி பார்த்துக்கனும்.. நான் மனசுல நினைக்கிறதெல்லாம் அவன்கிட்ட சொல்றதுக்கு முன்னாடியே அவன் செஞ்சி முடிச்சிருக்கனும்” அவள் சொல்லிக்கொண்டே போக இடையிட்ட தியா,
“ஏய் ஜியா உனக்கு எப்படி ப்ரபோஸ் பண்ணனும்னு ஏதோ சொல்லுவியே அதையும் உன் மக்கு மாமாவுக்கு சொல்லு.. அப்படியாவது இந்த மனுஷன் தெரிஞ்சிக்கட்டும்” என்றாள் கணவனை முறைத்துக்கொண்டு
“அதுவா…” என்றவள் விழிகள் கனவில் மிதக்க கூறினாள் “அது வந்து மாமா அவன் என்கிட்ட முதல் தடவை லவ் சொல்லும்போது ஒரு தனி ஐலன்ட்ல நானும் அவனும் மட்டும் இருக்கனும்.. அப்படியே குளுகுளுனு ஸ்னோ கொட்டிட்டு இருக்கும்போது சுத்தியும் இருட்டான இடத்துல கேண்டல் லைட்ஸ் வெளிச்சத்துல ரொமாண்டிக்கா அவன் என்கிட்ட வந்து என் கண்ணை பார்த்து காதல் சொட்ட சொட்ட ப்ரபோஸ் பண்ணனும்”
குபீரென சிரித்தான் அஜய்..
“இருட்டுல ப்ரபோஸ் பண்றதுக்கு நீ பேயைதான் லவ் பண்ணனும்.. ஏது உன்னை பார்த்ததும் கண்ணை மூடிக்கிட்டே காதல்ல தொபுக்குனு விழனுமாமே ஹாஹாஹா.. நீ இப்படி கலர் கலரா கனவு காண்றதெல்லாம் பார்த்தா எனக்கென்னமோ ரொமான்ஸ்னாலே மூஞ்சி சுழிக்குற ஏதோ ஒரு முசுட்டு முட்டா பீஸ்தான் உனக்கு வந்து வாக்கப்படும்னு தோணுது” என்று மேலும் சிரித்தவனை கொலைவெறியுடன் முறைத்தாள் ஜியாஶ்ரீ.
“தியாக்கா உன் புருஷன வாயை மூடிட்டு இருக்க சொல்லு” என்று கரண்டியை கையில் எடுத்தவள் “அப்புறம் மாமான்னு கூட பார்க்காம மண்டைலயே போட்ருவேன்” என்றாள் கடுப்புடன்.
அதே சமயம் தியாவின் குழந்தைகளை கடலோரமாக விளையாட அழைத்துச் சென்றிருந்த தேஜஸ்வினி அங்கு வந்து சேரவும் “அச்சோ இங்கேயும் வந்து உங்க சண்டைய ஆரம்பிச்சிட்டீங்களா” என்றவள் மருமகனிடம் திரும்பி “அஜய் அவதான் சின்னப்பொண்ணுனா நீயும் அவகூட சேர்ந்து வம்பிழுத்துட்டு இருக்கியே” என்றாள்.
“நீங்க வேற அத்தே. நான் எங்க வம்பிழுத்தேன் இதுங்க ரெண்டும்தான் என்னை ஓட்டிட்டு இருக்குதுங்க” என்றவனை இடையிட்டு “பாருங்க பெரிம்மா எனக்கு முரட்டு முட்டா பீஸ்தான் கிடைப்பானாம் சாபம் கொடுக்கிறார்” கூறிய ஜியாவை தோளோடு அணைத்துக் கொண்டாள் தேஜஸ்வினி.
“உனக்கு ஆதி மாதிரியே…” என்றவளுக்கு ஆதியால் ஶ்ரீனிகா அனுபவித்த துன்பங்கள் ஒரு நொடி நினைவிலாடவும் “ம்ஹூம் ஆதிய விடவும் பெட்டரான ஒருத்தன் எங்கேயாவது பொறந்திருப்பான் செல்லக்குட்டி” என்றாள்.
“ஆமா ஆமா” என்றான் அஜய் அடக்கப்பட்ட சிரிப்புடன் “எங்க பொறந்திருக்கானோ அந்த மகராசன்?”
**************************************
காலை வேளையில் சமயலறைக்கும் டைனிங் ஹாலுக்குமாக பரபரவென்று ஓடிக்கொண்டிருந்த கஸ்தூரியை கீழ்க்கண்ணால் பார்த்தவாறே சாப்பாட்டு மேசையை வந்தடைந்தாள் ரேணுகா.
ரேணுகாவை கண்டதும் அவளுக்கென தட்டை எடுத்து வைத்து சுடசுட உணவு வகைகளை இயந்திரகதியில் பறிமாற ஆரம்பித்தாலும் இத்தனை காலம் இல்லாத பூரிப்பு கஸ்தூரியின் முகத்தில் விரவியிருப்பதை உணர்ந்து மற்றவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
‘இத்தன வருஷமா அடங்கி, ஒடுங்கி அழுமூஞ்சி மாதிரி ஒரு ஓரமா கிடந்தவ.. இப்ப எங்கேயிருந்து இவளுக்கு இத்தன மிதப்பு வந்துச்சு’
தட்டில் வைத்திருந்த உணவை ஒரு வாய் உண்டவள் வேண்டுமென்றே முகத்தை சுளித்தாள் “வரவர உன் சமையல் ரொம்ப கேவலமா வாயிலயே வைக்க முடியாத மாதிரி மாறிட்டு வருது.. என்ன ஆதீஸ்வரன் சம்மந்தியாக போறோம்னு திமிறா? இத்தன வருஷமா உனக்கும் உன் பசங்களுக்கும் என் புருஷனும் பையனும்தான் அத்தனையும் செஞ்சிட்டு இருந்தாங்க.. இப்ப உன் பையன் பணக்கார பொண்ண காதலிச்சிட்டு வந்ததும் உனக்கு நாங்கல்லாம் எகத்தாளமா போயிட்டோம்ல.. இல்லைனா உன் பையன விட ரெண்டு வயசு பெரியவன் என் பையன் குத்துக்கல்லு மாதிரி இருக்கும்போது உன் புள்ளைக்கு முதல்ல கல்யாணம் பண்ணி வைக்க நினைப்பியா? என்ன பழசெல்லாம் மறந்து போச்சா………” என்று ஆரம்பித்து கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அநாதையாக கஸ்தூரியும் அவளது பிள்ளைகளும் ரேணுகாவின் வீட்டுக்கு வந்ததிலிருந்து நேற்றிரவு அவர்கள் வீட்டில் கஸ்தூரி சாப்பிட்ட இரவு உணவு வரை ஒரு இணுக்கு விடாமல் அத்தனையும் சொல்லிக்காட்ட கஸ்தூரியின் காதுகளில் இரத்தம் வராத குறைதான்.
வழக்கம்போல தன் மனதிலிருந்த வன்மம் அத்தனையும் கக்கி முடித்தவள் கஸ்தூரி அழுவதை கண்டு அப்போதைக்கு அங்கிருந்து அகன்றாள் ரேணுகா.
இருந்தும் அவள் மனம் ஆறிய பாடில்லை. தனக்கு அடிமையாக இத்தனை காலம் காலடியில் கிடந்தவள் இப்போது தனக்கு நிகரான இடத்தில் சம்மந்தம் வைத்துக் கொள்வதை ரேணுகாவினால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.
‘இந்த அன்னக்காவடிங்களுக்கு ஆதீஸ்வரன் வீட்டு பொண்ணு கேக்குதா’ கனன்று கொண்டே சென்று கொண்டிருந்தவளுக்கு ஹாலில் முழுநீளத்துக்கு மாட்டியிருந்த மகனின் புகைப்படம் கண்ணில் படவே அதே கடுப்புடன் அவன் பிம்பத்தை ஏறிட்டாள்.
“இவன் காலாகாலத்துக்கு கல்யாணம் பண்ணியிருந்தா நான் எதுக்கு இப்படி அவஸ்தை படப்போறேன்.. அந்த ஷன்மதிதான் வேண்டாம்னா நான் இவனுக்கு எத்தனை பொண்ணுங்களை தேடித்தேடி கொண்டு வந்தேன்.. ஒருத்திய திரும்பி பார்த்தானா? அவளும் வேண்டாம் வேற எவளும் வேண்டாம்னு விஸ்வாமித்திரன் மாதிரி சுத்திட்டு இருக்கான்” மகனை நினைத்து ரேணுகாவுக்கு கோபம் கோபமாக வந்தது.
அன்னையின் வயிற்றெரிச்சலை கட்டிக்கொண்ட அந்த அருமை மைந்தன் அப்போது தன்னுடைய கருப்பு நிற bugatti la voiture noire வில் பறந்து கொண்டிருந்தான்.
அவன் அருகில் அமர்ந்திருந்த சைத்ராவுக்கு வயிறு மட்டுமல்லாமல் தலை, மூளை, கை, கால் என அத்தனையும் கலக்கிக் கொண்டிருந்தது.
காரின் கண்ணாடியை ஏற்றிவிட்டிருந்தால் கூட பரவாயில்லை. இவன் அதையும் இறக்கிவிட்டு மின்னல் வேகத்தில் காற்றை கிழித்துக்கொண்டு வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். சீட் பெல்ட் மட்டும் இல்லாவிட்டால் அவள் சருகாகி காற்றில் பறந்திருப்பாள்.
பயத்துடன் அவனை திரும்பித் திரும்பி பார்த்தாள். பக்கவாட்டு தோற்றத்தில் அவன் முகம் பாறையென இறுகியிருப்பது தெரிந்தது. காற்றில் அலைபாயும் கேசம் மட்டும் இல்லையெனில் இவன் மனிதனா அல்லது நேர்த்தியாக செதுக்கி வைத்திருக்கும் சிற்பமா என அவளுக்கே சந்தேகம் வந்திருக்கும்.
அந்த நொடியில் அவளுக்கிருந்த பயம் மறைந்து அவனை ரசிக்க ஆரம்பித்தவள் அவன் ஹார்னை அழுத்திய ஓசை காதை கிழிக்கவும் நனவுக்கு வந்தவளாக “சை ஒரு நிமிஷத்துல இந்த சிடுமூஞ்சிய போய் சைட் அடிச்சிட்டோமே” என்று தன்னைத்தானே நொந்து கொண்டாள்.
ஒரு காலத்தில் மற்ற பெண்களை போல் அவளும் அவனை ரசித்து பார்வையிட்டதெல்லாம் என்னவோ உண்மைதான். ஆனால் அவனைப்பற்றி எப்போது தெரிய வந்ததோ அப்போதிருந்தே அவனுக்கு தலையால் கும்பிடு போட்டுவிட்டு தானுன்டு தன் வேலையுண்டு என்று வீணாக அவனிடம் எதையும் வைத்துக் கொள்வதில்லை.
‘இப்ப என்ன நடந்து போச்சுனு வண்டிய இவ்ளோ வேகமா ஓட்டிட்டு இருக்கான் கிறுக்குப்பய. இன்னைக்கு ராம்குமார் கூட மீட்டிங் இருக்குனு சொல்றதுக்கு பதிலா ஷன்மதி மேம் அப்பா ராம்குமார்னு வாய் தவறி சொன்னது ஒரு குத்தமா.. என்னமோ தெரியல இவன பார்த்தாலே அந்த ஷன்மதிதான் நியாபகம் வர்ரா. அந்த பழக்க தோஷத்துல அவ பெயர சொன்னதுக்கு இப்படி என்னைய பாதாள லோகத்துக்கு கூட்டிட்டு போய் மர்கயா பண்ணி விடப்போறவன் மாதிரி வண்டிய ஓட்டிட்டு இருக்கான் கிராதகன்’ என்றவளுக்கு உள்ளே திக்திக் என்றிருந்தது.
‘கடவுளே எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகல.. நான் வாழ்க்கையில எந்த சந்தோசத்தையும் அனுபவிக்கல. இப்படி இவன்கூட கார் ஆக்ஸிடன்ட் ஆகி அல்பாயுசுல சாகுறதுக்கு நீ என்னை படைக்காமலே இருந்திருக்கலாம்’
தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தவள் திடீரென அவளது உடல் முன்னோக்கி தூக்கிப்போட கிரீச்சென்ற ஒலியுடன் கார் நிற்கவும் பயத்தில் விழிகளை மூடி காதைப்பொத்திக் கொண்டாள்.
ஒருசில நொடிகள் கழித்தே விழிகளை திறந்து பார்த்தாள் ‘சொர்க்கத்துக்கு வந்துட்டோமா என்ன?’
“ராம் கன்ஸ்ரக்ஷன்ஸ்” என்று மின்னிக் கொண்டிருந்த அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தை கண்டதும் ‘அட உயிரோடதான் இருக்கோம்’ என்று ஆனந்தப்பட்டவள் மற்றவன் காரிலிருந்து இறங்கிச் செல்வதை உணர்ந்து அவசர அவசரமாக தானும் இறங்கியவள் அவன் காரில் ஏறும்போது கழற்றி பின்பக்க சீட்டில் போட்டுவிட்டிருந்த அவனுடைய ப்ளேசரை எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக அவனை பின்தொடர ஆரம்பித்தாள்.
தன் வேக நடையுடன் சைத்ராவின் கையிலிருந்த பிளேசரை தன் கைக்கு மாற்றிக் கொண்டவன் லாவகமாக அதனை அணிந்து கொண்டு முன்னேறினான் யாதவ வர்மன்.
மாநிறத்தில் நெடுநெடுவென்று ஆறடிக்கும் மேலான உயரமும் அதற்கேற்றார்போல் உறுதியான உடலமைப்பும் ஆளை துளைக்கும் விழிகள், கூர் நாசி, அழுத்தமான உதடுகள் என்று சர்வலட்சணம் பொருந்திய முக அமைப்பை கொண்டிருந்தாலும் மருந்துக்கு கூட அந்த முகத்தில் சிரிப்பிருக்காது.
அதற்காக சிடுசிடுவென்றோ, உர்ரென்றோ இருக்கவும்மாட்டான்.. எந்த உணர்வையும் பிரதிபலிக்காத அழுத்தமான முகம்.
யாதவ் வந்துவிட்டதை அறிந்து விரைந்து அலுவலக வாயில் வரை வந்திருந்த ராம்குமார் அவனை கண்டதும் அவர் மனதில் எதையோ இழந்துவிட்ட உணர்வு தோன்றியது.
ஆனாலும் அவர் தளர்ந்துவிடவில்லை.. வழக்கம்போல லேசாக பொறியாய் கனன்று கொண்டிருந்த அந்த நம்பிக்கை தீயை இறுகப்பற்றிக் கொண்டார்.
அதற்கு அவனுடைய வருகையே சாட்சி.. எந்தக்கொம்பனாக இருந்தாலும் அவனுடைய அலுவலகத்திற்கு சென்று அனுமதி பெற்று அவன் தன்னுடைய அலுவல்கள் அத்தனையும் முடித்துவிட்டு வரும்வரை காத்திருந்து அவனைப் பார்வையிடுவதான் அங்கு எழுதப்படாத விதியாக இருந்தது. ஆனால் ராம்குமார் விடயத்தில் மட்டும் அவனே அவருடைய அலுவலகத்திற்கு வந்துவிடுவான்.
“ஹலோ யாதவ்” மனம் நிறைந்த புன்னகையுடன் அவனை அணைத்து வரவேற்றார் ராம்குமார் “ஹவ் ஆர் யூ யங் மேன்”
அதிக அலட்டல் இல்லாமல் அதே சமயம் அவனுக்கே உரித்தான மிடுக்குடன் “டூயிங் கிரேட்” என்றவனின் பார்வை அந்த இடத்தில் யாரையோ தேடியதோ என்னவோ அவன் எதிர்பார்த்து வந்தது இல்லாமல் போனதில் விழிகளில் படர்ந்த மெல்லிய ஏமாற்றம் இல்லையோ எனும் வகையில் கணப்பொழுதில் மறைக்கப்பட்டிருந்தது.
அவனையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ராம்குமாருக்கு அவன் முகத்திலிருந்து எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறு பெருமூச்சுடன் அவனை மீட்டிங் ஹாலுக்கு அழைத்துச் சென்றார்.
யாதவ வர்மனின் உலகப்புகழ் பெற்ற நட்சத்திர விடுதிகளான ‘வீனஸ் ஹோட்டல் அன்ட் ரிசார்ட்ஸ்’ இந்தியா முழுவதிலும், உலகின் முக்கிய நகரங்கள் அத்தனையிலும் காணப்பட்டன. அவனது தாய்வழிப் பாட்டனாரின் காலத்தில் சங்கிலித்தொடராக ஆரம்பிக்கப்பட்ட நட்சத்திர ஹோட்டல்களில் அவ்வப்போது விரிவுபடுத்தி சில பல மாற்றங்கள் செய்வது வழக்கமாக இருந்து வந்தது.
அப்படித்தான் இப்போதும் மும்பையில் உள்ள நட்சத்திர விடுதிகள் இரண்டினை மேலும் விரிவுபடுத்தும் பணி ராம்குமாரின் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதற்கான பேச்சுவார்த்தைகளுக்காகத்தான் அவரது அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தான்.
கிட்டத்தட்ட இரண்டு மணிநேர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இரு தரப்பினருக்குமே திருப்தியுற்ற நிலையில் யாதவ் அங்கிருந்து கிளம்ப தயாராக அவனை வழியனுப்பும் விதமாக ராம்குமாரும் அவனுடன் பேசியபடி வந்திருக்க அதே சமயம் அங்கு மற்றுமொரு கருப்பு நிற கார் ஒன்று வந்து நின்றது.
அந்த காரை கண்டதும் யார் பார்த்தார்களோ இல்லையோ சைத்ரா ஆர்வமுடன் விழிகளை தீட்டிக்கொண்டு பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.
கார் கதவை திறந்து கொண்டு தரையில் பதிந்த சாண்டல்ஸ் அணிந்த அழகிய வெண்பஞ்சு பாதம் நிச்சயம் இந்த பாதங்களுக்கு சொந்தக்காரி பேரழகியாக இருக்க வேண்டுமென கட்டியம் கூறிக்கொண்டிருக்க பார்ப்பவர்களின் அந்த ஊகத்தை பொய்யாக்காமல் ஐந்தரை அடிக்கும் மேலாக பார்த்து பார்த்து செதுக்கி வைத்த தங்க விக்கிரகம் போன்ற அழகுடன் காரிலிருந்து இறங்கினாள் ஷன்மதி ராம்குமார்.
அழகுதான்.. பேரழகு.. மிகவும் ஆபத்தான அழகும்கூட..
அவளைக் கண்டதும் யாதவ வர்மனின் விழிகளில் தோன்றி மறைந்து போன மின்னலை ராம்குமார் கவனித்தாரோ இல்லையோ சைத்ராவின் விழிகள் கண்டுகொண்டன.
‘ம்க்கும் இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல’ என்று நினைத்துக் கொண்டாள் அவள். அவளுக்குதான் இவர்களின் மொத்த வரலாறும் தெரியுமே.
அங்கு நின்றிருந்த தந்தையிடமோ மற்ற யாரிடமோ கவனத்தை செலுத்தாமல் யாதவின் முகத்தில் அழுத்தமாக பார்வையை பதித்தபடி அவர்களை நோக்கி வந்தாள் ஷன்மதி.
அவளுடைய அந்த பார்வைக்கு சற்றும் சளைக்காத பார்வை அவனிடத்திலும்.
இருவரின் முகங்களிலும் ஒருவித அழுத்தத்தை தவிர வேறு எந்தவித உணர்வுகளும் பிரதிபலிக்காத வண்ணம் கனகச்சிதமாக பார்த்துக் கொண்டனர்.
அதிலெல்லாம் வெகு கில்லாடிகள்தான். மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களை தவிர வேறு எவராலும் கண்டுகொள்ள முடியாது.
இருவரும் ஒருவரையொருவர் எதிர்பார்த்துத்தான் வந்திருந்தார்கள். பார்க்காதபோது ஏமாற்றமும் இருவரும் பார்த்துக்கொள்ளும் போது கண்ணில் மின்னலும் தோன்றுவதெல்லாம் காதலினால் என்று கேட்டால் அதுதான் கேள்விக்குறி.
ஒரு காலத்தில் இருந்தது…
காதல்.. பார்த்தாலே பற்றிக் கொள்ளும் தீராக்காதல்..
இப்போதும் இருவருக்குள்ளும் பற்றிக்கொண்டுதான் இருக்கிறது..
வன்மத்தீயாக..
மூன்று ஆண்டுகள் காதலித்தவர்கள் பிரிந்தே இப்போது முழுதாக ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன.. ஆனாலும் இன்னுமே அந்த காதலின் தாக்கத்திலிருந்து இருவராலும் வெளிவர முடியவில்லை.
அவளுடைய இடத்தில் இன்னொருத்தியை வைத்து அவனாலும், அவனுடைய இடத்தில் இன்னொருவனை வைத்து அவளாலும் நினைத்துப் பார்க்க முடியாமல் இப்போது வரை இருவரும் சிங்கிளாகவே சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.
இத்தனைக்கும் அவர்களுடைய காதலுக்கு குடும்பமோ, ஜாதியோ, இனமோ, அந்தஸ்தோ எதுவுமே தடையாக இருக்கவில்லை.
அவர்கள் இருவரும் மட்டும்தான் தடையாக இருந்தனர்.
சுருங்க சொல்லப்போனால் இருவருமே ‘ஈகோ பிடித்த கழுதைகள்’
ஷன்மதி அருகில் வரும்வரை பார்த்திருந்தவன் அவள் அவர்களை நெருங்கி ஏதோ சொல்லப்போகும் நேரம் கைக்கடிகாரத்தை பார்த்துவிட்டு ராம்குமாரிடம் திரும்பி விடைபெற்றான் யாதவ வர்மன்.
பல்லைக்கடித்தாள் ஷன்மதி.
அவனுக்கு அதுதான் வேண்டும். அடக்கப்பட்ட கோபத்தில் சிவந்த அவள் முகத்தை ஓரக்கண்ணால் ரசித்தபடியே அங்கிருந்து கிளம்பினான்.
ஒருவரையொருவர் வெறுப்பேற்றி பார்ப்பதில் இருவருக்குமே அத்தனை ஆனந்தம். இந்த குணம் இன்னொரு அப்பாவி பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்கி அவர்கள் வாழ்க்கையிலும் மொத்தமாக விளையாடி விடப்போகிறது என்பதை இருவருமே அறிந்திருக்க வாய்ப்பில்லை.
சைத்ராவுக்குதான் ‘ஹப்பாடா’ என்றிருந்தது. ஒருவேளை ஷன்மதி முந்திக்கொண்டு அவனை கடுப்பேற்றி விட்டிருந்தாளானால் மீண்டும் பாதாள லோகத்துக்கு காரை ஓட்டிக்கொண்டு செல்ல ஆரம்பித்து விடுவான். அலுவலகம் சென்று சேரும்வரை அவள்தான் உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டும்.
இப்போது பயமில்லை. தைரியமாக செல்லலாம்.
அவள் நினைத்தது போலத்தான் திரும்பி செல்லும்போது காரை வேகமாகத்தான் ஓட்டிக்கொண்டிருந்தான் ஆனால் வரும்போது இருந்த அதீத வேகம் இப்போது இல்லை.
அவனை திரும்பி திரும்பி பார்த்த சைத்ராவுக்கு வழக்கம்போல இவர்களுடைய காதலை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பதென்று தெரியவில்லை. இவர்களால் சேர்ந்து வாழவும் முடியவில்லை அதே சமயம் மொத்தமாக பிரிந்து வேறு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் முடியவில்லை.
‘இவங்க ரெண்டு பேரும் கொஞ்சம் விட்டுக் கொடுத்து புரிதலோட இருந்திருந்தா கூட இன்னேரத்துக்கு குழந்தை குட்டினு சந்தோசமா இருந்திருக்கலாம்’ என்று நினைத்தவளுக்கு நினைத்ததை சொல்லத்தான் முடியாது போனது.
அருகில் இருப்பவன் அவளுக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளி.. கப்சிப்பென வாயை மூடிக்கொண்டு வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டாள் ‘நமக்கெதுக்கு வம்பு’