எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வரமாக நீ 24

S.Theeba

Moderator
வரம் 24

வர்ஷனாவை அந்த மண்டபத்தில் பார்த்ததும் தன் உள்ளம் உவகை கொள்வதை உணர்ந்தான் யதுநந்தன். அடிக்கடி அவளைப் பார்வையால் வருடிக் கொண்டிருந்தவன் அவளுக்கு சற்றுத் தொலைவில் ஹரிணி உட்கார்ந்திருப்பதை சிறிது நேரம் கழித்தே கவனித்தான். இவள் இங்கே எப்படி வந்தாள்? இவளை யாருமே அழைக்கவில்லையே என்று நினைத்தவன் முகம் வெறுப்பையே உமிழ்ந்தது.

அவன் தன்னைப் பார்க்கிறான் என்பதை உணர்ந்ததும் அவனுக்கு கைகாட்டினாள் ஹரிணி. அவன் முகம் இறுகுவதைக் கண்டவள் எழுந்து அவனருகில் வந்தாள்.

"ஹாய் பேபி, ரொம்ப ஹான்ட்சமாய், கியூட்டாய் இருக்கிறாய்." என்றாள். அவன் எதுவும் சொல்லாது முகத்தைத் திருப்பவும் "என்ன நந்து பேபி, நான் எப்படியிருக்கன் என்று நீ சொல்லவேயில்லை." என்று சிணுக்கமாகக் கேட்டாள். அவனது நல்லவேளை கூடநின்று பேசிக்கொண்டிருந்த நண்பர்களை சிவானந்த் விருந்துண்ண அழைத்துச் சென்று விட்டான். வர்ஷனாவையும் மஞ்சுவையும் பானுமதி வந்து அழைத்துச் சென்றுவிட்டாள். அவன் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்து அங்குமிங்கும் பார்ப்பதைக் கண்டவள்,
"என்ன பேபி, யாரைத் தேடுகின்றாய்?" என்று வினவினாள். அவள் அப்படிக் கேட்கவும்தான் யதுநந்தனுக்குத் தான் தப்பிக்கும் வழி தோன்றியது. "என் ஸ்வீட்டியை... சாரி சாரி உனக்கு அவள் யாரென்று தெரியாதல்லவா? அதாவது என் வுட்பியைத் தேடுகின்றேன். அவளை உனக்கு இன்வைட் பண்ணலாம். பட் இங்கதானே இருந்தாள். எங்கே போய்விட்டாள்?" என்று தேடுவது போல் பாசாங்கு செய்தான். அவன் அப்படிக் கூறவும் ஹரிணியின் முகம் ஏமாற்றத்தால் மாறியது. அதைக் கவனித்த யதுநந்தனுக்குஉற்சாகம் ஏற்பட்டது.
"வெயிட் பண்ணு. இங்கதான் இருப்பாள். கட்டாயம் உனக்கு இன்வைட் பண்ணுறேன்" என்றவன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

அந்த ஹோட்டலின் கீழ்த் தளத்தில் அமைந்திருந்த பிரமாண்டமான மண்டபத்திலேயே பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மண்டபத்தின் ஒரு பகுதியில் கேக் வெட்டும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், ஆடல் பாடல்கள் என்பன இடம்பெற்றன. மண்டபத்தின் இன்னுமொரு பகுதியில் இரவு உணவும் சிற்றுண்டிகளும் தடல்புடலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சாப்பிடும் இடத்தில் மஞ்சுவுடன் வேலை செய்யும் இன்னும் இரு தோழிகள் வரவும் கலகலப்பாகப் பேசிக்கொண்டு சாப்பிட்டனர். வர்ஷனாவுக்குத்தான் அந்த ருசியான சாப்பாடு எதுவும் ருசிக்கவில்லை. தன் மனதுக்கு இனியவனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அவன் தோள் சாய்ந்து கதைபேச வேண்டும் என்று மனது தவிப்பதை உணர்ந்தாள். பேருக்குக் கொறித்தவள் மஞ்சுவிடம் தனக்கு வயிறு கொஞ்சம் சரியில்லை. நீ அவர்களுடன் சாப்பிட்டு வா எனக் கூறிவிட்டு வெளியே வந்தாள். அந்தக் ஹோட்டலில் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்த தோட்டம் அந்த இரவுநேர விளக்குகளின் வெளிச்சத்தில் மிக ரம்மியமாகக் காட்சி தந்தது. செயற்கை நீர்வீழ்ச்சிகள், நீச்சல் குளம் என்பனவும் அந்த மின்குமிழ்களின் ஒளியில் அழகை அள்ளியிறைத்தன. அந்த அழகில் மெய்மறந்து லயித்துப் போய் விட்டாள் வர்ஷனா. ஒன்றை மட்டும் கவனிக்கத் தவறிவிட்டாள். ஆம் சற்றுத் தள்ளி விளக்கின் ஒளியில் அவளை ரசித்துக் கொண்டிருந்த யதுநந்தனை அவள் கவனிக்கவில்லை.

அந்த மண்டபத்தில் ஹரிணி நிற்பதால் அங்கே நிற்கவே அவனுக்குப் பிடிக்கவில்லை. அவளை வெளியில் அனுப்பவும் முடியவில்லை. விருந்தினர் முன்னிலையில் எதுவும் செய்ய முடியவில்லை. அவளைப் பார்க்க எரிச்சல் தோன்றவும் மண்டபத்தை விட்டு வெளியேறியவன் தோட்டத்திற்கு வந்தான். அங்கே வர்ஷனாவை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மின்விளக்குகளின் ஒளியில் தேவதையாகத் தோன்றினாள். மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது ஹரிணி வெளியே வருவதைக் கண்டவன் எதைப்பற்றியும் யோசிக்காமல் வர்ஷனாவை நோக்கிச் சென்றான். ஹரிணி அருகில் நெருங்கி வருவதைக் கண்டதும் சட்டென்று வர்ஷனாவின் பின்னால் நெருங்கிச் சென்று பின்னாலிருந்து அவளை அணைத்தான். இதை எதிர்பார்க்காத வர்ஷனா பதறிப்போய் விட்டாள். யாரோ ஒருத்தன் தன்னைப் பின்னிருந்து அணைக்கிறான் என்று தோன்றவும் பெண்மைக்கேயுரிய எச்சரிக்கையுணர்வு உந்த அவனிடமிருந்து விடுபடத் திணறினாள். ஆனால், அவனோ அவளைத் திமிறவிடாது இறுக அணைத்தவன் அவள் காது அருகில் தன் இதழ்களைக் கொண்டு சென்று "ஷனா... இங்கு தனியாக நின்று என்ன செய்கிறாய்?" என்று ஹரிணிக்குக் கேட்கக்கூடியதாகப் பேசினான். அவனது குரல் வர்ஷனாவைக் கட்டிப் போடுவதாய் இருந்தது. 'யதுவா என்னை அணைத்திருப்பது? நான் காண்பது கனவா? நிஜமா? இது எப்படிச் சாத்தியமாகும்?' என்று அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள் வர்ஷனா. அவனது கைகள் தன் மேனியைத் தீண்டியிருப்பது சிலிர்ப்பைத் தர, அதிர்ச்சியில் இமைக்கவும் மறந்து தன் தலையைத் திருப்பி அவன் முகத்தை அண்ணாந்து பார்த்தாள். அவன் மூச்சுக் காற்று அவள் கன்னம் உரசிட "ஷனா..." என்று மீண்டும் அழைத்தான். அவனது ஷனா என்னும் அழைப்பும் அவன் மூச்சுக் காற்றின் தீண்டலும் அவளை மேலும் கிறங்கடித்தது.

ஹரிணிக்காக வர்ஷனாவின் அருகில் வந்தவன் அவளையே மறந்து போனான். மங்கையவள் பூசியிருந்த பெர்ஃப்யூம் வாசனையும் பெண்ணவளின் வாசனையும் கலந்து அவனின் மதியை மயக்கியது. தன்நிலை மறந்தான். இருவருமே தம்மை மறந்து நின்ற நிலையைப் பார்த்து ஹரிணி ஆத்திரம் மேலிட உள்ளே சென்றுவிட்டாள்.

யதுநந்தனைக் காணாது மண்டபத்தில் தேடினான் சிவானந்த். அப்போது ஹரிணி ஹோட்டலின் வெளிப்புறமிருந்து முகத்தில் கோபம் மின்ன உள்ளே வருவதைக் கண்டான். தன் நண்பனும் வெளியில்தான் நிற்கிறான். அவனுடன் ஏதோ பேசி மூக்குடைபட்டுத்தான் இவள் இப்படி கோபத்தோடு வருகின்றாள் என்று தோன்றவும் தோட்டத்தை நோக்கிச் சென்றான்.

சுற்றுமுற்றும் தேடியவன் கண்களுக்கு இருவரும் அணைத்தபடி நின்ற நிலை பட்டது. அவர்களின் இந்த நெருக்கம் அவன் மனதுக்கு சந்தோசத்தையே தந்தது. தன் நண்பன் ஹரிணி என்னும் பேராசை பிடித்தவளிடமிருந்து தப்பியது நிம்மதி என்றாலும் குழந்தையுடன் தனிமரமாய் இப்படியே காலத்தைக் கழித்துவிடுவானோ என்ற கவலை அவன் மனதை எப்போதும் அரித்துக்கொண்டே இருந்தது. அவனுக்கு மட்டுமல்ல, கமலேஷ்வரும் சந்திரமதியும் கூட எப்போதும் இவனை நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். இவன் வர்ஷனாவுடன் நெருங்கிப் பழகுவது அதற்கெல்லாம் ஆறுதலாக இருப்பதாக சிவானந்துக்குத் தோன்றியது. வர்ஷனாவும் மிகவும் நல்ல பெண்தான். இவளைக் கல்யாணம் பண்ணினால் அவன் வாழ்க்கை சந்தோசமாகப் போகும் என்று சிந்தித்தவன் அவர்களின் சந்தோசத்தில் குறுக்கிடப் பிடிக்காது திரும்பிப் போக எத்தனித்தான். அப்போது உள்ளே மண்டபத்தில் யதுநந்தனை யாரோ அழைக்கும் குரல் கேட்டது.
'ஐயையோ யாராவது இங்கே வந்து இவர்கள் இருக்கும் நிலையைப் பார்த்தால்.... என்ன செய்வோம்' என்று யோசித்தவன் மறுபக்கம் திரும்பி நின்று "மச்சி..." என்று அழைத்தான். அவனது குரலைக் கேட்டதும் பதறி விலகி நின்றாள் வர்ஷனா. யதுநந்தனோ எந்தவிதப் பதட்டமுமின்றி "சொல்லு மச்சி" என்றான்.
"நம்ம பிரண்ட்ஸ் எல்லாம் போறதுக்கு ரெடி. சொல்லிட்டுப் போக உன்னைத் தேடினாங்க"
"ஓகே டா. நீ போ, நான் வாறன்" என்றதும் சிவானந்த் அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டான்.

வர்ஷனாவுக்கு அவனை நிமிர்ந்து பார்க்கவும் வெட்கமாக இருந்தது. குனிந்த தலை நிமிராமல் அப்படியே நின்றாள். அவள் அருகில் வந்து நின்றவன் தன் தொண்டையைச் செருமி சரி செய்துவிட்டு "சாரி வர்ஷனா" என்றான். சாரியா? எதற்கு? என்று குழம்பினாள். 'இவன் என்னை ஷனா என்று அழைப்பது ரொம்பவும் அழகாகவும் இதமாகவும் இருக்கின்றதே.அப்படியே கூப்பிட்டால் என்ன? அவனுக்கு யார் சொல்வது' என்று தனக்குள் புலம்பினாள். அவன் முகத்தை அவளும் அவள் முகத்தை அவனும் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் இருவரின் முகத்தில் இருந்த சந்தோசம் இருவருக்கும் புரிந்திருக்கும். அவன் வாய் மட்டுமே மன்னிப்பைக் கேட்டது. அவன் அகத்திலும் முகத்திலும் சந்தோசமும் திருப்தியும் மட்டுமே இருந்தது. அவள் முகத்திலும் வெட்கமும் சந்தோசமுமே குடிகொண்டிருந்தன.
"நான் அப்படி நடந்தது தப்புத்தான். ஐ ஆம் வெரி சாரி." என்றவன் அதற்குமேல் என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றான். 'எதற்கு சாரி கேட்கிறான். என்னை அணைத்ததற்கா? இவன் அணைப்பிற்காக நான் தவித்து நிற்பது இவனுக்குப் புரியலையா? யது, நீ என்னவன்.' என்று மீண்டும் தன் மனதோடு பேசினாள். ஆனால், அவளது மௌனத்தைத் தவறாகப் புரிந்து கொண்டவன் "நான் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்தான். இதைவிட உன்னிடம் எப்படி மன்னிப்புக் கேட்பதென எனக்குப் புரியல. என் சூழ்நிலையில் எதைப்பற்றியும் யோசிக்காமல் நான் அப்படி நடந்து கொண்டேன். அது உன்னைப் பாதித்திருந்தால் வெரி வெரி சாரி." என்றவன் அதற்குமேல் அங்கே நிற்காமல் விறுவிறுவென உள்ளே சென்று விட்டான்.
 
Last edited:
Top