எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வரமாக நீ 25

S.Theeba

Moderator
வரம் 25

யதுநந்தன் உள்ளே செல்லவும் நிலத்திலே வேரோடியதுபோல அசையாது சில நிமிடங்கள் நின்றாள் வர்ஷனா. இதுவரை நேரமும் நடந்தவை கனவல்ல, நிஜம் என்று நம்பவே அவளுக்குச் சில நிமிடங்கள் தேவைப்பட்டன. சந்தோசத்தில் மனமும் உடலும் தொய்ந்தது போலத் தோன்றவும் நீச்சல் குளத்தருகே அமைக்கப்பட்டிருந்த சிமெந்து இருக்கையில் சென்று அமர்ந்தாள். கன்னத்தில் கைவைத்து கற்பனையில் மிதந்தாள்.

கற்பனை உலகில் ஆழ்ந்து போய் இருந்தவள் அருகே யாரோ அமர்வது போலத் தோன்றவும் திரும்பிப் பார்த்தாள். அங்கே ஒரு அழகிய மங்கை உட்கார்ந்து இவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை யாரென்று வர்ஷனாவிற்குத் தெரியவில்லை. 'பிறந்தநாள் விழாவிற்கு வந்த விருந்தினர் போல. ஆனால், அவள் ஏன் என்னை இப்படி உற்றுப் பார்க்கிறாள்? அதுவும் வெறுப்போடு பார்க்கிறாள். ம்கூம்... வெறுப்பு மட்டும் இல்லை. அவள் முகத்தில் ஏளனமும் தெரிகின்றதே' என்று சிந்தித்தவள் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள்.

அங்கே வந்து அமர்ந்து வர்ஷனாவை வெறுப்பும் ஏளனமுமாகப் பார்த்தவள் ஹரிணிதான். வர்ஷனா முகத்தைத் திருப்பவும் "ஹலோ உன்னைத்தான்" என்றாள். கேள்வியோடு அவளைத் திரும்பிப் பார்த்தாள் வர்ஷனா. "ஆமா நந்துவும் நீயும் எவ்வளவு நாளாய் லவ் பண்ணுறிங்க?" என்றாள் ஹரிணி. இவளுக்கோ தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை.
"நந்துவா? யார் அது?" என்றாள்.
"என்னது இவ்வளவு நேரமும் ஹக் பண்ணிட்டு கிஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறாய். இப்போது நந்துவைத் தெரியாது என்கிறாயே?" என்றாள். அப்போதுதான் இவள் யாரைக் குறிப்பிடுகின்றாள் என்று வர்ஷனாவுக்கு புரிந்தது. ஆனாலும், இவள் யார் என்று தெரியாமல் என்ன பதில் சொல்வது என்று குழம்பி நின்றாள். அவள் பதில் சொல்லாமல் இருக்கவும் கோபம் தலைக்கேற அவளை மட்டந்தட்ட எண்ணியவள் "என் அழகில் கால் தூசுக்குக் கூட நீ வரமாட்டாய். போயும் போயும் உன்னையா லவ் பண்ணினான். அவனது டேஸ்ட் ஏன் இப்படி மாறிவிட்டது. நான் இருந்த இடத்தில் இன்னொருத்தியை இருத்த நினைப்பவன் கொஞ்சமாவது திங்க் பண்ணுறதில்லையா" என்றாள். அப்போதுதான் வர்ஷனாவுக்கு ஹரிணி யாரெனப் புரிந்தது.
'ஓகோ... இவள்தானா என் யதுவின் எக்ஸ் வைஃப். ரொம்பத்தான் திமிராய் இருக்காளே' என்று யோசிக்கும் போதே அவள் மீண்டும் பேசினாள். "இரண்டாம் தாரம் என்பதால்தான் உன்னை மாதிரி ஒருத்தியைப் பிடிச்சிருக்கான். ஆமா உன் வீட்டில் முதல் தாரமா ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து கட்டி வைக்கிறதுக்கு வக்கில்லையா? அவ்வளவு பிச்சைக்காரக் குடும்பமா? இரண்டாந்தாரமாய், அதுவும் ஒரு பிள்ளையோடயே ஒருத்தனைப் பிடிச்சிருக்காய் என்று உன் வீட்டில் எதிர்க்கவில்லையா? ஆனாலும் புளியங்கொம்பாய்தான் பிடிச்சிருக்காய். வசதியாக வாழலாமில்லையா? இற்ஸ் ஓகே. நான் வேண்டாம் என்று தூக்கிப் போட்டதைத்தான் நீ பிடிச்சிருக்காய்.பட், அவனால் என்னை மறக்கவே முடியாது. என் அழகுக்கு முன்னால் நீயெல்லாம் காணாமல் போய்விடுவாய்" என்றாள்.

இவ்வளவு நேரம் வாயை மூடியபடி அவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த வர்ஷனா திரும்பி அவளை மேலும் கீழும் ஒருதடவை பார்த்தாள். என்னை யது அணைத்தபோது இவள் பார்த்திருக்கின்றாள். நாங்கள் லவ் பண்ணுவதாய் இவளுக்குக் காட்டத்தான் யது அப்படி நடந்திருக்கலாம். அதுதான் கோபத்தில் இப்படிப் பேசுகின்றாள். ஆனால், இவள் திமிருக்குத் திருப்பிக் கொடுத்தாக வேண்டுமே என்று நினைத்தவள் "ஓகோ நீங்கள்தானா யதுவின் எக்ஸ் வைஃப். கிடைத்த சொர்க்கத்தைக் காலால் எட்டி உதைத்து விட்டு இப்போது யோசித்து என்ன பயன். நானும் யதுவும் எவ்வளவு நாளாய் லவ் பண்ணுறம் என்பது முக்கியமில்லை. உண்மையான லவ் எங்களது. அழகைப் பற்றி பேசுறிங்க. அழகு, வசதி இதெல்லாம் பார்த்து வருவதற்குப் பெயர் காதல் இல்லை."
"அவனை நீ மேரேஜ் பண்ணினால் என் குழந்தைக்கு ஆயாவாதான் இருக்கணும்."
"சந்தோசம். என் யதுவின் குழந்தை அது. அதை வளர்ப்பதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்கணும். இலக்கியாவைப் போல ஒரு குழந்தைக்குத் தாயாவது எனக்கு சந்தோஷமே." என்றவள் "ஓகே மிஸ், டைம் ஆகுது. யது என்னைத் தேடுவார். பை" என்று கூறிவிட்டு எழுந்து உள்ளே சென்றாள். அவள் போவதையே எரிச்சலுடனும் கோபத்துடனும் பார்த்திருந்தாள் ஹரிணி.

வர்ஷனாவிடம் பேசிவிட்டு மண்டபத்துக்குள்ளே வந்தான் யதுநந்தன். அவனிடம் இதுபற்றிக் கேட்க முனைந்த சிவானந்துக்கு சந்தர்ப்பம் தான் கிடைக்கவில்லை. ஒவ்வொருத்தராக விடை பெற்றுச் செல்லவும் அவர்களை வழியனுப்பி வைத்துக் கொண்டிருந்தான் யதுநந்தன்.

தொழிலதிபரும் அவர்களது குடும்ப நண்பருமான ராஜேஷ், அவனது பெற்றோருடன் பேசிக்கொண்டிருந்தார். அவனை அருகில் அழைத்தவர் "நந்தன், இப்படியே எவ்வளவு நாளாய் இருக்கிறதா உத்தேசம். ஒரு கல்யாணத்தைப் பண்ணினால்தானே உன் பேரன்ட்சுக்கும் சந்தோசம். நீ ஓகே சொல்லு. என் தங்கச்சி பொண்ணு இப்பதான் படிப்ப முடிச்சிட்டு அவங்க அப்பா கம்பனியில் ஜாய்ன்ட் பண்ணியிருக்கா. பேசி முடிச்சிடுவம்." என்றார்.
அவனது தாயும் தந்தையும் அவனை கலவரத்துடன் பார்த்தனர். அவனிடம் யாராவது கல்யாணத்தைப் பற்றிப் பேசினால் அவர்களிடம் மனம்நோகப் பேசிடுவானே என்று அவர்கள் பயந்தனர். ஆனால், அதிசயம் அவன் முகத்தில் மகிழ்ச்சியையும் வெட்கத்தின் சாயலையும் கண்ட பெற்றோருக்கு ஆச்சரியமாக இருந்தது. "தாங்ஸ் அங்கிள். உங்க அட்வைஸூக்கு. நான் மேரேஜ் பண்ணுறேன். பட், பொண்ண நானே பார்த்திட்டன். சோ, சாரி அங்கிள், உங்க ரிலேஷன் பொண்ணுக்கு வேற நல்ல பையனாய் பாருங்க." என்றான்.

அவன் சொல்வதைத் கேட்டுக் கொண்டிருந்த பெற்றோருக்கு இது நம் மகன்தானா என்று சந்தேகம் கூட உண்டானது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். "சந்தோசம் நந்தன், சீக்கிரம் நல்ல செய்தியாய் சொல்லு" என்ற ராஜேஷ் விடை பெற்றுச் சென்றார். தன் பெற்றோரின் பார்வை புரிந்தவன் அவ்விடத்தை விட்டு நைசாகக் கழன்றான்.

அன்று விழா முடிந்து வீட்டுக்கு வர வெகு நேரமாகிவிட்டது. சிறுவர்களுடன் ஆடிப்பாடிய இலக்கியா சோர்வாகி வரும் வழியிலேயே தூங்கிவிட்டாள். அவளைத் தூக்கிவந்து தனது படுக்கையில் கிடத்தியவன் தானும் குளித்து உடை மாற்றி வந்து படுத்தான். தூக்கம்தான் வரமாட்டேன் என்று அடம்பிடித்தது. அவன் சிந்தை முழுதும் அவளது நினைவுகளே ஆட்கொண்டது. அவளை அணைத்திருந்ததும் அவள் அருகாமையும் மனதுக்கு இதத்தைத் தருவதை உணர்ந்தான். அவள் நினைவில் உழன்றவன் அதிகாலையில்தான் தூக்கத்தைத் தழுவினான்.

அங்கே வர்ஷனாவும் தூக்கமின்றிப் புரண்டாள். அவனது அணைப்பு அவள் பெண்மையை உணரச் செய்தது. அவனை விட்டுப் பிரியாமல் அவன் அணைப்பிலேயே காலம் முழுவதும் வாழ்ந்திட மாட்டோமா என்ற தவிப்பு அவளைத் தூங்கவிடவில்லை. அவனின் கைகள் தன் மேனியில் பட்ட இடங்களில் இப்போதும் ஒருவித குறுகுறுப்பு இருந்தது. அவன் நினைவுகள் தாலாட்ட மெல்ல மெல்ல உறங்கிப் போனாள்.

மறுநாள் காலை. அலுவலகத்தில் காரியதரிசி அன்பழகன் டீலர்ஸூக்கு அனுப்ப வேண்டிய கடிதங்களில் யதுநந்தனிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்தான்.
"இது ஆல்பா வயர்ஸ் கம்பனிக்கு. அதையும் பார்த்து சைன் பண்ணிடுங்க சார்." என்று கடைசிக் கடிதத்தை அவனிடம் கொடுத்தான். கடிதத்தை மேலெழுந்தவாரியாகப் பார்வையிட்டு கையெழுத்திட்டு அவன் நிமிரவும் "ஹாய் டா மச்சி..." என்றபடி உள்ளே நுழைந்தான் சிவானந்த். அங்கே நின்ற அன்பழகனைக் கண்டதும் "என்ன அன்பு உன் லவ் தியேட்டர் வரைக்கும் வந்திடுச்சு போல. என்ஜாய் பண்ணு." என்றான். அவன் அப்படிக் கேட்கவும் பயத்துடன் யதுநந்தனை ஒரு பார்வை பார்த்துவிட்டு தலையைச் சொறிந்தபடி, "இல்லை சார்... அது என் முறைப்பொண்ணு. வீட்டில் பேசியிருக்காங்க. அதுதான்..."
"அதுக்கென்னடா முறைப்பொண்ணும் லவ்வரும் ஒண்ணுதானே. ஜமாய் ராஜா" என்றான் சிவானந்த். விட்டால் போதும் சாமி என்று கடிதங்களை எடுத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக வெளியேறினான் அன்பழகன். சிரித்தபடி வந்து அமர்ந்தவனிடம் "ஆமா... நீ எப்போ தியேட்டர் போனாய்?" என்று கேட்டான் யதுநந்தன். 'ஐயையோ வாயைக் கொடுத்து நானே மாட்டிட்டனோ' என்று தனக்குள் பேசியவன், "இல்லடா, தியேட்டர் இருக்குற ரோட்டால் நான் போய்க் கொண்டிருந்தபோது இவன் தியேட்டருக்குள் போனதைப் பார்த்தேன். அதுதான்..."
"ம்ம்"என்று அவனை நம்பாத பார்வை பார்த்தான்.
"சரி சரி அதைவிடு மச்சி. நேற்று நடந்ததுக்கு வருவோம்." என்று பேச்சை மாற்றினான். இவன் எதைக் குறிப்பிடுகின்றான் என்பதை உணர்ந்தவன்,
"மச்சி, அது ஹரிணியை வெறுப்பேற்ற அப்படி நடந்துக்கிட்டன். வேற எதுவும் இல்லை."
"பார்த்தால் அப்படித் தெரியவில்லையே"
"சீரியஸாக அதுதான் காரணம் மச்சி" என்று ஹரிணியிடம் பேசியதையும் அவளைக் கண்டதும் வர்ஷனாவை அணைத்து அவளை வெறுப்பேற்ற நினைத்ததையும் கூறினான். வர்ஷனாவைப் பற்றிப் பேசும்போது அவன் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியையும் குரலில் தோன்றிய நெகிழ்வையும் குறித்துக் கொண்டான் சிவானந்த்.
"ஓகே டா, எனக்கு இப்ப நீ உண்மையை மட்டும் சொல்லு. உனக்கு வர்ஷனாவைப் பிடிச்சிருக்கா?"
அவன் எதுவும் கூறாது அமைதி காக்கவும் அவன் மனதைப் புரிந்து கொண்டவன், ""ஓகே மச்சி, இனி நான் பார்த்துக் கொள்கிறேன்"
"டேய் மச்சி, அதெல்லாம் சரிவராதுடா"
"ஏண்டா சரிவராது?"
"மச்சி எனக்கும் ஒரு தங்கச்சி இருக்கு. அவளை நான் இப்படி இரண்டாம் தாரமாகக் கட்டிக் கொடுத்திருப்பேனா? அவங்க வீட்டில் ஒத்துக்க மாட்டாங்க. முக்கியமாக அவளுக்கே என்னைப் பிடிக்காது"

"போடா லூசு, நேற்று நீ அணைத்திருந்தபோது அவள் அமைதியாக நின்றதே உன் மீது அவளுக்கும் லவ் இருக்கு என்பதைக் காட்டுது. இரண்டு பேருக்கும் பிடிச்சிருந்தால் போதும். அத்தோடு இலக்கியாவை உன்னிடமிருந்து ஹரிணி பிரிக்காமல் இருக்க ஒரே வழி நீ கல்யாணம் பண்ணுறதுதான். அது உன் மனசுக்ககுப் பிடிச்சவளாய் இருந்தால் இன்னும் சந்தோசம்தானே" என்றவன் மேற்கொண்டு தான் பார்த்துக் கொள்வதாகக் கூறிவிட்டுப் புறப்பட்டான்.
 
Last edited:
Top