எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 2

Banu Novels

Moderator
இதயம் 2






“அபிஈஈஈஈ” என்ற ஒரு பெண்ணின் மரண ஓலம் காதில் விழ “அம்மா….” என்று பதறி எழுந்தான் அபிமன்யு.





முகமெங்கும் வியர்வை முத்துக்கள் அரும்பியிருக்க அவனது உடலில் மெல்லிய அதிர்வு..





சற்று நேரம் ஆழ்ந்து மூச்செடுத்து விட்ட பிறகே அந்த கனவின் தாக்கம் குறைந்து உடலும் மனமும் சமநிலைக்கு வந்தது.





அலைப்பேசியை எடுத்து நேரத்தை பார்த்தவனுக்கு அன்றைய நாள் ஜியா அமெரிக்காவில் இருந்து வருகிறாள் என்பது நினைவில் வந்ததும் இதழோரம் மெல்லிய புன்னகை அரும்ப அதே உற்சாகத்துடன் குளித்து தயாராகி வந்தான்.





கண்ணாடி முன் நின்று தலை முடிக்கு ஜெல் பூசி படிய வாரிக் கொண்டவனோ ஆறடி உயரமும் சிவந்த தேகமும் சுத்தமாக ஷேவ் செய்யப்பட்டிருந்த முகம் சிரித்தால் ஒரு பக்க கன்னத்தில் அழகாக குழி விழும். எந்தவித கெட்டப்பழக்கமும் இல்லாத அக்மார்க் நல்ல பையன் என்பதை பறைசாற்றும் விதமாக இளஞ்சிவப்பு நிற உதடுகள். எல்லாவற்றுக்கும் மேலாக ஆளை மயக்கும் பழுப்பு நிற விழிகள் என பார்ப்பதற்கு ஹாலிவுட் மாடல் போல் பேரழகனாக இருந்தான்.





வழக்கம்போல ஒற்றை விரல் கொண்டு நெற்றியில் இருந்த சிறிய தழும்பை நீவிவிட அந்த தழும்பு கூட அவன் முகத்துக்கு மிகவும் எடுப்பாகத்தான் இருந்தது.





வீட்டை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு அபிமன்யு கீழே வரவும் அவனுக்கு முன்பே எழுந்து தயாராகி காரில் காத்திருந்தான் விக்னேஷ்.





இவனைக் கண்டதும் “குட் மார்னிங் அபி” என்றவனுக்கு “குட் மார்னிங் விக்கி” என பதிலளித்தவன் “ஜியாவ பிக்கப் பண்ண நானே போயிடுறேன்.. நீங்க பாஸ் கிட்ட சொல்லிடுங்க” என்றான் அபிமன்யு.





அவனை ஒரு மார்க்கமாக பார்த்த விக்னேஷ் “சரி சரி நீயே போ.. என்னை பாஸ் வீட்டுல விட்டுட்டு போ” என்றான் விட்டேற்றியாக. ஏதோ ஒரு இனம்புரியாத கடுப்பு அவன் முகத்தில்.





மெல்லிய சாம்பிராணி வாசம் பூஜையறையெங்கும் வியாபித்திருக்க அழகுப் பதுமையென விழிமூடி முருகப் பெருமானை வேண்டிக்கொண்டு நின்றிருந்தாள் ஶ்ரீனிகா.





அப்போதுதான் அங்கு வந்து சேர்ந்திருந்த விக்னேஷ் வீடே அமைதியாய் இருக்க ஶ்ரீனிகா மட்டும் பூஜையறையில் நிற்பதை கண்டு ஆதி வரும்வரை காத்திருக்க “டேய் விக்கி.. இன்னுமாடா ஏர்போர்ட்க்கு கிளம்பல நீ” தன் கம்பீர குரலால் அத்தனை நேரம் இருந்த நிசப்தத்தை கலைத்துக் கொண்டு படியிறங்கி வந்தான் ஆதீஸ்வரன்.





அணிந்திருந்த சட்டையின் கைப்பகுதியை முழங்கை வரை மடித்து விட்டுக்கொண்டு வந்தவனை பார்க்கும் யாரும் அவனுக்கு வயது ஐம்பதை தாண்டிவிட்டது என்று சூடம் அடித்து சத்தியம் செய்தாலும் நம்பமாட்டார்கள். அவன் முப்பது வயதில் எப்படி இருந்தானோ இப்போதும் அதே கம்பீரத்துடன் அப்படியேதான் இருந்தான்.





“பாஸ்!” என்றபடி எழுந்து நின்ற விக்னேஷ் “எட்டு மணிக்குதான் பிளைட் லேன்ட் ஆகுது. எட்டு மணி பிளைட்டுக்கு அஞ்சு மணிக்கே உங்க…….. ம்ஹ்ம்” என்று தொண்டையை செருமியவன் “அபிமன்யு கிளம்பி போயிட்டான். உங்களுக்கு அதுவும் லேட்னா அடுத்த தடவ நடுராத்திரி பனரெண்டு மணிக்கு போக சொல்லிடலாம்” என்றான் நக்கலாக





அப்போதுதான் எழுந்து வந்த அம்ருதாவும் விக்னேஷின் பேச்சில் வாய்மூடி சிரித்தாள்.





“சரி சரி.. என்னமோ பண்ணு என் பொண்ணு ஒரு நிமிஷம் கூட ஏர்ப்போட்ல வெயிட் பண்ண கூடாது அவ்ளோதான்” என்ற ஆதியின் பார்வை பூஜையறைப் பக்கம் செல்ல அங்கு கைகூப்பி வணங்கியிருந்த ஶ்ரீனிகா கணவன் குரல் கேட்டு விழி திறந்தவள் இவன் பக்கம் ஒரு பார்வை பார்த்ததும் சத்தமில்லாமல் மனைவியின் எதிரில் சென்று தானும் கைகூப்பி வணங்கி நின்றான்.





அம்ருவிடம் நெருங்கிய விக்னேஷ் “உங்க டாடி அராஜகமெல்லாம் நம்மகிட்ட மட்டும்தான்.. ஶ்ரீ ஒரு லுக்கு விட்டா போதும் அப்படியே பொட்டி பாம்பா அடங்கிடுறது” என்று சிரிக்க தானும் சேர்ந்து சிரித்தவள் “விக்கி ஜியா இல்லைங்கிற தைரியத்துல இந்த ஒரு வாரமா எங்க டாடிய ரொம்பவே ஓட்டிட்டு இருக்க மேன் நீ” என்றாள்.





“அவ ஒருத்தி.. ஒரு மாசம் டூர் போறேன்னு கிளம்பி போவா.. அப்புறம் டாடிய பார்க்காம இருக்க முடியல ஶ்ரீமாவ விட்டுட்டு இருக்க முடியலன்னு ஒரு வாரத்துலயே திரும்பி வந்துடுவா. இதையே பொழப்பா வெச்சிருக்கா உன் தங்கச்சி” சலித்துக்கொண்டான் விக்னேஷ்.





“என்னமோ போ விக்கி அவ ஒருநாள் இல்லைனா கூட வீடு வீடாவே இருக்கிறதில்ல” என்றாள் அம்ருதா.





என்னதான் விக்னேஷ் ஆதியைவிட நான்கைந்து வயதுதான் கம்மியாக இருந்தாலும் தியா, அம்ருதா, ஜியா மூவருக்கும் அவன் எப்போதுமே ‘விக்கி’தான். சிறு வயதிலிருந்து பழகிய பழக்கம் ஶ்ரீனிகா எவ்வளவு சொல்லியும்கூட இப்போதுமே அவனை ‘வா, போ’ என்றுதான் அழைத்துக் கொண்டிருந்தனர்.





விக்னேஷுக்குமே அவர்கள் அப்படி அழைப்பதுதான் பிடித்தம் என்பதால் அவன் எப்போதும் அதனை பெரிதுபடுத்தியதில்லை.





அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே அம்ருதாவின் அலைப்பேசி ஒலிக்க எடுத்துப் பார்த்தவள் முகம் மலரவும் “யாருடா கவினா?” என்றான் விக்னேஷ் கேள்வியாக.





“இல்ல அத்தை” என்றவள் “பேசிட்டு வரேன் விக்கி” என்றுவிட்டுப் போனாள்.





கிட்டத்தட்ட ஒன்பது மணியளவில் வாசலில் கார் வந்து நிற்கும் ஓசையும் கூடவே “டாடி” என்ற கூச்சலும் கேட்க “வந்துட்டா வானரக்குட்டி” என்றான் விக்னேஷ் செல்லமாக.





ஜியாவின் குரல் கேட்டதும் ஆதீஸ்வரனும் ஶ்ரீனிகாவும் வாசலுக்கு செல்ல பாய்ந்து வந்து இருவரையும் ஒன்றாக கட்டிக்கொண்டவள் “மிஸ்ட் யூ அலோட் டாடி.. ஶ்ரீமா” என்று இருவரின் கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட தானும் மகளின் நெற்றியில் முத்தமிட்டவன் “மிஸ்ட் யூ டூ டா கண்ணா” என்றான் ஆதீஸ்வரன்.





ஶ்ரீனிகாவும் ஜியாவை முத்தமிட சிரித்துக் கொண்டே அவர்களின் பாசப்பிணைப்பை பார்த்திருந்தவன் “பாஸ் இது உங்களுக்கே ஓவரா தெரியலையா” என்றான் விக்னேஷ் ஆதீஸ்வரனை சீண்டும் விதமாக “ஒரே ஒரு வாரம் அமெரிக்கா போய் வந்ததுக்கு ஏதோ வருஷக் கணக்குல பிரிஞ்சிருந்த மாதிரி ஆளாளுக்கு இப்படி பிழியிறீங்க.. ஜியாவுக்கு கல்யாண வயசு ஆகுதுனு நியாபகம் இருக்கா இல்லையா. இப்படியே போனா எப்படி பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி இன்னொரு வீட்டுக்கு அனுப்பி வைக்கப் போறீங்க” என்று சொன்னவனை திரும்பி முறைத்தான் ஆதி.





“டேய் நான் எதுக்குடா என் பொண்ண இன்னொரு வீட்டுக்கு அனுப்பி வைக்கனும். வீட்டோட மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணி இங்கேயே வெச்சிருப்பேன். நீ உன் வேலைய பார்த்துட்டு கிளம்பு” என்ற ஆதியின் பார்வை அங்கு ஜியாவின் லக்கேஜ்களை காரிலிருந்து இறக்கிக் கொண்டு வந்த அபிமன்யுவின் மீது தற்செயலாக படிய அதை கவனித்த விக்னேஷோ “நீங்க இப்படியே சொல்லிட்டு இருங்க குறுக்கால எவனாவது புகுந்து தூக்கிட்டு போகாம இருந்தா சரிதான்” என்றான்.





“என்னடா சந்தடி சாக்குல உன் மனசுல இருக்கிற ஆசைய சொல்றியா” என்றான் ஆதீஸ்வரன் மற்றவனின் மனத்தை அறிந்தவனாக.





“பாஸ் உங்க மனசுல என்ன இருக்குனு எனக்கு தெரியும். என் மனசுல என்ன இருக்குனு உங்களுக்கும் நல்லாவே தெரியும். நம்ம ரெண்டு பேர் ஆசையில எது நடக்க போகுதுனு பார்க்கத்தான் நானும் வெயிட்டிங்” பதிலுக்கு கூறினான் விக்னேஷ்.





அவனைப் பார்த்து நக்கலாக சிரித்தான் ஆதீஸ்வரன் “என் பொண்ணு நான் சொல்றததான் கேப்பா”





“ஆஹ் அதையும் பார்ப்போம்”





ஆண்கள் இருவரும் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணராதவர்களாக இந்தப்பக்கம் அம்மாவும் மகளும் ஏற்கனவே அலைப்பேசியில் ராப்பகலாக பேசியது போக கடந்த ஒரு வாரமாக மிச்சம் மீதி சொல்லாமல் விடுப்பட்ட விடயங்களையும் நினைவடுக்குகளிலிருந்து தோண்டியெடுத்து ஒப்பித்துக் கொண்டிருந்தனர்.





தங்களை மறந்து தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த மனைவி, மகளிடையே குறுக்கிடாமல் ஶ்ரீனிகாவை காதலுடனும் ஜியாவை ஆதுரத்துடனும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான் ஆதீஸ்வரன்.





ஒரு வழியாக ஶ்ரீனிகாவிடம் பேசி முடித்துவிட்டு திரும்பியவள் அப்போதுதான் அங்கிருந்த விக்னேஷை கவனித்து முறைத்தாள் “விக்கி நீ ஏன் ஏர்போர்ட் வரல?”





ஜியாவின் கேள்விக்கு ஆதியையும் அபிமன்யுவையும் கடுப்புடன் மாறி மாறி பார்த்தவன் “அதான் அபிமன்யு வந்துட்டானே ஜியாம்மா. நான் வந்தா என்ன அபி வந்தா என்ன. உனக்கு நானும் அபியும் ஒரே மாதிரிதானடா” என்றான்.





அவன் பேச்சிலிருந்த உள்குத்தை உணர்ந்து ஆதீஸ்வரன் பல்லைக் கடிக்க அபிமன்யுவின் முகம் கன்றியது.





அதைக்கண்டு விக்னேஷுக்குத்தான் ஒரு மாதிரி ஆகிவிட்டது. அவனுடைய குத்தல் பேச்சு ஆதீஸ்வரனுக்கானது. அபிமன்யுவை காயப்படுத்த வேண்டுமென்று நினைக்கவில்லை.





அந்த சூழ்நிலையை மாற்ற வேண்டுமென்பதற்காக “ஏர்போட் வரலைன்னு கோபப்படுற நீ எனக்காக என்ன வாங்கிட்டு வந்த?” என்றான் ஜியாவிடம்.





“இரு வரேன்” எழுந்து சென்று அபிமன்யு இறக்கி வைத்திருந்த தன்னுடைய லக்கேஜை திறந்து இரண்டு சிறு பெட்டிகளை எடுத்துக் கொண்டு வந்தவள் அவற்றை விக்னேஷின் கையில் கொடுக்க உடனே பிரித்து பார்த்தவன் “தேங்க்ஸ் ஜியா குட்டி” என்றான் வாயெல்லாம் பல்லாக.





“ரெண்டுமே உன் இந்து பேபிக்கு பிடிச்ச ஃப்ராக்ரன்ஸ்.. என்ஜாய் விக்கி” என்றாள் கண் சிமிட்டி சிரித்துக்கொண்டு.





அதில் வெட்கம் கொண்டு நெளிந்த விக்னேஷையும் அவன் கையிலிருந்த விலையுயர்ந்த ஆஃப்டர் ஷேவ் லோஷன் மற்றும் பர்ஃபியூமையும் பார்வையிட்ட ஆதீஸ்வரன் “வீட்டுல காலேஜ் போற பொண்ண வெச்சிக்கிட்டு இந்த வயசுல உனக்கு இதெல்லாம் தேவையா” என்றான் நக்கலாக.





“நீங்க வேற பாஸ்.. இங்க ஒருத்தரு கல்யாணம் ஆன ஒரு பொண்ணு, கல்யாணம் ஆகப்போற ஒரு பொண்ணு, கல்யாண வயசுல இன்னொரு பொண்ணுனு மூனு பொண்ணுங்கள வெச்சிட்டு குட்டி போட்ட பூனை மாதிரி இன்னும் பொண்டாட்டி முந்தானையே புடிச்சிட்டு சுத்திட்டு இருக்கார்.. அவருக்கு நான் எவ்வளவோ பரவால்ல” என்றான் விக்னேஷ் அவனைவிட நக்கலாக.





ஶ்ரீனிகா களுக்கென்று சிரித்துவிட மனைவியை முறைத்த ஆதீஸ்வரனுக்கும் சிரிப்பு வந்தது “டேய் உன்ன நான் ஆபீஸ் போக சொன்னேன். நீ எதுக்கு இன்னும் இங்கேயே உட்கார்ந்திருக்க. முதல்ல கிளம்பு நீ” என்றான் விக்னேஷிடம் அதட்டலாக.





“இதை வாங்கிட்டு போறதுக்குதான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. இப்ப கிளம்பிர்ரேன்” என்றவன் எழுந்து கொண்டான் “டேய் அபி வந்த வேலை முடிஞ்சிடுச்சு வா கிளம்பலாம்” அபிமன்யுவை அழைக்க,





“ஒரு நிமிஷம்” என்றான் ஆதீஸ்வரன் “ஜியாம்மா நீ அபிக்கு எதுவும் வாங்கிட்டு வரல?”





“அபிக்கு வாங்காம வருவேனா டாடி” என்றவள் தன் கைப்பையை திறந்து இன்னொரு அழகிய சிறு பெட்டியை கொண்டு சென்று அபிமன்யுவிடம் நீட்டினாள் “இது உனக்கு அபி”





“எனக்கெதுக்கு ஜியா” என்று தயங்கியவன் ஆதீஸ்வரனை பார்க்க அவன் ‘வாங்கிக்கோ’ என்பதைப்போல் தலையசைத்தான்.





“தேங்க்ஸ்” என்றபடி சிறு முறுவலுடன் வாங்கிக்கொள்ள “பிரிச்சுப் பாரு அபி” என்றான் ஆதி.





அபிமன்யு பிரிக்கவும் உள்ளே அழகிய கைக்கடிகாரம் இருப்பதை கண்டவுடன் அவன் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.





அவன் வெகுநாட்களாக வாங்க வேண்டுமென்று நினைத்திருந்த கைக்கடிகாரம். அதிக விலையென்பதால் வீணாக பணத்தை செலவழிக்க விருப்பமில்லாமல் பிறகு வாங்கிக் கொள்ளலாம் என்று தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தான்.





ஆனாலும் அவ்வப்போது ஜியாவை ஷாப்பிங் அழைத்துச் செல்லும் வேளைகளில் அவன் பார்வை இந்த கடிகார கடைப்பக்கம் படிந்து மீளும்.





அதனை கவனித்திருக்கிறாள்.





உள்ளம் நெகிழ “ரொம்ப தேங்க்ஸ் ஜியா” என்றான் மீண்டும்.





இதுதான் அவள்.. யாருக்கு என்ன வேண்டுமென பார்த்து பார்த்து செய்துவிடுவாள்.





“கொடு அபி நானே போட்டு விடுறேன்” என்றவள் பெட்டியிலிருந்த கைக்கடிகாரத்தை எடுத்து வெகு இயல்பாக அவன் கையில் அணிவித்துவிட்டாள்.





மகளின் இந்த சிறிய செயலை ஆதீஸ்வரன் ரசித்து பார்த்திருக்க விக்னேஷுக்கு இந்த காட்சி சற்றும் சகிக்கவில்லை.





“சரி சரி அபி டைம் ஆச்சு வா” கிட்டத்தட்ட அபிமன்யுவை இழுக்காத குறையாக அங்கிருந்து அழைத்துச் சென்றான்.










*****************************************








“அக்கா.. அம்மு கா…” அம்ருதாவின் அறைக் கதவை தட தடவென தட்டிக் கொண்டிருந்தாள் ஜியாஶ்ரீ.





எப்போதும் அவள் ஏதாவது பயணம் சென்று வரும்போது முதல் ஆளாக வாசலில் வந்து நிற்பது அம்ருதாதான். ஆனால் இன்று அவள் வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாகியும் அம்ருதாவை காணவில்லை.





ஶ்ரீனிகாவிடம் கேட்டபோது அம்ருதா அறையில்தான் இருப்பதாக கூறியிருந்தாள்.





“வீட்டுல இருந்துட்டே நான் வந்து இவ்வளவு நேரமாகியும் ஆள காணோம்” என்று கடுப்புடன் வந்து இவள் கதவை தட்ட சற்று தாமதமாகியே கதவைத்திறந்தாள் அம்ருதா.





“நான் வந்து ஒரு மணி நேரமாகுது” முறுக்கிக் கொண்டே ஏதோ சொல்ல வந்தவள் தமக்கையின் முகம் வாடியிருப்பதைக் கண்டு “என்னாச்சு கா? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்றாள் தன் சுணக்கத்தை மறந்தவளாக.





“ஒன்னுமில்லடா ஜியா குட்டி.. அப்பவே வரலாம்னு இருந்தேன் அவசரமா ஒரு கால் வந்ததுடா” என்று சமாளிக்க முயன்றவளை முறைத்தாள் ஜியா.





“அக்கா ஒழுங்கா உண்மைய சொல்லு.. கால் வந்ததுக்காகல்லாம் நீ வராம இருந்திருக்கமாட்ட. என்ன கவின் மாமா கூட ஏதாவது சண்டையா?”





“சே… சே.. அதெல்லாம் இல்லடா”





“அப்புறம் என்ன?” அம்ருதாவின் முகத்தை கைகளில் தாங்கிக் கொண்டவள் “என்னன்னு சொல்லுக்கா” என்றாள் அவள் விழிகளை ஊடுருவிக்கொண்டு.





அதற்குமேல் தங்கையிடம் மறைக்க முடியாதவளாக “அத்தை” என்றாள் அம்ருதா ஒற்றை வார்த்தையாக.





“அத்தையா! என்…. என்னவாம்?” என்றவளுக்கு எதுவோ புரிவதைப்போல் இருந்தது.





“அதே பழைய புராணம்தான்” அம்ருதா சொல்ல “ஏதே மறுபடியுமா!” பல்லைக் கடித்தாள் ஜியாஶ்ரீ.





‘ஆம்’ என தலையசைத்தாள் அம்ருதா.





“யாதவ்க்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் எங்க கல்யாணத்த இன்னும் கொஞ்ச நாளைக்கு தள்ளிப்போட சொல்றாங்க”





“பைத்தியமா அவங்களுக்கு” ஜியா பொங்கிவிட்டாள்.





“தள்ளிப்போடு தள்ளிப்போடுன்னா இன்னும் எத்தனை வருசத்துக்கு தள்ளிப்போடுறது.. ஏற்கனவே அஞ்சு வருசம் தள்ளிப்போட்டாச்சு” என்றவள் “அந்த சாமியார்தான் கல்யாணமே பண்றதில்லனு ஒரு முடிவோட இருக்கானே.. அவனுக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் ஆகவே ஆகாதுன்னு உன் அத்தைக்கிட்ட சொல்ல வேண்டியதுதான கா”





“அத்தே அத்தே அந்த சாமியாருக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் நாங்க காத்திருந்தா அதுக்கப்புறம் நாங்க கல்யாணம்லாம் பண்ணிக்க முடியாது ஸ்ட்ரைட்டா அறுபதாம் கல்யாணம்தான் பண்ண வரும்னு சொல்லிருக்க வேண்டியதுதானே”





கோபத்தில் அவள் முகம் ஜிவுஜிவு என சிவப்பேறியது.








“என்ன சொன்னாலும் புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறாங்கடி.. யாதவ் இருக்கும்போது கவினுக்கு கல்யாணம் பண்ணினா ரேனு அத்தை வருத்தப்படுவாங்கனு அதே கதைய சொல்லிட்டு இருக்காங்க”





“ரேனு அத்தையா… நொத்தை.. வருத்தப்படுற ஆளா அது.. சூனியக்கார கிழவி மாதிரி ஒரு மூஞ்சி. ஊரையே முழுங்கி ஏப்பம் விட்டுட்டு போய்கிட்டே இருக்கும் அந்தம்மா.. அது வருத்தப்படுமாமா” ரேனுகாவை நினைத்து ஜியாவின் பற்கள் நறநறத்தன “அந்தம்மா பெத்த ரத்தினம் அதுக்கும் மேல.. இதுங்க ரெண்டுத்துக்காகவும் நீயும் மாமாவும் கல்யாணத்த தள்ளிப் போட்டுட்டே இருக்கனுமா.. அக்கா இங்க பாரு ஒழுங்கா கவின் மாமாகிட்டயோ இல்ல டாடிகிட்டயோ விஷயத்த சொல்லிடு. நீ யார்கிட்டயும் சொல்லமாட்டேங்கிற தைரியத்துலதான் கஸ்தூரி அத்தை உன்ன எமோஷனல் ப்ளாக்மெயில் பண்ணிட்டு இருக்காங்க.. இந்த தடவை உங்க கல்யாணம் கண்டிப்பா நடந்து ஆகனும் சொல்லிட்டேன்”





“கவின்கிட்ட சொன்னா அத்தைய சத்தம் போடுவார்டி.. அவங்களே பாவம்.. டாடி பத்தி உனக்கே தெரியும்.. யாதவ், அத்தைனு எதையும் பார்க்க மாட்டாரு.. அதிரடியா எதையாவது பண்றேன்னு இறங்கிட்டார்னா அப்புறம் அவங்க குடும்பத்துல ஏதாவது சிக்கலாகிடுமோன்னு பயமா இருக்கு.. ஏற்கனவே ரேனு அத்தை கஸ்தூரி அத்தைய அடிமை மாதிரிதான் நடத்துவாங்க. இப்ப நம்மளும் எதையாவது செய்யப்போய் கல்யாணத்துக்கு முன்னாடியே என்னால அவங்க குடும்பத்துக்குள்ள பிரச்சினை வந்தா நல்லாவா இருக்கும் சொல்லு.. எங்க கல்யாணம் எந்த பிரச்சினையும் இல்லாம எல்லாரோட ஆசிர்வாதத்தோடயும் சந்தோசமா நடக்கனும்கிறதுதான்டா என்னோட ஆசை” என்றாள் அம்ருதா.





“அதுக்குனு நீ இப்படியே இன்னும் ஆறு மாசம் ஒரு வருசம்னு கல்யாணத்த தள்ளிப்போட்டுக்கிட்டே இருக்க போறியா. நீ ஒன்னும் பண்ண வேண்டாம் இரு நானே டாடிகிட்ட போய் எல்லாத்தையும் சொல்லிட்ரேன்” என்க “ஜியா ப்ளீஸ்” கெஞ்சினாள் அம்ருதா.





“நீ அவசரப்பட்டு எதுவும் பண்ணிடாதே.. நானே பார்த்துக்கிறேன்.. எனக்கு கொஞ்சம் டைம் கொடு ஜியா”





அம்ருதா கெஞ்சியதில் சற்று சமாதானமானாலும் ஜியாவுக்கு உள்ளுக்குள் கனன்று கொண்டே இருந்தது.





பொதுவாக அவளுக்கு கோபமே வராது.. எப்போதும் இலகுவான, சந்தோச மனநிலையுடன்தான் இருப்பாள். வீணாக எதையும் போட்டு அலட்டிக்கொள்ள மாட்டாள். அவளுக்கே ஆத்திரம் வர வைக்கும் விடயம் என்றால் அது இந்த ஒரே விடயம்தான்.





கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அம்ருதா மற்றும் கஸ்தூரியின் மகனான கவினின் திருமணம் யாதவ வர்மனுக்கு திருமணம் ஆகவில்லை என்ற ஒரே காரணத்துக்காக தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது.





தியா, அம்ருதா இருவருக்குமே ஒரே மேடையில் ஒன்றாக திருமணம் செய்து பார்க்க வேண்டுமென்பதுதான் குடும்பத்தினர் அத்தனை பேரின் ஆசையாகவும் இருந்தது.





தியாவும் அஜயும் பள்ளியில் படிக்கும் போதிருந்தே காதலித்தவர்கள். அதே போல அம்ருதா, கவின் இருவருமே கல்லூரி காலத்தில் காதலிக்க ஆரம்பித்திருந்தார்கள்.





ஆதீஸ்வரன், ஶ்ரீனிகா முதற்கொண்டு தேஜஸ்வினி வரை அத்தனை பேரும் உருகி உருகி காதலித்து, போராடி திருமணம் செய்தவர்கள் என்பதால் பிள்ளைகள் காதலென்று வந்து நின்றதும் அவர்கள் எந்த தடையும் சொல்லவில்லை.





காதலிக்கும் நபர்களையும், அவர்களுடைய குடும்பங்களையும் விசாரித்தார்கள். அஜய், கவின் இருவருமே சொக்கத்தங்கமாக இருந்தனர். அவர்களது குடும்பங்களும் திருப்திகரமாக இருந்ததில் கல்லூரி படிப்பு முடிந்ததுமே இரண்டு ஜோடிகளுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தனர்.





ஆனால் அம்ருதா, கவின் இருவருமே அப்போது திருமணத்தை மறுத்துவிட்டனர். மேற்படிப்பை காரணம் காட்டி மறுத்திருந்தாலும் உண்மையான காரணம் கவினின் பெரியப்பா மகனான யாதவ வர்மனுக்கு திருமணமாகாமல் தாங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டாமென்று இருவருமே ஒன்றாக பேசி முடிவெடித்திருந்தனர்.





பெரியவர்களும் அவர்களது கருத்துக்கு மதிப்பளித்து தியா, அஜய் திருமணத்தை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடத்தி வைத்திருந்தனர். இப்போது அவர்கள் இருவருக்கும் ஐந்து வயதிலும், இரண்டு வயதிலும் இரண்டு குழந்தைகள் இருந்தனர்.





ஆனால் அம்ருதாவின் திருமணம் மட்டும் இன்னும் தடைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. என்னதான் ஆரம்பத்தில் அவர்கள் இருவருமே பேசி முடிவெடுத்து திருமணத்தை தள்ளிப் போட்டிருந்தாலும் மூன்று ஆண்டுகள் கழித்து அவர்களது மேற்படிப்பு முடிந்த பிறகும்கூட யாதவ வர்மன் திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே இல்லாதவன் போல் சுற்றிக் கொண்டிருந்தான்.





ரேனுகா பார்க்காத பெண்ணில்லை.. கண்ணில் படுகிற அழகான பணக்கார பெண்கள் அத்தனை பேரையும் வரிசையாக கொண்டு வந்து நிறுத்தினாலும் அவன் யாரையும் திரும்பி கூட பார்ப்பதாக தெரியவில்லை.





தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி வந்து சற்று வசதி குறைந்த இடங்களில் கூட அழகான பெண்களாக பார்த்து கொண்டு வந்தார். அதற்கும் அவன் மசியவில்லை. இப்போதைக்கு திருமணமே வேண்டாமென உறுதியாக கூறிவிட்டான்.





ரேனுகாவுக்கு எப்படியோ கவினுக்கு வெறுத்துப்போனது.. இதற்குமேல் தாமதிக்க வேண்டாமென அவன் திருமணத்திற்கு தயாராகவும் இப்போது தடைபோட்டது அவனுடைய அன்னை கஸ்தூரி.





யாதவ் திருமணம் நடக்காமல் உன் திருமணம் நடக்க வேண்டாமென மகனுடன் மல்லுக்கு நின்றார்.


அவன் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை. இதனால் அடிக்கடி அம்மாவுக்கும் மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட ஆரம்பித்தது.





‘இந்த வீட்டில் இருந்து கொண்டு, அவர்கள் போடும் சாப்பாட்டை சாப்பிட்டுக்கொண்டு யாதவுக்கு முன்பாக நீ திருமணம் செய்யக்கூடாது’ என்று கஸ்தூரி வார்த்தையை விட்டுவிட அன்றே அந்த வீட்டை விட்டு வெளியேறியிருந்தான் கவின்.





அதன்பிறகும் கஸ்தூரி விடுவதாக இல்லை. மகனிடம் பேசி வேலைக்கு ஆகாதெனத் தெரிந்ததும் அம்ருதாவின் காலைப் பிடிக்க ஆரம்பித்து விட்டார்.





அவர் அழுது புலம்பியதில் அம்ருதாவும் வேறு வழியில்லாமல் மேலும் ஒரு வருடத்திற்கு அவளாகவே புதிது புதிதாக காரணம் சொல்லி திருமணத்தை தள்ளிப்போட்டாயிற்று.





ஒரு கட்டத்துக்கு மேல் அவளாலும் முடியவில்லை. குடும்பத்தினர் கேள்வி மேல் கேட்டு அவளை துளைத்தெடுக்கத் துவங்கிவிட்டனர்.





அதுவும் ஆதி, ஶ்ரீனிகாவை கூட சமாளித்து விடலாம் தேஜஸ்வினியை சமாளிப்பது அவளுக்கு பெரும் கடினமாக இருந்தது.





இறுதியில் ஏதேதோ முயற்சி ஒரு வழியாக கஸ்தூரியின் மனதை மாற்றி இப்போது அப்போது என்று அடுத்த மாதம் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டிருக்கும் இந்த நிலையில் அவர் மீண்டும் பழைய பல்லவியை பாடத்துவங்கினால் யாருக்குத்தான் கோபம் வராது.








கஸ்தூரியின் இந்த செயலுக்குப் பின்னால் நிச்சயம் ரேனுகாவின் தூண்டுதல் இருக்கும் என்று ஜியாவுக்கு நன்றாகவே தெரியும்.





ஏற்கனவே ரேனுகாவுக்கு கவின் பணக்கார வீட்டுப் பெண்ணை காதலிக்கிறானே என்று வயிற்றெரிச்சல் கூடவே அவளுடைய மகனுக்கு திருமணம் ஆகாமல் கவினுக்கு திருமணமாவதை அந்த பெண்மணியால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.





அதனால்தான் கஸ்தூரியை படாத பாடு படுத்தி அவர் மூலமாகவே இந்த திருமணத்தை தள்ளிப்போட வைத்துக் கொண்டிருக்கிறாள் என்று சரியாக கணித்து வைத்திருந்தாலும் ஜியாவின் கோபமெல்லாம் இந்த ரேனுகாவுக்காக எதற்கு கஸ்தூரி தான் பெற்ற மகனையும் வருங்கால மருமகளையும் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதுதான்.








அம்ருதா வேண்டுமானால் பொறுமையாக இருக்கலாம். ஜியாவுக்கு எந்த பொறுமையும் கிடையாது. ஆதியிடம் சொல்லலாம்தான் ஆனால் அம்ருதா சொன்னது போல் ஆதீஸ்வரன் அதிரடியாக எதையாவது செய்து வைத்தால் சிக்கலாகிவிடும்.





இத்தனை வருடம் காத்திருந்தவர்களின் காதல் கைகூடும் நேரம் அது அவர்களுக்கு எந்தவித சங்கடத்தையும் அளிக்கக்கூடாது என்றுதான் அவளும் ஆசைப்பட்டாள்.





இதற்கு ஒரே வழி கஸ்தூரியிடம் பேசுவதுதான்.. அவரிடம் நறுக்கென்று நாலு வார்த்தை கேட்காவிட்டால் அவளுக்கு தூக்கமே வராது.





நினைத்ததுமே கஸ்தூரியை பார்க்க கிளம்பிவிட்டாள்.








*******************









ஜியாவின் காரை கண்டதும் யாதவ் வீட்டு காவலாளி முதல் தோட்டக்காரன் வரை மலர்ந்த முகத்துடன் பார்த்திருக்க வேலைக்காரப் பெண் ஓடி வந்தவள் “என்னக்கா அதுக்குள்ள அமெரிக்கால இருந்து வந்துட்டீங்களா?” உரிமையுடன் கேட்டாள்.





அந்த வீட்டிலுள்ள அத்தனை பேரும் ஜியாவுக்கு அவ்வளவு பழக்கம் வீட்டுக்கு சொந்தக்காரர்களான யாதவ வர்மனையும் ரேனுகாவையும் தவிர.





ரேனுகாவுக்கு இவளை கண்டாலே அலர்ஜி.. கஸ்தூரியின் வருங்கால மருமகளுக்கு தங்கை என்ற பொறாமையும் கூடவே பணக்கார வீட்டுப்பெண்ணாக இருந்து கொண்டு இப்படி வேலைக்கார்ர்கள் உடனெல்லாம் சரிக்கு சமமாக பழகுகிறாளே என்ற கடுப்பும் உண்டு.





நாடி, நரம்பெல்லாம் திமிர்த்தனமும் முகத்தில் துளியும் சிரிப்பில்லாமல் விறைப்பாகவே இருக்கும் ரேனுகாவின் செல்வ புத்திரனை கண்டால் ஜியாவுக்கும் ஆகாது. தன் தமக்கையின் திருமணத்துக்கு இடையூறாக இருக்கிறானே என்ற கடுப்பு வேறு.





“ம்ம்ம்” என்றவள் தான் கொண்டு வந்திருந்த சாக்லேட்கள் நிரம்பிய பொதியை வேலைக்காரப் பெண்ணிடம் நீட்டினாள்.





“எல்லாருக்கும் கொடுத்திடு மீனு” என்றுவிட்டு நேராக சமயலறைக்குள் சென்றாள்.





அவள் எதிர்பார்த்தது போல் சமயலறையில்தான் இருந்தார் கஸ்தூரி. இவள் வந்து நிற்பதை கூட கவனிக்காமல் அரக்கப்பறக்க சமைத்துக் கொண்டிருந்தார். சில நிமிடங்களுக்குப் பிறகே இவளை கவனித்தவர் “ஜியாம்மா எப்படா வந்த?” என்றார் முகம் மலர.





முகத்தில் இருந்த சிரிப்பு கண்களை எட்டவில்லை.. களையிழந்து கண்ணை சுற்றி கருவளையமும் வெளுத்துப் போயிருந்த அவரது முகம் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதை சொல்லாமல் சொல்ல இவளுக்கோ அவர் மீதிருந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாக வடியத்துவங்கியது.





எப்போதுமே கஸ்தூரியின் மீது ஜியாவுக்கு தனிப்பிரியம். இந்த வீட்டில் இப்படி கஷ்டப்படுகிறாரே என்று. கிட்டத்தட்ட அந்த வீட்டில் சம்பளமில்லாத வேலைக்காரிதான் கஸ்தூரி. அடிமை என்று கூட சொல்லலாம்.





அப்படித்தான் ரேனுகா கஸ்தூரியை வைத்திருந்தாள். இத்தனைக்கும் கஸ்தூரி ரேனுகாவின் கணவர் பிரதாப்பின் உடன் பிறந்த தம்பியின் மனைவிதான்.





பார்ப்பதற்கே பரிதாப நிலையில் இருந்த கஸ்தூரியிடம் என்னத்தை கேட்பது என்று நினைத்தாலும் இதில் சிக்கியிருப்பது அவளுடைய அக்காவின் வாழ்க்கையல்லவா..





“இன்னைக்கு காலையிலதான் வந்தேன்” என்றாள் அவரது கேள்விக்கு பதிலாக.





“தியாம்மா, தேஜு அண்ணிலாம் சௌக்கியமா இருக்காங்களா.. நான் கொடுத்த பலகாரமெல்லாம் கொடுத்தியாடா” ஆர்வமாக கேட்டார்.





“ம்ம்ம் கொடுத்தேன் கொடுத்தேன்”





“என்ன சொன்னாங்கடா.. நல்லா இருந்ததாம்மா? அஜய் தம்பிக்கு பிடிக்கும்னு மைசூர் பாக் செஞ்சி கொடுத்தேனே.. அஜய் சாப்பிட்டுச்சா”





“எல்லாம் நல்லா சப்பிட்டாங்க” என்று சொன்னவளுக்கு இவர்தான் அம்ருதாவிடம் மீண்டும் திருமணத்தை தள்ளிப்போட சொன்னாரா என்ற சந்தேகமே வந்துவிட்டது “அதான் அடுத்த மாசம் அம்மு அக்கா கவின் மாமா கல்யாணம் வருதே.. கல்யாணத்துக்கு வரும்போது உங்க கையால இன்னும் நிறைய பலகாரம் செஞ்சி சாப்பிடனும்னு சொல்லிட்டு இருந்தார் அஜய் மாமா” என்றாள் வேண்டுமென்றே.





கஸ்தூரியின் முகம் விழுந்துவிட்டது. இளையவளின் முகம் பார்க்க முடியாமல் தலை குனிந்தார்.





அடங்கிய கோபம் அவளுக்குள் மீண்டும் துளிர்விட்டது.





“காலையில அக்காகிட்ட என்ன சொன்னீங்க” என்றாள் அதே கோபத்துடன் “கல்யாணத்த தள்ளிப்போட சொன்னீங்களா? ஏன் அத்தே இப்படி பண்றீங்க? உங்களுக்காகத்தானே இத்தன வருஷமா கல்யாணம் பண்ணிக்காம காத்திருந்தாங்க. இன்னும் இன்னும் ஏன் இப்படியே பண்ணிட்டு இருக்கீங்க?”





“அது… அது வந்து ஜியாம்மா…. ரேனு அக்கா” என்று கஸ்தூரி ஆரம்பிக்கும்போதே,





“கஸ்தூரிக்கா சமைக்காம இங்க வெட்டியா என்ன பண்ணிட்டு இருக்கீங்க” என்று கேட்டுக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தாள் வினோதினி.





ரேனுகாவின் வலது கை, இடது கை, அல்லக்கை எல்லாமே இந்த வினோதினிதான். ரேனுகா வீட்டில் இல்லாத நேரங்களில் வீட்டுக்கு யார் வருகிறார்கள், போகிறார்கள், கஸ்தூரி என்ன செய்கிறாள் என்று வத்தி வைக்கும் நடமாடும் சிசிடீவி கேமரா.





வினோதினியை கண்டதும் கஸ்தூரி மேற்கொண்டு எதுவும் பேசாமல் வாயை இறுக மூடிக்கொள்ள புரிந்து கொண்டவளாக “அத்தே சமையல் வேலையெல்லாம் முடிச்சிட்டு வாங்க நான் ஹால்ல வெயிட் பண்றேன்.. நம்ம ரெண்டு பேரும் வெளியே போயிட்டு வரலாம்” என்றுவிட்டு ஹாலில் வந்து காத்திருக்க ஆரம்பித்தாள்.





இன்றைக்கே இதை பேசி முடித்தாக வேண்டுமென்ற எண்ணம் அவளுக்கு.





நகத்தை கடித்து துப்பியபடி ஹாலில் அமர்ந்திருந்தவளுக்கு கஸ்தூரி இறுதியாக சொன்ன ‘ரேனு அக்கா’ என்ற வார்த்தைதான் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.





ரேனுகாவின் முகம் மனதில் மின்னி மறைய ‘இந்த கொள்ளிவாய் பிசாசு என்னைக்குதான் திருந்த போகுதோ’ என எண்ணிக்கொண்டாள்.





சிந்தனையில் இருந்தவள் ஷூ கால்களின் ஓசையில் கவனம் கலைந்து நிமிர்ந்து பார்க்க அவளொருத்தி அமர்ந்திருப்பதையே அறியாதவன் போல யாதவ வர்மன் அவளை கடந்து சென்று கொண்டிருந்தான்.





‘என்ன சாமியார் இந்த நேரத்துல வந்திருக்கான்’ என்று நினைத்தவள் படியேறி செல்லும் அவன் முதுகையே வெறித்துக் கொண்டிருந்தாள் ‘இவனாலதான் அத்தனை பிரச்சனையும். இந்த காட்டெருமை காலா காலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணி தொலைச்சிருந்தான்னா இந்தளவுக்கு வந்திருக்காது’





அந்த நொடியில்தான் அவளுக்கு அந்த விபரீத எண்ணம் தோன்றியது.





‘புள்ளப்பூச்சி கஸ்தூரி அத்தைக்கிட்ட பேசுறதுக்கு பதிலா இந்த எருமைகிட்டயே போய் நாலு வார்த்தை கேட்டா என்ன?’





இதனால் தன் வாழ்க்கையை மொத்தமாக புரட்டிப்போட்டு பெரும் சூறாவளி ஒன்று சுழன்றடிக்க காத்திருக்கிறது என்று அறிந்திருந்தால் அவனிடம் பேசுவதை நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டாளோ என்னவோ..





அப்போது அவள் இருந்த மனநிலையில் ஏதோ ஒரு உத்வேகம் வந்துவிட எழுந்து மாடிக்கு சென்றாள் ஜியா.





இதுவரை எத்தனையோ தடவை இந்த வீட்டுக்கு வந்திருக்கிறாள்தான் ஆனால் ஒருநாள் கூட அவன் அறை இருக்கும் பகுதிக்கு சென்றதில்லை.





அவனது அறையை நெருங்க நெருங்க உள்ளுக்குள் கிலி பரவத்தான் செய்தது. மூடப்பட்டிருந்த அவனது அறைக்கதவை கண்டதும் திரும்பி சென்றுவிடலாமா என்று ஒரு நொடி தோன்றினாலும் இல்லை இவனிடம் பேசித்தான் ஆக வேண்டும் அப்போதுதான் ஒரு முடிவு கிடைக்கும் என ஆழ் மனதிலிருந்து ஏதோ ஒரு உந்துதல்..





தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒற்றை விரலால் கதவை தட்டினாள்.





“கமின்” என்று ஒலித்த கம்பீர குரலில் இப்போது மீண்டும் உள்ளே செல்வதா வேண்டாமா என்று யோசித்தாள்.





‘சரி போவோம் போய்த்தான் பார்ப்போம்’





கதவை திறந்து மெல்ல உள்ளே நுழையவும் கண்ணில் பட்டது என்னவோ தன்னுடைய ஷர்ட்டை மாற்றிக் கொண்டிருந்த யாதவ வர்மன்தான்.





ட்ரெஸ்ஸரின் முன் நின்று ஷர்ட் பட்டன்களை மாட்டிக் கொண்டிருந்தவன் அவள் பக்கம் திரும்பாமல் “வெச்சிட்டு போ” என்றான்.





பகல் வேளைகளில் அவன் வீட்டுக்கு வந்தால் வேலைக்காரி ஜூஸ் கொண்டு வருவது வழக்கம். வேலைக்காரி என்று நினைத்துதான் அப்படி சொன்னான்.





அவள் அசையாமல் அதே இடத்தில் நிற்பது ஓரப்பார்வையில் தெரியவும் சிறு முகச்சுழிப்புடன் ஏதோ சொல்ல திரும்பியவன் அங்கு ஜியாவை கண்டதும் அடர்ந்த அவன் புருவங்கள் மிக லேசாக ஏறி இறங்கின.





ஏற்கனவே அவனுடன் பேசுவதா திரும்பி செல்வதா என குழப்பத்தில் நின்றிருந்தவளுக்கு அவன் தன்னை நேருக்கு நேராக திரும்பி பார்த்ததும் பயத்தில் வியர்க்கவே ஆரம்பித்து விட்டது.





இத்தனை வருடங்களில் ஒரு முறை கூட அவர்கள் இருவரும் நேரடியாக பார்த்ததோ, பேசிக்கொண்டதோ கிடையாது.





அவளாவது அடிக்கடி அவனை பார்த்து வைப்பாள்.. வேறு எதற்குமில்லை கரித்துக் கொட்டுவதற்குதான். கண்ணில் படும் நேரமெல்லாம் அவனை மனதுக்குள் தாளிப்பதை ஒரு தொழிலாகவே வைத்திருந்தாள் அவள். அவன் அப்படிக்கூட அவளை திரும்பிப் பார்த்ததில்லை.





திடீரென இவனுக்கு தன்னை தெரிந்திருக்குமா என்ற பெரும் சந்தேகம் அவளுக்குள் உதித்தது.





‘சே.. சே.. எத்தன தடவை இங்க வந்து போயிருப்போம்.. ஒரு தடவையாவது பார்க்காமலா இருந்திருப்பான்’ என தனக்குத்தானே கூறிக்கொண்டாள்.





அவளது எண்ணங்களுக்கு மாறாக அவனுக்கு அவளை நன்றாக… மிக நன்றாகவே தெரிந்திருந்தது.





பாவம் அவள்தான் அறியவில்லை.





ஒரு சில நொடிகளில் ஓராயிரம் எண்ணங்கள் உள்ளுக்குள் அலைமோத ஒருவித அச்சத்துடன் நின்றிருந்தவளின் திருதிருக்கும் விழிகளை பார்த்துக்கொண்டே அவளை நோக்கி வந்தான் அவன்.





இதுவரை தூரத்தில் மட்டுமே பார்த்திருந்தவனை வெகு அருகில் காணவும் கை கால்கள் லேசாக நடுங்க என்ன பேச வந்தோம் என்பதையே மறந்தவளாக நின்றிருந்தாள் அவள்.





தன்னை கேள்வியாய் நோக்கியபடி எதிரில் நின்றிருந்தவனை விழி விரிய பார்த்திருந்தவளுக்கு வாயை திறந்தால் காற்றுதான் வந்தது.





‘ச்சை என்னடி ஜியா. நீ வந்த வேகம் என்ன? இவனை நல்லா நாலு வார்த்தை கேக்கனும்னு வந்துட்டு இப்படி பே’ன்னு பார்த்துட்டு நிக்கிற. இவ்வளவுதானா நீ’ என்று அவளது மனசாட்சி காரித்துப்பியதாலோ என்னவோ லேசாக தொண்டையை செருமிக்கொண்டு,





“உ.. உங்.. உங்ககிட்ட கொஞ்சம் பே.. பேசனும்” என்றாள் திக்கித்திணறி.





அவள் அவனிடம் பேச நினைத்திருந்த தொனியே வேறு.. ஆனால் இந்தளவில்தான் வந்தது.





“சொல்லுங்க ஜியாஶ்ரீ” என்றான் அவன்.





அவள் பதட்டத்தில் இருந்ததாலோ என்னவோ அவன் தன் பெயரை வெகு அழகாக உச்சரித்ததை கவனிக்கத் தவறினாள்.





‘என்னத்த சொல்ல?’





“அ.. அது நீங்.. நீங்க ஏங்க இன்னும் க.. கல்யாணமே ப.. பண்ணிக்கல?” கேட்ட பிறகுதான் இந்த கேள்விக்காக தன்னை அறைந்து விடுவானோ என்ற எண்ணம் தோன்ற தன்னையறியாமலே கைகளை தூக்கி இரண்டு கன்னங்களையும் தடவி விட்டுக் கொண்டாள்.





அவளது எண்ணவோட்டத்தை அவனும் புரிந்து கொண்டானோ என்னவோ விழியோரம் சுருங்கி விரிய மீண்டும் ஒற்றை புருவம் உயர்த்தினான்.





“அதுல உங்களுக்கு என்னங்க ப்ராப்ளம்?” என்றான் அவளைப்போலவே.






லயமாகும்….




சாரி சாரி சாரி மக்களே.. எபி கொஞ்சம்…… இல்ல ரொம்பவே லேட்தான் மன்னிச்சு.. அடுத்த எபி செவ்வாய் இல்லனா புதன் கண்டிப்பா வந்துடும் 😁😁 அப்புறம் முக்கியமான இடத்துல தொடரும் போட்டனேன்னு யாரும் கோச்சுக்காதீங்க. ரெண்டாவது எபிலயே ஹீரோயின அழ வெச்சா நல்லாவா இருக்கும்கிற நல்ல எண்ணத்துலதான் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️





கருத்துக்களுக்கு…..




 
Top