அத்தியாயம் -17
கதிர், கலை வேந்தனிடம் பேசி விட்டு வருவதை பார்த்த கடம்பனின் நண்பன் ஒருவன். அவனிடம் சொல்ல போக… கடம்பன் சிங்காரத்தோடு அவர்களின் மரக்கடைக்கு போய் இருந்தான் அதனால் காவேரி இருக்க அவர் என்ன விஷயம் என கேட்டார்.
நண்பன் “அதை ஏன் பெரியம்மா கேட்கிற இந்த அவசர விஷயத்தை சொல்ல கடம்பன் இல்லாமல் போய் விட்டானே” என்றான்.
காவேரி “டேய் பச்சை பிலாக்கணம் வைக்காமல் விஷயத்தை சொல்லு அவன் ஆத்தா நான் இருக்கிறேன் தானே” என்றார்.
பச்சை “ஆத்தா நம்ம கதிர், கலை இருக்கிறாங்க தானே அவங்க அந்த வேந்தன், எழில் கூட கூட்டாக சேர்ந்து பேசி சிரிப்பதை கண்ணால் பார்த்தேன்” என்றான்.
காவேரி “என்ன டா சொல்கிற உண்மையாகவா சரி கடம்பன் நண்பன் நீ பொய் சொல்ல மாட்ட இவங்களை சேர விட கூடாதே இரு இப்போவோ என் அப்பன் வீட்டுக்கு போகிறேன் ஏய் பாவை உன் தாத்தன் வீட்டுக்கு போகிறேன் கதவை சாத்தி விட்டு இரு…. நான் இல்லை என்று எல்லா கழுதைகளும் ஓசியில் காபி பொடி, சக்கரை, பால் என கேட்க வந்து விடுவாள்கள்” என பெரிதாக ஒரு சத்தம் போட்டு விட்டு பச்சை கூடவே அவன் பைக்கில் ஏறி தன் தந்தை வீட்டுக்கு போனார்.
அங்கே நல்ல காலம், சேதுபதி, சரவணன், விஜயன் இல்லை பெண்கள் தான் இருந்தனர் அப்போது தான் கதிர், கலை சாப்பிட வந்து இருக்க பொன்னரசி, செல்வி, அம்பிகா சாப்பாடு பரிமாறி கொண்டு இருந்தனர்… குறிஞ்சி, குழலி இருவருமே மதியம் சாப்பிட்டு விட்டு பின்னால் பல்லாங்குழி ஆடி கொண்டு இருக்க காவேரியின் அப்பு, ஆத்தா என சத்தம் கேட்க கதிர் சாப்பிட போனவன் கையில் உள்ள சோற்றை இலையில் வைக்க.
பொன்னரசி “ராசா நீ சாப்பிடு பா மதியம் பசி என்ற வந்த புள்ளைங்க சாப்பிடும் நேரத்திலா இவள் வம்பை தூக்கி கொண்டு வர வேணும்... அப்பத்தா பார்க்கிறேன் ராசா” என கூறி விட்டு ஹாலுக்கு போக காவேரி நின்று இருந்தாள்.
பொன்னரசி “ஏய் காவேரி உனக்கு வீட்டில் வேலை இல்லையா டி பாவம் அந்த வேலை எல்லாம் என் பேத்தி தலையில் கட்டி விட்டு நீ வீடு வீடாக வம்பு வளர்க்க போய் கொண்டு இருக்கிறாயா... முதலில் வீட்டுக்கு கிளம்பு உன் அப்பு,அண்ணங்கள் இங்கே இப்போ இல்லை வெளியே போய் இருக்கிறாங்க வந்த பிறகு வா” என்றார்.
காவேரி “உண்மையில் நீ என்னை பெத்த ஆத்தாவா இல்ல தவிட்டுக்கு வாங்கி வந்தாயா தெரியாமல் கேட்கிறேன்… மற்ற வீடுகளில் பெண்ணுங்களை எப்படி அவங்க ஆத்தா வரவேற்று விருந்து வைப்பாங்க இங்கே நீ என்னை விரட்டி விட்டு உன் மருமகள்களோடு கும்மியடித்து கொண்டு இருக்க” என்றாள்.
பொன்னரசி “இந்த வயதில் என்னை கை நீட்ட வைத்து விடாதே காவேரி ஒரு நாள் இரண்டு வந்து போனால் விருந்து வைக்கலாம்... நீ அப்படியா இருக்கிற ஒவ்வொரு நாளும் வருகிற அதுவும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை பிறகு நான் எப்படி விருந்து வைப்பது வருவது கூட பரவாயில்ல… தினம் ஒரு பஞ்சாயத்தை இழுத்து கொண்டு வருகிற இப்போ என் பேரன்கள் சாப்பிடும் நேரம் பார்த்து பஞ்சாயத்தை இழுத்து வந்து இருக்க கிளம்பு உன் அப்பு வந்த பிறகு வா” என்றார்.
காவேரி “ஓ அப்போ நான் வந்தது பிரச்சனை இல்லை உன் பேரன்கள் சாப்பிட உட்கார வந்தது தான் பிரச்சனை” என சத்தம் போட…கதிர் எடுத்த சோற்று கவளத்தை தட்டில் வைத்து விட்டு எழ போக செல்வி பதறி போனார்.
செல்வி “என்னய்யா இது கையில் எடுத்த சோற்று கவளத்தை. திரும்ப தட்டில் போட்டு விட்ட அன்னலட்சுமி கோபித்து விடுவாள் பா நீ சாப்பிடு ராசா” என்றார்.
கதிர் “எப்படி ஆத்தா நிம்மதியாக சாப்பிட முடியும் உன் நாத்தனார் சத்தம் போட்டு கொண்டு இருப்பது உனக்கு கேட்கவில்லையா… வர வர வீட்டுக்கு வரவே பிடிக்கவில்லை இதற்கு தான் மில்க்கு எங்களுக்கு சாப்பாடு அனுப்ப சொன்னேன் நீயும் சித்தியும் கேட்டால் தானே… போன் மேலே போன் போட்டு வரவழைத்த உங்க கையால் சாப்பாடு போட வேணும் என்று அது இதற்கு தானா” என கேட்டான்.
அம்பிகா “பெரிய தம்பி இது வழமை தானே அப்பு காவேரி என்ன புதுசாகவா பஞ்சாயத்தை இழுத்து வருகிறது.. அதை அத்தை சமாளிப்பாங்க நீயும் கலையும் சாப்பிடுங்க சாமி” என காவேரி சத்தம் பெரிதாக கேட்டது.
கதிர் இதற்கு மேலே முடியாது என எழுந்து கை கழுவி விட்டு போக அவனை பின் தொடர்ந்து கலையும் போனான்…பொன்னரசி கூட காவேரி தர்க்கம் பண்ணி கொண்டு இருக்க “அத்தை இப்போ உனக்கு என்ன பிரச்சனை” என கதிர் குரலை உயர்த்த காவேரி சத்தம் சட்டென நின்றது…ஆம் அவன் சேதுபதி போல தான் ஒரு வார்த்தை தான் அழுத்தமாக பேசுவான் எதிரே இருப்பவர் வாய் திறக்க யோசிப்பாங்க.
கலை “அத்தை எப்போ பாரு இங்கே வந்து பிரச்சனை பண்ணி கொண்டு இரு தாத்தா மானம் போகட்டும்… ஊருக்குள்ளே உனக்கு பெயர் என்ன தெரியுமா சண்டி ராணி இது தேவையா உனக்கு அதுவும் அண்ணா சாப்பிடும் நேரம் தான் உனக்கு மூக்கில் வேர்க்கும் காலையில் கூட அது சரியாக சாப்பிடவில்லை... வயல், கூட்டம் என்று போய் விட்டது இப்போ எதற்காக அப்பத்தா கிட்ட சத்தம் போட்டு கொண்டு இருக்க” என கேட்டான்.
காவேரி “வாடா வா என் அண்ணன் பெத்த மகனே இந்த காவேரி என்றால் உங்களுக்கு எல்லாம் இளப்பமாக போய் விட்டது… அது சரி உங்களுக்கு தான் இப்போ புது உறவு இருக்கே பிறகு இந்த காவேரியை எங்கே தெரிய போகிறது” என கேட்டார்.
கலைவாணன் “புது உறவா என்ன உளறி கொண்டு இருக்க” என கேட்டான்.
காவேரி “நான் பேசுவது உளறலாக தான் தெரியும் மருமகனே ஆனா அந்த பூபதி குடும்பம் பேசுவது இனிமையாக இருக்கும்” என்றாள்.
கதிர் “இங்கே பாரு அத்தை பேசிவதை தெளிவாக பேசி பழகு இந்த மூக்கை சுற்றி தொடும் வேலை வேணாம்” என்றான்.
காவேரி “சரி நேரடியாக விஷயத்தை கேட்கிறேன் நீயும் உன் தம்பியும் அந்த வேந்தன், எழில் இருக்கும் இடம் போய் பேசி சிரித்து…கலர் சாப்பிட்டு வரவில்ல இது உண்மையா பொய்யா” என கேட்டார். கதிர் காவேரியை அழுத்தமாக பார்த்து.
கதிர் “என்ன அத்தை வேவு பார்க்கிறாயா இதை தாத்தா கிட்ட சொன்னால் என்ன நடக்கும் என தெரியுமா... இது எல்லாம் உன் மகன் ஏற்பாடு தானே அவன் பின்னால் சுற்றி திரியும் அல்லக்கை ஒன்று தான் உனக்கு சொல்லி இருக்க வேணும்” என்றான் .காவேரி முகம் பயத்தால் மாறியது சேதுபதிக்கு கடம்பன் வேவு பார்ப்பது தெரிந்தால் அவ்வளவு தான்.
பொன்னரசி “ஏய் காவேரி என்ன டி கதிர் சொல்வது உண்மை போல இருக்கே இது உனக்கே அசிங்கமாக இல்ல… இரு உன் அப்பு, அண்ணங்கள் வரட்டும் சொல்கிறேன் உன் வண்டவாளத்தை சொல்கிறேன்” என்றான்.
காவேரி “ஆத்தா சும்மா என்னையே குற்றம் சொல்லாதே முதலில் கதிர், கலை எதற்காக அந்த வேந்தன் பயலை பார்க்க…அவன் இடத்திற்கு போக வேணும் முதலில் அதற்கு பதிலை சொல்ல சொல்லு” என கேட்டாள்.
கதிர் “இங்கே பாரு அத்தை உனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை அதற்காக நான் ஆம்பள உனக்கு எதற்காக பதிலை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் உன் மகன் போல இல்லை… நீ என் அத்தை உனக்கு கட்டாயமாக நான் மதிப்பு கொடுப்பேன் இப்போ என்ன தெரிய வேணும் உனக்கு எதற்காக வேந்தனை பார்க்க போனேன் என்று தெரிய வேணுமா வேற ஒன்றும் இல்லை… சாமி ஊர்வலம் போவதற்கு அவனின் வயல் அருகே உள்ள ஆலமரம் தடையாக இருக்கு அதை வெட்டுவதற்கு அனுமதி கேட்க தான் போதுமா” என்றான். “என்ன அண்ணா சொல்கிற ஆலமரத்தை வெட்ட போகிறாயா” என கேட்டு கொண்டு குறிஞ்சி, குழலி கூட வர காவேரி முகம் மலர்ந்தது.
காவேரி “அது தானே பார்த்தேன் என் ராசா அப்படி தேவை இல்லாமல் அந்த வேந்தன் பயல் கூட பேசுவானா என்று….வரட்டும் இந்த கடன்கார பச்சை உன்னை பற்றி தப்பு தப்பாக சொன்னதற்கு துடைப்பம் பிய்ந்து போகும் வரைக்கும் அடிக்கிறேன்… சரியான முடிவு ராசா அந்த ஆலமரம் இப்போ சும்மா அங்கே எதற்காக இருக்க வேணும் வேந்தன் பயலை மிரட்டியாவது வெட்ட வை” என்றாள்.
குறிஞ்சி கதிர் அருகே வந்து “அண்ணா உண்மையாகவா சொல்கிற வேந்தர் அதை வெட்ட போகிறாரா… அப்போ என் ஊஞ்சல் நாங்க அங்கே ஊஞ்சல் ஆட முடியாதா” என கேட்டாள்.
காவேரி “ஏய் உனக்கு இப்போ எதற்கு அங்கே ஊஞ்சல் இந்த வீடே அரண்மனை போல இருக்கு உன் அப்பன் கிட்ட கேட்டால் அடுத்த நிமிடமே உனக்கு தேக்கு மர ஊஞ்சல் உன் அப்பன் மட்டுமல்ல என் அப்பன் இதோ உன் அண்ணன்காரங்க போட்டு தருவாங்க…நீ போய் கண்டவன் வயலில் விளையாட வேணுமா விளையாடும் வயதா உனக்கு இப்போ நீ உன் பிள்ளைக்கு விளையாட்டு காட்டும் வயது…உன் வயதில் எனக்கு கடம்பன் வயிற்றில் இருக்கிறான் நல்ல வேளை இந்த திருவிழா சந்தோஷமாக தான் தொடங்கி இருக்கு.. சரி ஆத்தா இப்போ திருவிழா என்பதால் கவுச்சி வீட்டில் எடுக்க மாட்ட என தெரியும்…நீ எண்ணெய் கத்தரிகாய் குழம்பு வைத்து இருப்ப அதை ஒரு தூக்கு சட்டியில் போட்டு தா கடம்பனுக்கு பிடிக்கும்” என்றாள்.
பொன்னரசி “ஏன் டி நீ வீட்டில் சமைப்பதே கிடையாதா புருஷன், புள்ளைகளுக்கு பிடித்ததை செய்து கொடுக்காமல் என்ன தான் செய்கிறாயோ தெரியாது… எங்கே உனக்கு அதற்கு நேரம் இங்கே வந்து சண்டை போட தான் தெரியும் வா எடுத்து தருகிறேன் என அவளை உள்ளே அழைத்து போக பின்னால் செல்வி, அம்பிகா போனார்கள் .
குறிஞ்சி “அண்ணா உண்மையாக அந்த ஆலமரத்தை வேந்தர் வெட்ட போகிறாரா என கேட்டாள்.
கதிர் “ஆமாம் பாப்பா நீ கவலைபடாதே அண்ணா உனக்கு நம்ம வீட்டு பின்பக்கம் பெரிதாக ஊஞ்சல் போட்டு தருகிறேன் சரியா மா” என்றான்… அவள் தலையை தடவி விட்டு கலை கூட மில்க்கு கிளம்ப குறிஞ்சி யோசித்தவாறே நின்றாள்.
கிளி வரும்....