எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வரமாக 22

S.Theeba

Moderator
வரம் 22

ஹரிணி அறையை விட்டுச் செல்லவும் யதுநந்தனால் இயல்பாக இருக்க முடியவில்லை. இவள் உண்மையில் என் குழந்தையை என்கிட்டயிருந்து பிரிச்சிடுவாளோ? என்று மனதின் ஓரத்தில் சிறு பயம் எட்டிப் பார்த்தது. அவள் போகும்போது சொல்லிச் சென்றதும் மனதை அரித்தது. அம்மா இன்றிப் பிள்ளை தவிக்குது என்று காரணம் காட்டியே என்னிடமிருந்து குழந்தையைப் பிரித்துவிடுவேன் என்று சொன்னாளே.

அவனுக்கு யோசிக்க யோசிக்க குழப்பமே மிஞ்சியது. சிவானந்துக்கு அழைத்தான். "மச்சி, எங்கே இருக்காய்? நான் உடனே உன்னைப் பார்க்கணும்."
"மச்சி, நான் என் ஆபிஸ் பக்கத்தில்தான் ஒருவேலையா வந்தேன். இப்போ முடிஞ்சிடும். நீ உன் ஆபிஸிலா இருக்காய்? வரவா?ஏதாவது முக்கியமான விஷயமா?"
"இல்ல மச்சி, நீ உன் ஆபிஸூக்கே போ. நானும் உன் ஆபிஸூக்கு உடனே வாறன்."
"ஓகேடா, வா... கொஞ்ச நேரத்தில் வேலை முடிஞ்சிடும். வந்துடுறன்."
அலைபேசியை வைத்தவன் உடனேயே புறப்பட்டு சிவானந்த் அலுவலகத்துக்கு வந்தான்.

லிஃப்டில் ஏறி அவனது அறைக்குச் சென்றான். மனம் முழுவதும் ஹரிணி பேசிச் சென்றதிலேயே மூழ்கியிருந்தது. அறைக்குள் செல்ல கதவைத் திறந்தான். அதேநேரம் மனேஜரிடம் ஒரு ஃபைலைக் கொடுப்பதற்காக அவரது அறைக்குச் செல்லவென கதவைத் திறக்க முயன்றாள் வர்ஷனா. திடீரெனக் கதவைத் திறந்து யதுநந்தன் உள்நுழையவும் அவன் மீது மோதியவள் தடுமாறிக் கீழே விழப் பார்த்தாள

விழாது அவளைத் தாங்கிப் பிடித்தவன் இமைக்க மறந்து அவளையே பார்த்து நின்றான். அவளுக்கும் தன் மனங் கவர்ந்தவன் கைகளில் இருப்பது உடலில் ஒரு சிலிர்ப்பை உருவாக்க அவனது முகத்தையே பார்த்தாள். இனம்புரியாத ஒரு உணர்வில் அவள் உடல் சிலிர்த்தது. இருவரது பார்வையும் ஒன்றையொன்று கொக்கி போட்டு இழுப்பதுபோல அங்குமிங்கும் அகலாது பார்த்து நின்றன. எவ்வளவு நேரம் இப்படியே நின்றார்களோ இருவருமே உணரவில்லை. திடீரென சிவானந்தின் மேசைமேல் இருந்த தொலைபேசி அழைத்தது. அப்போதுதான் தாங்கள் நிற்கும் நிலையை இருவருமே உணர்ந்தனர்.

சட்டென அவள் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு நிமிர்ந்து நின்றாள். அவனும் தன்னை இயல்பாக்கிக் கொண்டு "ஹேய்..., பார்த்து வரத் தெரியாதா? எப்ப பாரு என் மீது வந்து மோதுற."
என்று கடுப்பான குரலில் கூறினான். அவளால் பதில் சொல்ல முடியவில்லை. "சாரி..." என்று மட்டும் முணுமுணுத்தாள். "ம்ம்" என்று மிக மெதுவாகக் கூறியவன் உள்ளே சென்றுவிட்டான்.

வெளியில் வந்த வர்ஷனாவுக்கு அவன் பார்வையில் இன்று வித்தியாசம் இருந்ததோ?. அவன் முகத்தில் சந்தோஷம் தெரிந்ததோ?. அவன் பேசியபோது குரலில் ஒரு இதம் இருந்ததோ? என்று பலவாறு தோன்றியது. ஆனாலும் அவள் மனச்சாட்சியோ 'அவன் எப்போதும் போலத்தான் இருக்கிறான். எப்போதும் போலவே கஞ்சி போட்டு அயர்ன் பண்ணிய மாதிரி விறைப்பாகத்தான் இருந்தான். கடுகடுவென்றுதான் பேசினான். நீதான் அவன் மீது கொண்ட காதலால் அவன் தொட்டதும் உருகிப் போய் விட்டாய். அவனாவது சிரிக்கிறதாவது.' என்று அவளைத் திட்டியது.

இன்னும் சிவானந்த் வரவில்லையென்பதால் அங்கிருந்த சோஃபாவில் சென்றமர்ந்த யதுநந்தனுக்கோ மனம் லேசானதைப் போன்ற ஓர் உணர்வு தோன்றியது. இந்த அறையின் வாசலுக்கு வரும்வரை இருந்த இறுக்கம் அவளைக் கண்டதும், அவள் கண்களைப் பார்த்ததும் குறைந்ததுபோல இருந்தது. அவள் அருகாமை மனதுக்கு இதமளித்தது. ரிலாக்சாகக் கண்களை மூடி சோஃபாவில் சாய்ந்தான். சிறிது நேரத்தில் மீண்டும் அவன் மனதுக்கு இதமான அந்த வாசனை அவனை ஈர்த்தது. இது அவள் அருகில் இருக்கும் போது வீசிய பெர்ஃப்யூம் வாசனையல்லவா என்று சிந்தித்தவன் கண்களைத் திறந்து பார்த்தான்.

ஃபைலை மேனேஜரிடம் கொடுத்துவிட்டு மீண்டும் வேகமாக அறைக்குத் திரும்பி வர்ஷனா வந்திருந்தாள். அந்த அறையில்தானே தன் மனங்கவர்ந்தவன் வந்திருக்கிறான். அவனைப் பார்க்கும் சந்தர்ப்பத்தைத் தவறவிட அவள் விரும்பவில்லை. அங்கே அவன் கண்மூடி சோஃபாவில் சாய்ந்திருக்கவும் அவனை சில நொடிகள் பார்த்து நின்றாள். அப்போதுதான் அவளது பெர்ஃப்யூம் அவன் நாசியைத் தொட்டது. அவன் கண்களைத் திறப்பதுபோல் தோன்றவும் அப்போதுதான் அறைக்குள் வந்தவள் போன்று நடந்து தன் இருக்கையில் சென்று அமர்ந்தாள்.
அச் சமயம் சிவானந்தும் அறைக்குள் நுழைந்தான்.
"ஹாய்டா மச்சி, எனிதிங் ஸ்பெஷல்?" என்றான். அவ்வறையில் வர்ஷனா இருக்கவும் "சண்டே இலக்கியாவோட பேர்த் டே. சோ உன்னை இன்வைட் பண்ணத்தான் வந்தேன்."
"என்ன மச்சி புதுசாயிருக்கு? என்னை இன்வைட் பண்ணினால்தான் வருவேனா?"
"சும்மாதான் டா... அப்புறம்..." என்றவன் வர்ஷனாவை ஒரு பார்வை பார்த்தான். அவள் தன் லேப்டாப்பில் வேலையாய் இருந்தாள்.
"உன் பி.ஏ.வையும் பேர்த்டே பார்ட்டிக்கு என் சார்பாக இன்வைட் பண்ணிடு" என்றான் சிவானந்திடம். அவள் அதிர்ந்து போய் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவன் என்னைத் தானா அழைத்தான். உலகம் ஏதாவது தலைகீழாக சுற்றத் தொடங்கிவிட்டது போலும் என்று நினைத்தாள்.

அவளுக்கு மட்டுமல்ல சிவானந்துக்கும் அது அதிர்ச்சியாகவே இருந்தது. யதுநந்தன் படிக்கும் காலத்தில் பெண்கள் மீது ஆர்வம் காட்டாவிடிலும் ஒதுங்கிப் போனதும் இல்லை. பெண்களுடன் சகஜமாகப் பழகுவான். இவர்களின் நட்பு வட்டத்திலும் ஒருசில பெண்கள் இருந்தனர்.

ஹரிணியுடன் விவாகாரத்தான பின்னர் அவள் நடந்து கொண்ட முறைகளிலும் அவனுக்குப் பெண்கள் மீதான மரியாதை அற்றுப் போய்விட்டது. பெண்களுடன் பேசவும் பழகவும் அவனுக்குப் பிடிப்பதில்லை.

அவனா இன்று வர்ஷனாவையும் பிறந்தநாள் விழாவிற்கு வரவேற்கிறான் என்று அதிசயமாக அவனைப் பார்த்தான். அவன் பார்வையின் அர்த்தம் புரிந்தவன், அவனது சிந்தனையின் போக்கை மாற்றுவதற்காக உடனேயே "மச்சி, நான் உன்கிட்ட வேறொரு விசயமும் பேசத்தான் வந்தேன்..." என்று இழுத்தான்.
அவன் சொல்வதை உடனேயே புரிந்துகொண்ட சிவானந்த் "வர்ஷனா, நீங்க எங்க ரெண்டு பேருக்கும் காஃபி ஆர்டர் பண்ணிவிட்டு மானேஜருடன் கூட இருந்து டீலர்ஸ் மீட்டிங்குக்கு வேண்டிய வேர்க் பாருங்க" என்றான். அவனின் குறிப்பு உணர்ந்தவளாய் வெளியேறிச் சென்றாள் அவள்.

அவள் சென்றதும்
"என்ன மச்சி, ஏதாவது ப்ராப்ளமா?"
"இன்று ஆபிஸூக்கே ஹரிணி வந்திட்டாளடா?"
"வாட்? ஆபிஸூக்கே வந்தாளா?"
"ஆமா மச்சி" என்றவன் அவள் வந்து பேசியதைக் கூறினான்.
"எனக்கொரு சந்தேகமடா. அவள் சொன்னமாதிரி கேஸ் போட முடியுமா?"
"தெரியல மச்சி... வெயிட். நம்ம சுதாகரன் லாயர் தானே அவனுக்குக் ஹோல் பண்ணிக் கேட்போம்." என்ற சிவானந்த் தன் கைபேசியில் எண்ணைத் தேடி அழைப்பை மேற்கொண்டான்.

அப்போது கதவைத் தட்டிவிட்டு பணியாள் ஒருவன் காஃபி கொண்டுவந்தான். அவனை வைத்துவிட்டுச் செல்லுமாறு சைகை காட்டியவன் ஒரு கப்பை யதுநந்தனிடம் கொடுத்துவிட்டு மற்றையதை எடுக்கவும் மறுபக்கம் அழைப்பு ஏற்கப்பட்டது. அவனுடன் சிறிதுநேரம் பேசியவன் அழைப்பைத் துண்டித்தான்.
"என்ன மச்சி சொன்னான்?" என்று கேட்டான் யதுநந்தன்.
"கேஸ் போடலாமாம். பானுவும் இப்போ கன்சீவா இருக்காள். நீயும் வேற கல்யாணம் பண்ணல.அம்மாவுக்கு வயதானால் பிள்ளையைப் பார்த்துக்க முடியாது. அத்தோடு பெண்குழந்தை அம்மாவோடு வளர்ந்தால் தான் எதிர்காலத்துக்கு நல்லது என்று இப்படிப் பல காரணங்களைக் காட்டி கேஸ் போடலாமாம். பட்..."
"பட்... சொல்லுடா"
"கேஸ் போட்டால் பப்பிம்மாவும் கோர்ட்சுக்கு வரவேண்டியிருக்கும். பப்பிம்மா பாவம்டா"
"ம்ம். என்னடா பண்ணுறது? இவ்வளவு நாள் இல்லாமல் இப்போ வந்திருக்காள்"
"நீ வேற கல்யாணம் பண்ணியிருந்தால் அவளால் எதுவும் பண்ண முடியாதாம். பப்பிம்மாவை வளர்க்க அவள் இருக்காள் என்று காரணம் காட்டலாமாம். ம்ம். நீ எங்கே...? ஓகே டா கேஸ் போட்டாலும் அவன் ஒன்றுமில்லாமல் ஆக்கிடுவான் யோசிக்காதே" என்று சமாதானப்படுத்தினான்.
 
Top