மழை மெதுவாக தூறல் போட ஆரம்பித்த மாலைப்பொழுது அது.
மஞ்சள் வானில் சூரியன் மெல்ல மறையத் தொடங்கி இருக்க அந்த மஞ்சள் மாலை வானும் அதனூடே மழைத் துளிகள் பார்க்கவே ரம்மியமான காட்சி.
மைதானத்தில் விளையாடி முடித்து அங்கிருந்த தேநீர்க்கடையில் நண்பர்களுடன் சேர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தேன்.
அது எங்கள் வழமை. வார விடுமுறையில் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து விளையாடுவது. மனதுக்கு ஒரு இளைப்பாறல், உடலுக்கு உற்சாகம்.
என் கையில் இருந்த குவளையில் பாதியைக் குடித்து முடித்த போது அந்தப் பேருந்து வந்து எங்களுக்கு எதிர்ப்புறம் இருந்த நிறுத்தத்தில் நின்று சிலரை இறக்கி பலரை ஏற்றிக் கொண்டு சென்றது.
பேருந்து அவ்விடம் விட்டு நகர்ந்து செல்லும் போது தேநீரை ரசித்து ருசித்து விழுங்கிக் கொண்டிருந்த என் கண்களில் அவளின் பிம்பம் விழுந்தது. காணக் காத்திருந்த தரிசனம் கிடைத்தது.
புதிய இடம் என்ற எந்த மருட்சியோ, தொய்வோ ஏன்? பயணக் களைப்புக் கூட முகத்தில் இல்லாது இருந்தவளைப் பார்க்கவே சுறுசுறுப்புக் குறைவில்லாத எறும்பை நினைவூட்டினாள்.
சில நொடிகள் அங்கு நின்றவள் எந்தவித சுணக்கமுமின்றி பையில் இருந்த குடையை விரித்துப் பிடித்து, மற்றக் கையில் தன் பயணப் பையை தூக்கிக் கொண்டு பாதையோரமாக நடக்க ஆரம்பித்தாள்.
அவளது உடையும் காலணியும் நடைக்கு ஏதுவாக இருக்க எந்தவித அலுப்பும் இல்லாமல் அவள் நடையில் ஓர் துள்ளல், வேகம் இருக்கத்தான் செய்தது.
அவளுக்காகக் காத்திருந்த நான் அவளைப் பார்வையால் பின் தொடர்ந்தேன்.
ஆம் அவள் தான்.. அவளே தான்! நான் இத்தனை நேரம் காத்திருந்தது அவளுக்காகத் தான். ஆனால் அவளைப் பார்த்ததும் அருகில் செல்லாது எட்ட நின்று வேடிக்கை பார்க்க அவளோ எட்டு வைத்து நடக்க ஆரம்பித்திருந்தாள்.
எப்படி வீடு போய் சேர்வாள்? யாரிடமாவது விசாரித்து அறிந்து கொள்வாளா? அவளது தந்தை விலாசம் சொல்லி அனுப்பி இருப்பாரா? அப்படி இருந்தாலும் எங்களது புதிய வீடு அவருக்குத் தெரியாதே!
யோசித்துக் கொண்டே மீதமிருந்த இருந்த தேநீரை இரண்டு, மூன்று மிடறாக குடித்து முடித்து விட்டு குவளையை அங்கிருந்த மேசையில் வைத்து விட்டு நண்பர்களிடம் விடை பெற்றேன்.
"டேய் யாரோ வருவாங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகணும்னு தானே காத்திட்டு இருந்த? இப்ப என்னடான்னா கிளம்புறன்னு சொல்ற"
"அவ வந்து இறங்கி தெரு முனை வரை போய்ட்டா மச்சான். அங்க போறா பாரு.. இப்ப ஓடினா தான் பிடிக்க முடியும்" என்ற என்னை அவர்கள் வினோதமாகப் பார்ப்பது புரிந்தது எனக்கு.
அவர்களுடன் மேலும் பேசி நேரவிரயம் செய்ய இயலாது.
ஓட்டமும் நடையுமாக அவளருகே சென்று சேர்ந்தேன்.
"சாதனா.." என் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
"ஜீவன்.."
ஒரு புன்னகையை சிந்த விட்டு அந்த நொடியில் என் சிந்தையை சிதற விட்டவள்,
"நீங்க பஸ் ஸ்டாப்ல இருப்பீங்கன்னு மாமா சொன்னாங்க..?" என்றாள் கேள்வியாக.
அவளது பையை வாங்கிக் கொண்டே "ம்ம்.. அங்க தான் நின்னேன். எதிர்ப்பக்கம் கடைல டீ குடிச்சிட்டு இருந்தேன். நீ வந்து இறங்கி கொஞ்சம் வெயிட் பண்ணுவன்னு பாத்தா கடகடன்னு நடக்க ஆரம்பிச்சுட்ட?" என்றேன். என்னையும் என் பெயரையும் மறக்கவில்லை அவள் என்ற எண்ணம் சட்டென்று எனக்குள் ஓடி,
'இவங்க ஃபேமிலி ஃபோட்டோ அப்பா எங்களுக்கு காட்டின மாதிரி மாமா இவளுக்கு எங்க ஃபோட்டோ காட்டி இருப்பார்' என்ற பதிலடியும் சேர்ந்து கொண்டது.
"இவ போனா போறா நாம டீய குடிச்சு முடிப்போம்னு குடிச்சு முடிச்சுட்டு வாறீங்க போலயே!" என்றாள் குரலில் குறும்பு மின்ன.
"ம்ம்ம்.. நமக்கு டீ தான் முக்கியம். பாதில வெச்சுட்டா டீ கோவிச்சுக்கும்ல" என்க
"அதானே.. நாளைக்குப் போய் அதுக்கிட்ட கோவிச்சுக்காதன்னு கெஞ்சவா முடியும். என் கிட்ட ஏதாவது சமாதானம் கூட பண்ணிக்கலாம். அப்படித்தானே?" என்றாள்.
ஏற்கனவே அவளிடம் என் மனம் கொஞ்சிக் கொண்டிப்பதை அவள் எங்கே அறிவாள்!
"எங்க புதிய வீடு தெரியாது எப்படி இப்படி? தேடி கண்டுபிடிக்கலாம்னு தைரியமா?"
"வீடு தான் தெரியாது, அட்ரஸ் தெரியும் மாமா நேற்று சொல்லிட்டாங்க. மழை தூற ஆரம்பிச்சுடிச்சு அதான் நீங்க வரல்லை போலன்னு நினைச்சு தான் வெயிட் பண்ணிட்டு இருக்காம வீட்டுக்குப் போகலாம்னு நடக்க ஆரம்பிச்சேன். தெரியாத ஆட்டோல ஏற வேண்டாமேன்னு.." என்றாள்.
எனக்கு பதின்மூன்று, அவளுக்கு பத்து வயதில் தான் நாங்கள் கடைசியாகப் பார்த்துக் கொண்டது. பன்னிரண்டு வருடங்கள் கழித்துப் பார்த்தாலும் இப்போது இத்தனை இலகுவாக, நட்பாக அவள் பேசியது மழை நேரத்தில் கிடைத்த தேநீர் போல தித்தித்தது என்னுள்.
பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.
எங்கள் வீட்டில் மாடியில் இருந்த அறை ஒன்றை அவளுக்காகத் தயார்படுத்தி வைத்திருந்தார் என் தாயார்.
வந்த உடனே மேலே சென்று குளித்து உடை மாற்றிக் கொண்டு கீழே வந்தவளுக்கு என் தாயார் தேநீரைக் கொடுத்து, கூடவே சில கேள்விகளையும் தொடுக்க ஏதேதோ பேசிக் கொண்டே அவள் அதைக் குடிப்பது தெரிந்தது.
'அவளை நிம்மதியா அந்த டீய குடிக்க விடலாம் இந்தம்மா'
எனக்குள்ளே நான் பேசிக்கொண்டேன்.
எங்கள் ஊரில் இருக்கும் பாடசாலைக்கு ஆரம்பப் பிரிவு ஆசிரியையாக நியமனம் பெற்று வந்திருக்கிறாள் அவள்.
என் தந்தையின் நண்பரின் மகள்.
நியமனம் பற்றி கூறியதும் இங்கு இருக்கும் வரை எங்கள் வீட்டில் தங்கியிருக்க வேண்டும் என்பது என் தந்தையின் அன்புக் கட்டளை.
எனக்கே எனக்காக அவளை இங்கேயே இருத்திக் கொள்ள வேண்டும் என்பது என் இதயம் கொண்ட அதிரடிக் கட்டளை. ரகசியக் கட்டளையும் தான்!
பார்த்துப் பேசிக் கொண்டதில்லை தான் ஆனால் இப்படி ஒருத்தி இருக்கிறாள் என்ற எண்ணம் எனக்குள் இருந்து கொண்டே இருந்ததை மறுக்க முடியாது.
என் தந்தை அவரது நண்பரைப் பற்றி பேசும் போதெல்லாம் அவரின் மகள், இவள் தான் என் மனக் கண்ணில் உலா வருவாள்.
சிறுவயதில் பக்கத்து பக்கத்து தெருவில் இருந்து பிறகு அந்தந்த கால, நேர சூழ்நிலைகளால் அவர்கள் வேறு ஊருக்கு போய்விட்டார்கள்.
இவள் இவளது தாய் வழிப் பாட்டி வீட்டில் தங்கி இருந்து படித்ததில் ஊர்ப்பக்கம் வரவு இல்லாமலே போய் இதோ இன்று இங்கு எங்கள் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளாள்.
இரவு உணவை முடித்துவிட்டு என் அறையில் கட்டிலில் சாய்ந்து பழையவை பலவற்றை யோசித்துக் கொண்டிருந்த நான், அவளது தற்காலிக தங்குமிடத்தை காலம் நிரந்தரமாக்கி விட வேண்டும் என்ற அவசர வேண்டுதலுடன் கண்களை மூடிக் கொண்டேன்.
நேரமும் காலமும் ஓடியது.
ஆறு மாத காலம் கடந்துவிட்டது.
எங்கள் வீட்டில், சமையலறையில் ஏகபோக உரிமை எடுத்துக் கொண்டு ஏதாவது செய்து கொண்டே அவளது ஓய்வு நேரங்களைக் கழிப்பாள்.
நானும் தம்பியும் மட்டுமேயான எங்கள் குடும்பம் எனும் குருவிக் கூட்டில் ஒரு பெண் பிள்ளை இல்லையென்ற என் பெற்றோரின் குறை தீர்க்கும் செல்லப் பிள்ளையானால் இவள்.
தாயும் தந்தையும் வெளியே சென்றிருக்க வேலை முடிந்து வந்த நான் குளித்து விட்டு நேராக சமையலறைப் பக்கம் சென்றேன்.
வாசலில் தம்பி இருக்க கதவைத் தட்டித் திறக்கும் தேவை இல்லாது போக, நான் வீட்டுக்கு வந்த அரவம் கேட்டிருக்காது அவளுக்கு.
நான் சமையலறை வந்தது கூடத் தெரியாமல் ஆர்வமாக தேநீர் குடித்துக் கொண்டிருந்தாள்.
அவள் தேநீரை ருசிக்க, நொடி நேரம் நான் அவளை, அவள் அருந்திக் கொண்டிருந்த பாங்கை ரசித்துக் கொண்டிருந்தேன்.
"சாதனா.. எனக்கு ஒரு டீ" என்னவள் என்ற உரிமையோ, அவள் இவ்வீட்டில் எடுத்துக் கொண்ட உரிமையோ எதுவோ ஒன்று அவளிடத்தில் வேலை ஏவுவதில் தயக்கம் காட்ட தேவை இருப்பதில்லை எனக்கு.
"இதோ தாறேன்" என்றவள்
அவள் குடித்துக் கொண்டிருந்ததை அப்படியே வைத்து விட்டு எனக்கான தேநீரைத் தயாரிக்க ஆரம்பித்தாள்.
அவள் முதுகு காட்டி மும்முரமாக இஞ்சி, ஏலக்காய் தட்டும் வேலையில் இருக்க அவள் அங்கே வைத்த தேநீர் கோப்பையை என் கைகளில் ஏந்தி மிடறு மிடறாக குடிக்க ஆரம்பித்தேன்.
அவள் மீதான நேசம் தரும் தித்திப்பை அந்தத் தேநீரும் தந்த உணர்வு எனக்கு.
"இந்தாங்க.." என்று தேநீர் கோப்பையுடன் திரும்பியவள்
"ஏய்.. அது எச்சி, நான் குடிச்சது ஜீவன்" என்றாள்.
அவளது முத்தம் முதல் மொத்தம் வரை பெறக் காத்திருக்கும் எனக்கு அவள் மீதம் வைத்த தேநீர் எங்கே எச்சிலாகும்!
"பரவாயில்ல. நீ டீ ஊத்திட்டு வரும் வரை எனக்குப் பொறுமை இல்ல. அதான் நான் இதைக் குடிச்சிட்டேன். நீ அதைக் குடி" என்றேன்.
என் புன்னகையுடன் அவளது புன்னகையும் சேர்ந்து சங்கமிக்க எனக்கு எதிரே இருந்த கதிரையில் அமர்ந்து குடிக்க ஆரம்பித்தாள்.
"மாமி டீய ஆத்தி நுரை இல்லாம வடிச்சு தாங்கன்னு கேட்டவ தானே நீ? இப்ப என்ன நுரை ததும்புது?" என்றேன் எட்டி அந்த தேநீர்க் கோப்பையைப் பார்த்து. நான் குடித்து முடித்த தேநீரும் நுரை ததும்பியே இருந்ததே.
அந்தக் கோப்பையின் அகலம் கொள்ளுமளவு கண்களை விரித்து ஆச்சரியமாக என்னை ஏறிட்டு,
"உங்களுக்கு அது இன்னும் ஞாபகம் இருக்கா?"
"பின்ன! மறக்க முடியுமா அதை? எங்கம்மா கிட்ட வந்து என்ன அழகா, உரிமையா கேட்டுட்டு போன தெரியுமா? அந்த சாதனா இன்னும் என் கண்ணுக்குள்ள இருக்கா. அது தான் நீ எங்க வீட்டுக்கு முதல் முறை வந்ததுன்னு நினைக்கறேன். உனக்கு ஒரு நாலு இல்ல ஐந்து வயசு இருக்குமா?"
"ம்ம்ம்.." என்று ஒரு மிடறு தேநீரை வாயில் எடுத்து விழுங்கியவள்,
"அப்ப டீயில நுரை இருந்தா பிடிக்காது. இப்ப தானே தெரியுது டீயோட அழகே அந்த நுரை தான்னு" என்று சிரித்த அவள் இதழ்களில் ஒட்டி இருந்த நுரைத் துளியில் மூழ்கி விடத் துடித்தது என் இளமை.
நான் அவளது இதழை விழியெடுக்காமல் பார்த்ததில் விரல்கள் கொண்டு அதைத் துடைத்துக் கொண்டாள்.
கண்டு கொண்டாள் என் பார்வையை, பார்வை மாற்றத்தை! அப்படியே என் மனதையும் கண்டு கொண்டால் தான் என்ன? இல்லை என்னை, என் மனதை கண்டு கொண்டும் தான் இப்படி என்னிடம் கண்ணாமூச்சி ஆடுகிறாளா? அதை அவளையன்றி யாரறிவார்!
அன்றோரு நாள்..
தந்தை வெளியூர் சென்றிருக்க தம்பி பிரத்யேக வகுப்பு என்று கல்லூரி விட்டு வராமல் இருக்க, பாடசாலையில் இருந்து அவள் வரத் தாமதமாக என்னவென்று பார்க்க நானே சென்றேன்.
நான் பாடசாலை நுழைவாயிலை அடையவும் அவள் வெளியே வரவும் சரியாக இருந்தது.
"சாரி ஜீவன் திடீர்னு ஸ்கூலுக்கு இன்ஸ்பெக்ஷன் வந்துட்டாங்க. மாமிக்கு கால் பண்ணவும் டைம் இருக்கல்லை" என்றாள்.
"ம்ம்ம்.. பரவாயில்லை. வா போகலாம்" என்றேன்.
வண்டியையும் என்னையும் மாறி மாறிப் பார்த்து விட்டு ஏறி அமர்ந்து கொண்டாள்.
"உன் டீ டைம் பாஸ், டீ குடிச்சியா? அண்ணா கடைல குடிச்சுட்டு போவோமா?"
"வேணாம். வீட்டுல போய் குடிக்கிறேன்" என்றாள்.
அன்றைய நாள் அவளுக்கும் எனக்கும் ஏதோ வேலையாக இருந்த தாயாருக்கும் சேர்த்து நானே தேநீர் தயாரிக்க சுவை கொஞ்சம் அதிகரித்த பிரம்மை எனக்கு.
"அப்படி எல்லாம் இல்லையே" என்ற கருத்து என் தாயாரிடமிருந்து. அதைக் கேட்டு ஒரு புன்னகை மட்டும் அவளிடமிருந்து.
'நானே பாவம்!'
ஓரிரவு உறக்கம் தடைப்பட்டு விழித்த எனக்கு என் தம்பியும் அவளும் முன் வரவேற்பறையில் இருந்து பேசும் அரவம் கேட்டது. பரீட்சைக்கு அவன் படிக்க அவள் துணை. அவனது மதிப்பெண் அதிகரிப்பில் பெரும் பங்கு அவளையே சேரும்.
எழுந்து சென்று,
"இன்னும் தூங்கல்லையா நீங்க ரெண்டு பேரும்" என்றேன்.
"இல்லண்ணா. இன்னும் கொஞ்சம் தான் இருக்கு முடிய போய் தூங்குறோம்" என்றான்.
"இவனுக்கு டீ போடப் போறேன் உங்களுக்கும் வேணுமா?" என்று கேட்டுக் கொண்டே எழுந்தாள்.
"ம்ம்.. இருந்தா நல்லா தான் இருக்கும்" என்று அவளுக்குப் பதிலளித்துவிட்டு வாசல் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றேன்.
இரவு நேர குளிர் காற்று இதமாக வீச, அங்கிருந்த கதிரையில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக் கொண்டேன்.
சிறிது நேரத்தில் அவளது காலடிச் சத்தம் என்னை வந்தடைய நிமிர்ந்து அமர்ந்த என் கைகளில் கோப்பையைக் கொடுத்தாள்.
"உனக்கு?"
"ஹ்ஹும்.. நான் குடிக்க மாட்டேன்" என்று கூறிக் கொண்டே எனக்கு எதிரே இருந்த கதிரையில் அமர்ந்தாள்.
"ஏன் உனக்கு டீ பிடிக்கும் தானே?"
"அதுக்காக ஒரு நாளைக்கு ஏழெட்டு பத்து டீ குடிக்கவா முடியும்? டீ பிடிக்கும்.. ஒரு நாளைக்கு ரெண்டு டீ கண்டிப்பா வேணும். அவ்வளவு தான். நினைச்ச நேரம் எல்லாம் தேவைப்படாது, அப்படி குடிக்கவும் முடியாது, அலுத்துப் போய்டும் எனக்கு. விடிய விடிய பேசிட்டு விடிஞ்சும் பேசுற லவ்வர்ஸ் மாதிரி நினைச்ச நேரம் எல்லாம் இதை குடிச்சு தான் நான் டீ லவ்வர்னு ப்ரூஃப் பண்ணனுமா என்ன?" என்றாள்.
'எதை எடுத்து எங்க கோர்க்குறா பாரு!' என்று நினைத்துக் கொண்டே ஒரு மிடறு தேநீரை குடித்து விட்டு கோப்பையை எங்களுக்கு முன் இருந்த சிறிய மேசை மீது வைத்தேன்.
அவளது பார்வை கையில் இருந்த புத்தகத்தில் இருந்தது. அதற்குள் அங்கிருந்த ஒரு புத்தகத்தை எடுத்துவிட்டாள்.
நானும் அவளும் எங்களுக்கு இடையே தேநீர் கோப்பையும்.
அதிலிருந்து ஆவி பறந்து கொண்டிருக்க, எனக்குள் என் ஆவி துடித்துக் கொண்டிருந்தது அவள் மீதான நேசத்தில்.
அதுவரை ஒன்று கூட்டிய தைரியத்தில், இப்போதே என் மனதை வெளிப்படுத்திவிடும் உத்வேகத்துடன்
"சரி லவ்வர்ஸ்னு சொல்லவும் கேட்கறேன். அந்தக் காதல் எப்படி இருக்கணும்?" என்றேன்.
சட்டென்று ஏறிட்டு என்னைப் பார்த்தாள். அந்தக் கண்களின் வீச்சில் மீண்டும் ஒரு முறை விழுந்து எழுந்தது என் மனம்.
எட்டி என் தம்பியையும் ஒரு பார்வை பார்க்க நானும் திரும்பிப் பார்த்தேன். தேநீரைக் குடித்துக் கொண்டே மும்முரமாகப் படித்துக் கொண்டிருந்தான் அவன்.
"இலைமறை காயாக இருக்கணும். எப்படி சொல்றது..?
ஆ.. டீயில போட்ட இஞ்சி ஏலக்காய்ல, இஞ்சியோட டேஸ்ட் நமக்குத் தெரியும் ஆனா ஏலக்காயோட வாசத்த மட்டும் தான் நம்மளால உணர முடியுமா இருக்கும் இல்லையா? அது போல இதமா, மென்மையா இருக்கணும்.
ஒவ்வொரு முறையும் ஏலக்காய் சேர்த்துக் குடிக்க முடியாது. இருந்து நின்னு குடிச்சா தான் அது அற்புதமா இருக்கும் இல்லைன்னா அந்த வாசமே சலிப்பாகும்.
அது போல அப்பப்ப வெளிப்படுத்தினா போதும் அந்த காதலை.
இப்ப இந்த டீக்கு இஞ்சி மட்டும் தான் போட்டேன் ஏன் தெரியுமா? அத க்ரேட்டர் வெச்சு க்ரேட் பண்ணிடலாம் ஆனா ஏலக்காய் போடணும்னா அத தட்டித் தான் போடணும். இந்த நேரத்துல தட்டுற சத்தம் மாமா, மாமிய டிஸ்டர்ப் பண்ணும், அவங்க தூக்கம் கெடும். எழுந்து வந்து என்ன சத்தம்னு பார்ப்பாங்க. அது போல.
அந்தளவுக்கு யாரோட பார்வையையும் கவனத்தையும் கவரக் கூடியதா இல்லாம காதலிக்கும் அந்த ரெண்டு பேர் மட்டுமே உணரக் கூடியதா இருக்கணும் அந்தக் காதல்.
"காதலுக்கு இந்த டீய வெச்சு இப்படி ஒரு விளக்கம் யாரும் சொல்ல முடியாது, சொல்லவும் மாட்டாங்க. நீ ஒரு டீ லவ்வரே தான்" என்று சிரித்த என்னைப் பார்த்து
"நான் இன்னும் முடிக்கவே இல்லை.. இதையும் கேளுங்க" என்க அடுத்து என்ன கூறுவாள் என்று எனக்கு ஆர்வம் சற்றே கூடியது.
"மொத்தத்துல இத்தனை நாளாக சொல்லாம உங்களுக்குள்ள வெச்சுட்டு பார்வையால மட்டுமே என்னை தொடர்ற உங்க காதல் மாதிரி அழகா இதமா
இருக்கணும்" என்றாள்.
அதிரடி சரவெடியாக இப்படி ஒரு பதிலை; என் காதலை இப்படி கடை பரபரப்பும் விதமான ஒரு பதிலை நான் அவளிடம் நிச்சயம் எதிர்பார்க்கவே இல்லை.
ஆக.. என்னை, என் மனதைத் தெரிந்து தான் வைத்திருக்கிறாள்!
என் கண்களில் வந்து நின்ற பூரிப்பில் என்ன என்று கேட்கும் விதமாய் ஒற்றைப் புருவம் ஏற்றி இறக்கினாள்.
"என் மனசுல இருக்குறது உனக்குத் தெரியும்னு ஒரு கெஸ் (guess) இருந்தது தான் ஆனா இப்படி போட்டு உடைப்பன்னு எதிர்பார்க்கவே இல்லை" என்றேன்.
"நல்லா இருந்தது, இருக்குது இந்த ஃபீல். காதல்னு சொல்லி அதையே பிடிச்சிட்டு தொங்காம பார்வையால மட்டுமே அதை எனக்கு உணர வெச்சுட்டு, நம்ம ரெண்டு பேருக்கும் பிடிச்சத, ஆர்வமானத மட்டும் பேசுறதும் டிஸ்கஸ் பண்றதும் நல்லா இருக்கும்" என்றாள்.
மென்மையான புன்னகையுடன் அவளையே நான் பார்க்க..
"இதை எப்படி நம்ம வீட்டுல எடுத்துப்பாங்கன்னு தெரியல்லை. உங்க மேல, என் மேல வெச்ச நம்பிக்கைல தானே இப்படி நம்மள ஒரே வீட்டுல தங்க வெச்சாங்க? அந்த நம்பிக்கைய கெடுக்குற மாதிரி நம்ம நடவடிக்கைகள் இருந்துடக் கூடாதுன்னு அடிக்கடி எனக்கு நானே சொல்லிக்குவேன்.
நாம அவங்க பார்வைல கூட தாழ்ந்து போக கூடாது. பிறகு உங்க காதலும் அப்படியான ஒரு பார்வைல தான் பார்க்கப்படும். அதனால தான் எனக்குத் தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருந்தேன். ஆனா அந்த உணர்வு என் மனசுக்கு இதமா தான் இருந்தது.
இனிமேலும் அது இப்படியே இருக்கட்டும்.
எங்க வீட்டுல அலையன்ஸ் பார்க்க ஆரம்பிக்கும் போது நீங்க மாமா மாமிய பேச சொல்லுங்க. அதுவரை இப்படியே இருப்போம்" என்றாள்.
அதன் பிறகான நாட்களில் நாங்கள் பேசிக் கொள்ளும் நேரம் சற்றே அதிகமானது. பேசும் கருப்பொருளும் அதிகமானது.
தேநீரைப் போலவே எங்களிருவரதும் ரசனைகள் பெரும்பாலும் ஒன்றுபட்டன.
பிடித்த பாடல் முதல் பாடல் வரி வரை ஆராய்ந்து பார்த்து சிலாகித்துப் பேச ஆரம்பித்தோம். பிடித்த திரைப்படங்கள், இசை, இரவில் கேட்கும் வண்டின் ரீங்காரம், பிடிக்காத பாடகி ஒருவரின் குரல், உணவுப் பதார்த்தங்கள், நிலவு, நட்சத்திரம், கவிதைகள், விளையாட்டு, மழை, வெயில், புத்தகம், குருவிக் குஞ்சு, பூனைக்குட்டி என்று எங்கள் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.
அந்த நேரங்களில் எங்களுடன் தேநீரும் துணையாக வந்தது.
எங்கள் காதல் மனதோடு இருந்து பார்வையில் மட்டுமே வெளிப்பட பேச்சுக்கள் கடல் கடந்து பயணித்து கரை வந்து சேர்ந்தது.
அவள் ரசிக்கும் இவ்விதமான காதலும் இதமாக, அழகாக தித்தித்தது எனக்கும் எனக்குள்ளும்!
நாங்கள் விரும்பி ரசித்து ருசிக்கும் மழை நேர, மாலை நேர தேநீரைப் போலவே!
=================
கனமான சிறுகதைகளையே எழுதி அழ வைக்கிறேன் என்று சொன்னவர்களுக்காக ஒரு மாறுபட்ட முயற்சி இந்த தேநீர் பிரியர்கள் இருவருக்குமான காதல் கதை. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!