எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வரமாக நீ 21

S.Theeba

Moderator
வரம் 21

தன்னுடைய நிறுவனத்தின் பொறுப்பில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் குடியிருப்புத் தொகுதியின் வேலைகளை நேரில் சென்று பார்வையிட்டு விட்டு அலுவலகத்திற்கு திரும்பி வந்தான் யதுநந்தன்.

அவன் உள்ளே நுழையவும் அன்பழகன் எதிர்ப்பட்டான்.
"சார், உங்களைச் சந்திக்க உங்க... சாரி... மி... மிஸ்... ஹரிணி வந்திருக்காங்க. அரைமணி நேரமா விசிட்டர்ஸ் ரூமில் வெயிட் பண்ணுறாங்க. உங்களுக்குத் தகவல் தெரிவிக்க ஹோல் பண்ணன். பட் நீங்க கட் பண்ணிற்றிங்க." என்றான்.
அவளது பெயரைக் கேட்டதுமே அவனுக்கு எரிச்சலுடன் ஒருவித பயமும் ஏற்பட்டது. எனினும் அதனை மறைத்துக்கொண்டு "நான் றூம் போய் ரென் மினிட்சில் அழைத்து வா" என்றான். லிப்டில் ஏறி தன் அறைக்குள் சென்றவன் தன் இருக்கையில் அமர்ந்தான். தலை வலிப்பது போல இருந்தது. அவனுக்கு யோசனையாகவே இருந்தது. 'இவள் ஏன் மீண்டும் மீண்டும் சந்திக்க வருகின்றாள். எதை எதிர்பார்க்கிறாள். இலக்கியா மீது கொண்ட பாசத்தில் வருகின்றாளோ? அப்படி இருக்காது. இந்த மூன்று வருடங்களில் ஒரு தடவை கூட அவள் குழந்தையைப் பார்க்க வரவில்லையே' என்று சிந்தித்தவன், தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அவளை சந்திக்கத் தயாரானான்.

சரியாகப் பத்து நிமிடங்கள் தாமதித்து கதவைத் தட்டினான் அன்பழகன். "யெஸ் கமின்" என்றான். கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவன் "சார் அவங்க.." என்று அவன் தொடங்கும்போதே அவனைத் தள்ளிக்கொண்டு உள்ளே புகுந்தாள் ஹரிணி. அன்பழகனிடம் "மிஸ்டர் எனக்கெல்லாம் இங்கு வருவதற்கு பர்மிஷன் கேட்கத் தேவையில்லை" என்று அதிகாரமாகச் சொன்னவள், யதுநந்தனுக்கு முன்னால் சென்று அமர்ந்தாள். அன்பழகன் பரிதாபமாக யதுநந்தனைப் பார்த்தான். அவன் தன் முகத்தில் எந்த மாறுதலும் ஏற்படாது பார்த்தபடி அன்பழகனைப் போகுமாறு தலையாட்டினான்.

அவன் வெளியேறியதும் கையைக் கட்டியபடி நிமிர்ந்து அமர்ந்தவன் அவளே பேசட்டும் என்று அமைதியாக அவளையே பார்த்திருந்தான். "நந்து பேபி, என்ன முடிவெடுத்திருக்காய்?"
"எதற்கு?"
"என்ன பேபி நீ, தெரியாத மாதிரி கேட்கிறாய். அன்று வீட்டில் வந்து சொன்னதைத்தான் இப்போதும் சொல்கின்றேன். நான் என் குழந்தையுடன் இருக்கணும் என்று ஆசைப்படுகிறேன். நான் அந்த வீட்டில் இருந்தால் என் குழந்தையை நானே பார்த்துக் கொள்வேன். இல்லையென்றால் அவளை என்னிடம் தந்து விடு." என்றாள்.

கோபத்தில் தனது இருக்கையிலிருந்து எழுந்தே விட்டான்.
"ஏய்... நீ என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய். உன் குழந்தையா? யார் அது?"
"அதுதான் உன் வீட்டில் வளர்க்கின்றாயே ஒரு குழந்தை. அது நான் பெற்ற மகள்தானே?"
"அவள் உனக்கு சொந்தமே இல்லை... உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று டிவோர்ஸ் எடுத்தாச்சு. கோர்ட்டில் எனக்கு இந்தக் குழந்தை வேண்டாம் என்று நீதானே சொன்னாய். உனக்குத் தேவையான தொகையையும் கேட்டு வாங்கிவிட்டாய். இப்போது திடீரென்று தாய்ப்பாசம் எங்கிருந்து பொங்கி வந்திச்சு" என்று ஆத்திரத்தில் கத்தினான்.
அவன் அருகில் வந்து அவனது தோளில் தனது கையை வைத்தவாறு "நந்து பேபி ஏன் ரென்ஷனாகிறாய்?" என்றாள். தனது தோளில் இருந்த அவளது கையைக் கோபத்துடன் தள்ளிவிட்டான். "நந்து, அந்த நேரம் நான் தெரியாமல் குழம்பிப் போய் அந்த முடிவை எடுத்துவிட்டேன். பட் இப்போதான் உன் லவ் எனக்குப் புரியுது. சோ, நாம் சேர்ந்து வாழுவோம்."

"வாட்...? லவ்வா...? அப்படியென்றால் என்னவென்று தெரியுமா உனக்கு? உன் மீது எனக்கு எந்த லவ்வும் இல்லை. அப்புறம் குழந்தைமீதும் உனக்கு எந்த உரிமையும் இல்லை"
"நானும் உன் மனம் கொஞ்சமாவது என்னைத் தேடும் என்று நினைத்திருந்தேன். பட், நான் கேஸ் போட ரெடி. என் குழந்தை அம்மா இன்றித் தவிக்குது என்ற ஒரு ரீசனே போதும். என் பிள்ளையை என்னிடம் எடுக்க" என்றுவிட்டு வெளியேறினாள்.

வெளியே வந்த ஹரிணிக்கோ பெரும் ஏமாற்றமாக இருந்தது. தன் நம்பிக்கை பொய்த்துவிட்டதே என்று கட்டுக்கடங்காத கோபமும் ஏற்பட்டது.

மாடலிங் வாய்ப்புப் பெற்றுத் தருகின்றேன். என்னுடன் வந்துவிடு என்று அழைத்தவன் ஸ்ரிபன். ஆனால், அவள் யதுநந்தனைப் பிரிந்து வந்து ஒரு வருடம் ஆகியும் அதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்காது உல்லாசமாகப் பொழுதைப் போக்கினான். ஆரம்பத்தில் அவளுக்கும் அது ரொம்ப சந்தோசத்தைத்தான் கொடுத்தது. யதுநந்தனிடம் ஜுவானம்சமாக ஒரு பெரும் தொகையையும் அவள் கறந்து வந்திருந்தாள். எனவே அவர்கள் உல்லாசத்துக்குக் குறைவே இல்லை.

அவளுக்கு விதம் விதமான நாடுகளுக்கு உல்லாசப் பயணம் செல்ல வேண்டும் என்று நெடுநாளைய ஆசையும் இருந்தது. எனவே அவளும் அந்த உல்லாசத்தை அனுபவித்தாள். இடையிடையே தன் மாடலிங் கனவையும் ஸ்ரிபனுக்கு நினைவூட்டுவாள். "அவசரப்படாதே டார்லிங், சான்ஸ் கிடைக்கும். அதுவரை லைஃப்பை என்ஜாய் பண்ணலாம் டார்லிங்." என்று விடுவான்.

ஒரு வருடம் முடியவும் அவளிடமிருந்த காசெல்லாம் கரைந்து விட்டது. வாரத்திற்கு ஒரு நாடென உல்லாசப் பயணமும் அளவற்ற ஆடம்பர செலவுகளுமென இருந்ததில் கையில் எந்தப் பணமுமின்றிப் போனது.

அந்த நேரத்தில் ஸ்ரிபனின் போக்கிலும் மாற்றம் வந்தது. இவளுடன் ஒரே ஃபிளாட்டில் தங்கியிருந்தவன் அங்கே வருவதையே தவிர்த்தான். தொலைபேசி அழைப்புகளையும் அதிகளவில் நிராகரித்தான். பின்னர் முற்றாக அவன் தொலைபேசி இலக்கத்தை நிறுத்தி வைத்துவிட்டான். முடியாத கட்டத்தில் அவனைத் தேடி அவன் வேலை செய்த ஸ்டூடியோவிற்கே சென்றாள். அங்கே, அவன் வேலையை விட்டுச் சென்று ஒரு வருடமாகிறது என்று தெரிவித்தனர். அவனது நண்பன் ஒருவனின் முகவரியைக் கொடுத்தார்கள். அங்கேயும் அவனைத் தேடிச் சென்றாள். அந்த நண்பன், ஸ்ரிபன் இப்போது லண்டனிலேயே இல்லை என்றும், அவன் ஒரு பெண்ணுடன் அவுஸ்திரேலியா சென்று விட்டான் என்றும், இனி ஒரு போதும் அவன் திரும்பி லண்டன் வரப் போவதில்லை என்றும் தெரிவித்தான். அவனது அவுஸ்திரேலியா தொடர்பு இலக்கம் தனக்கே தெரியாது என்றும் கூறிவிட்டான்.

என்ன செய்வது என்று திகைத்துப்போய் நின்றவள், இறுதியாக யதுநந்தனிடமாவது சென்று பார்ப்போம் என்று தீர்மானித்தாள். அங்கும் அவளுக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. அவன் நாட்டுக்குத் திரும்பிச் சென்றுவிட்டான். அவனது தொடர்பு எண்ணோ முகவரியோ எதுவும் அவளுக்குத் தெரியாது. அவனைக் காதலித்த நாட்களிலோ, கல்யாணம் ஆகிய பிறகோ அவனது பூர்வீகம் பற்றி எதையும் அறிய அவள் விரும்பவில்லை. அவன் கூற வந்ததையும் தட்டிக் கழித்து விட்டாள். இப்போதோ என்ன செய்வது என்று புரியாமல் நின்றாள். இறுதியில் கிடைத்த சிறுசிறு மாடலிங் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி வாழ்ந்தாள்.

இவளுடன் கூட மாடலிங் செய்யும் பெண் ஒருத்தி டில்லியில் ஒரு வாய்ப்பு இருப்பதாகவும் அதனைப் பயன்படுத்தினால் முன்னேற இடமுண்டு என்று கூறவும் இந்தியா வந்துவிட்டாள். இங்கும் சிறு சிறு வாய்ப்புகள் மட்டுமே அவளுக்கு கிடைத்தன. ஃபேஷன் ஷோ ஒன்றிற்காகவே இப்போது சென்னை வந்தாள். ஃபேஷன் ஷோ முடிந்ததும் ஷோவிற்கு வந்திருந்தவர்களுள் பழக்கமாகியிருந்த நண்பர்களுடனேயே அன்று ஆராத்யா ஹோட்டலுக்கு வந்திருந்தாள். அங்கு யதுநந்தனைக் கண்டதும் ஒருபக்கம் மனம் சந்தோசம் கொண்டாலும் ஒரு பக்கம் பயமும் இருந்தது. பார்த்தால் நல்ல வசதியாக இருக்கிறான்போல. அவனுக்குக் கல்யாணம் ஆகியிருந்தால் என்ன செய்வது? இப்படி பல சிந்தித்தவள், ஹோட்டலில் அவனைப் பற்றிய விவரங்களைப் பெற்றுக்கொண்டு அவனறியாமல் பின்தொடர்ந்தாள். அப்படி சென்று அவனைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டவளுக்கு அளப்பரிய சந்தோசம். அவன் மீண்டும் கல்யாணம் செய்யாததுடன் மிகப்பெரிய தொழில் அதிபராக வலம் வருகின்றான். இவனை மீண்டும் பிடித்துவிட்டால் லைஃப்ல செட்டில் ஆயிடலாம். இவனதுசெல்வாக்கைப் பயன்படுத்தியே மாடலிங்கில் பெரிய அளவில் வரலாம்.

இவ்வாறு திட்டம் போட்டுத்தான் அவனது வீட்டுக்குச் சென்றாள். ஆனால், அவனோ வெளியே அனுப்பி விட்டான். திரும்பி வந்து யோசித்துக்கும்போது தன் திட்டத்துக்குத் துருப்புச் சீட்டாக அவள் பெற்ற குழந்தை இருப்பது பலம் தர மீண்டும் முயற்சி செய்யவே இன்று வந்தாள். இன்றும் ஏமாற்றமாகவே இருந்தது. ஆனாலும் தான் எப்படியும் அவன் வீட்டுக்குள் புகுந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
 
Top