அத்தியாயம் 13
கால் டாக்சியில் இருந்து இறங்கிய மித்ரா ராகவ் விடம் தாத்தாவை கீழ் இறக்க சொல்ல, அவன் அவரை இறக்கி கொண்டிருந்த சமயம் இன்னும் வீட்டு வாசலில் விளக்கு எரிந்து கொண்டிருப்பதை பார்த்த மித்ரா வாசலை பார்த்தபடி ராகவ் வின் தோளில்
“டேய்.. டேய்..”
என்று தட்ட அப்போது தாத்தாவை இறக்கி கொண்டிருந்த ராகவ்
“ஏய்.. இருடீ நீ வேற.. இந்த தாத்தாவை மொத இறக்கிட்டு வரேன்..”
என்று கூறி சீனிவாசனை கீழ் இறக்கியவன் அவரை தாங்கி பிடித்தபடி மித்ராவை பார்த்து மூச்சிரைக்க
“ம்ஹூம் என்னா கெனம் கெனக்குது இந்த பெருசு உஷ்… ம்.. இப்ப சொல்லு மித்து எதுக்கு தட்டுன..??”
என்று கேட்க அதற்கு மித்ரா
“ஆ.. இன்னும் பொருமையா கேட்ருந்தா நேரா அத்தைகிட்டயே சொல்லிருக்கலாமே..”
என்று கூற உடனே ராகவ்
“எதே.. அம்மாவா எங்க.. எங்க..”
என்று தேட உடனே மித்ரா
“அங்க பாரு பக்கி”
என்று அவன் பின்னந்தலையில் அடித்துவிட்டு
“எப்படி வாசல்ல லைட்ட போட்டுட்டு உட்கார்ந்துட்டு இருக்காங்கன்னு”
என்று கூற அவள் சொன்ன திசையை பார்த்த ராகவ்
“ஆமா மித்து.. அப்ப இன்னைக்கு நாம வசமா மாட்டுனோமா..”
என்று பயத்தில் கூற அப்போதென்று பார்த்து தாத்தா சீனிவாசன்
“என்ன..டா சொன்..னீங்க.. எனக்கு பயமா.. இ..ப்ப வர சொ..ல்லுடா.. உன் அ..ப்பன..”
என்று அரை போதையில் உளற இதை கேட்ட மித்ரா
“இந்த சீனு ஒன்னு போதும் நாம மாட்ட.. மொத இவரோட வாயை மூடுடா..”
என்று ராகவ்வை பார்த்து கூற அதற்கு ராகவ்
“அதை விடு மித்து.. இப்ப எப்படி உள்ள போகுறது”
என்று கேட்க அதற்கு மித்ரா
“அதுக்கு என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு.. ஃபாலோ மீ..”
என்று கூறி முன்னே செல்ல இருவரும் பின்பக்க வாசலுக்கு வந்து சேர்ந்தனர். அங்கே வந்ததும் ராகவ்
“ஏய் மித்து.. பின்பக்க கதவு இந்த டைம்க்கு லாக் ஆகிருக்கும்ன்னு உனக்கு தெரியாதா..”
என்று கேட்க உடனே மித்ரா கதவின் அருகில் மேலும் கீழும் பார்த்துவிட்டு திரும்பி ராகவ் வை பார்க்க உடனே ராகவ்
“அய்யோ.. இவரை தூக்கிட்டு என்னால மேல எல்லாம் ஏறமுடியாது தாயே.. அதுக்கு நான் என் ஆத்தாக்காரி கிட்ட நாலு உதயையே வாங்கிக்குவேன்”
என்று கூறி தாத்தாவுடன் திரும்ப இதை பார்த்த மித்ரா
“அடச்சைக்.. உனக்கு அவ்வளவு சீன் எல்லாம் இல்ல, கொஞ்சம் நில்லு வரேன்”
என்று கூறி கொஞ்சம் எட்டினார் போல் வாசலுக்கு இருப் புறங்களிலும் தொங்கவிடப்பட்டிருந்த ஒரு பூந்தொட்டியில் இருந்து சாவியை எடுக்க அதை பார்த்து எதையோ புரிந்துக் கொண்ட ராகவ்
“ஏய்.. மித்து.. இது அந்த சாவி தானே..”
என்று கேட்க அதற்கு மித்ரா
“எஸ்.. இது தான் என் ரகசிய சாவி”
என்று ஏதோ பழங்கால அரண்மனையின் உள்ளே செல்லும் ரகசிய பாதையை கண்டு பிடித்தது போன்று பெருமைப்பட்டு கொண்டிருக்க மீண்டும் தாத்தா சீனிவாசன் அரை போதையில் ஏதோ உளற உடனே மித்ரா
“அய்யோ.. இந்த கெழத்த..”
என்று கூறி தலையில் கை வைத்தவள் சீனிவாசனின் முகத்தில் தட்டியபடி
“தாத்தா.. தாத்தா..”
என்று அழைக்க கண் திறந்த சீனிவாசனை பார்த்து
“தாத்தா நாம வீட்டுக்கு வந்துட்டோம் நான் சொன்ன மாதிரியே உள்ள போய் சத்தம் போடாம சைலன்ட்டா படுத்துடனும்.. என்ன புரியுதா..”
என்று கிளிப் பிள்ளையை கேட்பது போன்று கேட்க அதற்கு அவரும்
“ஆ.. சரிடா ராகவா”
என்று மித்ராவை பார்த்து கூற உடனே ராகவ்
“அய்யோ தாத்தா அது மித்ரா நான் தான் ராகவ்”
என்று கூறிய ராகவ் மித்ராவை பார்த்து
“ஆமா இவரு ஒழுங்கா போய் படுத்துடுவாரா, எனக்கு என்னமோ திக் திக்கு னு இருக்குது மித்து”
என்று கூற அதற்கு மித்ரா
“டேய் அதெல்லாம் தாத்தா கிங்குடா..”
என்று இவர்கள் இருவரும் பேசி கொண்டிருக்க எப்போதோ உள்ளே சென்ற சீனிவாசன்
“டேய் விஸ்வநாதா வெளிய வாடா..”
என்று சத்தமாக குரல் கொடுக்க முன் பக்கத்தில் இருந்த யமுனா தன் மாமனார் சீனிவாசன் போட்ட சத்தத்தை கேட்டு குரல் வந்த திசைக்கு வர அங்கே இருந்த சீனிவாசன் மீண்டும்
“டேய் விஸ்வநாதா இப்ப நீ வரியா இல்ல நான் வரட்டா.. உன்ன பார்த்தா நான் பயப்படுவேனா.. ஆமாடா.. இன்னைக்கு நான் புல்லா குடிச்சிருக்கேன் டா.. என்னடா பண்ணுவ..”
என்று போதையில் கத்திக் கொண்டிருக்க அங்கே வந்த யமுனா தன் மாமனாரிடம் சென்று
“மாமா, என்ன பண்றீங்க..??”
என்று மெல்லமாக கேட்க அதற்கு சீனிவாசன்
“என்னம்மா நீ கூட பயப்படுற.. நீ பயப்படாத மா.. நீ பயப்படாத.. நான் இருக்கேன்..”
என்று கூற அதே நேரம் ஏதோ சத்தம் கேட்டு கண் விழித்த விஸ்வநாதன் பக்கத்தில் தன் மணாளினியை தேட அவர் அங்கு இல்லை. உடனே சத்தம் வந்த திசையை நோக்கி கீழே வர, அதேசமயம் தன் மணாளன் கீழே வரும் சத்தத்தை உணர்ந்த யமுனா மீண்டும் சீனிவாசனிடம் சென்று
“மாமா.. என்ன பண்றீங்க.. அவர் வந்துடப்போறாரு..”
என்று கூற அதற்குள் அங்கு வந்த விஸ்வநாதன்
“என்ன இங்க சத்தம்..??”
என்று கேட்டார். அதற்கு சீனிவாசன்
“என்னடா கத்துற.. அப்பா என்கிற மரியாதை இல்லாம கத்துற.. இல்ல இங்க நான் உனக்கு அப்பனா இல்ல எனக்கு நீ அப்பனா..”
என்று கேட்க அதற்கு விஸ்வநாதன்
“நீங்க தான் பா எனக்கு அப்பா.. ஆனா இந்த நேரத்துல எதுக்கு நீங்க சத்தம் போட்டுட்டு இருக்கீங்கன்னு தான் கேட்டேன்.”
என்று மரியாதையுடன் மெல்லிய குரலில் கேட்க, இதை கேட்ட சீனிவாசன்
“ஆ.. அது.. இப்படி மரியாதையா குரலை தாழ்த்தி பேசனும். என்னமோ நீ எனக்கு அப்பன் மாதிரி குரலை உயர்த்தி உயர்த்தி பேசற.. என்ன சென்னைக்கு வந்ததும் எல்லாம் மறந்துப் போயிடுச்சா நான் யாருன்னு தெரியும்ல.. லட்சுமிபுரம் ஜமின் டா..”
என்றவர் அதை கூறியபடியே தோளில் இருந்த அங்கவஸ்த்திரத்தை எடுத்து தலையில் கட்டியபடி மீண்டும்
“என்னை பார்த்தாலே அவன் அவன் ஊருக்குள்ள அலருவானுங்க, ஆனா நீ என்னடான்னா என் முன்னாடியே குரல உயர்த்தி பேசுற..”
என்று இவர் இங்கு கூறிக் கொண்டிருக்க அங்கே மித்ரா ராகவ் வின் முதுகில் சுளீர் என ஒன்று வைத்து
“தாத்தா கெத்து டா.. பாரேன் எப்படி கலக்குறாரு..”
என்று கூற அதற்கு ராகவ்
“ம்ஹூம்.. காலைல மட்டும் பெருசுக்கு போதை தெளியட்டும் அப்புறம் பாரு வேடிக்கைய”
என்று கூற உடனே மித்ரா
“டேய் அது அப்போ பார்த்துக்கலாம் இப்ப என்ஜாய் பண்றா”
என்று கூலாக கூற இதை கேட்ட ராகவ்
“என்ன டீ இவ்ளோ கூலா சொல்ற நாம தான் அவருக்கு ஊத்தி கொடுத்தோம் னு மட்டும் தெரிஞ்சுது அப்புறம் நம்ம சோலி... காலி...”
என்று கூற அதற்கு மித்ரா
“ம்ச்..அ.. அதெல்லாம் அவங்களுக்கு தெரியாது நீ ப்ரீயா விடு மச்சி”
என்று கூறிவிட்டு ஒரு ஓரமாக நின்று கொண்டு சண்டையை வேடிக்கை பார்க்க, விஸ்வநாதன் தன் தந்தையை பார்த்து
“அப்பா… என்ன பண்ணி வச்சுருக்கீங்க.. போய் உங்க ரூம்ல படுங்க..”
என்று கொஞ்சம் காட்டமாக கூற இதை கேட்ட சீனிவாசன்
“ம்.. என்னடா பண்ணேன்.. என்ன பண்ணேன்.. லைட்டா…. ஒரு நாலு பெக் சரக்கை உள்ள விட்டேன். அது குத்தமா..”
என்று கேட்க இதை கவனித்த மித்ரா அருகில் நின்றிருந்த ராகவ்வை பார்த்து
“டேய்.. தாத்தா ஒரு பெக் தான் குடிச்சாருன்னு சொன்ன.. இப்ப அவரு என்னடான்னா நாலுன்னு சொல்றாரு..”
என்று கேட்க அதற்கு ராகவ்
“அய்யோ.. நான் ஒரு பெக் முடிக்குறத்துக்குள்ள அவரு நாலு பெக் முடிப்பாருன்னு நான் என்ன கனவா கண்டேன்..”
என்று கூற இதை கேட்ட மித்ரா
“ம்.. உன்னை…”
என்று கூறி முறைத்துவிட்டு மீண்டும் தன் கவனத்தை தாத்தாவிடம் செலுத்தினால். அங்கே சீனிவாசன் தன் மகனை பார்த்து
“ஏன்டா.. உனக்கு எங்கயாவது பெத்த அப்பன் மேல கொஞ்சமாவது பாசம் இருக்காடா..???”
என்று கேட்க அதற்கு விஸ்வநாதன்
“என்னப்பா பேசுறீங்க.. என் பாசத்துல நீங்க என்ன குறைய கண்டீங்க..”
என்று கேட்க உடனே சீனிவாசன்
“என்ன குறைய கண்டேனா.. ம்ஹூம்.. உனக்கு கல்யாணம் ஆனதும் உன் ஹனிமூனுக்கு நீ ஆஸ்திரேலியா போறியா பிரிட்டன் போறியான்னு கேட்டுக் கேட்டு டிக்கெட் போட்டு ஹனிமூன் அனுப்பி வச்சேன்.. ஆனா நீ என்னோட கல்யாணம் முடிஞ்சதும் ஹனிமூனுக்கு எங்கடா டிக்கெட் போட்ட..?? சொல்லு..”
என்றவர் மேலும் தன் மகனை பார்த்து
“ஒரு அப்பன் மேல பாசம் இருக்குற பிள்ளையா இருந்தா நீ என்ன எங்க அனுப்பி வச்சுருக்கனும் இல்ல நீ எங்க அனுப்பி வச்சிருக்கனும்ன்னு கேட்குறேன்.. ஒரு டார்ஜிலிங்குக்கோ இல்ல குல்மார்க்குக்கோ அனுப்பிருக்கனும்.. ம்ஹூம்.. ஆனா நீ எங்க அனுப்புன காசி.. ராமேஸ்வரம் ன்னு அனுப்பி வச்சிருக்க..”
என்றவரை பார்த்து விஸ்வநாதன்
“அப்பா.. அது உங்க அறுபதாம் கல்யாணம்ப்பா..”
என்று கூற இதை கேட்ட சீனிவாசன்
“ஆ.. அறுபதாம் கல்யாணம் னா அதுவும் கல்யாணம் தானே.. இல்ல இதுக்கு இங்க தான் போகனும்ன்னு எதாவது ரூல்ஸ் இருக்கா என்ன..?? அந்த காலத்துல எங்களோட ஒரு ஒரு கல்யாண நாளுக்கும் உன்னையும் உன் தங்கச்சியையும் வீட்ல விட்டுட்டு நானும் உங்க அம்மாவும் கோவிலுக்கு போறோம் கொளத்துக்கு போறோம்ன்னு சொல்லிட்டு எங்க ஹனிமூன ஸ்டேட்டு ஸ்டேட்டா போய் லைப்ப என்ஜாய் பண்ணோம்டா.. அப்படியா பட்ட என்ன இப்படி காசிக்கும் ராமேஸ்வரத்துக்கும் அலைய விட்டுட்டியேடா.. படுபாவி.. படுபாவி..”
என்று கூற இதை கேட்ட விஸ்வநாதன் மார்பில் கை வைத்தபடி
‘அடப்பாவி மனுசா.. அப்ப கோவிலுக்கு போறேன் யாத்திரைக்கு போறேன்னு சொல்லிட்டு போனதெல்லாம் இதுக்கு தானா..’
என்று மனதில் நினைக்க அதே நேரம் தன் மருமகளை பார்த்த சீனிவாசன்
“இந்த மாதிரி ஒரு ரசனை இல்லாத ஒருத்தன உன் தலையில கட்டி வச்சு உன் வாழ்க்கையையே வீணாக்குனதுக்கு என்ன மன்னிச்சிடும்மா”
என்று கூற இதை கேட்டதும் தன் வாழ்க்கையை பின்நோக்கி நினைத்து பார்த்த யமுனாவின் தலைக்கு மேல் கொசுவத்தி சுருள் வட்டமிட்டது
ஒரு நாள் காலை யமுனா தன் மணாளனை பார்த்து
“என்னங்க தலைவர் படம் பாபா ரிலிஸ் ஆகிருக்காமுங்க ஒரு தடவை போய் பார்த்துட்டு வரலாம் வர்றீங்களா”
என்று கேட்க அதற்கு விஸ்வநாதன்
“என்னம்மா பேசுற.. இப்ப படத்துக்கு போனா எப்படியும் வர சாயந்திரம் ஆகிடும் ஸ்கூலுக்கு போன பசங்க வந்து அம்மா எங்கன்னு தேடுனா என்ன பண்றது. அதெல்லாம் வேண்டாம் இன்னொரு நாள் போகலாம்..”
என்று கூறிவிட்டு விறுவிறுவென கிளம்பி அலுவலகத்திற்கு சென்றார்.. இது போன்று எதை எப்போது கேட்டாலும் ஏதாவது சாக்கு கூறி இத்தனை வருடங்களாக ஹனிமூனிற்கு பிறகு இருவர் மட்டும் ஒன்றாக சேர்ந்து வெளியில் சென்ற நாட்கள் என்று யோசித்து பார்த்தால் ஒன்று கிடைப்பது கூட அரிது என்றே கூறவேண்டும். இவைகளை நினைத்து பார்த்து முடித்த யமுனாவின் தலைக்கு மேல் தெரிந்த கொசுவத்தி சுருள் மறைய ஏகப்போக உரிமையுடன் தன் மணாளனை பார்த்து முறைத்தார் யமுனா.. உடனே இதை கவனித்த விஸ்வநாதன்
‘அய்யோ என்ன நினைச்சாலோ தெரியலையே இப்படி முறைக்கிறாளே.. இன்னைக்கு ராத்திரி நிம்மதியா தூங்குனா மாதிரி தான்..’
என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்க அப்போது யமுனா தன் மணாளனை முறைத்து பார்த்தப்படி
“எத்தனை தடவை நான் வெளியே போகலாம்ன்னு கேட்டிருப்பேன் ஆனா நீங்க ஒரு தடவையாவது கூட்டிட்டுப் போகியிருக்கீங்களா ஆனா மாமாவை பாருங்க அத்தையை எங்கலாம் கூட்டிட்டு போகிருக்காருன்னு”
என்று கூற சரியாக மீண்டும் சீனிவாசன் யமுனாவை பார்த்து
“அதை விடும்மா இவன் இன்னைக்கு பண்ண காரியம் உனக்கு தெரிஞ்சுதா?”
என்று கேட்க உடனே யமுனா
“என்ன மாமா பண்ணாரு”
என்று கேட்க அதற்கு சீனிவாசன்
“ம்ஹூம்.. இவனை விட ரெண்டு வயசு பெரியவன் அந்த ஜெகன்நாதன் அவனே கூச்சப்படாம அவன் பொண்டாட்டி கூட ஸ்டேஜ் ஏறி சல்சா டான்ஸ் ஆடுறான் ஆனா இவன்..”
என்று கூற மீண்டும் யமுனா தன் மணாளனை பார்த்து முறைக்க இவர்கள் போடும் சத்தம் கேட்டு இம்முறை அர்ஜூன் கீழே வந்து
“என்ன இங்க இவ்வளவு சத்தம்..??”
என்று கேட்க உடனே சீனிவாசன்
“என்னடா என்ன..?? ஆளாளுக்கு என் முன்னாடி குரலை உயர்த்தி பேசுறீங்க இனிமேல் இந்த வீட்ல என் குரல் மட்டும் தான் கேட்கனும் வேற யாராவது குரல உயர்த்தி பேசுனீங்க..”
என்று இவர் இங்கு அர்ஜூனிடம் பேசிக் கொண்டிருக்க அங்கு மறைந்து நின்றுக் கொண்டிருந்த மித்ரா அர்ஜூனை முறைத்து பார்த்தப்படி
“வந்துட்டான்டா கொம்பேரி மூக்கன்..”
என்று மனதில் நினைக்க ராகவ் மித்ராவை பார்த்து
“ஏன் மித்து இங்க இவ்வளவு நடந்துட்டு இருக்கு ஆனா இன்னும் இந்த ராஜமாதா ஜானகிதேவியை ஆள காணோம் பாத்தியா..”
என்று கூற அதற்கு மித்ரா
“ஆமாடா.. ஒருவேளை வந்ததும் பிரசர் மாத்திரையை போட்டுட்டு படுத்துருக்குமோ.. எப்படியோ அது வராததும் நல்லது தான்”
என்று கூற உடனே ராகவ்
“ஏன் மித்து அப்படி சொல்ற..”
என்று கேட்க அதற்கு மித்ரா
“டேய்.. கொஞ்சமாவது மண்டையில இருக்க மசாலாவை யூஸ் பண்ணுடா.. அந்த ராஜமாதா மட்டும் இங்க இருந்திருந்தா இந்த தாத்தா இப்படியெல்லாம் பேசிருப்பாரா சொல்லு..”
என்று கேட்க அதற்கு ராகவ்வும்
“ஆமா நீ சொல்றதும் சரி தான். இந்த பெருசு மட்டும் அவங்கள பார்த்து இருந்துது பார்த்த அடுத்த செக்கண்டே ஏறுன போதை எல்லாம் இறங்கி இருக்கும்..”
என்று கூற இருவரும் அதை நினைத்து சிரித்தனர். அதே சமயம் சீனிவாசன் அர்ஜூனை பார்த்து
“நீ எல்லாம் எனக்கு ஒரு பேரனாடா..?? அங்க நிக்குறான் பாரு என் சிங்க குட்டி ராகவ்”
என்று அங்கு மறைந்து நின்றிருந்த ராகவை கை காட்டி
“என்னை பாருக்கு கூட்டிட்டு போயி ஊத்தி குடுத்து நான் தனியா குடிச்சா பீல் பண்ணுவேன்னு எனக்கு கம்பெனியும் குடுத்து எப்படி என்னை பார்த்துக்கிட்டான் தெரியுமா..?? நீயும் இருக்கீயே..??”
என்று கூற இதை கேட்ட யமுனா, அர்ஜூன், விஸ்வநாதன் என மூவரும் ராகவ் இருக்கும் திசையை பார்க்க
“அய்யய்யோ... நான் இல்ல...”
“என்று தாவி குதித்து அங்கிருந்து முன் பக்கமாக வீட்டினுள் புகுந்தவன் தன் அறைக்குள் சென்று தாளிட்டு படுத்தான்.. ராகவ் தாவி குதித்து ஓடியதை பார்த்த மித்ரா சிரித்துக் கொண்டே
“ஹா.. ஹா.. ஹா.. சில்லி பாய்..”
என்று கூற மீண்டும் சீனிவாசன்
“என் பேத்தி மட்டும் என்ன குறைச்சளா அவளும் தான் எனக்கு..”
என்று கூறி முடிப்பதற்குள் யமுனா
“எதே.. அவளும் குடிச்சாளா.. எடு அந்த தொடப்பக்கட்டைய”
என்று கூற உடனே மித்ராவும்
“அய்யய்யோ… நானும் இல்ல…”
என்று கூறிவிட்டு ராகவ்வை போலவே தாவி குதித்து தன் அறையை நோக்கி ஓட உடனே சீனிவாசன்
“ச்ச.. ச்ச.. என் பேத்தி தங்கம். அவ ஒரு சொட்டு கூட குடிக்கல மருமகளே.. அவ தான் என்னை பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வந்தான்னு சொல்ல வந்தேன்.. அவங்க ரெண்டு பேரும் எனக்கு ரெண்டு தூண் மாதிரி இருக்கும் போது இவனும் இருக்கானே..”
என்று கூறியவர் இப்போது தன் மகனை பார்த்து
“அப்புறம் நீ..
என்றவர் விஸ்வநாதனை பார்த்து
“அந்த பார்ட்டில நானும் ஆடட்டுமான்னு கேட்டதுக்கு நீ என்னடா சொன்ன..”
என்று ஆட்காட்டி விரலை தாடையில் வைத்து யோசித்தவர்
“ஆ.. ஞாபகம் வந்துடுச்சு.. அதெல்லாம் ஒன்னும் வேணாம் ஆடுறேன்னு சொல்லி தடுக்கி விழப்போறீங்க நீங்க சும்மா உட்காருங்கன்னு தானே சொன்ன..
என்றவர் மீண்டும்
“ஆனா இப்ப பாருடா நான் எப்படி ஆடுறேன்னு”
என்று கூறியவர் தன் மொபைலை எடுத்து அதை ஏதோ க்ளிக் செய்ய தீடீரென
“ஹே.. ரக்கிட்ட ரக்கிட்ட ரக்கிட்ட ஊ..
ரக்கிட்ட ரக்கிட்ட ரக்கிட்ட ஊ..
ரக்கிட்ட ரக்கிட்ட ரக்கிட்ட ஊ..
ரக்கிட்ட ரக்கிட்ட ரக்கிட்ட…
ஹே என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்..”
என்ற பாடல் ஒலிக்க அதை கேட்டு நடனமாடியவர் ரக்கிட்ட ரக்கிட்ட ஊ.. என்ற வார்த்தை வரும்போது ஒரு சுற்று சுற்ற அங்கேயே தலை சுற்றி கீழே விழுந்தார். இதை பார்த்த அர்ஜூன்
“அப்பா இவரை கூட்டிட்டு போய் கெஸ்ட் ரூம்ல படுக்க வைங்க விடுஞ்சதும் இவரை நான் கவனிச்சுக்குறேன்.”
என்று கூறி தன் அறையை நோக்கி சென்றான். அதேபோல் விஸ்வநாதனும் தன் தந்தையை எழுப்பி கெஸ்ட் ரூமுக்குள் அழைத்து வந்து படுக்கையில் படுக்க வைத்துவிட்டு திரும்ப, விஸ்வநாதனின் கையை பிடித்த சீனிவாசன்
“டேய்.. விஸ்வா.. எனக்கு எல்லாம் தெரியும் டா.. உனக்கு போன் பண்ணதுக்கு அப்புறம் ஜோசியர் எனக்கும் போன் பண்ணாரு.. அர்ஜூன் மித்ரா ஜாதகம் பொருந்துனது பத்தியும் சொன்னாரு.. ஆனா நீ அதற்கு பதிலா விக்ரம் ஜாதகத்தை கொடுத்து பொருத்தம் பார்க்க சொன்னதையும் சொன்னாரு.. எனக்கு தெரியும் டா.. எங்க நம்ம ஆசைக்காக மனப் பொருத்தம் இல்லாம கல்யாணம் செய்து வச்சா தன் மகனோட வாழ்க்கை வீணாகிடுமோன்னு உன் பொண்டாட்டியோட பயத்தால தானே நீ அர்ஜூன் மித்ரா கல்யாணத்தை விரும்பள.. ஆனா என்னைப் போலவே அவங்க ரெண்டு பேரோட கல்யாணம் நடக்கனும்ன்னு நீ எவ்வளவு ஆசைப்பட்ட ன்னு எனக்கு தெரியாதுன்னு நினைக்கறியா..??
என்று இந்த திருமண பேச்சு ஆரம்பித்ததிலிருந்து தன் மகன் முன்பு பேச நினைத்த அனைத்தையும் இன்று குடித்துவிட்டு போதையில் உளறியபடி கேட்க தன் மனதில் உள்ளதை கண்ணாடி பிம்பம் போல கூறிய தன் தந்தையின் வார்த்தைகளை கேட்ட விஸ்வநாதனின் கண்கள் இரண்டும் ஒரு நிமிடம் கலங்க தன் தந்தையை பார்த்து
“அப்பா.. அது வந்து..”
என்று ஏதோ கூற வர மீண்டும் சீனிவாசன் தன் மகனிடம்
“நீ எதுவும் பேசாத டா இப்ப நான் நினைச்சா கூட அர்ஜூன் மித்ரா கல்யாணத்தை நடத்திக் காட்டுவேன் அது உனக்கும் தெரியும் தானே.. இல்ல ஒருவேளை இவனுக்கு தான் வயசாகிடுச்சே இவனால என்ன பண்ண முடியும்ன்னு நெனச்சிட்டியா..??”
என்று கேட்க அதற்கு விஸ்வநாதன்
“ம்.. ஆமாப்பா உங்களால முடியும்ன்னு எனக்கு தெரியும்.. ஆனா..”
என்று ஆரம்பிக்க அதற்குள் சீனிவாசன்
“சரி டைம் ஆச்சு நீ போய் படு.. உன் பொண்டாட்டி காத்துட்டு இருப்பா..”
என்று கூற அவரும் மறுவார்த்தை எதுவும் பேசாது தன் அறைக்கு சென்று படுக்க ஏனோ தன் தந்தை பேசியதைக் கேட்ட பிறகு அன்றிரவு முழுவதும் அவருக்கு உறக்கம் வரவில்லை.
மறுநாள் காலை..
நேற்று செய்த செயல்களுக்கு அப்படியே மாறாக விபூதி பட்டையும் காதில் ஒரு சாமந்தி பூவுமாக ஒன்றும் தெரியாதவர் போல தன் மணாளினியுடன் சோபாவில் வந்து அமர்ந்திருந்தார் சீனிவாசன் அவர்களுக்கு அருகிலேயே ராகவ்வும் நியூஸ் பேப்பரை படிப்பதை போல சீனிவாசனை பார்த்து பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். அதேசமயம் ஜாக்கிங் முடித்துவிட்டு உள்ளே நுழைந்த மித்ராவையும் அழைத்து தன் பக்கத்தில் அமர வைத்துக் கொண்ட ராகவ்
“மித்து, அங்க பாரு..”
என்று கூற அவளும் அங்கு அமர்ந்திருந்த சீனிவாசனை பார்க்க குப்பென சிரிப்பு வந்தது அவளுக்கு உடனே ராகவ்வை பார்த்து
“என்னடா இது வேஷம்..”
என்று கேட்க அதற்கு ராகவ்
“ஆமா மித்து, காலையில போதை தெளிஞ்சதும் நேத்து ராத்திரி நடந்தது எல்லாம் ஞாபகம் வர அதுல இருந்து தப்பிக்க போட்ட வேஷம் தான் இந்த சாமியார் வேஷம்..”
என்று இப்படி அவன் கூறிக் கொண்டு இருக்கையில் மேலிருந்து படிகளில் இறங்கிய விஸ்வநாதனை பார்த்த ராகவ் தொண்டையை லேசாக செருமியபடி தன் தந்தை வருவதை மித்ராவிற்கு உணர்த்த, அவளும் வேடிக்கை பார்க்க தயாரானாள். காலை டிபன் உண்ண டைனிங் டேபிளுக்கு வந்த விஸ்வநாதனை பார்த்து
“குட் மார்னிங் மை சன்..”
என்று சீனிவாசன் கூற இதை கேட்ட விஸ்வநாதன் அவர் முன்னே வந்து தன் குரலை சற்று தாழ்த்தி
“குட் மார்னிங் பா..”
என்று கூற இதை சற்று வினோதமாக பார்த்த ஜானகி
“என்னடா ஆச்சு உனக்கு, இன்னைக்குன்னு பார்த்து இவருக்கு இவ்வளவு மரியாதை தர..”
என்று கேட்க அதற்கு விஸ்வநாதன்
“என்னம்மா அப்படி கேட்குறீங்க அப்பா முன்னாடி புள்ள குரலை உயர்த்தி பேச கூடாது, உங்களுக்கு தெரியாதா..?? அதுவும் லட்சுமிபுரம் ஜமின்ந்தார் அய்யாவுக்கு மரியாதை தராம எப்படி..??”
என்று கேட்டுவிட்டு தன் தந்தையை ஒரு பார்வை பார்த்தபடி
“என்னப்பா நான் சொல்றது சரி தானே..??”
என்று கேட்க அவரோ தலையை வெவ்வேறு திசைகளில் ஆட்டி ஆட்டி உம் கொட்டியபடி தன் மணாளினிக்கு தெரியாதவாறு எப்படியோ சமாளிக்க, நேராக சென்று டைனிங் டேபிளில் அமர்ந்தார் விஸ்வநாதன். இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ராகவும் மித்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சைலன்டாக சிரித்துக் கொண்டனர். அதே வேளை விஸ்வநாதன் கொடுத்த விளக்கத்தில் குழம்பிப்போன ஜானகி
‘என்ன பேசிட்டு போறான் இவன்..??’
என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்க மீண்டும் ஜானகி விஸ்வநாதனை பார்த்து
“விஸ்வா, என் பிரண்ட் துர்காவை உனக்கு தெரியும்ல, அதான்பா அந்த ஜட்ஜ் பொண்டாட்டி”
என்று கூற அதற்கு விஸ்வநாதன்
“அவங்களுக்கு என்னம்மா..”
என்று கேட்க உடனே ஜானகி
“அது ஒன்னும் இல்லப்பா அவளுக்கு இந்த மாசம் அறுபதாம் கல்யாணம் வருது அதான் ஒரு சர்ப்ரைஸ்சா நீ எங்க அறுபதாம் கல்யாணத்துக்கு ஆன்மீக சுற்றுலா புக் செய்து கொடுத்தா மாதிரி அவளுக்கும் புக் செய்து தர முடியுமான்னு கேட்கனும்ன்னு இருந்தேன்”
என்று கேட்க இதை கேட்ட விஸ்வநாதன்
“ஏன்மா அறுபதாம் கல்யாணத்துக்கு ஆன்மீக சுற்றுலா தான் போகனுமா என்ன..?? நான் வேணும்னா டார்ஜிலிங் இல்ல குளுமானாளிக்கு டிக்கெட் போட்டு தரேனே..”
என்று கூற இதை கேட்ட ஜானகி
“ச்சீ.. ச்சீ.. என்னடா பேசுற.. இந்த வயசுல போய் யாராவது அங்க எல்லாம் போவாங்களா..”
என்று கேட்க அப்போது அங்கு சாம்பார் கிண்ணத்தோடு வந்த யமுனா தன் மணாளனை முறைத்தபடி சாம்பார் கிண்ணத்தை சடாரென அங்கு வைத்துவிட்டு கிச்சனுக்குள் புகுந்தார். இதை பார்த்த விஸ்வநாதன்
‘இவ வேற.. நேத்து ராத்திரியில இருந்து முறைச்சிட்டே இருக்கா’
என்று மனதில் நினைத்தபடி உணவு உண்ண ஆரம்பித்தார். இவை அனைத்தையும் பார்த்த இருவரும் இடைவிடாது சிரித்துக் கொண்டிருக்க இவர்களை பார்த்த ஜானகி
“என்னடா நானும் அப்போதிலிருந்து பார்த்துட்டு இருக்கேன் இப்படி சிரிச்சுட்டு இருக்கீங்க.. சொன்னா நாங்களும் சிரிப்போம்ல”
என்று கேட்க அதற்கு ராகவ் சிரித்துக் கொண்டே
“சொல்றேன் பாட்டி ஆனா அதுக்கு முன்னாடி நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்றியா..??”
என்று கேட்க அதற்கு பாட்டியும் சரியென்று கூற உடனே ராகவ்
“ஆமா பாட்டி நீயும் தாத்தாவும் உங்க ஒவ்வொரு கல்யாண நாளுக்கும் ஒவ்வொரு கோவிலுக்கா போவிங்களாமே இதுவரைக்கும் அப்படி எந்தெந்த கோவிலுக்கு போய் இருக்கீங்க..??”
என்று கேட்க இதை கேட்டு ஜானகி ஒரு நிமிடம் லேசாக தடுமாற அப்போது மித்ரா
“என்ன ஆச்சு பேபி மா..”
என்று கிண்டலாக கேட்க உடனே ஜானகி சில வினாடிகளில் யோசித்து சில கோவில்களின் பெயர்களை கூற மீண்டும் ராகவ்
“அப்ப நீங்க ரெண்டு பேரும் இங்க எல்லாம் போய் இருக்கீங்க அப்படிதானே”
என்று அழுத்தி கேட்க ஜானகிக்கு பின்னாலிருந்து சீனிவாசன் வேண்டாம்டா என்றவாறு கையை ஆட்டி ஆட்டி கூற அதை பார்த்த இருவரும் சிரித்தனர். இதற்கிடையில் இதை கேட்ட ஜானகி
“என்னடா நான் என்னமோ பொய் சொல்றா மாதிரி கேட்குற ம்.. இந்தா வேணும்னா உன் தாத்தா பக்கத்துல தானே இருக்காரு அவரையே கேட்டுக்கோ..”
என்று தன் கணவனை பார்த்து
“என்னங்க நீங்களே சொல்லுங்க..”
என்று கூற உடனே ராகவ்
“அவரு தான் எப்பயோ சொல்லிட்டாரே..”
என்று கூறி நேற்று சீனிவாசன் பேசிய அனைத்தையும் தன் மொபைலில் படம் பிடித்து வைத்திருக்க அதை ஜானகியிடம் காண்பித்து பார்க்க சொன்னான். அதில் தன் கணவன் போதையில் போட்ட ஆட்டம் வரை அனைத்தையும் பார்த்த ஜானகி அருகில் அமர்ந்திருந்த தன் மணாளனை முறைத்தபடி சடாரென எழுந்தவர் அவரை முறைத்தபடி
“உள்ள வாங்க உங்களுக்கு இருக்கு..”
என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்ல, இதை பார்த்த ராகவும் மித்ராவும் சிரிக்க உடனே ராகவ் தாத்தாவை பார்த்து
“தாத்தா இன்னைக்கு உன் நிலமை என்ன ஆகப் போகுதோ யாருக்கு தெரியும்..”
என்று கூற இதை கேட்ட சீனிவாசன்
“டேய்.. நான் ஒன்னும் உன் அப்பன் மாதிரி இல்ல பொண்டாட்டிகிட்ட மாட்டிட்டு முழிக்க, நான் லட்சுமிபுரம் சீனு டா.. அந்த காலத்துல நான் பார்த்தாலே பத்து பொண்ணுங்க என் பின்னாடி வரும் அப்படியாபட்டவனுக்கு இந்த கிழவியை சமாளிக்குறதா கஷ்டம்.. ஜஸ்ட் வெயிட் அன்ட் வாட்…”
என்று கூறி முடிப்பதற்குள் உள்ளிருந்து
“இன்னும் உள்ள வராம என்ன பண்றீங்க”
என்று ஜானகி குரல் கொடுக்க உடனே சீனிவாசன்
“இதோ வந்துட்டேன்ம்மா..”
என்று கூறி அவசர அவசரமாக சென்றார். இங்கு அவர் சொன்ன அனைத்தையும் கேட்டு வாய் பிளந்த இருவரும் சிறிது வினாடிகளில் வாய்விட்டு சிரித்தனர். அதேவேளை மித்ரா ராகவை பார்த்து
“டேய் மாமா அடுத்து நம்மள நோண்ட ஆரம்பிக்குறத்துக்குள்ள அப்படியே கழண்டிப்போம்”
என்று கூறியதும் ராகவ் தன் அறைக்கு செல்ல மித்ராவின் மொபைல் ஒலித்தது. அதை எடுத்தவள் காலர் ஐடியில் பெயரை பார்த்துவிட்டு அழைப்பை ஏற்று சிரித்தபடியே அதை எடுத்துக் கொண்டு பின்பக்க தோட்டத்திற்கு சென்று அமர்ந்தவள் சிரித்துக் கொண்ட
“ஹலோ.. சொல்லு விக்கு”
என்று கூற இவளது சிரிப்பு சத்தத்தை கேட்டவன் பேச வந்ததை மறந்து அவளது சிரிப்பை ரசித்து கொண்டிருக்க மறுமுனையில் இருந்து பதில் ஏதும் வராததால் மீண்டும் மித்ரா
“ஹலோ.. விக்கு.. லைன்ல இருக்கீயா..”
என்று கேட்க உடனே விக்ரம்
“ஹான்.. இருக்கேன் மித்து.. என்ன ஆச்சு காலையிலயே இவ்வளவு சந்தோசமா இருக்க..”
என்று கேட்க மித்ராவும் நேற்றிரவு முதல் இன்று காலை வரை தன் தாத்தா செய்த அனைத்தையும் கூற மறுமுனையில் இதை கேட்ட விக்ரமும் சிரித்தான். அதே நேரம் அலுவலகத்திற்கு கிளம்பி கீழே வந்த அர்ஜூன் சிரிப்பு சத்தம் கேட்டு பின்பக்கம் வந்து பார்க்க அங்கு மித்ரா போனில் யாருடனோ சிரித்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவன் தன் அனல் தெறிக்கும் பார்வையால் அவளை பார்த்தபடி அவளுக்கு முன் வந்து நிற்க அவனை கண்டதும்
“நான் அப்புறம் கூப்பிடுறேன்..”
என்று கூறி அழைப்பை துண்டித்தாள் மித்ரா. அதை கவனித்தவன் மித்ராவை பார்த்து
“யார் கிட்ட பேசிட்டு இருக்க..??”
என்று கேட்க அதற்கு அவள்
“விக்ரம் கிட்ட.., ஏன் என்னாச்சு..??
என்று கேட்க உடனே அர்ஜூன்
“விக்ரம் கிட்டயா..”
என்றவன் மீண்டும் அவளை பார்த்து
“கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி பேசி பேசி அவன் மனசுல ஆசைய வளர்த்துடாத அப்புறம் கடைசி நேரத்துல உன் அம்மா ஒருத்தரை நம்பவச்சு ஏமாத்தி ஒரு உயிர் போன மாதிரி..”
என்று கூறும்போதே அவன் கூறியதை கேட்ட மித்ராவிற்கு கோபம் வர
“மைன்ட் யுவர் வேர்ட்ஸ்.. எங்க அம்மா யாரையும் நம்ப வச்சு ஏமாத்தல.. அதேபோல என்னை பத்தியோ இல்ல எங்க அம்மாவ பத்தியோ பேசுற உரிமை உங்களுக்கு கிடையாது..”
என்று அர்ஜூனை நேருக்கு நேர் பார்த்து கூற இதை கேட்ட அர்ஜூனின் முகம் இன்னும் சிவக்க
“என்னடி சொன்ன..”
என்று கூறி கை ஓங்க, அதற்குள் அதை சுதாரித்துக் கொண்ட மித்ரா ஓங்கிய அர்ஜூனின் கையை பிடித்து மடக்கியவள்
“மேல கை வைக்குற வேலை வச்சுக்காதீங்க அப்புறம் அவ்வளவுதான்”
என்று கூறி அவன் கையை விட்டுவிட்டு நேராக ஹாலுக்குள் நுழைய அங்கே அலுவலகத்திற்கு கிளம்பிய விஸ்வநாதன் மித்ராவை பார்த்து
“அம்மா மித்ரா, இன்னைக்கு மதியம் ஒரு 02:00 மணிக்கு ஆபிசுக்கு வந்துடுறியாம்மா உன்கிட்ட ஒரு முக்கியமான விடயத்தை பத்தி பேசனும்”
என்று கூற அவளும்
“ஹான்.. சரி மாமா நான் வந்துடுறேன்”
என்று கூறிவிட்டு ஒன்றும் நடக்காதது போல தன் அறையை நோக்கி சென்றாள். ஆனால் அங்கே குமுறும் எரிமலை ஒன்று வெடிக்க தயாராகும் நிலையில் அர்ஜூனின் மனம் இருக்க அவள் சென்ற திசையை பார்த்தவன்
“எனக்கு உரிமை இல்லைனா சொன்ன..?? இருடி நான் யாருன்னு உனக்கு காட்டுறேன்..”
என்று கூறியவன் அங்கிருந்து நகர்ந்து அலுவலகத்திற்கு சென்றான்.
