எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வரமாக நீ 17

S.Theeba

Moderator
வரம் 17

அன்று ஞாயிற்றுக்கிழமை. வழமைபோல வர்ஷனா சமையலறையை உருட்டிக் கொண்டு இருந்தாள். யூடியூபில் புதுவகையான சமையல் ஒன்றைப் பார்த்து விட்டு அதனை சமைக்க(??) முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
மாலதி வரவேற்பறையில் தொலைக்காட்சியில் மூழ்கிப் போயிருந்தாள்.

அப்போது நண்பர்களுடன் அரட்டை அடித்து விட்டு வந்த வருணியன் "லஞ்ச் முடிஞ்சுதாம்மா? ரொம்பப் பசிக்குது" என்றான்.
"கொஞ்சம் பொறுத்துக்கடா. வர்ஷூ சமையல் பண்றா..."
"ஐயையோ! அம்மா... நான் உயிரோடு இருக்கிறது உங்களுக்குப் பிடிக்கலையா?"
"ஏன்பா அப்படிச் சொல்ற?"
"பின்ன என்னம்மா அவதான் கொலை பண்ணுற ஆர்வத்துடன் சமையல் பண்ணுறான்னா, நீங்களும் எதுவும் பண்ணாம டீவியப் பார்த்துக் கொண்டிருக்கிங்க"

அப்போது சமையலறையிலிருந்து கரண்டியுடன் அங்கே வந்த வர்ஷனா " “டேய் முட்ட போண்டா, என் சமையலையா குறை சொல்லுறாய். உனக்கு இன்று சாப்பாடே இல்லை. பட்டினிதான்"
"உன் சமையலை சாப்பிட்டு சாகுறதுக்கு நான் பட்டினி கிடக்குறதே மேல்"
"டேய்... உன்னை என்ன பண்ணுறன் பார்..." என்று கத்தியபடி அவனைத் துரத்தத் தொடங்கினாள். அவனும் அவளுக்குப் போக்குக் காட்டியபடி ஓடினான்.
"வர்ஷூ... அடுப்புல ஏதோ தீயும் வாசனை வருதே..." என்று மாலதி சொல்லவும் அவனைத் துரத்துவதை மறந்து, "ஐயையோ..." என்று பதறியபடி சமையலறைக்குள் ஓடினாள்.

மதியம் அவளது சமையலை வயிறு நிறைய உண்டுவிட்டுப் ஏப்பத்துடன் சோஃபாவில் வந்து படுத்தான் வருணியன்.
"பார்த்திங்களாம்மா, என் சமையலைக் குறை சொன்னவன் இப்போ எப்படி சாப்பிட்டான் என்று"
"கண்ணு வைக்காதடி... ஆண் பிள்ளை நல்லா சாப்பிடனும்"
"அப்போ பெண்பிள்ளைகள் கொஞ்சமாய் சாப்பிடனுமா? பார்த்திங்களாப்பா அம்மாவோட நியாயத்தை?" என்று சாப்பிட்டுக்கொண்டு இருந்த தந்தையிடம் சலுகை கொஞ்சினாள்.
"அதானே என்ன நியாயம் மாலதி?" என்று கண்ணடித்தபடி கேட்டார் கலையரசன்.
"ஐயோடா.. நான் எதுவுமே சொல்லல. ஆளை விடுங்க" என்றாள் மாலதி.

சாப்பிட்டு முடித்ததும் வீட்டினர் எல்லோரும் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது கலையரசன் மாலதியிடம் கண்ணைக் காட்டினார். அதற்கு இல்லை என்று தலையை ஆட்டினாள் மாலதி.
"என்ன நடக்குது இங்கே? புருஷன் பொண்டாட்டி இரண்டு பேரும் கண்ணாலேயே பேசிக்குறிங்க. நாங்க இங்கே இருக்கவா? போகவா?" என்று கேட்டாள் வர்ஷனா.
"வாலு... சும்மா இருடி" என்றாள் மாலதி.

அப்போது கலையரசன் "வர்ஷாம்மா... நாங்க உனக்கொரு மாப்பிள்ளை பார்த்திருக்கோம். பையன் ஐரி ஃபீல்டுல அசிஸ்டன்ட் மானேஜரா வேர்க் பண்ணுறார். இரண்டு அண்ணன்கள். இருவரும் கல்யாணமாகி ஃபாரினில் செட்டிலாயிட்டாங்க. அம்மா மட்டும்தான் பையனோட. ரொம்ப நல்ல ஃபேமிலி. சம்பந்தம் பேசுவமா?"
"வாவ் அக்காவுக்கு கல்யாணமா? சீக்கிரம் பண்ணுங்கப்பா. இந்தத் தொல்லைய அவ புருஷன் வீட்டுக்கு அனுப்பி வைச்சிடுவம்." என்றான் வருணியன். அவளுக்கு ஏனோ அழுகை வந்தது. அவள் மனக் கண்முன் யதுநந்தனின் உருவம் வந்தது.

அவள் அழுவதைக் கண்டதும் வருணியன் சொன்னதைக் கேட்டுத்தான் அவள் கலங்குகிறாள் என்று எண்ணிய கலையரசன்
"டேய்.. என் பொண்ணு உனக்குத் தொல்லையா? இது என் மகாலட்சுமிடா" என்று அவளை ஆதரவாக அணைத்தவர், "அப்படியில்லை கண்ணா, நல்ல சம்பந்தம் தேடி வந்திருக்கு. அதுதான்... ஆனால் உனக்கு விருப்பம் என்றால் மட்டும் தான் மேற்கொண்டு பேசுவேன்" என்றார் அவளிடம்.
"அக்கா, நீ யாரையாவது லவ் பண்ணுறாயா?" என்று பட்டெனக் கேட்டான் வருணியன்.
அவன் அப்படிக் கேட்கவும் திருதிருவென முழித்தாள் வர்ஷனா.
"என் பொண்ணுக்கு நான் சுதந்திரத்தைக் கொடுத்திருக்கேன். அப்படியிருந்தால் அவள் என்னிடம் நிச்சயம் சொல்லியிருப்பாள்"
"இல்லையப்பா நான் சும்மாதான் கேட்டேன்" என்றான் வருணியன்.

அங்கிருந்து எழுந்து சென்ற மாலதி ஒரு கவருடன் வந்தாள். அதனை வர்ஷனாவிடம் கொடுத்துவிட்டு "இதில் அந்தப் பையனோட ஃபோட்டோ இருக்கு. பார்த்துவிட்டு உன் பதிலைச் சொல்லு. அவசரமில்லை. நீ நிதானமாக யோசித்துச் சொல்லு. உன் வாழ்க்கை, உன் முடிவுதான் எங்கள் முடிவு." என்றாள்.

அந்தக் கவரை வாங்கிய வர்ஷனா தன் அறைக்குள் சென்றாள். அதனைப் பிரித்துக் கூடப் பார்க்கவில்லை. மேசையில் போட்டுவிட்டு கட்டிலில் விழுந்தாள்.
'என் மனம் ஏன் இப்படித் தவிக்கின்றது. யதுவின் நினைவுகள் என்னைப் பாடாய் படுத்துகின்றனவே. நான் அவரைத் தீவிரமாகக் காதலிக்கிறேனா? அவர் ஒரு குழந்தையின் தந்தை. நான் அவரைக் காதலிப்பது சரியா? ஆனால், அவருக்கு என்னைப் பிடிக்காதே. இந்தக் காதல் நிலையற்றது. நான் இப்போது என்ன செய்ய?' என்று மனதிற்குள் புலம்பினாள். அவள் மனதின் கேள்விகளுக்கான பதிலை யார்தான் சொல்வர்.

???

திங்கட்கிழமை அலுவலகத்தில் வேலை அவளை நெட்டித் தள்ளியது. புது புரொஜெக்ட் ஒன்று முடிவாகியிருந்தது. நாளை அதற்கான ஒப்பந்தம் தயாராவதோடு, திட்டம் குறித்த மேலதிக தகவல்களை நாளை ஒப்படைக்க வேண்டும். அது தொடர்பான வேலைகளை சிவானந்த் ரகசியமாகச் செய்து கொண்டிருந்தான். எனவே, வேறு யாரிடமும் பொறுப்பை ஒப்படைக்காது தந்தையின் ஆலோசனைக்கமைய வர்ஷனாவைக் கொண்டு வேலைகளைச் செய்தான்.

அலுவலக நேரம் முடிந்தும் வேலை இழுக்கவும் தன் வீட்டிற்குத் தகவலைக் கூறிவிட்டு சலிக்காது வேலையில் ஈடுபட்டாள். அனைத்தும் முடிய இரவு எட்டு முப்பதைத் தாண்டிவிட்டது. சிவானந்த் அவளைக் காரில் அழைத்துச் சென்று வீட்டில் விடுவதாகக் கூறினான். அவள் அதனை மறுத்துவிட்டாள். தான் ஸ்கூட்டியிலேயே வீடு செல்வதாகவும் தனக்கு எந்தப் பயமும் இல்லை என்றும் துணிவாகக் கூறிவிட்டாள்.

ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டாள். பாதி தூரம் சென்றிருப்பாள். ஸ்கூட்டி திடீரென நின்று விட்டது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பார்த்தாள். அது ஸ்ரார்ட் ஆக மாட்டேன் என்று அடம்பிடித்தது. ரென்ஷனான வர்ஷனா ஸ்கூட்டியை காலால் உதைத்தாள். "ரொம்பத்தான் பண்ணுறடி. இப்போ எதுக்கு அடம் பிடிக்குற? உன் கூட டூ விட்டுடுவன் பார்த்துக்கோ" என்று ஸ்கூட்டியுடன் பேசினாள். "நீ சரிவர மாட்டே. போ..." என்றுவிட்டு தந்தைக்கு அழைத்துச் சொல்லுவோம் எனக் கைத்தொலைபேசியை எடுத்தாள். "அடக் கடவுளே..." என்று தலையில் கைவைத்து அமர்ந்து விட்டாள். அதுவும் சார்ஜ் இன்றி அணைந்திருந்தது.

ஸ்கூட்டியைத் தள்ளிக் கொண்டு ரோட்டோரத்தில் விட்டவள் ஆட்டோ எதுவும் வருகின்றதா எனப் பார்த்தாள். ஆட்டோ வந்தாலும் எப்படிப் போவது? ஸ்கூட்டியை அநாதரவாக ரோட்டில் விட்டுச் செல்ல முடியாதே என்று சிந்தித்தவள் எதுவும் புரியாது குழம்பி நின்றாள்.

அப்போது அவள் அருகில் கார் ஒன்று வந்து நின்றது. காரர் தன் அருகில் வந்து நிற்கவும் பயத்துடன் தள்ளிப் போய் நின்றாள். பயத்தில் நெஞ்சம் படபடத்தது. காரிலிருந்து இறங்கினான் யதுநந்தன். அவனைக் கண்டதும் தன்னை மறந்து பார்த்து நின்றாள் பேதை.

என்ன நடந்தது என்று வினவினான் யதுநந்தன். தானும் அதனை ஸ்ரார்ட் பண்ணிப் பார்த்தான். ம்கூம் அது உயிர்க்கவில்லை. தன் கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவன், அவளை சில நொடிகள் பார்த்தான். அருகிலிருந்த கடைக்கு ஸ்கூட்டியைத் தள்ளிக் கொண்டு சென்று விட்டவன், அங்கிருந்தவரிடம் காலையில் மெக்கானிக்கை விட்டு எடுப்பதாகவும் அதுவரை இங்கே நிறுத்தி வைக்கவா என்றும் அனுமதி கேட்டான். அவர்கள் சம்மதிக்கவும் தன் தொலைபேசி இலக்கத்தையும் விவரத்தையும் கொடுத்துவிட்டு வந்தான்.

அவளது வீட்டு விவரத்தைக் கேட்டவன் காரில் ஏறும்படிப் பணித்தான். மகுடிக்கு ஆடும் பாம்பு போல அவன் சொன்னதும் எந்த மறுப்பும் கூறாது காரின் முன்பக்கம் சென்று அமர்ந்தாள்.
"இந்த நேரத்தில் ஆட்டோவில் போறது சேஃப்டி இல்லை. சோ, நானே கொண்டுபோய் விடுகிறேன். மோர்னிங் மெக்கானிக் உன் ஸ்கூட்டியை ரிப்பேர் பார்த்திட்டு ஆஃபிஸில் கொண்டு வந்து தருவான்" என்றான். அவள் "ம்ம்" என்று தலையாட்டினாள். அவளைத் திரும்பி ஒருவாட்டி பார்த்தவன், மேற்கொண்டு எதுவும் பேசாது காரை ஓட்டினான். வர்ஷனாவும் எதுவும் பேசவில்லை. அவளுக்கு வார்த்தைகளே முட்டிக் கொண்டு தவித்தது. அவன் அருகில் அமர்ந்து பயணிப்பதே சுகமாக இருந்தது.

அவளது வீதிக்கு வந்ததும் வீட்டை அடையாளம் கேட்டு அதற்கு முன்னால் வண்டியை நிறுத்தினான். அவள் இறங்கி அவனுக்கு நன்றி கூறினாள். இந்த நேரத்தில் அவனை வீட்டிற்குள் அழைப்பது அழகல்ல என்று பேசாது நின்றாள். அவள் இறங்கி நன்றி சொன்னதும் "ஓகே. பை" என்றுவிட்டு காரை எடுத்து சென்று விட்டான். வர்ஷனாவுக்கு அவன் கூடவே தன் மனதும் சென்று விட்டது என்றே தோன்றியது.
 
Top